திருப்பூர், கொற்றவை- கடிதம்

korravai

வணக்கத்துக்குரிய ஜெயமோகன் அவர்கட்கு,

இது என் முதற்கடிதம். திருப்பூர் காதுகேளாதோர் பள்ளிக்கு முதன்முதலாக, என் அம்மாவின் நினைவுநாளையொட்டி குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்காகச் சென்றிருந்தேன். சிறிதுநேரங்கள் முன்பாகவே அங்கு சென்றுவிட்டதால் அவ்விடம் மெல்ல உலாவத் தொடங்கினேன். அங்கிருந்த குழந்தைகள் நூலகத்தில் ஒரு தம்பதியினர் குழந்தைகளுக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்தனர். வாய்பேச, காதுகேள இயலாத அந்தப்பிள்ளைகளிடம் அத்தம்பதியினர் வாய்வழியாக கதை சொல்வதையும், அருகிலிருக்கும் ஒரு பெண் அக்கதையை சைகை பாஷையில் அசைவுகளோடு மொழிபெயர்த்து உரையாடுவதையும் நானங்கு தூரமிருந்து பார்த்தேன். பின்னர் விசாரித்துக் கேட்கையில் அது சிவராஜ், அழகேஸ்வரி, சித்ராம்மா என்று பெயர்அறியவந்தது. உயிரூறிச்சொன்ன அந்த அம்மாவின் அசைவும் முகமும் என்னை ஒருவித மனச்சலனத்துக்கு ஆட்படுத்தியது.

கதைசொல்லலின் நடுநடுவே சொல்பவர், அக்கதையின் குறிப்பிட்ட பகுதியில் நெகிழ்ந்து சொல்லமுடியாமல் நடுக்குற்று திக்கிப்போய் நின்னதும், அதைப்பார்த்திருந்த குழந்தைகளின் உணர்வு ததும்பிய முகபாவங்களும் இப்போது நினைத்தாலும் நினைவுள் எழுகிறது. பிறகு அவர்களிடம் போய் என்னை அறிமுகப்படுத்திவிட்டு, இவ்வளவு உயிரோட்டம் உள்ளோடி நிறைகிறதே இந்தக்கதையில் என அவர்களிடம் கதையைப்பற்றிக் கேட்டபோது, ‘இது யானை டாக்டர் கதை. எழுத்தாளர் ஜெயமோகனுடைய அரும்படைப்பு’ என்று பதில் சொன்னார்கள்.

வாழ்வில் முதன்முதலாக நான் உங்களை என்னளவில் கண்டடைந்ததது அந்தத் தருணத்தில்தான். வாழ்வில் யதார்த்தமாக அடைந்த பெருங்கணத் திறவு அது.

அந்நினைவுநாளன்று, சாப்பாட்டுக்கூடத்தில் உணவுகொண்டுவரப்பட்ட பின்பு, அப்பள்ளியின் எல்லாப்பிள்ளைகளும் (யாருமே அழுக்காக பரிதாமாக இல்லாமல் அழகுச் சிறார்களாகவே தெரிந்தார்கள்) வந்து வரிசையாக தரையிலமர்ந்தார்கள். குட்டிக்குட்டி ஒலிச்சத்தங்களோடு கூடம் சலசலத்திருந்த போது ஒரு சிறுமி எழுந்து டக்கென கைத்தட்டினாள். சட்டென மொத்த கூடமும் நிசப்தமாகிப்போனது. அதன்பிறகு எல்லாரும் சேர்ந்து ஓரொலியை பிரார்த்தனைத் துதித்தலாக எழுப்பினார்கள். மொழியேயற்ற அப்பிள்ளைகளின் ஆதியொலி என்னை உலுக்கி அழவைத்துவிட்டது.

அந்த ஆதிப்பிரார்த்தனை எனது அம்மாவுக்காக சமர்ப்பணமானது அன்று. பிரார்த்தனை முடியும்நேரத்தில் சிவராஜ் வந்து, ‘யானை டாக்டருக்காகவும், அந்தக்கதைய எழுதுன எழுத்தாளருக்காகவும் பிரார்த்திப்போம்’ எனச்சொல்ல மொத்த குரல்வளைகளும் அதிர்ந்து வெளிகரைந்தது. கைகூப்பிக் கண்மூடித் தொழுத குழந்தைகளோடு சேர்ந்து நானும் உங்களை வணங்கத்துவங்கினேன்…

காலங்கள் சிலகழிந்து திரும்பவும் ஒருமுறை அங்கு சென்றிருந்தேன். அப்போது அத்தனை காட்சிகள் உணர்தலாக விரிந்தன விழிமுன். சாப்பிட்டு முடித்தபின்பு ஐந்து ஐந்து பிள்ளைகள் குழுக்களாகப் பகுந்து, நடப்பட்டிருந்த செடிகள், மரங்களின் அடித்தூரில் தண்ணீரூற்றிக் கைகழுவிக் கொள்கிறார்கள். பழக்கத்துக்கு கொண்டுவரப்பட்ட ஒழுங்கும், பள்ளுக்கே உரிய தூய்மையும் இதைச் சாத்தியப்படுத்திய வழிநடத்தும் மனிதர் யாரென யோசிக்க வைத்தது.

அன்றைக்குத்தான் முருகசாமி அய்யாவைச் சந்தித்தேன். சிலநிமிடங்கள் மட்டுமே நீடித்தாலும் அவருடனான அச்சந்திப்பு அவ்வளவு அணுக்கமானது நெஞ்சுக்கு. ஜெயமோகன் நீங்கள் முன்பு எங்கோ குறிப்பிட்டது போல் முருகசாமியும் அறம் நாயகர்தான். அப்பள்ளிக்கூடமும் அக்குழந்தைகளுமே இதற்கான காலசாட்சி.

