89. வேர்விளையாடல்
முண்டன் கதையை முடித்தபின்னரும் பீமன் காட்சிகளிலிருந்து விடுபடவில்லை. முண்டன் எழுந்துசென்று அருகே நின்றிருந்த அத்திமரத்தில் தொற்றி ஏறி கனிந்தவற்றை மட்டும் பறித்து கைகளால் உடைத்து மலரச்செய்து உள்ளே செறிந்திருந்த செம்மணித்தசையை பற்களாலேயே சுரண்டி உண்ணத்தொடங்கினான். அவன் கிளைதாவிய அசைவில் விழிப்புகொண்ட பீமன் முதற்கணம் அவனை குரங்கென்றே உணர்ந்தான். எழுந்து கொண்டு “கனிந்துள்ளனவா?” என்றான். “ஆம், பசிக்கிறது” என்றபின் அவன் தாவி நிலத்தில் விழுந்து அணுகி கையிலிருந்த கனிகளை அளித்தான்.
பீமன் அவற்றை வாங்கி உண்டபின் “அஸ்ருபிந்துமதியின் கதையை நான் கேட்டுள்ளேன்” என்றான். “விழிநீர்மகள். ஒவ்வொருவருக்கும் அவ்வண்ணம் ஒருத்தி உண்டு என்பார்கள் கவிஞர். அவளையே பிற பெண்களிடம் மானுடர் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் அடைகிறார்கள். பின்னர் சொல்லிச் சொல்லி தங்களை தேற்றிக்கொண்டு இவளே என்றும் இவ்வளவே என்றும் நிறைவுகொள்கிறார்கள். அது நிறைவல்ல என பின்னர் அறிகிறார்கள். அப்போது வாழ்க்கை சென்றுவிட்டிருக்கும். முன்னோக்கிச் செல்லும் உள்ளமும் இல்லாமலாகிவிட்டிருக்கும். பின்னால் நோக்கவும் அடைந்தவற்றையும் இழந்தவற்றையும் எண்ணி எண்ணி ஏங்கவுமே பொழுதிருக்கும்” என்றான் முண்டன்.
“யயாதி என்னவானார்?” என்றான் பீமன். “கதைகளின்படி அவர் ஆயிரமாண்டுகாலம் காட்டில் அஸ்ருபிந்துமதியுடன் காமத்திலாடினார். காமநிறைவடைந்தபின்னர் குருநகரிக்கு மீண்டு தன் இளைய மைந்தன் புருவை அழைத்து அவன் இளமையை திருப்பியளித்து அவனை அரசனாக ஆக்கினார். முதுமைசூடியபின் மீண்டும் காடேகினார். பிருகுதுங்கம் என்னும் மலையை அடைந்து அங்கே ஏழு குகைகளில் வாழ்ந்த சப்தசிருங்கர்கள் என்னும் முனிவர்களுடன் வாழ்ந்து மெய்யுணர்ந்து உடல் உதிர்த்து விண்புகுந்தார்.”
“பிருகுதுங்கத்தில் தன்னைத் தேடிவந்த முனிவர்களுக்கு மாமன்னர் யயாதி உரைத்த நெறிகளும் மெய்யறிவுகளும் யயாதிசூக்தங்கள் என்னும் பேரில் மூன்று தொகுதிகளாக முனிவர்களால் தொகுக்கப்பட்டுள்ளன. இன்றும் அவை அரசுசூழ்தலுக்கான நூல்களாக பயிலப்படுகின்றன” என்றான் முண்டன். பீமன் நிறைவில்லாதவனாக கைகளை நக்கியபின் “நான் விழைவது பிறிதொன்று” என்றான். “அவர் அறிந்த மெய்யறிதல்களால் என்ன பயன்? அதைப்போன்ற பலநூறு மெய்யறிதல்கள் சேர்ந்து பெரும் சொற்குவையாக நம் தலைக்குமேல் உள்ளன. மூத்தவர் அவற்றை நாள்தோறும் பயின்று தன்னை எடைமிக்கவராக ஆக்கிக்கொள்கிறார்.”
