92. கெடுமணச்சோலை
“எத்துணை அரிதானதென்றாலும் எவ்வளவு அணுக்கமானதென்றாலும் நம்மால் எளிதில் கைவிட்டு விலகமுடிகிறதே, ஏன்?” என்றபடி முண்டன் பின்னால் வந்தான். “எங்கிருந்தானாலும் விலகிச்செல்கையில் நாம் அடையும் உள்ளுறை உவகையின் பொருள்தான் என்ன?” பீமன் அவனை நோக்கி “நான் உவகை அடையவில்லை. சோர்வு கொண்டிருக்கிறேன்” என்றான். “ஆம், அது உள்ளத்தில். ஆனால் உங்கள் நடையிலெழும் விரைவு பிறிதொன்றின் உவகையை காட்டுகிறது” என்றான் முண்டன்.
பீமன் ஒன்றும் சொல்லாமல் முன்னால் நடக்க முண்டன் “அமர்ந்திருக்கும் பறவை முந்தைய கணத்திலோ அடுத்த கணத்திலோ பறந்துகொண்டுமிருக்கிறது” என்றான். எரிச்சலுடன் திரும்பிய பீமன் “அனைத்தையும் அக்கணமே சொல்லென்றாக்கிவிட வேண்டுமா என்ன?” என்றான். “உங்கள் சொல்லின்மையை எண்ணி அஞ்சித்தானே என்னுடன் வருகிறீர்கள், பெருந்தோளரே?” என்றான் முண்டன். “சொல்லப்பட்ட ஒவ்வொன்றும் குழந்தையால் விளையாடிக் கடக்கப்பட்ட களிப்பாவைகள்.” பீமன் நடந்துகொண்டே இருக்க அவன் துள்ளி தலைகீழாக காற்றில் சுழன்று அவனருகே வந்து நின்று “சொல்லுக, அதுவே அடுத்ததைப் பற்றும் வழி” என்றான்.
பீமன் “வெறுஞ்சொற்களில் எனக்கு ஆர்வமில்லை” என்று சொல்லி முன்னால் நடந்தான். முண்டன் பின்னால் வந்தபடி “ஒரு பெண் ஒரு சொல்லுக்கு அப்பால் வேறென்ன?” என்றான். “வீண்பேச்சு” என்றான் பீமன் எரிச்சலுடன். “புரூரவஸும் யயாதியும் அறிந்த மெய்மை அதுவே” என்றான் முண்டன். “ஒரு சொல் மட்டுமே. ஆனால் இங்குள்ள அனைத்தும் சொற்களே. இவையனைத்துமான ஒன்று உண்டென்றால் அதுவும் ஒரு சொல்லே.”
பீமன் “இத்தகைய சொல்விளையாட்டுக்களை என் மூத்தவரிடம் கேட்டு சலித்துவிட்டேன்” என்றான். முண்டன் “ஆம், அவர் சொல்லில் இருந்து சொல்லை மட்டுமே கற்றுக்கொள்பவர். எளியவர், ஆகவே அருளாளர்” என்றான். “சொல்லில் அனைத்தையும் பெய்கிறோம். விழைவை, ஆணவத்தை, இழிவுணர்வை, இனிமையை, தனிமையை. மாவலரே, பெண்ணும் நாம் பெய்து நிறைத்து எடுக்கும் வெறுங்கலம் அல்லவா?”
பீமன் அப்பேச்சை விலக்கி “நாம் இனி எங்கே செல்கிறோம்?” என்றான். முண்டன் “நீங்கள் கனவில் கண்ட ஐந்து பெண்களில் நால்வரை கண்டுவிட்டீர்கள். ஐந்தாம் முகம் எது என எண்ணிநோக்குங்கள்” என்றான். “ஐந்தும் திரௌபதிதான்…” என்றான் பீமன். “ஆனால் இங்கே ஆலயச்சிலைகளாகக் காண்கையில் இவர்கள்தானா என்றும் ஐயம் கொள்கிறேன்.” முண்டன் “ஐந்தும் அவரே” என்றான். “அவ்வண்ணமென்றால் ஐந்தாம் முகம் எங்கோ உள்ளது” என்றான் பீமன். “அங்கிருக்கிறது கல்யாணசௌகந்திகம். முண்டரே, இந்நான்கு ஆலயங்களையும் நீங்கள் முன்னரே அறிந்திருக்கிறீர். ஆகவே அதையும் அறிந்திருப்பீர்” என்றான்.
