முரகாமி, சராசரி வாசிப்பு

mura

ஜெ,

ஆச்சரியமாக இருக்கிறது. எதன் அடிப்படையில் தீவிர இலக்கிய வாசகர்களும் முரகாமியை கொண்டாடுகிறார்கள். எவ்வித அரசியல் பார்வையுமின்றி எல்லாவற்றையும் மிக மேலோட்டமாக எழுதிச் செல்கிறார். பவ்லோ கொய்லோவின் நீட்சிதான் முரகாமி. பவ்லோ கொய்லோவை உலகமுழுவதும் படிப்பதற்கு காரணம் அவர் பயன்படுத்தும் புத்துணர்வு அளிக்கக்கூடிய சில வாக்கியங்கள். அதையேத்தான் முரகாமியும் செய்கிறார்.

ஓர் அத்தியாத்தில் மேலே கீழ என்று அங்கங்கு சில வசீகரமான சொற்டொடர்களை போட்டுவிடுகிறார். அவைகள் புத்துணர்வும் நம்பிக்கையும் அளிக்கக்கூடியதாக இருக்கும். படிப்பதற்கு சுவராசியமாகவும் லகுவாகவும் இருக்கும். அது தவிர்த்து விட்டுப்பார்த்தால் அவருடைய எழுத்தில் எதுவும் இல்லையென்று தோன்றுகிறது.

நீங்கள் இடையில் கூறியிருந்தீர்கள் முரகாமிக்கும், சல்மான் ருஸ்டிக்கும் நோபல் வழங்கப்படாதுவரை நோபல் விருதினை நம்பலாம் என்று. சல்மான் ருஸ்டியிலாவது அவருக்கென்ற ஒரு அரசியல் பார்வை இருக்கும். ஆனால் முரகாமியில் அப்படி எதுவுமில்லை.
இந்த நிலைமையில் ஒவ்வொரு வருடம் நோபல் விருது அறிவிக்கப்படும் சமயத்தில் முராகிக்கு விருது வழங்கப்படவில்லை என்று அங்கலாய்ப்புகள் வேறு.

சமீபத்தில் முரகாமியின் 1Q84  நாவலைப் படித்தேன். மூன்று பாகங்களாக 1250 பக்கங்கள் கொண்ட நாவல் அது. வெங்கயாம் மாதிரி உரிக்க உரிக்க பக்கங்கள் வந்துகொண்டேயிருக்கிறது. இறுதியில் ஒன்றுமேயில்லாமல் இருக்கிறது.

“It is not that the meaning cannot be explained. But there are certain meanings that are lost forever the moment they are explained in words.”

“Even if we could turn back, we’d probably never end up where we started.”

“Life is not like water. Things in life don’t necessarily flow over the shortest possible route.”

“As I see it, you are living with something that you keep hidden deep inside. Something heavy. I felt it from the first time I met you. You have a strong gaze, as if you have made up your mind about something. To tell you the truth, I myself carry such things around inside. Heavy things. That is how I can see it in you.”

பத்து பக்கங்களுக்கு ஒன்று என்ற வீதத்தில் இவ்விதமான புத்துணர்வூட்டும் வாக்கியங்கங்கள். படிக்கும் போது ஆஹா அடடா என்பது போல் இருக்கும். அவ்வளவுதான். நாவலில் அது மட்டும் தான் இருக்கிறது. வேறெதுவும் இல்லை. ஆனால் இந்நாவலைப் பற்றி அப்படி இப்படி என்று வியாக்கியானங்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நாவல் பல அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. தீவிரமான அரசியலைப் பேசுகிறது என்று இல்லாததும் பொல்லாததையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில்  இந்நாவலைப் பற்றி வரும் வெவ்வேறு விதமான விளக்கவுரைகள், நாம் தான் சரியாக படிக்கவில்லையோ என்று சந்தேகம் கொள்ளச்செய்துவிடுகிறது. பிறகு நிதனமாக யோசித்திப் பார்க்கும் போதுதான் புலப்படுகிறது. இந்த நாவலுக்கென்றில்லை எந்த ஒரு சாதாரணமான படைப்புக்கும் இவ்விதமான புதுப் புது அர்த்தங்கள் கொடுக்க முடியும் என்று.

இப்போது அவருடைய ‘ the wind up bird chronicle’ நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆறு நூறு பக்கங்களில் இருநூறு பக்கங்கள் வரை வந்திருக்கிறேன். அந்த இருநூறு பக்கங்களிலும் ஒன்றுமேயில்லாமல் கண்டதையும் கடியதையும் எழுதி வைத்திருக்கிறார். மூடி வைத்து விடலாம் என்றுதான் தோன்றியது. சரி கழுதை படித்ததே படித்து விட்டோம் இன்னும் நானூறு பக்கங்கள் தானே என்று தொடர்கிறேன்.

இதில் வேறு அவருடைய ‘kafka on the shore’ ‘ Norwegian wood’ போன்ற அவருடைய முக்கியமான நாவல்களைப் படித்து விட்டு அவரைப் பற்றியான ஒரு திட்டவட்டமான முடிவிற்கு வரலாமென்று இருந்தேன். ஆனால் இப்போதுள்ள நிலைமையைப் பார்த்தால் படித்த வரைக்கும் போதும் என்று தோன்றுகிறது.

