முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும்

vijay

பெருநோட்டு ஒழிப்பு நடவடிக்கைகளைப்பற்றி நான் எழுதிய கட்டுரையில்தான் [ மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள்   ]  விஜய் மல்லையா பற்றிய கருத்தை சொல்லியிருந்தேன் – அதை ஒற்றைவரியாக ஆக்கி புகழ் அடையச்செய்து விட்டார்கள்.  “மல்லையா மோசடிக்காரர் அல்ல, அவர் ஒரு தோல்வியடைந்த தொழில்முனைவோர்”. நல்லதுதான், அத்தகைய ஒற்றைவரிகள் பொதுவாக கருத்துக்களை குறுக்கி சிறிதாக்குகின்றன. ஆனால் பலரைச் சென்றடைகின்றன.சிலருக்காவது தொடர்ந்துசெல்லும் ஊக்கத்தை அளிக்கின்றன. நெடுங்காலம் ஒரு கருத்தை நினைவிலும் நிறுத்துகின்றன

 

நான் அக்கருத்தை அப்போது சொல்ல என்ன காரணம் என்றால் அந்தத் தருணத்தில் பெருநோட்டு நடவடிக்கைக்கு எதிராகப்பேசிய அனைவருமே அதில் மல்லையாவை இழுத்திருந்தனர்.  ‘மக்களின் வரிப்பணத்தை அள்ளி மோசடியாளருக்கு வழங்கும் அரசு எளிய மக்களின் சேமிப்புகளை சூறையாடுகிறது’ என்பதுதான் அப்போது சொல்லப்பட்ட ஒற்றை வரி. இப்போது அது கொஞ்சம் மாறி  ‘விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்ய அரசு தயங்குகிறது பெருமுதலாளிகளுக்கு அள்ளிவழங்குகிறது’ என்று மாற்றப்பட்டுள்ளது.அந்த வரியிலிருக்கும் அபத்தத்தை சுட்டிக் காட்டவே அதைச் சொன்னேன்.

 

அதை ஒட்டி கிட்டத்தட்ட ஆறுமாதங்களாக நிகழ்ந்து வரும் விவாதங்களை கவனித்து வருகிறேன். எவரேனும் ஏதேனும் பொருட்படுத்தும்படியாக எழுதினால் எனக்குத் தெரிவிக்கும்படி நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். நமது சூழலில் விவாதங்கள் நிகழும் தன்மை என்னை எப்போதும் ஏமாற்றுவதில்லை. மாறாத அசட்டுத்தனம்தான் அது. அதில் அரசியலோ கொள்கையோ இருப்பதில்லை. பெரும்பாலும் ஒரு நிலைப்பாடு. அந்த நிலைப்பாடு எளிய காழ்ப்பிலிருந்து வருவது. எந்த ஒரு கருத்தும் எவருக்கேனும் ஒருவருக்கு எதிராகத்தான் இங்கே எழும்.

 

ஒருவர் மேல் கடுமையான காழ்ப்பு கொண்டிருந்துவிட்டால் சிந்திப்பது எளிதாகிவிடுகிறது. அவர் செய்யும் அனைத்தையுமே விமர்சித்து கசப்பைக் கொட்டிக்கொண்டிருந்தால் போதும் தீவிரமானவன் என்ற தோற்றம் கிடைக்கிறது. புரட்சியாளன் என்றோ கலகக்காரன் என்றோ எண்ணிக் கொள்ளலாம். அது மோடியோ டிரம்போ ஜெயலலிதாவோ கருணாநிதியோ. அதை  கருத்து என நினைத்து விவாதிக்கப்புகுவது வெட்டிவேலை.  நாம் எப்படி எதை மறுத்தாலும் அவர்கள் வெறுக்கும் தரப்பின் குரலாக நம்மை ஆக்கிவிடுவார்கள்.

karl

நிலைபாடுகளின் மயக்கம்.

