சிலநேரங்களில் சிலமனிதர்கள் – ஒரு கழுவாய்

Jeyakanthan

காலச்சுவடு பதிப்பகம் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சிலமனிதர்கள் நாவலை செவ்வியல் வரிசையில் வெளியிட்டிருக்கிறது. ஜெயகாந்தனின் புத்தகங்கள் எதற்கும் இத்தனை அழகிய பதிப்பொன்று வந்ததில்லை. அவர் தன் நண்பர்களின் நட்பை முதன்மையாகப் பேணுபவர் என்பதனால் தன்னுடைய வழக்கமான பதிப்பாளர்களை மாற்றியதில்லை. அவர்களுக்கு அட்டை என்பது அழகான ஒன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே இருந்ததில்லை.

ஜெயகாந்தனின் நூலை அழகிய தயாரிப்பில் பார்த்தது எனக்கொரு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படும் ஒருவருக்கு அழகிய நூலொன்று இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரே வருகிறது என்பதே விந்தையான ஒன்று. ஜெயகாந்தன் இருந்து இந்த பதிப்பை பார்த்திருந்தால் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று தயங்காமல் சொல்லலாம். நூல் வடிவமைப்பாளர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

உபால்டு கோட்டோவியமாக வரைந்த முழுப்பக்க விளம்பரம் ஒன்று 1976-ல் தினத்தந்தியில் வெளிவந்தது. ஒரு கார் தொலைவில் வருகிறது. சப்பையான காண்டஸா க்ளாசிக் அல்லது இம்பாலா. சிறிய உடல் கொண்ட ஒரு பெண் புத்தகங்களை அடுக்கியபடி சாலையோரம் நின்றிருக்கிறாள். கீழே சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் எழுத்துக்கள். அந்த கோட்டோவியம் அளித்த கற்பனையும் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற சொல்லாட்சியில் இருந்த அழகிய தாளமும் என்னைக் கவர்ந்தன. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட நினைவில் நிற்கும்படி அந்த விளம்பரம் என்னுள் பதிந்திருக்கிறது.

அந்நாட்களில் ஜெயகாந்தன் குமுதம் வார இதழில் ஒரு பக்கத் தொடர் கட்டுரை ஒன்று எழுதிக் கொண்டிருந்தார். நான் அவற்றின் தீவிர வாசகனாக இருந்தேன். அன்று எங்கள் வீட்டருகே இருந்த ஆரம்பப் பள்ளியில் தமிழாசிரியராக வந்தவர் எனக்கு ஜெயகாந்தனின் வாழ்க்கை அழைக்கிறது என்ற நாவலை வாசிக்கத் தந்தார். ஜெயகாந்தனின் மிக மோசமான நாவல் என்று அதைச் சொல்லலாம். அவரது முதல் நாவல் முயற்சி அது. ஆயினும் அது எனக்கு பெரிய உளக்கிளர்ச்சியை அளித்தது. தொடர்ந்து ஒரு மாதத்தில் அன்றுவரை வெளிவந்த ஜெயகாந்தனின் அனைத்து நாவல்களையும் படித்தேன். மூன்று நாவல்கள் அவருடைய வெற்றிகரமான ஆக்கங்கள் என்று எனக்குத் தோன்றியது. முறையே பாரீஸுக்குப்போ, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள்.

சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள் ஆகியவற்றை இணைத்து ஒரு பெரு நாவலாக வாசிக்கலாம். ஆனால் இந்த நாவலே கூட தன்னளவில் முழுமையான படைப்பு. அக்னிப்பிரவேசம் என்ற பெயரில் ஜெயகாந்தன் எழுதிய சிறுகதையும் அதை ஒட்டி வந்த விவாதங்களும் இந்த நாவலுக்கு வழிவகுத்தன. இது வெளி வந்த காலத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி அதனாலேயே வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. அக்னிப்பிரவேசம் கதை அன்று உருவாக்கிய விவாதத்தை இன்று மேலும் பெரிய வரலாற்றுப் பின்னணியில் பார்க்க முடியும்.

