ஜெ, ஊட்டி முகாம் அமர்வுகளையும் அது சார்ந்து நிகழ்த்த விவாதங்களையும் சுருக்கமாக தொகுத்துள்ளேன். விவாதங்களை சுருக்கமாக எழுதுவதில் குறைகளும் பிழைகளும் இருக்கும் என்றே கருதுகிறேன். நாஞ்சிலின் கம்பராமாயண அமர்வு, சாமிநாதனின் இந்திய கலைகள் பற்றிய அமர்வு மற்றும் காளிபிரசாத்தின் அமர்வை தொகுக்கவில்லை.
தாமரைக்கண்ணன்
Apr 28 காலை 10 மணியளவில் முகாம் துவங்கியது. தற்போது குருகுலத்தில் இருக்கும் சுவாமி வியாச பிரசாத் முகாமை துவக்கி வைத்தார். முதல் அமர்வான அசோகமித்திரன் அமர்வை, க.மோகனரங்கன் மற்றும் ராம்குமார் நிகழ்த்தினார்கள். க.மோகனரங்கன் உரையின் சிறு பகுதியை சுருக்கமாக இங்கு தந்துள்ளேன்,
“அசோகமித்திரனின் கதாபாத்திரங்கள் சுய எள்ளல் தன்மை கொண்டவை. இந்த அம்சம் மற்ற நவீன எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டது. அவரின் சிறுவயது கதைகள் துயரத்திற்கு எதிரான, குழந்தை தன்மை கொண்டவை. அவை அதிகமும் செகந்திராபாத்தில் நடப்பவை. உதாரணம், பதினெட்டாவது அட்சகோடு. பார்வை மற்றும், இரண்டு நிமிஷம் கதைகளில் பெண் பாத்திரங்களை துள்ளியமாக, தீர்க்கமாக காண்பித்திருப்பார். அசோகமித்திரனை ஹெமிங்வே உடன் ஒப்பிடலாம். அவ்வாறான கதைகள்: மழை, ரிக்சா, மஞ்சள் கயிறு, காட்சி, காலம் கடந்த குழந்தைகள்”
அமர்வு முடிந்ததும் அரங்கசாமி “அசோகமித்திரன் ஏன் நவீன எழுத்தாளர்?” என்ற கேள்வி எழுப்பினார். அதற்கு க.மோகனரங்கன் அளித்த பதிலின் ஒரு பகுதி “நவீனம் என்பது புது யுகம் (Modern). நவீனத்துவம் என்பது School of thought. அது தனிமனிதனின் பார்வை, அறிவியல் பூர்வமாக அணுகுதல், இறுக்கம், எதிர் மறை தன்மை ஆகியவற்றை கொண்டது. பெரும்பாலும் Negativity ஆகா இருளாக தான் இருக்கும். அமியை இதற்குள் அடக்க முடியாது. அவரின் கதைகள் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணமாக இருக்கும். உதாரணம், விமோசனம் சிறுகதை.” .
பின் ஜெ அதற்கு பதிலளிக்க தொடங்கினர். ஜெ யின் பதில் அமியின் நாவல்கள் பற்றிய பார்வை, மொழி, அமியின் முன்னோடிகள், செவ்வியல் எழுத்து என்று நீண்டது. அவற்றின் சுருக்கம் கீழே,
ஜெ – அமியின் நாவல்கள் பற்றிய பார்வை:
அமியின் இன்று சிறுகதை, Tolstoy யை பற்றி பேசுகிறது. அவரின் War and peaceயை 5 முறை படித்திருக்கிறார். அமி, நாவல் வாசகனை மொத்தமாக மாற்றியமைக்க வேண்டும் என்று நம்பினார். 1994ல் சொல்கிறார், “நல்லவேளை தமிழில் பெரிய நாவல்கள் இல்லை” என்று. விஷ்ணுபுரம் வந்தபின் பெரிய நாவல்களை Justify பண்ணி எழுதுகிறார். விஷ்ணுபுரத்தை பற்றிய முக்கிய கட்டுரைகளை எழுதியவர்கள் அமி, இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா. அமி, “என்னுடைய பார்வைக்கு நான் பெரிய நாவல்கள் எழுதமாட்டேன்” என்கிறார்.
