முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும்
முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும் 2
அன்புள்ள ஜெ.,
என்னுடைய அனுபவங்கள் சில
1) இன்றும் இடதுசாரி, வலதுசாரி இரண்டுக்கும் பலருக்கு அர்த்தம் தெரியாது. ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய இடத்தில் இருந்த என் நண்பனுக்கு, இந்தவேறுபாட்டை அறிவதன் முக்கியத்துவத்தைப் புரியவைக்க எனக்கு 3 ஆண்டுகள் ஆயின.
2) சோஷலிஸம், கம்யூனிசம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைக் கேட்டாலே முகநூலில் பலர் ஓட்டம் எடுத்துவிடுவர். அதிலும் மோசம், சீனா ஒரு கம்யூனிச நாடு என நம்புவோர் இன்னும் பலர் இருக்கிறார்கள்.
3) என் நண்பர்கள் 80களின் வேலையில்லாத் திண்டாட்டத்தை நன்கு அறிந்தவர்கள். 94ல் நாங்கள் கல்லூரியில் சேரும்போதுகூட வேலை என்பது ஒரு உச்சகட்ட லட்சியமாகவே இருந்தது. ஆனாலும் அவர்களில் பெரும்பாலோர் இப்போது இந்த முதலாளிகளைத் திட்டித் தீர்க்கிறார்கள். இந்த மனநிலை எனக்குப்
பிடிபடுவதே இல்லை.
4) மென்பொருள்துறையில் லட்சங்களில் சம்பாதிக்கும் என் நண்பன் மிளகாய்ப்பொடியில் இருந்து குளிர்பானம் வரை எல்லாப்பொருட்களின் விலையையும் அரசே நிர்ணயிக்கவேண்டும் என்று எழுதியிருந்தான். கூடவே, மென்பொருள் சேவைக்கும் சம்பளத்திற்கும் கூட அரசு நிர்ணயம் வேண்டுமல்லவா என்று கேட்டேன். பதிலில்லை
இரண்டு காரணங்கள் – நம் பாடத்திட்டத்தில் பணவீக்கவிகிதம் போன்ற எளிய பொருளியல் விஷயங்கள் கூட சொல்லித்தரப்படுவதில்லை. (குறைந்தது நான் படிக்கும்போது).. அடுத்தது, இரட்டை மனநிலை. முதலாவது குறையைத் தங்கள் கட்டுரை தீர்க்கும். இரண்டாவதை ஒன்றும் செய்யமுடியாது, செவிடன் காது சங்குதான்
நன்று,
ரத்தன்
***
அன்புள்ள ஜெ,
நலமா ? நீண்ட நாட்களாகிவிட்டன தொடர்பு கொண்டு. முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும், இரண்டு பகுதிகளும் அருமை. சில இடங்களில் முரண்பட்டாலும், மிக சிக்கலான விசியத்தை எளிதில் புரியும்படி தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள். வளர்ந்த நாடுகளை போல் இந்தியாவில் இன்னும் திவால், கடன் வசூலிப்பு சட்டங்கள் வலுவாக, தெளிவாக இல்லாததால் பல சிக்கல்கள். அமெரிக்காவில் லார்கர் ஏர்லைன்ஸ் நிறுவனம் திவாலான போது, இரண்டே தினங்களில், அந்நிறுவன சொத்துகள் அனைத்தும் கடன் கொடுத்த வங்கிகள் வசம் சென்று, திவால் என்று அறிவிக்கப்பட்டது. அத்தகைய எளிமையான, தெளிவான சட்ட முறைகள் இங்கு இன்னும் evolve ஆகவில்லை.