“நீங்கள் அறியவிழைவதுதான் என்ன?” என்றான் முண்டன். “அவர் மீண்டும் தன் தேவியரை சந்தித்தாரா?” என்றான் பீமன். “அவர்களுடனான உறவை அவர் எப்படி அறுத்துக்கொண்டார்?” முண்டன் “அதை நான் சொல்லமுடியாது. தொடக்கம் முதலே இக்கதைப்பெருக்கில் வினாக்களே திரண்டெழுகின்றன” என்றான். “ஆம், அன்னையர் அவரை எப்படி ஒரே கணத்தில் அறுத்துக்கொண்டார்கள்? அவர்களில் அவர் எவ்வண்ணமேனும் எஞ்சினாரா?” என்றான் பீமன். “அவ்வாறு முற்றிலும் தன்னிலிருந்து தன் ஆண்மகனை அகற்றிவிட பெண்களால் இயலுமா?”
முண்டன் புன்னகை புரிந்து பேசாமலிருந்தான். பீமன் ஆற்றாமையுடன் கைகளை விரித்து “தனக்கு மட்டுமே என்றும் தனக்கில்லையென்றால் முற்றழியவேண்டும் என்றும் எண்ணுவது எப்படி மெய்யன்பாக இருக்கவியலும்? தம் மைந்தன் என்றால் இவ்வண்ணம் நடந்துகொண்டிருப்பார்களா?” என்றான். முண்டன் “இத்தகைய பலநூறு வினாக்களின் தொகையை சுமையெனக்கொண்டே ஒவ்வொருவரும் வாழ்க்கையை முடிக்கிறார்கள்” என்றான். பீமன் தன்னுள் மூழ்கி நெடுநேரம் அமர்ந்தபின் “தாயின் உறவன்றி உறவென்று வேறேதும் உண்டா இப்புவியில்?” என்றான். முண்டன் சிரித்து “அது ஒன்று எஞ்சியுள்ளது உங்களுக்கு, நன்று” என்றான்.
“என் வினாக்களுடன் நான் இங்கிருந்து எழமுடியாது” என்றான் பீமன். திரும்பி கருவறைக்குள் அமர்ந்திருந்த தேவயானியை நோக்கியபின் “அவரிடம் நான் அனைத்தையும் உசாவியாகவேண்டும்” என்றான். “நீங்கள் சென்றகாலத்திற்குள் செல்லவேண்டுமா?” என்று முண்டன் கேட்டான். “ஆம், அங்கே நான் யார் என்று அறிந்தாகவேண்டும்.” முண்டன் தன் முகத்தருகே பறந்த ஒரு இறகுப்பிசிறை நோக்கியபின் “இதை நோக்குக, இளவரசே” என்றான். “இதன் நிலையழிதலை. இதை அலைக்கழிக்கும் காற்றுகளை விழிகளால் காணமுயல்க!”
பீமன் அதை நோக்கி விழிநாட்டினான். அதன் ஒவ்வொரு பீலியையும் அணுக்கமாக பார்க்கமுடிந்தது. அது மிகச்சிறிய சிட்டுக்குருவி ஒன்றின் கழுத்தில் இருந்த இறகு. பருப்பொருள் வடிவை உதறி ஒளியாக மாறும் முதல்படியிலிருந்தது. அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் தொட்டு அசைத்தது காற்று. அல்லது ஒவ்வொரு பீலிக்கும் தனிக்காற்றா? காற்றென்பது ஒரு பெரும் படையெழுச்சியா? அவ்வசைவுகளினூடாக உயிர்கொண்டதுபோல சிறகுப்பிசிறு எண்ணியது, குழம்பியது, முடிவெடுத்து திரும்பியது, வேண்டாம் என்றது, ஆம் என்று மீண்டும் நிலைத்தது, அடடா என எழுந்தது, ஆ எனத் திகைத்துத் திரும்பியது, போதும் என விழுந்தது, இதை மட்டும் என மீண்டும் எழுந்தது.
