தொழில்முனைவோர் வெறுக்கப்படவேண்டியவர்களா?
தொழில் முனைவோர்கள் இல்லாத ஒரு பொருளியல் அமைப்பு உலக அளவில் ஓரிருமுறைதான் சோதித்துப்பார்க்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் கால சோவியத் ரஷ்யாவும் மாவோ காலகட்டத்துச் சீனாவும் இரு பெரும் உதாரணங்கள். போல்பாட்டின் கம்போடியா போன்றவை பேரழிவுகள். மார்க்ஸியப் பார்வையில் தொழில்முனைவோர் அல்லது பெருவணிகர்கள் சுரண்டல்காரர்கள் என்பதனால் மார்க்ஸியப்பொருளாதார அமைப்பு உருவான ஆரம்ப கட்டத்திலேயே அவர்கள் முழுமையாக அழித்தொழிக்கப்பட்டார்கள். மேலும் உருவாவது தடைசெய்யப்பட்டது
ஆனால் அங்கு உருவானவை மார்க்சியப் பொருளியல் அமைப்புகள் அல்ல. மார்க்சியப் பொருளியலில் மூலப்பொருளும் மூலதனமும் முழுமையாகவே தொழிலாளர் கைக்கு வரவேண்டும். நிர்வாகம் அவர்களால் நடத்தப்படவேண்டும். ஆனால் அந்த நாடுகளில் உருவான நாடுகளில் தொழிலாளர்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு வந்து அரசு தன் ஊழியர்கள் வழியாக நிர்வாகத்தை நடத்தியது. அதாவது அரசின் பிரதிநிதிகள் தொழில் முனைவோர் இடத்தை வகித்தனர். அது நம்மூர் அதிகாரிகள் நம்மூர் தொழில்களை நடத்தும் லட்சணத்திலேயே அமைந்தது.
மிக விரைவிலேயே தொழில் முனைவோர் என்ற ஆளுமை இல்லாததன் குறைகள் அப்பொருளியல்முறையில் உணரப்பட்டன. உதாரணமாக ஒரு பொருளியல் அமைப்பு அறிவியலாளர்களையும் சிந்தனையாளர்களையும் முற்றிலும் தடைசெய்யும் என்றால் எதையெல்லாம் அது இழக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அறிவியலாளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் அரசுஊழியர்ள் வருவார்கள் என்றால் என்ன ஆகும்? அந்த பேரழிவே அங்கும் ஏற்பட்டது. பல தொழில்களில் தொடர்ச்சியான வீழ்ச்சி உருவாகத் தொடங்கியது.
ஆகவே மார்க்ஸியப்புரட்சியை நிகழ்த்திய ருஷ்யாவும் சீனாவும் வேறு வழியில்லாமல் அரசுக்கட்டுப்பாட்டுக்குள் தனியார் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்க ஆரம்பித்தன. தொழில் முனைவோர்களை அந்த அமைப்புக்குள்ளேயே அனுமதிக்க்கத் தொடங்கின. சோவியத் ரஷ்யாவின் இறுதிக்காலத்தில் பலவகையான தொழில் முனைவோர்களை அரசு சார்ந்த நிர்வாகிகள் என்ற போர்வைக்குள் அவ்வரசு அனுமதித்தது. அவர்களே இன்றைய ருஷ்யாவின் பெருமுதலாளிகள். சீனா அதை முன்னரே ஊகித்து விடைவாக முன்னெடுத்து முற்றிலும் தனியார்மயத்தை கொண்டுவந்து தனியார் முதலாளிகளையும் தொழில் முனைவோரையும் வளர்த்தெடுத்தது.
இன்று அமெரிக்க முதலாளித்துவத்திற்கும் சீனமுதலாளித்துவத்துக்கும் எந்த பெரிய வேறுபாடும் இல்லை. அந்த தனியார்முதலாளிகளே வேறுமுகங்களுடன் அரசையும் நடத்துகிறார்கள் என்பது மட்டுமே சீனாவை வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்த மார்க்ஸியப்பெருமுதலாளித்துவம் என்னும் விசித்திரமான பொருளியல் கொண்ட நாடுகளை அண்டிவாழும் கியூபா போன்ற நாடுகளில் உள்ளீடற்ற ஒரு பொருளியல் சித்திரம் உள்ளது. அது எவ்வகையிலும் பொருட்படுத்தத் தக்கதல்ல.
ஆகவே இடதுசாரிகள் கற்பனை செய்த ‘தொழில்முனைவோரற்ற பொருளியல்’ என்பது அதிக பட்சம் முப்பது ஆண்டுக்காலம் உலகத்தில் சோதித்துப்பார்க்கப்பட்டு முழுத்தோல்வி அடைந்த ஒன்று. அதற்கு எந்தவகையான நடைமுறை வெற்றியும் இதுவரை அடையப்படவில்லை என்பது தான் உண்மை.
இச்சூழலில் இந்தியாவை நாம் பார்க்க வேண்டும். இந்தியச் சுதந்திரம் கிடைத்தபோது நமக்கு முன்னுதாரணமாக இருந்தவை இரண்டு நாடுகளின் ஒரு வழிகள். அமெரிக்கா, ருஷ்யா. அமெரிக்கா முதலாளித்துவ பொருளியலையும் ரஷ்யா கம்யூனிசப் பொருளாதாரம் என்று சொல்லப்பட்ட அரசுமுதலாளித்துவ பொருளியலையும் கொண்டிருந்தது. இரு நாடுகளும் சீரான வளர்ச்சியையும் காட்டின. இதில் நேருவுக்கு மார்க்ஸியப் பொருளியலில் இருந்த இலட்சிய வாதத்தன்மை காரணமாக ரஷ்யா மீது மேலதிகமான ஈடுபாடு இருந்தது.
