நீர்க்கோலம்

water

 

வெண்முரசு நாவல் வரிசையில் அடுத்தநாவலை இருபத்தைந்தாம் தேதி முதல் வெளியிடலாமென நினைக்கிறேன். நீர்க்கோலம் என தலைப்பு. இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை. விராடநாட்டில் பாண்டவர்கள் ஆள்மறைவு வாழ்க்கை வாழ்ந்தகதை. அதை எப்படிக்கொண்டு செல்வேன் எனத்தெரியவில்லை. ஒவ்வொருவரும் இன்னொருவராக உருமாற்றம் அடைந்து வாழ்வது என்பதே அந்த பகுதியில் எனக்கு ஆர்வமூட்டும் நுண்கூறாக உள்ளது.

நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள்வளர்த்துப் பின்னை
போர்க்கோலம் செய்துவிட்டார்க்கு உயிர் கொடாது அங்குப் போகேன்
தார்க்கோல மேனி மைந்த எனதுயிர் தருதியாயின்
கார்க்கோல மேனியானைக் கூடுதி கடுகின் ஏகி

என்ற கம்பராமாயணப் பாடலில் இருந்து தலைப்பு. நீர்க்கோலம் போன்ற வாழ்க்கையை விரும்பி என்னை வளர்த்து போர்வீரனாக ஆக்கிய ராவணனை விட்டுவிட்டுச் செல்லமாட்டேன் என கும்பகர்ணன் சொல்கிறான். ஆனால் நீ என் குருதியினன், நல்லவன். ஆகவே ராமனிடம் நீ செல் என விபீடணனிடம் ஆணையிடுகிறான். நீர்க்கோலம் என்ற சொல்லாட்சி ஒரு பெரும் கிளர்ச்சியை அளித்தது. நீரின் மேல் ஒளி ஆடும் கோலம். விழிமயக்கு. ஆனால் காண்பவை அனைத்தும் விழிமயக்குகள் அல்லவா? இந்நாவலில் அத்தனைபேரும் பிறிதொரு விழித்தோற்றம் கொள்ளப்போகிறார்கள்..

nitya

 

மாமலர் முடிந்தபின்னர் வழக்கம்போல நாவல்கள் முடிந்தபின் வரும் சோர்வும் தனிமையும் வரவில்லை. உவகையும் கொப்பளிப்புமான உளநிலை. அனுமன் அளித்தது அக்கொடை. கிருஷ்ணன், காங்கோ மகேஷ், நாமக்கல் வரதராஜன், நாமக்கல் வாசு, ஈஸ்வரமூர்த்தி, கடலூர் சீனு, சக்தி கிருஷ்ணன் ஆகிய நண்பர்களுடன் சென்ற 9,10 தேதிகளில் ஊட்டி சென்றேன். குருகுலத்தில் ஒருநாள் தங்கினேன். வியாசப்பிரசாத் சுவாமி இல்லை, பெங்களூர் சென்றிருந்தார்.

ஊட்டியில் நல்ல குளிர். ஒரு தூக்கம் போட்டுவிட்டு கண்காணிப்பு மேடை அமைந்த காடுவரை ஒரு மாலைநடை சென்றோம். பெருங்கூட்டமாக அன்றி இப்படி சிலநண்பர்களுடன் ஊட்டிக்கு நான் வருவது மிக அரிதாகவே நிகழ்கிற்து. தொடர்ச்சியாக ஒருவாரமோ பத்துநாளோ ஊட்டியில் தங்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

நாங்கள் சென்ற அன்று சித்ராபௌர்ணமிக்கு முந்தைய நாள். பெருநிலவு. ஊட்டிப்பனியில் அது இளஞ்செந்நிறத்தில் முகில் அற்ற வானில் எழுந்து நின்றிருந்தது. வெளியே நாற்காலிகளை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்து நிலவைப்பற்றிய தமிழ், மலையாள, இந்தி, தெலுங்கு பாடல்களைக் கேட்டோம். பன்னிரண்டு மணிவரை இலக்கியம் ஆன்மிகம் வேடிக்கை என பேசிக்கொண்டிருந்தோம்.

