இலக்கியம், வெறுப்பு

அ. நீலகண்டன்

ஜெமோ

அ. நீலகண்டன் ஜடாயுவுக்கு எழுதிய பதிவு [பிரபஞ்சன் விழா பற்றிய குறிப்பில்]

இலக்கிவாதிகள் என்றாலே unless proved அயோக்கியர்கள் இரட்டை வேடதாரிகள் – என்பது எனது அனுபவத்தில் நான் கற்றது இது. எனவே இந்த கபடவேடதாரிகள் அரசு அதிகாரத்துடன் இணையும் போது வேறெந்த விசிலடிச்சான் குஞ்சுகளையும், விட மிக மோசமான விளைவுகளையே சமுதாயத்தில் ஏற்படுத்துவார்கள். எனவே மாநில முதலமைச்சர் ஒருவர் இந்த இலக்கிய மாஃபியா விழாக்களில் பங்கெடுப்பது அப்படி ஒன்றும் சிலாகிக்கத் தக்கது அல்ல. பிரபஞ்சன், மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன் அனைவருமே எழுத்தரசியலையும் எழுத்து வியாபாரத்தையும் செய்பவர்கள். எந்த ஒரு வியாபாரியையும் அரசியல் தரகர்களையும் போலவே இவர்களையும் நோக்க வேண்டும். எழுத்துத் திறமை இவர்களின் கருவி, தேடல் அல்ல. அதிலுள்ள நேர்த்தி இவர்களின் தொழில்முறை பயிற்சியின் விளைவு. இவற்றை மீறி இவர்களிடம் மனிதத்தன்மை இருந்தால் நல்லதே. ஆனால் நானறிந்தவரை கயமையும் கீழ்மையும் வன்மமும் ஆபாச வக்கிரமும் மாஃபியா மனப்பான்மையும் கொண்டவர்களே இத்தகைய ‘இலக்கிய’வாதிகள்.

ராஜீவ் பி

 rajeev

ராஜீவ்

 

அன்புள்ள ராஜீவ்

அநீ பற்றி. அவர் தமிழ்ச்சூழலில் ஒலித்தாகவேண்டிய ஓர் அறிவுத்தரப்பு என்பதே அவர் எழுதத்தொடங்குவதற்கு முன்னரே என் எண்ணம். ஒருவகையில் அவரை தமிழில் எழுதத் தூண்டியவன் நான். அவ்வகையில் இன்றும் அதுவே என் எண்ணம். இங்குள்ள இடதுசாரிகள், லிபரல்கள் அவருடைய தரப்பை எதிர்கொள்வதனூடாகவே ஆக்கபூர்வமான ஒரு கருத்தியல்விவாதம் இங்கே நிகழமுடியும். அவருடைய எழுத்துக்களை நான் எனக்குத் தகவல்களுக்காக எப்போதும் கூர்ந்து வாசிக்கிறேன். சொல்லப்போனால் எனக்குள் அவரும் அ. மார்க்ஸும் இருபக்கமும் நின்று சண்டைபோட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

அவருடைய விரிவான வாசிப்பு, மரபுசார்ந்ததானாலும் மேலைச்சிந்தனைகளையும் நவீன அறிவியலையும் கருத்தில்கொண்ட நோக்கு மிகமுக்கியமானது. இந்திய அளவில் இந்துத்துவர் தரப்பில் இதற்கிணையான குரல் என கெயின்ராட் எல்ட்ஸ், சீதாராம் கோயல் போன்ற சிலரையே சொல்லமுடியும். இங்கே வலதுசாரி அறிவுஜீவிகள் இடதுசாரிகள் மண்டிய நம் கலாச்சார அமைப்புக்களால் பழிக்கப்படுவார்கள். வலதுசாரிகளுக்கு அறிவியக்கம் மீது ஆர்வமோ நம்பிக்கையோ இல்லை. ஆகவே அ.நீ போன்றவர்கள் எதையும் பெறப்போவதில்லை. தன் கருத்தியல் நம்பிக்கை ஒன்றினாலேயே செல்லும் பயணம் இது. அந்த அர்ப்பணிப்பு போற்றத்தக்கது.

