கங்கை எப்படிப் போகிறாள்? — கங்கா ஈஸ்வர்

 

sila-nerangalil-sila-manithargal

அக்னிப்பிரவேசம்- இந்தக் கதையில் வரும் கங்கா யார், அவள் இயல்பென்ன, அவள் அறிவு நிலையென்ன என்பதை முதலில் கருத்தில் கொள்ளலாம். கங்கா வீட்டிலிருந்து சமூக வெளிக்கு வரும் முதல் தலைமுறைப்பெண். அவள் முட்டாள் அல்ல. ஆனால் இந்த சமூகத்தில் கொட்டிக் கிடக்கும் நல்லவற்றுக்கும் தீயவற்றுக்கும் அவை அல்லாதவற்றுக்கும் அவளுக்கு அறிமுகமில்லை. அவற்றை தன்னறிவால் அறிந்து கொள்ளும் மனமுதிர்ச்சியுமில்லை.

வீட்டைவிட்டு முதலில் வெளியுலகிற்கு வரும் பெண் பொருள்விடுதலை என்ற ஒற்றை நோக்கோடு மட்டுமே வெளியே வந்தாள் என்ற வாதமே இன்று தர்க்கபூர்வமாக எதிர்கொள்ள பொருந்தாத சிந்தனையாக இருக்கிறது. எத்தனை வறுமைக்கு அடியிலும் ஆணுக்கு இருக்கும் செயலின், தேடலின், வென்றடைதலின் தீவிரம் பெண்ணுக்கும் இருக்கலாகாதா என்ன? வீட்டுக்குள் மட்டுமே அடைந்திருந்த போதும் பெண்கள் அதுவரைக்கும் அந்தத் தீவிரம் இல்லாமல் இருந்துவிட்டார்களா?

கங்கா தன் முன்வந்து நிற்கும் காரில் ஏறிச்செல்கிறாள். கோழையான அறிவற்ற அத்தலைமுறைப் பெண்ணெனில் அவன் அழைக்கும்போதே அங்கிருந்து விலகி மழையில் ஓடிச் சென்றிருப்பாள். தன் மீது கொண்ட மதிப்பினால் தனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாகவே முதிராத வயதில் கங்கா அந்த அழைப்பைக் கருதியிருக்க முடியும். அழைப்பவனின் உயர்குடித்தோற்றத்தைப் பார்த்து வெட்கி, தன் எளிய கீழ்நடுத்தரகுடித் தோற்றத்திற்கு நாணுகிறாள் கங்கா. காரில் ஏறும்போது அவன் அவள் கைபற்றி அழுத்துவதையும் வென்றது போன்ற அவனது பாவனையையும் கவனிக்கவே செய்கிறாள். அதன்பிறகும் அவள் நமக்குக் காட்டுவது காரின் சித்திரத்தை, நீலவிளக்கும் நறுமணமும் அந்தக்காரின் சௌகரியங்களும். சொந்தமான பாவனையுடன் அந்தக் காரில் செல்லும் அவள் அதற்கு சகல உரிமையும் கொண்டவளென்றே நமக்குத் தோற்றம் காட்டுகிறாள். அப்படி ஒரு கார் இருந்தால் வீடே தேவையில்லை என்றும் எண்ணிக் கொள்கிறாள். இவையனைத்தும் அவள் வெகுளித்தனமென அவளே சொல்லிக் கொள்கிறாள்.

எங்கள் அலுவலகத்தில் ஓர் ஊழியர் இருக்கிறார். பெரும்பாலும் அவருடைய அறியாமையால் அவமதிக்கப்பட்டு வருபவர் அவர். அவருக்குக் கொடுக்கப்படும் வேலைகளை மீண்டும் மீண்டும் நுணுக்கமாக மாற்றி [தவறாகச்] செய்வார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் பேதைத் தனமானவை. இச்செய்கையால் அவருக்கு வேலை கூடப்போய்விடக்கூடும். ஆனால் அவரால் அப்படித்தான் நடந்து கொள்ள முடியும். ஏனெனில் அதன் பின் இருப்பது புரிதலின்மை அல்ல. புரிந்து கொள்ள இயலாதவர் போன்ற ஒரு தோற்றத்தை மற்றவர்களுக்கு அளிப்பதினூடாக, தன் வேலைகளை மாற்றிச் செய்வதை, தன்னை ஏவியவர்களுக்குத் தரும் அவமதிப்பாக அவருடைய ஆழம் கருதுகிறது. அவரே தன் இயல்பை அறிந்திருக்கமாட்டார். அவை அனிச்சைச் செயல்கள். கங்காவின் பேதமைக்கும் இந்த ஊழியருக்கும் மிகப்பெரிய வேறுபாடில்லை. இதனை ஏற்காமல் அவள் செயலுக்கு வேறு விளக்கம் கேட்பவர்கள் வெண்முரசில் அம்பையிடம் பேசும் கன்னிப்பருவ தெய்வமான சோபையிடம் கேட்கலாம்!