“நான் அறிந்திருக்கவில்லை… மெய்யாகவே” என்றான் முண்டன். “நான் உமது காலத்தை திரைதிரையென கிழித்தகற்றினேன். கண்டது நீர்.” பீமன் “அவை என் உளமயக்குகள் அல்ல. கண்டு தொட்டு அறியும்படி அன்னையரின் ஆலயங்களை சென்றடைந்தேன்” என்றான். “அவற்றுக்கு நான் சென்றதைப்போல அடுத்த ஆலயத்திற்கும் என்னை அழைத்துச்செல்க!” முண்டன் நகைத்து “அவற்றை நீரே கண்டடைந்தீர்… உமது மூக்குணர்வால்” என்றான்.
“அந்த மணத்தை நான் முற்றிலும் மறந்துவிட்டதாகவே தோன்றுகிறது. ஒவ்வொரு முறை ஓர் இடத்திலிருந்து கிளம்பும்போதும் அதுவரை அறியாத ஒரு நறுமணத்துக்காக என் மூக்கு தேடத் தொடங்கிவிடும். கடந்தவை பின் தங்கி அகன்று மறையும். இம்முறை மீண்டும் மீண்டும் சென்ற நறுமணங்களையே முகர்புலன் தேடுகிறது” என்றான் பீமன். “ஒருவேளை அந்த மலர் நாம் விட்டுவந்த இடங்களில் எங்கேனும் இருந்ததோ என ஐயம் எழுகிறது. பிறிதொன்று மற்றொன்று என தேடிய சித்தத்தால் அவற்றை தவறவிட்டுவிட்டேனா?”
முண்டன் சிரித்துக்கொண்டு “உண்மையில் அவ்வாறும் ஆகலாம்” என்றான். பீமன் திரும்பி “என்ன சொல்கிறீர்?” என்றான். “விட்டுவந்த ஒவ்வொரு மலரும் கல்யாணசௌகந்திகம் ஆகலாம், மாமல்லரே… அந்த மணம் உங்கள் உள்ளத்தின் எண்ணநுண்கூர் அல்லவா?” பெருமூச்சுடன் பீமன் “ஆம்” என்றான். “எண்ணிநோக்குக! நினைவில் அந்த மணங்களை மீட்டெடுக்கையில் என்ன தோன்றுகிறது?” பீமன் “முயல்கையில் மீள்வன அந்த வினாக்கள் மட்டுமே” என்றான். “அந்தக் கதைகள் அனைத்தையும் மறந்துவிட்டேன். சில தருணங்களாக அவை சுருங்கி விட்டன என்னுள்.”
முண்டன் “அவ்வினாக்களால் அவை கல்யாணசௌகந்திகம் அல்லாதாயின” என்றான். பீமன் திடுக்கிட்டு நின்று “ஆம்” என்றான். ஏளனச் சிரிப்புடன் “வினாவற்றதே மெய்க்காதல் என்பார்கள்” என்றான் முண்டன். “அது வெறுங்காமம் அளவுக்கே தூயது.” பீமன் அவனை நோக்கியபடி நின்றான். “அத்தனை வினாக்களுக்கும் விடைதேடி அடைந்துவிட்டால் மலர்களனைத்தும் நறுமணம் கொள்ளும்.” பீமன் இடையில் கைவைத்து சினம் எழுந்த முகத்துடன் நோக்கி நின்றான். “ஞானிகளும் அறிஞர்களும் கவிஞர்களும் காதலர்களும் கண்டடையாத விடைகள் அவை.” பீமன் பற்களைக் கடித்தபோது கழுத்துநரம்புகள் இறுகி இழுபட்டன. “காமத்தை அறிந்தவர் பிற அனைத்தையும் தெளிந்தவர்” என்றான் முண்டன்.