கருத்தியல் சார்ந்த உறுதியான நிலைபாடு எடுப்பவர்கள் பெரும் பற்றையும் கூடவே அதைச்சார்ந்து உக்கிரமான வெறுப்பையும் கசப்பையும் திரட்டிக்கொள்வார்கள். அதைக்கொண்டே அவர்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான ஊக்கத்தைப் பெறுகிறார்கள். ஒழித்துக்கட்டப்படவேண்டிய எதிரிகள் அவர்களுக்குத் தெளிவாகத் தெரிவார்கள். அவர்கள் பெருகிக்கொண்டும் இருப்பார்கள். எதிரிகள் பெருகப்பெருக இவர்கள் மேலும் ஆற்றல்கொள்கிறார்கள். எல்லா கருத்தியல்நம்பிக்கைகளும் முழுமூச்சாக துரோகிகளையும் எதிரிகளையும் கண்டடைந்துகொண்டே இருப்பது இதுதான். ஆகவே அ.நீயின் கசப்பையும் வெறுப்பையும் புரிந்துகொள்கிறேன்.அரசியல் தரப்புக்கள், மதத்தரப்புக்கள் சிந்தனையின் ஒரு சரடு. ஆனால் அவற்றுக்கு இலக்கியம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் எந்த இடமும் இல்லை.

அவர் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். எழுத்தாளர்கள் வழக்கமான ‘நல்லவர்’களாகவோ உறுதியான நம்பிக்கையும் நிலைபாடும் கொண்டவர்களாகவோ இருப்பது மிகக்கடினம். சாத்தியமே இல்லை என்றுகூடச் சொல்வேன். அது கம்பனோ காளிதாசனோ ஆனாலும். அலைக்கழிதல், விட்டுச்செல்லுதல், திசைநடுவே குழம்புதல் என்பதே அவனுடைய பயணமாக உள்ளது. ஆகவேதான் எழுத்தாளனை கொள்கைவழிகாட்டியாகக் கொள்ளாதீர்கள் என நான் எப்போதுமே சொல்கிறேன். உங்களை உடைத்து மறு வார்ப்பு செய்துகொள்ள, உங்களுக்குள் உறையும் சிலவற்றை மொழிவழிக்கனவு வழியாக கண்டடைய மட்டுமே இலக்கியம் உதவும்.

கருத்துக்களை எழுதிஎழுதி அடைவதும் அடைந்தவற்றில் ஐயம்கொண்டு முன்செல்வதுமே எழுத்தாளனின் வழி. மதமோ, அரசியலோ உறுதியான நிலைபாடு கொண்டவர்களுக்கு இலக்கியத்தால் எந்தப்பயனும் இல்லை. இலக்கியவாதியாக படைப்புக்கு வெளியேகூட உறுதியானவற்றை விரித்தும் பிரித்தும் நோக்குவதையே நான் செய்கிறேன்.இலக்கியத்தில், அது மெய்யான இலக்கியம் என்றால், வலதோ இடதோ அரசியல் இருக்கமுடியாது. அதன் அரசியல் கலைத்துக்கலைத்து நோக்கி முன்னேறுவதன் அரசியல். அதை அ.மார்க்ஸுக்கும் அ.நீலகண்டனுக்கும் புரியவைக்க முடியாது, ஆகவே அவர்களின் வெறுப்புக்களை பெற்றுக்கொள்ளவேண்டியதுதான்.

இதே உச்சகட்ட வெறுப்புக்குரலை எழுத்துமாறாமல் இப்படியே அ.மார்க்ஸ், ஆளூர் ஷாநவாஸின் பதிவுகளுக்கு எதிர்வினையாற்றும் இஸ்லாமியரிலும் பார்க்கலாம். கொஞ்சம் வேறுபாடுகளுடன் இதையே யமுனா ராஜேந்திரன் போன்ற மார்க்ஸியர்களும் எழுதுகிறார்கள். இவர்கள்தான் சென்றகாலங்களில் இலக்கியவாதிகளை கழுவேற்றியவர்கள், சிறையில்தள்ளியவர்கள், கட்டாய உழைப்பு முகாம்களில் வதைத்தவர்கள். இவர்களின் உள்ளங்கள் எதிலாவது ஒன்றில் ஆழமாக நிலைத்தவை. அதன்பொருட்டு எந்தக் குரூரத்தையும் செய்யத்தயங்காதவை. இலக்கியம் என்பதே இந்த மூர்க்கத்திற்கு எதிரான ஒரு செயல்பாடுதான்

