கடிதங்கள்

sama

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கடந்த இரண்டு மாதங்களாகத்தான் தங்கள் இணையதளத்தை தொடர்ந்து வாசிக்கிறேன்.

தங்களுக்கு வரும் கடிதங்களும் வாசகர்களின் விசாலமான ஆர்வத்தையும், சிந்தனையையும் பிரதிபலிக்கின்றன. உ-ம் ஷண்முகவேல் என்று ஒரு ஓவியர் இவ்வளவு சிறந்த படைப்புகளை உருவாக்கியுள்ளார் என்று எனக்கு நேற்று வரை தெரியாது்.

சில கடிதங்களில் உள்ள கடுமையான கருத்துக்கள் சமூகத்தில் மண்டியுள்ள மனக்கசப்பையும், பிறர் உணர்ச்சிகளை மதியாத மனப்போக்கையும், நம்பிக்கையின்மையையும் காட்டுகின்றன. கி ராஜநாராயணன் அவர்களுக்கு உரிய கௌரவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து கூட கொச்சைப்படுத்தப்பட்டது என்பது ஒரு ஆழமான வியாதியின் அடையாளம். திராவகத்தை பேனாவில் நிரப்பி மனத்தின் இருளை நிஷ்டூரமான சொற்களால் பிரசுரம் செய்பவர்கள் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்கள்.

சென்ற மாதம் என் கடிதம் ஒன்றுக்கு பதிலாக உலகெங்கும் பொது வாழ்வில் வசை மொழிகள் பரிமாறிக்கொள்வது நிகழ்கிறது என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.

மேலை நாகரிக நாடுகளில் யாரும் அவர்களது சொல், செய்கைகளின் விளைவுகளிலிருந்து தப்ப முடியாது. விமர்சகர்கள் வெகு ஜாக்ரதையாக தனி நபர் மீதான விமர்சனங்களை தவிர்த்து, சொல், செய்கைகளையே குறி வைப்பர். விமர்சனங்களை படிப்பவர்களும் அப்படியே விழுங்குவதில்லை. அதிக படிப்பறிவு இல்லாதவர்கள் கூட எதையும் சுய அறிவினால் சீர் தூக்கிப் பார்த்தே செயல்படுவர்.

Verbal aggression is a telltale sign of inferiority complex என்ற அறிவு பரவலாக இருப்பதால் கொச்சைப்படுத்துபவர்கள் கழிக்கப்படுகிறார்கள். மதிப்பிற்குரிய விமர்சனங்களால் புகழ் அடைந்தவர்களும் உண்டு். திறந்த மனம் என்பது ஒரு கலாசார பண்பாடு். தவறு என்று தெரிந்தால் வெளிப்படையாக ஒப்புக்கொள்வார்கள். உலகம் முழுதும் ஒப்புக்கொண்ட கருத்திலிருந்து மாறுபடவும் தயங்கமாட்டார்கள். மேலும் Judge not என்ற மத உபதேசம் நாஸ்திகர்களாலும் மதிக்கப்படுகிறது். வசையாளர்கள் செய்வது character assassination, ஒரு கொலை. கல்லடி போல சொல்லடியும் கொல்லும். என் சொந்த அனுபவத்தை பகிர்கிறேன்.

என் எட்டாம் வயதிலேயே பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு தாய்வழி பாட்டனாரிடம் வளர்ந்தேன். Zero assets குடும்பம், அன்றாடம் ஒரு வேளை உணவுக்கே திண்டாட்டம். ஆனால், அன்பும், ஞானமும், ஒழுக்கமும், பன்மொழி வேதாந்த அறிவும் கொண்ட பாட்டனார், பாட்டி, மாமா. இவை ஒவ்வொன்றும் என்னிடம் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இன்றளவும் பல நன்மைகளை செய்துகொண்டு இருக்கின்றன. ஆனால் எட்டு வயதிலிருந்து ஒரு கொடுமை. அவ்வப்போது வரும் ஒருவர் பொழியும் வசைமழை. “நன்றி கெட்ட பன்றி, கர்வக்கட்டை, பன்னாடை, தேவாங்கு, “இத்யாதி. சாப்பாடு இறங்காது. என் வகுப்பில் உள்ள மாணவர் சராசரி எடையில் பாதி தான் இருப்பேன். விளையாட்டு, அறிவு திறமை போட்டிகள் எதிலும் சேர்ந்தது இல்லை.  பணியிலும் என் potential அளவு நான் முன்னேறவில்லை என்று கணித்தார்கள். அப்படியும் நான்கு பதவி உயர்வுகள். மேலும் மூன்று முறை பதவி உயர்வு நேர் காணலை புறக்கணித்து மறுத்தேன். சிகந்தராபாத், பம்பாய் நகரங்களில் ராமகிருஷ்ண மடத்தில் ரங்கநாதானந்தா, நிராமயானந்தா ஆகியோரது உரைகளை கேட்டேன். துறவி ஆகலாம் என்று இருந்தேன்.