வீட்டுக்குச் செல்லும் பாதை மாறிச் செல்கையில் தான் கங்கா பதட்டமடைகிறாள். ஆனாலும் அவள் அவனுடன் சண்டை போடவோ காரை நிறுத்தச் சொல்லி எதிர்க்கவோ இல்லை. வெறுமே முனகியபடி சிரிக்கிறாள். அதன் பின்னால் நிகழும் அந்தச் சம்பவத்திலிருந்து போராடி முரண்பட்டு விலகவில்லை. அதன் அடிப்படைக் காரணமாக, இந்தச் சமூகம் அளித்த கட்டுப்பாடுகளை மீற விரும்பும் ஒரு ஆழ்மனம் அவளுக்கு இருந்திருக்கலாம். அவள் மனத்தில் பிரபுவின் மீதான ஈர்ப்பும் அவள் சூழலின் மீதெழுந்த மௌனமான எதிர்ப்பும் அவளது பேதமையும் காரணமாக இருந்திருக்கலாம். அவளே அதற்கான காரணத்தை அறிந்திருக்கவில்லை. பிரபுவை அறிந்து கொண்ட பிறகு ’இப்படிப்பட்ட ஒரு அசடு அழைத்ததென்று வந்து வாழ்க்கையை அழித்துக் கொண்ட என்னை என்ன சொல்வது’ என்று அவளே வாக்குமூலம் கொடுக்கிறாள்.

பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு நாம் சந்திக்கும் கங்கா பேருந்தில் தன்னை இடித்துக் கொண்டு நிற்கும் ஆணிடமிருந்து விலகமுடியாதவளாக, அதைச் சகிக்கவும் முடியாத அவஸ்தையுடன் இருக்கிறாள். அந்தத் தருணத்தில் தான் அவள் கதை அவளுக்கே சொல்லப்படுகிறது. இடையிடையே அவள் வெங்குமாமாவையும் நினைக்கத் தவறுவதில்லை. அந்தக் கதையை படிக்கும் வரை அவள் தனக்கு நேர்ந்த அந்த சம்பவத்தை நினைத்துக் கொள்ளவில்லை என்றும் அதன் விளைவுகளையே அலட்சியமாக எண்ணிக் கொள்வதாகவும்தான் நம்மிடம் சொல்கிறாள். அதை அவளே உடைக்கும் இடமும் நாவலில் உண்டு.

பிரபுவைக் கண்டுபிடித்து, சந்தித்து, காரின் முன்சீட்டில் அமர்ந்திருக்கும் அவள் ‘பின் சீட்டில் ஏறியவள் பன்னிரு வருடங்களாக வளர்ந்து முன்சீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டது போல’க் கற்பனை செய்து பார்க்கிறாள். வாழ்வின் ஒரு தருணத்திலும் அச்சம்பவத்தை அவள் மறக்கவில்லை என்பதன் சான்று அது. அதை எண்ணி இன்புற்றாளா துயருற்றாளா என்பதெல்லாம் அவள் வார்த்தைகளில் இல்லை. அதன் பிறகு அவனிடம் பேசும்போதும் அவன் பேசிய ஒற்றை வார்த்தைகளைக்கூட நினைவு கூர்கிறாள். கங்கா போன்ற ஒரு ஆளுமை அவளை அடைந்த ஆணைப் பற்றியபடி  தான் அதுவரை வாழ்ந்திருக்க முடியும்.

பிரபுவுக்கு அவன் சந்திக்கும் பல பெண்களில் அவள் ஒருத்தி. ஆனால் அவளுக்கு அப்படியல்ல. அவனை மீண்டும் அடையாளம் கண்டு கொள்வதில் கூட அவள் சிரமப்படுகிறாள். பார்த்த பின்பும் அன்றைக்கு இன்னும் ஸ்மார்ட்டாக இருந்ததாக அவளுக்குத் தோன்றுகிறது. அவள் தன் நினைவில் கொண்டிருந்த ஆண் ஆகிய அவனுக்கு அணுக்கமாகவும், அதேசமயம் அவளை அனைத்து வகையிலும் சூழ்ந்திருந்த வெங்குமாமாவிடமிருந்து விலகியிருக்கவும் அவள் கொள்ளும் முயற்சியே அவளுடைய ஆளுமையாக ஆகியிருக்க முடியும். நாம் சார்ந்துள்ள சூழலுக்கு எதிர்வினையாகவே நம்முடைய ஆளுமை உருவாகிறது. ‘நரகம் என்பது பிறர்’ என்ற சார்த்தரின் வரியை இந்நாவல் முழுவதிலும் பொருத்திப்பார்க்க முடியும். கங்கா பிறர் என்னும் நரகத்தில் இருக்கிறாள். பிறரில் இருந்து தன்னை விலக்கி அதன் வழியாக தன்னை உருவாக்கிக்கொள்கிறாள். கங்கா பிரபுவுடனான தன் உறவின் தோல்விக்குப் பிறகு பிரபு விரும்பாத ஒரு வாழ்க்கைக்குள் தன்னைத் திணித்துக் கொள்வதும் கூட பிரபுவுக்கு எதிரான, கூடவே வெங்குமாமாவுக்கும் எதிரான ஆளுமைத் தேர்வே. ஒரு வகையில் அவளை வேடிக்கை பார்க்கும் மொத்த சமூகத்திற்கும் எதிரான தன்வெளிப்பாடும்கூட.