தேவதேவன் கூறியது:
உணர்ச்சிகள் ஒரு போதும் நேரடியாக அமியின் எழுத்துக்களில் வராது. கதாபாத்திரங்களின் செயல்களில் தான் வரும். சிறு சிறு செயல்பாடுகளில் உணர்ச்சி வெளிப்படும். மாலதி சிறுகதை சமகால எதார்த்தத்தை சொல்லக்கூடிய வடிவம். Big narration க்கு உள்ளே எழுதப்படும் Sub narration களில் தான் அழகியல் வரும்.
ஜெ – குறியீடு மற்றும் அறிவியல்
அமி குறியீடு மற்றும் அறிவியலை பயன்படுத்தியது இல்லை. தண்ணீரை பற்றி நான்(ஜெ) எழுதினால் சென்னையின் மொத்த தண்ணீர் வரலாற்றையும் எழுதுவேன். அப்பொழுது குறியீடுகளும் அறிவியலும் தேவைப்படும். இது அவரின் limitation. அவரின் பலமும் இந்த Limitation தான்.
ஜெ – அமியின் மொழி:
அமியின் அணைத்து கதாபாத்திரங்களும் அவரின் மொழியை தான் பேசும். அவருக்கு சென்னை மொழி தெரியும் ஆனால் எழுதமுடியாது. அவரால் பல வண்ணங்களை படைக்க முடியாது. அமியின் ஆதர்சம், Jack london. அமெரிக்க Hunter language ன் முக்கிய தொடக்கப்புள்ளி. எதையும் Precise ஆகா சொல்லுதல். இதன் தாக்கம் Hemingway யிடம் உள்ளது. War reporter யுடைய தந்தி மொழி அது. இது Zero narration எனப்படும். william saroyan (Author of My name is aram) இந்த வகை. இவரின் தாக்கம் அமியிடம் உள்ளது. இந்த மொழியில் வரலாறு, மனம், குறியீடு ஆகியவை கிடையாது. இது 70 களில் புகழ்பெற்ற ஒன்று. ஆனால் அமி காந்தி கதையில் மனதை எழுதியுள்ளார்.
இந்தவகை எழுத்து ரஸ்யாவில் சோசியலிச எதார்த்தம் என்று சொல்லப்பட்டது. ஸ்டாலின் தான் இந்த வார்த்தையை முதலில் பயன்படுத்துகிறார். எதார்த்த வாதம் என்பது எது நிகழ்ந்ததோ அதை சொல்வது. சோசியலிச யதார்த்தத்தின் விதி “மனிதனின் நடத்தையை எழுது. அதை சோசியலிசத்தை வைத்து புரிந்துகொள்.” இதற்கான உதாரணங்கள், ஜெயகாந்தன், பொன்னீலன்(கரிசல்), ரகுநாதன்(பஞ்சும் பசியும்). இவர்களை விட அமியில் சோசியலிச யதார்த்தத்தின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இது அன்றாட பிரச்சனைகளை சொல்வது. பெரிய விஷயங்களை சொல்லாது. இது நீக்கம் செய்தவற்றிலிருந்து வருவது பின் நவீனத்துவம். அமி வரலாறு இல்லை என்பார். பின் நவீனத்துவம் அன்றாட எதார்த்தத்தை தவிர்ப்பது. கட்டற்ற தன்மை, வரலாற்று வாதம் இல்லாததால், தனிமனிதனை சொல்வதால் அமி நவீன எழுத்தாளர்.
இடையில் Bram Stoker ன் Dracula நாவலை பற்றி ஜெ கூறியது:
Dracula நாவல் நவீன ஐரோப்பாவின் குறியீடு. பொருள் முதல்வாத முதலாளித்துவத்தின் குறியீடு. மேல் மட்டத்தில் Refined வாழ்க்கை. படி படியாக கீழே இறங்கினால் அடிமட்டத்தில் பிணங்கள். நுகர்வு வெறியில் பிற மனிதர்களின் ரத்தத்தை குடித்து வாழ்வது. அவர்களையும் தன்னை போலவே மாற்றிவிடுவது. உதாரணமாக, தற்போது பெல்ஜியம் மிக உயர்தர வாழ்க்கை கொண்டது. சிரியா யுத்தத்திற்கு அதில் பங்குண்டு.