மேலும் அன்று ரஷ்யா தன்னுடைய வளர்ச்சிக்கான பொய்யான புள்ளிவிவரங்களை மாபெரும் பிரச்சார இயந்திரம் வழியாக வெளிக்கொட்டிக் கொண்டிருந்தது. உண்மையில் ரஷ்யாவின் உள்நாட்டுப்பொருளியல் கடுமையான சரிவில் இருந்தது என்பது பெரும்பஞ்சங்களால் மக்கள் இறந்துகொண்டிருந்தனர் என்பதும் பின்னர் வெட்டவெளிச்சமாகியது. அவர்கள் காட்டிய அந்த மேலோட்டமான பொருளியல் வளர்ச்சிக்குக்க்கூட முதன்மைக் காரணமாக அமைந்தவை ருஷ்யா கம்யூனிசப்புரட்சி என்ற பேரால் ஆக்ரமித்துவைத்திருந்த ஐரோப்பிய நாடுகளில் ருஷயாவால் நிகழ்த்தப்பட்ட உச்சகட்ட சுரண்டலும் ருஷ்யாவுக்குள்ளேயே நிகழ்த்தப்பட்ட கடுமையான உழைப்பு முகாம்களும்தான் என்பதும் பிற்காலத்தில் வரலாற்றில் தெரியவந்தது.
இலட்சியவாதியான நேரு ருஷ்யாவால் ஈர்க்கப்பட்டார் .அதற்கு இன்னொரு காரணம் சோவியத் ரஷ்யாவின் பின்னணி கொண்ட மகாலானோபிஸ் போன்ற பொருளியல் நிபுணர்கள் அவருக்கு அணுக்கமாக இருந்தார்கள் என்பது. ஆகவே இங்கு ஒரு கலப்புப் பொருளாதாரத்தை நேரு உருவகித்தார்.
அதுவன்றி வேறு வழியும் அவருக்கு இருக்கவில்லை ஏனெனில் இந்திய முதலாளித்துவம் என்பது இந்திய சுதந்திரத்துக்கும் வெகுகாலத்துக்கு முன் உருவாகி வந்தது. டாட்டா, பிர்லா போன்றவர்கள் அடிப்படைக்கட்டுமானம், உற்பத்தித் தொழில்களில் வேரூன்றிவிட்டிருந்தார்கள். அவை இந்தியப்பொருளியலின் மிக அடித்தளமாக முன்னரே மாறிவிட்டிருந்தன. அவற்றை நாட்டுடைமையாக்கினால் இந்தியா வாழமுடியாது என்பது நேருவுக்கு தெரிந்திருந்தது.
ஆகவே புதிதாக உருவாகிவந்த பெருந்தொழில்களை மட்டும் அரசுமுதலீட்டில் உருவாக்கினார். பொதுத்துறைகளை உருவாக்கி முதன்மைத்தொழில்களை அவற்றால் நிகழ்த்தியும் முதலாளிகளை பலவகையான கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதித்தும் ஒரு கலவைப்பொருளாதாரத்தை நேரு கட்டமைத்தார்.
எந்த ஒரு பொருளியலுக்கும் அடிப்படையாக அமைபவை பெருந்தொழில்கள். அவற்றில் பெரும்பாலானவை உற்பத்தி மற்றும் சேவை சார்ந்தவை. இந்த தொழில்களை வளர்த்தெடுப்பது என்பது ஒரு பொருளியலின் அடிப்படைக் கட்டுமானத்தைக் உருவாக்குவதுதான். அதன் மீதுதான் நூற்றுக்கணக்கான சிறுதொழில்கள் உருவாகி வரமுடியும். உதாரணமாக இரும்பு உருக்கு , போக்குவரத்து, துறைமுகம் போன்றவை. இத்துறைகளை நடத்துவதற்கான மாபெரும் பொதுத்துறைகளை அரசு நிதி பெய்து நேரு உருவாக்கி எடுத்தார்.
அவை நம் தேசப்பொருளியலின் அடித்தளத்தை உருவாக்கின என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் நேருவின் காலகட்டத்தில் சுதந்திரப் போராட்ட இலட்சியவாதம் எஞ்சியிருந்தது. அந்தக் கனவை தானும் கொண்டிருந்த மாமனிதர்கள்தான் அன்றைய பொதுத்துறையை ஆரம்ப கட்டத்தில் நிர்வகித்தனர். மிகச் சிறந்த உதாரணம் என்பது ஃபேக்ட் கொச்சின் போன்ற அமைப்பை நடத்திய எம்.கே.கே நாயர். நான் மிகவிரும்பும் தன்வரலாறான அவருடைய நூலில் அந்நிறுவனத்தை அவர் கிட்டத்தட்ட போர்க்களத்தில் நிற்கும் வீரனுக்குரிய அர்ப்பணத்துடன் உருவாக்கிய சித்திரம் உள்ளது. தனியார் துறையில் ஒரு தொழில் முனைவோர் எந்த அளவுக்கு தீவிரமும் வெல்லும் திறனும் அர்ப்பணிப்பும் கொண்டிருப்பாரோ அதே குணாதிசயங்களை பொதுதுறைக்குள் அவர் காட்டினார் அப்படி ஒரு ஐம்பதுபேரை என்னால் குறிப்பிடமுடியும்.
ஆனால் இதன் வெற்றிகளை இந்தியச் சமூகம் அடைந்தது நமது ஆரம்ப கட்டத்தில் மட்டுமே. மிக விரைவிலேயே அந்த உணர்வுகள் காலாவதியாயின. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப்பொதுத் துறைகள் முழுக்க ஊழலால், பொறுப்பின்மையால், ஒருங்கிணைவின்மையால் சீரழியத் தொடங்கின. அவற்றில் கொள்ளையடிப்பதன்றி வேறு நோக்கமே இல்லாத கீழோர் வந்து குழுமினர். மேலிருந்து கீழ் வரை ஊழலும் அரசுப்பண வீணடிப்பும் நிகழ்ந்தன.