வெங்குமாமா நம்முடைய சமூகத்திலுள்ள “நாலுபேரி”ல் முக்கியமான ஒருவர். அந்த நாலுபேரின் பிரதிநிதி. அவர்கள் பழமையும் பண்பாடும் பேசி இடித்துரைப்பவர்கள் மட்டுமல்ல. அப்படி தன்னை இழந்தவர்களை மீட்பவர்களும்கூடத்தான். அந்த நாலு பேர் அடிப்பதுடன் அணைக்கவும் செய்கிறார்கள். அதற்கு நன்றிக்கடனையும் எதிர்பார்க்கிறார்கள். அவளை அடைய முயல்வதும் நிந்தித்து விலகுவதும் அந்த நாலுபேரில் ஒருவர்தான். ”இழிந்தவள்” என்று சொல்லப்பட்டு குடும்பத்தினரால் கைவிடப்பட்டு நிர்க்கதியாக நிற்கும் அவளை அவரே அழைத்துச் சென்று படிக்க வைத்து வேலையிலும் அமர்த்துகிறார். மற்றவர்கள் தெருவில் விட்டுவிட்ட அவளை இவ்வளவு பரிவாக பார்த்துக் கொண்டதும் அவள் சுயமரியாதையுடன் வாழ வழி செய்ததும் அவர் அவளுக்கு அளித்த கொடை. இதற்கிடையில் அவர் அவளிடம் அத்துமீறுகிறாரே தவிர வன்முறையால் அடைய முயலவில்லை.

கங்காவின் ஜாடையான எச்சரிக்கைக்கு அஞ்சி அவர் அவளை விட்டுவிட்டார் என்ற கங்கா நம்மிடம் சொல்லும் வாதத்தை என்னால் ஏற்க முடியவில்லை. பன்னிரு ஆண்டுகளுக்குப் பிறகு அவள் பிரபுவை வீட்டுக்குக் கூட்டிவந்து அறிமுகப்படுத்திய பின்னர் அவளை நேரடியாக அணுகும் அவர் அது வரை ஏன் திடமாக அணுகவில்லை என்பது எனக்குக் கேள்வியாக இருந்தது. நிர்க்கதியான அவள் வாழ்க்கையை மீட்டுத் தருவதனூடாக தன் மீது அவளுக்குப் பேரன்பும் பெருமதிப்பும் இருக்கும் என வெங்குமாமா கணிக்கிறார். சுயமரியாதையும் அறிவும் உள்ள பெண் என்பதால்  அவளிடம் அறிவார்ந்த விவாதங்களில் ஈடுபடுவதன் மூலம் தான் ஒரு பேரறிஞன் என்று நிரூபிக்க விரும்புகிறார்.

ஒரு பெண்ணை அவளது அகத்தையும், அகங்காரத்தையும் சேர்த்து வெல்ல விரும்பும் ஆணின் இயல்பு பற்றி வெண்முரசில் அர்ஜுனனிடம் குளியலறையில் மாருதர் விவாதிக்கும் இடம் ஒன்று உண்டு. அவளுடைய நிர்க்கதியான சூழலும் அவளுக்கு வேறுவழியில்லை என்பதும் மட்டும் அவர் அப்படி எண்ணுவதற்குக் காரணம் அல்ல. அவளுடைய நுட்பமான அறிவு பற்றிய அவருடைய கணிப்பும் அவர் தன்னுடைய வயது ஒரு தடையென எண்ணாமலிருப்பதற்குக் காரணம்தான். அவர் அவளை அடைய விரும்பவில்லை, அவளை முழுவதும் வெல்லவே விரும்புகிறார். அவளை அணுக முயன்று ஒவ்வொருமுறை அவள் தன்னிடமிருந்து விலகும்போதும் அவள் தனக்குரியவள், தன்னைத் தவிர எந்த ஆணும் அவள் மனத்தில் இடம்பெற முடியாதென்று தெளிவுடன் இருக்கிறார். எனவே அவள் கனிகிற வரை சற்று காலம் தாழ்த்துவதால் பிசகில்லையென்றே நினைத்திருக்கலாம்.