எங்கள் Training Systemஇல் Behavioural Science, Transactional analysis பயிற்சிகளின் பயனாக என் இளம் வயது அனுபவங்கள் ஆழ்மனத்தில் ஒரு இயலாமையையும், frustration ஐயும் உண்டாக்கி உள்ளதை நான் உணர்ந்தபோது ஆயுட்காலத்தில் பாதி கழிந்துவிட்டது!

என் தமிழ் இலக்கிய வரலாறு ஆசிரியர் பழநி அவர்கள் தம் வழிகாட்டியாக கூறிய வரிகள் என் மனதில் பதிந்திருந்தன. அவை

நல்லது செய்தல்ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஓம்பேன்மின்(*)

* இணையதளத்தில் ஓம்புமின் என்று உள்ளது்.

எது சரி என்று தெரியவில்லை. புறநானூறு 195

என் பதினேழாம் வயதிலிருந்து இதையே ஒரு விரதமாக கடைபிடிக்கிறேன். இதனால் வாழ்க்கை தாழ்நிலையில் இருந்தாலும் சீராக இருந்து வந்தது. 32 வயதில் (தங்களுக்கு வாய்த்தவர் போல்) ஒரு க்ருஹலக்ஷ்மியை ஏற்றுக்கொண்டு சந்தோஷமாக வாழ்கிறேன்.

ஆகையால் என் பணிவான பரிந்துரை தங்களுக்கு வரும் வசை “இலக்கியங்களை” படிக்காமல் ஒதுக்கிவிடுங்கள். தங்களுக்கும் நல்லது. தங்கள் இணையதளத்தில் சஞ்சரிக்கும் இளையதலைமுறையினருக்கும் நல்லது. வசையாளர்களுக்கும் நல்லது். அவர்களுடைய அரைவேக்காட்டு சீற்றத்தை பதிவு செய்யாமைக்காக நாளை அவர்கள் நன்றி சொல்வார்கள்.

அன்புடன்

***

சாம கிருஷ்ணன்

***

ஜெமோ,

நீங்கள் பலமுறை குறிப்பிட்டதைப் போல, தமிழர்களுக்கு எப்போதும் தாழ்வுணர்ச்சி அதிகம். அதிலே சுகமும் கண்டவர்கள்.

சமீபகாலமாக, இத்தாழ்வுணர்ச்சி அதன் உச்சத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் எதிர்வினைகளையே உருவாக்குகிறது.

“நான் நன்றாக எழுதுவேன். இதோ, என்னுடைய இந்த புத்தகங்களைப் படித்துப் பாருங்கள்” என்று ஒருவர் கூறினால் அதை என்னவென்று கூட பார்க்காமல், உனக்கு ஆணவம், கர்வம் என்ற ரீதியில் தான் இத்தாழ்வுமன்பான்மை கொண்ட மனங்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன.

அதென்ன பக்கத்து இலைக்குப் பாயாசம்? உங்கள் இலைக்கே கேட்கும் தகுதி உங்களுக்கு உண்டென்றே நம்புகிறேன். உங்களுக்கும் ஒரு தாழ்வுமன்ப்பான்மை உண்டோ? என்று எண்ணுகிறேன், தனக்கு பாயாசம் வேண்டும் என நீங்கள் கேட்கத் தயங்குவதால்.

In my opinion, branding is very important to bring the people closer to our product. It applies to all products and their producers including writers and their books.

உங்களுடைய எழுத்துக்களை வாசித்தபிறகு நானும் எழுத உந்தப்பட்டேன் என நான் எழுதியிருந்ததிற்கு, நீங்கள் வாழ்த்துக்கள் சொல்லி எழுதிய கடிதத்தை என் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டேன். எழுதுவதற்கு முன்னரே, இதென்ன சுயவிளம்பரம் என்று நான் ஒரு கணம் நினைத்தேன். ஆனால், என்னைப் பொறுத்தவரை என்னுடைய இலக்குகளை அடைவதற்கு இந்த சுயவிளம்பரம் அவசியமென்றே நினைக்கிறேன்.|

அன்புடன்

முத்து

***

முந்தைய கட்டுரைஅமிர்தம் சூரியா உரைகள்
அடுத்த கட்டுரைகிளம்புதல் –கடலூர் சீனுவுக்கு