அந்தக் காலகட்டத்தில் ஆயிரமாண்டுக்கால இற்செறிப்புப் பண்பாடு உடைபட்டு, நூறாண்டுக்கால பெண்கல்வி இயக்கம் கனிகளை அளிக்கத் தொடங்கியிருந்தது. பெண்கள் கல்வி கற்க வெளியே சென்று கொண்டிருந்தார்கள். பெண்கள் வேலைக்கு போகலாமா கூடாதா என்பதைப்பற்றிய ஆழ்ந்த விவாதம் நடந்து கொண்டிருந்தது. வழக்கம் போல இந்தியச் சூழலில் பிராமணப் பெண்கள் தான் அதிகமாக படிக்கவும் வேலைக்குச் செல்லவும் முன்வந்தார்கள். வேளாளர்கள் முதலியார்கள் போன்றோர்கள் இன்னும் இறுக்கமான குலநெறிகளுக்குள் தான் பெண்களை வைத்திருந்தார்கள். பிராமணர்களின் ஆசாரியர்களான காஞ்சி சங்கராச்சாரியார் போன்றவர்கள் பெண்கள் கல்வி கற்பதையும் வேலைக்குச் செல்வதையும் கடுமையாக எதிர்த்து வந்தனர். ஜெயகாந்தனின் நாவல் வெளிவந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு கூட சங்கராச்சாரியார் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதும் கல்வி கற்பதும் வேலை செய்வதும் அவர்களை ஒழுக்கமற்றவர்களாக ஆக்கிவிடும் என்று கருத்துரைத்திருந்தார் என்பதை நினைவுகூரவேண்டும்

அன்றைய பிராமணர்களுக்கு ஒரு பெரிய சங்கடம் இருந்திருக்கலாம். அவர்களுடைய மதம், ஆசாரம் நம்பிக்கை ஆகியவை பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்கச் சொல்லின. அன்று உருவாகி வந்த புதிய வாய்ப்புகளும் அதன் லௌகீக சாத்தியங்களும் பெண்களை கல்வி கற்க வெளியே செல்லும்படித் தூண்டின. வேலைக்குச் செல்லும் பெண்களுக்குத் திருமணச் சந்தையில் பெரிய மதிப்பு இருந்தது. பெண்கள் வேலைக்குச் செல்வதன் வழியாக குடும்பங்கள் மிக எளிதாக பொருளியல் சிக்கல்களிலிருந்து விடுபடுவதை உணரமுடிந்தது. மேலும் மேலும் பிராமணப் பெண்கள் கல்விக்கும் வேலைக்கும் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் தங்கள் ஆசாரியனின் மறுப்பை எதிர்த்து பிராமணர்கள் வாதிடவும் இல்லை. ஒரு குற்றவுணர்ச்சியுடன் ஒரு மௌன அலையாகவே அவர்கள் மீறிக்கொண்டிருந்தனர்.

அந்தச் சூழலில் தான் ஜெயகாந்தனின் கதை வருகிறது. அதில் எளிய பிராமணப்பெண், அம்மன் சிலை போன்றவள், ஒரு கயவனால் எளிதில் பாலுறவுக்கு ஆட்படுத்தப்படுகிறாள். அவளை அவன் வலுக்கட்டாயமாக கவர்ந்து செல்லவில்லை. சொல்லப்போனால் பேசி ஏமாற்றி அழைக்கவும் இல்லை. அவளுக்குப் புதிய உலகத்தை எதிர்கொள்ளத் தெரியவில்லை, புதியசூழலை கையாளத்தெரியவில்லை என்பதனால் அவள் அவனுக்கு உடன்படுகிறாள். ஒரு வலுவான “நோ” வழியாக அவள் கடந்து வந்திருக்கலாம். ஆனால் அவள் காலாகாலமாக வீட்டில் அடைபட்டிருந்த பெண். அவளால் எதையும் மறுப்பது இயலாது. கைகால் உதற சொற்கள் தொண்டைக்குள் தாழ்ந்து போக மறுக்கத் தெரியாமல் இருந்த ஒரே காரணத்தாலேயே அவள் அவனுக்கு வயப்படுகிறாள். கூடவே அவளுடைய பருவ வயதின் விருப்பமும் இணைந்து கொள்கிறது.