வெங்குமாமா தன்னைச் சுற்றி இருப்பவர்களின் சித்திரத்தை தானே உருவாக்குகிறார். அதையே உலகமும் நம்புகிறது. ஆனால் அம்புஜம் மாமி கங்காவுக்கு காட்டுகிற வெங்கு மாமாவின் முகம் வக்கிரம் நிறைந்ததாக இருக்கிறது. இந்த சமூகத்தின் அந்த நாலு பேரில் சிலருடைய இருளில் மறைந்திருக்கும் முகம் அது. ரகசியமாக கங்காவுடன் உறவு கொள்வதை விரும்புகிறது. அறியப்படாத இருளின் காயங்கள் போல, அத்தருணங்கள் எப்போதும் வெளிச்சத்துக்கு வரமுடியாதவை.

ஜெயகாந்தன் கங்காவின் பார்வையில் வெங்குமாமாவை அவள் மீது பாயக்காத்திருக்கும் புலியாக உருவகிக்கிறார். அவருடனான உறவு பற்றி கங்கா சொல்லும்போது அவரைப் புலியாகவும் அவளை அப்புலியைப் பழக்குவதன் வழியாகவே அதனிடமிருந்து தப்பிக்கக் கற்றதாகவும் சொல்லிக் கொள்கிறாள். அப்படி அந்தப் புலியை வென்றுவிட்டதாகவும் தருக்கிக் கொள்கிறாள். ’’வாக்கிங் வித் எ டைகர்’’ என்பது அவள் மொழி. அந்தப்புலி தன் இரைக்குக் காலம் பாராமல் காத்திருந்தது. தன் இரை கை நழுவிப்போகுமென அறிந்த தருணத்தில் அப்பட்டமாக பாய்கிறது. மிக மூர்க்கமாக கங்கா அவரை தண்டித்து அனுப்புகிறாள். பிரபுவின் மீதான காதல் ஆழத்தில் இல்லையென்றால் அவளை உருவாக்கிய அவரைத் தண்டிக்கும் கொற்றவையென அவள் எழுந்திருக்க முடியாது.

அவள் வெறும் பாலியல் வேட்கை மிகுந்தவளென்றால் அவளைக் காப்பாற்றி அன்போடு ஆதரித்து அவளை சுதந்திரமானவளாக ஆக்கிய வெங்குமாமாவை அவள் ஏன் விரட்ட வேண்டும்? அது ஒரு பாதுகாப்பான உறவுதானே? போலியான மதிப்புடன் சமூகத்தில் வாழ்ந்திருக்கலாம். எந்த மனக்கொந்தளிப்பும் அவமதிப்பும் தேவையில்லையே. சமூகத்தில் நடமாடும் சுதந்திரம் உள்ள அவள் ஏன் மீண்டும் பிரபுவையே தேடிக் கண்டடைய வேண்டும்? அதுவரையில் அவளை ஏசியவர்களை பொருட்படுத்தாத அவள் தனக்கென ஒரு ஆணை அடைவதில் மட்டும் மரபின் விதிகளை ஏற்று தன் உளம் அழித்தவனையே அடைய முயல்கிறாள் என்ற கூற்று எனக்கு அபத்தமாகப்படுகிறது.

ஒரு தருணத்தில் கங்கா மீண்டும் தன்னை அந்நிலைக்கு ஆளாக்கியதன் குற்றத்தில் அன்னைக்கும் பங்கு உண்டு எனச் ’சொல்ல விழைந்து’ அந்தக் கதையைக் கொண்டுவருகிறாள். அப்போதுதான் வெங்குமாமா அவள் மனத்தில் அந்த “அவன்” இன்னும் இருந்து கொண்டிருக்கிறான் என்பதைக் கண்டு கொள்கிறார். அதன் பிறகே அவளின் தகுதிகள் அலசப்படுகின்றன. அவளால் கண்டுபிடிக்க முடியாதென சூளுரைக்கப்படுகிறது. அவனை அவள் கண்டு பிடித்தாலும் அவள் அவமதிக்கப்படுவாள் என்று அறிவுரை சொல்லப்படுகிறது. இவையனைத்தும் எப்படியாவது அவன் மீதான அவளது ஈர்ப்பை உணர்ந்து அதிலிருந்து அவள் விடுபட வேண்டுமெனச் சொல்லப்படுபவையே. கனகம் கங்கா மீது பரிதாபப்படும்போது பண்பாட்டை சாஸ்திரத்தை அவளது கற்பின் பொறையை உதாரணம் காட்டி அந்தப் பரிதாபத்தை துடைத்தெறிகிறார் வெங்குமாமா. இவற்றுக்கு சம்பந்தமில்லாமல் கங்கா அனைத்து எதிர்ப்புகளையும் மீறி பிரபுவைக் கண்டடைந்த பின் முதன் முறை அவனிடம் தொலைபேசியில் பேசும் போது தொண்டை அடைக்க உள்ளம் ததும்பியபடி பேசுகிறாள். இருபதாண்டுகள் தான் வளர்ந்த குடும்பச் சூழலை தன் அந்தரங்கக் காதலனை அறிந்தவுடன் மொத்தமாகக் கைவிடும் பெண்ணின் இயல்பு அது.