தாரளமயமாக்கல் கொள்கைகள், இந்தியாவில் வறுமையை வெகுவாக குறைத்து, வேலை. வாய்ப்புகளை அதிகரித்தது பற்றி விரிவாக சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இத்தோடு இங்கு அடிப்படை ஜனநாயகமும் வலுவடைந்துள்ளது என்பதையும் பேச வேண்டும். 1970களில் இந்திரா காந்தி காலத்து சோசியலிச அழுத்தங்களில், உச்ச நீதிமன்றம், தேர்தல் கமிசன், மற்றும் இதர தூண்கள் அனைத்தும் மிருக பலம் கொண்ட மத்திய அரசின் முழுகட்டுபாட்டில், சுய அதிகாரம் இல்லாமல் கட்டுண்டு கிடந்தன. இந்திய பிரதமர்களில் இன்று வரை யாருக்கும் கிட்டாத பெரும் அதிகாரம், செல்வாக்கு, பயபக்தி கலந்த பொது மரியாதை இந்திரா காந்திக்கு தான் கிடைத்தது. இதற்க்கு அன்றை பொருளியல் கொள்கைகளும் முக்கிய காரணி. ஊடக சுதந்திரம் இன்று போல் அன்று சாத்தியமாகவில்லை. இதை பற்றி வரலாற்று தரவுகளுடன் நான் எழுதிய முக்கிய கட்டுரை இது :
சுதந்திர சந்தை பொருளாதாரமும் ஜனநாயகமும் http://nellikkani.blogspot.in/2013/01/blog-post_29.html இதை தமிழகத்தின் இடதுசாரி அறிவுஜீவிகள் அனைவருக்கும் மின்மடல் மூலம் அனுப்பியிருக்கிறேன். இன்று வரை ஒருவரும் மறுப்போ அல்லது ஒரு பதில் கூட அளித்த்ததில்லை !! ஒருவ்ரை திரையரங்கில் நேரில் சந்தித்த போது, நிறைய தரவுகளுடன் விரிவாக எழுதியிருக்கீங்க, ஆனா நேரமில்லை என்பதால் பதில் எழுதவில்லை என்று சொன்னார் ; கம்யூனிச வரலாறு பற்றி முக்கிய நூலைஎழுதியவர் !!
விமான சேவைகள் மிக மலிவடைந்துள்ளது பற்றி பேசினால் புரிந்து கொள்ளாமல, அதனால் ஏழைகளுக்கு என்ன பயன் என்று வறட்டுத்தனமாகவே பேசுவார்கள். அதை விட ஆடைகள் இன்று மிக மலிவாகவும், தாரளமாகவும் பரம ஏழைகளுக்கு கிடைப்பதை பற்றி பேசினால் எடுபடும். 1970களில் கந்தல் ஆடை மிக மிக சகஜம் என்பதை பற்றி நன்கு அறிவீர்கள். இன்று ஒரு நாள் கூலியில் ஒரு சட்டை அல்லது புடவையை எளிதில் வாங்க முடியும். லைசென்ஸ் கட்டுபாடுகளை நீக்கியவுடன் ஜவுளி உற்பத்தி துறையில் நடந்த அசுர மாற்றங்களின் விளைவு இது. ஆனால் இந்த மாற்றம் விவசாயத்தில் இன்னும் நடக்கவில்லை. இதை பற்றி எனது பதிவு :
உணவும், உடையும் http://nellikkani.blogspot.in/2011/07/blog-post.html
முகநூலில் முதலாளித்துவ பொருளிய அடிப்படைகள் பற்றி எழுத ஒரு 50 பேர்களாவது வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். நன்று. நான் அதை பல ஆண்டுகளாக விடாமல் முயன்று வருகிறேன். பல நேரங்களில் சக்கர வியுகத்தில் சிக்கிய அபிமன்யு போல் உணர்ந்திருக்கிறேன். ஒத்தை ஆளாக பல் முனை தாக்குதல்களை எதிர் கொள் வேண்டிய நிலை !! முன்பு போல் இப்ப அதிகம் ‘சண்டை’ இடுவதில்லை. பேசிட்டு போறாங்க, அதனால இப்ப என்ன ஆகப்போவுது என்ற தெளிவு பிறந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் எந்த கட்சி இருந்தாலும், இனி 1970களில் பொருளியல் கொள்கைகளை மீண்டும் யாரும் கொண்டுவரப் போவதில்லை. Irreversible process 1991க்கு பின் நடந்து வருகிறது.
