பசுக்கொலை- பொருளியலும் சட்டமும்

yogi-adityanath-

 [முதற்கட்டுரை
மாட்டிறைச்சி அரசியலும் பண்பாடும் 
,பசுக்கொலை

அன்புள்ள திரு ஜெயமோகன்,

பசுக்கொலை தடை பற்றிய கருத்துக்களை படித்த பின், வேறு ஒரு கோணத்தை நினைவு படுத்த எழுதுகிறேன்.

இந்த விவாதத்தை உணவுப்பழக்கங்கள், ஜாதி மத சம்பிரதாயங்கள் ஆகியவற்றோடு சம்பந்தப்படுத்த தேவையில்லை. கோமாதா வதை தடைக்கும் புலால் மறுத்தலுக்கும் தொடர்பு இல்லை.

உண்மையில் உணவை வைத்து எந்த ஒரு label உம் போட முடியாது. ஒரிஸ்ஸாவுக்கு வடகிழக்கு முழுதும் முழு அசைவம். பிராமணர்கள் அன்னப்ராசன சடங்குக்கு மீன் தான் முக்கியம். பிஹாரில் பிராமணர் பெரும்பான்மை மாவட்டமான தர்பாங்காவில் மைதிலி ப்ராஹ்மணர்கள் ஏழு நாள் உபநயன சடங்கை ஆடு வெட்டி விருந்து செய்து கொண்டாடுவர். காஷ்மீரில் சிவராத்ரியும் இப்படியே.

ஆனால் குஜராத், ராஜஸ்தான் முழுதும் சுத்த  சைவம்- அங்கு இதை வைஷ்ணவ் போஜன் என்பார்கள். சீனாவில் இதை strict Buddhist உணவு என்று ஹோட்டல்களில் கேட்கவேண்டும். ஈரானிய dervish , மற்றும் உலகில் பல்வேறு நாடுகளிலும் சைவ உணவு சம்பிரதாயங்கள் உள்ளன. இஸ்ரேலில் பாலும் அசைவம்.

தமிழ் நாட்டில் அசைவ குடும்பங்களும் வாரம் ஒரு நாள் மட்டுமே பெரும்பாலும் செய்கிறார்கள். பல குடும்பங்களில் பெண்கள் சமைப்பார், ஆனால் சாப்பிட மாட்டார்கள். பல குடும்பங்களில் அசைவம் சாப்பிட்ட நாட்களில் கோவிலில் நுழைவதில்லை. என்னுடைய முஸ்லீம், ஆதி  திராவிட நண்பர்களில் சிலர் சுத்த சைவம்.

பண்டை நாட்களில் யார் எப்படி இருந்தார்கள் என்பது முக்கியம் இல்லை. “மேலையோர் செய்வனகள்…” என்று சம்பிரதாயங்கள் பெரியவர்களால் reinterpret பண்ணுவது ஏற்கப்படவேண்டியது.

மேற்கு வங்கத்திலும் பங்களாதேஷிலும் ஒரே கலாச்சாரம், ஒரே ஸம்ஸ்க்ருதமயமான  மொழி. ஒரே உணவு, உடை , பழகும் விதம் .  ஆனால் அங்கு போன்று ரத்தக்களரியான மதக்கலவரம் எங்கும் நடக்கவில்லையாம்.  பல பிரமுகர்களிடமும் இந்த விநோதத்தைப்பற்றி கேட்டபோது அவர்கள் சொன்னது “அவர்கள் கோமாதா மாமிசம் சாப்பிடுவார்கள். நாங்கள் சாப்பிட மாட்டோம் ” என்பது.

பல வட இந்திய சாதுக்கள் வங்காளத்துக்கும் கேரளத்துக்கும் யாத்திரை போக மாட்டார்கள். அங்கு தற்காலத்தில் கோமாதா வதைக்கு தடை இல்லை என்பார்கள். மற்ற மாநிலங்களில் தடை இருப்பதாக பரவலாக நம்பிக்கை.