மறுநாள் காலையில் நண்பர்கள் நல்ல தூக்கம். நான் மட்டும் ஒரு காலைநடை சென்றேன். லவ்டேல் தோட்டமருகே பள்ளத்தில் உள்ள பாலம் வரை சென்றேன். பச்சைப்பரப்புமேல் சூரிய ஒளி பரவும் பேரழகை ஒருமணிநேரம் நின்று நோக்கியபின் திரும்பிவந்தேன்

ootty

உள்ளம் நிறைந்த ஒரு புலரி. அங்கே நித்யாவுடன் நானும் வந்து நின்ற நினைவுகள். சூரியத்தோற்றம் நோக்க மிகசிறந்த இடங்களில் ஒன்று அது. தாடிமயிர்கள் பொன் என ஒளிர நித்யா விழிதூக்கி சூரியனை நோக்கி நிற்கும் காட்சி கண்முன் அப்போது நிகழ்வதுபோலிருந்தது. திரும்பிவருகையில் சொல்லற்ற ஒரு பொங்குதல் உடலையே தளரச்செய்தது.

கோவைக்குத் திரும்பி வரும்போது கோத்தகிரி அருகே ரங்கநாதர்திட்டு என்ற குன்றுமேல் ஏறி அங்கிருந்த சிறிய கோயிலைப் பார்த்து வழிபட்டோம். கருங்குரங்குகள் அறிவிப்புக்குரல் எழுப்பி தலைக்குமேல் தொடர்ந்துவர ஆழ்காடு வழியாக ஒரு நீண்ட நடை. மழைக்கார் இருந்துகொண்டிருந்தது. வானத்தில் உறுமலோசை எழுந்து எழுந்து அடங்கியது. காடு சீவிடு ஒலியுடன் பசுமையும் இருட்டுமாக சூழ்ந்திருந்தது.

வழக்கமாக ஒரு நாவல் முடிந்தபின்னர் எங்கேனும் ஒரு பயணம் மேற்கொள்வேன். மாமலருக்கு மூகாம்பிகை. கிராதத்திற்கு கேதார்நாத். இம்முறை அப்படி ஏதும் திட்டமிடவில்லை. இயல்பாகவே அமைந்தது அது. காட்டில் மலையுச்சியில் ரங்கநாதர் என்பதே கொஞ்சம் மாறுபட்ட அறிதலாக அமைந்தது. விண்ளந்தவனை அமர்ந்த பேரரசக்கோலத்திலோ அமைந்த அறிதுயில் வடிவிலோதான் நம் உள்ளம் எண்ணுகிறது. இது ஒரு முனிவரின் துறவமைவு என தோன்றியது.

கோவை வந்து மூன்றுநாட்கள் தங்கியிருந்தேன். மருதமலை அருகே உள்ள பங்களா கிளப் என்னும் கோடைவிடுதியில். ஒரு திரைப்பட விவாதம். அருண்மொழியும் அஜிதனும் வந்து கோவையில் அன்னபூர்ணாவில் தங்கியிருந்தார்கள். அவர்களுடனும் திரைவிவாதத்திலுமாக நாட்கள். ஞாயிறு மதியம் நண்பர்கள் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் ஒரு சந்திப்பை ஒருங்கு செய்திருந்தார்கள். அப்போதுதான் நினைவுவந்தது சாரு நிவேதிதாவின் மகன் திருமணம். மறந்தே விட்டேன்.

இந்தவகையில் இப்போதெல்லாம் மாதம் பத்தாயிரம் ரூபாய் இழப்பாகிறது. தவறான ரயில் விமான பயணப்பதிவுகள். விமானத்தையும் ரயிலையும் தவறவிடுதல். நினைவில் வைத்துக்கொள்வது மிகப்பெரிய சித்திரவதையாக இருக்கிறது. சென்றமாதம் டி.பி.ராஜீவன் மகள் திருமணம். இரண்டு சீட்டு முன்பதிவுசெய்தேன். ஒன்று உறுதியாயிற்று. திருவனந்தபுரம் சென்று ரயில் நிலையத்தில் காத்திருக்கையில் சட்டென்று அடாடா உறுதியாகாத சீட்டை ரத்துசெய்யவில்லையே எனநினைவுவந்து ரத்துசெய்தேன். ரயிலில் ஏறினால் உறுதியான இருக்கையை ரத்துசெய்திருக்கிறேன்.

