நுண்சொல் -கடிதங்கள்

aravi

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் சமீபத்திய கட்டுரைகளில் மிக அற்புதமானது ‘அமுதமாகும் சொல்’. “ஒரு சொல்லோ சொற்றொடரோ அதிலுள்ள அர்த்தத்தைக் கடந்து வளரும் என்றால் அதுவே மந்திரம் அல்லது ஆப்தவாக்கியம்” என்ற அந்த வரியைப் படித்த உடனே எனக்கு யோவானின் “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது”. யூதர்களின் டால்முடை (Talmud) மிக மிக நுணுக்கமாக எழுதப்பட்டது என்பார்கள். அதனாலேயே புரிந்துக் கொள்ளக் கடினமான எழுத்துகளை ‘talmudic’ என்று விளிப்பதும் உண்டு. அதேப் போல் யூத குருமார்கள் (Rabbis – குருமார் என்பது சரியான சொல்லாட்சி அல்ல ஆனால் எனக்கு சட்டென்று வேறெதுவும் தோன்றவில்லை) நுட்பங்களை விரித்துக் கூறுபவர்கள் ஆதலால் அதுவும் இன்று பொது வெளியில் யாராவது அப்படி ஒருப் பணியைச் செய்தால் ‘Rabbinical’ என்றுச் சொல்வது வழக்கமாகிவிட்டது.

நுண்சொற்கள் மதம், தொன்மம் ஆகியவற்றைத் தாண்டி இன்றும் உருவாகின்றது என்பதற்கு இன்று ‘relativity’ எனும் வார்த்தைப் படும் பாடு சாட்சி. ஐன்ஸ்டீனுக்குப் பிறகு அந்த வார்த்தை பல பரிமானங்களை அடைந்துவிட்டது. ‘பரினாம வளர்ச்சி’ எனும் வார்த்தையும் அப்படியே. ‘Force’ எனும் வார்த்தை நியூட்டனுக்கு பின்பு அர்த்தம் மாறியதாக ஜேம்ஸ் க்ளெயிக் நியூட்டன் பற்றிய வாழ்க்கை சரித்திரத்தில் குறிப்பிடுவார்.

மிகவும் ரசித்து படித்த, விவாதிக்க அதிகம் உள்ள பதிவு அது.

அரவிந்தன் கண்ணையன்

islam

அன்புள்ள ஜெ

அமுதமாகும் சொல் முக்கியமான ஒரு கட்டுரை. மிகச்சிறிய கட்டுரை என்பதனால் நீங்கள் உதாரணங்கள் ஏதுமில்லாமல் சொல்லிச்செல்கிறீர்கள். ஆனால் பல இடங்களில் வரிகள் சூத்திரங்கள் போல இருந்தன. வாசித்து இத்தனை நாட்கள் ஆகியும் நினைவில் நீடிக்கின்றன.

ஏசுவின் சொற்களில் ஆகாயத்துப்பறவைகள் விதைப்பதில்லை அறுவடை செய்வதில்லை என்பது ஒரு மந்திரம். அதை நீங்கள் ரப்பரில் எழுதியிருப்பீர்கள். பிரான்ஸிஸ் அதை ஒரு மந்திரமாகவே உனர்கிறான். கடைசியில் ஆகாயத்துப்பறவைகள் என்ற சொல்லாக அதைச் சுருக்கிக்கொள்கிறான். சுதந்திரம், வானம் என்றெல்லாம் அவனுக்கு அர்த்தமாகிறது.

எனக்கு பலகவிதை வரிகள் மந்திரங்களாக உள்ளன. எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல் [பசுவய்யா] அமைதி என்பது மரணத்தருவாயோ [ தேவதேவன்] The soul’s joy lies in doing. [ஷெல்லி] என்று நிறையவே சொல்லலாம். வைதிகமான வரிகளில் பூரணமதம் பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதஸ்யதே.

ஜெயராமன்

முந்தைய கட்டுரைஞானக்கூத்தன் கவிதை- காணொளி
அடுத்த கட்டுரைசேர்க்கைக்குற்றம்.