sila-nerangalil-sila-manithargal

இந்தக் கதை பெண்கள் படிக்கவும் வேலைக்கும் செல்லலாமா கூடாதா என்று அன்றிருந்த விவாதத்தின் ஒரு பகுதியாக ஆனதனாலேயே அத்தனை கொந்தளிப்பையும் கிளப்பியது. சொல்லப்போனால் கதைக்கு வெளியேதான் விவாதம் நடந்தது. பெண்கள் வீட்டுக்கு வெளியே சென்றால் இத்தனை எளிதாக நெறி அழிவார்களா? வீட்டைவிட்டு வெளியேறும் பெண்ணுக்கு தன் தெரிவுகளும் தன் வழியும் தெளிவாக இருக்காதா? தன்னளவில் பெண் பலவீனமானவள் தானா? அவ்வாறு ஒரு பெண் தவறிவிட்டால் அதை அக்குடும்பம் இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? அது வழிவழியாக வந்த குலநெறிகளுக்கும் ஆசாரங்களுக்கும் எதிரானதாக ஆகாதா? அவளை அச்செய்தியை மறைத்து ஒருவனுக்குத் திருமணம் செய்துவைப்பது ஏமாற்றுவது ஆகுமா? அவ்வாறு ஒருவன் திருமணம் செய்து கொண்டபின் தெரியவந்தால் அவன் அவளை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இப்படி பல கேள்விகள்.

அன்றைய விவாதத்தில் இருசாராருக்கும் சொல்வதற்கான தரப்புகள் இக்கதையில் இருந்தன. பெண்கள் வீட்டைவிட்டு சென்றால் அவர்களால் தங்களை தற்காத்துக் கொள்ள முடியாது என்பவர்களுக்கு இந்தக் கதை ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது. பெண்ணின் கற்பு என்பது உள்ளம் சார்ந்ததே ஒழிய உடல் சார்ந்தது அல்ல என்று வாதிடும் முற்போக்குத் தரப்பினருக்கும் ஒரு மேற்கோள் கதையாக அமைந்தது. அதை மேலும் விரிவு படுத்தி ஜெயகாந்தன் எழுதிய இந்த நாவல் அந்தக் கேள்வியை பல்வேறு வரலாற்று பின்புலத்தில் வைக்கிறது.

ஜெயகாந்தன் மார்க்சியர் என்றாலும் வரலாற்று வாதத்தில் நம்பிக்கையற்றவர். எனவே இக்கதை அது நடக்கும் காலத்தில் முன்பு செல்வதே இல்லை. மரபையோ வரலாற்றையோ ஆராய்வதில்லை. நடைமுறைத்தளத்தில் வைத்தே கதையை பேசுகிறது. இந்தக் கதை எந்தவகையிலும் அதற்கு முன்பிருந்த மரபையோ தொன்மங்களையோ குறிப்புணர்த்துவதில்லை, விவாதிப்பதில்லை. ஆனால் இதற்குள் அன்றிருந்த மரபுகள் அனைத்தும் உள்ளன. அனைத்து வகையான பாலியல் மீறல்களையும் அனுமதித்துக் கொண்டு மேலே ஒரு ஆசாரவாதத்தை போர்த்திக் கொண்டு இருக்கும் மரபின் முகமாகவே இதில் வெங்கு மாமா வருகிறார். வெறும் லௌகீக அற்பப் பிறவிகளாக வாழும் சூழலின் பிரதிநிதியாக கங்காவின் அண்ணா வருகிறார். வீட்டுக்குள் அடைபட்டு சுயசிந்தனையற்றிருக்கும் பெண்களின் முகமாக அம்மா. இந்த மூன்று தரப்புகளுக்குள் முட்டி முட்டி அலைக்கழியும் நவீனப்பெண் கங்கா. பழைய காலகட்டத்தில் முளைத்து புதிய காலகட்டத்தில் இலைவிடும் தளிர்.

ஜெயகாந்தன் எழுதிய அனைத்து கதைகளுக்கும் யுகசந்தி என்று தலைப்பு கொடுத்துவிடலாம். சமூக மாறுதலின் ஒரு காலகட்டத்தில் அந்த விழுமிய மாற்றங்களை தன் வாழ்க்கையிலேயே சந்திக்க நேரும் கதாபாத்திரங்கள் அவரால் எழுதப்பட்டவர்கள். சரிதவறுகளும் செல்வழிகளும் குழம்பிக்கிடக்கும் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து தன்னையும் சூழலையும் மறுபரிசீலனை செய்து அழுதும் சிரித்தும் தங்கள் வழியைக் கண்டடைபவர்களும் வீழ்பவர்களும். ஆனால் அடிப்படையில் ஒரு மார்க்சியர் என்பதனால் அவர் எப்போதும் நம்பிக்கை சார்ந்த பார்வையையே தேர்ந்தெடுக்கிறார். அதற்கு ஒரே விதிவிலக்கென்று சில நேரங்களில் சில மனிதர்களையே சொல்ல முடியும். இது கங்காவின் மாபெரும் வீழ்ச்சியின் கதை.