அமியை பொறுத்தவரை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான விஷயம் முக்கியமானது கிடையாது. இதை சொல்வதில் அவருக்கு தயக்கம் இல்லை. அவரிடம் இந்த விஷயமே கிடையாது. அமியுடைய எழுத்துக்களில் குரூரமும் உள்ளது. பூனை, இன்னும் சில நாட்கள், பிரயாணம் போன்ற சிறுகதைகள். சுந்தர ராமசாமியிலும் அமியுடைய Limitations உள்ளன. ஆனால் குரூரம் கிடையாது.
ஜெ – நவீனத்துவ, பின் நவீனத்துவ, செவ்வியல் எழுத்துகள் பற்றி கூறியவை
நவீன எழுத்துக்களில் எழுத்தாளன் கண்டிப்பாக கதைக்குள் இருப்பான். எழுத்தாளன் என்ன சொல்கிறான் என்பதை வாசகன் சொல்ல முடியும். பின் நவீனத்துவத்தில் அவன் பல பல துண்டுகளாக கதைக்குள் சிதறி கிடப்பான். நவீன எழுத்துக்களில் இன்று மட்டுமே உள்ளது. இதில் எளிமைப்படுத்துதல்(Minimalism) இருக்கும். Minimalism தில் ஏற்கனவே தெரிந்தவற்றின்(Reference) மூலமாகவே நிகழ்வுகளை புரியவைக்க முடியும். இது Lord of the ring போன்ற புராணங்களில் இல்லை. இருந்தால் அந்த கனவை வாசகன் பார்க்க முடியாது. Minimalism உச்சத்தில் இருந்த போதுதான் Lord of the ring வருகிறது. Lord of the ring மிக முக்கியமான புராணம்.
நவீன எழுத்தாளர்கள் கதைக்குள் modern images (புறவய சித்திரங்கள்) யை அளிக்கலாம். அதை விளக்க வேண்டியதில்லை. Traditional symbols யை பயன்படுத்த கூடாது. நவீன எழுத்துக்களில் உள்ள இடைவெளிகளில் வாசகன் உள்நுழைந்து அந்த கதைக்குள் கற்பனை செய்ய முடியும். செவ்வியலில் அனைத்தும் விவரித்து கூறப்படுகிறது. இதனால் வாசகன் அதிலிருந்து வெளியே ஒரு உலகத்தை தான் பார்க்க முடியும். நவீன எழுத்தாளர்கள் edit செய்து தூக்கி எறியும் சொற்களால் ஆனது செவ்வியல்.
சிறுகதை அமர்வு – கமலக்கண்ணன்.
கதை: கோகோலின் மனைவி
கமலக்கண்ணன் “Tommaso Landolfi என்ற இத்தாலிய எழுத்தாளரால் எழுதப்பட்ட இக்கதை, Nikolai Gogol என்ற ரஷ்ய எழுத்தாளரின் மீதான ஊகமாக எழுதியுள்ளார். இது ஊக புனைவு (speculative fiction) எனப்படும். இதில் ப்ளூன்னை கோகோலின் மனைவியாக சித்தரித்துள்ளார். இடையிடையே பல தகவல்கள் கொடுக்கப்படுகின்றன. மற்றும் பலூன், கோகோல் தன்னுடைய புத்தகத்தை எரிப்பது, குழந்தையை கொல்வது போன்றவற்றை கொண்டு இக்கதையின் மீது பல கோணங்களில் விவாதம் நிகழ்வதில் எழுத்தாளர் வெற்றிகொண்டுள்ளார் என்றே கூறவேண்டும்.” என்றார்.
