ஜெ
உங்கள் நண்பர் போகனுக்கு இன்றைக்குப் பிறந்தநாள். இணையதளத்தில் இவ்வாறு எழுதியிருந்தார்
பையனைப் போயிப் பார்த்தேன். ரொம்ப சந்தோஷம் அவனுக்கு. அவன் வீட்டுக்காரி அதுக்கு மேலே. மரியாதை அவன் ஒவ்வொரு அசைவிலும் தெரிஞ்சுது. “நான் யார் தெரியுதா!”ன்னு அதட்டலாக் கேட்டேன். அவனுக்கு கைகால் எல்லாம் நடுங்கிடுச்சு. காபி கொடுத்தா. நான் பொதுவா நாயர் காபி குடிக்கறதில்லைன்னு சொன்னேன். ‘அய்யோ எங்க மனசு கஷ்டப்படும். தவிர இவளுக்கு தஞ்சாவூர் தான்னு சொன்னான். ஒரு வாய் நனைச்சுகிட்டேன். அவன் வளர்க்கிற நாய்க்கு மட்டும் கொஞ்சம் மரியாதை பத்தாது. அதை மாத்தச் சொல்லிட்டேன்
இலக்கிய சம்பந்தமா சில டிப்ஸ் கொடுத்தேன். அவன் கண்ணெல்லாம் நெறஞ்சிடுச்சு. படி இறங்கறப்ப கையைப் பிடிச்சிக்கிட்டு ‘பொற்சபைல இருந்து அந்த சிதம்பரம் தீட்சிதரே இறங்கி வந்து டான்ஸ் ஆடினாப்ல இருக்குன்னு ஏதோ சொன்னான். அதான் என்னன்னு செரியாப் புரியலே.
*
அந்தப்பையனை நீங்கள் சந்தித்ததுண்டா? பாரதி மணிகூட சந்தித்திருக்கிறார் போல.
ஜெகன்
***
அன்புள்ள ஜெகன்,
தெரியவில்லை. நல்ல பையனாக இருக்கிறான் என்று தெரிகிறது. எனக்குத்தெரிந்து கன்யாகுமரியில் விரைவாக வளர்ந்து வரும் பையன் என்றால் சுசீந்திரம் அனுமார்தான்.
நிற்க, இன்றைக்கு போகனை நினைத்துக்கொண்டேன். ஒரு ஜோக்குடன் இணைத்து. எங்களூர்க்கார திக்குறிச்சி சுகுமாரன் நாயர் மலையாள மூத்த நடிகர். வாயில் பல் இல்லை. ஆபாசக்கவிதைகள் எழுதுவதிலும் ஆபாசமாகப் பேசுவதிலும் நிபுணர்
“ஏன் இப்படி ஆபாசமாகப்பேசுகிறீர்கள்?’ என்று ஒருவர் கேட்டதற்கு “நான் என்ன செய்ய? மலையாள மொழியின் எல்லா சொற்களும் ஆபாசமானவைதானே?’ என்றிருக்கிறார்
”என்ன சொல்கிறீர்கள்?’ என்றார் கேட்டவர்
“சரி ஆபாசமில்லாத ஒரு சொல்லைச் சொல் பார்ப்போம்” என்றார் திக்குறிச்சி
கேட்டவர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு “பூசணிக்காய்” என்றார்
கோணலான சிரிப்புடன் “அவனுக்க அம்மைக்க பூசணிக்காய்” என்றார் திக்குறிச்சி. கெட்டவார்த்தை ஆகிவிட்டது
நான் சொல்லவந்த கதை அது அல்ல. செம்பை வைத்யநாத பாகவதர் ஒருமுறை ஒரே கூபேயில் திக்குறிச்சியுடன் டெல்லிவரை சென்றார். பாகவதர் நல்லவர், பக்தர், ஆசாரசீலர். இவர் நேர்மாறு, அதாவது நாயர். இருவரும் உரையாடினார்கள்
அங்கே சென்று இறங்கியபோது நிருபர்கள் வந்து செம்பையிடம் அவர் யார் என்று கேட்டார்கள். அவர் தொளதொளா வாயுடன் சொன்னார் “…ம்பை வைத்யநாத போகவதர்”
சேர்க்கைக்குற்றம்., போகனுக்கு கூடவே ஒரு நாயர் சுற்றிக்கொண்டிருக்கிறார்
ஜெ
***