வெளிவந்த காலத்தில் சிறுபத்திரிகை சார்ந்த இலக்கியச்சூழலால் இந்த நாவல் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு பல காரணங்கள். சிற்றிதழ்ச் சூழல் அன்று தன்னை மையப்போக்கிலிருந்து பிரித்துக் கொண்டு தனியடையாளத்தை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தது. எது இலக்கியம் என்பதை விட எது இலக்கியம் அல்ல என்பதுதான் அன்றைய பேச்சுகளில் முக்கியமானது. பெரும்பாலும் மேற்கத்திய இலக்கியங்களைச் சார்ந்து ஒரு இலக்கியப்பார்வையை இங்கு உருவாக்க முடியுமா என்று முன்னோடி முயற்சிகள் நடந்து கொண்டிருந்த காலம். தீவிர இலக்கியம் என்பது எல்லாவகையிலும் பொதுமக்களின் ரசனைக்கு எதிரானதாகவும் மாற்றானதாகவும் இருக்கும் என்ற நிலைபாடு ஓங்கியிருந்தது.

அத்துடன் அன்றைய சிறுபத்திரிகையின் வாசகர்கள் என்பவர்கள் அதிகபட்சம் ஆயிரம் பேர். அவர்கள் தங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை விரும்புபவர்கள். பொது ரசனையை எவ்வகையிலும் தங்களுடன் இணைக்க விரும்பாதவர்கள். அவர்களில் கணிசமானவர்கள் ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்களோ ஒதுக்கப்பட்டவர்களோ ஆகவே அவர்கள் இருந்தனர். ஆகவே வாசிப்பு என்பதும் அழகியல் நிலைபாடு என்பதும் பொதுப்போக்கு மீதான ஒரு வஞ்சமாகவும் வன்மமாகவும் அவர்களிடம் இருக்கவும் செய்தது என்று இப்போது தோன்றுகிறது.

ஆகவே அவர்களின் நிராகரிப்புகளும் மிகக்கூர்மையாக இருந்தன. வெற்றி பெற்றவர் என்பதனாலேயே அதிகமாக வாசிக்கப்பட்டவர் என்பதனாலேயே ஜெயகாந்தன் அவர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார். சிறுபத்திரிகைச் சூழல் சார்ந்த மயக்கங்கள் கலைந்து அதை பகல் வெளிச்சத்தில் வந்து பார்க்கும் இடத்திற்கு வந்துவிட்டிருக்கும் இன்று, சிறுபத்திரிகை சூழலின் உருவாக்கமாகிய நான் அன்றைய சிற்றிதழ்சார் வாசகர்களின் ‘பாடல்பெற்ற’ ரசனைக்கூர்மை மீது ஆழ்ந்த ஐயம் கொண்டிருக்கிறேன்.

7829

முக்கியமாக முன்னோடிகள் வகுத்த வழியிலேயே பெரும்பாலும் அவர்களுடைய ரசனை நிகழ்ந்தது. அவர்கள் அன்று அதிகபட்சம் ஐம்பது பேர் கொண்ட சிறு சிறு குழுக்களாகவே இருந்தனர். அக்குழுக்களுக்கு தலைமை தாங்கிய ஒருசிலரின் கருத்துக்களையே பிறர் பகிர்ந்து கொண்டனர். உதாரணமாக மௌனி மணிக்கொடியிலும் பின்னர் தேனியிலும் எழுதிய காலகட்டத்தில் அவருடைய கதைகளை அன்றிருந்த மணிக்கொடியினரோ பிறரோ அடையாளம் கண்டுகொள்ளவோ பாராட்டவோ இல்லையென்று எம்.வி.வெங்கட்ராம் குறிப்பிடுகிறார். பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் க.நா.சு. அவை முக்கியமான கதைகள் என்று சொல்ல ஆரம்பித்தார். மௌனியின் முக்கியத்துவம் தொடர்ந்து பேசி அவரால் நிலைநிறுத்தப்பட்டது. அதன் பின்னரே செல்லப்பா இணைந்து கொண்டார். அவர்கள் இருவருமே மௌனியின் இடத்தை தமிழில் நிறுவினார்கள். ஒருவேளை கு.ப.ரா. போல மௌனி முன்னரே இறந்துவிட்டிருந்தால் தனக்கு இலக்கியத்தில் வந்த அந்த முக்கியத்துவம் தெரியாமலேயே சென்றிருப்பார்.

