நேரு முதல் மல்லையா வரை..

Nehru

அன்பின் ஜெ..

முதலில் உங்கள் கட்டுரை கண்டு கோபம் வந்தது. அது பின்பு வருத்தமாக மாறி, இறுதியில் நன்றியுணர்வே எஞ்சுகிறது. ஏனெனில், இதைச் சாக்கிட்டு, நிறைய மீண்டும் படிக்க நேர்ந்தது. நன்றி.

முதலில் உங்கள் முதல் புள்ளியான நிலைப்பாடுகளின் மயக்கம். அதில் நீங்கள் கட்டம் கட்டி இடது சாரி வலதுசாரி எனப் பிரிக்கிறீர்கள்.  இங்கிருந்தே துவங்குவோம்.  வலதுசாரிப் பொருளியலில் திளைத்து என்றொரு அற்புதப் பிரயோகம்.  நல்ல இந்துஸ்தானி ஆலாபனை போல இருக்கிறது. காலையில் எழுந்தவுடன், உபயோகிக்கத் துவங்கும் ஆவின் பால், இடது சாரிப் பொருளியலின் நன்மை – உங்களுக்கு சலுகை விலையில் கிடைக்கிறது.  அதில் நீங்கள் உபயோகிக்கும் டீத்தூள் வலதுசாரிப் பொருளியல் படி விற்பவர் நிர்ணயித்த விலையில் வாங்கப்பட்டது. நீங்கள் அணியும் ஜாக்கி உள்ளாடை வலதுசாரி. நீங்கள் பயணிக்க உதவும் கார் வலதுசாரி; அரசுப் பேருந்தில் சென்றால், அது இடதுசாரி. உங்கள் கார் ஓட்டுனர் உண்ணும் அம்மா கேண்டீன் உணவு இடதுசாரி. குழந்தைக்குப் போடப்படும் இலவச தடுப்பூசி இடதுசாரி. அரசு பொறியில் கல்லூரிகள், ஐஐடிகள், ஐஐஎம்கள் இடதுசாரி.  நாமக்கல் கோழிப்பண்ணைப் பள்ளிகள் வலதுசாரி. ஜேப்பியார் போன்ற கல்வித் தந்தைகள் வலதுசாரி. ரயிலில் இரண்டாம் வகுப்பு இடதுசாரி. இரண்டாம் வகுப்பு குளிர்பதன இருக்கை வலதுசாரி. கோதுமை, டீஸல் கொண்டு வரும் சரக்கு ரயில் இடதுசாரி.  இந்தியா போன்ற நாட்டை, இடம் வலம் எனப் பிரித்து, இன்றைய பொருளாதாரமே வலதுசாரி என்பது போன்ற ஒரு நிலைப்பாட்டில்  (மனமயக்கில்?) துவங்குகிறது கட்டுரை. இது தவறு. உண்மையான நிலவரம், இரண்டுக்கும் நடுவே எங்கோதான் இருக்கிறது.

இரண்டாவது, முகநூல் போராளிகளைக் குறித்தான நக்கல். இங்கு மட்டுமல்ல, உலகெங்கும் பொதுஜன அபிப்ராயம் எப்போதுமே நிறுவனத்தை / அரசை எதிர்க்கும் கிண்டலாகத்தான் இருக்கிறது. நம் மக்கள் சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்தே இப்படித்தான் இருந்திருக்கிறார்கள். தன்னைப் பற்றி இன்னும் அதிக கேலிச்சித்திரங்கள் வரைய வேண்டும் என ஒரு கேலிச்சித்திரதாரிக்கு அறிவுரை சொன்ன நகைச்சுவை உணர்வு கொண்ட பிரதமரும் இருந்தார். அவர்களுக்கு மாவோயிஸ்ட்கள் என தேசபக்தர்கள், புது நாமம் சூட்டியது மிகச் சமீபத்தில்தான் – முகநூற் / கீச்சுப் போர்களை எழுதி இயக்குவது தேசபக்தர்களின் முக்கியமான வியாபாரத் தந்திரம்.  தேசபக்தர்களில் பலரை, கீச்சுக் கொம்புகளில், நம் பாரதப் பிரதமர் பின் தொடர்வது, அவரின் சமூகநலன் நாடும் நோக்கை உணர்த்துகிறது.

” இதற்கப்பாலிருந்து விவாதிக்கவும் பேசவும் வரும் சிலருக்காக மீண்டும் ஒரு தயக்கக்குறிப்புடன் இதை எழுதுகிறேன். இக்குறிப்பை ஒரு பொருளியல் நிபுணனாக அல்ல. ஒரு அரசியல் ஆய்வாளனாகவும் அல்ல. ஒர் எளிய வாசகனாக, சாதாரணக் குடிமகனாகவே எழுதுகிறேன்” –

உங்கள் கட்டுரையில் மிகப் பிடித்த வரிகள் இவை.

நானும், மேற் சொன்ன சில பத்திகள் தாண்டிப் பேசலாம் என நினைக்கிறேன்.

அடுத்த பத்திகளில் மீண்டும் இடதுசாரி /வலதுசாரி என்னும் கட்டம் கட்டுகிறீர்கள். ஒரு இடதுசாரிக்கு, மல்லையாவுக்கும், டாட்டவுக்கும், மாறனுக்கும் வேறுபாடு இருக்கக் கூடாது என்கிறீர்கள். ஏன்? என்கிறேன் நான். ஒரு இந்தியனாக டாட்டா குழுமம் சட்டங்களை, மிகக் குறிப்பாக தொழிலாளர் நலம் பேணும், சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்படும் நிறுவனம். ஆனால், மல்லையா / மாறன்கள் வேறு என்னும் பார்வையை முன் வைக்க விரும்புகிறேன்.

இந்தியச் சமூகத்தை எப்படி இந்துக்கள், மற்றவர்கள் எனப் பிரிக்கிறோமோ, அதே போல், இந்த இருமை வாதமும் மிக செயற்கையானது. அபாயகரமானதும் கூட. ஏனெனில், அது வலதுசாரியின் மீது விமர்சனம் வைக்கும் அனைவரையும் கம்யூனிஸ்ட் / மாவோயிஸ்ட் எனக் கட்டம் கட்டும் செயல்முறைக்கு அடித்தளம் அமைக்க உதவும் செயல்.

எனது பார்வையில்,  தொழில் முனைவோர்களை நான்கு வகையாகப் பிரிக்கிறேன்.


 • அரசை அண்டிப் பிழைப்பவர்கள்:இவர்கள் அரசியல் தொடர்புகளை வசப்படுத்தி, அரசின் கொள்கைகளைச் சாதகமாக்கி, தன் தொழில் சாம்ராஜ்யத்தை நடத்துபவர்கள். 70 களின் இறுதியில், தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திரா காந்தியின் வருங்காலம் மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு உதவி செய்து மேலெழுந்த சாம்ராஜ்யம் ரிலையன்ஸ். இந்த வகையில், ஜிண்டால், சில பிர்லா குழுமங்கள், ருயாஸ், அதானி, மாறன்கள், மல்லையாக்கள் அனைவரும் வருபவர்.

உங்கள் உதாரணத் தொழிலதிபர் மல்லையா, பரம்பரையாக ஒரு சாராய வியாபாரி. அவர் தொழிலில், கலால் வரி ஏய்த்தல் மூலம் கணக்கில் வராத பணம் திரட்டுதலும், அப்பணத்தை வியாபார/ அரசியல்த் தேவைகளுக்குப் பயன்படுத்துதலும் மிகச் சாதாரணம். சாராய வியாபாரத்தில் லாப சதவீதம் மிக அதிகம் – 60-70%. கலாலும் அதிகம் – ஒரு ஃபுல் பாட்டிலுக்கு ரூபாய் 200-400 வரை.

நீங்கள் மிகச் சரியாகச் சொன்னபடி, அவர் கர்நாடகாவில் ஒரு பெரும் பொருளியல் சக்தியாக உருவெடுத்தார். சாராயம் முக்கியத் தொழில் என்றாலும், எம்.எல்.ஏக்களை வாங்கி விற்றல், உபதொழில். ஒரு காலத்தில் ஜனதா என்னும் கட்சியை வைத்திருந்தார் (சொப்பன சுந்தரி நினைவுக்கு வந்தால், நான் பொறுப்பல்ல ). ஒரு நேர்காணலில், மலிவாக வந்தது வாங்கிப் போட்டேன் என நக்கலாகப் பதில் சொன்னதாகவும் நினைவு. இந்தியாவின் மிகப் பாரம்பரியமான இலக்கிய விருதை அளிக்கும் குழுமமும், ஒரு காலத்தில் இதே போன்ற நடவடிக்கைகளுக்குப் பேர்போனது.

அவர் வானூர்திச் சேவைத் தொழிலில் ஈடுபட்டதும், தோல்வியடைந்ததும் வரலாறு. வானூர்திச் சேவைகளில், தொழில் முனைவோர் இரு அலைகளாக வந்தார்கள். முதல் அலை, 90 களில் வந்தது. நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில். அப்போது ஜெட் ஏர்வேஸ், ஈஸ்ட் வெஸ்ட், டமானியா, என்.ஈ.பி.ஸி மற்றும் பலர் வந்தனர். அதில் டமானியா / என்.ஈ.பி.ஸி போன்றவர்கள், விலை குறைவான, சிறு நகரச் சேவைகளைத் (சேலம் / தூத்துக்குடி) துவங்கினார்கள். அந்த அலையில் இன்று, ஜெட் ஏர்வேஸ் மட்டும், ஆக்ஸிஜன் வைத்துக் கொண்டு இயங்கி வருகிறது.

இரண்டாவது அலையில் பலர், 2000 த்தின் துவக்கத்தில் வந்தார்கள். கோ ஏர், டெக்கான் ஏர்லைன்ஸ், ஸ்பைஸ் ஜெட், கிங் ஃபிஷர், இண்டிகோ என. இதில் டெக்கான் ஏர்லைன்ஸ், அடிப்படை வசதிகள் மட்டுமே கொடுத்து, மலிவான கட்டணம் என்னும் மாதிரியாகத் தொழில் செய்தது. துவக்ககாலத்தில், 500 ரூபாய்க்கு, வானூர்திப்பயணம் என்பது போன்ற திட்டங்களுடன் துவங்கியது. ஆனால், அது சரியாகப் போகவில்லை.

அந்த சமயத்தில் தான், மல்லையா, ஜெட் ஏர்வேஸூக்குப் போட்டியாக ஒரு ஆடம்பர ஏர்லைன்ஸ் சேவையைத் தொடங்கினார். நடுவில், டெக்கான் தள்ளாட, நல்ல விலைக்கு அதை வாங்கி கிங்ஃபிஷர் ரெட் என்னும் குறைந்த விலைச் சேவையையும் துவங்கினார்.

ஆனால், விமானச் சேவைத் தொழில் விதிகள் தளர்த்தப்பட்டு, கோழிப்பண்னை முதலாளிகள் (டமானியா), மாவு மில் முதலாளிகள் (என்.ஈ.பி.ஸி), சீட்டுக் கம்பெனிகள் (சஹாரா), சாராய வியாபாரிகள் (மல்லையா) போன்றோருக்கு வழங்கப்பட்ட அனுமதி, இந்தியாவின் முதன் முதலில் ஏர்லைன்ஸ் துவங்கி நடத்திய ஏர் இந்தியாவின் உண்மையான முதலாளிகளான டாட்டாவுக்கு 25 ஆண்டுகள் வரை வழங்கப்படவில்லை. இதைத் தான் க்ரோனி கேப்பிடலிஸம் என்கிறார்கள். அரசை அண்டிப் பிழைக்கும் வழி. சமீபத்தில் இந்தியாவின் மிகப் பெரும் சூரிய ஒளி மின்சாரத்திட்டம் தமிழகத்தின் ராமநாதபுர மாவட்டத்தில் துவங்கப்பட்டது. ஒரு யூனிட் ரூபாய் 7 என்னும் விலையில் வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதேபோல், தமிழகத்தின் மீனவத் துறைமுகமான இணயம் ஒரு பெரும் துறைமுகமாக மாற்றத் திட்டங்கள் நடந்து வருகிறது. இந்த இரண்டையும் நிறைவேற்றுவது அதானி குழுமம். இந்தத் தொழில் திட்டங்கள் அதானிக்கு எப்படிக் கிடைத்தன என்பதன் பின்னால் உள்ள விவரங்கள் மர்மமாகவே இருக்கின்றன. இணயம் துறைமுகம் பற்றி நண்பர் க்றிஸ் இதுவரை பல கட்டுரைகள் எழுதிவிட்டார். பெரும் எதிர்வினைகள் இல்லை. முகநூலில், தேசபக்தர்கள், அதானியின் சூரிய ஒளித் தொழில் குறித்து நேஷனல் ஜியோகிரஃபிக் சேனல் எடுத்த ஆவணப் படத்தைச் சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள் – கோவணம் உருவப்பட்டது தெரியாமல். (ஒரு ஃப்ளோவில் வந்துவிட்டது – மன்னிக்க ) இது போன்று அரசியல்வாதிகளோடு, அரசுகளோடு உறவாடி, வசதிகளைப் பெற்று, வியாபாரம் செய்பவர்கள் ஒரு வகை. அயன் ராண்டின் அட்லஸ் ஷ்ரெக்டில் வரும் ஜேம்ஸ் டகார்ட் வகை.

