பாகுபலியும் வெயிலும்

Bahubali 2 Reviews

நேற்று பாகுபலி பார்க்கலாமென்று முடிவுசெய்து நாலுபேரிடம் விசாரித்தால் டிக்கெட் கிடைப்பது கஷ்டம் என்றார்கள். இன்று முன்பதிவு செய்து போகலாம் என திட்டமிட்டோம். இங்கே இரண்டு அரங்குகளில் படம்போட்டிருக்கிறார்கள். இரண்டுமே நாகர்கோயிலின் மிகப்பெரிய அரங்குகள். ஆனால் இணைய முன்பதிவு வசதி இல்லை

சரி, நேரில் சென்று முன்பதிவுசெய்யலாமென்று எண்ணினேன். அஜிக்கும் சைதன்யாவுக்கும் பாகுபலி பிடிக்கவில்லை. சைதன்யா நேற்றுத்தான் முதல்படத்தை கணிப்பொறியில் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள். [தலையில்லாத முண்டம் நடக்கும் காட்சியில் ‘ஆகா, என்ன ஒரு ஆசுவாசம்!’ என்று சைதன்யாவின் வசனம்] ஆகவே அவர்களை நம்பமுடியாது. அருண்மொழி ஆசைப்பட்டாள். அவள் இரண்டுநாட்களாக லீவு. வேறுவழியில்லை நானே செல்லவேண்டியதுதான்

காலை பதினொரு மணிக்கு திரையரங்க வாசலுக்குச் சென்றேன். கார்த்திகை அரங்கு 12 மணிக்குத்தான் முன்பதிவு தொடங்கும். ராஜேஷ் முன்பதிவைத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் நீண்ட வரிசை. தீயாக எரியும் வெயில். ஒரு ஐந்து நிமிடம் நின்றுபார்த்தேன். தாக்குப்பிடிக்க முடியவில்லை. வரிசை நகரவில்லை, ஏனென்றால் திரையரங்க ஊழியர்கள், ஊழியர்களுக்குத்தெரிந்தவர்கள் எல்லாம் வேறுவழியில் உள்ளே சென்றுகொண்டிருந்தனர். முன்பதிவுக்கு இவ்வளவுகூட்டமா? சினிமாதானா என்றே சந்தேகமாக இருந்தது

என்ன ஆச்சரியமென்றால் வரிசையில் நின்ற அத்தனைபேருமே பாகுபலி2வை திருட்டு டிவிடியிலும் இணையத்திலும் பார்த்துவிட்டார்கள். ’சூப்பர் விஷுவல்ஸ்’ என்றார் ஒருவர். மயக்கமாக வந்தது. வரிசையிலிருந்து விலகி அருகே இருந்த ஒரு இரும்புக்கடையிலிருந்து ரொம்பநாளாக நினைத்து ஒத்திப்போட்டிருந்த எலிப்பொறி ஒன்றை வாங்கிக்கொண்டு வீடு வந்துசேர்ந்தேன்.

அருண்மொழி ஆறுதல்கொள்வதற்காக சிடி கடைக்குச் சென்று மோகன்லாலின் ஒப்பம் உட்பட இரண்டு சினிமாக்களை வாங்கிக்கொண்டேன். நான் சிடி கடைகளுக்குச் சென்று நீண்டநாட்களாகின்றன. ஒருகடைதான், அதிலும் கொஞ்சம்தான் சிடிக்கள். நாகர்கோயிலின் பெரும்பாலான சிடிக்கடைகளை மூடிவிட்டார்கள். திருட்டு சிடி தொழிலையே அநியாயமாக இணையம் அழித்துவிட்டது என்று கடைக்காரர் கண்ணீர் மல்கினார்.

சினிமாவுக்கு இத்தனை கூட்டமா? பல படங்களுக்கு ஐந்தாறுபேர்தான் இருந்து பார்ப்போம். சமீபத்தில் ஒரு குற்றப்புலனாய்வு படத்திற்கு ஏழே பேர்தான். அந்தக்காலத்தில் இந்த நாகர்கோயில் நகரில் நூன்ஷோ என்பது ஒரு சமூகநிகழ்வு. புருஷனை வேலைக்கு அனுப்பிவிட்டு பெண்கள் பிள்ளைகளை இடுப்பிலேந்தியபடி பிலுபிலுவென தெருவெல்லாம் நிறைந்து சென்றுகொண்டிருப்பார்கள். எல்லா முகங்களிலும் களிவெறி.

