ஊட்டி 2017-அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்
அ.முத்துலிங்கம்

நண்பர்களுக்கு வணக்கம்,

சிறுகதை அமர்வில் நான் தேர்ந்தெடுத்திருந்த சிறுகதைக்கான குறிப்பும் மற்றும் அது சார்ந்த உரையாடல்களின் சிறுகுறிப்பும்..

IMG-20170501-WA0024

புளிக்கவைத்த அப்பம் ( சிறுகதை ) – அ.முத்துலிங்கம்

http://amuttu.net/viewArticle/getArticle/233

இந்த சிறுகதையை உரையாடலுக்காக தேர்ந்தெடுத்ததற்கு முதல் காரணமாக அமைந்தது மூன்று காரணங்கள். 1) சிறுகதையின் உள்ளடக்கம் 2) எழுத்து நடை 3) கதைசொல்லியின் இடம்

ஆனால் இரண்டாம் முறை படிக்கையிலேயே அ.முத்துலிங்கம் அவர்களின் இந்த திறமையான கதை சொல்லும் முறை ஒரு ஈர்ப்பை அளித்தது. ஆகவே, காரணங்களை இவ்வாறு மேம்படுத்திக்கொண்டேன். அவை முறையே, 1) சிறுகதையில் உள்ள பாவனை 2) இதில் கதை சொல்லியும் கதையின் நாயகியும் கொண்டுள்ள பின்புலம் 3) இறுதியில் வாசகனாக என் அனுபவம்.

பாவனை என்று சொல்லும் போது இந்தக்கதை ஒரு நேர்காணல் வகையில் எழுதப்பட்டுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரமான சாராவை வைத்து தன்னிலையிலேயோ அல்லது படர்க்கையிலேயோ இல்லாமல் இருப்பது இந்தக்கதை பேசும் பல துயரங்களுக்கு உள்ளே வாசகனை இழுத்துத்தள்ளாமல் வெளியிலிருந்து காட்டிப்பேசுவதாக இருக்கிறது. காவல் நிலையத்தில் ஒரு மரண வழக்கின் எஃப்.ஐ.ஆர் எழுதும் ஒரு எழுத்தர் எப்படி அந்த சம்பவத்தை உணர்ச்சிவசப்படாமல் பதிவு செய்வாரோ அப்படி. இன்னும் சொன்னால், இடையிடையே பல நகைச்சுவையான வரிகளோடும் எழுதுகிறார். இந்த உத்தி இத்துணை இடர்களுக்கு பின்பும் வாழ்க்கையில் உள்ள ஒரு நம்பிக்கையை காட்டுவதாக உள்ளது.

ராம்குமார் பேசுகிறார்

கீழ்கண்ட வரிகள் ஒரு வலையை விரித்து உள்ளே இழுக்கின்றன..

”” விருந்துக்கு போன அன்று ஓரா (அதுதான் அவர் பெயர்) தன் கணவர் ஊரில் இல்லையென்றார்””

ஓரா கிளைக்கு கிளை தாவி உட்காரும் குருவிபோல சுறுசுறுப்பாக இருந்தார். அவருடைய தாயார் சமையலறையில் இருந்து வெளிப்பட்டார். கூழாங்கற்களை வாய்க்குள் நிறைத்துக்கொண்டு ‘குலேபகாவல்லி’ என்று சொன்னால் ஒரு சத்தம் உண்டாகுமே அதுதான் அவர் பெயர். அது என் வாயில் நுழையாது; எழுத்திலும் எழுதமுடியாது. ஆகவே வசதிக்காக அவர் பெயரை சாரா என சுருக்கியிருக்கிறேன்.

அது உலகச் சண்டை என்பது எனக்கு தெரியாது; ஆனால் பயப்படவேண்டும் என்பது தெரிந்திருந்தது.

