வேல்நெடுங்கண்ணி

eyes

இனிய ஜெயம்,

அன்று கோவையில் இருந்து சக்தியுடன், நிலவு தெரியா மேக மூட்டம் கொண்ட வானின் கீழ், சாரல் மழையில் திருச்சி வந்து சேர்ந்தேன்.நள்ளிரவில் பேருந்து நிலையம் மொத்தமும் மனிதத் தேனீக்கள் மொய்க்கும் தேனடையாக காட்சி அளித்தது. சென்னை ,கடலூர், மார்க்கத்துக்கு ஒரு பேருந்துக்கு, ஒரு தொடர்வண்டி ஜனம் காத்துக் கிடந்தது. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஊழி வந்தாலும் திருச்சி கும்பகோணம் மார்க்கம் காலியாகவே கிடக்கும். அந்த மார்க்க பேருந்துகளையும் சென்னைக்கு திருப்பி விட்டு இருந்தனர். காத்திருந்து , வந்து காலியாகவே வெளியேறி சென்ற சிதம்பரம் பேருந்தில் ஏறி, அற்ப மானுடர்களை ஒரு கணம் பரிதாபமாக நோக்கி விட்டு உறக்கத்தில் அமிழ்ந்தேன்.

அதி காலை, சிதம்பரம் கடலூர் நடுவே ஆலப்பாக்கம் நிறுத்தத்தில் இறங்கி, ஊருக்குள் செல்லும் இரு சக்கர வாகனதாரியை நிறுத்தி, திருச்சோபுரம் கிராமம் வந்து இறங்கினேன். ஊராருக்கு அக் கிராமம் தியாகவல்லி கிராமம். திரிபுராந்தக சக்கரவர்த்தியின் மனைவி தியாகவல்லி அங்கிருக்கும் நெசவாளர்களுக்கு பல வணிக சலுகைகளை அளித்து அவர்களுக்கு உருவாக்கி அளித்த கிராமம், ஆகவே அப் பெயர் வந்தது என்கிறார்கள். சில நூறு கச்சிராயர்கள் என்ற சத்ரிய குல வன்னியர்களின் வீடுகள்கொண்டு நிற்கும் கிராமம். பல்லவ காலம் தொட்டு ஆங்கிலேய காலம் வரை இங்கிருக்கும் சில கிராமங்களின் நிர்வாகக உரிமை , வரி, உரிமை கொண்டவர்கள் நாங்கள் என்கிறார்கள். அங்கே இருக்கும் இளைய கச்சிராயர் எனும் என் நண்பனை காண முன்பு அடிக்கடி அக் கிராமம் செல்வேன். இப்போது அவன் வெளிநாட்டில். ஆகவே அந்த கிராமத்துக்கு நான் செல்வதும் விட்டுப் போனது.

கடலூர் மாவட்டத்தில் மிக அபூர்வமான நிலப்பரப்புகள் மூன்று. ஒன்று கடலூர் துறைமுகம் மற்றும் அதை சூழ்ந்த அழிமுகப்பகுதிகள். இரண்டு சிதம்பரம் அலையாத்திக் காடுகள். மூன்று கடலூர் துறைமுகம் தொட்டு தியாகவல்லி வரை நீளும் தேரி மணற்குன்று வரிசை. ஒரு மணற்பருவை எடுத்து நோக்கினால் ,முனைகள் மழுங்கி பந்து போல தோற்றம் அளிக்கும், கைப்பிடியில் உள்ள மணலை ,ஊதியே பறக்க விட முடியும், மணலுக்கும் தூசிக்கும் இடப்பட்ட சந்தன வண்ண மணல். கண்ணெட்டும் தொலைவு வரை சந்தன வண்ண மணற்குன்று செறித்த நிலத்தை, வெள்ளி அலைகள் கொண்டு அறைந்து,அறைந்து எல்லை கட்டும் சாம்பல் வண்ண கடல் விரிவு. மணற்குன்று இடையே ஆங்காங்கே தென்படும் ,பனை தென்னை வரிசை, வீடுகள், மிக மிக வலகி சில மீனவர் குடியிருப்பு. வெள்ளி மலை என மின்னும் மனற்க்குன்றுகளில் கிடந்தது, வெள்ளி அலை வீசும் கடலலைகள் மீது, வெள்ளி வட்டம் மிதக்க ஒளிரும் வானைக் கண்டு,பல நாட்கள் விக்கித்துக் கிடந்ததுண்டு.

