சைதன்யா வீட்டுக்கு வந்திருக்கிறாள். அஜிதனும் வீட்டில் இருக்கிறான். குடும்பமாக பாகுபலி-2 பார்க்கவேண்டும். அதற்கு முன் பாகுபலி- 1 பார்க்கவேண்டும். அதற்கு டிவிடி பிளேயர் பழுதுபட்டதை மாற்றவேண்டும். நேற்று எல்லாவற்றையும் முடித்து நேற்றுத்தான் முதல்முறையாக பாகுபலி- 1 ஐ பார்த்தேன்.
சினிமாவில் இருப்பவன், சில vfx படங்களுடன் தொடர்புகொண்டவன் என்றவகையில் இந்திய சினிமா சினிமாவரைகலையில் முதிர்ச்சி அடைந்துவிட்டது என்பதற்கான உதாரணம் இப்படம்என நினைக்கிறேன்.. இதுவரை வந்த எந்த இந்தியப் படமும் இந்தத் தரத்தை அடையவில்லை.
வரைகலை பிரம்மாண்ட அளவுகளை எவ்வளவு வேண்டுமென்றாலும் பெரிதாக்க அனுமதிக்கிறது. எல்லாவகையான காட்சிக்கோணங்களையும் அளிக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொள்வதில் சுயகட்டுப்பாடு உள்ள இயக்குநர்களே நல்ல வரைகலைப் படைப்புகளை எடுக்க முடியும். ஏனென்றால் எல்லை மீறுவது நம்பகத்தன்மையை இல்லாமலாக்கும். திரைக்கதையில் நம்பகத்தன்மையை உருவாக்கியபின்னரே வரைகலைச் சாத்தியங்களை நோக்கிச் செல்லமுடியும். ஆகவே எதுவரை என்பதே இயக்குநருக்கான சோதனைக்களம். அதை மிகச்சரியாக கையாண்டவர் ஸ்பீல்பர்க் மட்டுமே. மற்றவர்கள் எல்லாரும் கொஞ்சம் எல்லைகடப்பவர்களே.
ராஜமௌலி மிக வசதியாக ‘எதுவும் நிகழும்’ என்றவகையான கதையை எடுத்துக்கொள்கிறார். மிகைகற்பனை [fantacy] களில் பலவகை. உண்டு. தேவதைக்கதைகள் [சிண்ட்ரெல்லா], விலங்குகளும் பொருட்களும் மானுடத்தன்மைகொள்ளும் நீதிக்கதைகள் [ஜங்கிள் புக்], அதிமானுட சாகஸக்கதைகள் [ஜேம்ஸ்பாண்ட்] தொன்மக்கதைகள் [ஹெர்குலிஸ்] மாயக்கதைகள் [ ஹாரிபாட்டர் ] கேலிஉருவகக்கதைகள் [கல்லிவர் பயணங்கள்] பேய்க்கதைகள் [டிராக்குலா] அறிவியல்புனைவுகள் [ஜுராஸிக் பார்க்] கொடுங்கனவுக்கதைகள் [விஷ்மாஸ்டர்] பாலியல்மீறல்கதைகள் [தி சயன்ஸ் ஆஃஒ ஸ்லீப்] மீபொருண்மை உருவகக் கதைகள் [ மாட்ரிக்ஸ் ] அதிலொன்றான சிறார் சாகஸக்கதை இது
சிறுவர்களின் உள்ளம் சில இயற்பியல் விதிகளை மீறுவதைப்பற்றிய கனவுகளையே முதன்மையாக கொண்டுள்ளது. ஏனென்றால் ஒரு குழந்தை இயற்பியல்விதிகளை மீறமுடியாதென்று அடிபட்டு நொந்து புரிந்துகொண்டபின்னரே கனவுகாணத் தொடங்குகிறது. ஆகவே தாவுவது, எல்லைகளைக் கடப்பது அதன் கனவுகளில் எப்போதும் உள்ளது. வல்லமை, பேராற்றல், வெல்வது என்பதே அதை கிளரச்செய்கிறது. அதற்கான தருணங்களால் ஆனது பாகுபலி. குறிப்பாக அந்த மாபெரும் சிவலிங்கத்தை அம்மாவுக்காக சிவுடு தூக்கிவரும் இடம். முழுக்கமுழுக்க ஒரு குழந்தைக்கற்பனை. குழந்தைபோலவே கற்பனைசெய்தலே இத்தகைய கதைகளை அமைப்பதன் முதல் விதி.
வரைகலையில் பெரிய அளவுகள் வரும்போதும் வெட்டிஒட்டிப்பெருக்கும்போதும் நீர் தீ ஆகியவற்றைக் காட்டும்போதும் ஒளிவேறுபாடுகள் மிகமிகச் சிக்கலான சவால்களை அளிக்கின்றன. அவற்றை திறம்படக் கையாண்டிருக்கிறார்கள். மிகச்சிலகாட்சிகளிலேயே பிழைகளைக் காணமுடிகிறது. இந்தத்தரம் ஹாலிவுட் படங்களிலேயே குறைவுதான்.
ஆனால் என்னவானாலும் வரைகலை அப்படிக் காட்டிக்கொடுக்கும், காரணம் அது வரைகலை என நமக்குத்தெரியும் என்பதே. ஒருவர் வழுக்கை என நமக்குத்தெரிந்தால் என்ன விக் வைத்தாலும் விக்காகவே தெரியும் என்பதுபோல. அது மனம்செய்யும் மாயம். பொதுவாக பிளானட் ஆஃப் ஏப்ஸ் 2 தான் வரைகலை உச்சகட்ட கூர்மை கொண்ட படைப்பு என்பார்கள் நிபுணர்கள்.ஆனால் அதிலும் எனக்கு பிழைகள் தெரிந்தன. சினிமாவுக்குள் இருந்து கச்சா காட்சிகளை நிறையப் பார்ப்பதன் சாபம் இது.