அம்பேத்கர் கோமாதா வத தடையை Constitution Directive Principles இல் சேர்த்தார்.  இந்துக்களுக்கு கோழியும், மயிலும், சிங்கமும், பன்றியும், மீனும் ஆமையும் எல்லாம் தெய்வீக தொடர்பு உள்ளவை. அவற்றை எல்லாம் குறித்து விவாதம் இல்லை. கோமாதாவுக்கு ஒரு தனி இடம். அதை ச்ருதி ஸ்ம்ரிதி சிரத்தை தவிர வேறு எந்த அளவு கோலாலும் அளக்க முடியாது.

மதமாற்ற அதிகார சக்திகள் கோமாதா வதையை ஒரு யுக்தியாக கடைப்பிடித்தார்கள்.அது இன்றும் தொடர்கிறது.

தடை உத்தரவால் அது நிற்கப்போவது இல்லை. கொலை, கொள்ளை, விபச்சாரம்,மோசடி,மற்றும் பல பாபங்களுக்கு தடை இருந்தபோதும் அவை மறைவாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒரு சட்டம் ,தடை என்று இருந்தால் ஓரளவு வெளிப்படையாக செய்வது குறையும்.

பல நாடுகளில் பல்வேறு மிருக கொலைக்கு தடை உள்ளது. அமெரிக்காவில் பாம்பை கொல்லக்கூடாது .பத்து வருடங்களுக்கு முன் National Geographic Magazine ஒரு கட்டுரை வெளியிட்டது. Japanese போன்ற சில நாட்டு trawlers எப்படி கடல்களை சூறையாடி ocean food chain ஐ நாசம் செய்துவிட்டன என்று. அதை தொடர்ந்து உலகெங்கும் பலர் கடல் மீன் உண்பதை நிறுத்திவிட்டதாக அறிவித்தனர்.

Aatgaon கோசாலையில் வறண்ட மாடுகள் மீண்டும் சினை பிடித்ததை பார்க்க முடிந்தது. பால் தரம் இப்போது பெரும் பிரச்னைக்கு உரிய விஷயமாக உள்ளது. கோரக்ஷணம் பற்றி முழுதாக தெரிந்துகொள்ள ஒரு நல்ல கோசாலையை விஜயம் செய்வது பலன் உள்ளதாக இருக்கும்.

அன்புடன்

கிருஷ்ணன்

***

அன்புள்ள கிருஷ்ணன்

பொருளியல் காரணத்துக்காக பசுக்கொலைத்தடை என்றால் அதை உணர்வுரீதியாகப் பேசக்கூடாது, பொருளியல் ரீதியாக அதன் லாபநஷ்டங்களைப் பேசவேண்டும். உணர்வுரீதியான நிலைபாட்டின் சிக்கலைப்பற்றிச் சொன்னால் பொருளியல் பேசுவதும் பொருளியல் நஷ்டத்தைப்பற்றிப்பேசினால் இது உணர்வுரீதியானது என்று பேசுவதுமே இன்று நடக்கிறது

பொருளியல் ரீதியாக நோக்கினால் இந்திய நாட்டுப்பசு என்பது பாலுற்பத்தியில் மிகமிக பின் தங்கியது என்பது வெளிப்படையானது. அஸாமை எடுத்துப்பார்க்கலாம். அங்கே நாட்டுப்பசுக்கள் அதிகம். எங்குபார்த்தாலும் அவை மேய்கின்றன. பால் வங்கத்திலிருந்து வருகிறது. அங்கே இப்போதுதான் வெண்மைப்புரட்சி தொடங்குகிறது