பீமன் வெறியுடன் கூச்சலிட்டபடி பாய்ந்து முண்டனை ஓங்கி அறைந்தான். ஆனால் அவன் பூனைபோல இயல்பாகத் திரும்பி அவனை ஒழிந்து துள்ளி அப்பால் சென்று கைகொட்டிச் சிரித்தான். நிலைதடுமாறி விழப்போய் காலூன்றி நின்று திரும்பி மீண்டும் பாய்ந்தான் பீமன். அறை விழுந்த மரம் உலுக்கல்கொண்டு இலைகளை உதிர்த்தது. மீண்டுமொரு அறையில் சிறிய மரம் ஒன்று ஒடிந்தது. கூச்சலிட்டபடி அவன் மாறிமாறி முண்டனை தாக்கினான். அவன் சிரிப்பை நிறுத்தாமலேயே துள்ளித்துள்ளி விலகினான். சூழ்ந்திருந்த காற்றெல்லாம் பஞ்சு பறப்பதுபோல அவன் பல்வெண்மை தெரிவதாக பீமன் விழிமயங்கினான்.
பின் மூச்சிரைக்க இரு கைகளையும் தேள்கொடுக்கென நீட்டி நின்றான். முண்டன் வா வா என கைகாட்டி சிரித்தான். நின்ற இடத்திலேயே துள்ளிச்சுழன்று நின்று “ஹிஹிஹி” என சிரித்தான். “உன்னை கொல்வேன்… எங்கு சென்றாலும் தேடிவந்து கொல்வேன்” என்று பீமன் கூவினான். “இதோ, கொல்லும்” என முண்டன் மிக அருகே வந்தான். இரு கைகளுக்கு நடுவே நுழைந்தான். பீமன் ‘ஆ!’ என வெறிக்கூச்சலிட்டபடி அவனை இறுக்க முயல புகைபோல மறைந்தான். அவன் தரையில் பரவிச்செல்வதைக் கண்ட பீமன் கால்களால் மாறி மாறி உதைத்தான். ஒவ்வொரு உதையிலும் உருளைப்பாறைகள் கிளம்பி மலைச்சரிவில் உருண்டு சென்றன.
அவன் மூச்சிரைக்க நின்றபோது அப்பால் மரக்கிளையில் தொங்கியபடி ஆடி வந்த முண்டன் அவனை தொட்டுவிட்டு சிரித்துக்கொண்டே பாய்ந்து விலகினான். பீமன் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்து கீழே கிடந்த கற்களை எடுத்து அவனை நோக்கி வீசினான். கற்கள் அவனை ஒளியை என கடந்துசெல்வதுபோலத் தெரிந்தது. சோர்ந்து சலித்து குனிந்து முழங்கால்களில் கைகளை ஊன்றி அவன் நின்றபோது முண்டன் இறங்கி வந்து தரையில் அவன் முன் குந்தி அமர்ந்தான். அவன் கண்கள் குரங்குகளைப்போல மின்னி இமைத்தன. அவர்கள் இருவரும் நோக்கு தொட்டு அசையாமல் நின்றனர்.
“நீர் யார்?” என்றான் பீமன். “முண்டன்” என்றான் முண்டன். “அது நாங்களிட்ட பெயர். நீர் உண்மையில் யார்?” முண்டன் சிரித்துக்கொண்டு “முதலில் நீ யார் என்று சொல்” என்றான். “நான் பாண்டவன், கௌந்தேயன், சந்திரகுலத்தவன், குருவின் கொடிவழியினன், பீமன்.” அவன் திரும்பி நோக்கி “நான் இந்தக் காற்றுபோல… எங்கிருக்கிறேனோ அங்குள்ளவன்” என்றான். எதிர்பாராத கணத்தில் பீமன் பாய்ந்து அவனை பிடிக்க முயல அவன் விலகி கிளையொன்றில் ஏறிக்கொண்டான். மண்ணில் முகம் அறைய விழுந்த பீமன் புரண்டு எழுந்தான். அவன் பல் பட்டு உதடுகிழிந்து குருதி வழிந்தது.