பிரபுவைக் கண்டுபிடித்தபின் அவனை தன் குடும்பத்தினர் முன்நிறுத்த, அதன்பொருட்டு அவனை ஆழமாக அறிந்துகொள்ள என்று எண்ணி அவனுடன் பழகத் துவங்குகிறாள். அவனுக்குத் தன்னைப்பற்றிய மதிப்பீடு என்னவாக இருக்கும் என்பதில் அவள் கொள்ளும் பதட்டம் கவனிக்கத் தக்கது. தன்னைப்பற்றிய இழிவான எண்ணங்களை அவன் கொண்டிருப்பானெனில், அவளுடைய சுயமரியாதை இழிவுபடும் பட்சத்தில் அவனுடன் தொடர அவளுக்கு எந்த உறவுமில்லை. {அப்படி ஒரு எண்ணம் அவனிடம் இருக்குமெனில் அந்த எண்ணத்தை மாற்றிவிடத் தன்னால் இயலும் என்ற சமாதானம், ஒரு “கமா”வும் போட்டுக்கொள்கிறாள்}. அவன் தன்னை இழிவாக எண்ணவில்லையென்றும் தன்னைப்போலவே வேறு வகையில் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் என்றும் அவனைக் கண்டுகொள்ளும்போது அவனைப்பற்றிய பொறுப்பை தானாகவே அவள் எடுத்துக் கொள்கிறாள்.

பிரபுவிடம் தான் மிகச் சொந்தமாக உணர்வதாக அவளே பல தருணங்களில் நமக்கு சொல்கிறாள். இந்தக் கார் இந்த மனிதன் எல்லாரும் அவளுக்கு புதிதாக இல்லை என்கிறாள். பிரபுவை அணுகும் ஒவ்வொரு தருணத்திலும் அவனை மிக நெருக்கமானவனாக உணர்ந்து அவன் தோற்றத்தை, உடையை, பாவனைகளை, அப்பாவித்தனத்தை ரசிக்கிறாள். மஞ்சுவிடம் நெருங்கி பிரபுவிடமிருந்து சற்றேனும் விலகுவதாக தோன்றும் தருணங்களில் ஏதேனும் காரணங்கள் சொல்லி அவனைத் தன்னுடன் இருத்திக் கொள்கிறாள். அவனது முந்தைய காலகட்டத்துப் பெண் சகவாசத்தைப்பற்றி தனக்கு நாட்டமேயில்லை என்று எண்ணுகிறபோது தான் அவர்களில் ஒருத்தியாக இருக்கக்கூடாதென்றும் ஆனால் அவன் தன்னை நேசிக்கவேண்டும் என்றும் விரும்புகிறாள். அவன் தன்மீது அப்படி ஒரு உரிமையை எடுத்துக்கொள்ளாததன் குறையை அடிக்கடி எண்ணிக் கொள்கிறாள். அவளை பொறுத்தவரை அவன் அவளுடைய மனிதன் (My Man). அது அவளது உரிமையும் கூட

இதற்கிடையில் அவள் அம்மா கனகத்தின் எதிர்ப்புக்குரலுக்கு பதிலாக அவள் சுட்டிக் காட்டுவது அவள் அம்மாவின் தலைமுறை மாற்றத்தை. ”நீயென்ன சிரச்சா கொட்டிட்டே?” என்ற கேள்வியில் அவள் சுட்டிக் காட்டுவது ஒரு தலைமுறையில் நிகழும் பரிணாம மாற்றத்தை. அவள் தனக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவளாக வாழவேண்டும் என்ற கனகத்தின் அபத்தமான வற்புறுத்தல் தான் சிரைத்துக் கொள்ளல். இதற்கு நேர் எதிரான தன்மையுடைய அடுத்த தலைமுறைப் பெண்ணின் பிரதிநிதியாக பிரபுவின் மகள் மஞ்சுவை ஜெயகாந்தன் அறிமுகப்படுத்துகிறார். காலங்கள் மாறும் என்றுதான் ஜெயகாந்தன் சிலநேரங்களில் சிலமனிதர்கள் என்று தலைப்பு வைப்பதற்கு முன்பு இந்நாவலுக்கு தலைப்பிட்டிருக்கிறார்.