முப்பதாண்டுகளுக்குள், எழுபதுகளிலேயே பொதுத்துறை நிறுவனங்களே இந்தியாவின் மிகப்பெரிய பொருளியல்சுமைகள் என்று உணரத்தொடங்கியது அரசு. அதை கரீபிகடாவோ போன்ற கோஷங்களால் மூடிமறைக்கவும் அவசரநிலை போன்று சாட்டையைச் சொடுக்கி விசைகூட்டவும் அரசு முயன்றது. எண்பதுகளில் ஒன்றுமே செய்யமுடியாது என்னும் நிலைவந்தது. இந்தியப்பொருளியல் கிட்டத்தட்ட உச்சகட்ட தேக்க நிலையை எட்டியது.
இந்தப் பொதுத்துறை நிறுவனங்களை பேணும்பொருட்டு தனியார் துறைகளை மிக கடுமையாக் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள்.ஆகவே வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. அன்று உச்சகட்ட வேலையில்லாத் திண்டாட்டம் இருந்ததற்கு மிக முக்கியமான காரணம் வேலைவாய்ப்பை உருவாக்கும் அனைத்துத் துறைகளையும் பொதுத்துறைகள் கட்டுப்படுத்தி வைத்திருந்தன என்பதுதான். பொதுத்துறைகள் தேக்கமுற்றிருந்ததனால் அந்த துறைகளும் தேக்கமுற்றன. இன்றைய தலைமுறை அதை கலாப்ரியா, வண்ணநிலவன் போன்றவர்களின் கதைகள் வழியாக பாலைவனச்சோலை, வறுமையின்நிறம் சிவப்பு போன்ற சினிமாக்கள் வழியாக உணரலாம்.
பொதுத்துறைகளை என்ன செய்வது என்ற வினா எண்பதுகளில் எழுந்து வந்தது. அவற்றிலிருந்து பெருச்சாளிகளை வெளியேற்ற வேண்டுமென்ற கோரிக்கை ஓங்கியது .ஆனால் கீழிருந்து மேல்வரை ஒட்டுமொத்தமாக அந்த அமைப்பே பெருச்சாளிகளால் ஆனதாக இருக்கும் போது அவற்றைக் கலைக்காமல் வேறு வழியில்லை என்பது விரைவில் கண்டடையப்பட்டது. அந்த கண்டடைதல் ராஜீவ் காந்தி காலத்தில் ஒரு வலுவான மாற்றுப் பொருளியல் உருவகமாக எழுந்தது. அதன் பிறகு நரசிம்ம ராவ் காலத்தில் தான் சோஷலிசம் அரசுமுதலாளித்துவம் சார்ந்த இந்தியாவின் சபலங்கள் முற்றாக மறைந்தன.
பொதுத்துறையின் நிதி மெல்லமெல்ல பின்னெடுக்கப்பட்டு தனியாருக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உருவான பொருளியல்மாற்றத்தையே நாம் புதியபொருளியல்கொள்கை என்கிறோம். தொழில்முனைவோர் ஊக்கப்படுத்தப்பட்டனர். அவர்கள் பொருளியல் வளர்ச்சியையும் சாதித்துக் காட்டினர். சென்ற இருபதாண்டுகளில் நாம் அடைந்துள்ள அத்தனை வளர்ச்சிகளும் புதியபொருளியல்கொள்கையின் சாதனைகளே.

அன்று வரை இந்தியாவில் இருந்து வந்த லைசன்ஸ் ராஜ் என்று சொல்வார்கள். ஒரு சராசரி தொழில் முனைவோர் இந்திய அரசாங்கத்தாலேயே குற்றவாளியாகவும் சுரண்டல்காரராகவும் தான் பார்க்கப்பட்டார். தான் ஒரு குற்றவாளி அல்ல, சுரண்டல்காரர் அல்ல என்று அவர் நூற்றுக்கணக்கான இடங்களில் நிரூபித்த பிறகே அவருக்கு தொழில் தொடங்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதை நம் அரசதிகாரிகளே முடிவெடுத்தனர். எந்தத் தொழில்முனைவோரும் பொதுத்துறைக்கு நஷ்டம் ஏற்படுத்தும் ஒருதொழிலை செய்யமுடியாது. அப்படி ஐயம் வந்தாலே வாய்ப்பு மறுக்கபப்டும்
ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு அதிகாரியின் வாசலிலும் ஊழல் வழியாகவே அதைக் கடக்க வேண்டிய கட்டாயம் தொழில்முனைவோருக்கு இருந்தது. ஒரு கட்டத்தில் ஒவ்வொரு தொழில் முனைவோரும் தனது லாபத்தில் ஒரு பகுதியை இந்தியாவின் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக பொதுவாகவே தொழில்முனைவோரிடம் பெரும் சோர்வு இருந்தது. ஆனாலும் இந்தியாவில் தொழில் முனைவோர் தொடர்ந்து இந்தியாவின் வாய்ப்புகளை பயன்படுத்தி புதிய பொருளியல் வளர்ச்சிகளை சாத்தியமாக்கிக் கொண்டு தான் இருந்தார்கள்.
நரசிம்ம ராவின் காலத்திற்கு பிறகு இந்தியாவில் உருவாகி வந்த நூற்றுக்கணக்கான சிறிய பெரிய தொழில்முனைவோர் அளித்த பங்களிப்பு தான் இன்று நாம் அனுபவிக்கும் பொருளியல் வளர்ச்சி என்பது. இந்த மாற்றம் இன்றும் நம்மிடைய மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. என்னைப்போல இந்தியா முழுக்கச் சுற்றிக்கொண்டே இருப்பவனால் இந்தியாவில் பட்டினி மறைந்திருப்பதை கண்கூடாகவே பார்க்கமுடிகிறது. கல்வி விட்டுவசதி ஆகிய துறைகளில் பிரமிக்கத்தக்க மாற்றம் நிகழ்கிறது. இன்று தமிழகத்திலேயே ஒரு சிறு கிராமத்திற்குச் சென்று அதன் முப்பதாண்டுக்கு முந்தைய புகைப்படங்களை எடுத்து ஒப்பிட்டுநோக்கினாலே இதை உணரமுடியும். இந்தியாவின் அனைத்து நகரங்களும் பல மடங்கு விரிந்திருப்பதைக் காண்கிறேன். வேலையில்லாத் திண்டாட்டம் என்பது ஓரளவுக்கு அடித்தள மக்கள் தவிர மற்ற அனைத்து துறைகளிலும் பெருமளவுக்கு மறைந்திருப்பதை எவரும் அறியலாம்.