“மண் சுவையுடையது” என்றான் முண்டன். கெக்கலியிட்டுச் சிரித்தபடி “குருதி மேலும் சுவைகொண்டது. தன் குருதியோ அமுது” என்றான். பீமன் பாய்ந்து சென்று கற்களைப் பொறுக்கி அவன் மேல் எறிந்தான். கற்களிலிருந்து தப்பும்பொருட்டு கிளைதோறும் பாய்ந்து சென்று அமர்ந்த முண்டன் “மண்ணும் குருதியும் நீரும் நெருப்பும் போல” என்றான். பீமன் “நீ யார் என அறிவேன். என்னை மயக்கி இறப்புக்குக் கொண்டுசெல்லும் தீயதெய்வம்…“ என்று கூவினான். “ஆனால் அஞ்சாதவனை அழிக்க இருட்தெய்வங்களால் இயலாது… நான் எதன்பொருட்டும் அஞ்சுபவன் அல்ல.”
‘நான் இப்போது உன் வேட்டைப்பொருள், அவ்வளவுதான்” என்றான் முண்டன். “நீ தோற்ற வேட்டைக்காரன், வேறெதுவும் அல்ல.” பீமன் மீண்டும் கற்களை எடுத்து எறிந்தான். முண்டன் காட்டுக்குள் சென்றுவிட அவன் கற்களையும் தடிகளையும் எடுத்து எறிந்தபடி பின்னால் ஓடினான். அவனை முண்டன் மரக்கிளைகளுக்கு நடுவே தோன்றியும் மறைந்தும் அலைக்கழித்தான். அவன் ஓய்ந்து நின்றிருக்கையில் தலைக்குமேல் தோன்றி கிளையை உலுக்கினான். சினந்து கிளைகளில் ஏறி அவனுக்கு இணையாக பாய்ந்து துரத்தினான் பீமன். கிளையுடைந்து கீழே விழுந்தான். அவனுக்குமேல் தோன்றி அவன் தலைமேல் ஒருதுளி சிறுநீர் பாய்ச்சினான் முண்டன்.
பீமன் நெஞ்சில் ஓங்கி அறைந்து கண்ணீருடன் “உன்னை கொல்வேன்… உன்னை கொல்லாமல் அமையமாட்டேன்” என்று வீரிட்டான். கிளைகளில் முட்டி விழுந்தும் எழுந்தும் முண்டனை துரத்தினான். தலைக்குமேல் முண்டனின் சிரிப்பொலி கேட்டுக்கொண்டே இருந்தது. மிக அருகே, மிக அப்பால், பின்னால், முன்னால், கையருகே, காலுக்குக் கீழே. அவன் அனைத்து சித்தப்பெருக்கும் நின்றுவிட பிறிதொன்றிலாது உளம்குவிய அவ்வொலியை பற்றிவிட வெறிகொண்டு சென்றுகொண்டே இருந்தான்.
முட்கள் அவன் உடலை கீறின. கிளைகள் தலையை தட்டி விழச்செய்தன. பாம்புகள் அவன் கால்களில் மிதிபட்டு சீறி நெளிந்து துடித்தன. எதிர்ப்பட்ட காட்டுயானை ஒன்று அஞ்சி பிளிறியபடி பின்னால் சென்றது. மான்கூட்டங்கள் எறிபடையிலிருந்து அம்புகளென நாற்புறமும் தெறித்தன. விழியும் செவியும் மூக்கும் அழிய திசைகள் மறைய இருப்பும் மயங்க அவன் காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தான்.
பின்னர் சூழ்ந்திருந்த காட்டில் எதையோ உணர்ந்து அவன் திகைத்து நின்றான். மூச்சிரைக்க இடையில் கைவைத்து நின்று சுற்றுமுற்றும் நோக்கினான். அக்காடு இருண்டிருந்தது. இலைக்கூரைக்குக் கீழே ஒரு ஓளித்துளிகூட இறங்கவில்லை. பின்னர் உணர்ந்தான், அக்காட்டின் விந்தையை. அங்கே ஒலியே இல்லை. ஒரு பறவையோசைகூட. காட்டின் அமைதியின் ஒலியாகிய சீவிடின் மீட்டல்கூட. ஆனால் காற்று? அப்போதுதான் அக்காட்டின் ஓர் இலைநுனிகூட அசையவில்லை என்று உணர்ந்தான். காற்றுவந்து காடு உயிர்கொள்வதற்காக அவன் காத்து நின்றான்.