இவர்களின் வாசிப்பு சார்ந்த உளநிலைகள் மிகச்சிக்கலானவை. தான் மட்டுமே தேடி வாசிக்கும் ஒன்று அபூர்வமான ஒன்றாக இருக்கவேண்டும் என்று இவ்வாசகன் நினைக்கிறான். தனக்குரிய இலக்கியமே எங்கோ பதுக்கப்பட்டிருப்பதாகவும், அதைத் தேடி நூலக அடுக்குகள் வழியாக தான் சென்று கொண்டிருப்பதாகவும் ஒரு கனவு அவனை இயக்குகிறது. அது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒருவகையில் எங்கோ மறைந்திருக்கும் புகழ் பெறாத ஒரு எழுத்தாளனைக் கண்டுபிடித்து தங்களுடையவனாக சொல்லும் ஒரு பாவனை அவனிடம் கைபடுகிறது. மௌனியும் பின்னர் நகுலனும் பின்னர் சம்பத்தும் ஜி.நாகராஜனும், ப.சிங்காரமும் இவ்வாறு வெவ்வேறு காலகட்டங்களில் அவர்களால் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இது ரசனையின் தேடல் அல்ல. தன்னைப்பற்றிய ஒரு புனைவை உருவாக்கும் முயற்சி மட்டும் தான்.

ரசனை என்பது அனைவரும் கவனிக்கும் மேடையின் உச்சியில் நின்றிருப்பதால் ஜெயகாந்தனை புறக்கணிக்காது. எவராலும் கவனிக்கப்படாமல் இருந்ததனால் ப.சிங்காரத்துக்கு மேலதிக அழுத்தத்தையும் கொடுக்காது. அந்த சமநிலை அன்றும் இன்றும் சிற்றிதழ் சூழலில் இருந்ததில்லை. ஜெயகாந்தனை வாசிப்பதும் விவாதிப்பதும் சரி ஒரு அறிவு ஜீவியின் அடையாளத்தை தருவதில்லை என்பதனால் அவர் புறக்கணிக்கப்பட்டார், படுகிறார். அவர் விவாதிக்கப்பட்டு, படைப்புகளின் நுட்பங்கள் முழுமையாக வாசிக்கப்பட்டு, கடக்கப்படவில்லை.

அத்துடன் சமகால சர்ச்சைகள் பெரும்பாலும் படைப்புகளை மறைத்துவிடுகின்றன. படைப்புகளின் மீது பொதுக்கருத்து எனும் பெரும் கம்பளத்தை அவை போர்த்திவிடுகின்றன. பெண்ணின் சுதந்திரம் கற்பு ஆகிய இரு கோணங்களிலேயே அன்று ஜெயகாந்தனின் இந்நாவல் எதிர்கொள்ளப்பட்டது. அதை ஒட்டியே அனைத்து கருத்துகளும் வெளிவந்தன. ஆகவே இது அதைப்பற்றிய நாவல் மட்டுமே என்று முழுமையாகவே வகுக்கப்பட்டுவிட்டது. அது நாவலுக்கு மிக மேலோட்டமான ஒரு வாசிப்பை அளித்தது. அவ்வகையில் பெரும்புகழ் பெற்ற நாவல் அப்பெரும்புகழாலேயே மறைக்கப்படுகிறது என்பது உண்மைதான்.