இதற்கான பாராட்டுதல்களை ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், வாஜ்பேயி போன்ற அரசியல்வாதிகளுக்கு அளிப்பதற்கிணையாகவே நாம் நம்மிடையே உருவாகி வந்த முக்கியமான தொழிலதிபர்களுக்கும் அளிக்க வேண்டியிருக்கிறது. அவர்களில் பலபேர் நமக்குத் தெரிந்திருக்காது. ஆனால் அம்பானியோ, அதானியோ, நாராயணமூர்த்தியோ நம்மால் வெறுக்கப்படவேண்டியவர்கள் அல்ல என்றும் ஏதோ ஒருவகையில் நமது பொருளியலை உருவாக்கி நமக்கு வாழ்வளிப்பவர்கள் என்றும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.நான் குறிப்பிட விரும்பும் முதன்மையான கருத்தாகும்.
விஜய் மல்லையா எனும் தொழில்முனைவோர்
இந்த விரிவான பின்னணியில்தான் விஜய் மல்லையாவைப்பற்றிய என்னுடைய கருத்தை பதிவு செய்தேன். இந்தியாவின் புதிய பொருளியல் வளர்ச்சி உருவானபோது இரண்டு வகையான ஆளுமைகள் உருவாகி வந்தன. உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளில் பங்களிப்பாற்றும் தொழில் முனைவோர் ஒரு சாரார். புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு நிதியை அங்குமிங்கும் புரட்டி வணிகம் செய்வோர் இன்னொரு சாரார். இருவருமே பொருளியலுக்குத்தேவையானவர்கள்தான். ஆனா இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு வேறுபாட்டை நாம் உணர்ந்தாகவேண்டும்.
வணிகம் என்பது தேவையானதென்றாலும் வணிகர்களை விட உற்பத்தி,சேவை துறைகளில் தொழில்களை ஒருங்கிணைத்து நடத்தும் தொழில்முனைவோர் ஒருபடி மேலானவர்கள். அந்த மதிப்பும் இடமும் அவர்களுக்கு அளிக்கப்பட்டாகவேண்டும். அவர்களே தேசப்பொருளியலின் இதயத்துடிப்புகள். வணிகர்கள் அல்ல. தொழில்முனைவோரை வெறும் வணிகர்களுடன் ஒன்றாக நோக்குவதைப்போல அழிவுநோக்கு வேறில்லை.
தொழில்முனைவோர் அனைவரும் தூயவர்கள், இலட்சியவாதிகள் என்றெல்லாம் நான் சொல்லவரவில்லை. அவர்களை இயக்குவது லாபநோக்கே. அவர்களின் விசை தன்னலம் மட்டுமே. அவர்களை சமூகநோக்கும் தியாகமனநிலையும் கொண்ட முதன்மைச் சமூக உறுப்பினர்களுடன் இணைவைக்கவேண்டியதில்லை. தங்கள் அறிவால் மானுடக்குலத்தை முன்னெடுக்கும் சிந்தனையாளர்களுடனும் அறிவியலாளர்களுடனும் ஒப்பிடவும் வேண்டியதில்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் ஒருபோதும் ரால்ஃப் நாடரோ ஐன்ஸ்டீனோ அல்ல. ஆனால் அவர் தன்னுடைய லாபநோக்காலேயே பொருளியலுக்கு சேவையாற்றுகிறார். அவர் தவிர்க்கமுடியாத ஒரு சமூகவிசை. அதைமட்டும் நாம் கருத்தில்கொண்டால்போதும்.
இந்தியாவின் வளர்ச்சி புதிய பொருளாதாரக்கொள்கையைத் தொடர்ந்து இந்தியாவின் விரிவாக்கம் பெற்ற நிதிச்சந்தை, சுதந்திர வணிகத்தளம் இரண்டையும் பயன்படுத்திக் கொண்டு மோசடியாக பொருளீட்டும் பல ஆளுமைகள் வெளிவந்தன. உதாரணம் ஹர்ஷத் மேத்தா.அவர் ஒரு குறியீடென்றே சொல்லலாம். அவரை மோசடிக்காரர் என்று சொல்வதில் எனக்கு எந்த வித தயக்கமும் இல்லை. அவரைப்போன்ற மோசடிக்காரர் ஆரம்பத்தில் உருவாகி வந்தது இந்தியாவின் பொருளியல் வ்ளர்ச்சியை பெருமளவுக்கு பாதித்தது. இன்று கூட இத்தகைய பல்வேறு வகையான தரகர்கள் மோசடிக்காரர்கள் நமது சூழலில் உள்ளனர்.