பால் உற்பத்தி நின்றபின் பசுக்களை ‘செண்டிமெண்ட்’ ஆக எண்ணி வளர்ப்பது மிகப்பெரிய பொருளியல் இழப்பையே அளிக்கும். அதை எந்த உயர்மட்ட அதிகாரமும் விவசாயியிடம் வலியுறுத்தமுடியாது. அந்தப்பசுமாட்டை வாங்கி அவர்கள் வளர்க்கலாம் அவ்வளவுதான். அது எந்த பரிதாபநிலையில் நாடெங்கும் நடக்கிறதென்பதை நான் பல கோசாலைகளுக்குச் சென்று நேரில் பார்த்திருக்கிறேன்

பால்கறவை நின்றபசுக்களை கொல்லக்கூடாது என அரசு சொன்னால் விவசாயி செலவழித்து அவற்றை பேணமாட்டான். அவற்றை தெருக்களில் துரத்திவிடுவான். அவை நலிந்து நோயுற்று சாகும். அதுதான் நடக்கப்போகிறது. அதற்குத்தான் அடையாள அட்டை. எந்தப்பசு என கண்டுபிடித்து உரிமையாளர்மேல் நடவடிக்கை எடுக்க. அப்படி நடவடிக்கை எடுத்தால் பசு வளர்ப்பதை தவிர்க்க ஆரம்பிப்பார்கள்.துக்ளக்தனம், வேறென்ன சொல்ல.

கோசாலை என்னும் கருத்தே பிழையானது. பசுவை அதன் பொருளியல்பின்னணியிலேயே வளர்க்கமுடியும். மதப்பின்னணியில் அல்ல. கோசாலைகளில் முதுமையடைந்து துன்புற்று பராமரிப்பில்லாமல் மரணம் காத்து நிற்கும் பசுக்களை நோக்கி வருந்தியிருக்கிறேன். நோயுற்ற பசுக்கள் மட்டும் அங்கிருப்பதனால் அத்தனைபசுக்களும் நோயுறுவதைத் தடுக்க முடியாது என்று கால்நடை மருத்துவர் சொன்னார்.

அதோடு பசுக்களுக்குப் பராமரிப்புக்கு மானுட உழைப்பு தேவை. நோயுற்ற பசுக்களுக்குப் அனேகமாக இரு பசுக்களுக்கு ஒரு ஆள்வீதம் இருந்தால்தான் வேலைநடக்கும். எந்த கோசாலையிலும் அப்படி ஆள் ஏற்பாடு செய்யமுடியாது. கறவை இல்லாத இரு முதியபசுக்களுக்கு ஒரு மனிதர் வேலைசெய்வதைப்போல அபத்தமும் வேறில்லை.

பசுக்களை அறிந்தவர்களே அதைப் பேணமுடியும். அது விவசாயம், ஆநிரைமேய்த்தல் என ஒர் ஒட்டுமொத்த அமைப்பின் பகுதியாக நிகழவேண்டும். ஆலயம் அல்லது மடத்தின் பகுதியாக கோசாலை ஊழியர்கள் அதைச்செய்யமுடியாது. விதிவிலக்காக சில இடங்களைப் பேணலாம். நாடெங்கும் நிகழ்வது மிக மிக அரிது.

ஆகவே பெரும்பாலான பசுக்கள் பராமரிப்பில்லாமல் புண்ணும் அழுக்குமாகவே கோசாலைகளில் நலிகின்றன. உண்மையில் கோசாலைகள் பசுக்களுக்கு ஒரு கௌரவமான முடிவை அளிப்பதைத் தவிர்க்கின்றன என்றே நினைக்கிறேன்.

நீங்கள் மாடு வளர்த்திருப்பீர்களா என தெரியாது. நான் மாடுகள் நடுவே வாழ்ந்தவன். மாடு வளர்ப்பை நன்கறிந்தவன்.  எந்த விலங்கும் எளிதில் இறக்காது. மாடு வலிமையானது, ஆகவே அது மிகமிகத் துன்புற்றே இறக்கும். அதன் ஒருகட்டத்தில் இயல்பாகவே அது கொல்லப்படுவதே அதற்கும் நல்லது. காட்டில் அப்படி நிகழும்படியே இயற்கை அமைந்துள்ளது.நம் செண்டிமெண்டின் பொருட்டு அதை வதைக்கவேண்டியதில்லை.