மனிதக் காலடித் தடமே காண இயலா கடற்கரை. சுனாமிக்குப் பிறகு இந்த நிலம் மொத்தமும் வேறு தோற்றம் கொண்டு விட்டது. மணலில் முக்கால் பாகம் காணாமல் போய் விட்டது , நிலத்தின் குழைவு காரணமாக பல மரங்கள் கடல் கொண்டு மறைந்து விட்டது. கடல் கரை அமைப்பு வளைந்து , கீழே கிடக்கும் கதிர் அறுவாள் போல கிடக்கிறது. உயரம் அமர்ந்து கடல் நோக்க இப்போது அங்கே சந்தனக் குன்றுகள் விலகி சென்றுவிட்டன. கடலுக்குள் சற்றே தொலைவில் நிறுவனம் ஒன்றின் [நாகார்ஜுனா ஆயில் ரிபைனரி] ரசாயனம் சுத்திகரிப்பு செய்யும் பிரும்மாண்ட கட்டமைப்பு . கிராம எல்லைக்கு வெளியே பல நூறு தகர கொட்டகைகள். அந்த நிருவனத்துக்கான பிகாரி வேலையாட்கள் கூட்டம், இரைச்சல்.

அதிகாலை சூரியானால் ஒளி கொண்டு, பொன் பொலிந்து, பொன் அலை கொண்டு கால் வருடும் கடல் விளிம்பில் நீண்ட நேரம் நின்று விட்டு , நான் எப்போதும் செல்லும் கடற்கரை கோவிலுக்கு சென்றேன். வேல் நெடுங்கண்ணி உடனுறை திருச்சோபுர நாதர் கோவில். மிக மிக சிறிய கோவில். கோபுரம் அற்ற பத்து அடி உயர காம்பௌண்டு சுவருக்குள், வெளி பிரகாரம். கொடி மரம். கடந்து சிறிய வாயிலை தாண்டி, [மேலே மணி] உள்ளே சென்றால். சிறிய சிறிய சுவாமி மற்றும் அம்மன் , சன்னதிகள் மேலே சிறிய விமானம். ஒரு பக்கம். ஸ்தல விருட்சமான கொன்றை மரம். கோவிலின் வலது மூலையில் கிணறு. சிற்பங்களோ, பக்தர்களோ , குறிப்பிடத் தக்க ஏதும் ஒன்றோ அற்ற சிறிய கோவில். ஆனால் எனக்குப் பிடித்த கோவில்.

முதலாம் சடைய வர்ம பாண்டியன்,இந்த கோவிலுக்கும் இந்த ஊரின் நெசவாளர்களுக்கும் நிவந்தமும் வரி விலக்குகளும்[ சூரியன் சந்திரன் உள்ளளவும் ] அளித்த கல்வெட்டு சான்றுகளை பண்ருட்டி தமிழரசன் ஆவணம் செய்துள்ளார். ஒரு முறை மதுரை ராமலிங்க சிவ யோகித் தம்பிரான் என்பவர் பாடல் பெற்ற ஸ்தலங்களை தரிசிக்கும் அவரது சுற்றுப் பயனந்தில், திருஞான சம்பந்தர் பாடி வைத்த இந்த ஸ்தலத்தை தேடி வந்திருக்கிறார். பாடல்தான் இருக்கிறது. கோவிலைக் காணவில்லை. ஊரார் ஒரு மணல் மேட்டைக் காட்டி அந்த மனற்க்குன்றுக்குள் இருக்கிறது நீர் தேடும் கோவில் என்றிருக்கிறார்கள். தம்பிரான் கடலூர் செல்வந்தர்கள் நஞ்சலிங்க செட்டியார், ஆயிரங்காத்த முதலியார், சேஷால நாயிடு மூவர் உதவியுடன் உழவாரப் பணி செய்து குன்றினில் மறைந்த அந்தக் கோவிலை மீட்டிருக்கிறார். இன்ற்ம் அக் கிராமத்தில் சிலர் அக் கோவிலை தம்பிரான் கோவில் என்றே அழைக்கிறார்கள்.

