ஒரு குற்றச்சாட்டு

muruka

 

சென்ற டிசம்பர் 21 2011 அன்று நான் திருப்பூர் காதுகேளாதோர் பள்ளிக்கு சென்றிருந்தேன். என்னுடைய யானைடாக்டர் கதையை அங்குள்ள காதுகேளாத மாணவர்கள் ஓவியங்களாக வரைந்திருந்தார்கள். அந்தப்பள்ளி வளாகம் அன்று எனக்கு மிகப்பெரிய மன எழுச்சியை அளிப்பதாக இருந்தது. அதைப்பற்றி ஒரு நீண்ட குறிப்பை அப்போது எழுதியிருந்தேன்.

இருநாட்களுக்கு முன் அன்று அங்கே சேவையாற்றிக்கொண்டிருந்த லெனின் எனக்கு இக்கடிதத்தை எழுதியிருந்தார்

*

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

எப்படி துவங்குவது என்று தெரியவில்லை

திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியின் தாளாளர் முருகசாமி அய்யா பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் .அவருடன் உடந்தையாக இருந்ததாக பள்ளி ஆசிரியர் சித்ரா மற்றும் பள்ளியை சேர்ந்த 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை தொலைக்காட்சி செய்திகளிலும் இது ஒளிபரப்பப்பட்டு விட்டது.

திருப்பூர் காது கேளாதோர் பள்ளி மற்றும் முருகசாமி ஐயாவினை பற்றி உங்களுக்கு நாங்கள் அறிமுகப்படுத்த தேவையில்லை.(http://www.jeyamohan.in/23550#.WRLP88bhXIV) சொத்து தகராறு காரணமாக திட்டமிடப்பட்டு இந்த குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது .அறத்தினை கைக்கொண்டு வாழ்பவர்களுக்கு ஏற்படும் நெருக்கடி தான் இது என்ற போதிலும் உச்சகட்டமாய் அந்த ஒட்டு மொத்த பள்ளியையும் இல்லாமல் செய்வதற்கு மேற்கொண்ட முயற்சியாக இது உள்ளது.

அறம் தோற்கும் என்ற எண்ணம் மேலெழும் போது எல்லாம்,குழந்தைகளிடமும் விருட்சங்களிடமும் சொல்லுங்கள் எனற வாசகங்கத்தின் வழியே தான் இந்த செயலினை முன்னெடுக்கிறோம்.

முருகசாமி எனும் அந்த மனிதர் கடந்து வந்த பாதையினை ,அந்த பள்ளியின் உருவாக்கத்திற்கான அவரின் மெனக்கெடல்கள்  எங்கள் நினைவுகளில் அலை மோதுகிறது .

திருப்பூர் முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர். தாய் காளியம்மாளும் தந்தை குழந்தைசாமியும் விவசாயக் கூலிகள். வீட்டில் மூத்த மகன் முருகசாமி. சிறு பிராயத்தில் சக குழந்தைகளோடு விளையாடும்போது முருகசாமி வாய்பேச இயலாமலும் காது கேட்கும் திறனற்றும் இருப்பதைக் கவனித்தார் அவரது தாய். அதனால், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்த்தார். அங்கு 8-ம் வகுப்புவரை சைகை மொழி படித்தார்.

அதன் பின்னர் அங்குக் காது கேளாத குழந்தைகள் படிக்க வசதி இல்லாததால் தோட்ட வேலை, விவசாயம், பின்னலாடை நிறுவனம் எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். “20 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வில் நிகழ்ந்த சம்பவம்தான் காதுகேளாதோர் பள்ளியைத் திருப்பூரில் நிறுவ முக்கியக் காரணம்” என அவர் பல முறை அவர் கூறியுள்ளார்.

திருப்பூர்  சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமத்தின் சந்தைகளுக்கும்  போய் வாய் பேசமுடியாத,காது கேட்க முடியாத பிள்ளைகளை அழைத்து வருவார்.ஒவ்வொரு மாதமும் சில பெற்றோர்கள் வந்து வாக்குவாதம் செய்து தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி தேவையில்லை என சண்டைகள் போட்டாலும் ,அத்துணை பேரையும் சமாதானம் செய்தும் அந்த குழந்தைகளின் நல்வாழ்விற்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தவர்.

அந்த பள்ளியின் ஒவ்வொரு வார இறுதி விடுமுறையிலும் பெற்றோர்கள் வந்து தங்கள் பிள்ளைகளை பார்த்து பேசி விட்டு செல்கின்ற காட்சியினை திரும்ப திரும்ப நினைக்கின்றோம்.அந்த ஆலமரத்தை அடிசாய்க்க நடக்கின்ற சதியினை எப்படி முறியடிக்க ?

என்ன செய்ய ?

அந்த பள்ளியின் ஒட்டு மொத்த பிள்ளைகள்,அறம் புத்தகத்திற்காக தங்களுக்கு அளித்த பரிசு மற்றும் பிரார்த்தனையின் வழியே உங்களை வேண்டி கேட்கின்றோம்.இணையத்திலும்,தொலைக்காட்சிகளிலும் அளவு கடந்த வெறுப்பு உமிழப்படுகின்ற இந்த நேரத்தில் அவருடன் நாம் அனைவரும் கைகோர்த்து நிற்பதும் அவருக்கு ஆதரவு அளிப்பதும் நம் கடமை .

பி லெனின்

*

நான் அறிந்தவரை முருகசாமி நேர்மையும் அர்ப்பணிப்பும் கொண்டவர். தன் குடும்ப சொத்துக்களைப் பயன்படுத்தி இந்த அமைப்பை தனிமனித உழைப்பால் உருவாக்கியவர். அவருக்கு சமீபத்தில் ஏற்பட்ட உடல்நிலைக்குறைவைத் தொடர்ந்து பலகோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சிகள் அரசியல்பின்னணி கொண்டவர்களால் செய்யப்பட்டுவந்தன.

இது குறித்து உண்மைநிலவரம் எனக்குத்தெரியவில்லை. ஆனால் அச்சொத்தை அபகரிப்பதற்கான அரசியல்சார்ந்த சதி என்ற செய்தி மிகவும் தொந்தரவுசெய்கிறது. அது உண்மை என்றால் சமகாலத்தின் பெரும் அநீதிகளில் ஒன்று

ஜெ

****

இலட்சியவாதத்தின் நிழலில்

காது கேளாதோர் பள்ளி தாளாளர் மீது பாலியல் வன்கொடுமை புகார்!

மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: பள்ளி நிறுவனர் கைது

 

 

முந்தைய கட்டுரைசில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா
அடுத்த கட்டுரைஊட்டி சந்திப்பு ஒரு முழுப்பதிவு