தான் கொண்டிருந்த இளமையின் பேதமையைத் தவிர்த்த நவீன பெண்ணாக மஞ்சுவை கங்கா பார்க்கிறாள். மேலும் அறிவார்ந்த, புதிய நோக்குள்ள, தெளிவாகச் சிந்திக்க முயலும் ஒரு தலைமுறை. சகமனிதனுடன் இயல்பான நட்பு சாத்தியப்படும் தலைமுறை. தனக்கு முந்தைய தலைமுறையின் தவறுகளிலிருந்து, ஏமாற்றங்களிலிருந்து தன்னை உருவாக்கிக் கொள்ளும் புதிய தலைமுறை. உடல்ரீதியான உந்துதல்களின் தடுமாற்றத்தை வென்று சமூகத்தில் நிகர் நிற்க விரும்பும் தலைமுறை. தன் முந்தைய தலைமுறையுடன் அது முரண்பட்டாலும் அது நம் பண்பாட்டை பழையதென தூக்கி எறியவில்லை. அதன் குறைகளைக் களைய, மேம்படுத்திக் கொள்ள தன் முந்தைய தலைமுறையிடம் அது உரையாட முயல்கிறது. தன் நிலையை விளக்குகிறது. அதற்கு மேலும் திணிக்கப்படும் அடக்குமுறையை மீறக் கற்கிறது. அந்தத் தலைமுறை தன்னை புரிந்து கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் என்று கங்கா திடமாக நம்புகிறாள். அவளிடம் அனைத்தையும் சொல்கிறாள். மஞ்சு மிக எளிதாக அவளுடன் இணைந்து கொள்கிறாள். இந்தப் புரிந்துகொள்ளலுக்கான அழைப்பே ‘நீ சிரச்சா கொட்டிட்டே?’ என்ற கேள்வி.

கங்கா பிரபுவை காதலிக்கிறாள். அவன் தன்னை முழுதேற்க வேண்டும் என்ற அவளது விழைவு அவள் குரலில் இருக்கிறது. என்றாலும் அவளது அறிவும், ஆழமான காதலும், தன் சுயமதிப்பும் அவளைக் கட்டுப்படுத்தி வைக்கின்றன. அவளின் இந்த உவகை மிகுந்த வாழ்க்கையில் பிரபுவைக் கண்டு கொள்ளும் இடம் ஒன்று வருகிறது. பிரபு கிளப்பில் தோற்க அஞ்சி ஏமாற்றி அவமானப்படும் ஒரு இடம். தான் அவமானப்பட்டதை அவளிடம் பகிர்ந்து கொள்கிறான். அவளிடம் பகிர்ந்து கொள்வதனூடாக அதிலிருந்து மீண்டு வருகிறான். அவனுக்குத் தன்னிலை (Self) மட்டுமே பெரிதாக இருக்கிறது. எனினும் அவன் கங்காவை தனக்கு மேலான ஒரு ஆளுமையாகவே பார்க்கிறான். அவன் சந்தித்த பெண்களுக்கும் அவனுடைய உறவு ஒரு பொருட்டில்லை என அவன் நினைக்கிறான். அந்தப் பெண்களுக்கிடையில் தான் கெட்டுப்போனதாகக் கருதி அதனால் தன் மொத்த வாழ்வையும் இழந்து அவனுக்காக அவனைத் தேடி வருபவள் அவள் மட்டுமே. அவனது நட்பின் மூலம் மலரும் கங்கா அவனைப் பொறுத்தவரை அவனுக்கு மிக மேலான ஒருத்தி. ஜெயகாந்தனின் வார்த்தையில் ‘அம்மன் சிலை போல’. அதனாலேயே அவனால் கங்காவின் காதலை உணர முடியவில்லை.

அவன் இச்சமூகத்தின் ஒரு சாதாரண “நல்லவன்”. சலிப்புற்றிருக்கும் ஒரு வாழ்க்கை அவன் முன் இருக்கும்போதும் தன் மகளுக்கென அதில் பொருந்திச் செல்வதே சரி என எண்ணி ஒரு பொறுப்பான குடும்பத்தலைவனென மனம் மாறுகிறான். அப்போதும் அவனுக்கு அவளைப் ‘பாழ்செய்ததன்’ குற்ற உணர்ச்சி பெரிதாக இல்லை. ஏனெனில் அவன் செய்யும் காரியங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் தன்மையுடையவன் அல்ல அவன். தன்னைப் பற்றிய சுயநலத்தால்தான் அவன் அவளை அடைந்தான். அதே சுயநலத்தால்தான் அவளை மேலே ஏற்றிவைத்துவிட்டு அவள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் அவனால் அவளிடமிருந்து எளிதில் விலகிச் செல்லவும் முடிகிறது.