முண்டன் தன் கைகளை அதைச்சுற்றி மெல்ல அசைக்கலானான். அந்தக் காற்றால் இறகு அலைவுற்றது. அவன் கையை விலக்கியபோது முகர விரும்பும் நாய்க்குட்டி என தேடிச்சென்றது. கைகளை நீட்டியபோது அஞ்சிய பறவை என விலகியது. காற்றலைகளை அவன் காணத் தொடங்கினான். மிக மென்மையான நீல ஒளியாக அவை இருந்தன. குளிர்ந்திருந்தன. அவற்றில் கோடிக்கணக்கான மென்துகள்கள். ஒவ்வொன்றும் ஒளிகொண்டிருந்தது. ஊடே பறந்தன நுண்ணுயிர்கள். மிகச்சிறிய சிறகுத்துளியை அணிந்தவை. அவற்றை அளைந்துகொண்டே இருந்தது சிறகுப்பிசிர்.
“எங்கிருக்கிறீர்கள், இளவரசே?” என மிகத் தொலைவில் எங்கோ இருந்து முண்டன் கேட்டான். “ஓர் அரண்மனையில்… மஞ்சத்தில்” என்றான் பீமன். “என்ன செய்கிறீர்கள்?” என்று மீண்டும் முண்டன் கேட்டான். “படுத்திருக்கிறேன், துயில்கிறேன்… நீங்கள் என் கனவில் வந்து இக்கேள்வியை எழுப்புகிறீர்கள்.” முண்டன் மெல்ல நகைத்து “ஆம்” என்றான். “எங்கிருக்கிறீர்கள்?” என்றான் பீமன். “நெடுந்தொலைவில்… எதிர்காலமெனும் பெருக்கின் மறுகரையில்” என்றான் முண்டன். பீமன் “ஆம், என்னால் உணரமுடிகிறது” என்றான். “நீங்கள் கனவுகாண்பது எதை?” என்றான் முண்டன். “என் கனவில் எப்போதும் நான் ஒரு பேருருவன். திரண்ட தோள்களும் திமிர்க்கும் தசைகளும் கொண்டவன். காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கிறேன்.”
“எங்கே?” என்றான் முண்டன். “ஓர் இனிய சோலைக்காடு. அறியா மணம் ஒன்றால் அழைக்கப்படுகிறேன். எண்ணிய மலர் என தன்னை உருமாற்றிக் காட்டும் மாயமணம் அது. உடன் ஒரு குரங்கு வருகிறது.” முண்டன் சிரித்து “குரங்கா?” என்றான். “ஆம், தாவியும் சுழன்றும் எழுந்தும் அது கையூன்றி முன் செல்கிறது. நிழல் என. வழிகாட்டும் நிழல். அந்நிழலை நான் தொடர்கிறேன். அதன் அசைவுகளை நிகழ்த்துகிறேன். அப்படியென்றால் நான்தான் நிழலா? நிழலுக்கு வண்ணமும் வடிவமும் எண்ணமும் இருப்பும் உண்டா?”
“அங்கு ஒரு சிற்றாலயத்தை காண்கிறேன். அதற்குள் ஓர் அன்னைத்தெய்வம் ஐம்புரிக்குழலை அவிழ்த்திட்டு வெறிமின்னும் கண்களும் அருள்நிறை இளநகை சூடிய இதழ்களுமாக நின்றிருக்கிறது. அதன் முன் நின்றிருக்கிறேன்” என்றான் பீமன். “அவள் யார்?” என்றான் முண்டன். “அறியேன். அவள் என் அன்னையை நினைவுறுத்துகிறாள்.” முண்டன் “உங்கள் பெயர் என்ன?” என்றான். “என் பெயர் புரு. சந்திரகுலத்தின் பேரரசர் நகுஷரின் மைந்தர் யயாதியின் கடைமைந்தன். அவர் கொடியையும் குடியையும் கொடையெனப் பெற்று அரசாள்கிறேன்.”