காலம் ஓடிக்கொண்டிருந்ததை அவன் உள்ளம் மட்டுமே உணர்ந்தது. நெடுந்தொலைவு சென்ற உள்ளம் சூழ்ந்திருந்த எவையும் காலத்தில் உடன்வராமை கண்டு திரும்பி வந்தது. ஒவ்வொரு இலையாக கொடியாக மரமாக தொட்டுத்தொட்டுத் தவித்து அங்கேயே தேங்கி நின்றது. தவிப்பு மட்டுமேயாக அனைத்து எண்ணங்களும் உருமாறின. அசைவிழந்திருந்த காட்டின் ஒவ்வொன்றிலும் எழுமத்தகங்கள் கொண்டு முட்டி மீண்டது சித்தம். தலையை அறைந்து திறந்துவிடவேண்டுமென பொங்கியது அகம்.
அவன் அருகே நின்ற மரத்தை ஓங்கி மிதித்தான். நடுங்கி மீண்டும் அமைந்த கிளை ஒன்றைப் பிடித்து உலுக்கினான். அது தாழ்ந்து மீண்டது. அதை அசைக்கலாம், உலுக்கலாம். ஆனால் தன் முடிவிலா அசைவின்மைக்கு அது மறுகணமே மீளும் என உணர்ந்தான். அசைவின்மையின் கடல். அதில் வெறும் குமிழிகள் அவ்வசைவுகள். சோர்ந்து தலையை பற்றிக்கொண்டான். திரும்பிவிடலாமென்று எண்ணியகணமே திசை தொலைந்துவிட்டிருப்பதை உணர்ந்தான்.
திசைகள் அசைவுகளாலும் ஒளியாலும் ஆனவை என்று தெரிந்தது. அவை உயிர்களால் அறியப்படுபவை மட்டுமே. விழிகளால் சமைக்கப்படுபவை. அங்கே ஒரு பறவைகூட இல்லை. ஒரு பூச்சிகூட இல்லை. தேனீக்களோ வண்டுகளோ பறக்கவில்லை. இலைகளில் புழுக்கள் இல்லை. மரங்களைக் கடந்து செடிகளை விலக்கி சென்றுகொண்டே இருந்தான். சலித்து நின்று மறுதிசை நோக்கி சென்றான். மீண்டும் இருமுறை திசைசுழன்றபோது முந்தைய இடத்திற்கே வந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். “முண்டா” என்று உரக்க கூவினான். “முண்டா!”
அக்குரலுக்கு எதிரொலி எழவில்லை என்பதை அச்சத்துடன் உணர்ந்தான். நெஞ்சுடையும்படி கூவினான். எதிரொலி எழாத குரல் எத்தனை அச்சமூட்டுவதென்று அறிந்தான். திரும்பிவரும் ஒலி நாற்புறமும் ஏதோ ஒன்று சூழ்ந்திருப்பதை உணர்த்துகிறது. சூழ்ந்திருப்பது ஏதுமின்மை என்னும் உணர்வு உள்ளுறைந்த துளி ஒன்றை நடுநடுங்க வைத்தது. மீண்டும் ஓசையிடத் துணியாமல் அவன் நடந்தான். அது கனவா என்னும் எண்ணம் வந்தது. ஆனால் மரங்களை தொடமுடிந்தது. அத்தனை கனவுகளிலும் அந்த ஐயமும் பருத்தொடுகையும் நிகழ்ந்திருக்கிறது.
ஒன்றே செய்யக்கூடுவது. இந்த விந்தைக்காடு நெடுந்தொலைவுக்கு இருக்கவியலாது. ஏதேனும் ஒரு திசை நோக்கி சென்றுகொண்டே இருக்கவேண்டியதுதான். முடிவிலாது செல்லமுடியாது. எங்கோ ஓர் இடத்தில் ஒரு சாயொளி, ஒரு பறவைக்குரல், ஒரு நுண்ணுயிர், ஒரு பாறைப்பாசி கண்ணில் படும். திசையை அறிய அறிந்தவற்றின் ஏதேனும் ஒரு துளி போதும். திசை என்பது அறிந்த பொருட்களை உள்ளம் அடுக்கி வைக்கும் ஒழுங்கு.