1950 – 60 களில் உயிரற்ற பொருட்களை உயிருள்ளவற்றுடன் தொடர்புபடுத்தி எழுதும் முறை பெரிய அலையாக இருந்தது. அவ்வாறு எழுதி குவிக்கப்பட்ட படிப்புகளுள் ஒன்று இது. அரங்கில் இக்கதை மீது பல வாசிப்புகள் வந்தன. பலூன் இதில் egoistic person ஆகா வருகிறது. இந்த கதை surrealism (மீபுனைவு) வகையை சார்ந்தது என்று ஒரு வாசகர் கூறினார். ஜெ அதை மறுத்து மீபுனைவு என்பது கனவு, கட்டற்ற பாலியல், non-metaphoric ஆகியவற்றை கொண்டது. இந்த வகை கதைகள் முதலில் கண்டிப்பாக அதிர்ச்சியை தரும். பின் மற்ற ஊகங்களுக்கு கொண்டுசெல்லும். இக்கதை மீபுனைவு அல்ல என்றார். மற்றொரு வாசகர் இதை மாய எதார்த்த வகையாக பார்க்கலாமா என்றார். இதை மாய எதார்த்தமாகவும் பார்க்கமுடியாது. கோகோல் தன் புத்தகத்தை எரிப்பது, படைப்பாளி தன் படைப்புகளை தானே அளிப்பது என்று ஒரு வாசகர் கூறினார். கிருஷ்ணன், கோகோலுக்கும் தன் மனைவிக்கும் இடையேயான பிரச்சனையை விவகாரத்துக்கான சிக்கலாக எடுத்துக்கொள்ளலாம் என்றார். ஜெ, இக்கதை கணவன் மனைவிக்கு இடையேயான உளச்சிக்கல் மட்டுமே.. கோகோலின் பெயரை பயன்படுத்தியது ஒரு கவன ஈர்ப்பு மட்டுமே. இதை கோகோலின் பெயர் இல்லாமலும் எழுதியிருக்கலாம். இக்கதையுடன் ஒப்பிடும் பொது சாருவாகனின் யானை சிறுகதை சிறந்த ஒன்று. பொருட்கள் அல்லது குறியீடுகளுக்கான அர்த்தம் ஆசிரியரால் கொடுக்கபடுவது. எதை வேண்டுமானாலும் குறியீடாக பயன்படுத்த முடியும். மாமலரில் தேவயானியின் புலிகள் எதற்கு குறியீடாக வருகிறது என்பதை என்னால்(ஜெ) குறிப்பாக சொல்லிவிடமுடியாது என்றார். ஒரு வாசர் அதை தேவயானியின் அகமாக வைத்துக்கொள்ளலாமா என்றார். ஜெ, அதையும் definite ஆகா சொல்லிவிடமுடியாது என்றார்.
சிறுகதை அமர்வு – சுஷில்
- கதை: ஜென்ம தினம் – பசீர் இதில் ஆசிரியர் பசியுடன் இருந்தாலும் அதற்காக அலட்டிக்கொள்வதில்லை. இக்கதையுடன் தொடர்புபடுத்தக்கூடிய கதைகளை வைத்து விவாதம் நடந்தது. அவை ஒருநாள் கழிந்தது – புதுமை பித்தன் இரு நண்பர்கள் – அமி Hunger – knut hamsun. இதை க.ந.சு தமிழில் பசி என்று மொழிபெயர்த்துள்ளார். குழந்தைக்கு ஜுரம் – தி.ஜா
- கதை: துக்கம் – Anton chekhov
சிறுகதையின் தொடக்ககால Master களில் ஒருவர் chekhov. தான் இருந்தும் அந்த இடத்தில் தன் இருப்பை மறைத்துக்கொள்ளும் அல்லது மற்றவர்களால் கவனிக்கபடாத மனிதர்கள் invisible மனிதர்கள். Hotel porter, service man, driver கள் Invisible மனிதர்கள். மனிதனின் Invisibility யை இக்கதை காண்பிக்கிறது.
காவியங்களில் கதாபாத்திரங்களின் மொழி குறித்து ஜெ கூறியது:
காவியத்தின் தன்மைகளுல் ஒன்று, அதில் வரும் அணைத்து கதாபாத்திரங்களும் ஒரே மொழியில் தான் பேசும். இது காவிய சுவை குறைய கூடாது என்பதற்க்காக. ஆனால் காவியத்தில் வாய் திறப்பவன் அதற்கு தகுதியானவன் மட்டுமே. விதுரருக்கும் பீஷமருக்கும் ஓரே மொழிதான். ஆனால் கதாபாத்திரங்களில் வேறுபாடு கொண்டிருக்கும்.
