பிரபு காளிதாஸ்

pira

குமரகுருபரனின் கவிதைத் தொகுதியை உயிர்மை சார்பாக வெளியிட்டுப் பேசிய நிகழ்ச்சியில் பிரபு காளிதாஸ் எடுத்த புகைப்படங்களை உயிர்மை தளத்தில் இருந்து எடுத்து பயன்படுத்திக் கொண்டிருந்தேன். அதற்கு எதிராக பிரபு காளிதாஸ் கடுமையாக எதிர்வினையாற்றவே அந்தப்படங்களை நீக்கநேர்ந்தது. அப்போதுதான் அவரைக் கவனித்தேன். அதன்பின் வெவ்வேறு தருணங்களில் அவர் எடுத்த புகைப்படங்களை கவனித்தேன். சினிமாவில் சம்பந்தப்பட்டவன் என்ற வகையில் புகைப்படங்களை ‘பார்க்க’ எனக்குத்தெரியும். பிரபு காளிதாஸ் முக்கியமான புகைப்படக் கலைஞன் என்னும் எண்ணம் ஏற்பட்டது

சாரு நிவேதிதாவின் மகன் திருமணவிழாவில் அவரைச் சந்தித்தேன். ஒதுங்கி நின்று படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். அழைத்துப் பேசினேன். முகநூலில் மிகப்பெரிய சண்டியர் என்றார்கள். இருக்கலாம், ஏனென்றால் நேரில் சாது போலத் தெரிந்தார். அவர் எழுத்தாளர்களை எடுத்த படங்கள் எல்லாமே முக்கியமானவை.

1

3

புகைப்படக்கலை காலந்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது. முன்பு ஒளிநிழலும் பின்னர் சட்டகமும் அதன்பின் முப்பரிமாணத்தன்மையும் முதன்மையாகக் கவனிக்கப்பட்டன. பின்னர் சூழல் முக்கியத்துவம் பெற்றது. இவையனைத்தையும் இன்று பயிலாதவர்களே செல்பேசியில் எடுத்து கணிப்பொறியில் மேம்படுத்திக்கொள்ளமுடியும். இன்று மனநிலையே புகைப்படக்கலையின் முதல் குவியம். ஏதாவது ஒரு மனநிலை அல்ல,. நிகழ்வுப்பெருக்கில் புகைப்பட ஆசிரியன் [ஆம், Auteur Theory யேதான்] எதை தெரிவுசெய்து எப்படிக் காட்டுகிறான் என்பது.

ஓர் இடத்தை, முகத்தை, நிகழ்வை எப்படி அவன் பார்க்கிறான் என்பதுதான் இன்றைய புகைப்படத்தை தீர்மானிக்கிறது, அதைக்கொண்டே அதை மதிப்பிடவேண்டும். மனநிலையைக் காட்டும்பொருட்டு சட்டக ஒழுங்கை புறக்கணிக்கிறார்கள். சீரான ஒளியைக்கூட மறுக்கிறார்கள். அரைநிழலில் தெரியும் முகம், பாதிமுகம் போன்றவை இன்று சாதாரணமாக ஏற்கப்படுகின்றன.

2

5

புகைப்பட ஆசிரியராக பிரபு எழுத்தாளர்களின் மனநிலைகளை, தருணங்களை மிகச்சிறப்பாகத் தீட்டியிருக்கிறார் என நினைக்கிறேன். சமீபத்தில் அப்படி மகிழ்ச்சி அளித்த என் புகைப்படங்கள் சில குங்குமம் பேட்டியில்  ஆ. வின்செண்ட் பால் எடுத்து வெளிவந்தவை, டி.விஜய் எடுத்த விகடன் தடம் இதழின் அட்டை, மாத்ருபூமிக்காக மதுராஜ் எடுத்தவை. எல்லாமே நான்தான். ஆனால் நான்குமே வெவ்வேறு நான்கள் என்றும் படுகிறது

என் நண்பரும் புகைப்பட ஆசிரியருமான ஏ.விமணிகண்டன்  புகைப்படக்கலை குறித்து முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். புகைப்பட நூல்களையும் வெளியிட்டிருக்கிறார். புகைப்படம் மலிந்த இந்த காலகட்டத்தில் இன்னொரு பக்கம் அச்சில் நூல்வடிவில் புகைப்படங்கள் சர்வதேச அளவில் வெளியாவது உண்மையில் ஆச்சரியமானது. பிரபு புகைப்பட நூல்களுக்கும் சினிமாவுக்கும் முயலலாம்

ஜெ

 

முந்தைய கட்டுரைஊட்டி சந்திப்பு ஒரு முழுப்பதிவு
அடுத்த கட்டுரைதிருப்பூர் குற்றச்சாட்டு -நம் அறமும் குடும்பமும்