ஐம்பதாண்டுகாலம் இந்நாவல் வாசிக்கப்பட்டதை இன்று பார்த்தால் அது இந்நாவலுக்கு நியாயம் செய்ய வில்லை என்று தான் தோன்றுகிறது. இத்தகைய சூழலில் இந்தப் பொதுவாசிப்பின் திரையைக் கிழித்து விலக்கி மேலதிக வாசிப்பை அளிப்பதும் புதிய வாசிப்புக்கான சாத்தியங்களைத் திறந்து கொடுப்பதும் விமர்சகனின் வேலை. ஆனால் அத்தகைய கூரிய விமர்சனங்கள் தமிழில் எப்போதும் இருந்ததில்லை. க.நா.சு. சுந்தர ராமசாமி போன்றவர்கள் இலக்கிய சிபாரிசுக்காரர்கள். இலக்கியங்களைச் சுட்டிக் காட்டுவதன் வழியாக ஒரு பொதுச் சித்திரத்தை உருவாக்க முனைந்தவர்கள்.. இலக்கியப் படைப்புகளுக்குள் சென்று பிறர் வாசிக்காதவற்றை வெளியே கொண்டு வைத்து புதிய சாத்தியங்களை நோக்கித் திறக்கும் வல்லமை கொண்ட எழுத்துக்கள் அல்ல அவர்களுடையவை. தமிழில் அத்தகைய விமர்சகனின் பெருங்குறை எப்போதும் இருந்துகொண்டிருக்கிற்து என்பதற்கு ஜெயகாந்தனின் இந்நாவல் மீதான வாசிப்பு ஒரு முக்கியமான சான்று.

நீண்ட இடைவெளிக்குப்பின் இந்நாவலை இன்று வாசிக்கையில் இதன் மொழிநடை புதிதாக இருப்பதுபோல் தோன்றியது வியப்பளித்தது. அதற்கான காரணம் என்ன என்று என் கோணத்தில் யோசித்தேன். செம்மை நடையில் எழுதப்பட்ட பகுதிகள் தான் எப்போதும் விரைந்து காலாவதியாகின்றனவோ என்று தோன்றியது. ஏனெனில் பேச்சு மொழி என்னும் உயிர்த்துடிப்பான ஒரு மொழிபிலிருந்து அறிவு பூர்வமாக அள்ளப்படுவது அந்த செம்மைநடை. அந்தக் காலகட்டத்திலுள்ள பொதுவான பிற மொழிபுகளின் பாதிப்புள்ளது அது. அன்றைய பத்திரிகை நடை, மேடைப்பேச்சுநடை, அரசுத் துறைகளில் பயன்படுத்தப்பட்ட மொழி ஆகிய பல விஷயங்கள் அதை தீர்மானிக்கின்றன.

ஜெயகாந்தன் இந்நாவலை கங்காவின் பேச்சு மொழியில் அமைத்திருக்கிறார். அந்த மொழி பெரும்பாலும் அப்படியேதான் இன்றும் புழங்குகிறது. இந்நாவல் உருவாக்கும் காலகட்டத்தின் நேரடிப் பிரதிநிதித்துவம் அந்த மொழிக்கு இருக்கிறது. ஆகவே அந்த மொழியினூடாக அந்தக் காலத்திற்குள் செல்ல முடிகிறது. கங்காவுடன் ஒரு நீண்ட உரையாடலில் ஈடுபட்ட உணர்வை இந்நாவல் அளிக்கிறது.

jeyakanthan

இன்றைய வாசிப்பில் இது பெண்சுதந்திரம் பற்றிய நாவல் அல்ல என்றே தோன்றுகிறது. இது பெண்ணின் தனித்தன்மை பற்றிய நாவல். பெண்ணின் பாலியல் உரிமை பற்றிய நாவல். பெண்ணில் பாலியல் தேடல் பற்றிய நாவலும் கூட. அவ்வகையில் தமிழில் எல்லாத் தளத்திலும் முதன்மையான் பெரும் படைப்புகளில் ஒன்று என்று இதை தயங்காமல் சொல்வேன்.

இக்கோணங்களில் இதுவரை இந்நாவல் வாசிக்கப்பட்டதில்லை. கங்கா தேடுவது தனக்கென ஒர் அடையாளத்தை. காலூன்றி நின்று கிளைவிரிக்க ஒரு பிடி மண்ணை. அதை ஒரு ஆண் தான் உனக்குக் கொடுக்க முடியும் என்று அவளிடம் மரபு சொல்கிறது. அவள் அதைத் தேடி கண்டடைந்து அங்கு நிற்க முயல்கிறாள். அது மாயை என்று பெரும் வலியுடனும் துயரத்துடனும் அவள் கண்டடைகிறாள். பிறிதொரு அடையாளத்தை தனக்கென தேடிக்கொள்ள அவளால் இயலவில்லை. மூர்க்கமாகத் தன்னைக் கலைத்துக் கொள்கிறாள்.