இரண்டாம் நாள் முதல் அமர்வு: கவிதை – வேணுவெட்ராயன்
வேணு, “வெளியில் உள்ள புற பிரபஞ்சம் முடிவின்மையை கொண்டுள்ளதை போலவே நமது அகத்திலும் முடிவின்மையை கொண்ட பிரபஞ்சம் உள்ளது. அது முடிவற்ற சிந்தனைகள், கற்பனைகளால் நிரம்பியுள்ளது. கவிஞனின் ஆழ்மனமான அங்கு துளிர்விட்டும் ஒரு சிந்தனை மேல் மனதில் புறத்தில் சொற்களாக ஆகின்றன. அகப்பிரபஞ்சம் புறப்பிரபஞ்சம் ஆகியவை ஒன்று மற்றொன்றின் ஆடிப்பாவைகள். ஆடியில் நின்று நாம் நம் ஆடிப்பாவையை பார்க்கும்பொழுது நமக்கும், நம் ஆடிப்பாவைக்கும் இடையேயுள்ள கண்ணாடி பரப்பு கவிதை” என்றார்.
இதை தொடர்ந்து ஜெ வேணு கூறியதை விளக்கி கூறினார். Art of creation (Arthur Koestler) என்ற நூலில் வேணு கூறியது உள்ளது. கவிதையை பற்றி அரவிந்தரும் இவ்வாறே கூறியுள்ளார். இந்திய மரபு மனதை ஏழு நிலைகளாக பிரித்துள்ளது. அதில் சிந்தனை வைகரி நிலையில் நிகழும். மத்திமம் நிலையில் அவை சொற்களாக வெளிப்படுகின்றன. கவிதை எழுத்தாளனுக்கும், வாசகனுக்கும் இடையேயுள்ள ஊடகம் போல். கூர்ந்த வாசகன் கவிதை வழியாக அக்கவிஞன் தன் அகத்தில் கண்டதை அடைகிறான். உதாரணமாக, குழந்தை ஒரு சிறிய டம்ளரை பெரிய மலையாக மாற்றிவிடும். நமக்கு அந்த டம்ளர் மலையாக தெரிய வேண்டுமென்றால், நாம் அந்த குழந்தையின் மனநிலையை அடையவேண்டும். டைனோசர்கள் மிக பெரிய உயிரினம். ஒரு கொசு ஒரு டைனோசரின் ரத்தத்தை உறிஞ்சி, சென்று மரத்தின் மீது அமரும்போது மரத்திலிருந்து ஒழுகும் பிசின் அதன் மீது வழிந்து உறைந்து மண்ணில் புதைந்து விடுகிறது. பல ஆண்டுகள் கழித்து அது ஒரு கல்லாக கிடைக்கிறது. அதில் துளையிட்டு, அந்த கொசுவிலிருக்கும் டைனோசரின் ரத்தத்தை எடுத்து, அதிலிருந்து டைனோசரின் DNA எடுக்கப்படுகிறது. அதை ஒரு கருவாக்கி, தவளையின் முட்டைக்குள் செலுத்தி அதிலிருந்து டைனோசரை இக்காலத்திற்க்கு கொண்டுவர முடியும். கவிதை குழந்தை விளையாடும் டம்ளரும், படிமமான கொசுவும் போல.
வேணு குறுகிய நேர வீடியோ ஒன்றை காண்பித்தார். அதில் காட்சி காட்டிலிருந்து துவங்கி, ஒரு மரத்திலிருந்து வரும் பிசின் அந்த மரத்தின் இலைகள் மீது வடிவதை காட்டும். அந்த இலை பல ஆண்டுகள் கழித்து படிமமாக கிடைக்குபோது அதிலிருந்து அந்த காட்டையே கற்பனை செய்யமுடியும்.
பின் மந்திரம் என்ற சொல்லை பற்றி விவாதம் நகர்ந்தது. இதை பற்றி ஜெ அமுதமாகும் சொல் என்ற கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளார்.
கவிதை அமர்வு– பாரி
கவிதைகளில் வரக்கூடிய சித்திரங்களை ஒரு காட்சி படத்துடன் தொடர்புபடுத்தும் போது அது மேலதிக வாசிப்பையும் வாசிப்பை எளிமையையும் படுத்துகிறது. அவ்வாறாக நான் (பாரி) 3 கவிதைகளை தேர்ந்தெடுத்துள்ளேன் என்று பாரி கூறினார்.