ஜெ

***

ஜெ வணக்கம்

இந்த கட்டுரையை ஸ்மிரிதி, சுருதி என்ற அளவிலேயே நிறுத்திவிட்டீர்கள்.

இந்திய அரசியல் சாசனத்தில், பசு வதை, கொலை தடுக்க அரசாங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறது.

Article 48: https://en.m.wikipedia.org/wiki/Cattle_slaughter_in_India

உச்ச நீதிமன்றமும் இதை ஆதரித்து தீரப்பளித்திருக்கிறது.

அம்பேத்காரும், உச்ச நீதிமன்றமும் அடிபடை வாதிகளா என்ன?

உத்தர பிரதேசத்தில், மிக அளவில் பெருமான்மை பெற்ற பா.ஜ.க அரசு கூட, சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் பசு கொலை சாலைகளை மட்டுமே மூட ஆயத்தங்கள் எடுத்துள்ளது. அரசாங்கம் சட்டபடி நடவடிக்கை எடுப்பது தவறு என்கிறீரகளா?

அந்த அந்த மாநில அரசு, அந்த மாநில சூழ்நிலை, மக்களின் நோக்கங்களுக்கு ஏற்ப சட்டங்களை இயற்றும். இதில் அடிபடை வாதம் எங்கே வந்தது.

உங்கள் நிலைபாடு இது ஏற்பு உடையதல்ல என்பது. ஆனால் அரசியல் சாசனத்தில் கண்டிப்பாக இடம் உண்டு என்பதை ஆவண படுத்த வேண்டியது முக்கியம்.

கண்டிக்க தக்கது இந்த மாதிரி சட்டங்களோ, அரசியல் நிலை பாடுகளோ அல்ல. பசுக் கொலை தடுப்பு என் பெயரில் வன்முறையில் இறங்குவதும். இறங்கிவிட்டார்கள் என்று புரளி கிளப்பும் மீடீயாக்கள் தான்

சதிஷ்குமார் கணேசன்

***

அன்புள்ள சதீஷ்,

பசுக்கொலைத்தடை என்பது இந்தியச் சுதந்திரப்போராட்ட காலத்தில் முக்கியமான ஒரு பேசுபொருளாக , கோஷமாக இருந்தது. ஆங்கிலேயர் மேல் எதிர்ப்புணர்வை உருவாக்க அவர்கள் பசு உண்பவர்கள் என்பது முக்கியமாக முன்வைக்கப்பட்டது. இஸ்லாமியர் அவர்கள் பன்றியை உண்பவர்கள் என்பதை முன்வைத்தனர்.

இந்த இரு குற்றச்சாட்டுகளுமே முதல் இந்தியச் சுதந்திரப்போர் எனப்படும் சிப்பாய் கலகத்துக்கு காரணமாயின என அறிந்திருப்பீர்கள் பின்னர் அதை சுதந்திரப்போராட்டப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே வெள்ளையருக்கு எதிராக முன்னெடுத்தனர்.

காந்தி இந்திய அரசியலில் நுழையும்போது பசுக்கொலையே சுதந்திரப்போரின் முக்கியமான கோஷமாக இருந்தது. அதை நம்மால் புரிந்துகொள்ளவும் முடியும். எப்போதுமே மதநம்பிக்கை, ஆசாரங்கள், பண்பாட்டுப்பற்றுகள் ஆகியவற்றைச் சார்ந்தே மக்களின் உணர்வுகளை தூண்டி தொகுக்கமுடியும். ஆகவே காந்தியும் அதை தீவிரமாக முன்வைத்தார். அத்துடன் அவருடைய பின்னணியில் ஊனுணவு, உயிர்க்கொலை ஆகியவை அவருக்கு மிக ஒவ்வாதனவாக இருந்தன. பசுக்கொலை பெரும்பாவமாக அவருக்குப் பட்டது. இறுதிவரை அதை அவர் முன்வைத்தார்