அதற்கு முன் டெல்லி சென்றேன். திரும்பி வர விமான நிலையம் சென்றபின் தெரிந்தது. அந்தச்சீட்டும் திருவனந்தபுரம் முதல் டெல்லிவரைக்குமாகப் போடப்பட்டிருக்கிறது என்று. இனிமேல் நானே பயணமுன்பதிவே செய்வதில்லை என வஞ்சினம் உரைத்தேன். ஆனால் அடுத்தவாரமே சென்னை செல்ல முன்பதிவுசெய்து மறந்தே போனேன். அவசரமாக இண்டிகோ விமானத்தில் மதியம் 2 45க்கு விமானம் முன்பதிவுசெய்தேன். ஆனால் பத்துமணிக்கு கூப்பிட்டு அந்த விமானம் மாலை ஏழுமணிக்குத்தான் கிளம்பும் என்றார்கள். அதை ரத்துசெய்துவிட்டு மேலும் ஒருமடங்கு பணம் கொடுத்து ஏர் இண்டியா விமானத்தில் இடம்பிடித்தேன். நல்லவேளை, இம்முறை என் தப்பு இல்லை . அது ஓர் ஆறுதல்.

மாலை ஆறுமணிக்கு சென்னை. அப்படியே குளித்து ஆடைமாற்றி சாருவின் மகன் திருமண வரவேற்புக்குச் சென்றேன். நண்பர்கள், சக எழுத்தாளர்கள் என ஒரு பெருந்திரள். இலக்கியக்கூட்டம் அல்ல என்பதனால் உற்சாகம். பாலகுமாரன், இரா.முருகன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், ஆர்.டி.ராஜசேகர், டி.ஐ.அரவிந்தன், அராத்து, மனுஷ்யபுத்திரன், லட்சுமி சரவணக்குமார், நடிகர் பார்த்திபன், இயக்குநர் வசந்த், தமிழ்மகன், அழகியசிங்கர், கணேசகுமாரன், சமஸ், பிரபு காளிதாஸ், உமாமகேஸ்வரன் அமிர்தம் சூர்யா ,ஜி குப்புசாமி, ராம்ஜி, சாம்நாதன், என ஏராளமான நண்பர்கள்.

யுவன் சந்திரசேகர் சிகெரெட் வாங்கப்போனான். அவனுடன் ஒரு நீண்ட நடைபோய் சிகெரெட் வாங்கி திரும்பிவந்தேன். ”நாம இப்டி நடந்து ரெண்டு வருஷம் ஆகுதுடா” என்றான் ஏக்கத்துடன். அரை கிமீ நடந்து தேடி வாங்கிய ஒற்றை சிகரெட் மென்தால் சுவை அடிக்கிறது என ஒரு புலம்பல். கேட்க நிறைவாக இருந்தது. பாலகுமாரனுடன் ஒரு தனிப்பட்ட உரையாடல். அவரை இன்னொருமுறை வீட்டுக்குச்சென்று சந்திக்கவேண்டும். நற்றிணை யுகன் வந்திருந்தார். உச்சவழு உட்பட என் நூல்கள் அச்சேறிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். இரவு சாப்பிடுவதில்லை என்றாலும் அக்கார அடிசில் என்னும் சொல்லுக்கு மயங்கி சாப்பிட்டேன். நல்ல வைணவமணம் உடைய அக்கார அடிசில்.

பேருந்தில் இன்று ஊருக்கு. அங்கே சென்று ஒருநாள் ஓய்வுதான். கிளம்பி ஒருவாரம் கடந்துவிட்டது. .நீர்க்கோலம் ஊறியெழவேண்டும், ரங்கநாதர் அருளால்.

*****

முந்தைய கட்டுரைஜெயகாந்தன் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமுதலாளித்துவப் பொருளியல் – கடிதங்கள்.2