 • முதலாளித்துவர்கள் அல்லது தொழில் முனைவர்கள்: புதிய வியாபாரங்கள், வழிமுறைகள், தொழில் நுட்பங்கள் முதலியவற்றை முன் வைத்து தொழிலை உருவாக்கியவர்கள். டி.சி.எஸ் நிறுவனத்தின் இளம் பொறியாளாராக அமெரிக்கா சென்று, என்ன செய்யலாம் என யோசித்த ராமதுரை அவர்கள் துவங்கியதுதான் – இந்திய மென்பொருள் தொழில் மாதிரி. இதன் மதிப்பை உடனே உணர்ந்து இன்ஃபோஸிஸ், ஹெச்.சி.எல், காக்னிஸண்ட், போலாரிஸ் எனப் பலரும் துவங்கி, வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். தம் தொழில், லாபம் எனச் செயல்படுகிறவர்கள். தொழில்மாதிரியை ஒரு இயக்கமாக முன்னிறுத்தி, தமது துறைக்குத் தேவையான விதிகள், வழிமுறைகளை, நேர்மையாகக் கேட்டுப் பெறுகிறார்கள்.  மென் பொருள் துறை தாண்டி, பொறியியல், தொழில் நுட்பம், எனப் பல துறைகளிலும் இருக்கிறார்கள். உண்மையான வலது சாரிப் பொருளாதார முதலாளித்துவத்தின்  உதாரணங்கள். அயன் ராண்டின்  டாக்னி டகார்ட். ஜான் கால்ட், ரோர்க் வகை.
 • சமூகப் பொறுப்புணர்ந்த முதலாளித்துவர்கள்: வியாபாரியாகத் துவங்கிய, ஜாம்ஷெட்ஜி டாட்டா, இந்தியாவில் இரும்பு உற்பத்தி செய்ய முடியும் என உணர்ந்து, அமெரிக்காவின் மிகப் பெரும் தொழில் நுட்ப நிபுணரைக் கொணர்ந்து, மாட்டு வண்டியில் அமர்ந்து, சர்வே செய்து டாட்டா இரும்பு உற்பத்தித் தொழிலைத் துவங்கினார். அந்தத் தொழிற்சாலை இருக்கும் இடத்தில், ஊழியர்கள் வசிக்க ஒரு நகரத்தை உருவாக்கி, அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த மக்களுக்கும் அதன் பயன்கள் கிடைக்குமாறு செய்தார். இந்தியாவில் தொழிலாளர்கள் அடிப்படை உரிமைகள் பெறாத காலத்திலேயே, 8 மணி நேர வேலை, பிராவிடண்ட் ஃபண்ட், பேறு கால விடுப்பு எனப் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். டாட்டா குழுமத்தின் லாபத்தில் பெரும்பகுதி, சமூக முன்னேற்ற காரணங்களுக்காகச் செலவிடப் படுகிறது. டாட்டா இன்ஸ்டிடுயூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச், டாட்டா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸோசியல் சையின்சஸ், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸஸ் பெங்களூர் என இந்தியாவின் பெருமை மிகு (உலக அளவில்) நிறுவனங்களை உருவாக்கியது மட்டுமல்லாமல், பெருமளவு நிதியுதவியும் செய்தவர்கள். ரட்டன் டாட்டா ட்ரஸ்ட் / தோரப்ஜி டாட்டா ட்ரஸ்ட் உள்பட பல ட்ரஸ்ட்களை உருவாக்கி, ஊரக முன்னேற்றம், குடிநீர், கல்வி, கலைகள், நகர ஏழ்மை ஒழிப்பு,சமூக முன்னேற்றம் போன்ற துறைகள் மேம்பாட்டுக்கு பெருமளவில் செலவிடுகிறார்கள். கிட்டத் தட்ட காந்தி சொன்ன செல்வ அறங்காவலர் முறை (ட்ரஸ்டிஷிப்). வியாபாரத்தில் வரும் லாபத்தின் பெரும்பங்கை சமூக முன்னேற்றத்துக்குச் செலவு செய்வது இக்குழுமக் கொள்கை. இவர்கள் தொழில்களுக்காக குறுக்கு வழியில் அனுமதி வாங்கவோ / மக்கள் செல்வத்தைக் கொள்ளையிடவோ முயல்வதில்லை. ரத்தன் டாட்டா காலத்தில் கொஞ்சம் சறுக்கினார்கள். ஆனாலும், இந்தியாவில் மிக நேர்மையாக, தொழிலோடு சமூக நலனும் பேணும் நிறுவனங்களில் முதலிடம் வகிப்பவர்கள் இவர்கள். இப்போது அடுத்தபடியாக, விப்ரோவின் அஸீம் ப்ரேம்ஜி உருவாகி வருகிறார். தனது செல்வத்தில் பெரும்பங்கை கல்வி மற்றும் ஊரக முன்னேற்றம் போன்ற துறைகளுக்கு ஒதுக்கி செயல்படத் துவங்கியுள்ளார்.
 • சமூக முன்னேற்ற முனைவோர்: இவர்கள் லாப நோக்கமின்றி, சமூக நலனை முன் வைத்து நிறுவனங்களை ஏற்படுத்துபவர்கள். நிறுவனங்களே இல்லாத முறைகளும் உண்டு (அருணா ராயின் பாரத் மஜ்தூர் கிஸான் சக்தி சங்கடன்). வினோபா பாவே மற்றும் அவரின் சீடர்கள் (கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன் வரை), டாக்டர் குரியன், எம்.எஸ் ஸ்வாமிநாதன், டாக்டர் வெங்கிட சாமி, (அரவிந்த் கண் மருத்துவமனை), ராஜேந்திர சிங், சிப்கோ பகுகுணா, பாபா ஆம்தே, (தனுஷ்கோடி, கொங்கன் ரயில், தில்லி மெட்ரோ) ஸ்ரீதரன் எனப் பலர். இவர்களின் முனைப்பினால், பெரும் பொருளியல் மாற்றங்கள் வந்துள்ளன. நாட்டின் மிகப் பெரும்பான்மை மக்கள் இதனால் பயன் பெற்றுளனர். இது அயன் ராண்டுக்குப் புரியாது.

எனவே, முனைப்பு / தொழில் முனைப்பு என்பது, முதலாளித்துவத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதை மறுக்கிறேன்.  அது, சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயம் என்னும் கருத்தை முன்வைக்கிறேன். நீங்கள் கம்யூனிஸம் ஒரு பொருளியல் கட்டமைப்பை ஏற்படுத்துவதில் தனி மனித முனைப்பு குறைந்து விடும் என்று சொல்வது பொதுவாக உண்மை போல் தோன்றினாலும், அந்தக் கட்டமைப்பில் இருந்தும் பெரும் சாதனைகள், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் எழுந்துள்ளன என்பதுதான் உண்மை.  ரஷ்யா – அணு விஞ்ஞானத் தொழில் நுட்பம், ஏவுகணைகள், நீர்மூழ்கிகள், போர் விமானக் கட்டுமானம் போன்றவற்றில் உலகின் மிக முன்னேறிய தொழில் நுட்பம் கொண்ட நாடு. ரஷ்யா முதலில், விண்வெளிக்கு ஒரு மனிதனை அனுப்பிய பின் தான். அமெரிக்கா வெறி கொண்டு, நிலவுக்கு மனிதனை அனுப்பியது.

அரசை அண்டிப் பிழைக்கும் தொழில் குழுமங்களிலும் தன் முனைப்பு உண்டு. ஏடன் நகரில் பெட்ரோல் பம்ப் தொழிலாளியாக இருந்த திருபாய் அம்பானிக்கு இருந்த தன் முனைப்பு. ஒரு முறை, ஏடெனில், ஒரு குறிப்பிட்ட மதிப்புள்ள உலோக நாணயம் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டது. என்ன நடந்தது என அரசு விசாரித்ததில், நாணயத்தின் மதிப்பை விட, நாணயம் அடித்த உலோகத்தின் மதிப்பு உயர்ந்து விட, ஒரு குஜராத்தி இளைஞர் நாணயங்களைச் சேகரித்து, உருக்கி விற்று விட்டார் என அரசு கொஞ்சம் தாமதமாக உணர்ந்தது. அரசுக்குப் பெரும் படிப்பினை தந்த தன் முனைப்பு.  ரிலையன்ஸ் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம், உலகின் மிகக் குறைந்த விலையில் நடக்கும் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் என்பது ரிலையன்ஸின் மிகப் பெரும் சாதனை.

டாட்டாக்களாவது அங்கே இரும்பு தயாரிப்பதாவது.. அப்படி அவர்கள் தயாரித்தால், அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு அங்குல இரும்பையும் நான் தின்கிறேன் எனக் கேலி செய்யப்பட்ட இடத்தில் ஒரு பெரும் இரும்புத் தொழிற்சாலையை உருவாக்கினார் ஜாம்ஷெட்ஜி. உலகின் மிகப் பெரும் நிபுணர்கள் முடியாது எனச் சொல்லப்பட்ட இடத்தில் மிக வெற்றிகரமான சோடா ஆஷ் தொழிற்சாலையை உருவாக்கியது டாட்டாவின் தர்பாரி சேத்.  உலகின் மிக மெலிதான கைக்கடிகாரம் டைட்டனின் எட்ஜ்.

மேற்சொன்ன மூன்று தளங்களை விட, சமூக முனைப்புகளில் தாம், மக்களுக்குப் பயன்படும் பெரும் தொழில்நுட்ப சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. தனது பணி ஓய்வுக்குப் பின் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என வெங்கிடசாமி என்னும் கண் மருத்துவரால் துவங்கப்பட்டதுதான் அர்விந்த கண் மருத்துவக் குழுமம்.  ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என நினைத்த அவர், வசதி படைத்தவர்களுக்கும் குறைந்த செலவில் சிகிச்சை தர வேண்டும் என உருவாக்கியதுதான் 40:60 மாதிரி. அதாவது 40% நோயாளிகள் தரும் பணத்தைக் கொண்டு, 60% நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் மாதிரி. ஒரு காடராக்ட் சிகிச்சைக்கு ஆகும் செலவு ரூபாய் 2000. அமெரிக்காவில் அதன் செலவு 1.1 லட்சம். ஒரு காடராக்ட் லென்ஸின் விலை உலகச் சந்தையில் ரூபாய் 6000. ஆனால், அர்விந்தின் சொந்தத் தயாரிப்பின் விலை சில நூறு ரூபாய்கள் மட்டுமே.  அரவிந்தின் சிகிச்சை உலகத்தரத்தை விட மேலானது. வருடம் 3 லட்சம் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்த மாதிரியில், அரவிந்த் ஈட்டும் லாப சதவீதம் EBITA – 39%. மிகப் பெரும் கட்டமைப்பை உருவாக்கி, கார்ப்பரேட் மருத்துவமனையாக இயங்கும் அப்பல்லோவின் லாப சதவீதம் 15%. அர்விந்தினால் வருடம் 1.8 லட்சம் இந்தியர்கள், உலகின் முதல்தரமான சிகிச்சையை இலவசமாகப் பெறுகிறார்கள். அப்பல்லோவில்? இதே போல்தான், அமுல் உருவாக்கிக் கொண்ட தொழில் நுட்பங்களும். நீர் காந்தி ராஜேந்திர சிங் மீட்டெடுத்த ஆறுகளின் பின்னால் உள்ள தொழில் நுட்பங்களின் பண மதிப்பு அளவிட முடியாதவை.  118 சில்லறை விற்பனை அங்காடிகள் கொண்ட குழுமத்தின் தலைவர், இந்தியாவின் 40 ஆவது பெரும் பணக்காரர் எனில், 4 கோடிக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களைக் கொண்ட கூட்டுறவு பால்த் தொழிலின் மதிப்பு எத்தனை கோடியாக இருக்க வேண்டும்? 6 ஆறுகளை மீட்டெடுத்து, சில லட்சம் ஏக்கர் நிலங்களில் பாசன வசதி ஏற்படுத்திய அந்த முனைப்பின் பண மதிப்பென்ன? 2 லட்சம் ஏக்கர் நிலத்தை, நில உடமையாளர்களிடம் இருந்து தானமாகப் பெற்று, நிலமற்ற ஏழைகளுக்கு அளித்து, அவர்களை மேம்படுத்திய உழைப்பின் மதிப்பென்ன?