உற்சாகமான ஒரு குழந்தைக்கதை. ஆகவே அவ்வப்போது தலைகாட்டும் சினிமாக்காரனை மண்டையில் குட்டிக்குட்டி அமரவைத்து படத்தை ரசித்தேன். ஆனால் அதன்பின் இணையத்தில் அதைப்பற்றி எழுதப்பட்டதை வாசித்து புன்னகைசெய்தேன். சினிமாக்காரர்கள் பெரும்பாலும் நம் சினிமாவிமர்சனங்களை வாசித்து அடையும் புன்னகை அது.
பாகுபலி நிலம், வரலாறு எல்லாவற்றையும் வேண்டுமென்றே கற்பனையாக நிலைநிறுத்துகிறது. ஆனால் கதையிலும் பாத்திரங்களிலும் இருக்கும் கலவையை நமக்கு நல்ல விமர்சகர்கள் இருந்தால் சுட்டிக்காட்டியிருப்பார்கள். ஒன்று டிராய், 300 போன்ற படங்களின் சாகச அம்சம். இன்னொன்று புராணம். மையக்கதாபாத்திரங்களை பீமன், துரியோதனன், சகுனி, குந்தி என இயல்பாக அடையாளம் காணமுடியும். ஆனால் அதைவிட முக்கியமானது ஆந்திரத்தின் உண்மையான வரலாற்றுநாயகர்களின் கதைகள் உள்ளடங்கி பின்னப்பட்டிருப்பது.ருத்ரம்பா முதலிய ராணிகள், கிருஷ்ணதேவராயர் முதலிய அரசர்கள்.
உதாரணமாக முதல்காட்சியே கர்நாடகத்தில் உள்ள தலக்காடு என்னும் ஊரின் தொன்மத்துக்கு அணுக்கமானது. அலமேலம்மா கைக்குழந்தையுடன் காவேரியில் மூழ்கி மறையும்காட்சி. இப்படி ஒரு எளிய குழந்தைக்கதைக்குள் எவ்வளவு மெய்யான வரலாறுகள் தன்னிச்சையாக ஊடுகலக்கின்றன , அதன் கலவையின் விதிகள் என்ன என்பதை எல்லாம்தான் விமர்சகர்கள் வரலாற்றையும் பண்பாட்டையும் ஆராய்ந்து எடுத்துச்சொல்லவேண்டும். நம்மூரில் விமர்சகர்கள் நம்மைவிட பாவப்பட்ட ஜீவன்கள்.கோட்பாட்டுப் பேராசிரியர்கள் இன்னும் பரிதாபமானவர்கள்.எளிய அரசியல்சரிகளுக்கு நாலு மேற்கோள்களுடன் எழுதுபவர்கள்.
பாகுபலி1 ன் மிகப்பெரிய குறைபாடு இசை. மிகக்கோராமையாக ஒலிக்கிறது. ஒலிச்சேர்ப்பும் போதுமான அளவுக்குத் தரம் கொண்டது அல்ல.
பாகுபலியின் தொழில்நுட்பக்கலைஞர்களை தெரியும், இன்னொரு படத்துக்காகப் பேசிக்கொண்டிருக்கிறோம். இதன் சாதனையை சாமானியர்கள், அவர்களைவிட ஒருபடி கீழே நிற்கும் நம் அறிவுஜீவிகள் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. இந்த வரைகலைத் தொழில்நுட்பத்தை இங்கிருந்துகொண்டு நாம் கற்றுக்கொள்ள வழியில்லை. கிட்டத்தட்ட ராக்கெட் தொழில்நுட்பம்போல ஹாலிவுட்டில் அது ரகசியம் காக்கப்படுகிறது. பெரும்பாலும் சினிமாவைப்பார்த்து ஊகித்துக்கற்றுக்கொண்டு செய்துபார்த்து மேம்படுத்தி அடையும் தொழில்நுட்பம் இது
கூடவே விலங்குகளை நடிக்கவைக்கக்கூடாது, ரத்தம் காட்டக்கூடாது, அணுக்கக்காட்சிகளில் வன்முறை கூடாது, வன்முறைக்காட்சிகளில் காட்சி இத்தனை கணங்களுக்குமேல் நிலைக்கக் கூடாது, உண்மையான வரலாற்று இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்றெல்லாம் இந்தியாவிலுள்ள நூற்றுக்கணக்கான கெடுபிடிகள்.அதைக்கடந்து அடையப்பட்ட படம் இது.
பாகுபலியின் பட்ஜெட் இந்தியாவுக்கு மிக அதிகம். ஆனால் ஹாலிவுட்டின் சராசரி சினிமாவுக்கும் கீழேதான் அது. இந்த பட்ஜெட்டை அளித்தால் ஹாலிவுட் தொழில்நுட்பர்கள் இப்படத்தின் கால்வாசியைக்கூட எடுக்கமுடியாது. பெரும்பாலும் உள்ளூர்த் தொழில்நுட்ப உத்திகள் கொண்டு எடுக்கப்பட்டது. பலசமயம் இந்த உத்திகள் இங்கிருந்து ஹாலிவுட்டுக்குச் செல்கின்றன
இதைச் சாத்தியமாக்கியது ஒருவகையான வெறி. இருப்பதைக்கொண்டு ஒப்பம் நின்றாகவேண்டுமென்ற பிடிவாதம். அதுதான் இந்தியாவை தொழில்நுட்பத்தில் வெற்றிகொள்ளச்செய்யும் உளநிலை.பாகுபலியின் உண்மையான வெற்றி இருப்பது அங்குதான்.