இந்தியா சுதந்திரம்பெற்றபோது அன்றிருந்த மூத்த சுதந்திரப்போராட்டவீரர்களின் உணர்வுகளை கருத்தில்கொண்டும் காந்தியின் வற்புறுத்தலுக்கிணங்கியும் பசுக்கொலை குறித்த சட்டம் இயற்றப்படவேண்டும் என அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால் இயற்றப்படுவதில் நடைமுறைச் சிக்கல்கள் பல கண்ணுக்குப்பட்டன. ஆகவே அது நிரந்தரமாக ஒத்திவைக்கப்பட்டு ஒரு கொள்கையாக மட்டுமே முன்வைக்கப்பட்டது

சுதந்திரப்போராட்டகால உணர்வுகள் உச்சத்திலிருந்தபோதே, அதன் நாயகர்கள் சமூகத்திற்குத் தலைமை வகித்தபோதே, பசுக்கொலைத் தடைச்சட்டம் நாடுமுழுமைக்கும் கொண்டுவரமுடியவில்லை. ஏன்? அந்தப் பண்பாட்டுக்காரணிகள் மிக முக்கியமானவை.

காந்தி உட்பட காங்கிரஸிலிருந்த தலைவர்களில் ஒருசாராரின் பசுக்கொலை குறித்த மதப்பின்னணி கொண்ட பிடிவாதம் இஸ்லாமியரையும் தலித்துக்களையும் அன்னியமாக்கிக் கொண்டே இருந்தது. ஆனால் அன்றிருந்த உணர்வுவிசையில் அது பெரிதாகத் தெரியவில்லை.

இந்தியச் சுதந்திரப்போர் என்பது இந்தியாவின் மையப்பகுதியில் நிகழ்ந்த ஒன்று. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் அதன் அலையும் வீச்சமும் குறைவு. வடகிழக்கில் மிகமிகக்குறைவு. ஆனால் நவீன இந்திய தேசம் உருவாகும்போது அனைவரையும் உள்ளடக்கியதாகவே அது அமையமுடியும் என தேசமுன்னோடிகள் எண்ணினார்கள்.

ஆகவே எவரையும் அன்னியமாக்கும் எந்த உணர்வுநிலைக்கும் தேசக்கருத்தியலில் இடம் அளிக்கவில்லை. பசுக்கொலைத்தடை குறித்த சட்டமியற்றல் அவ்வாறுதான் ஒத்திவைக்கப்பட்டது. அது வட்டார அளவில் முடிவுச்செய்யப்படவேண்டியதாக கூறப்பட்டது.

இன்று இந்தியா உணர்வுரீதியான ஒருங்கிணைப்பை இழந்துவருகிறது. அதை சிதறடிக்கும் சக்திகள் வலுப்பெற்று வருகின்றன. ஒருங்கிணைவின் குரலில் பேசும் பேராளுமைகள் எவருமில்லை. இச்சூழலில் பிரிவினையை உருவாக்கும் சக்திகளுக்கு ஆக்கம் அளிப்பதாகவே பசுக்கொலைத்தடை குறித்து மதவெறியர்கள் கொண்டுள்ள பிடிவாதம் தொழில்படுகிறது

ஜெ

***

மாட்டிறைச்சி கள் -முடிவாக
கள்ளுக்கடை காந்தி
கள்ளுக்கடை காந்தி எதிர்வினைகள்
கள்ளுக்கடை காந்தி எதிர்வினைகள் மேலும்

கள்ளுக்கடையும் காந்தியும் கடிதம்
பசுக்கொலை

 

 

முந்தைய கட்டுரைசுஜாதா விருதுகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–94