தொழிலதிபர்களுக்கு நாம் உரிய கௌரவத்தை அளிக்கத் தவறி விட்டோம். அளிக்கச் சென்றால், வசை பாடப்படுகிறோம் என எழுதியிருந்தீர்கள். அது பொது ஜனத் திரள் என்னும் கும்பல் எதிர்வினை. 1950 களில், ஜே.ஆர்.டி டாட்டா, நேருவைச் சந்தித்து, இந்திய மக்கட்தொகை பெரும் பிரச்சினையாக முடியும் – அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப் படவேண்டும் என வற்புறுத்தினார். அதை அப்போது நேரு அலட்சியப் படுத்தினார். இன்று demographic dividend எனக் கொண்டாடுகிறோமே அதே கருத்தைத் தான் அவர் அப்போது கொண்டிருந்தார். ஆனால், அதை இந்திரா, மிகவும் மதித்து, முன்னெடுத்தார்.  குடும்பக் கட்டுப்பாடு ஒரு தேசிய இயக்கமாக வளர்க்கப்பட்டது. இன்று தமிழகம், கேரளம் என்னும் மாநிலங்கள் மிக வளர்ந்துள்ள நிலைக்கு அளவான குடும்பம் ஒரு முக்கிய காரணம். அதைத் தாண்டி, டாட்டா ட்ரஸ்ட்கள் மூலம் அவர்கள் செய்த சமூகப் பங்களிப்பு, மற்றும் தொழில் துறை மூலமாக டாட்டா கொண்டு வந்த சமூக மாற்றங்கள், வானூர்தித் தொழிலில் (ஏர் இந்தியாவைத் தோற்றுவித்தவர். இந்தியாவின் முதல் வணிக விமானமோட்டி அவர்தான்) ஜே.ஆர்.டி காட்டிய முன்னோடித் தொழில் முனைப்பு என அனைத்தையும் கருத்தில் கொண்டு வந்து 1993 ஆம் ஆண்டு, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதன் அடுத்த விருதான பத்ம விபூஷன் பிர்லா, நாரயணமூர்த்தி, மிட்டல், ஓபராய், அஷோக் கங்குலி, அப்பல்லோ ரெட்டி, அஸீம் ப்ரேம்ஜி, ஆகா கான், திருபாய் அம்பானி, எனப் பலருக்கு வழங்கப் பட்டிருக்கிறது. அரசின் பார்வையில், இவர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதன் அடையாளமாகும். இது நிச்சயமாக மாறன்களுக்கும், மல்லையாக்களுக்கும், அதானிகளுக்கும் கிடைக்காது என்பதன் காரணம் – அவர்கள் அ.அ.பி (அரசை அண்டிப் பிழைக்கும் கட்சி) என்பதனால். திருபாய் அம்பானிக்கே மிகப் பல ஆண்டுகள் கழித்து, அவர் மரணத்துக்குப் பிறகு, 2016 ல் வழங்கப்பட்டது. பொது ஜனத் திரளில் இன்றைய இளம் தலைமுறைக்கு நாரயணமூர்த்தியும், சுந்தர் பிச்சையும், சத்யா நாதெள்ளாவும், இந்திரா நூயியும், ஸ்டீவ் ஜாப்ஸும் பெரும் ஆதர்சங்கள் என்பதை முகநூற் பெருவெளியில் காண முடியும் – உங்கள் கட்டுரையில் எடுத்தாண்டிருக்கும் மேற்கோள்கள் போல ஒரு நாளைக்கு ஆயிரம் கொட்டுகின்றன. சொல்லப் போனால், டாக்டர்.குரியன், க்ருஷ்ணம்மாள் ஜகன்னாதன், பாபா ஆம்தே, ராஜேந்திர சிங் போன்ற உண்மையான பாரத ரத்னங்களுக்குத்தான் இன்னும் பாரத ரத்னா அளிக்கப்படவில்லை.  அதைத் தான் ஒரு அறிவு சார் சமூகமாக நாம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். தொழிலதிபர்களுக்கான அங்கீகாரத்தை லாபி செய்து பெற அவர்களின் நிறுவனங்களும், பிள்ளைகளும் உள்ளார்கள்.

எனவே ஐயா, சமூகப் பொருளியல் தளத்தை, கம்யூனிஸம் / முதலாளித்துவம் என  பைனரியாகப் பார்க்கும் பார்வை குறைபாடுகள் கொண்டது. இன்று சூழியல் என்னும் ஒரு பெரும் கோணமும் சேர்ந்து கொள்ள, பல பரிமாணங்களில் பொருளியல் / சமூகத் தளங்கள் அணுகப்பட வேண்டும் என்னும் வாதத்தை முன்வைக்கிறேன். மிக முக்கியமாக, மல்லையாவும் டாட்டாவும் ஒண்ணு; அறியாதவர்கள் எல்லாம் மண்ணு எனச் சொல்வது அதீதம். இந்துநேசன் லக்‌ஷ்மி காந்தனும், அசோகமித்திரனும் தமிழ் எழுத்தாளர்கள் எனச் சொல்வதற்கீடானது.

 (தொடரும்)

j-r-d-tata-3

உங்கள் இரண்டாவது கட்டுரையின் மிக முக்கியமான வாதங்கள் இரண்டு அதில் முதலாவது:

”இலட்சியவாதியான நேரு ருஷ்யாவால் ஈர்க்கப்பட்டார் .அதற்கு இன்னொரு காரணம் சோவியத் ரஷ்யாவின் பின்னணி கொண்ட மகாலானோபிஸ் போன்ற பொருளியல் நிபுணர்கள் அவருக்கு அணுக்கமாக இருந்தார்கள் என்பது. ஆகவே இங்கு ஒரு கலப்புப் பொருளாதாரத்தை நேரு உருவகித்தார்”

சுதந்திரம் பெற்ற உடன், நேருவுக்கு முக்கியமான வேலைகள் இருந்தன. அகதிகள் மறுவாழ்வு, உணவுப் பற்றாக்குறையைச் சமாளித்தல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் வருங்கால இந்தியாவுக்கான அஸ்திவாரம் அமைத்தல் என.

முதலில் நீங்கள் சொன்ன கலப்புப் பொருளாதாரம் பற்றிப் பார்ப்போம். இந்தியப் பொருளாதார முன்னேற்றத்துக்கான முதல் கொள்கை 1937 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தலைமையில் தயாரிக்கப்பட்டது. இது, பொருளாதார வளர்ச்சிக்கு, தொழில் துறையை உருவாக்க வேண்டும் என்றும், அதில் கலப்புப் பொருளாதார முறையில் அரசு நிறுவனங்கள் மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டும் எனவும் வற்புறுத்தியது. அதன் பின்னர், எம்.என்.ராய் மக்கள் திட்டம் என ஒன்றைத் தயாரித்தார். அது முழுக்க முழுக்க அரசு நிறுவனங்களே தொழில் துறையில் இருக்க வேண்டும் எனச் சொன்னது. 1945 ஆம் ஆண்டு, ஏழு பெரும் முதலாளிகளும் (டாட்டா, பிர்லா, லால்பாய் மற்றும் நால்வர்), ஜான் மத்தாய் என்னும் பொருளாதார அறிஞரும் சேர்ந்து பாம்பே ப்ளான் என்னும் ஒரு வடிவை உருவாக்கினார்கள். இவர் பின்னர் நேரு அமைச்சரவையில் ரயில் மந்திரியாகவும், நிதியமைச்சராகவும் பணியாற்றினார். வெண்மைப் புரட்சி டாக்டர் குரியனின் மாமா. இது, 15 ஆண்டுகளில், இந்திய வேளாண் உற்பத்தியை இரு மடங்காகவும், தொழில் துறையை ஐந்து மடங்காகவும் அதிகரிக்கும் நோக்கத்தை முன் வைத்தது.

பாம்பே ப்ளானின் மிக முக்கியமான கருதுகோள் என்னவெனில், பொருளாதார உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்தில் அரசின் ஈடுபாடும், அரசின் கட்டுப்பாடுகளும் இந்திய தொழில்துறைக்கு மிக முக்கியம். மெல்லத் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்தியத் தொழில்துறை, சந்தைப் பொருளாதாரத்தை எதிர் கொள்வது கடினம். (1991 பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட போது, சில தொழிலதிபர்கள் சேர்ந்து, பாம்பே க்ளப் என ஒன்றை ஏற்படுத்தி, இதே வாதத்தை முன்வைத்தது ஒரு நகைமுரண். நல்லவேளையாக, நரசிம்மராவ் அவர்களுக்கு மிக்சர், டீ கொடுத்து அனுப்பி விட்டார். ஆனால், 1947 ல் நிலைமை வேறு) மேலும், முதலீட்டுக்குத் தேவையான பெருமளவு நிதியாதாரங்கள் தனியார் துறையில் இல்லை. எனவே மிக அதிக முதலீடு பிடிக்கும் கனரக மற்றும் அடிப்படை தொழில்களான தாது உற்பத்தி முதலியவற்றில் அரசே முதலீடு செய்ய வேண்டும் என்பதே.

1945 ஆம் ஆண்டு, இடைக்கால அரசின் தொழில்கொள்கை, தொழில்களை நான்கு வகைகளாகப் பிரித்தது. இதில் முதலிரண்டு வகைகள் – கனரகம் மற்றம் அடிப்படைத் தொழில்கள்- இவை அரசுக்கு ஒதுக்கப்ட்டன. மூன்றாவது இடைப்பட்ட இயந்திர உற்பத்தி, நான்காவது – நுகர்வோர் பொருள் உற்பத்தி – இவையிரண்டும் தனியார் துறைக்கு ஒதுக்கப்பட்டன. 1945 ஆம் ஆண்டின் இடைக்கால அரசின் தொழில்க் கொள்கை, அப்படியே 1948 ஆம் ஆண்டு சுதந்திர அரசின் கொள்கையாகவும் மாறியது.

இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில், உலகெங்கிலும், இரண்டாம் உலகப் போர் முடிந்து, சுதந்திர அரசுகள் ஏற்படுத்தப்பட்டு, போரின் அழிவிலிருந்து பொருளாதாரத்தை முன்னேற்ற அரசாங்கங்கள் பெருமளவில் தொழில் மற்றும் கட்டமைப்பில் முதலீடு செய்து கொண்டிருந்த காலம். 1975 ஆம் ஆண்டு தாட்சர் பதவியேற்கும் வரை, இங்கிலாந்தில் பொதுத்துறை நிறுவனங்கள் மிக முக்கிய அங்கமாக இருந்தன. உலகின் மிக முக்கியமான பொருளாதாரங்கள் அனைத்திலும், அரசு நிறுவனங்கள் இருந்தன.

தொழில்நுட்பமும், நிதியாதாரமும் தனியார் வசம் இல்லாத காலகட்டத்தில், அரசு, தொழில்துறையைத் திறந்து விட்டிருந்தால், அன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே நுழைந்து வளங்களைச் சூறையாடி ஏற்றுமதி செய்து, அரசியலில் ஊடுருவி, இந்தியாவை ஒரு பனானாக் குடியரசாக மாற்றியிருப்பார்கள். காங்கோ, நைஜீரியா, ஜாம்பியா எனப் பல உதாரணங்கள் உண்டு. எனவே பாம்பே ப்ளான் உருவாக்கியவர்கள், இந்தியத் தொழிற்துறை வெளிநாட்டு நிறுவனங்களோடு போட்டியிடுவதில் இருந்த பாதுகாக்கப் பட வேண்டும் என அன்று சொன்னதில் பெருமளவு நியாயம் இருந்தது.

