காடு- ஒரு கடிதம்

 

kadu2

மதிப்பிற்குரிய ஜெயமோகனுக்கு,

ஜெயமோகன். என்ன மனுசன்யா நீ. நீ மட்டும் இப்ப என் கைல கிடச்சா, அள்ளி, அணைச்சு, அடிச்சு, துவச்சு, ஆரத் தழுவிடுவேன். பின்ன காட்டுத்தனமான அன்பை எப்படி காட்டுவதாம். இதுதான் காடு வாசித்துக் கொண்டிருந்த ஒரு காலைப் பொழுதின் மன நிலை. ஜெயகாந்தனை வாசித்தப் பிற்பாடு எழுத வேண்டும் என என்னுள் தோன்றிய எண்ணங்கள் ‘காடு’ வாசித்துக் கொண்டிருந்த போது எங்கே நம்மால் முடியாதோ என அறுபடத் தொடங்கின. ‘காடு’-ல் மொழி ஆளுமை அப்படி. தீனமான வீச்சு. நல்லவேளை நான் கவிஞன், ஜெயமோகன் எழுத்தாளர்(நீங்கள் கவிஞர் என அறிந்திருப்பினும்) செயல்படும் தளங்கள் வேறு என மனதை தேற்றிக் கொண்டு நான் கவிதைகள் என நம்பும் சிலவற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

காடு என்னுள் பற்றி எரிகிறது. இப்போதெல்லாம் எங்கு நோக்கினும் ‘முதைச் சுவர் கலித்த முற்றா இளம்புல்’ வரிதான். ஆனால் இது ஒன்றும் புதிதல்ல. ஏழாம் உலகம் வாசித்த நாள் முதல் ‘திருவண்ணாமலை’ என்றவுடன் நினைவுக்கு வருவது ‘சாவான பாவம் மேலே வாழ்வெனக்கு வந்ததடி, நோவான நோவெடுத்து நொந்துமனம் வாடுறண்டீ’-யும், கொற்றவைக்குப் பின் கன்னியாகுமரி என்றவுடன் ‘பஃறுளியாறும் பன்மலையடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’-வும் தான்.

‘காடு’ நாவல் வாசிப்பின் போது நான் பலவகையாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தேன். உண்மையில், வாசிப்புக்குப் பின்னான இப்போதும், இனி எப்போதும் என ஆகிவிட்ட ஆக்கிரமிப்புகள் அவை.

கொளுத்தும் வெயில் காலங்கள் இனி எனக்கு இருக்கப் போவதில்லை. பூக்கள் பூத்து, காய்த்து, பழமாகும் வசந்தங்களை ‘காடு’ உணர்த்திவிட்டது. முன்னாள் வெறும் பச்சை இலை குவியலாகத் தொங்கிய மரங்களின், செடிகளின், கொடிகளின் பெயர்களை அறிந்து உறவாட மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு செடியின், மரத்தின்,கொடியின்,மலரின் பெயரை அறிந்து கொள்ளும் போதும் என்னுள் ஒரு பூ பூக்கிறது. சென்ற வாரம் வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் செவ்வரளியை கண்டு கொண்டேன். ஒளி குன்றியிருக்கும் சன்னிதானத்தில் கரும்பாறைத் தளங்களில் சிதறிக் கிடக்கும் போது, அடடா, என்ன ஒரு வண்ணம் செவ்வரளிக்கு. காட்டை, மரங்களை, மலர்களை இன்னும் அருகில் சென்று ரசிக்க சாத்தியப்படுத்திய நாவல் ‘காடு’. கொன்றையையும், வேங்கையையும்,காஞ்சிரத்தையும் அறிய மனம் ஏங்குகிறது

மஞ்சள் நிற பூ பூக்கும் எந்த மரத்தைப் பார்க்கும் போதும் மனம் கொன்றையையும், வேங்கையையும் கூடவே நீலியையும் எண்ணிக் கொள்கிறது. லா.ச.ரா-வின் அபிதா ஏற்படுத்திய பாதிப்பை நீலி ஏற்படுத்திவிட்டாள். நீலியின் மரணம் தாங்க முடியாத, ஏற்றுக் கொள்ள முடியாத, ஆனால் ஏற்றே ஆக வேண்டிய பேருண்மையாக வெளிப்பட்ட போது ஒரு 10 நிமிடத்திற்கு எதுவும் ஓடவில்லை. அடுத்த வரியை படிப்பதே பெரும் துயரானதாக இருந்தது.

இன்னும் எவ்வளவோ அனுபவங்களை, குட்டப்பன்,இன்ஜினியர்,ஆங்கிலேய டாக்டர் போன்ற மனிதர்களை, அவர்தம் அனுபங்களை, குறுந்தொகைக்கான அறிமுகத்தை, காடு நாவல் தந்துள்ளது. அவை பற்றி தனியொரு கடிதம் எழுத வேண்டும். எழுதுவேன் என்ற நம்பிக்கையுடன்,

என்றும் அன்புடன்,

ம.கிருஷ்ணகுமார்

முந்தைய கட்டுரைபாகுபலியும் வெயிலும்
அடுத்த கட்டுரைஅனல் காற்று விமர்சனம் -கடிதம்