ஆனால் நம் அறியாமையால் நாம் மல்லையா போன்றவர்களை அந்தப்பட்டியலில் சேர்க்கும் போது மிகப்பெரிய அநீதி ஒன்றை இழைக்கிறோம். மல்லையா செய்தது என்ன? மல்லையா இந்தியாவில் முக்கியமான ஒரு உற்பத்தித் தொழில்துறையில் தன் தந்தையின் வாரிசாக இறங்கிப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவருடைய United Breweries Group நிறுவனம் மது தயாரித்து விற்கும் தொழிலை செய்து கொண்டிருந்தது. அதில் அவர் பெரும்பணம் ஈட்டினார் . அதை பெயிண்ட், ரசாயனத் தொழில்களில் முதலீடு செய்தார். கூடவே இந்தியாவின் பொருளியலுக்கு மிக முக்கியமான பங்களிப்பையும் ஆற்றினார். ஒருகட்டத்தில் கர்நாடகத்தின் பொருளியலின் தூண்களில் ஒருவர் அவர். அதன்பொருட்டே அவர் கொண்டாடப்பட்டார். ராஜ்யசபை உறுப்பினரும் ஆனார்.
தொண்ணூறுகளில் இந்தியாவில் தொழில் வளர்ச்சி விரைவுகொண்டபோது உள்கட்டுமானங்களிலும் போக்குவரத்து போன்ற சேவைத் துறைகளிலும் கணிசமான அளவுக்கு நிதிமுதலீடு இருந்தாலொழிய எவ்வகையிலும் அடுத்த கட்ட நகர்வு சாத்தியமாகாது என்ற நிலை வந்த போது இந்தியாவின் பல்வேறு தொழில் முனைவோரிடம் இந்திய அரசு போக்குவரத்து துறைகளில் முதலீடு செய்யும்படி கட்டாயப்படுத்தியது.பல விமானநிறுவனங்கள் களத்தில் இறங்கி இந்திய போக்குவரத்துத் துறையில் பெரும் புரட்சியை உருவாக்கின. அவ்வாறு அரசின் ஊக்கம், கட்டாயப்படுத்தல் காரணமாகத்தான் மல்லையா 2005ல் விமானப்போக்குவரத்திற்கு வந்தார். அதற்கு அன்றைய மன்மோகன்சிங் அரசுதான் முதன்மைக்காரணம்.
1980 களில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு செல்வதற்கு ஏழாயிரம் அல்லது எட்டாயிரம் ரூபாய் கட்டணமாகும். அன்று ஒரு மத்திய அரசு ஊழியனாகிய என்னுடைய ஒரு மாதச் சம்பளம் ஆயிரத்து அறுநூறு ரூபாய். இன்று திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்வதற்கான சராசரி விமானக் கட்டணம் ஐந்தாயிரம் ரூபா.ய் அன்றைய பண மதிப்பை வைத்துப்பார்த்தால் அது ஒருலட்சம் ரூபாயாக இருக்கவேண்டும்.
ஏன் அப்படி என்று இன்றைய இளைஞர்களுக்குச் சொன்னால் புரியாது. அன்றிருந்தது இண்டியன் ஏர்லைன்ஸ் மட்டும். விமானநிலையம் சென்றால் மட்டுமே விமானம் செல்லுமா செல்லாதா என்று தெரியும். எனவே பொதுவாக ரயிலில் டிக்கெட் போட்டுவிட்டுத்தான் விமானநிலையம் செல்லவேண்டும். விமானம் ஏறும்போது தொலைபேசியில் அழைத்து ரயில்டிக்கெட்டை ரத்துசெய்யவேண்டும். நான் ஏழுமுறை திருவனந்தபுரத்தில் இருந்து விமானப்பயணம் செய்திருக்கிறேன். ஒருமுறைகூட பத்துபேருக்குமேல் விமானத்தில் இருந்ததில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்களாக இருப்பார்கள்.
ஆகவே பெரும் நஷ்டம். ஆகவே வருடந்தோறும் கட்டணம் கூட்டப்பட்டது. கூடவே விமானப்பயணம் ஒர் ஆடம்பரம் என நினைத்து அரசு போடும் வரிகள். அதில் தனியார் விமானங்களின் வரவு பெரும் மாற்றத்தை உருவாக்கியது. அந்தவகையான மாற்றங்கள் நிகழ்ந்ததன் விளைவாகத்தான் ஒட்டுமொத்தமான பொருளியல் வளர்ச்சி இங்கே சாத்தியமாயிற்று.
இவ்வாறு ஒரு மாற்றத்துக்காக பயன்படுத்தப்பட்ட தொழில்முனைவர் மல்லையா .அதில் அவர் ஒரு மோசமான தோல்வியை அடைந்தார் என்பது உண்மை. அதனுடைய நுட்பங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் அது அவருடைய தொழில் கணிப்புகளுக்குள் வந்த தவறு. அவருடைய முதலீட்டு முறைகளில் வந்த தவறு. நிர்வாக முறைகளிலும் மிகப்பெரிய தவறுகள் நேர்ந்திருக்கக் கூடும். கூடவே அவர் பணத்தை வீணடித்திருக்கவும் கூடும்.
ஆனால் அதன் அடிப்படையில் அவர் அரசுப்பணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளையடித்த ஒரு மோசடியாளர் என்று சொல்வது நாம் தொழில்முனைவோர் மீது கொண்டுள்ள மூர்க்கமான காழ்ப்பினால் மட்டுமே. அரசிடமிருந்து பெற்று அவர் பயன்படுத்திய நிதியை அவர் திரும்ப செலுத்தியாக வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கலாம். அவர் சொத்துக்களை பறிக்கலாம். அவரைக் கைது செய்யலாம், விசாரிக்கலாம். அவர் திட்டமிட்டு பெரிய மோசடிகளோ பிழைகளோ செய்திருந்தால் அதன் பொருட்டு தண்டிக்கவும் செய்யலாம். ஆனால் அதன் பொருட்டு ஊடகங்கள் மோசடியாளர் என்று முத்திரையிட்டு வேட்டையாடுவதிலுள்ள அநீதியைத்தான் நான் சுட்டிக்காட்டினேன்.