அவன் அதற்குள் நுழைந்ததுமுதல் காதைப்போலவே மூக்கும் இல்லாமலிருந்தது என்பதை ஒரு கெடுமணத்தை உணர்ந்ததும் அறிந்தான். முதலில் அது ஓர் உளமழிவு என்றே தோன்றியது. பின்னர் அது மெய்யாகவே எழுவதை உணர்ந்தான். அந்தக் கெடுமணம் அவனை முற்றாக சூழ்ந்துகொண்டது. கண்மூடி நின்றபோது வலக்கைப்பக்கம் அதன் விசை தெரிந்தது. உறுதிசெய்துகொண்டபின் அதை நோக்கி சென்றான். அந்த இருட்பசுமை வெளியில் முதல்முறையாக திசை என ஒன்று உருவாகியிருப்பதை உணர்ந்ததும் ஆறுதல் கொண்டான்.
அணுக அணுக கெடுமணம் அழுத்தம் கொண்டு வந்தது. அழுகும்இலைபோலத் தெரிந்தது. பின் நொதித்த சேறு. புதிய மலம். விந்தையானதோர் பாசியா? பிணம் மட்குகிறதா? கெடுமணம் ஒரு பருவிசையாக ஆகி உடலை பின்னுக்கு தள்ளமுடியுமா? அதை கையால் தொட்டு கிழித்து முன்செல்ல வேண்டியிருக்குமா? உடல் முழுக்க நிறைந்து வாயில் கசப்பாகவும் கண்களில் மங்கலாகவும் கைகால்களில் எடையாகவும் ஆகியது அந்தக் கெடுமணம். அழுகும் தசைமணம் என அதை பின்னர் உணர்ந்தான். உயிருள்ள தசை. நாட்பட்ட புண்.
அப்படி எண்ணியதுமே அது பிறிதொன்றென ஆகியது. எண்ணிய கெடுமணம் எல்லாம் அதுவென்று அறிந்தது அகம். அறியாத ஒரு கணத்தில் உடல் அதிர குமட்டி வாயுமிழ்ந்தான். கண்களில் நீர்வழிய தலையைப் பற்றியபடி குனிந்து நின்று முழு வயிற்றையும் ஒழித்தான். பின்னரும் வயிற்றுத்தசைகள் அதிர்ந்துகொண்டே இருந்தன. வாயிலூறிய கோழையை நாக்கால் வழித்து வழித்து துப்பினான். பின்னர் முன்னால் செல்வதா வேண்டாமா என ஐயம் கொண்டு நின்றான். அப்போதுதான் அந்தச் சிற்றாலயத்தை பார்த்தான்.
இடைவரை உயரம்கொண்ட கல் ஆலயம். புதர்சூழ்ந்து நீர்வழிந்து பாசிபடர்ந்திருந்தது. அவன் அருகே செல்ல காலடி வைத்ததும் அடுத்த ஆலயத்தை கண்டான். மேலும் நெருங்கியதும் நான்கு ஆலயங்கள் அரைவட்டமாக அமைந்திருப்பது தெளிவாகியது. ஒரே அளவும் அமைப்பும் கொண்டவை. அவன் அவற்றை அணுகி கூம்பிலைப் புதர் நிறைந்த சிறிய முற்றத்தை அடைந்தான். அங்கே நொதித்த சேறு கணுக்கால் வரை அழுந்தியது. அச்சேற்றின் கெடுமணம்தான் அது. கிளறப்பட்டபோது மலம் என சீழ் என கெடுமணம் எழுந்து அவன் உடலை காற்றுபோல அறைந்தது.