அன்புடன்
ரியாஸ்

***

அன்புள்ள ரியாஸ்,

என் இரு கருத்துக்கள். அரசியல் பார்வை என்பது படைப்புக்கு ஒரு நிபந்தனை அல்ல. அரசியலற்ற பெரும்படைப்பு இருக்கலாம். உலகம் முழுக்க ஏற்கப்படும் அரசியல் என ஒன்று இருக்கவேண்டும் என்பதுமில்லை. முரகாமியின் உலகம் பெரும்பாலும் அந்தரங்க அலைக்கழிப்புகளை, காமத்தையும் அடையாளச்சிக்கலையும் சார்ந்தது.

உலக அளவில் இலக்கியப்படைப்புக்களை இரு பெரும் பிரிவுகளாகப் பகுக்கலாம். அதை படைப்புகளுக்கான வாசிப்பை அல்லது ஏற்பைக்கொண்டு நிகழ்த்தலாம்.

உலகச் சராசரி வாசிப்பு என ஒன்று உண்டு. அது பெரும்பாலும் ஐரோப்பிய –அமெரிக்க வாசிப்பே. உலகம் முழுக்க பொதுவாகத் திரண்டுவரும் ஒரு சராசரி ரசனை, சராசரி அரசியல், சராசரி அறவியல், சராசரி உலகப்பார்வை ஆகியவற்றை ஒட்டியது அந்த வாசிப்பு.

அந்த வாசிப்புக்காகவே எழுதப்படும் படைப்புகள் எப்போதும் வந்துகொண்டே இருக்கின்றன. அந்தப் பொதுப்போக்கை கூர்ந்து அவதானித்து எழுதும் எழுத்தாளர்களும் அதை அடிப்படையாக வைத்துச் படைப்பைச் செதுக்கி அமைக்கும் தேர்ந்த இலக்கியத் தொகுப்பாளர்களும் சேர்ந்து உருவாக்கும் படைப்புகள் அவை.

அவை பெரும் முதலீட்டில் வெளியிடப்படுகின்றன. பெருமளவில் ஊடகங்கள் வழியாக பிரச்சாரம்செய்யப்படுகின்றன உடனடியாக உலகம் முழுக்க வாசிக்கப்படுகின்றன. அவை வணிக எழுத்துக்கள் அல்ல, இலக்கியப்படைப்புக்களே. ஆனால் வணிகரீதியான ஆக்கங்களும்கூட. முரகாமி அத்தகையவர்.

சிலவருடங்கள் தொடர்ந்து இலக்கியம் வாசிப்பவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்படிச் சிலர் இருந்துகொண்டே இருப்பதை உணர்ந்திருப்பார்கள். நான் வாசிக்க ஆரம்பிக்கையில் அதற்கு முந்தைய காலகட்டத்தில் ஆல்பர்ட்டோ மொரோவியா அத்தகைய ஓர் அடையாளமாக இருந்ததை அறிந்து அவரை ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன். அது ஒரு தனிப்பட்டியல்.

மேலே சொன்ன சராசரிவாசிப்புடன் எவ்வகையிலாவது வேறுபடும் ஒருவனுக்கு இவ்வகை எழுத்து போதாதென்று தோன்றும். அவன் தேடுவது ஓரு தனிப்பட்ட வாழ்க்கைநோக்கை, அதற்கான அழகியலை, அது பலவகையில் உருவாகும். . ஒரு குறிப்பிட்ட பண்பாட்டு வட்டாரத்திலிருந்து எழும். ஒரு குறிப்பிட்ட அரசியல் இயக்கம் அல்லது சிந்தனைமுறையிலிருந்து எழும். அது சராசரி நோக்கிப் பேசாது. அது அந்தச் சராசரியை பொருட்படுத்தாது.

முரகாமி ஏற்கனவே ஐரோப்பாவும் அமெரிக்காவும் உருவாக்கியிருக்கும் வாசகர்களுக்காக எழுதுபவர். யசுநாரி கவபத்தா தனக்கான வாசகர்களை தானே உருவாக்கிக்கொண்டவர். கவபத்தாவிடம் இருக்கும் ஜப்பானிய தனித்தன்மை முரகாமியிடம் இல்லை. இவ்வகை எழுத்தைத்தான் நான் நட்சத்திரவிடுதியின் சாம்பார் என்பேன். சாம்பாரேதான், ஆனால் ஐரோப்பிய நாக்குக்காக உருவாக்கப்பட்டது. ஆகவே சாம்பார் அல்ல.

இரண்டாவது வகை எழுத்தைத் தேடிச்செல்வதுதான் வாசகன் அடுத்த கட்டத்தில் செய்யவேண்டியது.தனக்கான எழுத்தை, தன்னுடன் மட்டும் பேசும் எழுத்தை. தன் ஆன்மீக, தத்துவச் சிக்கல்களை நோக்கிப் பேசும் படைப்பை. தன் அழகியலை நோக்கி வரும் படைப்பை. அதை அவன்தான் தேடிக்கண்டடையவேண்டும். அதற்கு ‘ஹைப்’ களை நம்புவதை நிறுத்தி தன் அகத்தை நம்பவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைசொல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅனாச்சாரம் -கடிதங்கள்