சில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா

jayakanthan_185_2_050408

அன்புள்ள ஜெ.,

சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்

சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை எட்டு-பத்து வருடங்களுக்கு முன்னால் படித்ததை, அதை படித்த போது உருவான சோர்வும் வெறுப்புணர்வும் வழியாகத்தான் இன்று நினைவில் கொண்டுள்ளேன். அதை அந்த காலகட்டத்தின் பெண்ணின் மனச்சித்திரமாகவே வாசித்தேன். காலமாற்றத்தில் கங்காவின் தத்தளிப்புகளும் பிழற்வுகளும் பெருமளவுக்கு காலாவதியாகிவிட்டன என்று தோன்றியது எனக்கு. இன்றைய ‘நவீன’ப்பெண்ணுக்கு இருக்கும் உளவியல் சிக்கல்கள் எதுவாக இருந்தாலும், சிறுவயதில் தான் கடந்து வந்த ஒரு பாலியல் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே தன் மொத்த ஆளுமையையும் வாழ்க்கையையும் வகுத்துக்கொள்வாளா; அந்த அனுபவத்தின் அடிப்படையில் தன்னை “வைப்பாட்டி” என்றும் “கான்க்யுபைன்” என்றும் தானே அழைத்துக்கொண்டு, அந்த வரையரைக்குள் தன்னைக் குறூக்கிக்கொள்வாளா என்பது சந்தேகமே.

இன்றைய படித்தப்பெண் அவ்வளவு அசடல்ல என்றும், சமூகத்தின் சட்டகங்களுக்குள் தன்னை குறுக்கிக்கொள்பவள் அல்ல என்றும், தனக்கு வேண்டியவற்றை, பாலியல் உட்பட, அமைதியாக, சமூகத்தின் கண்ணில் ஒரு படி கூட இறங்காமல் அடையக்கூடிய சாமர்த்தியம் உடையவளாகவே பார்க்கிறேன். இதை உணர்ந்த வாசகர்களுக்கு கங்கா ஒரு டைனாசர். அப்படி பார்க்கும் போது, கங்காவின் கதை இன்று நமக்கு ஏன் தேவை என்ற கேள்வி எழுந்தது. அந்த நாவலை கங்காவின் காலத்தின் பதிவாகவே வாசித்தேன். அதனாலேயே அதை ஒரு “மைனர்” நாவல் என்று தான் அப்போது வரையறுத்துக்கொண்டேன்.

அந்த நாவலை வாசித்து முடித்தபோது நான் உணர்ந்த சோற்வும் வெறுப்பும் கசப்பும் அளவில்லாதது. நாம் பரிதாபம் கொள்ளுவோரை ஏதோ வகையில் கொஞ்சம் குரூரமாக வெறுக்கவும் செய்கிறோம். கங்காவின் ‘இரும்புப்பெண்’ வேடத்துக்கடியில் அவள் ஒரு அய்யோப்பாவம் கேஸ். அவளுடைய அறியாமையும் மடமையும் நம்முடைய பரிதாபத்தையே கோறுகின்றது. அதையே நான் வெறுத்தேன் என்று நினைக்கிறேன். “அடியேய் கங்கா, உனக்கு முதுகுல இருக்குறது எலும்புத்தண்டா சப்பாத்தி மாவா?” என்று திட்டியபடி தான் அந்த நாவலை வாசித்து முடித்தேன். முடிவில் அந்த புத்தகத்தை அறையின் மறுபக்கம் ஓங்கி எறிந்த ஞாபகம். அவ்வளவு வெறுப்பு, கங்கா மேல், அந்த ஆசிரியர் மேல், அச்சூழல் மேல். ஒரு காலகட்டத்தின் சுழற்ச்சியில் மாட்டிக்கொண்ட பேதைப்பெண்ணின் கதை என்று அந்த நாவலை கடந்து வந்து விட்டேன்.

நேற்று உங்களுடைய கட்டுரையை படித்தபிறகு, அந்த நாவலை நான் மீண்டும் பரிசீலனை செய்யத் துவங்கினேன். இருபது வயதில் நான் அந்த நாவலை அணுகியது மிகவும் உணர்ச்சிகரமாக என்று இப்போது உணர்கிறேன். பெண் தனக்குத்தானே இழைத்துக்கொண்ட அநீதியின் சித்திரமாகவும், அதைத்தூண்டிய சமூக மன நிலையின் சித்திரமாக அதை வாசித்தேனே தவிர, வாழ்க்கையின் சாளரத்தின் வழி அதை அணுகவில்லை. மேலும் சொல்லவேண்டும் என்றால், அது தூண்டிய கசப்புணர்வும் வெறுப்புணர்வும் உணர்ச்சிகளாக உட்கொண்டேனே தவிர, அந்த உணர்ச்சித்தூண்டுதலுக்கு பின்னால் இருக்கும் உளவியலை – அது கதை மாந்தரின் உளவியலோ, சமூகத்தின் உளவிலயலோ, ஏன், என்னுடைய உளவியலோ – அதை பற்றி சிந்திக்கவில்லை. இன்று சி.நே.சி.ம. நாவலை பரிசீலிக்கும்போது, அந்த நாவலின் கட்டமைப்பும் கதைமாந்தரும் வாசகர் மனதில் உருவாக்கும் கசப்புணர்வும் வெறுப்புணர்வும் இரக்கமும், அதன் உளவியலும், இந்த நாவலை அணுகி வாசிப்பதில் முக்கியமான அம்சங்களாகப் படுகின்றன. உணர்வு -ரஸம் – வழியாக இந்த நாவலை அணுகினால் ஒரு திறப்பு கிடைக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு படி மேலே சென்றால், கங்காவின் சுயபரிதாப உணர்வும் கழிவிறக்கமும் வாசகர் வெறுக்கக்காரணமே, நாம் நமக்குள்ளேயும் அதே இயலாமையை, பலபவீனத்தை, அமைதியின்மையை, வெறுமையை ஏதோ வகையில் உணர்வதால் கூட இருக்கலாம்.

சி.நே.சி.ம. நாவலை, முதன்மையாக அடையாளத்தை பற்றிய நாவலாக வாசிக்கலாம். கங்காவின் அடையாளப்பிரச்சனை இறுத்தலியல் சிக்கல் எல்லாம் இல்லை. தன் சமூகத்தில் அவளுக்கு இடம் இல்லை என்பது தான் அவள் சிக்கல் என்று சொல்லலாம்: இறுத்தலே அவளுக்குப் பிரச்சனை. அசோகவனத்து சீதைக்கு அயோத்தியில் என்ன இடம் என்ற கேள்வியிலிருந்து இந்த அடையாளச்சிக்கல் தொடங்குவதாக சொல்லமுடியும்.

தன்னுடைய அடையாளத்தை தான் கண்டுகொள்ளும் வயதில் உள்ள ஒரு பெண், தனக்கு நிகழும் ஒரு சம்பவத்தினால் தனது மொத்த அடையாளமும் அதைச்சார்த்தே உருவாகக்கூடியவளாகிறாள். அந்த பாலியல் அனுபவத்தை அவளே விரும்பி தேர்ந்தெடுத்தாள் என்று நாம் கதையை வாசித்தால், அது ஒரு மனித உயிர் தன் அடையாளத்தை கண்டுகொண்ட முதற்க்குறல் தானே? தன் குரலை ஒங்கியதாலேயே, தன் பாலியல் அடையாளத்தை நிறுவியதாலேயே, தண்டிக்கப்படுகிறாள் கங்கா.

jayakanthan_2161849f

அந்த பாலியல் சம்பவத்தின் அடிப்படையில் கங்காவின் மொத்த அடையாளமும் அமைய வேண்டும் என்று அவளுடைய சமூகம் எதிர்ப்பார்க்கிறது. தூண்டுகிறது. கங்காவும், தன்னை களங்கமுற்றவளாக, வாழ்க்கையின் மகிழ்ச்சிகளுக்கு தகிதியற்றவளாக தன் மனதில் வார்த்துக்கொள்கிறாள். அதை தீவிரமாக நம்புகிறாள். இது துயரம் – மாபெரும் மானுடத்துயரம் அல்ல – சற்று வெட்கத்தக்க, கீழ்மையான, யாரிடமும் பகிரமுடியாத, பகிர்ந்தாலும் புரியவைக்கமுடியாத, தன்னைத்தானே வெறுக்கும், தன்னை அசிங்கம் என்று நம்பும், கழிப்பறை ஓரத்தில் கிடக்கும் மயிர்ச்சுறுள் போன்ற துயரம்.

ஆம், அந்த சூயிங்கம் இந்தத் துயரத்துக்கு பொருத்தமான குறியீடு. அசைபோட்டு அசைபோட்டு ரஸமற்ற ஜடமாக தன்னைத்தானே ஆக்கிக்கொண்டதாக தன்னை அவள் ஏமாற்றிக்கொள்கிறாள். இவள் வாழ்க்கை வீணாய்ப்போனது அந்த சூயிங்கம் அவள் வாயில் வந்ததனால் அல்ல. அதை வாழ்க்கை முழுவதும் அவள் சப்பிக்கொண்டிருந்ததனால். இது உண்மையிலேயே ஒரு tragedy தான். இதற்கு சமூகக்காரணிகளைச் சொல்லலாம், நாவலும் பேசுகிறது – ஆனால் இதன் மைய்யமாக, ஒரு பெண் தன் அடையாளத்தை தானே அழித்துக்கொள்ளும் கதை தான் இது. இது ஒரு வகையான ஆன்மத்தற்கொலை தான்.

இவ்வகையில் கங்கா சீதை முதலிய புராணப்பெண்களிலிருந்து மாறுபடுவதாக எண்ணுகிறேன். சீதையும்  சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவள். ஆனால் எந்த நேரத்திலும் தன் சுயத்தை அழித்துக்கொண்டு அதை ஒரு ஆண் நிறப்ப வேண்டி நின்றவள் அல்ல அவள். மாறாக, கங்கா, தன்னை நிராகரித்த சமூகத்திடமே தன் அடையாளத்தை தரக்கோரி வேண்டி நிற்கிறாள். அது கிடைக்கவில்லை என்றதும் உடைந்து நொறுங்குகிறாள்.

கங்கா தனது ஆளுமையை, அடையாளத்தை பாலியல் தொடர்பானதாக ஆக்கிக்கொண்டதை (அல்லது அப்படி ஆக்கிக்கொள்ள வைக்கப்பட்டதை) நாவலில் வாசிக்கமுடிகிறது. பாலியல் ரீதியாக களங்கப்பட்டவளாக, அதன் விளைவாகவே திருமணத்தின் வழி கிடைக்கக்கூடிய ‘நேர்மையான’ பாலியல் மறுக்கப்பட்டவளாக, அதே காரணத்தால் வெங்கு மாமா போன்றவர்கள் சதாகாலமும் அவளிடம் பாலியலை எதிர்பார்க்க, “உனக்கு சாமர்த்தியம் இருந்தால் உன்னைக் கெடுத்து நிராகதித்தவனையே அடைந்து காட்டுப்பார்ப்போம்” போன்ற பாலியல் சவால்களை எதிர்கொள்பவளாக, அனைத்துக்கும் மேலாக, சாதாரண பாலியல்புகள் கொண்ட சாதாரண பெண்ணாக இருந்தும் அதை ஒவ்வொரு நொடியும் நிராகரிக்க வேண்டிய இடத்தில் இருப்பவளாக, தன்னுடைய மொத்த ஆளுமையையும் கங்கா பாலியலின் வாயிலாகவே கட்டியமைத்துக்கொள்கிறாள். சமூகம் தன்னை அப்படிப்பார்ப்பதைத்தாண்டி அவளே தன்னை அவ்வாறு காணத்தொடங்குகிறாள். அந்தப்பார்வையின் மூலம் தான் அவள் மொத்தக்கதையையும் நாம் தெரிந்துகொள்கிறோம். இதுவே ஒரு திரித்த பார்வை.

பிரபுவை சந்தித்த போது கூட, அவள் தன்னை அவனுடன் உறவுகொண்டவள், அவனுடைய “கான்க்யுபை”னாக ஆக வேண்டியவள் என்று தான் தன்னை நினைத்துக்கொள்கிறாள். எந்த தொழில்முறை பரத்தையருக்கும் தன்னைப்பற்றி இப்படியொரு திரித்த எண்ணம் உதிக்குமா என்று தெரியவில்லை. இது பாலியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட நடுத்தர வர்க்கத்து குடும்பப்பெண்ணின் சிக்கல். கங்காவின் ஒரு கேள்வி தன்னைச்சீண்ட, உடனே அடுத்தனாளே மண்டையை மழித்து கைம்பெண்கோலம் பூணும் கங்காவின் தாயுலேயும் இதே மனநிலையைத்தான் காண்கிறேன்.

கங்கா தனக்கு இரண்டு இடங்களில் வேறுவகை அடையாளத்தை ஒரு கனவுபோல பொருத்திப்பார்க்கிறாள். தனக்கும் பொருத்தமான வயதில் திருமணம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? வசவசன்னு பிள்ளைய பெத்துப்போட்டுருப்பேன், என்கிறாள். பிரபுவின் குடும்பத்தை சந்திக்கும்போது, அவனுடைய பிள்ளைகளிடம் தாய்மைபாவம் கொள்கிறாள் – ஆனால் அதுவும் அவளுக்கும் பிரபுவுக்குமான உறவின் உரிமையில். இரண்டுமே ஒரு வித கானல் நீர். முழுமையாக இரண்டு நிலைகளிலும் அவளால் தன்னை பொருத்திப்பார்க்க முடியவில்லை. எந்த நிலையிலேயும் – படித்து, வேலைக்குச்செல்லும் பெண்ணாகக்கூட – கங்கா தனக்கென்று ஒரு ஆளுமை இருப்பதாகவோ அடையாளம் இருப்பதாகவோ உணரவில்லை. அப்படி ஒரு அடையாளம் தனக்கு மறுக்கப்பட்டதாகவோ, தனக்கு அது இல்லை என்றோ, அவள் வருத்தம் கொள்வதாகத் தெரியவில்லை. பாலசந்தர் படத்து நாயகிகளைப்போல, ஆண், குடும்பம் சார்த்ந்த அடையாளத்தையே அவள் மதிக்கிறாள், கோறுகிறாள். அது அந்த காலகட்டத்தின் மன நிலையாக இருக்கலாம். பெண் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை – அன்றைக்கும் இன்றைக்கும் – பெண்ணின் சுய அடையாளத்தையும் சுய எழுச்சியையும் மேம்படுத்தியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. கங்காவின் சிக்கல்களின், வீழ்ச்சியின் அடிநாதம் இதுவே.

வெங்கு மாமா கங்காவிடம், “சாமர்த்தியம் இருந்தா அவன போயி பிடிச்சுக்கோ” என்று சொல்வதை கங்கா ஒரு சவாலாக ஏற்றுக்கொள்கிறாள். அவள் அச்செயலை வெற்றியாக, மீட்சியாகப் பார்க்கிறாள். “நான் கெட்டுப்போனவளாக இருக்கலாம், ஆனால் என்னை கெடுத்தவனுக்கு மட்டுமே உண்மையாக இருக்கும் பத்தினிப்பெண் நான்,” என்ற அறைகூவல் அது. (இன்று இவ்வரிகளை எழுதவே காமெடியா இருக்கு. ஆனால் கங்காவின் “பத்த்னித்தனத்தை” பறைசாற்றிப் போனத்தலைமுறை வாசகியர் சொல்லிக்கேட்டிருக்கிறேன். புதிய பாதை முதலிய திரைக்’காவிய’ங்களில் இதன் வீச்சைப்பார்க்கலாம்).

தன் வாழ்க்கைக்கு ஒரு ஆண்துணையும், தன்னை அடையாளப்படுத்த ஒரு ஆணும் தனக்குக் கிடைத்தால் வெற்றி என்று பிரபுவைத் தேடுகிறாள் கங்கா, சாகுந்தலை துஸ்யந்தனைத் தேடியது போல. துஸ்யந்தனின் “மறதி”யுடன் போறாடிய சாகுந்தலை வெற்றிபெற்றவள் என்று கூறிய அதே மரபு கங்காவை உந்துகிறது.

கங்கா பிரபுவை சந்திக்கும்போது தான் நாம் கதையின் கோணத்தை உணரத்தொடங்குகிறோம். கங்கா ஒரு unreliable narrator என்ற எண்ணம் உருவாகத்தொடங்குகிறது. பிரபுவின் வாழ்க்கைச்சூழலும், அவன் ஆளுமையும், அவன் கங்காவை எதிர்கொள்ளும் முறையும் நமக்கு தெரிய வருகிறது. அந்த மழை இரவில் அந்த காருக்குள் நடந்தது என்ன? இந்த நாவலுக்குள் பிரபுவின் பிரதி ஒன்றிருக்கிறது என்று நாம் அறியும் கணம் முக்கியமானதாக எனக்குப்படுகிறது.

குந்தி சூரியனை அழைத்ததில் அறியாமை என்ன பகுதி? ஆசை என்ன பகுதி? அகலிகை இந்திரனுடன் கூடியதில் அறியாமை என்ன பகுதி? ஆசை என்ன பகுதி? கங்காவின் அறியாமை மட்டும் அவளை அந்தச் சூழ்னிலையில் தள்ளவில்லை என்று பிரபுவின் தரப்பு உணர்த்துகிறது. கங்காவும் ஒரு வகையில் இதை உணர்ந்திருக்கிறாள். அதே நேரத்தில் தன் ஆசையை ஒப்புக்கொண்டு வலிய அவள் அவன் வழிக்குப் போகவில்லை என்றும் உணரமுடிகிறது. தன்னளவில் தன்னை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தத்தளிக்கிறாள் கங்கா. பிரபு அழைத்ததும் மறுக்கவில்லை. அதே நேரத்தில் தன் சுயத்தை, விருப்பத்தை எதிர்கொள்ள அஞ்சியவளாக, அதை அணுகத்தெரியாமல் வீட்டுக்கு அழுதுகொண்டே ஓடுகிறாள். தன்னை கலங்கப்பட்டவளாக மற்றவர்கள் சொல்வதற்கு முன்னால் அவள் தான் முதலில் நம்பத்தொடங்குகிறாள். இது அவள் வாழ்ந்த காலத்தின் உளவியல் என்று புரிந்துகொள்ளலாம்.

பிரபுவின் பிரதி என்ன? பிரபுவுக்கு அவள் தான் அழைத்ததும் வந்த ஒரு பெண். மறுத்து குரல் உயர்த்தவில்லை. சாலையில் நிற்கும் பெண்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு சம்மதம் கோராமல் அவர்களுடன் உறவு கொள்வது சராசரி ஆண் செய்யும் செயலே அல்ல. தனிப்பட்டக் காழ்ப்புகளால், விறக்திகளால், தோல்வியடைந்து புழுவாய் உழன்ற ஒரு ஆளுமை பிரபு என்று நம்மால் ஊகிக்க முடிகிறது. சமூகத்தில் அவனுக்கிருக்கும் அந்தஸ்தாலும் பலத்தாலும் தான், விளைவுகளை பற்றி யோசிக்காமல் இப்படி ஒரு செயலை செய்ய முடிந்தது அவனுக்கு. தன்னைப்போல அவளுக்கும் அது ஒரு நாள் நிகழ்வு என்றும், இப்போது யாரையாவது மணம் செய்து கொண்டு நிறைவுடன் வாழ்ந்து கொண்டிருப்பாள் என்றும் நினைக்கிறான். தன் செயலின் விளைவுகளை உணர்ந்து மன்னிப்புக் கோரினாலும், அவனுக்கு அவளது இரட்டை மன நிளையோ, அவள் சந்தித்த நெருக்கடிகளோ, அதனால் சிதையுண்ட அவளது சுயமோ, அவள் தற்போது அவனிடம் எதிர்பார்ப்பதோ, எதையுமே அவனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அது அவன் மண்டைக்குள் ஏரியதாகவே தெரியவில்லை. அவனை சுயநலவாதி என்றும் சொல்லிவிடமுடியவில்லை – தன்னை பற்றி மட்டுமே யோசிக்கும் ஒரு வகை வயதான குழந்தையைப்போல இருக்கிறான். கங்காவுக்கு நிகழ்ந்ததற்கு உண்மையாகவே வருத்தப்படுகிறான். வாய்வார்த்தையில் பொருப்பெடுத்துக்கொள்கிறான். ஆனால் அவன் அவளுடன் எல்லாவற்றையும் மறந்து நட்பு பாராட்ட விரும்புகிறான். தான் தொலைத்த இளமையின் நினைவாக, தன் வீட்டுச்சூழலுக்கு ஆறுதலாக அவளுடைய உணர்ச்சிகளையும் நட்பையும் குழந்தையைப்போல் கோறுகிறான். அவளுடைய எதிர்பார்ப்புகளே வேறு.

 

சுசித்ரா

இவ்வளவுதான்: கங்காவின் அடையாளத்தை அவள் அமைத்துக்கொள்ள பிரபு அவளுக்குத் தேவைப்படுகிறான். பிரபுவின் அடையாளத்தில் கங்காவுக்கு பங்கே இல்லை.

 பிரபுவுக்கு அவளுடைய எதிர்பார்ப்பு புரியும் போது அவன் விலகிவிடுகிறான். இதன் உளவியலை இப்படிப் புரிந்துகொள்ளலாம். தன் மொத்த அடையாளத்தையும் அவன் செய்த ஒரு நயவஞ்சகச் செயலின் அடிப்படையில் அமைத்துக்கொண்ட ஒருத்தியை எப்படி ஏற்றுக்கொள்வது? ஒவ்வொரு நொடியும் தன்னுடைய கீழ்மையும் குற்றவுணர்வையும் நினைவு படுத்தியபடியே இருக்கும் அல்லவா அவளுடைய இருப்பு?

கங்கா எதிர்பார்ப்பது என்ன? உலகத்தின் முகத்தில் கரியை பூசுதல். அதற்குப் பிரபு. அவன்மூலம் தனக்குக்கிடைக்கும் அடையாளம். தன்னுடைய கதையை சீரான, உலகத்தின் போக்கு ஒற்றூக்கொள்ளும்படியான ஒன்றாக, அப்போது அவளால் தனக்குச் சொல்லிக்கொள்ள முடியும். காதல், குடும்பம், உறவு, பாலியல் இவையெல்லாமே அதுக்கடுத்த படியில் தான் என்று தோன்றுகிறது.

இவ்விரு பலவீனமான, உடைந்த மனிதர்களுக்குள் என்ன அணுக்கமான, நிறைவான உறவு சாத்தியம்?

கங்காவின் இறுதி அழுகை, “நான் யார்” என்ற அழுகை. இருமடங்காக அவள் உணரும் நிராகரிப்பும், கலங்கமும் அவளை தன்னையே வெறுக்கச்செய்கிறது. “தன்னையே தொலைத்தவள்” என்ற சொற்க்கள் இவளுக்கு எவ்வளவு பொருத்தமாக அமைகின்றன! இவள் நிலையைக்கண்டு பரிதாபம், இரக்கம் தோன்றுகிறது. கூடவே, அவளது சுயவெறுப்பின் ஒரு பங்கை நாமும் உணர்கிறோம். ஆம், தான் யார் என்று தெரிந்த்து தெளியாத நிலை, பரிதாபத்துக்கிறைய நிலை. கசப்பும் கழிவிரக்கமும் நிறைந்தது.

இந்த உணர்ச்சியை கொண்டுவந்ததே நாவலின் வெற்றி என்று நினைக்கிறேன். தன் சுயத்தை எதன் பொருட்டும், யார் பொருட்டும், ஒரு கண நேரமேனும் தொலைத்துத் தேடியவர்கள் உணரக்கூடியது. கங்காவின் வெறுமையின் துயரம் மனதை கனக்கவைக்கிறது. கொஞ்சம் வெறுக்கவும் வைக்கிறது.

கங்காவைப்போலவே வெறுமை நிரைந்து திரிந்த பாத்திரம் என்றால் அது நாஸ்டாஸ்யா பிலிபோவ்னா. அவளும் நயவஞ்சகச் சமூகத்தால் ஏமாற்றப்படுகிறாள். ஆனால் மிஷ்கினின் அன்பும் மன்னிப்பும் நிறைந்த கண்கள் மூலமாக நாம் அவளை காண்கிறோம் என்பதால் அவள் மீது இரக்கம் நிறைகிறதே ஒழிய கழிவிரக்கமோ வெறுப்போ வரவில்லை. அதேபோல் அகலிகையின் மீட்சி இராமனின் அன்பில். சீதையின் மீட்சி பூமியப்போல் ஸ்திரமான அவள் சுயத்தில்; இராமன் மீது அவள் கொண்டுள்ள அன்பில்.  ஆனால் கங்காவின் உலகில் இருக்கும் ஆண்களில் மிஷ்கிஙளோ இராமன்களோ இல்லை. ஒரு வரட்சியான, மதிப்பீடுகளும் அன்பும் அற்ற உலகத்தை ஆசிரியர் வேண்டுமென்றே படைக்கிறார் என்று தோன்றுகிறது. அங்கு புரட்சி எழுத்தாளரின் குரல் மட்டுமே கலங்கரை விளக்கம் என்று கொள்ளலாம்.

மொத்தத்தில் சி.நே.சி.ம. களின் பேசுப்பொருளும், மைய்யச்சிக்கலும் அந்த காலத்துக்குறியது தான். அந்த வகையில், இப்போதும் சொல்கிறேன், இது சிறப்பான, க்ளாஸிக் தன்மை கொண்ட முதன்மை நாவல் அல்ல. என் அடுத்தத் தலைமுறை இதை வாசிப்பார்களா என்று தெரியவில்லை.

இருந்தாலும், ஒரு வரலாற்றூச்சூழலை தெரிந்து கொள்வதைத்தாண்டி, இந்த நாவலை ஏன் வாசிக்கலாம் என்று சொல்வேன் என்றால்:

அ. இது மனித அடையாளம் சார்ந்த, பெண் அடையாளம் சார்ந்த படைப்பு. தன் அடையாளத்தை தனக்கு வெளியில் இருக்கும் ஒன்றுடன் இணைக்கையில், அது கவிழும்போது உருவாகும் கசப்பான வெறுமையின் சித்தரிப்பு. பெண் அடையாளத்தை பற்றி நம் மரபில் எழுப்பப்பத்த கேள்விகளை உடைத்து, பாவனைகளற்று முன்வைத்துப்பேசுகிறது. சமூக காலகட்டம் சார்ந்து, பெண்கல்வி சார்ந்து, பெண்ணின் சுய நோக்கு சார்ந்து விவாதிக்கப்படவேண்டியது.

ஆ. பிரபுவின் பிரதி. சுயநலமும், அறியாமையும், மடமையும் நிறைந்த ஆணாகவே பிரபுவின் பாத்திரத்தை நான் வாசித்தேன். ஆம், இவன் பாத்திரத்துக்கும் ஒரு சமூகப்பின்னணி உள்ளதென்றாலும் கங்கா அளவுக்கே அவனும் பலவீனமான, கோழைத்தனமும் கயமையும் நிறைந்த, insecure- ஆன பாத்திரம். பிரபு கங்காவை விட்டு விலகும் உளவியல் முக்கியம்.

இ. கதைப்போக்கும் கதைமாந்தரும் நம்மில் உருவாக்கும் அருவருப்பும் வெறுப்பும் கசப்பும் கழிவிரக்கமும். நான் இந்த நாவலை, முன்பு சொன்னது போல், உணர்ச்சிகளாகவே உள்வாஙிக்கொண்டேன். அது என்னில் செலுத்திய பாதிப்பு இக்கட்டுரையை எழுதும்போது தான் புரிகிறது – இந்த நாவலின் நிகழ்வுகளை, மாந்தர்களை, உறையாடல்களை உணர்ச்சினிலைகளாகவே நினைவில் நிறுத்திக்கொண்டுள்ளேன். அந்த உணர்ச்சியை தொட்டே நாவலை மீண்டும் தொகுத்துக்கொள்கிறேன். ஆசிரியர் இந்த நாவலை எழுதியதில் என்ன ஊகித்தார் என்று தெரியவில்லை, ஆனால் எனக்கு இது எப்படி எளிய, பலவீனமான மனிதர்கள், அசிங்கமான ஒரு சூழலில் மாட்டிக்கொண்டு தங்கள் வாழ்க்கையில் அர்த்தமுள்ள அனைத்தையும் தானாக நிறாகரிக்கத் தூண்டப்படுகிறார்கள் என்பதன் சித்திரம். கோரமான இறப்புக்கள், சித்திரவதை காத்சிகளைக்கூட வாசித்துவிடலாம். மனித மனம் – மகத்தான மனித மனம் – தன்னைத்தானே அழித்துக்கொள்வதைத் தாங்க முடியவில்லை. அதன் கதை தான் இது என்பதனால் வாசிக்கலாம்.

ஈ. பெண்களின் சுய அடையாளம் பற்றி வந்துள்ள தமிழ் நாவல் வரிசையில் பொருத்தி இதை வாசிக்கலாம். உங்களுடைய ‘கன்யாகுமரி’யை மறுமுனையில் வைத்து ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது.

நாவலை நினைவிலிருந்து மீட்டுத் தொகுத்து எழுதுகிறேன். பிழைகள் இருந்தால் அவை என்னுடைய நினைவின் பிழைகள்.

நன்றி,

சுசித்ரா

=================================================

சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்

===================================================

சுசித்ரா கடிதங்கள்
மலர் கனியும் வரை- சுசித்ரா
செவ்வியலும் இந்திய இலக்கியமும்
கன்னியாகுமரி 3, -பெண்ணியம்
கன்யாகுமரி 2 -உன்னதமாக்கல்
கன்யாகுமரி 1-ஆண்மையின் குரூரம்
கன்யாகுமரி கடிதங்கள்
நீலஜாடி -கடிதம்
கால்கள், பாதைகள்
கன்னியும் கொற்றவையும் (“கொற்றவை” பற்றிய பதிவுகள் – மேலும்)
நமது பிரச்சனை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல!
கொற்றவையின் தொன்மங்கள்
தாயார் பாதமும் அறமும்
வெள்ளையானையும் கொற்றவையும்

 

முந்தைய கட்டுரைஅரவிந்தன் கண்ணையன்,கிசுகிசு வரலாறு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஒரு குற்றச்சாட்டு