பின்னோக்கிப் பார்க்கையில், நேருவின் தொழில் கொள்கையும், அன்றைய தொழிலதிபர்கள் மற்றும் பொருளாதார அறிஞர்களின் பார்வையும் கிட்டத்தட்ட ஒன்றாக இருந்ததைக் காணலாம். தொழிற்சாலைகள் அனைத்தையும் அரசு நிறுவனங்கள் நடத்தவேண்டும் என்னும் எம்.என்.ராயின் மக்கள் திட்டம் ஏற்கப்படவில்லை. சோவியத் யூனியன் போல, வேளாண்மை, தொழில் என அனைத்துத் துறைகளையும் அரசே ஏற்று நடத்தும் திட்டங்களை அவர் செயல்படுத்தவில்லை. அவரின் திட்டம், அன்றைய 99 சதம் மக்களின் வாழ்வாதாரமாக இருந்த பொருளாதாரத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. அன்று வேளாண்மையில் ஈடுபட்டிருந்த மக்களின் சதவீதம் 80% க்கும் அதிகமாக இருந்திருக்கும். வேளாண் உற்பத்தியை அதிகரிக்கிறேன் பேர்வழி என பெரும் கூட்டுப்பண்ணைகளை உருவாக்கும் கம்யூனிஸ திட்டங்களை அவர் உருவாக்க வில்லை. குருவிகள் தானியங்களை அழிக்கின்றன- எனவே நாட்டில் உள்ள குருவிகளை அனைத்தையும் அழிக்க வேண்டும் என மாவோத்தனமான யோசனைகளை அவர் நாட்டு மக்களின் மீது திணிக்கவில்லை. ஏற்கனவே இருந்த ஆலைகளைத் தனியார் மயமாக்க வில்லை. ஏற்கனவே இருந்த பொருளாதார உற்பத்தி சக்திகளோடு கூடுதலாக, நவீன சமூகத்திற்கான, புதிய தொழிற்கூடங்களை உருவாக்கினார். இது மிக முக்கியமான வேறுபாடு. பெரும் வேறுபாடு.

நேரு, தனிப்பட்ட முறையில், சோஸலிஸம் மீது பற்றுக் கொண்டிருந்தாலும், எல்லாவற்றையும் அரசே செய்வது இயலாது என்பதை உணர்ந்த ஒரு ரியலிஸ்ட் என்று சொல்ல வேண்டும். தன் திட்டங்கள் எவ்வகையிலும் மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் வாழ்வாதாரங்கள் பாதிக்கக் கூடாது என்னும் நுண்ணுணர்வு கொண்ட ஹ்யூமனிஸ்ட் என்றும்.

பொருளாதாரத்தை வழிநடத்த திட்டக் கமிஷனும், அதன் வெளிப்பாடாக ஐந்தாண்டுத் திட்டங்களும் மேற் கொள்ளப்பட்டன. இந்த ஐந்தாண்டுத் திட்டம் சோவியத் யூனியனில் துவங்கப்பட்டது. சீனாவும் இதையே பின்பற்றியது. முதலாவது ஐந்தாண்டுத் திட்டம், ஹராட்-டோமர் என்னும் கீனீஸிய பொருளாதார அறிஞரின் மாதிரியைப் பின்பற்றி அமைந்தது. அகதிகள் மறுவாழ்வு, உணவுப் பற்றாக்குறையைச் சமாளித்தல் மற்றும் வேளாண்மை உற்பத்தியில் கவனம் செலுத்தியது. 2.1 சதவீத வளர்ச்சி என்னும் இலக்கு இருக்கையில், பொருளாதாரம், 3.6 சதம் வளர்ந்தது.

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம், நேரு மஹலனோபிஸ் மாதிரியில் அமைந்தது. இது வாஸிலி லியோண்டிஃப் என்னும் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞரின் தேற்றத்தை ஒட்டி அமைந்த மாதிரி. இது, இந்தியப் பொருளாதாரத்தை துரிதமாக தொழில்மயமாக்கும் நோக்கத்தை முன்வைத்தது. தொழில்துறையின் அடிப்படைக் கட்டமைப்புத் தொழில்களில் அரசின் மூலதனம் செல்ல வேண்டும் என வலியுறுத்தியது. மூன்றாண்டுகளுக்குப் பின் கடுமையான அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை காரணமாக, இது வெகுவாக மாற்றியமைக்கப் பட்டது. இந்தக் காலத்தில் தான், பெரும் நீர் மின்சாரத்திட்டங்கள் அமைக்கப்பட்டன. பிலாய் (உதவி:ரஷ்யா), துர்காப்பூர் (உதவி: இங்கிலாந்து), ரூர்கேலா (உதவி: மேற்கு ஜெர்மனி) என மொத்தம் ஐந்து இரும்பு உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டன. நிலக்கரி உற்பத்தி அதிகரித்தது. வடகிழக்கில் ரயில்வே கொண்டு வரப்பட்டது. இது இன்று தோல்வி எனச் சொல்லப்படுகிறது. இந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 4.5% – எட்டிய வளர்ச்சி – 4.27%. தன் இலக்கை முழுமையாக எட்ட வில்லை எனினும், முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை விட அதிக வளர்ச்சி.

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் மீண்டும் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது. மிக துரதிருஷ்டவசமாக வந்த சீனப்போரும், பஞ்சமும் அடுத்த நடந்த பாகிஸ்தான் போரும் மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின. இந்தக் காலகட்டத்தில் தான், பொருளாதார வளர்ச்சி மூன்றாம் ஐந்தாண்டுத்திட்டத்தில் 2.2%, நான்காம் ஐந்தாண்டுத் திட்டத்தில் 3.3% என மந்தமடைந்து, இந்து வளர்ச்சி விகிதம் என்னும் சொல்லாட்சி (3%) எழுந்தது.

மஹலனோபிஸ் இந்தியப் புள்ளியியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். இந்திய திட்டக் கமிஷனில் புள்ளி விவர திரட்டல் முறைகள், ஆராய்ச்சி மற்றும் அதன் பயன்பாடுகளில் பெரும்பங்காற்றியவர். கல்கத்தா இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை நிறுவியவர். இவர் இங்கிலாந்தின் கிங்ஸ் கல்லூரியில் இயற்பியல் பயின்றவர். அமெரிக்கப் புள்ளியியல் கழக உறுப்பினர். ரவீந்திரநாத் தாகூரின் வெளிநாட்டுப் பயணங்களில், அவரின் செயலராக சில காலம் இருந்தவர். கலைகளில் ஆர்வமிக்கவர். FRS பட்டம் பெற்றவர். அவர் தனது திட்டத்தில், சோவியத்தில் உபயோகித்த பொருளாதாரத் தேற்றம் ஒன்றை உபயோகித்ததைத் தவிர, சோவியத் யூனியனோடு எந்தப் பெரும் தொடர்பும் இல்லாதவர்.

இதுதான், சோவியத்துக்கும், நேருவுக்கும், மஹலனோபிஸ்ஸூக்கும் இருந்த சோவியத் தொடர்புகள். எந்த ஒரு பெரிய பொருளாதார நிர்வாகிகளும், தாங்கள் நடத்தும் பொருளாதாரத்துக்கான நீண்ட காலத் திட்டங்கள் வடிவமைப்பார்கள். ஏனெனில், அடிப்படைக் கட்டமைப்புகள் சரியான தொலைநோக்குப் பார்வையும், திட்டங்களும் இன்றிச் செயல்படுத்தப்படுவது, நிதியாதாரம் மற்றும் கால விரயங்களை ஏற்படுத்தக் கூடியது. எடுத்துக்காட்டாக, ஒரு மாநிலத்தில், சாலைகள் அமைக்க வேண்டுமெனில், இன்று அம்மாநிலத்தின் போக்குவரத்து நிலவரம், வளர்ச்சி, வருங்காலத்தில் ஏற்படக் கூடிய வளர்ச்சி விகிதம் முதலியவற்றை ஆராய்ந்து, வருங்காலத் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட வேண்டும். அதற்கான ஆயத்தங்களுக்கே ஒன்றிரண்டு வருடங்கள் ஆகும். எனவே தான் நாட்டின் பொருளாதாரத் திட்டங்கள் நீண்ட கால அடிப்படையில் திட்டமிடப்படுகின்றன. இதற்கும் சோஸலிஸத்துக்கும் தொடர்பில்லை.

அடுத்ததாக, சுதந்திர நாட்டின் முதல் பிரதமராக அவர் செய்த இன்னொரு விஷயத்தைக் காண்போம். இந்தியாவை நவீனமாக்க வேண்டுமானால், நவீனத் தொழிற் கல்வி வேண்டும் என நினைத்துத் துவங்கப்பட்டவை தான் இந்திய தொழிற் நுட்பக் கழகங்கள் (Indian Institutes of Technology). உலகின் மிகச் சிறந்த தொழிற்நுட்பப் பல்கலைக் கழகமான மாசாசூஸெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (MIT)யைப் போன்ற ஒரு உலகத் தரம் வாய்ந்த தொழிற் நுட்பக் கழகம் அமைக்க வேண்டும் என்னும் ஒரு கனவில் துவக்கப்பட்டது முதல் கல்லூரியான ஐஐடி கரக்பூர். 1951 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

அதன் முதல் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர்,

“Here in the place of that Hijli Detention Camp stands the fine monument of India, representing India’s urges, India’s future in the making. This picture seems to me symbolical of the changes that are coming to India”

எனத் தன் கனவைச் சொன்னார். இன்று உலக அரங்கில ஐஐடி களின் மதிப்பு என்னவென்பதை, உலகின் மிகப் பெரும் செல்வந்தரான, வாரன் ப்ஃபெட்டின் வார்த்தைகளில் கேளுங்கள்:

 • The Berkshire Hathaway chairman said that India has a terrific future due to the brain power it has. Buffett recalled how Microsoft founder Bill Gates once told him he would just hire people from IIT if he were to choose one university

அடுத்த பத்தாண்டுகளில், மும்பை, தில்லி, கான்பூர், சென்னை, தில்லி என மேலும் நாலு ஐஐடிகள் உருவாக்கப்பட்டன. மும்பை ஐஐடி, யுனெஸ்கோவினால், சோவியத் நிதி மூலம் (கவனிக்க: நிதி மட்டுமே) உருவாக்கப் பட்டது. கான்பூர் ஐஐடி, அமெரிக்காவின் எம்.ஐ.டி, கலிஃபோர்னியா யுனிவர்சிட்டி, கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, ப்ரினிசிடன் யுனிவர்சிட்டி, கார்னகி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, மிக்சிகன் யுனிவர்சிட்டி, ஒஹையோ ஸ்டேட் யுனிவர்சிட்டி மற்றும் இரண்டு அமெரிக்க கல்வி நிறுவனங்களின் உதவியால் உருவாக்கப் பட்டது. இந்தியாவின் நண்பரும், பெரும் பொருளாதார அறிஞருமான ஜான் கென்னத் கேல்ப்ரீத் அவர்களின் வழிகாட்டுதலில், கணிணி அறிவியல் பாடங்கள் துவங்க்கப்பட்டன. துவங்கப்பட்ட ஆண்டு:1963.

சென்னை ஐஐடி, ஜெர்மனி நாட்டின் உதவியோடு துவங்கப்படது. 1956 ஆம் ஆண்டில். தில்லி ஐஐடி, பிரிட்டன் நாட்டின் உதவியோடு துவங்கப்பட்டது. துவங்கப்பட்டவை அனைத்தும் வெங்கட்ரமணா கோவிந்தா கல்லூரிகளோ / முண்டக் கண்ணியம்மன் கல்லூரிகளோ அல்ல – உலகின் மிக உன்னதமான உயர் கல்வி நிலையங்கள்; அனைத்தும் உலகின் தொழில்நுட்பம் வளர்ந்த வலதுசாரி நாடுகளின் உதவியோடு.

இன்று, மிகச் சீரிய அரசியல் மற்றும் விஞ்ஞானிகளின் தலைமையில், பசு மூத்திரத்தின் நன்மைகள் பற்றிய ஆராய்ச்சிகளை தில்லி ஐஐடியில் துவங்கியிருக்கிறோம் (அதைச் செய்ய வேண்டியது/ செய்து கொண்டிருப்பது வேளாண் பல்கலைகள் என்றாலும்..)