 

இந்த விவாதத்தில் முதல் வினா நாம் வலது சாரியா இடது சாரியா என்பது தான். இந்த வினாவை தன்னைத் தானே கேட்டுக்கொள்பவர்களே இங்கில்லை. அன்றாட வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் வலதுசாரி அரசியலில் திளைத்து, வலதுசாரிப் பொருளியலின் அனைத்து நலன்களையும் அனுபவித்து, வலதுசாரிக் கண்ணோட்டத்தின் பெரும்பாலான விஷயங்களை ஏற்று வாதிட்டுவிட்டு தேவையான இடத்தில் மட்டும் இடதுசாரிக் கோஷங்களை போடுவதன் அபத்தம் நம்மில் பலருக்கு மெய்யாகவே தெரியாது.

 

இன்னும் பலர் இங்கே நேரடியாகவே அரசியல்கொள்ளையில் ஈடுபடும் ஆளுமைகளின், குடும்பங்களின் தொண்டர்கள். அவர்கள் செய்யும் அத்தனை கொள்ளைகளையும் சூறையாடல்களையும் வன்முறைகளையும் நியாயப்படுத்துபவர்கள். ஆனால் ஊடகங்களில் இவர்கள் இந்தியப்புரட்சிக்காக இயந்திரத்துப்பாக்கி ஏந்திய போராளிகளாக பிம்பம் கொண்டிருக்கிறார்கள்.

 

நமது இணைய விவாதங்களைப்பார்த்தால் இந்தியாவின் மாவோயிஸ்ட் போராளிகளின் பெரும்பகுதியினர் இங்குதான் இருக்கிறார்கள் என்றும், இங்கே எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் தோளில் ஏகே-47 உடன் காடுகளில் தலைமறைவாக திரிந்து கொண்டிருப்பதாகவும் ஒரு சித்திரம் எழும். முற்போக்கு, மனிதாபிமானம், புரட்சி, கலகம் என எல்லாமே பொய்யான மிகையுணர்ச்சிக் கூப்பாடுகள். இந்த  பாவனைதான் எந்த விவாதத்தையும் ஆரோக்கியமாக நிகழ்த்த முடியாமல் ஆக்குகிறது.

 

இதற்கப்பாலிருந்து விவாதிக்கவும் பேசவும் வரும் சிலருக்காக மீண்டும் ஒரு தயக்கக்குறிப்புடன் இதை எழுதுகிறேன். இக்குறிப்பை ஒரு பொருளியல் நிபுணனாக அல்ல. ஒரு அரசியல் ஆய்வாளனாகவும் அல்ல. ஒர் எளிய வாசகனாக, சாதாரணக் குடிமகனாகவே எழுதுகிறேன். நெடுங்காலமாக இந்திய அரசியலையும் பொருளியலையும் ஆர்வத்துடன் கவனித்து வருபவன், ஓரளவு தொழிற்சங்க அனுபவம் கொண்டவன் என்ற வகையில்

ste
ஸ்டீவ் ஜாப்ஸ்

 

இருவகை நோக்குகள்

 

முதல் வினாநாம் இதை இடதுசாரிப்பொருளியல் நோக்கில் பார்க்கப்போகிறோமா என்பது. இடதுசாரிப் பொருளியலின் பார்வை ஒட்டுமொத்தமாகவே மல்லையா  போன்ற அனைத்துப் பெருந்தொழிலதிபர்களுக்கும் எதிரானது. தனியார் மயத்துக்கு எதிரானது.  அரசுக்கும் அமைப்புக்கும் அதன் அனைத்துக்கருத்தியல்களுக்கும் எதிரானது.

 

இடதுசாரி நோக்கில் பெருந்தொழிலதிபர்கள் மூலதனம் மீது ஆதிக்கம் கொண்டவர்கள். அதைக்கொண்டு இயற்கையின் மூலப்பொருட்களைக் கட்டுப்படுத்துபவர்கள். உழைப்பாளர்களை கூலிக்கு அடிமையாக்கி உற்பத்தியை நிகழ்த்துபவர்கள். வினியோகத்தையும் கையில் வைத்துக்கொண்டு கொள்ளை லாபம்  அடிப்பவர்கள். சமூக உற்பத்தியின் மிச்சத்தை முழுக்க தாங்களே  அடைபவர்கள்.  உழைப்பு உருவாக்கும் செல்வம் தொழிலாளரைச் சென்றடையாமல் தடுத்து தாங்கள் எடுத்துக்கொள்பவர்கள். இதன்பொருட்டு அரசாங்கத்தைக் கைப்பற்றி கையில்வைத்திருப்பவர்கள். முதலாளித்துவ அரசாங்கம் என்பது முதலாளிகளின் வன்முறை ஆயுதம் மட்டும்தான். அரசு செய்யும் நலப்பணிகள் என்பவை மக்களுக்கு அளிக்கும் பிச்சைகள். அது அளிக்கும் பாதுகாப்பு என்பது முதலாளிகளின் சொத்துக்கும் அவர்களின் அமைப்புக்குமான பாதுகாப்பு மட்டுமே.