என்னுடைய மனைவியின் தோசை சுடும் திறன் பற்றி நான் நீண்ட காலமாக அறிவேன். அதன் வடிவம் சதுரமாகவும், முக்கோணமாகவும் சில சமயம் வட்டமாகக்கூட வருவதுண்டு. முதலில் தோசைக் கல்லை விட்டுக் கிளப்பின பிறகுதான் வடிவம் என்னவென்று பிடிபடும்.

சமையலறையில் காலையில் இருந்து பலவிதமான சத்தங்கள் கிளம்பிய வண்ணம் இருக்கின்றன. மனைவிதான் அவற்றை எழுப்புகிறார். இன்றுதான் அவர்கள் எங்கள் வீட்டு விருந்துக்கு வரும் நாள்.

பாடகர் ஜெயக்குமார் [கீழே அருண்மொழி]

இரண்டாவதாக பின்புலம்..கதை இப்படித்துவங்குகிறது

//இப்படித்தான் நடந்தது. யூதப் பெண்மணி ஒருவர் எங்களை மாலை விருந்துக்கு அழைத்திருந்தார். இதிலே என்ன அதிசயம். நான் பலவிதமான கொண்டாட்டங்களுக்கு அழைக்கப்பட்டு சென்றிருக்கிறேன். விருந்துகளும் அனுபவித்திருக்கிறேன். இந்துக்கள், இஸ்லாமியர், புத்தர்கள், கிறிஸ்துவர்களின் சகல பண்டிகைகளிலும் விருந்துகளிலும் பங்கேற்றிருக்கிறேன். யூத வீட்டுக்கு மட்டும் போனது கிடையாது. பெரும் எதிர்பார்ப்பில் நானும் மனைவியும் விருந்து நாளுக்காக காத்திருந்தோம்.//

நான் என்று எழுதப்படும் அத்துணை கதைகளிலும் அந்த “நான்” எழுத்தாளராக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. என்றாலும், இந்த கதையில் அவர் ஒரு தமிழர் என்றும் குறிப்பாக ஈழத்தமிழர் என்றும் சொல்லும்படிக்கே கதையமைப்பு உள்ளது. நான் என் அலுவலகத்திலும், வெளியேவும் இலங்கை மக்களை காண நேரும்போது, இயல்பாகவே அவர்கள் வாழ்க்கை, அவர்களின் கதை என்றுதான் கேட்டிருக்கிறேன். அந்த வகையில், இந்த முதல்வரியே ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அடக்குமுறையும், கட்டற்ற வன்முறையும் கண்ட ஒரு மனிதன் அந்த அவலங்களை எண்பது ஆண்டுகளுக்கு முன் அனுபவித்த ஒரு இனத்தை சேர்ந்த மனிதரை சந்திக்கப்போகிறார் என்கிற எச்சரிக்கையை அளிக்கிறது. ஒரு எழுத்தாளர், இதை ஒரு twist ஆக வைத்து ஒரு பக்க சிறுகதையாக யோசிக்க வாய்ப்புள்ள ஒன்று, ஆனால் முதல் வரியிலேயே இதை சொல்லித்துவங்கியது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது

இந்த ஒரு சிறுகதையில் பல உச்சகணங்கள் உள்ளன. பரிதாபமான அகதி வாழ்க்கையும் அதனிடையே அவர் பெறும் அவமானங்களும் இத்தனை பரிவட்டங்களையும் தாண்டி எழுத்தில் வெளிப்படுகிறது. யூதர்கள் வெளியே வரும்போது மஞ்சள் நட்சத்திரத்தை அணிய வேண்டும் என்கிற சட்டமும், அதை அணிய மறுக்கும் தாயும் பிற்காலத்தில் கிபுட்ஸ் வாழ்க்கை முறையில் சாரா கொள்ளும் நிறைவும் என ஒவ்வொரு உச்ச கணத்தையும் கடந்து இது நிறைவு கொள்ளும் இறுதி வரி பரவசமானது.