ஹோமி ஜெஹாங்கீர் பாபா (ராம்தேவ் பாபாவின் சித்தப்பா அல்ல) ஒரு பாரம்பரிய செல்வந்த பார்ஸிக் குடும்பத்தில் பிறந்தவர். டாட்டா நிறுவனத்தின் தலைவர்களுள் ஒருவரான டோரப்ஜி டாட்டாவின் உறவினர். இங்கிலாந்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். சிறந்த விஞ்ஞானி. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி நீல்ஸ் போருடன் பணியாற்றியவர். அன்று, அணு இயற்பியல் வளரத் துவங்கிய காலம். அவரும் அத்துறையில் பல ஆராய்ச்சிகள் செய்தார். 1939 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போர் துவங்கியவுடன் இந்தியா வந்தவர், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் பணிபுரியத் தொடங்கினார். அங்கே காஸ்மிக் கதிர் ஆராய்ச்சி சாலையை நிறுவிய அவர், தனியே அணு ஆயுத உற்பத்தி பற்றிய ஆராய்ச்சியையும் 1944 ல் துவங்கினார். ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணு ஆயுதத்தை வீசுவதற்கு ஒரு ஆண்டு முன்பு. அந்த ஆராய்ச்சி பற்றிய விவரங்களை அறிந்த, நேரு, மும்பையில் டாட்டா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் என்னும் உயர் இயற்பியல் மற்றும் அணு ஆராய்ச்சி நிலையத்தை ஏற்படுத்த உதவி செய்தார். அணுசக்திக் கழகத்தின் இயக்குநராக நியமித்தார். 1955-56 ல், இந்திய அரசாங்கம், மும்பை அரசு (அன்று மராட்டியம்/குஜராத் என மொழிவாரி மாகாணங்கள் உருவாகியிருக்கவில்லை) மற்றும் ஸர் டோரப்ஜி ட்ரஸ்ட் என மூவருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனடிப்படையில், இந்த ஆராய்ச்சிக் கழகம் இயங்கத் துவங்கியது. இன்று அது அணுசக்தித் துறையின் கீழ் வருகிறது. இன்று இந்திய அணுசக்தித் துறையின் பல்வேறு சாதனைகளுக்கும், இந்திய அணுஆயுதச் சோதனைகளுக்கும் அடிப்படை இந்த நிறுவனம்தான். இவர் 1966 ஆம் ஆண்டு ஜெனிவாவில் ஒரு விமான விபத்தில் இறந்தார். இது பற்றிய சந்தேகங்கள் அன்று சி.ஐ.ஏ வின் திசையில் நீண்டன.

சேத் அம்பாலால் சாராபாயின் மகன் விக்ரம் சாராபாய். ஹோமி பாபாவைப் போலவே கேம்ப்ரிட்ஜில் முனைவர் பட்டம், சி,வி.ராமனின் வழிகாட்டுதலில் பெற்றவர். அமதபாத் கல்விக் கழகத்தின் உதவியோடு, 1947 ல் ஃபிசிக்கல் ரிசர்ச் லேபரட்டரீஸ் என்னும் காஸ்மிக் கதிர் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கினார். ஸ்புட்னிக் செயற்கைக் கோள் விண்வெளியில் ஏவப்பட்ட்டது மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் பந்தய நிகழ்ச்சிகள் லைவ் ஆக அமெரிக்காவில் ஒளிபரப்பப் பட்ட நிகழ்வுகளை முன்னிறுத்தி, இந்தியா விண்வெளி ஆராய்ச்சிக்குள் செல்ல வேண்டும் என அரசிடம் சொன்னார். இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் உருவானது. டாக்டர் ஹோமி பாபாவின் உதவியோடு, திருவனந்தபுரத்தில் ஏவுகணைத் தளம் உருவாக்கினார். இன்று இந்தியா விண்வெளிக்கழகம், இந்தியாவின் பெருமிதங்களில் ஒன்று. சோற்றுக்கே சிங்கியடிக்கும் இந்தியாவுக்கு விண்வெளி ஆராய்ச்சி எதற்கு என்னும் கேள்வி அன்று எழுந்தது (இன்றும் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது). அதற்கு சாராபாயின் பதில் –

“There are some who question the relevance of space activities in a developing nation. To us, there is no ambiguity of purpose. We do not have the fantasy of competing with the economically advanced nations in the exploration of the moon or the planets or manned space-flight. But we are convinced that if we are to play a meaningful role nationally, and in the community of nations, we must be second to none in the application of advanced technologies to the real problems of man and society.”

இன்று செயற்கைக் கோள்கள் இந்திய தொலைத் தொடர்பு மற்றும் நிலவள ஆராய்ச்சிகளில் பெரும்பங்கு வகிப்பதை அனைவரும் அறிவர். ஆனால், ஏழை நாடாக இந்தியா தடுமாறிக் கொண்டிருந்த போதே, இதன் வருங்கால நன்மையை கணிக்கத் தெரிந்த விஞ்ஞானிகளையும், அவர்களை ஊக்குவித்த அரசியல் தலைமையையும் உலகம் தீர்க்கதரிசிகள் என அழைக்கிறது.

50 களின் இறுதியில், நாட்டின் மிக முக்கியமான நிறுவனங்களை வழிநடத்த மேலாளர்கள் குறைவாக இருந்தனர். இக்குறையைச் சரி செய்ய, மேலாண் கழகங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என திட்டக் கமிஷன் முடிவு செய்தது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜார்ஜ் ராபின்ஸை அழைத்து அவரின் ஆலோசனைப் படி, இரண்டு மேலாண் கழகங்கள் ஏற்படுத்த முடிவு செய்தனர். முதலாவது மேலாண் கழகம் – உலகின் தலைசிறந்த மேலாண் கல்வி நிறுவனமான அமெரிக்காவின் எம்.ஐ.டி – ஸ்லோன் மேலாண் கழகத்தின் உதவியோடு கல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்டது. இரண்டாவது மேலாண் கழகம், இன்னொரு தலைசிறந்த நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் உதவியோடு அமதாபாத்தில் நிறுவப்பட்டது. இவை இரண்டு வெற்றிகரமாக இயங்கத் துவங்கிய பின், நாடெங்கும் பல மேலாண் கழகங்கள் நிறுவப்பட்டன.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது, பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான லாகூர் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட, இந்திய பஞ்சாப் மாநிலத்துக்கு ஒரு புதுத் தலைநகர் தேவைப்பட்டது. 1949 ஆம் ஆண்டு, ஆல்பெர்ட் மேயர் என்னும் அமெரிக்க நகர்ப்புற வடிவமைப்பாளர் தலைமையில் புதிய தலைநகரான சண்டீகர் உருவாகத் துவங்கியது. பின்னர் தனது கூட்டாளியின் மரணத்தால், ஆல்பெர்ட் மேயர் இம்முயற்சியில் இருந்து விலகிவிட, மற்றுமொரு தலைசிறந்த ஆர்க்கிடெக்ட் ஆன ஃப்ரெஞ்ச் வடிவமைப்பாளர் லே கார்பூஸியே அழைக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு, யுனெஸ்கோ (சண்டிகர் அமைக்கப்பட்டு 56 ஆண்டுகள் கழித்து), சண்டீகர் ஒரு ஒரு கலாச்சார சின்னம் என அறிவித்தது. உலகின் மிகச் சிறப்பாகத் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரங்களில் ஒன்று என அறியப்பட்டிருக்கிறது சண்டீகர். இது, நேருவின் தனிப்பட்ட கனவு என்றே பலரும் சொல்வர்.

இப்படி, இந்தியாவின் நவீன நகரத்தை நிர்மாணித்த தலைவர், இறை நம்பிக்கை இல்லாதவர். சோஸலிஸ்ட். தான் நிர்மாணித்த நகரை சோவியத் நகர் என்றோ, மார்க்ஸ் நகர் என்றோ பெயரிடவில்லை. அங்கே இருந்த பஞ்ச்குலா என்னும் சிறு நகரில் கோவில் கொண்டிருக்கும், சண்டீ என்னும் பார்வதி தேவியின் வீடு என்னும் பெயரில் சண்டீகர் (சண்டீ + கர் (வீடு)) என்றுதான் பெயரிட்டார்.

ஒரு சுதந்திர தேசத்தின் தலைவர் என்பது பெரும் சரித்திர நிகழ்வு. இறை நம்பிக்கையாளர்களுக்கு, அது கடவுள் கொடுத்த வரம். ஒரு புறம் வறுமை மக்களைப் பிடுங்கித் தின்று கொண்டிருக்கிறது. உண்ண உணவில்லை. உணவு தானியங்களுக்காக உலகெலாம் சென்று கையேந்தும் நிலை. அதே சமயத்தில், நாட்டின் வருங்கால முன்னேற்றத்துக்காக திட்டங்களைத் தீட்டி, பெரும் அமைப்புக்களை உருவாக்க வேண்டிய பொறுப்பு. இவை இரண்டையும் மிக அநாயசமாகக் கையாண்டார்.

உணவு தானியங்கள் வேண்டி உலகு நாடுகளை நோக்கிப் பிச்சைப் பாத்திரம் ஏந்தினார். ஆனால், வருங்கால பாரதத்துக்கான தூண்களை உருவாக்கும் போது தீர்க்கதரிசியான அரசனைப் போலக் கனவு கண்டார். தான் உருவாக்கிய திட்டங்கள் / அமைப்புகள் ஒன்றைக் கூட, “உலகில் தலைசிறந்த” என்னும் அளவுகோளுக்குக் கீழே அவர் அமைக்க முயலவில்லை. அதற்கான முயற்சியில் பெரும் தலைவர்களை உருவாக்கினார். அவர்களுக்குத் தேவையான வசதிகளை அள்ளி வ்ழங்கினார். அவர்களும் தேசியக் கட்டுமானம் என்னும் மாபெரும் வேள்வியில் தன்னலம் இன்றிப் பங்கு பெற்றனர்.

பாரதி உயிருடன் இருந்திருந்தால், “சென்றிட்டான் எட்டுத் திக்கும்; அறிவுச் செல்வம் யாவும் கொணர்ந்திங்கு சேர்த்திட்டான்!” எனக் கூத்தாடியிருப்பான்.

இதில் முக்கியமான வேடிக்கை ஒன்றைக் கவனித்திருக்கலாம் – அவர் உருவாக்கிய அமைப்புகளில், திட்டங்களில், சோவியத் யூனியனின் பங்கு 1% கூட இல்லை. சோஸலிஸம் என்பது வேறு. சோவியத் யூனியன் வேறு.

நேருவின் இந்தியாவின் முன்பு, சோவியத் யூனியன் ஒரு தோல்வியடைந்த மாடல். ஸ்டாலின் சிறிய தலைவர். நேருவின் பாதையில் சென்றிருந்தால், இன்று சோவியத் யூனியன் சிதறாமல் இருந்திருக்கும். சீனம், மனித நேயமுள்ள நாடாக மலர்ந்திருக்கும்.

தலைமைப்பண்பு எனது என்ன? அலெக்ஸாண்டர் போல் மாவீரனாக இருப்பதா? காந்தியைப் போல் துறவியாக இருப்பதா? ஹிட்லரைப் போல் கொடுங்கோலனாக இருப்பதா என்னும் கேள்விக்கு ஒரு பதில் இல்லை. அது, சூழலைப் பொறுத்தது என்பதே சரியான பதில்.

இந்தியாவில், இரும்புத்தாது இருக்கிறது, அதை வைத்து ஒரு இரும்பு ஆலை உருவாக்க முடியும் என எடுத்தது ஒரு தோராயமான முடிவுதான். அதன் பின்னால் தான் வாழ் நாள் சேமிப்பை முதலீடு செய்யும் முடிவின் பெயர் தான் தொழில்த் திடம். பின்னர் அதற்கான சரியான தொழில் நுட்ப அறிஞரை கண்டு, அவருக்கான ஊதியம், அமெரிக்கரான அவருக்கு பின் தங்கிய பீஹார் மாநிலக் கிராமத்தில் வசிக்க வசதி என ஏற்படுத்திக் கொடுத்து, தன் கனவை காரிய வெற்றி கொள்ள வைப்பது தீர்க்கதரிசனத் தலைமை. நிறுவனம் சூல் கொண்டு வளரும் தருணத்துக்குத் தேவையான தலைமைப் பண்பு.

ஜாம்ஷெட்ஜி தன் வாழ்நாளில், நான்கு குறிக்கோள்களை வைத்திருந்தார்.

 • ஒரு இரும்பு ஆலை அமைத்தல்.
 • உலகத் தரம் வாய்ந்த ஒரு கல்வி நிறுவனம் உருவாக்குதல்
 • உலகின் மிகச் சிறந்த விடுதி அமைத்தல்
 • புனல் (நீர்) மின்சார நிலையம் அமைத்தல்.

