அன்புள்ள ஜெ
இக்கட்டான இந்த தருணத்தில் ,திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி முருகசாமி அய்யா குறித்த உங்களின் பதிவு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.முருகசாமி அய்யா மீது சுமத்தப்பட்டு குற்றசாட்டின் தன்மை காரணமாக பல நண்பர்கள் பொது வெளியில் இது குறித்து பேசுவதற்கும் பதிவு செய்வதற்கும் தயங்கி நிற்கின்ற இந்த சமயத்தில் அறத்தினை கைக்கொண்ட அந்த எளிய மனிதனுக்காக நீங்கள் எழுப்பியுள்ள குரல் உன்னதமானது .
இந்த பள்ளியில் தற்போது பயின்று கொண்டு இருக்கும் பிள்ளைகளின் பெற்றோர் அடைந்து இருக்கும் மனக்கலக்கம் வார்த்தையில் சொல்ல முடியாதது.கடந்த 20 வருடத்தில் எத்தனையோ பிள்ளைகள் இந்த பள்ளியில் இருந்து பயின்று இன்று நல்ல நிலைமையில் நிற்கிறார்கள் .இந்த பள்ளிக்கு வந்து சென்றுள்ள ஒவ்வொருவருக்கும் இதன் நிதர்சனமும் இது இயங்கும் விதமும் தெரியும்.
மொழி அறியாத இந்த பிள்ளைகளின் சப்தத்தின் வழியே உங்களுக்கு நன்றியினை சமர்ப்பிக்கின்றோம்.உண்மையின் மேல் படர்ந்து இருக்கும் அந்த கரிய இருள் விலக வேண்டி பிரார்த்திக்கின்றோம் .
ஸ்டாலின் பி
***
அன்புள்ள ஸ்டாலின்
இத்தருணத்தில் செய்யவேண்டியது அங்கே பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு நம்பிக்கையை ஊட்டுவதே. மாணவர்கள் இருக்கும்வரை ஒன்றும் நிகழாது. தற்காலிகமான இந்த இருட்டு விரைவிலேயே மறக்கப்பட்டுவிடும். செயல்களே நிலைநிற்கும்.
திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி ஒரு பொதுச்சொத்து. முருகசாமி அவர்கள் அதன் காவலர். அது பாதுகாக்கப்படவேண்டும். வட்டமிடுபவர்களின் கைகளுக்குச் சென்றுவிடக்கூடாது. அப்படி பல நிறுவனங்கள் முற்றாக கையடக்கப்பட்டு சூறையாடப்படும் கதைகளை கேட்டுவருகிறேன்
ஜெ
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இன்று காலையில் உங்கள் வலைதளத்தில் வந்த “ஒரு குற்றச்சாட்டு” செய்தியைப் படித்தவுடன் அதிர்ந்து போனேன், சொத்திற்காக இப்படியும் கூடவா செயல்படுவார்கள்?
உங்களின் குறள் உரைகளைக் கேட்டப்பின் கூடியவரையில் வாழ்வியல் சூழலில் குறளைப் பொருத்திப் பார்த்து வருகின்றேன்.
இந்த நிகழ்வினையும் இதே போல் தன்னலம் கருதாது பிறருக்கு ஒப்புரவைச் செய்பவர்களுக்கு வள்ளுவர் காலத்திலும் கேடு நிகழந்திருக்க வேண்டும்.
அதனால்தான்
நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:219)
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து
(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:220)
இந்த இரண்டு குறளையும் எழுதி வைத்தார் போலும் ஆனாலும் 220 குறள் படி கேடு சூழ்நதாலும் கடைசியில் விளையும் என்றே நான் நம்புகின்றேன்
அன்புடன்
எஸ். பிரசாத்
***
அன்புள்ள பிரசாத்,
நான் அறிந்தசெய்திகளைச் சொன்னால் நீங்கள் நம் சமூகத்தின் அறம் பற்றிய அடிப்படை நம்பிக்கையையே இழந்துவிடுவீர்கள். பல நிகழ்ச்சிகள்.