சமீபத்தில் ஓர் அந்தரங்கமான உரையாடலில் லட்சுமி மணிவண்ணன் சொன்னார். “சுந்தர ராமசாமி மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். அந்தக்காலத்தில் கோபங்கள் கூட இருந்தது. ஆனால் அவரைச் சந்திக்காமலிருந்திருந்தால் ஏதாவது ஒரு சிந்தனையில் ஒரு அரசியல்தரப்பில் உறைந்து வாழ்க்கையை வீணடித்திருப்போம். இன்று இருக்கும் தேடலும் கண்டடைதலும் எல்லாம் அவர் நம்மை உடைத்துவிட்டதனால் கிடைத்ததுதான். அதற்காக அவருக்கு கால்தொட்டு நன்றி சொல்லவேண்டும்’. என் வாசகர்களிலும் ஒருசாரார் எதிர்காலத்தில் அப்படி எண்ணிக்கொள்வார்கள்

ஜெ

***

 

writer-abilash-2
ஆர்.அபிலாஷ்

 

அன்புள்ள ஜெமோ

நாரோயில் எழுத்தாளர் ஆர்.அபிலாஷின் பதிவு இது. உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன். நழுவாமல்

இலக்கிய வெறுப்பை சமாளிப்பது எப்படி?

ஜெகன்

***

அன்புள்ள ஜெகன்,

இதைப்பற்றி முன்னரே ஒரு நீள்கட்டுரை எழுதியிருக்கிறேன்

இலக்கியவிவாதங்களும் எல்லை மீறல்களும்

எழுத்து என்பது நுட்பமான ஓர் ஆணவச்செயல்பாடு. கம்பன் எழுதிய மொழியில் நானும் புதிதாக ஒன்றை எழுதுவேன் என்பவன் தன்னுள் இருந்து சிலந்திவலைபோல ஓர் ஆணவத்தை எடுத்துத்தான் பின்னி விரிக்கிறான். அந்த ஆணவம் எவ்வகையில் புண்பட்டாலும் கொந்தளிக்கிறான்.  வெளியே சொல்லாவிட்டாலும்கூட ஆணவம் உள்ளூரப் புண்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.

நான் எழுதாத எல்லா நல்ல எழுத்தும் என்னை புகையவைக்கிறது என்று மெய்யாகவே சொல்வேன். சமீபத்தில் சொ.தருமனின் சூல் அப்படி ஒரு புகைச்சலை எழுப்பியது. அதைக்கடந்து சரி பரவாயில்லை, பெருந்தன்மையாக இருப்போம் என முடிவுசெய்தே நாலு வரி பாராட்டி எழுதமுடிகிறது.

இதற்குமேல் இங்கே கடுமையான பிரச்சினைகள் எழுவதற்கான காரணம் இங்கே பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு வாசகர்கள் இல்லை என்பதே. கருத்துக்களை உருவாக்குபவர்கள் பெரும்பாலும் வாசிக்காத ‘களச்செயல்பாட்டாளர்கள்’.  ஆகவே எந்தக்கருத்தைக் கண்டாலும் தன்னை அது முழுமையாக வகுத்து ஒதுக்கிவிடுமோ என்னும் ஐயம் ஏற்படுகிறது. அது ஒரு கற்பனை அச்சமாக வளர்ந்து வன்மங்களாக ஆகிவிடுகிறது

மிகச்சிறிய இடம். அதுதான் உண்மையான பிரச்சினை. ஆனால் உலகளாவ வாசகர்கள் கொண்ட லோஸாவும் மார்க்யூஸும் ஏன் அடித்துக்கொள்ளவேண்டும்?

ஜெ

***

·        எழுத்தும் உடலும்
·        முரண்படும் தரப்புகள்

 

முந்தைய கட்டுரைஅனல் காற்று விமர்சனம் -கடிதம்
அடுத்த கட்டுரைமுதல் மழை