கைகளில் பூக்குடலைகள் பூசைப்பொருட்களுடன் ஆச்சிகள் விசுக் விசுக் என்று செல்வார்கல். நாககரம்மன் கோயிலுக்குச் சென்று கல்நாகநிரை தலைகளில் அவசரமாகப் மஞ்சள்பாலை கொட்டி விட்டு வேர்வை வழிய மூச்சிரைத்து ஓடி அரங்குக்குச் செல்வார்கள். கோயிலுக்குள் இருந்து ராஜா, யுவராஜ் அரங்குகளுக்குள் நுழைய ரகசியவழியே இருந்தது. சுந்தர ராமசாமிகூட பள்ளம் என்ற கதையில் இந்தச் சித்திரத்தை எழுதியிருப்பார். இப்போது டிவி அந்த கன்னிகளை ஆச்சிகளாக்கி அமரச்செய்திருக்கிறது.

நான் பயோனியர் கல்லூரியில் வணிகவியல் படிக்கையில் பெரும்பாலும் நாளுக்கொரு சினிமா. அன்றிருந்த பல அரங்குகள் இன்றில்லை. தங்கம் அரங்குதான் பழைய நினைவாக எஞ்சியிருக்கிறது. அங்கே அன்றிருந்த மூட்டைப்பூச்சிகளின் ஆயிரக்கணக்கான தலைமுறைகள் தாண்டிய வாரிசுகள் மரபெஞ்சுகளில் அப்படியே வாழ்கின்றன. பேருந்துநிலையம் அருகே மீனாட்சி. மணிமேடை அருகே பயோனியர் பிக்சர் பாலஸ். நாகரம்மன் கோயிலருகே ராஜா, யுவராஜ். அப்பால் ஏரிக்கரை ஓரமாக சுவாமி. அதற்கப்பால் முத்து. அதற்கும் அப்பால் தெலுங்கு படங்கள் போடப்படும் பயோனியர் சரஸ்வதி. அந்த ஏரி நகராட்சியின் சாக்கடையால் நிரப்பப்பட்டதனால் அந்தச்சாலையே களையிழந்துவிட்டது

மீனாட்சியில்தான் 1980ல் ஒருதலைராகம் வெளியாயிற்று.அன்றெல்லாம் கல்லூரிப் படங்களில் டபிள்பிரெஸ்ட் கோட் போட்ட அறுபதுவயதான கதாநாயகன் ஐம்பதுவயதான காமெடியனுடன் ஓப்பன் ஆஸ்ட்ரோ காரில் கல்லூரி செல்வதைத்தான் பார்த்திருந்தோம்.நூறுகிலோ எடையுள்ள கதாநாயகியை கிண்டலடித்து பெஞ்சுமேல் ஏறி நின்று நடனமும் ஆடுவார்உண்மையான கல்லூரில் அந்தப்படத்தில் இருந்தது. உண்மையான நடனமும். அக்காலத்தில் கணிசமான இளைஞர்கள் நாள்தோறும் அந்தப்படத்தைப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். கொளுத்தும் வெயிலில் ஒரு கிலோமீட்டருக்கு வரிசை நிற்கும்

மீண்டும் அந்த வரிசையைப் பார்க்கிறேன். பஸ்ஸில் திரும்பி வரும்போது சந்தோஷமாகத்தான் இருந்தது. ஒரு கேளிக்கையில் தன்னைமறந்து ஈடுபட முடிவது ஒரு பேறு. அதை இழந்தபின்னர்தான் அதன் அருமையே தெரிகிறது. சரி, அடுத்தவாரமோ அதற்கடுத்தவாரமோ பாத்தால்போயிற்று என்று எண்ணிக்கொண்டேன்.அப்படி நினைக்கமுடிவதே சோர்வளித்தது. வயதாகித் தொலைத்திருக்கிறது.

முந்தைய கட்டுரைகுருபீடம்- நித்ய சைதன்ய யதி
அடுத்த கட்டுரைகாடு- ஒரு கடிதம்