- பேன் புராணம் – மனுஷ்ய புத்திரன்
இக்கவிதைக்கு பாரி Among the Wild Chimpanzees என்ற ஆவணப்படத்தில் jean goudal சிம்பன்சிகளுக்கு பேன் பார்க்கும் படத்தை இணைத்திருந்தார். அவரின் வாசிப்பு விளக்கம் சுருக்கமாக,
இக்கவிதை மனிதர்கள் தொட்டு கொள்வது குடும்பத்திலும் வெளியிலும் குறைந்து வருகிறது என்ற சித்திரத்தை அளிக்கிறது. மனிதர்கள் தொட்டுகொள்வதற்கு ஏதோ ஒரு பாவனை தேவைபடுகிறது. காய்ச்சல் வந்ததா என்று பார்க்க, பேன் பார்ப்பது போல். ஷாம்பு இக்காலத்தின் குறியீடாக தொடுதலே இல்லாமல் ஒரு தலைமுறை வருகிறது என்ற வாசிப்பை முதலில் அளிக்கிறது. Among the Wild Chimpanzees ஆவண படத்தில் சிம்பன்ஸிகள் வேட்டை நேரம் போக பிற நேரங்களில் ஒன்று மற்றொன்றுக்கு பேன் பார்த்து கொண்டிருக்கும். பேன் இருக்காது. சும்மா தொட்டு கொள்வதற்காக அவை செய்யும் ஒரு பாவனை. jean goudal அவற்றை நெருங்கிய பின் பேன் பார்ப்பது போல் அவற்றை தொட்டுக்கொண்டிருப்பர். இதை பார்த்த பின் சிம்பன்ஸிகள் மற்றும் ஆதி மனிதர்களிடம் இருந்து தொடரும் ஒரு தொடர் சங்கிலி அருந்ததின் சித்திரத்தை கொடுக்கிறது.
- ஆட்டுதி அமுதே – இசை
பாரி இக்கவிதையுடன் புன்னகைக்கும் stephen hawking படத்தை இணைத்திருந்தார். அவரின் வாசிப்பு,
இக்கவிதையில் அந்த ரயில் பெட்டி செயலின்மையில் வெறுமையாக இருப்பதாக தோன்றுகிறது. குச்சி காலுடன் ஒரு குழந்தை படுத்திருந்தது. அப்பொழுது இளைஞன் ஒருவன் டங்காமாரி பாட்டை போட்டு கொண்டு நுழைகிறான். அதை கேட்டு குழந்தை தன் குச்சி காலை ஆட்டுகிறது. கவிஞர் அப்படி ஆட்டு செல்லமே என்கிறார். Stephen hawking இன் ஒரு வீடியோவில் அவர் புன்னகைபுரியும் காட்சி வரும். இவரும் அந்த சிறுவனை போல்தான். அந்த சிரிப்பு உலகை வென்ற பின் வரக்கூடிய சிரிப்பாக எனக்கு(பாரி) பட்டது.
- சிலிர்க்க சிலிர்க்க – பிரான்சிஸ் கிருபா
பாரி இக்கவிதையில் நேரடியாகவே ஒரு காட்சி சொல்லப்படுகிறது என்றார்.
ஜெ: கவிதைகளை 3 ஆகா பிரித்துக்கொள்ளலாம். 1.Micro-narration, 2.Image, 3.Metaphor. இசையின் கவிதை Micro-narration. ஒரு நிகழ்வை பற்றிய குறுஞ்சித்திரத்தை அளிக்கிறது. இதில் கடைசி வரிகள் தான் அதை கவிதையாக்குகிறது. மனுஷ்ய புத்திரனுடைய கவிதை Image. இதில் எந்த உணர்ச்சிகளும் வராது. வாசகன் தொன்மங்கள் மீதும் படிமங்கள் மீதும் கவிதையை போட்டு தனக்கான வாசிப்பை அவனே அடைய கூறுவது. ஜென் கவிதைகள் இந்த வகையின் உதாரணம். மூன்றாவது கவிதை Metaphor. இது image யை பயன்படுத்தும். இதில் உணர்ச்சிகள் நேரடியாகவே வருவதினால் வாசகனின் மேலதிக வாசிப்பிற்க்கு இடம் அளிக்காது.