விழித்தபோது அக்கனவை சேற்றில்படிந்து மட்கிய இலையின் வடிவப்பதிவுபோல நினைவுகளில்தான் புரு அறிந்தான். அப்பதிவிலிருந்து கனவை மீட்டெடுக்க விழைவதுபோல இருண்ட அறையின் கூரைச்சரிவில் நெய்விளக்கின் தாழ்திரியின் சிற்றொளியில் அலையடித்த நிழல்களை நோக்கியபடி படுத்திருந்தான். பின்னர் எழுந்து தன் கைகளை நோக்கியபடி “சிவம்யாம்!” என முழுமைச்சொல் உரைத்தான். எழுந்து மிதியடியை அணிந்துகொண்டபோது கதவைத் திறந்த ஏவலன் வணங்கினான்.
நீராட்டறைக்கு அவனுடன் செல்கையில் இடைநாழியில் காத்து நின்றிருந்த அமைச்சன் சுபகன் வணங்கி உடன் சேர்ந்துகொண்டான். தந்தை பார்க்கவனின் நீத்தார்கடனுக்காக அவன் கங்கைக்கரைக்குச் சென்று பதினைந்துநாட்களுக்குப் பின்னரே மீண்டிருந்தான். இருவரும் சொல்லில்லாமல் நடந்தனர். அவர்களின் காலடிகள் உரையாடல்போல் ஒலித்தன. இடைநாழியின் வளைவுகளில் நிழல்கள் இணைந்து ஒன்றாயின.
நீராட்டறைக்குள் நுழைந்ததும் ஏவலர் வந்து புருவை வணங்கி அவன் மேலாடையை கழற்றினர். இனிய தைலமணத்துடன் ஆவியெழ கலத்தில் நிறைந்திருந்த நீரின் அருகே வெண்கலச் சிற்றிருக்கையில் அவன் அமர அவர்கள் அவன் இடையாடையைக் கழற்றிவிட்டு எண்ணை பூசத்தொடங்கினர். நறுமணம்கலந்து காய்ச்சப்பட்ட எள்ளெண்ணையின் மணத்தை நீராவி அள்ளி அறைமுழுக்க கொண்டுசென்று சுவர்களில் துளியாக்கி வழியச்செய்தது.
“மீண்டும் அதே கனவு” என்று புரு சொன்னான். அவன் குரலை எதிர்பாராத சுபகன் சுவரில் வழிந்த நீர்த்துளியிலிருந்து விழிவிலக்கி “எண்ணினேன்” என்றான். “யார் அவன்? எதற்காக அவ்வுருவை கனவுகாண்கிறேன்?” என்றான். “நீங்கள் திண்தோள்கொண்டவர் அல்ல. உங்கள் விழைவுதான் அவ்வாறு கனவிலெழுகிறது” என்றான் சுபகன். “நாம் அறியாத மூதாதையரைப்போலவே நாம் அறியவும் இயலாத வழித்தோன்றல்களும் நம் கனவிலுறைகிறார்கள் என்று நிமித்திகர் சொன்னார். அது மெய்யென்றே எனக்கும் தோன்றுகிறது” என்றான் புரு. “ஒவ்வொரு மரத்திலும் விதைகள் உறைகின்றன. விதைகளுக்குள் விதைகள் வாழ்கின்றன என்று ஒரு சொல்லாட்சி உண்டு.”