 

ஆகவே ஒர் இடதுசாரிக்கு மல்லையாவுக்கும், டாட்டாவுக்கும் ,கலாநிதி மாறனுக்கும் இடையே வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. நல்லமுதலாளி கெட்டமுதலாளி என எவரும் இல்லை. அப்படி ஒரு வேறுபாடை ஒருவன் கற்பித்தான் என்றால் அவன் மார்க்சியனும் அல்ல.   அவன் நோக்கில் அவர்கள் சமூகத்தின் சுமைகள் . வேரோடு களையவேண்டிய தீய க்திகள்.

 

ஒரு மார்க்ஸியரின் அரசியல் திட்டம் என்ன? இந்தப் பெருமுதலாளிகளை முற்றாக அழித்து, மூலதனத்தை உழைப்பு சக்திகளிடம் முழுமையாக ஒப்படைத்து ,அதனூடாக ஒரு மாற்றுப் பொருளியலை உருவாக்கி எடுப்பதுதான். குறைந்தபட்சம் இதைச் சொல்லவாவது செய்பவரே இடதுசாரி.

 

அந்தத் தளத்திலிருந்து பேசும் இடதுசாரிகளின் குரலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த தரப்பு இச்சூழலில் மிக முக்கியமானதென்றும், அது பெருமுதலாளிகளின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியை தடுப்பதாகவும் மக்கள் நல திட்டங்களை நோக்கி அரசை வலியுறுத்துவதாக அமையுமென்றும், ஆகவே ஒருபோதும் இந்திய அரசியலில் இடதுசாரிகளின் இடம் குறையலாகாது என்றும் தொடர்ந்து வாதிட்டு வருபவன் நான்

 

இடதுசாரிகள் இல்லாமல் ஆகும்தோறும் பெருமுதலாளிகளின் லாபவெறி கட்டின்றி பெருகும். அவர்கள் எந்த அறநெறிக்கும் கட்டுப்படாதவர்களாவார்கள். அவர்களால் அரசு கட்டுப்படுத்தப்படும். அரசின் நலத்திட்டங்கள் குறையும். அது மேலும் மேலும் பொருள் குவிப்பை உருவாக்கும். ஆகவேதான் ஒரு ஆக்கபூர்வமான பொருளியலில் இடதுசாரிப் பொருளியல்த்தரப்பு இணையான வலிமையுடன் எப்போதும் இருந்து கொண்டிருக்கவேண்டும் என்று சொல்கிறேன். இந்த தளத்திலேயே குறைந்தது இருபது முப்பது முறை அதைப்பதிவு செய்திருப்பேன். ஆகவே அவர்களுடன் எனக்கு விவாதமில்லை. மல்லையா ஒரு பூர்ஷுவா என அவர்கள் சொல்வார்களேயானால் ‘ஆம் நண்பர்களே அது உங்கள் பார்வை’ என்பதற்கு அப்பால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

 

நாம் வலதுசாரி நோக்கைக் கொண்டிருந்தோம் என்றால் மல்லையாவைப்பார்க்கும் பார்வை பிறிதொன்று. நான் முன்வைப்பது அதையே. அதை நம் சூழல் கொஞ்சம் மனம்திறந்து விவாதிக்கவேண்டுமென ஆசைப்படுகிறேன். வலதுசாரி முதலாளித்துவநோக்கில் மல்லையாவை ஒரு தொழில்முனைவோர் என்றுதான் பார்க்க வேண்டும். நம் நோக்கில் அவர்கள் வெறும் சமூகச்சுமைகள் அல்ல. சுரண்டலை மட்டும் செய்பவர்கள் அல்ல. ஒழித்துக்கட்டப்படவேண்டியவர்களோ வெறுக்கவேண்டியவர்களோ அல்ல. அவர்கள் முதலாளித்துவப் பொருளியலின் ஆக்கபூர்வமான சக்திகள். தவிர்க்கமுடியாத பங்களிப்புகொண்டவர்கள்.