sapiens புத்தகம் குறித்து சுரேஷ் பாபு:
சுரேஷ் பாபு sapiens (book by Yual Noah Harari) புத்தகத்தை பற்றியும் அதன் உள்ளடக்கத்தையும் கூறினார். வரலாற்றின் தொடக்கத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லாத மனித இனம் எப்படி உலகெயே அழிக்கவள்ள ஒன்றாக மாறியது என்பதை இந்த புத்தகம் வழியாக கூறினார். தொடக்ககாலத்தில் ஹோமோ இனத்தில் Homo sapiens, Homo erectus, Homo Neanderthals போன்ற இனங்கள் இருந்துள்ளன. பிற இனங்கள் வேறு காரணங்களால் அழிந்துவிட்டன. செப்பியங்கள் வரலாற்றில் 3 புரட்சிகளை கண்டுள்ளன என்று Harari கூறுகிறார். முதலாவது, 70,000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அறிவு புரட்சி. இரண்டாவது, 10,000 ஆண்டுகளுக்கு முன்பான விவசாய புரட்சி. மூன்றாவது, 300 வருடங்களேயான அறிவியல் புரட்சி.
பின் ஜெ இந்த வகையான புத்தகங்கள் குறித்த ஒட்டுமொத்த பார்வையை விளக்கினார். அதன் சுருக்கம்: இந்த நூல் reductionism (குறைத்து சொல்லுதல்) வகையை சார்ந்தது. மொத்த மனித வரலாற்றையும் ஒரு பார்வைவையில் சுருக்கி பார்ப்பது. தற்போது மூளை நரம்பியல் குறித்த ஆய்வுகளும் புத்தகங்களும் அதிகம் வருகின்றன. இவை மனித வரலாறையே மூளையில் உள்ள நியூரான்களின் பரிமாண வளர்ச்சியாகவே கூறும். இது மொத்த வரலாற்றின் மீதான ஒரு பார்வை மட்டுமே. இந்த வகை புத்தகங்கள் உற்சாகத்தை கொடுப்பதால் அதிகம் வாசிக்கபடுகிறது. Reductionism தில் மூன்று வகை உள்ளது. முதலாவது Popular reductionism. இந்த புத்தகம் The naked apes போன்றவை இதற்க்கு உதாரணம். இரண்டாவது Best reductionism. Richard dawkins போன்றவர்கள் இதற்கு உதாரணம்.மூன்றாவது Jared diamond போன்றவர்களுடையது.
குறுந்தொகை –
அருணாச்சலம் மகாராஜன் குறுந்தொகையில் இருந்து இரண்டு பாடல்களை பற்றி பேசினார். அவை
கணைக்கோட்டு வாளை கமஞ்சூல் மடநாகு துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம் தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது தண்பெரும் பவ்வம் அணங்குக தோழி மனையோள் மடமையிற் புலக்கும் அனையே மகிழ்நற்கியா மாயினம் எனினே.
-மாங்குடி மருதனார்.
காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.
-வெள்ளிவீதியார்
பயண நூல் – பிரசாத் – Chasing the monsoon (Alexander Frater)
இந்தியாவில் பருவமழை காலத்தில் அதை பின்தொடர்ந்து Alexander Frater செய்த பயண குறிப்பு இந்நூல். இதில் இந்தியாவில் பருவமழை ஏற்படுத்தும் பாதிப்புகளையும் ஆனாலும் மழைக்காக மக்கள் காத்திருப்பதையும் குறிப்பிடுகிறார் Alexander Frater. ஜெ, சாக்த வழிபாடு அதிகமாக இருந்த இடங்களாக கேரளம் மற்றும் வங்காளத்தை கூறுகிறார். காரணம் இந்த மழை. மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்துவதும், ஆனாலும் அனைத்திற்கும் இன்றியமையாததாகவும் மழை உள்ளது. இதைத்தான் மக்கள் சக்தியின் வடிவமாக அன்னையாகவும், காளியாகவும் வழிபட்டனர்.