இவற்றில், அவர் நாளில், ஒன்றுதான் நிறைவேறியது, மற்றவை நிறைவேறும் முன்பு அவர் இறந்து விட்டார். ஆனால், பின்னாளில், அவரின் மற்ற கனவுகளும் நிறைவேறின. இரும்பு ஆலை இன்னும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. பெங்களூரின் இந்திய அறிவியற்கழகம் உலகின் மிகச் சிறந்த அறிவியல் கல்வி நிறுவனங்களுள் ஒன்று. மும்பை தாஜ்மகல் விடுதி அவர் வாழ்நாளில் அமைக்கப்பட்டுவிட்டது. மும்பை நகரில் டாட்டாவின் புனல் மின்சார நிறுவனம் இன்றும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

ஜாம்ஷெட்ஜிக்கு, இரும்புத் தயாரிப்பு தெரியுமா? ஆலையில் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கத் தெரியுமா? பெங்களூர் அறிவியற் கழகத்தில் பணிபுரிந்த சி.வி.ராமனின் அறிவியல் கண்டுபிடிப்பின் நுட்ப விவரங்கள் தெரியுமா? தாஜ்மகால் விடுதியில் எப்படி உணவு சமைப்பது எனத் தெரியுமா? புனல் மின்சார உற்பத்தி இயந்திரங்கள் எப்படி வேலை செய்கின்றன எனத் தெரியுமா? இத்தனை கேள்விகளுக்கும், ஒரு விடையைத் தைரியமாகச் சொல்லலாம். அவருக்குத் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், இந்த நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்பது அவரின் கனவு. அதை யாரை வைத்து நிறைவேற்ற வேண்டும் என்னும் வழியும் அவருக்குத் தெரியும். அந்நோக்கங்கள் வெற்றிகரமாக நிறைவேறின என்பதே அவர் தீர்க்க தரிசனத் தலைவர் என்பதன் அடையாளம்.

ஜாம்ஷெட்ஜியை உதாரணம் காட்டி நேருவின் பெருமையை விளக்குவது சிறுபிள்ளைத்தனம் தான். ஆனாலும், நேரு தொலைநோக்கில், நாட்டை நிர்மாணித்தது போல், தன் வியாபாரக் குழுமத்தை நிர்மாணித்த பெருமகன் ஜாம்ஷ்ட்ஜி என்னும் வகையில் இருவருமே தீர்க்க தரிசனத் தலைவர்கள் என்னும் வகையில் இந்த உதாரணம் முன் வைக்கப்படுகிறது.

தலைவர்கள் தோல்வியடைவதில்லையா? பெரும் தலைவர்கள் பெரும் தோல்வியைச் சந்தித்தவர்கள். தோல்வியைச் சந்திக்காத பெருந்தலைவர்களே இல்லை. மேலாண்மையில், ஒரு சொலவடை உண்டு. உங்கள் நிறுவனத்தில் தவறே செய்யாதவர்கள் யாரும் இருந்தால், அவர்களை அடையாளம் கண்டு, உடனே வேலையிலிருந்து நீக்கி விடவும் என்பது அது. ஏனெனில், அவர்கள் ஒன்றுமே செய்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருக்கும் டாட்டா குழுமத்தில், 60-70 நிறுவனங்கள் நஷ்டத்திலோ, பெரிதாய் வெற்றிகளோ பெறாமல் இருக்கின்றன. ஆனால், அவையனைத்துமே, டாட்டா குழும குறிக்கோள்களின் படி நடக்கின்றன. வெற்றி/தோல்வி மிக சகஜம். ஆனால், குறிக்கோள்களை உருவாக்கி, ஒரு திசையில், கஷ்ட நஷ்டங்களுக்கிடையே நேர்மையாக வழி நடத்திச் செல்லுதல் தான் ஒரு பெரும் தலைமைக்கு அடையாளம். டாட்டா குழுமங்கள் இன்று உலகின் முன்னுதாரண வியாபாரக் குழுமமாகக் கருதப்படுகிறார்கள். இந்தியா, இன்று உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக, benevolent world power ஆகக் கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், காந்தி காட்டிய வழியில் அமைந்த இந்திய நாடு; அவர் வாரிசுகளான நேரு, பட்டேல், அம்பேட்கர் பாடுபட்டு அமைத்த சமூக, பொருளாதாரக் கட்டமைப்பு.

நேருவுக்கு நிர்வாகத் திறன் இல்லை. அவர் பெண் பித்தர். அவர் கோழை எனச் சொல்பவர் யாரும், குறைந்த பட்சம் 10 ஆண்டு காலம் தாக்குப்பிடிக்கும் ஒரு நிறுவனத்தையோ, திட்டத்தையோ உருவாக்காதவர்கள். ஹாலிவுட் திரைப்படம் எடுப்பதை விடக்குறைந்த விலையில், செவ்வாய்க்கு செயற்கைக் கோள் அனுப்பினோம் என அடுத்தவர் உழைப்புக்கு முன் நின்று, வெட்கமின்றி செல்ஃபி எடுத்துக் கொள்ளும் சந்தர்ப்ப வாதிகள்.

 (தொடரும்)

பி.கு: உங்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக, சரித்திரத் தரவுகளைத் திரட்டும்போது, காதலியின் பழங்கடிதங்கள் படித்து மீண்டும் காதலில் விழுவது போல் வீழ்ந்தேன்.. நன்றி!

***

நேரு முதல் மல்லையா வரை.. – 3

உங்கள் இரண்டாவது கட்டுரையின் இரண்டாவது மிக முக்கியமான வாதம் – துவக்கத்தில், லட்சிய வாதத்துடன் தொடங்கி நடத்தப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் இருபது ஆண்டுகளுக்குள் சீரழியத்துவங்கின என்பது. பொதுத்துறை நிறுவனங்களைப் பேணும் பொருட்டு, தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். அதனால் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது எனச் சொல்லியிருக்கிறீர்கள்.

இந்தப் பொதுத்துறை நிறுவனங்களின் வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம். இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் போது முதலில் ஐந்து இரும்புத்தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன. நீர் மின் திட்டங்களும். இவையே முதலில் துவங்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள். இந்தப் பொதுத் துரை நிறுவனங்கள், அரசின் கொள்கையாகத் துவங்காப்பட்ட போது, நிலக்கரி, பெட்ரோலியம், அணுசக்தி, மின் உற்பத்தி, தொலைத் தொடர்பு, இரும்பு மற்றும் தாது உற்பத்தி போன்ற பொருளாதார இயக்கத்துக்கு அடிப்படையான தொழில்களில் துவங்கப்பட்டன. பின்னர், அரசுடமையாக்கப் பட்ட போது வங்கிகள், வானூர்திச் சேவை முதலியன உள்ளே வந்தன. இதில் உள்ளே வந்த ஒரு முக்கியமான நோயாளியும் உண்டு – அது தனியார் துறை நடத்தி, நஷ்டமடைந்து மூடப்பட்ட ஜவுளி ஆலைகள் – இவை அரசுமயமாக்கப்பட்டது, பெருமளவு வேலையின்மையை உண்டாக்குவதைத் தடுக்க.

முதலில் இந்த பொதுத்துறை நிறுவனங்களைப் பற்றிய ஒரு முழுப்பார்வையைப் பார்ப்போம். என்னிடம் கிடைத்த தகவல் 2012-13 ஆம் ஆண்டுக்கு உரியது. இன்று நிலைமை மாறியிருக்க அதிகம் வாய்ப்புகள் இல்லை. இது பொதுத்துறை நிறுவனங்களுக்காக தில்லியில் இயங்கும் கழகத்தின் பேராசிரியர் ராம் மிஸ்ரா தயாரித்தது. இந்தியாவில் இயங்கும் மொத்த பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை 229. அவற்றில், லாபகரமாக இயங்குபவை 149. நஷ்டத்தில் இயங்குபவை 79. 149 நிறுவனங்கள் சம்பாதித்த லாபம் 1,43,559 கோடி. 79 நிறுவனங்கள் ஏற்படுத்திய நஷ்டம் 28260 கோடி. நிகர லாபம் 1,15299 கோடி. அரசுக்குக் கிடைத்த டிவிடெண்ட் – 49701 கோடி. லாப சதவீதம் 6%.

இப்போது இவற்றைத் துறை வாரியாகப் பிரித்து, அவற்றைத் தனியார் நிறுவனங்களோடு ஒப்பிடுவோம்.

முதலில், பெட்ரோலியம். இதில் 80% தொழில் அரசு நிறுவனங்களுடன் உள்ளன. இதில் உள்ள மிகப் பெரும் தனியார் நிறுவனம் ரிலையன்ஸ். இவற்றின் வருமானத்தை ஒப்பிடுவதிலும், ஒரு சிக்கல் இருக்கிறது. இந்தியன் ஆயில் போன்ற நிறுவனம் முழுக்க முழுக்க இந்திய நுகர்வோருக்கான பெட்ரோல் / டீஸலை நேரடியாக விற்பனை செய்யும் நிறுவனம். பலமுறைகள் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை அவை ஏற்றுக் கொண்டு, நுகர்வோருக்குக் குறைந்த விலையைல் விற்கும் கட்டாயத்தில் இருக்கும் நிறுவனம். ரிலையன்ஸுக்கு அந்த பிரச்சினை இல்லை. மேலும் ரிலையன்ஸ், எண்ணெயிலிருந்து ப்ளாஸ்டிக் குருணைகள் தயாரித்தும் விற்கின்றன. எனவே ஒப்பீடு, மிகச் சரியானதல்ல. இருந்தாலும் தனியார் துறையில் வேறு சமமான ஒப்பீடு இல்லாததால் இதைச் செய்வோம். இதில் ONGC என்னும் நிறுவனமும் உண்டு. அதன் தொழில் மாதிரி வேறு – அது கச்சா எண்ணெய் தோண்டி விற்கும் நிறுவனம். ஆனாலும் ஒப்பிடுவோம்.

 

Oil and Natural Gas – 2016 financial performance
Rs.Cr
Details ioc Reliance HPCL BPCL Oil ONGC PSE tot Petro tot Pse %
Sales 399600 252241 197744 217805 9256 77988 902393 1154634 78
Net profit 10376 27417 3868 7431 2330 15980 39985 67402 59
Profit % 2.60 10.87 1.96 3.41 25.17 20.49 4.43 5.84
ROCE 8.09 8.24 8.84 16.77 6.76 8.04

 

இதில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு மற்றும் சில்லறை விற்பனை மட்டும் செய்யும் இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களில் நிகர லாபம் ரிலையன்ஸை விடக் குறைவு ஆனால், ONGC, OIL போன்ற கச்சா உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் லாப சதவீதம் அதிகம்.  மிக முக்கியம், அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் லாபம் சம்பாதிக்கிறது என்பது. அடுத்த புள்ளி விவரம் Return on Capital employed (ROCE) – போட்ட முதலுக்கு என்ன லாபம் கிடைக்கிறது – அதில் அனைத்து நிறுவனங்களுமே நல்ல நிலையில் இருக்கின்றன.  இந்தப் பொதுத் துறை நிறுவனங்கள் இந்தியப் பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப் பட்டவை, எனவே, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, தங்கள் லாப நட்ட கணக்கை, பங்குதாரர்களுக்கும், பங்குச் சந்தைக்கும் அனுப்ப வேண்டும்.

அடுத்து, மின் உற்பத்தி நிறுவனங்கள்.

2016 Power Sector financial results
Rs. Cr
Details NTPC NHPC Adani Tata Rel power
Sales 70860 7330 12685 8267 687
Net profit 10242 2403 -28.48 771 402
Profit % 14.45 32.78 -0.22 9.33 58.52
ROCE 5.66 4.91 0.02 2.76 2.34

 

இதில் தேசிய அனல் மின் உற்பத்திக் கழகம் (NTPC), தேசிய புனல் மின் உற்பத்திக் கழகம் (NHPC) இரண்டும் பொதுத்துறை நிறுவனங்கள். அதானி, ரிலையன்ஸ், டாட்டா மூவரும் தனியார். லாப சதவீதம் அதிகமாக இருப்பது பொதுத்துறையில். ரிலையன்ஸூக்கு 2016 வருடம் ஒரு அதீத (extra ordinary income ) வருமானம் வந்துள்ளது. அதன் முந்தைய ஆண்டுகளில், அதன் லாப சதவீதம் 7-8% மட்டுமே.

 

அடுத்தது வங்கிகள்.