நம் சூழலில் அறச்செயல்பாடுகளுக்கு முதன்மை எதிரி குடும்பமும் சுற்றமும்தான். ஒருவர் அறத்திற்காக பணம் செலவிடுகிறார் என்றால் அவருடைய உறவினர்கள் அது தங்களுக்கு உரிமையான பணம், அநியாயமாகச் செலவிடப்படுகிறது என்றே நினைக்கிறார்கள். அது ஓர் அறக்கட்டளையாக ஆகும் என்றால் ‘கண்டவன் கொண்டுசெல்கிறானே’ என்று கதறுகிறார்கள்.
சாமானிய மக்களுக்கு அறச்செயல் என ஒன்று உண்டு என்பதே புத்தியில் உறைப்பதில்லை. ஒருவர் அறச்செயல் செய்யக்கூடும் என்பதையே புரிந்துகொள்ளமுடிவதில்லை. அது ஒருவகை ஊதாரித்தனம் என்றே தோன்றுகிறது. ஒருவர் தன் கடைசிச்சொட்டு குருதி வரை செலவழித்து பணம் ஈட்டி தன் வாரிசுகளுக்கு வைத்துவிட்டுச்செல்லவேண்டும். வேறு அத்தனை செயல்பாடுகளும் ஊதாரித்தனம்தான் அவர்களுக்கு.
சமீபத்தில் ஓர் அறக்கட்டளை சம்பந்தமான பூசலில் அதை நடத்துபவர்களுக்கு தூரத்து உறவான ஒரு பெண், வசதியானவர், நெஞ்சிலறைந்து அழுதபடி “என் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல படிப்பு இல்லை. அதுகளுக்கு நாளைக்கு ஒரு வீடு இல்லை. இந்த கேடுகெட்ட கழுதைகளுக்காக அந்தப்பணத்தை செலவிட்டா தெய்வம் கேட்காதா?” என்றார். அந்த அறக்கட்டளை ஊனமுற்ற அனாதைக் குழந்தைகளுக்கானது முழுக்கமுழுக்க பொதுநன்கொடைகளால் உருவானது.
அந்தப்பெண்ணின் அந்தக் கண்ணீர் உண்மையானது என்பதுதான் எனக்கு படபடப்பை அளித்தது. தன் பிள்ளைகளுக்காகச் சொத்து சேர்ப்பதென்றால் என்ன பாவத்தை வேண்டுமானாலும் செய்யலாம், பொதுச்சொத்தை கைப்பற்றினால் அது திருட்டு அல்ல சாமர்த்தியம் என்னும் இரு மனநிலைகளும் நம் சாமானியர்களை ஆள்கின்றன. ஆகவே அத்தனை அறச்செயல்பாடுகளையும் நம் சூழலின் சிறுமையும் சுயநலமும் வந்து மோதிக்கொண்டே இருக்கின்றன.
எந்த ஒரு அறச்செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பவரைப்பற்றியும் அவருடைய உறவினர்களிடம் சென்று கேளுங்கள். மிகச்சலிப்பாக ‘நமக்கு ஒண்ணும் செய்றதில்லீங்க. கண்டகண்ட ஆளுங்களுக்கு குடுக்கிறார்” என்பார்கள். ஆதாரமே இல்லாமல் ஊழல், ஒழுக்கமீறல் சார்ந்த அவதூறுகளைச் சொல்வார்கள். “நெறைய பணம் வருதுங்க. எல்லாம் திருடித் திங்கிறாருங்க” என்பார்கள். ஒரு விதிவிலக்கைக்கூட நான் இன்றுவரை கண்டதில்லை.
உண்மையில் நம் சமூகத்திலுள்ள குடும்பப்பாசம், பிள்ளைப்பாசம் ஆகியவற்றைப்போல ஆன்மீகமாக நம்மை கறைபடியச்செய்யும் வேறொன்றில்லை. அடிப்படை அறம் அற்ற, நேர்மையற்ற மக்களாக நம்மை நம் குடும்பவெறி மாற்றிக்கொண்டிருக்கிறது. எதையும் செய்யும் அது
ஜெ
***