ஊட்டி 2017 –கவிதைபற்றி…

ooty


அன்புள்ள ஜெ

சென்ற ஊட்டி கூட்டம் முடிந்ததும் எழுதிய கடிதங்களை மீண்டும் படித்துப்பார்த்தேன். இந்த கடிதத்தில் (http://www.jeyamohan.in/75476 ) எனது வாசிப்பு எத்தகையது என்பது பற்றிய ஒரு புரிதல் கிட்டியிருக்கிறது. இம்முறை கடலூர் சீனு வின் உரையாடல் பகுதி அந்த திசை நோக்கி மீண்டும் யோசிக்கவைத்திருகிறது. எப்படி உரைநடை /சிறுகதை/ நாவல் என நாஞ்சில் சார் வழிகட்டியிருக்கிறாரோ அவ்வாறே கவிதைகளை அணுகுதல் குறித்தும் அவரே ஒரு கைகாட்டியாக இருந்து என்னை வழிநடத்தியிருக்கிறார். இதற்கு முன் “ஒரு புத்தரே தத்திரே பித்தரே” என்று கவிதையை கவனித்து வந்த எனக்கு அதில் உள்ள நுட்பங்களை விளங்கிக்கொண்டது ஊட்டி காவிய முகாம்களில்தான். 2015 ம் ஆண்டு நடந்த கம்பராமாயண அரங்கில்,

கமலக்கண்ணன் பேசுகிறார்

”யாழிசை மொழியோடன்றி யான் உறும் இன்பம் என்னோ?” என்கிற பாடல் அதற்கான துவக்கம் எனலாம். மேலும் கவிதைகளை அதன் சொற்களைக் கொண்டு அடுக்குதல் -ல் கம்பனுக்கும் பாரதிக்கும் இருகிற வித்தியாசம் என்ன என்பதை விஷ்ணுபுர விழாவில் மற்றும் நேற்றைய உரையாடல்களிலும் கூறினார். கம்பன் யானைக்கும் நெருப்பிற்கும் பத்துக்கும் மேற்பட்ட வார்த்தைகளை கையாளுகிறான். அங்காங்கே அது அது எப்படி பொருந்துகின்றன என விளக்கினார்.

சூதர் மனைகளிலே — அண்ண!
தொண்டு மகளிருண்டு.
சூதிற் பணய மென்றே — அங்கோர்
தொண்டச்சி போவதில்லை

இந்த பாடலில் பாரதி எளிமையான சொற்களைக்கொண்டே ஒரு மாலையாக எழுதியிருக்கிறான். இங்கே சந்தம் முக்கியமாகிறது.

மேலும் அவர் விவரித்துக்கூறிய முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்கிற பாடல். இங்கே அந்த கவிஞனின் வாழ்நிலையே விவரிக்கப்படுகிறது.

IMG-20170430-WA0013

ஒவ்வொரு முறையும் கம்பனும் மற்ற கவிஞர்களும் அளித்திருக்கும் சொற்களும் அவர்கள் கொண்டிருக்கும் புலமையும் அது சார்ந்த அவர்களின் வாழ்க்கைமுறையும் என விவரித்துக்கொண்டே இருந்திருக்கிறார். இம்முறை உரையாடலில் தமிழ் அகராதி அழிந்தாலும் கம்பராமாயணம் கொண்டே அனைத்தையும் மீட்டுவிடலாம் என்று அவர் கூறியது ஒரு பிரமிப்பையும் சங்க இலக்கியங்களை படிக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் புரிந்துகொள்ள உதவின. அனால இவை அனைத்தினையும் ஒருமுறை சொல்லி விட்டுவிடாமல் தொடர்ச்சியாக, சொல்லப்போனால் ஒவ்வொரு சந்திப்பின் போதும் கூறினார். இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக அவர் உரைகளை கவனித்ததாலேயே இன்று நான் இதை துவங்கியிருக்கிறேன் எனலாம்.

இதில் இன்னொரு வகையாக தேவதேவன் இருக்கிறார். கடந்த மூண்றாண்டுகளில் அவர் காவிய முகாமில் பேசியவைகளை ஒரு பக்கத்தில் சுருக்கிவிடலாம். ஒரு செடியையோ ஒரு மலரையோ பார்த்தபடி அமர்ந்திருப்பார். ஒரு மரத்தடி நிழல் போதும்.

டாக்டர். வேணுவெட்ராயன், கவிதையை அணுகுவது பற்றி, பலமுறை நேர்ப்பேச்சில் விளக்கியிருகிறார். அறுபது ரூபாய் மதிப்புள்ள “மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க முடியாது” கவிதை தொகுதியை நாற்பது+நாற்பது கிலோமீட்டார்கள் காரை எடுத்துக்கொண்டு வந்து அவர் வாங்கிச்சென்ற ஒரு மதியபொழுதில் துவங்கியது அவருடனான உரையாடல்.  ஓரு அனுபவம் கவிஞனின் மனதில் பிரம்மாண்டமாக தோன்றுகிறது. அதன் துளியாக கவிதை கிடைக்கிறது. அதிலிருந்து வாசகன் அந்த பிரமாண்டத்தை அடைய முயற்சிக்கிறான் என்ற ஒரு விளக்கம் கவிமனத்தை எப்படி அணுகவேண்டும் என்பதை விளக்கியிருக்கிறது. இந்த உரையாடலிலும் அதை டைனொசரின் ரத்தத்தை உறிஞ்சிய பூச்சியிலிருந்து மீண்டும் டைனொசரை உருவாக்கும் உதாரணம் இதை இன்னும் விளக்கமாக எடுத்துச்சொன்னது.

IMG-20170501-WA0022

நேற்றைய அமர்வில் பாரி, மனுஷ்யபுத்திரனின் பேன்புராணம், இசையின் ஆட்டுதி அமுதே கவிதைகளுக்கு இணைத்திருந்த படங்களும் விளக்கமும் அவர் அந்த நுட்பத்தை எளிதாக அடைந்துவிட்டார் என்பதை உணர்த்தின. விரைவில் கவிஞர் பாரி வெளிப்படுவார்.

கடந்த மூன்று வருடங்களில், பேரதிசயங்களை உணர்த்திய கவிஞர்கள், யூமாவாசுகி, பிரான்ஸிஸ் கிருபா, இசை, மனுஷ்யபுத்திரன் மற்றும் தேவதேவன் ஆகியோர்களை மீண்டும் நினைத்துக்கொள்கிறேன். வேணுவெட்றாயனுக்கும் உங்களுக்கும் நாஞ்சில் சாருக்கும் நன்றிகள்.

அன்புடன்,

R.காளிப்ரஸாத்

முந்தைய கட்டுரைஊட்டி 2017, கடிதம்
அடுத்த கட்டுரைஷண்முகவேல் -ஒரு திருட்டு