 

Jeyakanthan

தன் காதலையோ, அதன் விளைவான சரணாகதியையோ உணராத அவனை தன்னை நோக்கி திசை திருப்ப விரும்பும் கங்காவுக்கு தனக்கு வரும் திருமணத் தேர்வு வாய்ப்பாக அமைகிறது. தனக்கு ஒரு திருமண வாய்ப்பு அமையுமெனில் அவன் ஆழம் அவளை இழக்க விரும்பாமல், சீண்டப்படும் என்றும் தன்னுடன் வந்து சேர்ந்து கொள்ளும் என்றும் அவள் நினைக்கிறாள். தானும் அவனுடன் நிலைத்த உறவு கொண்டு வாழமுடியும் என்ற பெண்மையின் எளிமையான கணிப்பே அதைப்பற்றி அவனிடம் சொல்லச் செய்கிறது. (இந்த எண்ணத்தின் அடியில் அவளுக்குப் பிரபுவின் மீது பாலியல் வேட்கை இல்லையென்று சொல்ல முடியாது. அதை தவறென என்னால் எண்ண முடியவில்லை.) அத்திருமணத் தகவலை அவனுக்குச் சொல்லும் அன்று அவள் இனிப்பு பரிமாறுகிறாள். அத்திருமணத்தை முன்னெடுப்பவரிடம் தன் அண்ணன் வீட்டு விலாசத்தை அவளே தருகிறாள். இப்போது ‘நோ’ சொல்லத் தெரியாத பெண் அல்ல இந்த கங்கா. ஒரே வார்த்தையில் அந்தப் பேச்சை அவள் தவிர்த்திருக்கலாம். அத்திருமணத்தை பிரபுவை தன்னை நோக்கி இழுக்கும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த விரும்புகிறாள். இன்றும் பெண்கள் இந்த உத்தியைக் கையாளத்தான் செய்கிறார்கள்!

துரதிஷ்டவசமாக, அவன் அவளை தன் மகளுக்குச் சமானமாக எண்ணவேண்டும் என்னும் மனநிலையில் இருக்கிறான். அவளைப்போன்ற ஒரு பெண் தன் வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணுகிறான். அவளைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறான். அவளால் நம்ப முடியாததும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான அதிர்ச்சி இது. அவன் தன் காதலை அறிந்துகொள்ளவே இல்லை என்பதன் வலி. மணமாகிக் கணவனுடன் வசிக்கும் ஒருத்தியை மீண்டும் இன்னொரு ஆணை மணம் முடிக்கச் சொல்வதைப்போன்ற கட்டாயம். அவள் மனதளவில் அவனுடன் வாழ்ந்து கொண்டிருப்பவளே. மிக வெளிப்படையாக தன் சுயமதிப்பை சிதைத்து அவனைத் தன்னுடன் வாழும்படி தன்னைச் சேர்த்துக் கொள்ளும்படி இறைஞ்சுகிறாள். இந்த கங்காவை பிரபுவுக்கு அறிமுகமில்லை. அவன் அவளை வேறொருத்தியைப் போலப் பார்க்கிறான். பிரபுவின் புறக்கணிப்பை தாளமுடியாத கங்கா மனம் உடைகிறாள். சமூகத்தின் நாலுபேரையும் புறக்கணிக்கிறாள் அல்லது அந்த நாலுபேருக்கும் எதிர்நிலை எடுப்பதன் மூலம் தன்னை முற்றாக அழித்துக் கொள்கிறாள்.

ஒரு ஆணின் நேர்மையற்ற தன்மையை இடித்துரைத்து ஏற்றுக்கொள்ளும் சமூகம் பெண்ணின் கற்பு நிலை தவறும்போது இடித்துரைத்து முற்றாகக் கைவிடுகிறது. எந்த ஒரு பெண்ணும் பெறும் உச்சபட்ச அவமதிப்பு அவளது பாலியல் உறவு குறித்த வசை. ஆணுக்கும் அவனைச் சேர்ந்த பெண்ணின் பாலியல் உறவுதான் உச்சபட்ச வசை. ’அவனுடைய’ பாலியல் உறவு அல்ல. இதன் அடிப்படையிலேயே இதிலிருந்து விடுபடும் பொருட்டே பெண்ணியம் பேசும் எல்லோரும் பாலியல் விடுதலையைக் கோருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இதன் மறுமுகமாக பாலியல் வசைகள் மாறும் என நம்புகிறார்கள். ஆனால் அதுதான் பெண் விடுதலைக்கு அடிப்படை என என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. ஜெயகாந்தன் காட்டும் கங்காவும் இந்நோக்கத்தை அடிப்படையாகக் கொள்ளவில்லை.

