ஜெ
உங்கள் யானை டாக்டர் படித்ததில் இருந்து என் நினைவில் யானை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது, தற்போது தமிழகத்தில் யானைகள் நிலை அய்யோ பரிதாபம்.
” ஒரு காலத்தில் தமிழகத்தில் யானைகளே இல்லை என்று வரும் அப்போது மெத்த சங்க இலக்கியங்களையும் தெருவில் போட்டு கொளுத்த வேண்டியது தான் “
ஏழுமலை
அன்பு ஜெமோ,
அறம் கதைகள் வெளியானபோது படித்து, விக்கித்துப் போனேன். அதைப் பற்றி எழுதக்கூட முடியவில்லை. நீண்ட இடைவெளிவிட்டு, மீண்டும் தினம் ஒரு கதை என நிதானமாகப் படித்தேன். ஒவ்வொன்றும் பொக்கிஷம்.
இதில் ‘அறம்’ கதையை மட்டும் அவ்வப்போது மீண்டும் படித்திருக்கிறேன். எத்தனை முறை படித்தாலும் சரி, ஆச்சி நடுரோட்டில் உட்காரும் காட்சி வந்ததும் கண்கள் கலங்கிவிடும். இத்தனைக்கும் அது சோகக்காட்சி அல்ல; அறம் உக்கிரமாய் எழுந்து நிற்கும் இடம். இது தான் நடக்கப்போகிறது என்று ஏற்கனவே படித்தவனுக்கு தெரிந்தாலும், அந்தக் காட்சியின் தீவிரம் உலுக்கிவிடுகிறது. மறக்க முடியாத கதை, மறக்க முடியாத காட்சி அது.
மயில்கழுத்து பற்றி ஒரு ஆச்சரியம் உண்டு. முதன்முறை அந்தக் கதையைப் படித்தபோது, சந்திரா சித்திரம் போல் நடந்து வந்து அமரும் காட்சியை முதன்முறை படித்தபோதே, மோகமுள் யமுனாவின் ஞாபகம் தான் வந்தது. அதன்பிறகு அந்தக் கதை முழுக்க, யமுனாவைத்தான் பார்த்தேன். சந்திரா என்ற பெயர்கூட இரண்டாம்முறை படித்தபோது தான் நினைவுக்கு வந்தது. அந்த கேரக்டரின் பெயர் யமுனா என்றே நினைவில் நின்றது.
மயில் கழுத்து பற்றி வந்த கடிதங்களை சமீபத்தில் உங்கள் தளத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வாசகர், தி.ஜா தான் கதையில் வரும் ராமன் என்று எழுதியிருந்தார். அதைப் படித்து ஆச்சரியம் அடைந்தேன். மோகமுள் படித்து இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும். கதையில் வரும் சம்பவங்கள்கூட நிறைய ஞாபகம் இல்லை. ஆனால் யமுனா பற்றிய ஒரு சித்திரம் நிரந்தரமாய் மனதில் தங்கிவிட்டது. அதை மிகச்சரியாய் மயில் கழுத்து பிரதிபலித்துவிட்டது.
ஏதாவது சினிமாவோ கதையோ மனதைத் தொட்டுவிட்டால், அதைப் பற்றி எழுதாமல் ஆவென வாய் பிளந்து உட்கார்ந்துவிடுவது என் வழக்கம். ஆனாலும் அறம் பாடிய உங்களுக்கு நன்றி சொல்லவே இந்தக் கடிதம்.
நன்றியுடன்
செங்கோவி