மது உற்பத்தியாளரான மல்லையா இந்திய விமானத்துறைக்குள் புகுந்து மோசடி செய்வதற்காக வரவில்லை என்பதை மட்டுமாவது நாம் கருத்தில்கொள்ளவேண்டும். அவரது நிறுவனத்தின் வீழ்ச்சியால் முதன்மையாகப் பாதிக்கப்பட்டவர் அவரே. பெருந்தொழிலதிபரின் மகன்.பெருந்தொழில்களை தலைமை வகித்து நடத்தியவர். சக்கரவர்த்திக்குரிய வாழ்க்கையை வாழ்ந்தவர். அவர்தான் இன்று அன்னிய நாட்டில் ஓடி ஒளிந்து சட்டநிறுவனங்களுக்குப்பின் ஓடிக்கொண்டிருக்கிறார்.
விமானப்போக்குவரத்தை மேம்படுத்தும் தேவைக்காக அரசு தேர்ந்தெடுத்திருக்கக் கூடிய மாற்றுவழி என்ன? பொதுத்துறையை ஈடுபடுத்துவது. இன்னும் நாலைந்து ஏர்இந்தியாக்க:ஐ உருவாக்குவது, இல்லையா? அவற்றை ஐந்தே வருடத்தில் இதைவிட பத்துமடங்கு நஷ்டம் நோக்கிக் கொண்டுசெல்வார்கள் ஊழலில் மூழ்கிய நம் அதிகாரிகள். சேர்ந்து கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள். அந்நிறுவனங்கள் மூழ்கி அரசுக்கு இதைவிட நூறுமடங்கு நஷ்டம் வந்தால் ஒருவராவது தண்டிக்கப்படுவார்களா? குறைந்தபட்சம் விசாரிக்கவாவது படுவார்களா? அப்படி நடந்துள்ளதா இந்தியாவில்? நாம் அதைக்கோரமாட்டோம். ஆனால் மல்லையாவின் ரதத்துக்காக ஏங்குவோம்.
மல்லையா மீதான கடும்கோபங்களுக்கான காரணம் அவருடைய கொண்டாட்டமான வாழ்க்கை. அது அவரே ஆவணப்படுத்தியது. அது உருவாக்கிய பொறாமையே உண்மையில் அனைத்துக்கும் அடியில் அவர்மேல் விமர்சனமாக, காழ்ப்பாக வெளிப்படுகிறது. ஆனால் அது அவருடைய வணிகதந்திரம். அவர் அதற்கும் அமெரிக்காவிலேயே முன்னோடிகளைக் கண்டடைந்தார். அவருடைய வணிகம் மது. அந்தப்பொருளை முன்னிறுத்த அவர் தன் வாழ்க்கையை ஒரு விளம்பரநாடகமாக நடித்தார். அதுவும் முதலாளித்துவ வணிகத்தின் ஒருபகுதியே என்றுகூட நாம் புரிந்துகொள்வதில்லை.
யோசித்துப்பாருங்கள், மல்லையாவின் சங்கைக் கடிக்க விரும்பும் இதழாளர்கள், அரசியலாளர்கள் யார் யார்? அரசியலதிகாரத்தைப் பயன்படுத்தி நேரடியான ஊழல் மற்றும் அதிகாரதுஷ்பிரயோகம் மூலம் மல்லையாவை விட நூறுமடங்கு சம்பாதித்த அரசியல்வாதிகளின் காலடியில் சென்று பணிந்து நிற்பவர்கள். அவர்களின் கோஷங்களை ஏற்று எம்பிக்குதிப்பவர்கள். அவர்களின் அத்தனை ஊழலையும் ஊதாரித்தனத்தையும் கொள்கையின் பெயரால் ஆதரிப்பவர்கள். மல்லையா ஓர் உற்பத்திசக்தி. இவர்கள் வெறும் உறிஞ்சும் அட்டைகள். ஆனால் நமக்கு அரசியல்வாதிகள் ரட்சகர்கள், மல்லையா போன்றவர்கள் வில்லன்கள். என்று நாம் அரசியல்வாதிகளை விட்டுவிட்டு தொழில்முனைவோரை முன்னிறுத்துகிறோமோ அன்றே நம் பொருளியல்நோக்கு உண்மையான வளர்ச்சியை அடையும்
இந்த வேறுபாட்டை புரிந்துகொள்வதற்கான மனநிலையுள்ள நூறுபேராவது தமிழக அறிவுத்துறையில் உருவாகி வரவேண்டும். முகநூல் மொண்ணைகளால் ஒற்றைக்கொரு வரிகளின் மூலம் காலிசெய்யப்பட வேண்டிய ஒரு விஷயம் அல்ல இது என்பதை மீண்டும் மன்றாட்டாகவே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தொழில்முனைவோருக்கு எதிரான உளநிலை
எம்.கே.கே.நாயருக்கு இணையான ஆளுமை கெல்ட்ரான் அமைப்பை வழிநடத்தி மிகப்பெரிய வெற்றியடையச்செய்த கே.பி.பி .நம்பியார். நம் புரட்சிகர இடதுசாரிகளால் ஃபாக்ட் கொச்சியும் கெல்ட்ரானும் அழிக்கப்பட்டன. நாயரும் நம்பியாரும் அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். ஊழலால் தொடர்போராட்டங்கள் என்னும்பெயரில் நிகழ்ந்த பேரம்பேசலால் இந்நிறுவனங்கள் மிகப்பெரிய வெற்றிநிலையில் இருந்து சரிந்து மிகமோசமான இழப்புகளை ஏற்படுத்தின. கெல்ட்ரான் அழிந்தது. ஃபாக்ட் ஒரு பேரிழப்பு நிறுவனம்.