 

முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அடிப்படை விசைகளில் முக்கியமானது தொழில் முனைவோரின் கற்பனையும், துணிவும் ,நிர்வாகத்திறனும் ஆகும். அவர்களைத் தவிர்த்து ஒரு முதலாளித்துவப் பொருளியலை எண்ணிப்பார்க்கவே முடியாது. அவர்களே சமூகத்தில் இருந்து மூலதனத்தை திரட்டுகிறார்கள். அதை பல்வேறு தொழில்களில் முதலீடாக மாற்றுகிறார்கள். உற்பத்திக்கான வாய்ப்புகளை கண்டுபிடிப்பதிலும், உற்பத்திசக்திகளை கண்டறிந்து  தொகுத்துக் கொள்வதிலும், அவற்றைப் பயன்படுத்தி இயற்கைவிசைகளையும் உழைப்பையும் உற்பத்தி சக்திகளாக ஆக்குவதிலும் அவர்கள் ஆற்றும் பங்கு மிகப்பெரியது. .

 

நான் என்னை ஒரு இடதுசாரி என்று ஒருபோதும் சொல்லிக் கொள்பவனல்ல. எனது பொருளியல் பார்வை வலதுசாரித்தன்மை கொண்டதுதான். உலக வரலாற்றை கூர்ந்து பார்க்கையில் இடதுசாரிப்பொருளியல்கள் அனைத்துமே தொடர்ந்து பெரும் தோல்விகளைத்தான் அடைந்திருக்கின்றன என்பதைத்தான் நான் காண்கிறேன். இடதுசாரிப் பொருளியல் வெறும் இலட்சியவாதம், நடைமுறையில் அது பெரிய அழிவையே உருவாக்குகிறது. ஆகவே எனது பார்வை பொருளியல் அடிப்படையில் முதலாளித்துவம் சார்ந்தே உள்ளது.பொதுமக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளாலும், அதன் வெளிப்பாடான ஜனநாயகத்தாலும் கட்டுப்படுத்தப்படும்முதலாளித்துவத்தை பற்றியே நான் அக்கறை கொண்டிருக்கிறேன்.

ayn
அயன் ராண்ட்

 

 

தொழில்முனைவோர் என்னும் ஆளுமை

 

மார்க்சியச் செவ்வியல் பார்வையில் மூலப்பொருட்கள், உழைப்பு, மூலதனம், நிர்வாகம் என்பதில் நிர்வாகத்திற்கான இடம் எவ்வகையிலும் முக்கியமானதல்ல. அதை உழைப்பாளிகள் தாங்களே செய்து கொள்ள முடியும் என்ற எண்ணத்திலிருந்துதான் மார்க்சியம் தொடங்குகிறது. நிர்வாகிகளான முதலாளிகளை முழுமையாக அகற்றி மூலப்பொருட்களையும் முதலீட்டையும் கைப்பற்றி தொழிலாளர்சமூகம் தாங்களே நிர்வாகத்தை நடத்தி உற்பத்தி வினியோகம் அரசமைப்பு ஆகியவற்றை ஆற்றுவவதற்குப்பெயர்தான் மார்க்ஸியப்பொருளியல்

 

ஆனால் நடைமுறை அப்படி அல்ல. எப்படி அறிவியலாளர்கள் ,கலைஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் நிபுணர்கள் தன்னியல்பான திறமைகளால் உருவாகி எழுந்து வருகிறார்களோ அதே போல உருவாகிவருபவர்கள்தான் முதலாளிகள். அவர்கள் குன்றாத தன்னம்பிக்கையும் புதுப்புது வாய்ப்புகளாகத் தேடும் கற்பனைவளமும் ஆளுமைத் திறனும் கொண்டவர்கள். அவர்களுடைய ஆளுமைத்திறன்தான் மூலப்பொருட்களையும் உழைப்பையும் மூலதனத்தையும் ஒருங்கிணைத்து உற்பத்தி சக்தியாக மாற்றுகிறது. ஓர் அறிவியலாளரும் சிந்தனையாளரும் எப்படி மாற்றீடு செய்யப்பட முடியாதவர்களோ அப்படித்தான் முதலாளிகளும்.