Alexander Frater இந்தியாவில் பாரம்பரியமாக மழையை அளக்கும் முறை இல்லை என்று குறிப்பிடுகிறார். இதற்கு காரணம் அவர் இந்தியாவின் பாரம்பரிய மனிதர்களிடம் உரையாடவில்லை என்பதே. பல நூறு வருடங்களாக மழையை பற்றிய தகவல்களை கையாளும் வடிவம் தான் பஞ்சாங்கம். இன்றும் இது மாற்றியமைக்க பட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கென்றே தனி ஜாதி குழுக்கள் உள்ளன. முற்காலத்தில் ஒரு பகுதியை கைப்பற்ற செய்யப்படும் வழிகளில் ஒன்று அங்கு பஞ்சாங்கம் கணிக்க தெரிந்த பிராமணனரை அனுப்புவது. பஞ்சாங்கம் அதிகமும் மழையை சரியாகவே கணிக்கும். இதனால் கணிப்பவர் மக்களின் நன் மதிப்பை பெறுவார். அதை பயன்படுத்தி அவர் அங்கு தன் வழிபாட்டு முறையை புகுத்திவிடுவார். கருடனை வழிபட்டு கொண்டிருந்த இடத்தில் அதன் மீது விஷ்னுவை ஏற்றி வைப்பார். பின் அப்பகுதியை எளிதில் கைப்பற்றிவிடலாம்.
நாஞ்சில் நாடன் கம்ப ராமாயணம் சுந்தர காண்டத்திலிருந்து 47 பாடல்களை தேர்ந்தெடுத்து அவற்றை விளக்கினார். சு.சுவாமிநாதன் சிற்பக்கலை பற்றி விளக்கினார்.
மூன்றாம் நாள், சிறுகதை அமர்வு – விஷால் ராஜா.
கதை: தண்ணீர் – கந்தர்வன்
இக்கதை தண்ணீர் பஞ்சத்தை பற்றிய சித்திரம் வருவதால் பலர் தங்கள் ஊரில் உள்ள தண்ணீர் பஞ்சத்தை பற்றி விவாத்தை நிகழ்த்தினார். ஜெ இதை நிறுத்தி, இலக்கிய விவாதத்தில் ஒரு கதையின் வடிவ ஒழுங்கு மற்றும் வேறு தொடர்புடைய படைப்புகளை பற்றி மட்டுமே விவாதிக்க வேண்டும். படைப்பின் தங்களின் வாழ்கை அனுபவங்களை பற்றி பேச வேண்டியதில்லை என்றார்.
இக்கதை பற்றி ஜெ, “இக்கதையில் நிறைகுடம் என்பதை பெண்னின் கற்புடன் தொடர்புபடுத்தி கதையின் தொடக்கத்தில் குறிப்பிட்டு “நிறைகுடம், சொட்டு சிந்தாமல் கொண்டு வந்துவிட்டாள்” என்பதிலேயே முடித்திருக்கலாம். அல்லாமல் இதை எளிய மார்கசிய பார்வையில் நிறுத்தியுள்ளார்.” என்றார். இதில் பெண் மற்றும் தண்ணீரை மரபுடன் இணைக்கவில்லை. பெண் மற்றும் தண்ணீரை மரபுடன் இணைந்த கதைக்கு உதாரணமாக ராஜஸ்தானில் எழுதப்பட்ட ஒரு கதையை ஜெ குறிப்பிட்டார். கதையில் ஒரு பெண் தன்னுடைய கற்பை ஊருக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயம் வருகிறது. அதற்கு அந்த ஊரின் வழக்கப்படி பச்சை மண் குடத்தில் தண்ணீரை நிரப்பி ஊரை வளம் வந்து கோவிலில் உள்ள சாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பச்சை மண் ஆதலால் அழுத்தம் சற்று கொடுத்தாலும் குடம் குலைந்து விடும். அந்த பெண் குடம் குலையாமல் ஊரை சுற்றிவந்தது கோவிலில் சாமிக்கு அபிஷேகம் செய்து விடுகிறாள். கோவிலில் உள்ளே இருக்கும் சாமி தண்ணீர் நிரம்பியுள்ள ஒரு குடம். இதில் அந்த குடமே அவளிற்கு காப்பாக அமைந்தது என்றும் வாசிக்கலாம்.
காளிபிரசாத் ஆ.முத்துலிங்கதின் புளிக்க அப்பம் சிறுகதை பற்றி பேசினார். அதன் பதிவு http://www.jeyamohan.in/98118#.WQ3waPl97IU
பேராசிரியர் சுவாமிநாதன் இந்தியச் சிற்பவியல் பற்றி மூன்று வகுப்புகளை நடத்தினார்