இந்த மாற்றம் ஒரு முக்கியமான திருப்பத்தையும் சுட்டிக்காட்டுகிறது. முட்டையிடும் கோழியை அறுத்துச் சாப்பிடும் அரசியலின் உருவாக்கத்தை. எம்.கே.கே நாயரும் கே.பி.பி ..நம்பியாரும் பூர்ஷுவாக்கள் என்றும் சுரண்டும் அட்டைகள் என்றும் இடதுசாரிகளால் வர்ணிக்கப்பட்டு அடித்து துரத்தப்பட்டனர். கே.பி.பி . நம்பியார் சூட் போடுவதையே கடுமையாக கண்டித்து பேசினர் இடதுசாரித்தலைவர்கள். ‘தொழிலாளர்கள் அழுக்குக் காக்கி போடும்போது நம்பியாருக்கு எதுக்கு சூட்?” என்று எழுதினர்.
நல்லவேளையாக சி.ஜே.குரியன் குஜராத்துக்குச் சென்று அமுல் பால்நிறுவனத்தை உருவாக்கினார். கேரளத்தில் என்றால் கேவலப்படுத்தப்பட்டு கண்ணீரோடு திரும்பிச்சென்றிருப்பார்
இன்று அவர்களைப்போன்றவர்களை உருவாக்க விரும்புகிறது கேரளா. தொழில்முனைவோரைத்தேடி அலைகிறார் அதன் இடதுசாரி முதல்வர். அவர்களே உருவாக்கிய மனநிலையை மாற்றியமைக்க அவர்களே முயல்கிறார்கள். ஆனால் எம்.கே.கே.நாயரைப்போன்ற பொதுத்துறை பெருநிர்வாகிகள் இனி உருவாகப்போவதில்லை. தொழில்முனைவோருக்கு கேரள சமூகத்தில் மதிப்பில்லை என்பதனால் அந்தக்கனவு அங்கே எளிதில் எழுவதில்லை.
கேரளம் தமிழ்நாட்டுக்கு முக்கியமான முன்னுதாரணமான பாடமாக அமையவேண்டும். தமிழகம் எண்பதுகளில் இருந்த இருண்ட வறுமையை இங்கே இளைஞர்கள் பலர் அறியமாட்டார்கள். கூட்டம்கூட்டமாக மும்பைக்கும் கேரளத்திற்கும் தமிழர்கள் பஞ்சம்பிழைக்கச்சென்ற காலம் அது. வேண்டுமென்றால் வண்ணநிலவனின் எஸ்தர் போன்ற சிறுகதைகளை வாசித்துப்பார்க்கலாம். அந்நிலையை மாற்றியவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், ஓசூர், சிவகாசி போன்ற ஊர்களில் உருவாகி வந்த தொழில்முனைவோர்தான். அவர்கள் உருவாக்கிய தொழில்மலர்ச்சிதான்.
அரசியல்வாதிகளின் சுயநலத்தால் உருவாகும் அர்த்தமற்ற வெறுப்பை நாம் ஏற்றிக்கொள்ளவேண்டியதில்லை. மொண்ணைத்தனமாக நமக்கு ஒரு முற்போக்கு பிம்பத்தை உருவாக்கும்பொருட்டு இணையத்தில் தொழில்முனைவோர் மேல் வெறுப்பைக் கக்குவோம் என்றால் நம் அடுத்த தலைமுறையை கருக்குகிறோம் என்றுதான் பொருள். இதெல்லாம் கேரளத்தில் அவர்கள் செய்து கைவிட்ட செயல்கள்
தொழில்மனிதர்கள் எழுக!
தமிழ்நாட்டில் எவருக்கெல்லாம் சிலை வைக்கலாம் என நான் ஒரு பட்டியலை முன்பு போட்டேன். அதில் அரசியல்வாதிகள், தொழிற்சங்கத்தலைவர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் எல்லாரும் இருந்தனர். ஆனால் மூன்று தொழிலதிபர்களை அதில் சேர்த்ததன்பொருட்டு நான் வசைபாடப்பட்டேன். எள்ளி நகையாடப்பட்டேன். அவர்கள் ‘அட்டைகள்’ என்றும் ‘கொள்ளையர்’ என்றும் எழுதினார்கள் நம்மவர். எழுதியவர்கள் நக்சலைட்டுகள் எல்லாம் அல்ல. சாதாரண மனிதர்கள்தான். இக்கட்டுரை முழுக்க அந்த முன்முடிவைத்தான் விசாரணைசெய்துகொண்டிருக்கிறேன்.நான் தமிழகத்திற்கு நா.மகாலிங்கம் அவர்களின் பங்களிப்பு காமராஜரின் பங்களிப்புக்கு நிகரானது என்றே நினைக்கிறேன்.
உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளில் ஈடுபடுபவர்களுக்குமான வேறுபாடு மிக முக்கியமானதென்பதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்தியாவில் பொருட்களை வாங்கி விற்பவர்கள் தான் இன்று அதிகமாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்களால் நேரடியாக பொருளியலுக்குப் பெரும் பங்களிப்பு ஏதுமில்லை. சொல்லப்போனால் மூலதனம் கறுப்புப்பணமாக ஆகி தேங்குவதே இவர்களின் முதற்கொடை.ஆனால் இவர்கள் அளிக்கும் பெரும்பாலான நிதிக்கொடைகளால்தான் நம் அரசியல் நடத்தப்படுகிறது என்பதனால் இன்று இவர்களுக்குச் சாதகமாகவே ஊடகங்கள் உள்ளன. உற்பத்தியாளர்களுக்கும் சேவைத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் எதிரான கும்பல் மனநிலையை அவர்கள் வளர்க்கிறார்கள்
மீண்டும் மீண்டும் நமது ஊடகஙக்ளில் சொல்லப்படக்கூடிய ஒரு பொய் அரசு நிதி இந்த முதலாளிகளுக்கு அள்ளி வழங்கப்படுகிறது என்பது. நமது சேமிப்பை திரட்டும் அரசு சார்ந்த வைப்புநிதிகளும் வங்கிகளும் அந்நிதியை முதலீடு செய்தாகவேண்டும். இல்லையேல் அவை வட்டிகொடுக்க முடியாது. அந்த முதலீட்டை அவர்கள் வெறுமே லாபம் தரும் துறைகளில் கொண்டுசென்று போடமுடியாது. எது தேசப்பொருளியலுக்குத் தேவையோ அங்குதான் முதலீடு செய்தாகவேண்டும். அது அடிப்படைத் தொழிலுற்பத்தி, அடிப்படைச் சேவைகள் ஆகிய துறைகளாகவே இருக்கமுடியும்.
