«

»


Print this Post

சுஜாதா விருதுகள்


sujatha

 

இம்முறை சுஜாதா விருதுகள் சரியான எழுத்தாளர்களின் சரியான படைப்புகளுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன். சம்பிரதாயமான வாழ்த்தாக இருக்கவேண்டாம் என்பதனால் சம்பந்தப்பட்ட நூல்களையும் வாசித்துப்பார்த்தேன். என் சுருக்கமான மதிப்பீடுகள் இவை

 

இவ்விருதுப்பட்டியலில் முக்கியமான நூல்கள் சோ.தருமனின் சூல், பிரான்ஸிஸ் கிருபாவின் சம்மனசுக்காடு இரண்டும்தான். இரு இலக்கியவெற்றிகள் இப்படைப்புகள். சூல் விகடன் விருது உட்பட தொடர்ந்து விருதுகள் பெற்றுவருவது முக்கியமான ஒரு நிகழ்வு என நினைக்கிறேன்

 

வெயிலின் ‘கொஞ்சம் மனதுவையுங்கள் தோழர் ஃப்ராய்ட்’ சமீபத்திய கவிதைத் தொகுதிகளில் முக்கியமான ஒன்று. இன்று உருவாகிவரும் புறப்பரப்பால் மட்டுமே கவித்துவத்தொடர்பை நிகழ்த்தும்தன்மை கொண்ட கவிதைகள் கொண்டது.நரன் [லாகிரி] கவிதைகள் சற்று பழையதாகிவிட்ட படிம- குறிப்பு வடிவில் அமைந்தவை என்றாலும் பல வரிகள் முக்கியமானவை.

 

ஜி.கார்ல்மார்க்ஸின் வருவதற்கு முன்பிருந்த வெயில், அ.கரீமின் தாழிடப்பட்ட கதவுகள் இரண்டும் நல்ல சிறுகதைகள் சில கொண்டவை. ஊக்கப்படுத்தப்படவேண்டிய படைப்பாளிகள். ஆனால் ஒரு படைப்பாளி எழுந்துவரும்போது இருந்தாகவேண்டிய புதிய அம்சம், குறைவாகவேனும், இவர்களில் தென்படவில்லை. முன்னரே எழுதப்பட்ட தடத்தில் செல்பவை என இக்கதைகள் தோற்றமளிக்கின்றன.

 

இவர்கள் மொழிநடையை எளிதாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சரளமான வாசிப்பு என்பதற்கு இலக்கியத்தில் தனிமதிப்பு ஏதுமில்லை. உள்ளத்தையும், பண்பாட்டையும் மொழி சென்று சந்திக்கும் தருணங்களை கொண்டு மட்டுமே நடை மதிப்பிடப்படுகிறது. இக்கதைகளில் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து எழுதுவதன் வழியாக உருவாகும் பயிற்சி மட்டுமே தெரிகிறது.

 

சமூக ஊடகங்களில் நிறைய எழுதி விவாதிப்பதனால் இது நிகழ்கிறதா? ஒரு பொதுநடை நோக்கி கொண்டு சென்று தனிநடை உருவாகாமல் ஆக்கிவிடுகிறதா ? இதழாளர்களுக்கு தனித்துவமான மொழிநடை உருவாகாமல் போவதைக் கவனித்திருக்கிறேன். குறிப்பாக எழுதத்தொடங்கும் காலத்தில் இதழாளர்கள் ஆகிறவர்களுக்கு.

 

அ.ராமசாமி என்றும் எனக்கு பிடித்தமான பேராசிரியர். மிகையான தோரணைகளில்லாமல் இலக்கியத்தை நேர்மையாக அணுகுபவர். கரன் கார்க்கியின் ஒற்றைப்பல் நாவல் கிடைக்கவில்லை.

.

இணைய விருதுகள் குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை. ஷான்கருப்பசாமி, சரவணக்கார்த்திகேயன் ஆகியோர் இணையதளங்களை நடத்துகிறார்களா, தொடர்ந்து எழுதுகிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. சமூக வலைத்தளப் பங்களிப்புக்காக இருக்கலாம். அது என் இடமல்ல என நினைக்கிறேன்.

 

விருதுபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/98187

1 ping

  1. சுஜாதா விருதுகள் -கடிதங்கள்

    […] இடைவெளிக்குப் பின் எழுதுகிறேன். சுஜாதா விருதுகள் பற்றிய உங்களின் பதிவை வாசித்தேன். […]

Comments have been disabled.