கோவிலின் மூல லிங்கம் [பாண லிங்கம்] இந்த நிலத்தின் ,இதே தேரி மணலால் ஆனது. அதை இப்படி மூலிகை கொண்டு கல்லாக மாற்றியவர் அகத்தியர் என்கிறது புராணம். பொதிகை மலையில் நின்று பூமியின் அச்சை சரி செய்த பிறகு, அகத்தியர் அவரது பயணத்தில் இங்கே வருகிறார், மக்கள் அவர் பூபாரம் நிவர்த்தி செய்த கதையை கேட்க, அகத்தியர் இந்த லிங்கத்தை செய்து, சிவன் முன்னிலையில் சிவனது திருவிளையாடல்களிளில் ஒன்றான அக் கதையை அகத்தியர் மக்களுக்கு சொன்னதாக ஐதீகம்.

கோவிலை சுற்றிவிட்டு அம்மன் சன்னதி வந்தேன். அபய கரம், வரத கரம், மேல் வலக்கையில் தியான மணி மாலை, மேல் இடக்கையில் சற்றே மலர்ந்த தாமரை மொட்டு.

முன்பொரு சமயம் மாலையில் அக் கோவிலுக்கு சென்றிருந்தேன். வெளியே சாரதியின் காவலுடன் ஒரு வான நீல மாருதி ஒன்று நின்றிருந்தது. உள்ளே வழமை போல பக்தர்களோ, அர்ச்சகர்களோ அற்ற தனிமை. சுற்றி வந்து விட்டு அம்மன் சன்னதி சன்றேன். உள்ளே அவள் நின்றிருந்தாள். என் நிழல் வருகையால் அவளிடம் எந்த சலனமும் இல்லை. செம்பருத்தி வண்ண சேலை, அடர்ந்த ஜடை, வடிவுகள் துலங்கும் இளம் உடல் கொண்டு நின்றிருந்தாள். அசைவே இன்றி நின்றிருந்தாள். அவள் அம்மனை நோக்கி ஏந்தி நின்ற வலது உள்ளங்கையில் ,சுடர்ந்து கொண்டிருந்த கர்ப்பூர ஒளி இதழ் வாடி அணையும் வரை அவ்விதமே நின்றிருந்தாள்.

காட்சியின் பீதியால், வசீகரத்தால் ஸ்தம்பித்து நானும் அசைவற்றிருந்தேன். கைகள் இயல்பாக தாழ,அவள் இயல்பாக திரும்பினாள், மெல்லலையில் எழுந்து தாழும் துறை சேர் கலத்தின் முனை போல அவள் முலைக்குவைகள் எழுந்து தாழ்ந்து கொண்டிருந்தன. கழுத்து வியர்த்து, கன்னத்தில் மயிர்ப் பிசின்கள் ஒட்டி இருந்தன, என்னைக் கண்ட அக் கணம், மறுகணமே இன்றி, தனது உயிர் ஆற்றல் மொத்தம் கொண்டு, நிஷ்டூரமாக முறைத்தாள். செவ்வரி ஓடிய கண்கள். தனது அந்தரங்கத்தை அத்து மீறி அளைந்தவனை விட்டு சட்டென வெளியேறி மறைந்தாள்.

என்றும் அவளது கண்கள் எனது நினைவில் உண்டு. ஒரு சொட்டு கண்ணீரும் சிந்தாத அந்த வேல் நெடுங்கண்ணியின் கண்கள்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஜெயகாந்தன் –கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைகாட்டின் சொல்