அத்தனை ஆலயங்களிலும் ஒரே அளவான சிலைகள் இருந்தன. முழங்கை உயரமானவை. கரிய கல்லில் செதுக்கப்பட்டு சிறிய பீடங்களில் நிறுத்தப்பட்டவை. இருளில் மையிருளால் ஆனவை போல நின்றிருந்த அவற்றை அவன் குனிந்து கூர்ந்து நோக்கினான். அனைத்துச் சிலைகளும் ஒருகையால் அறிவுறுத்தல் குறியும் மறுகையால் ஆற்றுப்படுத்தல் குறியும் காட்டின. பிற அடையாளங்கள் எவையுமில்லை. அங்கே எவரும் வந்து பூசெய்கை செய்தமைக்கான எந்தத் தடயமும் தெரியவில்லை. சூழ்ந்திருந்த காட்டின் காதுகளை உடைக்கும் அமைதியின் மையமென அவை குளிரிருள் குவிந்து நின்றன.
அவன் நோக்கிக்கொண்டிருக்கையில் அவனுக்குப் பின்னால் ஓசையில்லாமல் முண்டன் வந்திறங்கினான். அவன் இறகுபோல விழுவதை ஓரவிழியால் கண்டாலும் பீமன் திரும்பவில்லை. “அழகிய மகளிர்” என்று முண்டன் சொன்னான். பீமன் விழிவிலக்காமல் நின்றிருந்தான். முண்டன் மெல்லியகுரலில் அவன் காதுக்குள் மட்டும் ஒலிக்கும்படியாக “பெண்களை இருவகையில் அறிகிறோம். உறைந்தும் உருகியும்” என்றான். அவன் சொற்களை ஒரு வருடலென பீமன் உணர்ந்தான். “உருகும்போது ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுக்கென்று ஒரு கெடுமணம் உண்டு. அதைத் தேடும் ஆண்புலன் ஒன்று அதை கண்டடைகிறது. மதமெழுந்து வெறிகொண்டாடுகிறது.”
பீமன் சிலிர்த்துக்கொண்டே இருந்தான். “மானுடருக்கு அணுக்கமானவை நறுமணங்கள் என்கின்றனர். அத்தனை மானுடருக்குள்ளும் அவர்களை பித்தாக்கும் கெடுமணங்கள் சில உண்டு. அவர்களை ஆட்டுவிப்பவை அவையே” என்றான் முண்டன். “நறுமணங்களினூடாக பெண்ணை நினைவுறுத்திக்கொள்பவன் எவன் இப்புவியில்?” பீமன் சீற்றத்துடன் திரும்பி “விலகிச்செல்… விலகு… நீ கீழ்மையை என்னுள் நிறைக்கிறாய்” என்றான். “நீ மெய்மையை அல்லவா தேடிவந்தாய்? மேன்மையை என ஏன் எண்ணிக்கொள்கிறாய்?” என்றான் முண்டன்.
பீமன் தலையை அசைத்தான். தன்னுள் ஒன்றுடன் ஒன்றென முட்டிச் செயலிழந்து நின்றிருந்த சொற்களை அசைத்து சிதறடிக்க விழைபவன்போல. என்னால் மட்டும் ஏன் எண்ணிக்கோத்து எதையும் அமைக்க முடியவில்லை? நான் மட்டும் ஏன் என் அகத்தை எய்து இலக்கடையச்செய்ய இயலாதவனாக இருக்கிறேன்? “அவர்களை எழச்செய்ய என்னால் முடியும்” என்றான் முண்டன். “வேண்டாம்” என்றான் பீமன் தாழ்ந்த குரலில். “நீ அவர்களிடம் கேட்கலாம் உன் வினாக்களை. அவர்கள் அறிவார்கள்.” பீமன் தழுதழுக்க “வேண்டாம்” என்றான்.
“அது அவர்களின் சிலம்பொலி” என்றான் முண்டன். பீமன் எதையும் கேட்கவில்லை. “அணுகிவருவது. சிலம்புகளால் கால்களை சிரிக்கவைக்கிறார்கள் பெண்கள். அவர்கள் சிரிக்காதபோது அவை சிரிக்கின்றன.” பீமன் அறியாது செவிகூர்ந்தான். “ஏனென்றால் எண்ணியபோது சிரிக்க அவர்களை விடுவதில்லை இவ்வுலகு” என்றான் முண்டன். “சிலம்பை கேட்கத் தெரிந்தவன் பெண்ணின் அகச்சிரிப்பை கேட்கிறான்.” பீமனின் உடல் குளிர்கொள்வதுபோல விதிர்த்தது அவன் அச்சிலம்போசையை கேட்டான். அவன் நன்கறிந்திருந்த ஒலி அது.