 

அவர்களைத் தொழில்முனைவோர் ,பெருநிர்வாகிகள் என்ற சொற்களால் குறிப்பிட விரும்புகிறேன். அவர்களும் தங்கள் தனிஇயல்பால் இளமையிலேயே வடிவமைக்கப்பட்ட ஆளுமை கொண்டவர்கள், வென்றுசெல்பவர்கள், சூழலில் நின்றுபோராடி வென்று தங்களை நிறுவிக் கொள்பவர்கள். ஒருங்கிணைப்பவர்கள்,கற்பனை நிறைந்தவர்கள், சாகசக்காரர்கள். அத்தனை சமூகங்களும் அவர்களை எப்போதும் உருவாக்கிக் கொண்டு தான் இருக்கின்றன. அவர்கள் இல்லாத நாடுகளே இல்லை. அவர்கள் வலுவாக இருந்த காலங்களில்தான் அந்தச்சமூகங்கள் பொருளியல்வெற்றியும் பண்பாட்டுச்சிறப்பும் அடைந்துள்ளன

 

ஆனால் மானுட வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் நமது பண்பாட்டுப் பரிணாமத்தில் அவர்களுக்கான இடம் இன்றுவரை மறுக்கப்பட்டுத்தான் இருக்கிறது என்று தோன்றுகிறது. மார்க்சுக்கு முன்னரே கூட அவ்வாறு தான். ஏனெனில் இந்த உலகப் பரிணாமத்தை உருவாக்கிய மன்னர்களின் பட்டியல் நம்மிடம் இருக்கிறது. அவர்களின் வெற்றிகளும் தோல்விகளும் பதிவாகியிருக்கின்றன. ஆனால் பெருவணிகர்கள், பெருந்தொழில்களை முன்னெடுத்தவர்கள் பெயர்கள் மிக அபூர்வமாக தற்செயலாகத்தான் பதிவாகியிருக்கின்றன. உலக அளவிலேகூட எந்த சமுதாயமும் பெருவணிகர்களைப்பற்றி முறையாக பதிவு செய்ததில்லை.

 

கார்ல் மார்க்சுக்குப் பிறகு தொழில்முனைவோர் பெருநிர்வாகிகள் போன்றவர்கள் தொடர்ச்சியாக சுரண்டல்காரர்கள் என்றும் மோசடிக்காரர்கள் என்றும் மக்களிடமிருந்து செல்வத்தைப் பறித்துச் சேர்ப்பவர்கள் என்றும் ஒருவகையான சமூகப்பெருச்சாளிகள் என்றும் ஒரு சித்திரம் பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டது. மார்க்சியத்தின் மாபெரும் பிரச்சார எந்திரமே அதை உலகம் முழுக்க கொண்டு சென்று சேர்த்தது. அந்த நோக்கு இளமையிலே நமது உள்ளங்களில் நிறுவப்பட்டது. அமெரிக்கா போன்ற முற்றிலும் முதலாளித்துவ அமைப்பு கொண்ட நாடுகளிலும் கூட இந்த உளவியல் எப்படியோ நிலை கொள்கிறது.

 

அந்த கருத்துநிலைக்கு எதிராக வணிகம் தொழில் ஆகியவற்றை முதன்மைப்படுத்தியும், வணிகர் தொழில்முனைவோர் ஆகியோரை மையப்படுத்தியும் ஒரு முதலாளித்துவ நோக்கு ஐரோப்பாவில் இருபதாம்நூற்றாண்டிலேயே உருவாகியது. அமெரிக்காவில் வலுப்பெற்றது. இந்தியாவில் நமக்கு அயன் ராண்ட் வழியாகவே அந்தப்பார்வை அறிமுகமாகிறது. நம் மாணவர்கள் அயன் ராண்டை முதல்முறையாகப் படிக்கும்போது ஆழ்ந்த அதிர்ச்சியை அடைகிறார்கள். அவர்களின் உள்ளம் குழம்பிக்கொந்தளிக்கிறது. பின்னர் ஒருவகை தெளிவை அடைகிறார்கள். இடதுசாரிகளின் ஒற்றைவரிகளால் கட்டமைக்கப்பட்ட தங்கள் உலகநோக்கை மறு அமைப்பு செய்துகொள்கிறார்கள். முதலாளித்துவ பொருளியல் அமைப்புடன் பொருந்தவும் அதைவெல்லவும் முயல்கிறார்கள்