3) வாசிப்பனுபவம்:-

ஒரு தேர்ந்த சாப்பாட்டுக்கலைஞர் ருசியாக சமைக்கக்கூடியவர் தன் வாழ்நாளில் passover சடங்கிற்காக எழுநாட்கள் புளிக்கவைத்த உணவை உண்பதில்லை என்பது 3400 வருடங்களாக் தொடரும் அகதி வாழ்வை, இன்னும் நினைவில் நிறுத்தி ஒரு தொன்மத்தோடு அதை இணைக்கையில் இந்த கதை நிறைவுறுகிறது.

“”எல்லாம் மாறக்கூடியது. ஆனால் நேற்று நடந்தது மாறக்கூடியது அல்லவே? நான் உலகத்து நேற்றைய துயரங்களுக்காகவும், நாளைய நம்பிக்கைகளுக்காகவும் விரதம் காக்கிறேன்எ”” என்று முடிக்கையில்  இத்துணை இடர்களுக்கு பின்பும் வாழ்க்கை என்பது நம்பிக்கையான ஒன்று என்பதை கூறுகிறது. மகிழ்ச்சியாக கடக்கவேண்டிய ஒன்று என்பதை அ.முத்துலிங்கத்தின் இந்த எழுத்து நடையும் கூறுகின்றது.


kali

உரையாடல்:-

இதில் உள்ள ருசி என்கிற புலனை வாசகர்கள் கவனிக்கவேண்டும். ஒரு குழந்தை பிறந்தவுடனே அது ருசியை அறியத்துவங்குகிறது. அனைத்து முக்கியமான எழுத்தாளர்களும் இந்த ருசி பற்றி எழுதியிருக்கிறார்கள். இந்தகதையின் போக்கில் ருசியை எழுத்தாளர் கையாண்டிருப்பது மிக நுட்பமான ஒன்று என்று ஜெயமோகன் கூறினார். இதன்பின் பிரேம்சந்த் -ன் லட்டு கதையும், திஜாவின் பரதேசி வந்தான் கதையும், நாஞ்சில் நாடனின் கட்டுரைகளும், ஜெ. வின் சுவையாகி வருவது கட்டுரையும் பற்றி நண்பர்கள் உரையாடினர். ஜோசபின் அவர்கள், பாஸோவர் சடங்கு பற்றி கூறினார்,

இறுதியாக, அ.முத்துலிங்கம் ம்ற்றும் நாஞ்சில்நாடன் ஆகியோர் எங்குமே மக்களை அவர்களின் உணவு, உடை மற்றும் ஒழுக்கம் ( இந்திய மனம் வரையறுத்திருக்கும் ஒழுக்கம் ) சார்ந்து மதிப்பிடுவதில்லை என்பதை கொண்டு global citizen என்று அவர்களைக்கூறி தன் பயணம் சார்ந்த பல விவரங்களையும், உதாரணங்களையும் வைத்து ஜெயமோகன் கூறினார். ஒருவரின் உணவு பழக்கம் கொண்டு அவரை இழிவாக பார்க்கும் வழக்கம் இல்லாத எழுத்துக்கள் என்றும் ஆப்பிரிக்க மக்களை பற்றிய மற்ற இந்திய எழுத்தாளர்களின் கருத்தைவிட அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துக்கள் எந்தளவு ஒரு நல்ல சித்திரத்தை அளித்துள்ளன என்பதை உதாரணங்களுடன் விளக்கினார். global citizen என்கிற பதம் நண்பர்களை மிக கவர்ந்திருந்தது. சாப்பிடும்போது கீழே விழுந்த அப்பளத்தை தூரப்போட்ட ஒரு நண்பரை anti global citizen என்று ரகு உறுதிசெய்தான்

காளிப்பிரசாத்

***

ஊட்டி புகைப்படங்களின் தொகுப்புகளின் லிங்க்குகள்

https://goo.gl/photos/6VmPDArPsMxtRsVe8

https://goo.gl/photos/5vt5CdAgpFqsJpTo8

https://goo.gl/photos/r6J3BuYjn9mUnWC2A

 

ஜானகிராமன்.

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–92
அடுத்த கட்டுரைதேவதச்சன் –சபரிநாதன் உரை