சுஜாதா விருதுகள் -கடிதங்கள்

sammana

சுஜாதா அறிமுகம்

ஆசிரியருக்கு வணக்கம்,

நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதுகிறேன். சுஜாதா விருதுகள் பற்றிய உங்களின் பதிவை வாசித்தேன். விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பெற்ற படைப்புகள் பற்றி சொல்கையில் கிருபாவின் சம்மனசக்காடு ஒரு இலக்கியவெற்றி என்று சொல்லியுள்ளீர்கள். ஆச்சிரயமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

நான் அவரின் மூன்று கவிதைத் தொகுப்புகள் மற்றும் ஒரு நாவலை இதற்கு முன் வாசித்துள்ளேன். இதுதான் அவரின் மிகச் சுமாரான தொகுப்பென்று நான் கருதிவந்தேன். சில கவிதைகளெல்லாம் வேறு யார் பெயரிட்டு வந்திருந்தாலும் கவிதையென்றே ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்று நினைத்திருந்த நிலையில் அப்படைப்பு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதும், உங்களைப் போல் மூத்த படைப்பாளி ஒருவர் அதை அங்கீகரிகிறதும் ஒரு வாசகனாய் என்னைக் குழப்பமடையச் செய்கிறது.

எந்த விதமான சர்ச்சையையும் கிளப்பும் பொருட்டு கேட்க்கவில்லை நான் எங்கே கோட்டை விடுகிறேன் என்பதைத் தெரிந்துகொள்ளவே எழுதுகிறேன். சம்மனசக்காடு எவ்வாறு இலக்கியவெற்றி அடைந்த படைப்பாகிறது.

 

அன்புடன்,

சங்கர்

sankar

 

அன்புள்ள சங்கர்

ஓர் இலக்கிய விருதை ஒட்டி அப்படைப்புக்களை சார்ந்து விவாதம் நிகழ்வது இயல்பானது, அவசியமானது. விருதுக்கு அப்பாற்பட்ட சாதி, மதச் சழக்குகளும் தனிப்பட்ட ஆளுமைகளைச்சார்ந்த காழ்ப்புகளும்தான் ஆபாசமானவை.

பிரான்சிஸின் இந்த தொகுதி அவருடைய முந்தைய தொகுதிகளின் அளவுக்கு வலுவானதல்ல என்னும் கருத்தை என் நண்பர்களும் சொன்னார்கள். உண்மையில் அப்படி இருக்கவும்கூடும். அக்கோணத்தில் நான் இனிமேல்தான் வாசிக்கவேண்டும்

ஆனால் கவிதைகளில் மட்டும் ஒரு தனிச்சிறப்பான அம்சம் உள்ளது. அதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதாவது ஒரு கவிஞனின் அத்தனைக் கவிதைகளும் அவனுடைய வாழ்க்கையின் ஒற்றை வெளிப்பாடாக,  ஒற்றைக்கவிதையாக வாசிக்கத் தக்கவை. அத்தனை தனிக்கவிதைகளும் ஒரு பெரிய கவிதையின் துண்டுகள்

ஆகவே அனைத்து தனிக்கவிதைகளுக்கும் அவனுடைய ஒட்டுமொத்தக் கவிதைகள் அளிக்கும் ஒட்டுமொத்தமான உணர்வுத்தளமும் தரிசனத்தளமும் வந்து பின்புலம் அமைக்கின்றன. அவை நீங்கள் சொல்வதுபோல ஒரு பெயரறியாக் கவிஞரால் எழுதப்பட்டிருந்தால் உண்மையிலேயே கவிதைகளாக கருதப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அக்கவிஞரின் வாழ்க்கையையும் அவரது அகவுலகையும் அவரது கவிதையுலகையும் தெரிந்த வாசகருக்கு அவை ஒன்றாகச்சேர்ந்து அளிக்கும் பின்புலம் காரணமாக அவை கவிதையாகின்றன.