வணிகம் போலன்றி இத்துறைகளில் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மூன்றில் ஒன்று. ஏனெனில் அதில் நேரடியான உள்நாட்டு வெளிநாட்டு போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கீறது. புதிய வாய்ப்புகளைக் கண்டடைந்து அவற்றில் வெற்றியை ஈட்டிக் காட்ட வேண்டியிருக்கீறது. அவை எப்போதும் நிகழ்வதல்ல. ஆகவே இந்த முதலீட்டில் ஒருபகுதி எப்போதும் இழக்கப்படுகிறது, அதற்காக முதலீட்டை நிறுத்திவிடமுடியாது. ஆகவே இழப்பை சந்தித்தே ஆகவேண்டும். வராக்கடன்கள் பெரும்பாலும் இவ்வாறுதான் உருவாகின்றன. அவற்றைத் தள்ளுபடிதான் செய்யவேண்டும்.
உண்மை, அவ்வாறு முதலீடு செய்வதில் ஊழல் இருக்கலாம். பணம் வீணடிக்கப்பட்டிருக்கலாம். அதைக் கண்டடைந்து களையவேண்டும். தவறிழைப்பவர்களைத் தண்டிக்கவேண்டும். ஆனால் அந்த முதலீடும் அதிலுருவாகும் இழப்பும் தன்னளவில் ஏதோ ‘பணத்தை அள்ளிக்கொடுப்பது’ என பாமரத்தனமாகப் புரிந்துகொண்டு பேசுவதைப்போல அபத்தம் வேறில்லை. அந்தப்பணத்தை பொத்துறை என்னும் பாதாளக்கிணறில் போடுவதை எண்ணினால் நமக்கு வேறுவழியே இல்லை
சென்றகாலங்களில் பொதுத்துறையில் இவ்வாறு செலுத்தப்பட்ட நிதியில் பெரும்பகுதி இழக்கப்பட்டதென்றும் அவற்றை அரசு தன் மக்கள்நல நிதியிலிருந்து ஈடுகட்டியதென்பதும் நமக்குத் தெரியும் அதைப்பற்றி இடதுசாரிகள் பேசுவதே இல்லை ஏனெனில் அதைத் தின்றவர்கள் நமது அதிகாரிகளும், அவர்களுடன் ஊடாடிய தொழிற்சங்கத்தலைவர்களும் தான். ஆனால் அந்த நிதியில் ஒரு பகுதி முதலீடாக தனியார் முதலாளிகளுக்குச் சென்று தொழில் நஷ்டம் காரணமாக அதில் ஒருபகுதிதள்ளுபடி செய்யப்பட்டதென்றால் அரசு நிதி வீணாகிறது முதலாளிகளுக்கு அள்ளி இறைக்கப்படுகீறது என்ற சித்திரத்தை இங்குள்ள இடது சாரிகள் ஒற்றைவரிகள் வழியாக உருவாக்குகிறார்கள்.
ஐம்பது ஆண்டுகாலமாக மேடைகளில் பேசப்படும் இந்த ஒற்றை வரிக்கு அப்பால் சிந்திக்கக்கூடிய ஐம்பது பேராவது இன்றைய முகநூல் சூழலில் உருவாகி வந்திருக்கலாம் என்று நான் ஏங்குகிறேன். அதே ஒற்றை வரியை திரும்பவும் எழுதி அதற்கு மேல் ஐம்பது ஒற்றை வரிக்கருத்துக்களை எழுதும் கும்பலாகவே திரண்டிருக்கிறோம்.
இன்றைய சூழலில் பலவகையான தொழில்முனைவோர் எழுந்து வந்தாலொழிய நம் தேசப்பொருளியல் முன்னேற முடியாது என்பது என் எண்ணம். அதற்கு தொழில்முனைவோர் மோசடிக்காரர்கள் என்ற நம் முன்முடிவுகளை நாம் மறுபரிசீலனை செய்தாகவேண்டும். அவர்கள் நம் இளைஞர்களின் முன்னுதாரணங்களாக ஆகவேண்டும். அதற்கு மல்லையா போன்றவர்கள்மேல் பெய்யப்படும் வசைகளும், அவதூறுகளும் மிகப்பெரிய தடைகள். அவரை ஓர் அடையாளமாகவே நான் கொள்கிறேன். இங்கே எந்த தொழில்முனைவோர் பற்றி பேசப்பட்டுள்ளது? நாம் நம் தலைமுறைக்கு முன் நிறுத்துவது முழுக்க ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளையும் நடிகர்களையும் விளையாட்டுவீரர்களையும்தான்.
தொழில்முனைவோர் தியாகிகள், பொதுநலப்போராளிகள், சிந்தனையாளர்கள் என நான் சொல்லவரவில்லை. அவர்கள் செயல்படுவது லாபத்துக்காக. ஊழல் நிறைந்த சமூகத்தில் அவர்கள் தொழிலுக்காக ஊழலை பயன்படுத்தி முன்னால்செல்லவே முயல்வார்கள். நாம் தியாகிகளை, பொதுநலப்போராளிகளைக் கொண்டாடுவோம். ஆனால் தொழில்முனைவோரும் இப்பொருளியலில் மிக முக்கியமான அங்கம் என்று புரிந்துகொள்வோம். அவர்கள் பெருகவேண்டியஆளுமையினர் என்றும் அவர்களில் நம் குழந்தைகளுக்கு முன்னுதாரணங்கள் பலர் உள்ளனர் என்றும் உணர்ந்துகொள்வோம்.
***