கதைகள் கடிதங்கள்

siru

வணக்கத்திற்குறிய ஜெ,

எளியவன் கோ எழுதுவது. தேவகி சித்தியின் டைரி என்ற தலைப்பு முல்க் ராஜ் ஆனந்தின் “morning face” நாவலில் வரும் தேவகி சித்தியை நினைவுபடுத்துகிறது. அந்த நாவல் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்த தாக்கத்தில் தான் தேவகி சித்தி என பெயர் வைத்துள்ளீர்கள் என்று ஒரு எண்ணம். ஆனால் அந்த எண்ணம் தங்கள் கதையில் வரும் சிறுவன் மரத்தில் ஏறி எட்டி பார்க்கும் வரையில் தான். மறுவரியில் மாயமாகி விட்டது. கதையின் முடிவில் ஜெயகாந்தனின் “அந்தரங்கம்” நினைவிற்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. இரு கதைகளும் மனித வாழ்வின் ஆணிவேரான அந்தரங்க உரிமையின் அவசியத்தை அடி கோடு இடுகின்றன. குடும்பம் என்ற ராட்சத அமைப்பின் கால்களில் மிதிபடும் அந்தரங்க உரிமையின் வலியை உங்கள் கதையில் உணறுகிறேன். டைரி எழுதுகிறாள் என்பதற்காகவே மனைவியை கை கழுவும் கணவன் மேல் கோவம் கொப்பளிக்கும் அதே வேளையில் அடுத்தவர் அந்தரங்கத்தில் எட்டி பார்க்க நினைக்கும் தரம் கெட்ட சமூகத்தை நினைத்து பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை. இறுக்கமான மனங்களை தளர்த்திட வளமான படைப்புகளை தொடர்க.

நட்புடன்,
கோவர்தனா,
திருவண்ணாமலை

***

அன்புள்ள ஜெமோ

நான் சமீபத்தில் உங்களுடைய சிறுகதையான மாடன்மோட்சம் வாசித்தேன். சிரிக்கவைத்த அக்கதை கடைசியில் ஒரு பெரிய உலுக்கலை அளித்துவிட்டது. தவிர்க்கமுடியாத ஒரு சமூக மாற்றம் நிகழ்கிறது. ஆனால் கூடவே ஏதோ ஓர் அழிவும் நடந்துகொண்டிருக்கிறது. நாம் இன்றைய வாழ்க்கையை மாற்றும்போது நேற்றைய வரலாற்றையும் கூடவே மாற்றிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வந்தது

சுப்ரமணியம்

***

அன்புள்ள ஜெ

உங்கள் பெரியம்மாவின் சொற்கள் கதையை வாசித்தேன். இரண்டு பண்பாடுகள் ஒன்றை ஒன்று கண்டடையும் இடம் மிக அற்புதமாகவும் நுட்பமாகவும் சொல்லப்பட்டிருந்தது. அது நிகழ்வது ஒரு பாட்டியின் மனதில் என்பது மிக அழகானது

ஜெயஸ்ரீ

***

முந்தைய கட்டுரைநேரு ,மல்லையா -சில தெளிவுபடுத்தல்கள்
அடுத்த கட்டுரைநமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு