முதலாளித்துவப் பொருளியல் – கடிதங்கள்.2

vijay
முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும் 2 
முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்..

முதலாளித்துவ பொருளியலும் விஜய் மல்லையாக்களும் பதிவுகளில் முதலாளித்துவ பொருளாதாரத்தில், தொழில் முனைவோரின் முக்கியத்துவத்தையும், பங்களிப்பையும் நன்றாக விளக்கியிருந்தீர்கள்.. கட்டுரை, ஒரு விஜய் மல்லையா பற்றி மட்டுமே இல்லை, பொதுவாக தொழில் முனைவோர் பற்றி எனும் போதும், இந்த பிரச்சினையில், ஏதேனும், தவறிருந்த்தால், அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியது அரசு இல்லையா?.. நீங்கள் கட்டுரையில், மல்லையா நிதி கடன் வாங்கி திருப்பி செலுத்தவில்லை என்றால், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தீர்கள்.. ஆனால், இந்த இடம், முதலாளித்துவத்திற்கு முக்கியமான பலவீனம் கொடுக்கும் இடம் என்று எண்ணுகிறேன்..

முதலாளித்துவம் வெற்றி பெற, முக்கியமான அடிப்படை தேவைகளுள் சில, ஒன்று புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு சூழல், இரண்டு – கட்டுக்கோப்பான நிதித்துறை, நிதி அமைப்பு, இவ்விரண்டும் உள்ள பட்சத்தில், புது கண்டுபிடிப்புகள் கொண்டு வரும் தொழில் முனைவர்களை அக்கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் எளிதாக உற்பத்தி தொடங்க ஏது செய்தல் ஆகியன.. இதில் நிதி துறையின் பங்கு, தொழில் முனைவோர்க்கு தேவையான நிதியை எளிதாக அவர்களுக்கு கிடைக்க செய்தல்.

ஆனால், இங்கு நிதி பெறும் தொழில் முனைவர்க்கு, அதை திருப்பி அடைப்பது, ஒரு அவசியமான நிபந்தனை, அதை மீறினால், அரசும், நிதித்துறையும் தன் மீது பாயும் , தனக்கு நிரம்ப சிரமங்கள் உண்டாகும் என்ற பயம் சிறிதேனும் ஏற்பட வேண்டும்.. அவ்வாறில்லையெனில், ஒன்று, இப்படியான பணம் விரையமாவது ஒரு இழப்பு ( இது தொடர்பாக கட்டுரையில் நீங்கள் சுட்டிக் காட்டிய ஒரு தரவு கட்சிதம் !! ” விமானப்போக்குவரத்தை மேம்படுத்தும் தேவைக்காக அரசு தேர்ந்தெடுத்திருக்கக் கூடிய மாற்றுவழி என்ன? பொதுத்துறையை ஈடுபடுத்துவது. இன்னும் நாலைந்து ஏர்இந்தியாக்க:ஐ உருவாக்குவது, இல்லையா? அவற்றை ஐந்தே வருடத்தில் இதைவிட பத்துமடங்கு நஷ்டம் நோக்கிக் கொண்டுசெல்வார்கள் ஊழலில் மூழ்கிய நம் அதிகாரிகள். சேர்ந்து கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள். அந்நிறுவனங்கள் மூழ்கி அரசுக்கு இதைவிட நூறுமடங்கு நஷ்டம் வந்தால் ஒருவராவது தண்டிக்கப்படுவார்களா? குறைந்தபட்சம் விசாரிக்கவாவது படுவார்களா?”

ஆனால், பணம் திருப்பி பெறுவதில் மெத்தனம் ஏற்பட்டால், புதுமை, கண்டுபிடிப்புகளை முன் நிறுத்துவதிலும் ஒரு உழைப்பில்லாத, தன்முனைப்பில்லாத போக்கு அனைவருக்கும் ஏற்பட்டு விடும் அல்லவா?.. ஒன்றுக்கும் ஒப்பேறாத கண்டுபிடிப்புகளை, திட்டங்களை வைத்து பணம் பெற்று விரையம் செய்யும் போக்கு வந்து விடாதா? ( விட்டது.. வங்கி கடன், தொழில் துறை கூட்டுக்களில் நடக்கும் மேல்மட்ட நிதி பரிவர்த்தனைகள் பல நம்மை அதிர்ச்சி அடைய செய்யும்…)

ஆம்் இது நிதி பெறும் எல்லாருக்கும் இது பொருந்தாது.. அரசின் சலுகைகளை பெறும் நிலையில் உள்ள சிலருக்கு தான் பொருந்தும் ( ரகுராம் ராஜன் தனது ” saving capitalism from the capitalists” நூலில், முதலாளித்துவத்தின் முக்கிய பலவீனமாக favoritism, nepotism ஆகியவற்றை கூறுகிறார்..)

கண்டிப்பாக தொழில் முனைவோர் ஊக்கப்படுத்தப் படவேண்டும்.. ஆனால், அது தொழிலை / உற்பத்தியை ஆரம்பிக்க, சிறப்பாக நடத்த தேவையான நிதி, அடிப்படை கட்டுமானங்கள் ஆகியவை கிடைக்க பெறுவதில் ஏற்படுத்தும் அதே வேளையில், அவர்கள் பதிலுக்கு அவர்கள் தரப்பில் செய்ய வேண்டிய கடமை, ஆற்ற வேண்டிய பொறுப்புகள் என்பவற்றில் அரசு, நீதித்துறை கண்டிப்பாக இருக்க வேண்டும் அல்லவா?.முதலாளித்துவ உலகில் ” more the risk , more the gain at the same time bigger the loss” அல்லவா?..

அப்படி திருப்பி அளிக்க வேண்டியவற்றில் கண்டிப்பாக இல்லா விட்டால், தொழில்முறை நஷ்டங்களுக்கு பொறுப்பேற்க்கும் மன நிலை இல்லாமல், நல்ல லாபம் வரும் திட்டங்களை மட்டும் தொழில்படுத்தாமலோ, நிர்வாகத்தை கறாரான முறையில் செயல் படுத்தாமலோ வரும் நஷ்டங்களை அரசு ஏற்க்கும் நிலை ஏற்படும். 2008 அமெரிக்க பொருளாதார சரிவுக்கு காரணமான ” investment bank” சுக்கு, அமெரிக்க அரசு உதவ முன் வந்த போது அதற்கு பல தரபட்ட நிபுணர்களிடம் இருந்தும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது..

இங்கு மல்லையா விஷயத்தில், அரசு தரப்பில், கடன் திருப்பி தராததிற்க்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டனவா என்று தெரியவில்லை.. ஒரு வேளை அவர் இந்தியாவில் இருந்திருந்தால், கைதாகியிருக்க கூடும்.. கைதில் இருந்து தப்பிக்க வெளி நாட்டில் போய் தங்குவது என்பது எல்லோராலும் முடியுமா?.. மல்லையா, லலித் மோடி போன்ற சிலரால் தானே முடியும்.. மேல் கூறியது போல் எதோ ஒரு துறையிலோ, அரசில் ஏதோ ஒருவருடனோ உள்ள, favoritism நாலோ, பரிமாற்றப்பட்ட ஊழல் பணத்தால் தானே.. ஆகவே, இதில் அரசின் குற்றம் பெரிதல்லவா?.. இது மல்லையா விஷயத்தில் மட்டும் இல்லை என்பதால், இந்த போக்கு, மொத்தமாக, இந்திய், தமிழ் நாட்டு முதலாளித்துவ பொருளாதார சூழலுக்கு கேடு விளைவிக்க கூடியது அல்லவா?..

அன்புடன்
வெண்ணி

 

அன்புள்ள ஜெ,

விஜய் மல்லையா குறித்த உங்கள் பதிவினைக் கண்டேன். அதில் இடது சாரி வலது சாரி பொருளியல் குறித்தும் அதன் வேறுபாடுகளையும் கூறியிருந்தீர்கள்.

 

நீங்கள் வடது சாரி பொருளியல் கொள்கையை ஆதரிக்கிறீர்கள் என்றும் குறிப்பிட்டியிருந்தீர்கள். அதில் ஒன்றும் தவறில்லை.

 

ஆனால் வடது சாரி பொருளியல் கொள்கையின்படி நாம் பார்த்தாலும் விஜய் மல்லையா அரசினால் காப்பாற்றப்பட வேண்டியவர் இல்லை என்பதே உண்மை.

 

ஏனென்றால் வடது சாரி பொருளியலில் இரண்டு கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்குகிறது.

 

1 ) போட்டி (Competition ) – எந்தத் தொழிலும் போட்டி இருக்க வேண்டும். அப்போது தான் வாடிக்கையாளர்களுக்குத் தரமான பொருளும், நியாயமான விளையும் கிடைக்கும். இதைத் தான் நாம் செல்பேசி துறையில் நாம் இப்போது பார்க்கிறோம். ஜியோவின் வருகை இதைத் தெள்ளது தெளிவாக நிரூபிக்கிறது.

 

2 ) Creative  Destruction  – இந்த இரண்டாவது கோட்பாட்டின்படி போட்டியில் தோற்கும் நிறுவனம் நிராகரிக்கப்பட வேண்டும். அரசாங்கம் தலையிட்டு அந்த நிறுவனத்தை, அதன் முதலாளியைக்  காக்க நினைப்பது முதலாளித்துவ பொருளியல் கொள்கைக்கு எதிரானது. அதன் படி விஜய் மல்லயாவின் கிங் பிஷர் நிறுவனம் நிராகரிக்கப் பட வேண்டிய நிறுவனம் ஆகும். மல்லையா அரசினால் காப்பாற்றப்பட   வேண்டியவர் அல்ல.  Corporate  Bailout  வலதுசாரி பொருளியல் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. 2008  அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியின்   போது அமெரிக்க அரசாங்கம் செய்த Bank  Bailout  வலது சாரி பொருளாதார நிபுணர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.  அமேரிக்கா ஒரு banana  republic  ஆகி விட்டது என்று கடுமையாக விமர்சித்தார்கள்.    குடியரசு கட்சியின் தோல்விக்கும், ஒபாமா ஜனாதிபதி ஆனதுக்கு காரணமாக அமைந்தது.

 

அப்போது துணிவுடன்  முதலீடு செய்து அதில் தோல்வியுறும் முதலாளிகள்  நடுத்தெருவுக்கு வர வேண்டியது தானா. இல்லை. இதற்குத் தான் அமேரிக்கா போன்ற நாடுகள் சிறப்பான Banruptcy  சட்டங்கள் வைத்திருக்கிறார்கள். இதன் படி  தோல்வியுறும் நிறுவனங்களின் முதலீட்டார்கள், அதன் பங்குதாரர்கள், அதன் தொழிலாளர்கள்   அனைவருக்கும்   சாதகமான  settlememt  செய்கிறார்கள்.  இந்த சட்டங்கள்  பெரும் நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள் என்ற பேதம் பார்ப்பதில்லை.  பெரும் நிறுவனங்களுக்கு என்ன விதிமுறையோ அதே தான் சிறு  நிறுவனம் தோல்வியுற்றாலும்.

 

இந்தியாவில்  நல்ல Bankruptcy  சட்டங்கள் இல்லாதது தான் பிரச்சினைக்கு மூல காரணம். இதைத் தான் தங்களை போன்ற வலது சாரி கருத்துடையவர்கள் வலியுறுத்த வேண்டுமே தவிர மல்லையா போன்றவர்களை பாதுகாப்பது அல்ல.

 

உங்களுடைய  முதலாளித்துவ பொருளாதார கொள்கையின் புரிதல் தவறு என்பதை தாழ்மையுடன் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

 

நன்றி.

சத்திஷ்

 

அன்புள்ள திரு ஜெயமோகன்,

 

இன்றைய உலகச் சூழ்நிலையில் முதலாளித்துவ பொருளாதாரம் தவிர்க்கமுடியாதது என்பது சரியே.  இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜனும் தொழில் செய்கையில் இழப்புக்கான பாதகம் தவிர்க்கமுடியாதது என்று கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், விஜய் மல்லையா நல்ல உதாரணமா என்பது கேள்வி. தொழிலில் தோல்வி என்பது வேறு, ஊழல், ஏமாற்றுதல், சட்டம் மீறுதல் என்பது வேறு. விஜய் மல்லையா இரண்டாம் வகைக்கான உதாரணமாகவே பார்க்கப்படுகிறார். அவர் தொழில் தோல்விக்காக துரத்தப்படவில்லை. ஐ டி பி ஐ வங்கி அதிகாரிகளோடு கூட்டு சேர்ந்து மோசடி செய்து கடன் பெற்றது, கிங் ஃபிஷர் மதிப்பீட்டை முறைகேடாக உயர்த்திக்கூறி கடன் பெற்றது, பணச் சலவை, அவரது கட்டுப்பாட்டில் இருந்த கம்பனிகளுக்கிடையே தவறான பணபரிவர்த்தனை, கிங் ஃபிஷர் ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட சேமநல நிதி, வருமான வரி தொகைகளையும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சேவை வரி, விமானநிலையக் கட்டணம் ஆகியவற்றை செலுத்தாமல் ஏமாற்றியது, 100 கோடிக்கும் மேலான காசோலைகள் பணமில்லாமல் திரும்பியது, இவை எதையும் விசாரணை, நீதிமன்றங்களில் எதிர்கொள்ளாமல் வெளிநாட்டிற்கு ஓடிவிட்டது ஆகியவற்றிற்காக தண்டிக்கப்படக்கூடிய ஒரு ஊழல் முதலாளிக்கான உதாரணமாகவே விளங்குகிறார் விஜய் மல்லையா.

 

பா ராஜேந்திரன்

 

 

முந்தைய கட்டுரைநீர்க்கோலம்
அடுத்த கட்டுரைஜெயகாந்தன் –கடிதங்கள் 2