இரண்டாம்முறை நான் சென்றிருந்த நாளில், திருப்பூர் அனுப்பனப்பாளையம் அருகிலிருந்து ஒரு ஏழைத்தாயும் தகப்பனும் அங்குபடிக்கும் தனது மகளை பார்க்க வந்திருந்தனர். அச்சிறுமிக்கு அடிக்கடி மயங்கிவிழுகிற ஏதோ நோய்ச்சிக்கல் இருந்துள்ளது. இதற்கென்றே பெருந்தொகை செலவழித்து அந்தச் சிறுமியைக் நலமாக்கியிருக்கிறார் முருகசாமி அய்யா. ஓசையற்ற இப்படி எத்தனையோ உதவிகள். கண்ணீர்கலந்த உடைந்த குரலோடு அய்யாவிடம் நன்றிசொல்லியழுத அந்தத் தாய்தகப்பனை நேரில்கண்ட போது எல்லாவற்றுக்குள்ளும் மறைந்திருக்கும் புறவுலகுக்குப் புலப்படாத அறம் என்பதன் வேரர்த்தம் எனக்கு வெளிப்பட்டது.

அங்கிருந்து வந்தபிறகு தொடர்ந்து உங்கள் எழுத்தைப் பின்தொடர்வதற்கு முதல்திறவாக இருந்தது, கிளம்பும் நேரத்தில் கைப்பையிலிருந்து அத்தம்பதியினர் எடுத்துத்தந்த ‘யானை டாக்டர்’ புத்தகமே. சின்னதான அச்சிடல்அது. முதன்முலாக மனங்கொடுத்து நான் வாசித்த கதை இதுதான். அதன்பின் நம்பிக்கையின் மையச்சரடை உங்கள் எழுத்துக்கள் நம்பமுடியாத ஆழத்துடன் பிணைத்து உயிர்ப்பிக்கிறது என்பதறிந்தேன்.

கருத்துச்செறிவான உங்களின் படைப்புகளுக்குள் மெல்லமெல்ல என்னை ஆற்றுப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். ஒருவேளை இக்கடிதத்தை நீங்கள் வாசிக்கநேர்ந்தால்… இந்த காலகட்டத்தில் நான் ‘கொற்றவை’ நாவல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்நாவலில் வரும்,

“அறம் அவிந்து மறம் தழைக்கும்போதெல்லாம் பேரன்னை நுண்ணுருகொண்டு ஒரு பெண்ணுடலில் ஏறி வெளி வருகிறாள்”

“பசியே ஒவ்வொரு உயிர்பருவின் உள்ளும் இருந்து ஓடு, ஓடு என சாட்டை சுழற்றும் தேரோட்டி”

“பெரும்பாலையில் ஒரு சருகு பறந்து செல்வதை காண்கையில் என்ன நினைப்பீர்கள் அடிகளே, அது போகும் திசையை வானம் அறியும் என “

என்ற இடங்களிலெல்லாம் என்னைமீறிய ஒரு மிகைமை அடைந்து மீண்டிருக்கிறேன். ஆட்கொள்ளலின் இரசவாதம்.

சமூகவெளிக்குள் என்னால் தேடிக்கொள்ள முடியாத, அந்தரங்கத் தனித்துணையாக, மானசீகமான அரவணைப்புடன் இந்த எழுத்தாளுமையின் காலவிரலைப் பிடித்துக்கொள்வது ஒருவகையில் தயக்கத்தைத் தாண்டி எனை வாழச்செய்கிறது. ஓர் ஏற்றுக்கொள்ளலைப் பழக்கியிருக்கிறது எனக்கு.

இணையதளப் பதிவுகள் வழியாக உங்களின் பார்வைக்கோணத்தையும் படைப்பின் நியாயத்தையும் சிறிதுசிறிதாக உள்வாங்கக் கற்றுவரும் இந்நிகழ்காலத்தில், வாழ்வாசலை திறந்துவைத்த ‘திருப்பூர் பள்ளி’யைப்பற்றிய இருகடிதங்களுக்கான உங்களின் பதில்களை வாசித்தேன். உளப்பூர்வமாக நம்புகிற நேர்மையின் பக்கம் நிற்கவேண்டிய நியாயவுணர்ச்சியை எனக்குணர்த்தியது.

நிறைய நிறைய யோசித்து… ஆழ்ந்து அமைதியாகி… பின்னிரவைக் கடந்த பின்புதான் இம்முதல் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன் . முருகசாமி அய்யா, குழந்தைகள், சித்ராம்மா, சிவராஜ், அழகேஸ்வரி, மரஞ்செடிகள், யானை டாக்டர் என எல்லாரையும் எல்லாத்தையும் இறுக்கமாக நெருங்க அணைத்துக்கொண்டு உங்களின் இந்த பதிலாற்றலுக்கான வணக்கங்களையும் நன்றிகூறலையும் உங்கள்முன் வைக்கிறேன் திருமிகு ஜெயமோகன். உங்கள் வாழ்வில் நல்லவைகளின் நிறைசூழ இறைச்சக்தியை வேண்டிக்கொள்கிறேன்.

நெஞ்சின் நன்றியுடன்

திவ்யாஸ்ரீ ரமணிதரன்

***

அன்புள்ள திவ்யாஸ்ரீ

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? ஒவ்வொன்றும் அதற்கு எதிரானதை எதிர்த்து வென்றுத்தான் நிலைகொள்ளவேண்டும் என்பது இயற்கையின் நெறி. ஆகவே இதுவும் தன் தகுதியால் வெல்லும் என நம்புவோம்

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-1
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் சிங்கப்பூர் கிளையிலிருந்து ஒரு கடிதம்