கங்காவை அவளது குடும்பம் ஏற்றுக் கொண்டிருந்தால், வெங்குமாமாவுக்குப் பணிந்திருந்தால், பிரபு ஏற்றுக் கொண்டிருந்தால், பத்மா அணைத்துக் கொண்டிருந்தால், திருமணம் நடந்திருந்தால் என அத்தனை சாத்தியங்களையும் இந்நாவல் வழி ஜெயகாந்தன் நம்மை யோசிக்க வைக்கிறார். ஆனால் இந்தச் சாத்தியங்கள் எதுவும் எட்டமுடியாத நிறைவு செய்ய முடியாத ஒரு நவீனப் பெண் கங்கா. பெண்ணியம் பேசுபவர்களின் சிந்தனைக்குப் பிடிபடாத ஒரு உயர்பெண்மை.

ஜெயகாந்தனுடைய கங்கா நவீன யுகத்தின் ஒரு சாத்தியம். ஹென்றிக்கும் சாரங்கனுக்கும் சமமான இடத்தையே அவர் கங்காவுக்கும் அளித்திருக்கிறார். அவர்களைப்போல சமூகத்துடன் ஒட்டி உரையாட விரும்பித் தோற்று விட்டு விலகி வெளியேறும் ஒரு சாத்தியம். இங்கு அவர் முன்வைக்கும் கங்கா ஒரு கெட்டுப்போன, மனநோய் பிடித்த, இயலாமை நிறைந்த பெண் அல்ல. பெண்ணெனும், மானுடம் என்னும் பேராற்றல் கொண்டவள். வெங்குமாமாவோ அம்மாவோ மன்னியோ பிரபுவோ கூட அவள் களத்தில் ஆடும் காய்களே. அவர்களுடன் ஆட இயலாமல் சலிப்புற்று அவள் சென்று சேரும் இடம் அவர்களுக்கெதிரான ஒன்று.

அவ்வகையில் பார்த்தால் சார்த்ர் சொல்வதுபோல அவள் பிறருக்கான எதிர்வினைகளால் தன் ஆளுமையை உருவாக்கிக் கொள்ளவில்லை. எதிர்வினைகள் வழியாக தன்னை கண்டடைகிறாள். தன்னை அதன் வழியாக கட்டமைத்து கூர்தீட்டிக்கொள்கிறாள். அவளுடைய கடைசிக்கட்ட உடைவு என்பது அதற்கு முன்பு அவள் காட்டியதுபோன்று சகமனிதர்களுக்கான எதிர்வினை அல்ல. அப்போது அவளுக்கு சகமனிதர்கள் எவ்வகையிலும் பொருட்டல்ல. அது, அவள் கண்டடைந்த அந்த ஆளுமை நிராகரிக்கப்படும்போது, அதன் அன்புக்கு அர்த்தமில்லாமல் ஆகும்போது ஏற்படும் சுயநிராகரிப்புதான். பாரிஸுக்குத் திரும்பிச் செல்லும் சாரங்கனைப் புரிந்து கொள்பவர்களால் தன்னை தானே நிராகரித்துக் கொள்ளும் கங்காவை கவனிக்கமுடிவதில்லை. சாரங்கனை, ஹென்றியை பெருமிதத்துடன் ஏற்றுக் கொள்ளும் இவர்களுக்கு கங்கா அவர்களையொத்த ஒரு சாத்தியம் என ஏன் எண்ணத் தோன்றவில்லை? மீண்டும் மீண்டும் பெண்ணின் கற்பும் பொறையும் பாலியலும் ஏன் பேசப்படுகிறது?

அக்காலத்தில் சமூகவெளிக்கு வரும் முதல் தலைமுறைப் பெண்ணுக்கு நிகழக்கூடியவற்றில் ஒரு சாத்தியம் கங்காவுக்கு நிகழ்ந்தது. அதை இந்த சமூகம் எப்படி ஏற்கிறது எதிர்க்கிறது எதிர்வினை புரிகிறதெனச் சொல்வதன் மூலம் தான் கருக் கொண்ட கங்காவை, அவள் ஆளுமையை, அவளைச் சுற்றி அமையும் சூழலையும் கதாபாத்திரங்களையும் கொண்டு ஜெயகாந்தன் வரைந்து காட்டுகிறார்.

***

[email protected]

 

 

 

முந்தைய கட்டுரைதொழில்முனைவோர்- ஒர் எதிர்வினை
அடுத்த கட்டுரைகண்ணதாசன் விருதுகள்