சுபகன் “அவ்வண்ணம் எண்ணிக்கொள்வதனால் நிறைவு கொள்கிறீர்கள் என்றால் அதுவே ஆகுக!” என்றான். “எவ்வாறு எண்ணினாலும் எந்த வேறுபாடும் உருவாகப்போவதில்லை. அவன் கொடிவழியினன் என்றால் அவனை காணப்போகிறீர்களா என்ன?” புரு “அவன் உருவை ஓவியர்களைக்கொண்டு வரைந்து வைக்கவேண்டுமென எண்ணினேன். எங்காவது அது இருக்கவேண்டும். வண்ணங்களில் அல்ல, கல்லில். ஆயிரமாண்டுகளானாலும் அங்கே அது காத்திருக்கவேண்டும். என்றோ ஒருநாள் அவன் வந்து அதன்முன் நிற்பான்” என்றான்.
சுபகன் நகைத்து “அதை நீங்கள் என அவன் பிழையாக எண்ணிக்கொள்ளக்கூடும். அவன் கனவில் வந்த உருவம்” என்றான். “இந்த நுண்ணிய வலைப்பின்னலை நெய்துகொண்டிருக்கும் கைகளிடம் எங்களுக்கும் இதை ஆடத்தெரியும் என்று காட்டவேண்டாமா?” என்றான் புரு. “அவனை நான் அத்தனை நீர்ப்பரப்பிலும் முகமெனக் காண்பேன். மஞ்சள் நிறமும் பெரிய தாடையும் கொண்ட முகம். விழிகள் சிறியவை, ஆனால் அழியா நகைப்பு சூடியவை. அவன் பேருடலுக்குள் இருக்கும் அறியாச் சிறுவன் ஒருவன் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுவான்.”
சுபகன் “அரசே, நீங்கள் இளமையை முற்றிழந்தவர். அக்கனவு அதனால்தான் என நினைக்கிறேன்” என்றான். “நீயே சொன்னாய், இப்படி எண்ணிக்கொள்வதில் பயன் ஏதுமில்லை என. அப்படியென்றால் ஏன் குறைத்து அறியவேண்டும், பெருக்கியறிவது உவகையையாவது அளிக்கிறதே?” என்றான் புரு. “அவ்வாறெனினும் ஆகுக!” என்று சுபகன் சிரித்தான். “சூதர்களைக்கொண்டு அதை பாடச்செய்வோம். நுரையெனப் பெருக்குவார்கள். பின் கவிஞர்களைக்கொண்டு எழுதச்செய்வோம். நுரையை பளிங்குப்பாறையாக்கும் சொற்றிறன் அவர்களிடமுண்டு” என்று புரு நகைத்தான்.
நீராட்டுக்குப்பின் அவர்கள் இயல்படைந்து பேசியபடி நடந்தனர். “சற்றுநேரத்தில் கிளம்பிவிடலாம், அரசே. இளவரசர்களும் அரசியும் முன்னரே ஒருங்கிவிட்டனர். தேர்களும் வண்டிகளும் காவலர்படைகளும் காத்திருக்கின்றன” என்றான் சுபகன். புரு “ஆம், கிளம்பவேண்டியதுதான். ஒவ்வொருநாளாக இந்நாளை நோக்கி எண்ணி எதிர்பார்த்து அணுகினேன். கிளம்பும் தருணத்தில் ஒரு தயக்கம் இக்கணங்களை நீட்டித்து அதை ஒத்திப்போடச் சொல்கிறது. இப்போது நானே நம்பும் ஒரு செயல்மாற்று அளிக்கப்படுமென்றால் தவிர்த்துவிடுவேன்” என்றான்.