அவன் கண்களை மூடிக்கொண்டான். அவன் முன் ஒருத்தி வந்து நிற்பதை உணரமுடிந்தது. சினத்துடன் முண்டன் “மூடா, திற உன் விழியை… உனக்கென்ன சித்தச்சிதைவா?” என்றான். உடல் மெய்ப்புகொண்டு கூசிநிற்க முழுப்புலன்தொகையும் முன்னால் கூர்த்துநிற்க பீமன் விழிமூடியே நின்றிருந்தான். “நோக்கு, நேர்விழி தொடு. கேள், உன் வினாக்களை…” என்றான் முண்டன். “அணுகுகையில் உருமாறுவதேன் என்று கேள். ஆட்கொண்டு உதிர்த்துச் செல்வதேன் என்று கேள்!” அவன் கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தன.
மீண்டுமொரு சிலம்பின் ஒலி. அதே அழுத்தமும் கார்வையும் கொண்டதென்றாலும் முற்றிலும் வேறுபட்ட நடை கொண்டது. “இருவரும் உன் முன் நின்றிருக்கிறார்கள்… நீ அறிவதற்குரியவை உன்னில் எழுக!” மீண்டும் ஒரு சிலம்படி. பின்னர் மீண்டும் ஒரு சிலம்பொலிச் சரடு. “கேள், இனி நீ அறிய பிறிதொன்றுமில்லை!” பீமன் பெருமூச்சுவிட்டான். கண்கள் அசைந்து அசைந்து துடித்தன. அறியாது அவை திறந்துவிடக்கூடும் என்னும் எண்ணம் எழுந்ததும் முகத்தைச் சுருக்கி இமைகளை இறுக்கிக்கொண்டான்.
“கேள்” என்றான் முண்டன். “வெறும் நிலம்தானா என்று. விளையாட்டை அறிவார்களா என்று. கேள், எஞ்சுவது தாமே என்றறிந்தவர்களா? எங்குமிருப்பதனால் இல்லாமலாகக் கற்றிருக்கிறார்களா?” பீமன் அவனே உணராத ஒரு கணத்தில் எழுந்து திரும்பி பாய்ந்தோடினான். அவனுக்குப் பின்னால் நான்கு பெண்களின் சிரிப்பொலி கேட்டது. அவன் மூச்சிரைக்க உடல்பதைக்க ஓடும்தோறும் அச்சிரிப்பொலி அகலாது அவனுடன் வந்தது. அவன் மேலும் மேலும் உயிர்திரட்டி ஓடிக்கொண்டிருந்தான்.
அச்சிரிப்பொலி தேய்ந்தமைந்தபோது அவன் மண்ணில் விழுந்துவிட்டிருந்தான். சேற்றில் முகம் அமைத்து அசையாமல் கிடந்தான். அவன்மேல் கால்வைத்து கடந்துசெல்வதுபோல சிரிப்பொலிகள் செல்வதை உணர்ந்தான். சிலம்பின் சிரிப்பொலி. மூச்சு ஓய்ந்து உடல் குளிரத் தொடங்கியது. அலையோசைபோல தொலைவில் காற்று ஓடுவதை அவன் கேட்டான். தன் உடலுக்குள் அவ்வோசை எழுவதாகத் தோன்றியபின் அது செவிப்பெறுகைதான் எனத் தெளிந்தான். கையூன்றி எழுந்து அமர்ந்தான். மரங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருப்பதை கண்டான்.
எழுந்து ஒரு சிறிய மரத்தைப் பிடித்தபடி நின்று நிகர்நிலை மீண்டபின் நடக்கத் தொடங்கினான். அது மேற்குத்திசை என ஒளிச்சரிவு காட்டியது. அங்கே மலை வளைந்து ஏற சரிவெங்கும் தேவதாருக்கள் ஓங்கி எழுந்திருந்தன. பறவைகளின் ஓசையை, சிறுபூச்சிகளின் ஒலிப்பெருக்கை கேட்கத் தொடங்கினான்.