Banks Financial 2016
Rs.Cr
Details SBI PNB BOB Canara IB Andhra icici HDFC Kotak
Sales 115666 54301 44061 48897 18025 13467 68062 70973 18996
Net profit 9950 -3974 -5395 -2812 711 539 9726 12296 2089
Profit % 8.60 -7.32 -12.24 -5.75 3.94 4.00 14.29 17.32 11.00
contingencies 29483 17954 15153 10332 2076 2955 11667 2725 917
Banks – Financials 2015
Details SBI PNB BOB Canara IB Andhra ICICI HDFC Kotak
Sales 174972 46315 47365 48300 17216 12741 61267 57466 11748
Net profit 13101 3061 3398 2702 1005 638 11175 10215 1865
Profit % 7.49 6.61 7.17 5.59 5.84 5.01 18.24 17.78 15.88
taxes paid 6212 895 2022 795 463 579 4640 5113 896
contingencies 19599 7997 4494 3452 1545 2080 3899 2075 164

இதில், இரண்டாண்டுகளின் நிதிநிலை அறிக்கைகளைக் கொடுத்துள்ளேன்.  2015 ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கி, வாராக்கடன்களை வங்கிகள் அறிவித்து, அதற்கான ப்ரொவிஷனை நிதிநிலை அறிக்கையில் கட்டாயம் கொடுக்க வேண்டும் என வங்கிகளுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அவர்களின் லாப சதவீதம் குறைந்துள்ளது. எஸ்.பி.ஐ மட்டும் க்டந்த இரண்டு வருடங்களில் 49000 கோடி ரூபாய் வருவது கடினம் எனத் தன் நிதிநிலை அறிக்கையில் கொடுத்திருக்கிறது. இந்தக் க்டன்களில், பெரும்பாலும், பெரும் தனியார் க்ரோனி கேப்பிடலிஸ்ட் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டவை – அவர்களின் கடனும் பெயரும் ஊடகங்களில் தினமும் நாறிக் கொண்டிருக்கிறது.

மேலும், அரசு வங்கிகளுக்கு, ஊரகக் கிளைகள் உண்டு. தனியார் வங்கிகளுக்கு அந்த பாரமும் இல்லை. தனியார் வங்கிகளின் மேலாண்மை கொஞ்சம் மேல் எனச் சொல்லலாம்.

அடுத்தது நிலக்கரி. இதில் ஒப்பு நோக்க பெரும் தனியார் நிறுவனங்கள் இன்னும் இல்லை. எனவே பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும்.

Coal Sector Financials – 2016
Rs. Cr
Details Coal India NLC
Sales 17292 7194
Net profit 16343 1204
Profit % 94.51 16.74
ROCE 86.55 5.7

 

அடுத்தது இரும்பு.

Iron and steel – 2016 and 2015. Rs.Cr
Details SAIL SAIL -2015 TISCO JINDAL JINDA-2015
Sales 39666 46731 42101 12852 13686
Net profit -4132 2180 4900 -1018 -310
Profit % -10.42 4.66 11.64 -7.92 -2.27
ROCE -6.87 4.81 4.79 -3.48 -0.94

 

இதில் SAIL பொதுத்துறை நிறுவனம். Tisco, Jindal,  தனியார் நிறுவனங்கள்.

அடுத்து கனரகத் தொழில்

Heavy engineering financials 2016 Rs.Cr
Details BHEL-16 BHEL-15 BGR-16 BGR-15
Sales 28550 29253 3193 3365
Net profit -913 1419 32.98 42.15
Profit % -3.20 4.85 1.03 1.25
ROCE -1.99 3.06 1.19 1.44

இத்துறை, விலை குறைந்த சீன நிறுவனங்களுடன் போட்டி போட இயலாமல் தவிக்கிறது.

இன்னும் சில பொதுத்துறை நிறுவனங்களான, பாரத் எலக்ட்ரானிக்ஸ், இஸ்ரோ, ஆண்ட்ரிக்ஸ், ஏர் இந்தியா, தேசிய ஜவுளிக் கழகம், தொலைபேசித் துறை நிறுவனங்கள் (BSNL, MTNL) போன்ற நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள் பொதுவில் கிடைப்பதில்லை ஏனெனில் அவை பங்குச் சந்தையில் இல்லை. ஆனால், இவற்றில் ஏர் இந்தியா, தேசிய ஜவுளிக் கழகம் போன்றவை பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்குபவை.

கூட்டுறவு நிறுவனங்களை நான் சேர்க்க வில்லை. அவை பொதுத் துறை நிறுவனம் என்னும் வரையறையில் வராது. ஆனாலும், புள்ளி விவரத்துக்காக – பால் கூட்டுறவு நிறுவனங்கள் செயல் திறன் மிக்க வகையில் இயங்கி வருகின்றன. அமுல் 20000 கோடிக்கும் மேல் வருமானம், நந்தினி – 6000 கோடி, ஆவின் 4000 கோடி, விஜயா 3000 கோடி, மில்மா – 2500 கோடி வருமானம். இதில் அனைத்தும் லாபமீட்டுபவை.

இவற்றிலிருந்து நான் முன்வைக்கும் வாதங்கள் இவையே.

 • பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன.
 • முக்கியமான துறைகளின் மிகப் பெரும் பொதுத்துறை நிறுவனங்கள் பங்குச் சந்தையில் உள்ளன
 • போட்டி / மற்றும் தொழில் நுட்ப மாறுதல்களால் நஷ்டமடையும் தொழில்கள் உண்டு – தொலைபேசித் துறை போல.
 • தவறான மேலாண்மையால் மற்றும் அதீத சூழலால் நஷ்டமடையும் நிறுவனங்கள் உண்டு – ஏர் இந்தியா போல.
 • தனியார் துறை நஷ்டத்தைத் தலையில் போட்டுக் கொண்ட நிறுவனங்கள் உண்டு – தேசிய ஜவுளிக்கழகம் போல.

1991 ல் பொருளாதாரச் சீர்திருத்தங்களோடு, பொதுத்துறை சீர்திருத்தங்களும் மிகக் கவனமாகக் கொண்டு வரப்பட்டன. முதலில், லைசன்ஸ் முறை தளர்த்தப்பட்டு, அதுவரை பொதுத்துறை மேலாதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த துறைகளான பெட்ரோலியம், வங்கி, இன்ஸ்யூரன்ஸ் எனப் பல துறைகளில் தனியார் பெருமளவு நுழைய வசதிகள் ஏற்பட்டன.  அதே சமயம், லாபம் ஈட்டாத பொதுத்துறை நிறுவனங்களை விற்கலாம் என எடுக்க முயன்ற முயற்சிகள் கடும் எதிர்ப்பைச் சந்தித்தன. ஆனாலும், அரசு மெல்ல மெல்ல தொடர்ந்து நஷ்டம் எற்படுத்திக் கொண்டிருந்த நிறுவனங்களை விற்கத் துவங்கின.  மாடர்ன் ப்ரேட் என்னும் ரொட்டி தயாரிக்கும் நிறுவனம் போன்றவை.

ராஜீவ் காந்தியின் காலத்தில், பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகத்தை மேம்படுத்த, அரசுக்கும், நிறுவனத்துக்க்கும் ஒரு வியாபாரப் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்னும் செயல்பாடு துவங்கியது. பின்னர் நரசிம்மராவ் காலத்தில் இது விரிவுபடுத்தப்பட்டு, தற்போது அநேகமாக எல்லா பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், பொதுத்துறை நிறுவனங்களின் முதலாளியான அரசுக்கும், நிறுவன மேலாண்மைக்கும் இடையே, அவர்களின் வியாபாரம் எவ்வளவு வளரவேண்டும், லாபம் எனப் பல செயல்பாட்டு இலக்குகள் நிர்ணையிக்கப்பட்டு இருதரப்பிலும் ஒத்துக் கொண்டு செயலபடுத்த வேண்டிய ஒரு வியாபாரத் திட்டம் ஆகும். இதை, பொதுத்துறை நிறுவனங்கள் வரவேற்றன. ஏனெனில் அரசின் எதிர்பார்ப்பு என்ன என்பது தெளிவாகப் புரிந்த பின்னர் நிர்வாகிகள் அதற்குத்தகுந்தாற்போல், தமது திட்டங்களை வகுக்க இயலும்.

2012-13ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஆய்வு செய்த போது, 75 நிறுவனங்கள் எக்ஸலண்ட், 39 நிறுவனங்கள் வெரி குட், 38 நிறுவனங்கள் குட், 36 நிறுவனங்கள் ஃபேர், 2 நிறுவனங்கள் மோசம் என வகைப்படுத்தப்பட்டன. இந்த ஆய்வு முறை, மிகவும் அறிவியற்பூர்வமாக, National Council for Applied Economic Research என்னும் இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் தனியார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. இது கொரிய / ஃப்ரெஞ்ச் நாடுகளின் நிறுவன மதிப்பீட்டு முறைகளைக் கலந்து உருவாக்கப்பட்டது.

1997 ஆம் ஆண்டு, பொதுத் துறை நிறுவனங்கள் ரத்தினங்கள் என வகைப்படுத்தப்பட்டன. மகாரத்னா, நவரத்னா, மினிரத்னா-1, மினிரத்னா-2 என வகைப்படுத்தப் பட்டு, சில வரையறைக்குள் அவர்களுக்கு வியாபார முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் கொடுக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, மூன்று ஆண்டுகள் சராசரி லாபம் 5000 கோடிக்கும் மேல் இருக்கும் நிறுவனங்கள் மகாரத்னா என்னும் வரையறைக்குள் வரும். அவை 5000 கோடிவரை அல்லது, நிறுவனத்தின் மதிப்பில் 15% வரை புது முதலீடுகளைச் செய்து கொள்ளலாம் எனச் சுதந்திரம் வழங்கப்பட்டது.

1991 ஆம் ஆண்டு, வங்கிகளின் செயல்பாடுகளை மேம்படுத்த, நரசிம்மன் கமிட்டி அமைக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெரும் செயல் சுதந்திரங்கள் கொடுக்கப்பட்டன.   SLR, CRR போன்ற விதிகள் தளர்த்தப்பட்டு, வங்கிகளின் கையில் அதிக நிதி கொடுக்கப்பட்டது.  கடன்களுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் விதிகள் தளர்த்தப்பட்டன. வங்கித் துறையில் போட்டியை அதிகரிக்க, புதிய தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன.  சுருக்கமாக, வங்கிகளுக்குச் சுதந்திரம் கொடுக்கப்பட்ட அதே வேளையில், சந்தையில் போட்டியை உருவாக்கியது அரசு. கடந்த 25 ஆண்டுகளில், அரசு வங்கிகள் மிகவும் திறமையாகப் போட்டியை எதிர்கொண்டு வளர்ந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, கடன் சுமை அதிகரித்த போதும், இந்தச் சரிவை எதிர்கொண்டு மீண்டெழும் நிதித் திறன் கொண்டவையாக இருக்கின்றன அரசு வங்கிகள். சுதந்திரம் இருந்த அதே சமயத்தில், வங்கிகளின் செயல்பாட்டில் சரியான கட்டுப்பாடுகளும் இருந்தன.

2008 ஆம் ஆண்டு, அமெரிக்க நிதித் துறை ஊழலில், உலகின் நிதித்துறை பாதிக்கப்பட்டு வீழ்ந்த போது, நமது வங்கிகள் குறிப்பாக அரசு வங்கிகளின் மீது, ரிசர்வ் வங்கி வைத்திருந்த சரியான கட்டுப்பாடுகள் காரணமாக இந்தப் பிரச்சினை இந்தியாவை பாதிக்கவில்லை. இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி.ரெட்டி போல ஒரு கவர்னர் அமெரிக்காவில் இருந்திருந்தால், அமெரிக்காவில் இந்தப் பிரச்சினை வந்திருக்காது என பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ஜோசஃப் ஸ்டிக்லிஸ் அப்போது கூறியிருந்தார். 2005 ஆண்டே, அமெரிக்காவில் இது போன்ற ஒரு பெரும் பிரச்சினை வரப்போகிறது என ஒரு இளம் பொருளாதார அறிஞர் எச்சரித்தார். அதற்காக அவர் கடுமையாக வசை பாடப்பட்டார். அவர் ரகுராம் ராஜன்.

”பொதுத்துறையின் நிதி மெல்லமெல்ல பின்னெடுக்கப்பட்டு தனியாருக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உருவான பொருளியல்மாற்றத்தையே நாம் புதியபொருளியல்கொள்கை என்கிறோம். தொழில்முனைவோர் ஊக்கப்படுத்தப்பட்டனர். அவர்கள் பொருளியல் வளர்ச்சியையும் சாதித்துக் காட்டினர். சென்ற இருபதாண்டுகளில் நாம் அடைந்துள்ள அத்தனை வளர்ச்சிகளும் புதியபொருளியல்கொள்கையின் சாதனைகளே”

என நீங்கள் எழுதியிருப்பது உண்மைக்கு மாறானது.  அதை நான் இப்படிச் சொல்வேன். 1980 களுக்குப் பிறகு, குறிப்பாக 1991க்குப் பிறகு, அரசு பொதுத்துறை மேலாண்மை முறைகள் மாற்றப்பட்டு, பொதுத்துறைக்கு அதிக சுதந்திரம் கொடுக்கப்பட்டு, நிதியாதாரங்கள் அளிக்கப்பட்டு, சந்தை முறைச் செயல்திறனுக்கு உட்படுத்தப்பட்டு மேம்படுத்தப்ப்ட்டிருக்கின்றன.  எரிசக்தி, மின் உற்பத்தி, வங்கித் துறை என பொருளாதாரத்தின் அடிப்படைத் துறைகளில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், சுதந்திரச் சந்தையில் தனியார் நிறுவனங்களோடு போட்டியிட்டு, மிக அற்புதமாக லாபமீட்டி வருகின்றன.   இது பொருளாதாரச் சீர்திருதங்களோடு, பொதுத்துறைச் சீர்திருத்தங்களும் நிகழ்த்தப்பட்டதன் விளைவே.