இன்னொரு கோணத்தில் வாசித்தால் இது கங்காவின் பாலியல் சுதந்திரத்துக்கான தேடலைக் காட்டுகிறது. அன்று காரிலிருந்து இறங்கி வருகையில் அவள் வாயில் ஒரு சூயிங்கம் இருந்தது. தான் ஒருவனுடன் இருந்ததை அவள் அன்னையிடம் சொல்லும்போது கூட அதை மென்றுகொண்டுதான் இருக்கிறாள். அம்மா அதை துப்பு என்கிறாள். அது ஒரு அசைபோடல். பெண்ணுடலின் கொண்டாட்டம்… ஆனால் அவளுக்கே அது தெரியவில்லை.

அம்மா அழுது ஊர்கூட்டி குடும்பத்தாலும் சுற்றத்தாலும் பழிக்கப்பட்டு கெட்டுப்போன பெண்ணாக தன் வாழ்க்கையை அவள் அமைத்துக் கொள்ளும்போது அப்படி என்ன தவறு செய்துவிட்டேன் என்ற எண்ணம் அவளுக்குள் இருந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய பாலியல் விடுதலையைத்தான் அவள் தேடுகிறாள். இயல்பான சகஜமான பாலியல் உறவொன்றுக்கான தேடலே அவளை மீண்டும் பிரபுவிடம் கொண்டு சேர்க்கிறது. மேலும் நுட்பமாகப் பார்த்தால் பாலியல் வேட்கை அதில் உள்ளது. முதல் நாள் முதல் அணுகலிலேயே பிரபுவை அவள் ஏற்றுக்கொண்டது. பெண்ணென அவளில் உறையும் ஒன்றின் இயல்பான விருப்பத்தால் தான் அவளுக்குரிய ஆண் அவன். அதை அவள் உடல் அறிந்திருந்தது. உள்ளத்தின் ஆழம் அறிந்திருந்தது. பிறிதொருவன் அதேபோல வந்து அவளை அழைத்திருந்தால் சீறி எழுந்திருக்ககூடும்.

அவனை அவள் ஏற்றுக் கொள்வது சமூகமோ எதிர்காலமோ கற்பிக்கப்பட்ட நெறிகளோ தடையாக இருக்கவில்லை. ஏனெனில் அவை அனைத்தும் எண்ணத்தில் வருமளவுக்கு அவளுக்கு வயதாகி இருக்கவில்லை. பின்னர் அவனை மீண்டும் காண்பது வரை அவளுக்குள் அந்த சூயிங்கத்தை அவள் ரகசியமாக மென்று கொண்டு தான் இருந்தாள். உனது கணவன் கந்தர்வ முறைப்படி உன்னுடன் இருந்தவன் தான் முடிந்தால் அவனைத் தேடிக் கண்டுபிடி என்று வெங்குமாமா சொல்லும்போது அவள் அவனைத் தேடிச் செல்வது, மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு வீம்பினால் தனது ஆளுமையை தேடிக் கண்டடைய வேண்டும் என்ற வெறியினால். உள்ளாழத்தில் அது பாலியல் விருப்பினாலும் கூட.

அந்நெருக்கத்தின் ஒரு கட்டத்தில் மானசீகமாக அவனிடம் தன் உடலை எடுத்துக் கொள்ளும்படி அவள் மன்றாடிக் கொண்டே இருக்கிறாள். எனது படுக்கையில் உனக்கு இடமிருக்கிறது என்று உணர்த்திக் கொண்டே இருக்கிறாள். ஒரு கட்டத்தில் அதை நேரடியாகச் சொல்லும்போது அவன் துணுக்குற்று விலகுகிறான். உண்மையில் அவள் உடைந்து சிதறுவது அதிலிருந்து தான். அவளுடைய சுய கௌரவமா தனித்தன்மையா பாலியல் வேட்கையா எது அவமதிக்கப்பட்டது என்ற வினாவை இந்நாவலில் இறுதியில் எடுத்துக் கொள்ளும்போதுதான் அதுவரைக்கும் அந்த நாவலின் உள்விரிவுகள் பல பகுதிகளைக் கொண்டு திறந்து கொள்கின்றன. அவளின்சிதைவு ஒரு தற்கொலையா ஒருவகையான பழிவாங்கலா அல்லது உடைவா பல கோணங்களில் இன்று இந்த நாவலை நாம் வாசிக்க முடியும்.