1990க்கு முன்பு சாத்தியமாகத தலித் எழுச்சி இன்று சாத்தியமாகியுள்ளது. இதை பற்றி விரிவான தரவுகளுடன் எழுதிய இந்த பதிவை ‘முதலாளித்துவ வளர்ச்சியும், தலித் எழுச்சியும்’ http://nellikkani.blogspot.in/2015/06/blog-post.html பல இடங்களில் பகிர்ந்தும், யாரும் நேர்மையாக இதை பற்றி விவாதிக்க மறுக்கின்றனர். Denial mode மற்றும் மூடிய மனம் கொண்டவர்களையே அதிகம் காண்கிறேன்.
ஆனால் தொடர்ந்து முயல்கிறேன்.
அன்புடன்
K.R.அதியமான்
***
அன்புள்ள ஜெயமோகன் சார்,
‘முதலாளித்துவ பொருளியலும், விஜய்மல்லையாக்களும்’ தலைப்பே அசத்தல். சுற்றி இளம் பெண்களுடன் ஷாட்ஸ் அணிந்து கொண்டு நிற்கும் மல்லையாவைப் பார்த்து நானும் பொறாமைப்பட்டதுண்டு. அது அவரின் விளம்பர உத்தி என்பது உங்கள் கட்டுரையை படித்தபின் தான் உரைத்தது. கலைஞர்களும், விஞ்ஞானிகளும் எப்படி தங்கள் இயல்பான திறமையால் வெளிப்பட்டு கொண்டாடப்படுகிறார்களோ, அதேபோல் தொழில் முனைவோரும் கொண்டாடப்படவேண்டும் என்பது ஒரு புதிய திறப்பு.
தொழில் முனைவோரின் முன் உள்ள சவால்களான மூலதனம், மூலப்பொருட்கள், உற்பத்தி, நிர்வாகம், வினியோகம் ஆகிய இந்த ஐந்து இனங்களையும் இடது சாரி அரசுகள் கையாண்டு தோற்றதும், இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் எனும் கம்பமாக்கள், அசட்டை மற்றும் ஊழலால் ஊற்றி மூடப்பட்ட விவரனையும் அருமை.
அதானி, அம்பானி, மல்லையா போன்றவர்கள் மீது கசப்பேறிய காழ்புகளை, ஊடகங்களும் – முகநூல் மொண்ணைகளும் கொட்டி வரும் இந்த வேளையில், இந்த துணிச்சலான கட்டுரை எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..
(விஜய் மல்லையா லண்டனில் இருந்தபடியே உங்களுக்கு எத்தனை கோடி கொடுத்தார் என்கிற விவரங்களை, வழக்கமான உங்களின்
வசவாளர்களின் கட்டுரைகளில் பார்த்து தெரிந்து கொள்கிறோம்)
– எம். எஸ். ராஜேந்திரன்
திருவண்ணாமலை.
***
அன்புள்ள ஜெ
வலதுசாரி இடதுசாரிப்பொருளியலைப்பற்றிய அடிப்படைச் செய்திகள்தான். ஆங்கிலத்தில் கொஞ்சம் நாளிதழ்க்கட்டுரைகளை வாசிப்பவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் இதைக்கூடத்தெரிந்துகொள்ளாமல்தான் இங்கே முகநூலில் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பொதுவாக அரசியலையே ஒருவகையான அக்கப்போராக மட்டுமே இங்கே பார்க்கிறார்கள். உண்மையான பிரச்சினை அதுதான். கொள்கையாகவோ அல்லது கோட்பாடாகவோ பார்ப்பதில்லை. பார்க்கத்தெரியாது. வெறும் வெறுப்பு விருப்பு. அதை ஒட்டிய சலம்பல்கள். இதனால்தான் இந்த மாதிரி எளிமையான அடிப்படைகளையே சொல்லவேண்டியிருக்கிறது
ராமச்சந்திரன்
***