குமரி எழுத்து -கடிதம்

muj

அன்புள்ள ஜெ,

குமரிமாவட்ட எழுத்தாளர்களின் பட்டியலில்  [ குமரியின் சொல்நிலம் ] தக்கலை முஜிபுர் ரஹ்மானின் பெயர் விடப்பட்டுள்ளது. அவர் உங்கள் நண்பர். ஆகவே தவறாக விடுபட்டிருக்கலாம் என நினைக்கிறேன்

கிறிஸ்

***

அன்புள்ள கிறிஸ்,

உண்மை. பெரிய விடுபடல்தான். கவனப்பிழை. நன்றி. சேர்த்துவிட்டேன்

ஜெ

***

ஜெ,

நீங்கள் குமரிமாவட்ட எழுத்தாளர்களைப்பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். அதில் அங்கே நல்ல எழுத்து வருவதற்கான காரணமாகச் சொல்லியிருந்தது மொழி, மதம், இனம் ஆகியவற்றில் உள்ள பன்மைத்தன்மையை என்பது மிகுந்த ஆச்சரியம் அளித்தது. அதை நான் யோசித்திருக்கவே இல்லை. ஆனால் அதை வாசித்ததுமே உண்மை என்றும் நினைத்தேன்

முருகேஷ் குமாரசாமி

***

அன்புள்ள ஜெமோ

நீங்கள் முன்னர் ஒருமுறை போகன். அபிலாஷ் ஆகியோரைப்பற்றி கடுமையாக எழுதியிருந்தீர்கள். அப்போது என் நண்பன் சொன்னான். குமரிமாவட்ட எழுத்தாளர்கள் ஒரு குழு. அவர்கள் விட்டே கொடுக்கமாட்டார்கள். அது பூனை குட்டியைக் கடிப்பதுபோலத்தான் என்று. இன்று அது உண்மை என்று நினைக்கிறேன்

இந்த எழுத்தாளர்களைவிட வலிமையான எழுத்தாளர்கள் இங்கே தஞ்சாவூரில் உண்டு. ஆனால் அவர்களை இப்படி மூத்த எழுத்தாளர்கள் பிரமோட் செய்வதில்லை. உங்கள் பட்டியலில் நாலைந்து கவிதை எழுதிய ரோஸ் ஆண்டோ என்பவரும் இருக்கிறார். அவருக்கு இது  மிகப்பெரிய அறிமுகம்

உண்மையில் இதேபோல பட்டியலிட்டு அறிமுகம் செய்தால் தஞ்சையில் நூறு எழுத்தாளர்கள் தேறுவார்கள். ஆனால் அதைச்செய்ய ஆளில்லை

ஜெயராம்

***

ஜெமோ

நீண்டநாட்களுக்கு முன்பு சுந்தர ராமசாமி குமாரசெல்வா என்னும் எழுத்தாளரைப்பாராட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அப்போது ஞானி சொன்னார். கன்யாகுமரி எழுத்தாளர் என்பதனால்தான் அவர் பாராட்டுகிறார் என்று.

சுந்தர ராமசாமிதான் ஹெப்ஸிபா ஜேசுதாசனை கவனப்படுத்தினார். ஆ.மாதவன், நாஞ்சில்நாடன் எல்லாம் அவரால்தான் வெளிச்சம் கண்டார்கள். அடுத்து உங்களை அவர்தான் முன்னால் கொண்டுவந்தார். இப்போது நீங்கள் அதை அடுத்தத் தலைமுறைக்குச் செய்கிறீர்கள்.

நாஞ்சில்நாடன் குமரிமாவட்ட எழுத்தாளர்களை எல்லா இடத்திலும் சொல்லாமல் இருப்பதில்லை. ஆ.மாதவனைப்பற்றியும் நாஞ்சில்நாடனைப்பற்றியும் நீங்கள் எழுதிக்குவித்திருக்கிறீர்கள்.

இப்படி குமரிமாவட்டம் தன்னை பிரமோட் செய்கிறது. இதைப்போல மற்ற மாவட்டத்தினர் செய்வதில்லை. கொங்குவட்டார எழுத்தாளர்களான க.சீ.சிவக்குமார், இசை,  இளங்கோ கிருஷ்ணன் , கே.என்.செந்தில், ஸ்ரீராம், வா.மு.கோமு ஆகியோர் பற்றி எல்லாம் கொங்குவட்டாரத்தின் பெரிய எழுத்தாளராகிய பெருமாள் முருகன் ஒருவார்த்தை சொன்னது கிடையாது.

மற்ற இடத்திலும் திறமையான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இப்படி எளிதாக மேலே வரமுடியவில்லை. இதுதான் நடக்கிறது

செந்தில்

***

உரையாடல்களின் வெளி
முந்தைய கட்டுரைஜே.சி.குமரப்பா
அடுத்த கட்டுரைகுருபீடம்- நித்ய சைதன்ய யதி