இதைத் தாண்டி, பொதுத்துறை ஆற்றும் சமூகப் பணிகள் மிக ஏராளம்.

 • சமூக நீதி. பொதுத்துறை நிறுவனங்களில், 1.4 கோடி ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இதில் 15% தாழ்த்தப்பட்டவர்கள், 7.5% பழங்குடியினர்கள், மாற்றுத் திறனாளிகள் 3%, முன்னாள் படைவீரர்கள் / செயலில் இறந்தோர் குடும்பத்தினர் – 5% முதல் 24.5% வரை – சில பணி நிலைகளில் – கிட்டத்தட்ட 21 லட்சம் தாழ்த்தப்பட்ட குடும்பங்கள், 10 லட்சம் பழங்குடியினர் மற்றும் சில லட்சங்கள் முன்னாள் ராணுவ வீரர்களும், செயலில் மரித்தோரின் குடும்பங்களும் பயன் பெறுகிறார்கள். கடந்த 70 வருடங்களாக, எனில் குறைந்தது 3 தலைமுறைகள். நான் இதுவரை 24 ஆண்டுகள், தனியார் துறைகளில் பணி புரிந்திருக்கிறேன். நான் பணிபுரிந்த தனியார் நிறுவனங்களில், தாழ்த்தப்பட்டவர்கள் / பழங்குடியினர் 1% கூடக் கிடையாது. நீங்கள் வியந்து, போற்றும் சக்தி குழுமத்தில், கவுண்டரல்லாதவர்கள் எத்தனை சதம் அதில் தாழ்த்தப்பட்டவர்கள் எத்தனை சதம் எனக்கேட்டுப் பாருங்கள்.  அங்கே அவர்கள் சமூக நீதி பேண வேண்டும் எனச் சொல்லவில்லை. சும்மா தெரிந்து கொள்ளக் கேட்டுப்பாருங்கள்.
 • Corporate social responsibility என்னும் கருதுகோளை ஒரு மாற முடியாத விதியாகப் பின்பற்றுவது பொதுத்துறைதான். விளையாட்டு, கிராம முன்னேற்றம் என நிதி, புரிந்துணர்வு ஒப்பந்த்களின் படி செலவு செய்யப்படுகிறது
 • அரசு மற்றும் மக்கள் நலன். இதில் ரயில்வே துறையும், எண்ணெய்க் கம்பெனிகளும் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. 2006 ஆண்டு துவங்கி, கச்சா எண்ணெய் விலை 100% அதிகமாக உயர்ந்த காலத்தில், ரயில்வே தனது கட்டணத்தை ஏற்றாமல், மிக முக்கியமாக சரக்குக் கட்டணங்களை உயர்த்தாமல், பணியாற்றியது. ரயிலில் வரும் சரக்குகளான கோதுமை, டீஸல் போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டால், விலைவாசி உயர்ந்து, பண வீக்கம் அதிகரித்து, சாதாரண மக்கள் அவதிப்படுவர். (அந்தக் காலத்தில்தான், ரயில்வேயின் வரலாற்றில், இரண்டாவது முறையாக லாப சதவீதம் – Operational Ratio மிக அதிகமாகவும் இருந்தது) ஆனால், இந்தத் தொழில்கள் தனியார் வசம் இருந்திருந்தால், இதில் அரசு தலையிட்டிருக்க முடியாது. 2008 அமெரிக்க நிதி ஊழலில், கோடிக்கணக்கான அமெரிக்க மக்களின் வாழ்நாள் சேமிப்பு ஆவியானது. இதன் பக்க விளைவாக ஐஸ்லாந்த் நாடு திவாலானது. ஐரோப்பிய பொருளாதார மந்தமடைந்தது. ஆனால், இந்தியாவில், அதன் பாதிப்பு சாமனியனை பாதிக்க வில்லை. இதன் முக்கிய காரணம், எரிசக்தி விலை உயர்வை தான் ஏற்றுக்கோண்டு, நுகர்வோருக்கு அனுப்பாத பொதுத்துறை. இது, அரசின் பொருளாதார மேலாண்மைக்கு ஒரு முக்கிய கருவி.

உங்கள் கட்டுரையில் நீங்கள் அளித்திருக்கும் விமானச் சேவை மற்றும் தொலைபேசித் துறை கீழாண்மை (மேலாண்மைக்கு எதிர்ப்பதம்?) யை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அவை மொத்த பொதுத்துறைப் பொருளாதாரத்தில் 5% கூட இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இன்னொன்று கவனித்தீர்களா, தனியார் துறை நஷ்டமடைந்தால், அது வியாபார ரிஸ்க் என வியாபார காந்தங்களைப் போற்றுகிறோம். ஆனால், பொதுத்துறையில் நடந்தால் மட்டும், அதை ஊழல் என்கிறோம். உங்கள் கட்டுரையில், சுதந்திரம் பெற்ற காலத்தில் பொறுப்பான பொதுத்துறைத் தலைவர்கள் இருந்தார்கள். 20 ஆண்டுகளில் எல்லாம் மறைந்து ஊழல் மங்கிவிட்டது என் எழுதியிருந்தீர்கள். அது உண்மையில்லை. பொதுத்துறை மேலாண்மை இன்னும் பல ரத்தினங்களைக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் நான் அளித்திருக்கும் 2016 ஆம் ஆண்டின் லாபக் கணக்கு சொல்கிறது.

பொதுத்துறையில் ஊழலே இல்லை எனச் சொல்ல மாட்டேன். பல நிறுவனங்களுக்கு, அதிலும் வங்கிகளுக்குப் பெரும் அழுத்தம் உள்ளது. மோதியின் ஆஸ்திரேலியப் பயணத்தில், ஆஸ்திரேலியப் பிரதமருடனான இரவுணவில், எஸ்.பி.ஐ சேர்மனும், அதானியும் அருகருகில் அமர்ந்திருந்தார்கள் என்பதை அறிவீர்கள். அதானியின் வியாபார முதலீட்டுக்கு கிட்டத்தட்ட 4000-5000 கோடி கடன் கொடுக்க எஸ்.பி.ஐ முடிவெடுத்ததாகத் தகவல். ஆமாம் / இல்லை என ஊகங்கள் பறக்கின்றன. அதானி ஏன் ஒரு பன்னாட்டு வங்கியிடம் கடன் கேட்கவில்லை? வெளிநாடுகளில் வட்டி விகிதம் குறைவாயிற்றே என்னும் கேள்விகளுக்குப் பதில் இல்லை. இது காங்கிரஸ் காலத்தில் கொடிகட்டிப் பறந்தது என்பது உலகறிந்த செய்தி.

ஒவ்வொரு வகை வியாபாரமும் ஒரு வித தனித்துவ விதிகளின் படி நடக்கிறது. பொதுத்துறைக்கு, அதற்கேயான விதிகள். பொதுத்துறைகள் பெரும்பாலும், அதை உணர்ந்து, அந்த எல்லைக்குள் வெற்றிகரமாக விளையாடுகின்றன என்பதே முன் நான் வைக்கும் வாதம்.

You say that public sector is draining the economy; I say and say it with pride, they are driving the fastest growing economy in the world today, with efficiency and equity.

உங்கள் கட்டுரை வந்த இரண்டு நாட்கள் மிக பாதிக்கப்பட்டேன். நண்பர்கள் சிலருடன் பேசினேன். அந்தக் கட்டுரையின் சாரமாக என்ன சொல்லப்படுகிறது என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன் அவை இவைதான்:

 • நேரு சோவியத் யூனியனின் பாதிப்பில் பொதுத்துறையை ஏற்படுத்தினார். அவை முதல் 20 ஆண்டுகள் நன்றாக நடந்தன. ஆனால், பின்னால், நாட்டின் பொருளாதாரத்தையே சிதைத்தன.
 • பொதுத் துறை ஊழல் மலிந்த துறை.
 • தொழிலதிபர்களின் முனைப்புப் போற்றப் பட வேண்டும். அம்பானி, அதானி, நாரயணமூர்த்த்தி என அனைவரும் லாபத்தின் பின்னால் போனாலும், அவர்களால்தான் வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் வரும்.

இந்த மூன்று புள்ளிகளையும் கூட்டினால், வலதுசாரியின் பொருளாதார அரசியல் கொள்கை வெளிப்படும். Government’s business is not to be in business.  பொதுத்துறை எல்லாம் வேஸ்ட். அனைத்தையும் விற்றுத் தனியார் வசம் ஒப்படைத்தால் நாடும் சுபிக்‌ஷமடையும் என்னும் வலதுசாரிப் பொருளாதார மந்திரம் கணீரென ஒலிக்கும். அப்படித்தான் வாஜ்பாயி அரசு காலத்தில் லாபகரமாக ஓடிக்கொண்டிருந்த IPCL மற்றும் VSNL விற்கப்பட்டது. நாளை, லாபகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் விற்கப்பட்டால், அதன் பலன் பெரும்பாலும் அரசை அண்டி பிழைக்கும் க்ரோனி கேப்பிடலிஸ்ட்களுக்குத் தான் போய்ச் சேரும்.  சாதாரண மக்களின் நலன் பாதிக்கப்படும். அப்படி நடக்கும் பட்சத்தில், வலதுசாரி சித்தாந்தத்தை ஆதரிக்கும் உங்கள் வாதங்கள் தாம் அதற்கு ஆதரவாக முன்வைக்கப்படும். எனவே, இதை மறுத்து, எனது தரப்பைச் சொல்ல வேண்டும் என்னும் உந்துதலை, உங்கள் கட்டுரைகள் எனக்குத் தந்தன.

குரியன், கேரளாவில் மில்மா என்னும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவை ஏற்படுத்தி, அது இன்று 2500 கோடி வருமானம் ஈட்டுகிறது. லாபகரமானது. வருமானத்தில் 80% த்துக்கும் மேல் விவசாயிகளுக்கு பால் உற்பத்திக்குக் கொடுக்கப்படுகிறது என்னும் உண்மை, கேரளாவுடன் தொடர்பிலிருக்கும் உங்களுக்கே தெரியவில்லை தானே?  FACT அழிந்ததற்கு கேரள கம்யூனிஸ்ட்களைச் சொன்னீர்கள்.  உண்மை. SPIC  ஏன் அழிந்தது எனத் தெரிந்துகொண்டீர்களா? தனியார் உரக்கம்பெனிகளின் இன்றைய நிலைமையை அறிந்து கொண்டீர்களா?

ஏன் இதுபோன்ற கருதுகோள்கள் பொது வழக்கில் உள்ளன என யோசித்தேன். எனக்கு பதில் தெரியவில்லை.  இதேபோன்று, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் பற்றிய அறிவுஜீவிகளின் கருத்தை யோசித்தேன்.  மழையில்லாத காலங்களில், 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் அந்தத் திட்டத்தைப் பலரும் கேலி பேசினார்கள். நீங்கள் கூடச் சில சம்பவங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், உண்மையில், சமீப காலத்தில் அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களில், ஓரளவு வெற்றி பெற்ற திட்டம் இதுதான்.   நாடெங்கும்  2- 2.5 கோடி மக்களுக்கு மழையில்லாக் கால உதவித் தொகையாக நிறைவேற்ற ஆகும் செலவு 30000-40000 கோடி ரூபாய். இதைக் கேலி பேசும் நாம், ஒன்றிரண்டு க்ரோனி கேப்பிடலிஸ்ட்களுக்குக் கொடுத்த வாராக்கடன் இரண்டு வருடங்களில் 50000 கோடி என ஒரு வங்கி அறிவிக்கும் புள்ளி விவரத்தை, வியாபார ரிஸ்க் என போற்றிப் பாடுகிறோம்.

என்ன சொல்ல?

அன்புடன்

பாலா

முந்தைய கட்டுரைஅனாச்சாரம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதொழில்முனைவோர்- ஒர் எதிர்வினை