அப்படி தெரிந்துகொண்டுதான் வாசிக்கவேண்டுமா?  கவிதை வாசகன் கவிஞனுடன் ஓர் அந்தரங்கமான தொடர்பிலிருப்பவன். கவிஞனை அணுகியறிய முயன்றபடியே இருப்பவன். அது ஒருவகை காதல்தான். எனக்குப்பிடித்தமான கவிஞர்களின் புகைப்படங்கள்கூட எனக்குப் பரவசத்தையே அளிக்கின்றன.

அப்படியென்றால் கவிதைப்பிரதி மட்டுமே தனித்து நிலைத்து நிற்காதா? பல படைப்பாளிகளின் கவிதை மட்டும் தனித்து நிற்கவும் கூடும்.பெயரறியா கவிஞர் எழுதி நிலைகொள்ளும் கவிதைகளும் உண்டு. பொதுவாக செவ்வியல்தன்மை கொண்ட கவிதைகளுக்கு ஆசிரியன் வெளியே இருப்பதில்லை. அவன் உடலே அக்கவிதையென்றாகிவிட்டிருக்கும். அதன் அமைப்புவிரிவு காரணமாகவே அதற்குள்ளாகவே அவனை பலவகையில் மீளமீளக் கண்டடைய இடமிருக்கும்.

ஆனால் கற்பனாவாதக் கவிதையும் நவீனக்கவிதையில் தனிநபர்க்குரலாக ஒலிக்கும் கவிதையும்  ஒருவனால் எழுதப்படுவது மட்டும் அல்ல, பின்னணியில் அவனால் வாழ்ந்து பொருளேற்றம் செய்யப்படுவதும்கூட. ஷெல்லியின் ,பாரதியின் வாழ்க்கை அக்கவிதைகளை பொருளேற்றம் செய்கிறது. ஸில்வியா பிளாத்தின், பிரமிளின் வாழ்க்கை அவ்வரிகளின் குருதியாக நிலைகொள்கிறது.

அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் என்னும் கவிதை தன்னளவில் ஆழமுடையது அல்ல. பாரிமகளிரின் அவலவாழ்க்கையே அதை கவிதையாக்குகிறது. ஈராயிரமாண்டுக்காலம் தமிழ்ப்பண்பாடு அவ்வாழ்க்கையை நினைவுகூர்ந்து கவிதைக்கு பொருட்கோள்புலமாக நிறுத்தி வைத்திருக்கிறது.

நவீனத் தமிழில் நகுலன், விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள் அவர்களின் வாழ்க்கைப்பின்புலம் இல்லையேல் கவிதை என்றே தோற்றமளிக்காதவை. அவை கவிஞர்களின் தனியாளுமையால் மட்டுமே பொருள்கொள்கின்றன. கிருபா அவ்வகையில் மதிப்பிடவேண்டியவர்.

ஃப்ரான்ஸிஸ் கிருபாவின் இத்தொகுதியை அவருடைய முந்தைய தொகுதிகளின் நீட்சியாகவே நான் பார்க்கிறேன். இந்தத்தொகுதியின் கவிதைகளில் ஒவ்வொன்றுக்கும்பின்னால் அவருடைய வாழ்க்கைச் சித்திரம் மேலதிகப் பொருள் அளிப்பதாக உள்ளது. பித்துக்கும் தனிமைக்கும் தலையைக்கொடுத்துவிட்டு அழியும் ஓர் ஆன்மாவின் குரலாகவே பலவரிகள் என்னை உலுக்கின.

நாம் அனைவரின்பொருட்டும் ஒருவனை கழுவேற்றவேண்டுமென தெய்வம் ஆணையிட்டால் சென்று முன்னிற்பவன் கவிஞன். ஒரு காலகட்டத்தின் பலி அவன். அவன் வலி அதன்மூலம் அக்காலகட்டத்தின் துயரமென ஆகிறது. விரிவாக அத்தொகுதிபற்றி பின்னர் எழுதுகிறேன்

ஜெ

 

j.f
ஜெ ஃப்ரான்ஸிஸ் கிருபா பரிசு பெறுகிறார்

 

 

டியர் ஜெயமோகன்,

நலம் தானே?