 

ஆனால் இவர்களில் தந்திரசாலிகள் ஒரு இரட்டைநிலை எடுக்கிறார்கள். ஒருபக்கம் முதலாளித்துவ அமைப்புடன் பொருந்தி வெல்லமுயல்கிறார்கள். ஆனால் இளமையிலேயே தன்னை வந்தடைந்த இடதுசாரி ஒற்றைவரிகள் அவர்களை சங்கடப்படுத்துகின்றன. ஆகவே சமூக ஊடகங்களில், கருத்தியல் தளத்தில் ஒரு பொய்யான ஆளுமை ஒன்றை கற்பனை செய்து முன்வைக்கிறார்கள். ஏகே 47 களுடன் இணையவெளியில் உலவும் புரட்சியாளர்களின் உருவாக்கம் இப்படி நிகழ்வதுதான். இந்த இரட்டைநிலைதான் இத்தனை மூர்க்கத்தை உருவாக்குகிறது. எந்த இணைய இடதுசாரிப்போராளியிடமும் அவரது தனிவாழ்க்கை சார்ந்து, அந்தரங்க நம்பிக்கை சார்ந்து வினா எழ முடியாது. அந்த சுதந்திரத்தாலேயே எந்த உச்சகட்ட நிலைபாட்டையும் எடுக்கலாம்

 

சென்ற இருபத்தைந்தாண்டுகளாக தொடர்ந்து பிரச்சாரம் மூலம் ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களை முன்னிறுத்தி இடதுசாரிகள் உருவாக்கிய மேலேசொன்ன ஆரம்பகட்ட மனநிலையை, முதலாளித்துவ வெறுப்பை அமெரிக்க முதலாளித்துவம் எதிர்கொள்கிறது. ஆயினும் நாம் இன்றும் அதை பொதுவெளியில் முன்வைக்க துணிவதில்லை. சாதி, மதம், ஆசாரங்களுக்குள் வாழ்ந்தபடி பொதுவெளியில் முற்போக்காக காட்டிக்கொள்வதைப்போலவே இதையும் கடந்துசெல்கிறோம்.

 

உண்மையில் இது மிக வேடிக்கையான ஒன்று. நமது ஒவ்வொருவரின் பகற்கனவுகளிலும் பெருவணிகராக தொழில்முனைவோராக பெருநிர்வாகியாக ஆகும் கனவு இருந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் அவ்வாறு இல்லை என்று நமக்குத் தெரியும் என்பதுதான் அவர்கள் மீதான கசப்பை மேலும் வளர்க்கிறது.

 

இடது சாரிப்பார்வை கொண்ட ஒருவன் ஒட்டு மொத்தமாக இந்த தொழில் முனைவோரை பூர்ஷ்வாக்கள் என்று அடையாளப்படுத்துவதிலும் அவற்றைத் தவிர்த்து ஒரு பொருளியல் கட்டுமானத்தை கற்பனை செய்வதிலும் எனக்கு மாற்றுக் கருத்து எதுவுமில்லை. ஒருவகையில் அந்தப்பார்வையில் இருந்து கொண்டிருக்க வேண்டுமென்று தான் முதலில் சொன்னேன். ஆனால் ஒரு முதலாளித்துவ பொருளியல் அமைப்பின் பகுதியாக இருந்துகொண்டு அதன் அனைத்து வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு எல்லா வகையிலும் அதன் கருத்தியலுடன் உடன்பட்டுக் கொண்டு முதலாளிகள் மீதான அர்த்தமற்ற வெறுப்பை மட்டும் ஒருவகையான மூடநம்பிக்கையாகக் கொண்டிருப்போர்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அந்த மனநிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்பதே எனது கோரிக்கை.

 

 

[ மேலும்]

மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள்
கருப்புப்பணம் -எதிர்வினைகள்

 

முந்தைய கட்டுரைவாசிப்பின் வழி
அடுத்த கட்டுரைகாட்சிகள் -கடிதங்கள்