இத்தகைய வாசிப்பு ஒன்றை அன்றைய சிறுபத்திரிகை சூழல் ஜெயகாந்தனுக்கு அளிக்கவில்லை என்பது ஒருவகை அநீதி. அதற்கு அன்றைய சிறுபத்திரிகை சூழலை ஆண்டு கொண்டிருந்தவர்களில் முன்னோடிகள் ஒரு காரணம். இன்று புதிய கோணத்தில் இந்நாவலை வாசிக்கலாம். புதிய கண்டடைவுகளை நோக்கிச் செல்லவும் கூடும். எந்தச் சிற்றிதழ் விமர்சகன் விழிமூடினாலும் தமிழ்ச் சூழலில் இந்நாவல் அளவுக்கு பெண்களின் ஆளுமையை விழைவை சுதந்திரத்தை பாலியல் வேட்கையை விவாதித்த பிறிதொரு நாவல் இல்லை என்ற உண்மை நிலைநிற்கத்தான் செய்யும்.

இதனுடன் ஒப்பிடுகையில் பெரிதும் கொண்டாடப்பட்ட மோகமுள் போன்றவை உள் மடிப்புகளற்ற உணர்வுப்பெருக்கான படைப்புகள். தளுக்கினால் மட்டுமே பெரும்பகுதியைக் கடந்து சென்றவை என்பதைக் காணலாம். குறிப்பாக இன்று ஜானகிராமனின் மோகமுள் போன்ற நாவல்களின் உரையாடல்கள் அர்த்தமற்ற வெறும் வளவளப்புகளாக சலிப்பை ஏற்படுத்துகையில் சில நேரங்களில் சில மனிதர்களின் கூரிய உரையாடல்களும் சுய விமரிசன நோக்கு கொண்ட எண்ணங்களும் ஒன்றையொன்று வெட்டிச் செல்லும் தீவிரமும் பலமடங்கு மேலான ஒரு முதன்மைப் படைப்பாளியை நமக்குக் காட்டுகின்றன. வரலாற்றில் அந்த இடம் என்றும் ஜெயகாந்தனுக்கு அளிக்கப்படும் என்றே நான் நினைக்கிறேன். அதை எனக்கு உறுதிப்படுத்திய ஒன்று என்று இந்நூலுக்கு சுரேஷ்குமார் இந்திரஜித் அளித்த முன்னுரையைச் சொல்வேன்.

சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார் இந்திரஜித்தை தமிழ் சிறுபத்திரிகை சூழலின் மனநிலைகளின் மையத்தை சார்ந்த ஒருவர் என்று அடையாளப்படுத்தலாம். இந்நாவலை இப்போதுதான் அவர் வாசிக்கிறார் என்பது தெரிகிறது. இன்று வாசிக்கையில் ஒரு தேர்ந்த சிற்றிதழ் வாசகன் ஒருவன் இந்நாவலில் கண்டு கொள்ளும் பெரும்பாலான அனைத்து நுட்பங்களையும் அவருடைய் வாசிப்பு கண்டடைந்து முன்வைக்கிறது. நேற்றைய முன்னோடிகள் ஜெயகாந்தனுக்குச் செய்த புறக்கணிப்புக்கு ஒரு பிராயச்சித்தமாகவும் சுரேஷ்குமாரின் முன்னுரை அமைந்துள்ளது. கூரிய சொற்களில் முற்றிலும் புதிய பார்வையில் ஜெயகாந்தனை மீட்டு முன்வைக்கும் சுரேஷ்குமாரின் இந்த முன்னுரை காலச்சுவடு இந்நாவலுக்கு அணிந்திருக்கும் கட்டமைப்புக்கு நிகரான பெறுமதியுள்ளது. அதன் பொருட்டும் இதன் தொகுப்பாசிரியர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

முந்தைய கட்டுரைஆரோக்கிய நிகேதனம், வனவாசி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதேவதேவனின் மரங்கள்