சுஜாதா இணைய விருது பற்றிய உங்கள் கருத்து கண்டேன். அது பற்றிய ஒரு விளக்கம்: http://www.writercsk.com/2017/05/blog-post.html

 

 சரவணக்கார்த்திகேயன்

CSK
சரவணக்கார்த்திகேயன்,

 

அன்புள்ள சரவணக்கார்த்திகேயன்,

 

இணையப்பக்கங்களுக்கான தொகுப்பு ஏதுமில்லை என்பதனால் நான் உங்கள் இணையப்பக்கத்தைப் பார்ப்பதே இல்லை. பத்ரிசேஷாத்ரி பக்கத்தில் அளிக்கப்பட்டிருக்கும் இணைப்புகளையே வாசிக்கிறேன். அல்லது ஆர்வமூட்டும் ஏதேனும் பிரசுரமானால் என் நண்பர்கள் , வாசகர்கள் அளிக்கும் சுட்டிகளை

உங்கள் தளம் தொடர்ந்து வெளிவருவது எனக்கு உண்மையில் தெரியாது. அதைத்தான் சொல்லியிருந்தேன். தொடர்ந்து வெளிவருவதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

 

ஜெ

 

 

ஜெமோ

 

ஒரு கேள்வி. இம்முறை சுஜாதா விருதுக்கு தகுதியானவர்களைத் தெரிவுசெய்துள்ளது என்னும் வரிக்கு என்ன அர்த்தம்? அப்படியென்றால் இதுவரை விருதுவழங்கப்பட்டது தகுதியின் அடிப்படையில் அல்லவா?

 

பூபாலன்

 

அன்புள்ள பூபாலன்,

 

விருதுகளில் எப்போதும் நடக்கும் ஒருகுளறுபடி உண்டு, தகுதியான படைப்புகளுடன் தகுதியற்ற படைப்புகளுக்கும் சேர்த்து விருதளித்து தரம்  என்னும் மதிப்பீட்டை அழிப்பது. அது காலப்போக்கில் இலக்கியம் என்னும் அமைப்பை அழிப்பதுதான். அது சுஜாதா விருதுகளில் நிகழ்ந்தது. முன்னர் விருதுபெற்ற போகன் போன்றவர்கள் முக்கியமானவர்கள் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அந்த வரிசை அப்படி இருக்கவில்லை.

 

உதாரணமாக இந்த விருதுவரிசையில் அதிஷாவோ ,யுவகிருஷ்ணாவோ, வினாயக முருகனோ இடம்பெற்றிருந்தால் மொத்த வரிசையையுமே நான் நிராகரிப்பேன். ஏனென்றால் அவர்களுக்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தமில்லை. அவர்களை இந்த வரிசையில் சேர்ப்பது இவர்களைக்கொண்டுசென்று அந்த வரிசையில் சேர்ப்பதுதான்.

 

அதேசமயம் அதிஷாவோ யுவகிருஷ்ணாவோ சுவாரசியமான வணிக எழுத்தாளர்கள் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அத்தகைய எழுத்து இன்றைய சூழலில் மிகவும் தேவையான ஒன்று. உண்மையில் யுவகிருஷ்ணாவின் குங்குமம் தொடர்கதையை நான் வாசிக்கிறேன்.சுவாரசியமானது, மேலோட்டமானது.

 

எனக்கு இலக்கியம் என்னும் இயக்கத்தில் நம்பிக்கை உண்டு. நான் இதுநாள் வரை வாழ்ந்தது அதன்பொருட்டே. அவ்விழுமியத்தை எப்போதும் முன்வைப்பதே என் பணி

 

ஜெ

 

முந்தைய கட்டுரைகி.ரா- ஞானபீடம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபசுக்கொலை- பொருளியலும் சட்டமும்