சுபகன் புன்னகைத்து ஒன்றும் சொல்லாமல் தலைவணங்கி வெளியேறினான். அவனிடம் சொன்னவற்றைப்பற்றி எண்ணிக்கொண்டு அணிச்சேவகரிடம் தன் உடலை அளித்தான். அவர்கள் நறுஞ்சுண்ணம் பூசி, அரச உடையும் அணிகளும் பூட்டி அதை ஒருக்குவதை ஆடியில் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உடல் பிறிதொன்றாகி எழுந்துகொண்டிருந்தது, சிறகுபூண்டு கூடுதிறந்தெழும் பட்டாம்பூச்சி என. ஏவலர் இருவர் அரசமுத்திரை கொண்ட பட்டுத்தலைப்பாகையை அவனுக்கு சூட்டியபோது அவன் மெல்லிய திடுக்கிடலை உணர்ந்தான். ஒவ்வொரு முறை முடிசூடும்போதும் எழும் எண்ணம்தான். அன்று அடிபட்டுக் கன்றிய தோல்மேல் என அத்தொடுகை மேலும் அழுத்தம் கொண்டிருந்தது.
அவன் முடிசூட்டிக்கொண்டபோது குருநகரியில் அவன் உடன்பிறந்தார் எவரும் இருக்கவில்லை. யயாதி அவனை கொடிவழியினன் என அறிவித்து முதுமையை அளித்துவிட்டு கானேகிய மூன்றுநாட்களில் அவன் உடன்பிறந்தார் நால்வரும் நகர் நீங்கினர். யது நகர்நீங்கப்போவதாக தன் அணுக்கரைக்கொண்டு நகரில் முரசறைவித்தான். தெருமுனைகளில் அவ்வறிவிப்பு முழங்கியபோது மக்கள் திகைத்து நின்றுகேட்டனர். உணர்வெழுச்சியுடன் சினத்துடன் வஞ்சத்துடன் சொல்லாடிக்கொண்டனர். “குருதிவழி என்பது தெய்வங்களால் அருளப்படுவது. அதை மாற்ற மானுடருக்கு ஆணையில்லை” என்றார் முதிய அந்தணர்.
“இம்முடிவை தெய்வங்கள் விரும்பியிருந்தால் முதல் நால்வரை பலிகொள்ள தெய்வங்களால் இயலாதா என்ன?” என்றார் பூசகர் ஒருவர். “மூதாதையர் மூச்சுவெளியில் நின்று பதைக்கிறார்கள். அரசன் தன்னலம் கருதி எடுத்த முடிவு இது” என்றார் அங்காடிமுனையில் கூடியிருந்த கூட்டத்தில் நின்றிருந்த பெருவணிகர். “இதோ, அசுரக்குருதி நம் மேல் கோல் ஏந்தி அமரவிருக்கிறது… தோழரே, இவையனைத்தும் இதன்பொருட்டே நிகழ்த்தப்பட்டன. இது சுக்ரரின் சூழ்ச்சி. விருஷபர்வனின் அரசாடல்” என்றார் சூதர் ஒருவர். ஒவ்வொருநாளுமென ஒற்றர்கள் ஓலையனுப்பிக்கொண்டிருந்தனர். மீண்டுவந்து ஒருமுறை அவன் அத்தனை ஓலைகளையும் படித்தான். தான் அமர்ந்திருப்பது எதன்மேல் என அறிந்துகொண்டான்.
குலமூத்தார் பன்னிருவர் திரண்டு அரண்மனைக்கு வந்து அமைச்சர்களுடன் சொல்லாடினர். பேரமைச்சர் சுகிர்தர் “நான் இதில் சொல்வதற்கேதுமில்லை. அமைச்சன் என என் கடமையை செய்யவேண்டும்” என்றார். “நீர் அமைச்சர் மட்டுமல்ல, அந்தணர். அறமுரைக்கக் கடமைகொண்டவர்” என்றார் குலத்தலைவரான குர்மிதர். “அந்தணர் உரைக்கும் அறம் முன்னோரால் சொல்லப்பட்டதாகவே இருக்கவேண்டும். தன் விழைவை அறமாக்க அந்தணருக்கு உரிமை இல்லை” என்றார் சுகிர்தர். “நூல்நெறிகளின்படி தன் குருதிவழி எது என முடிவெடுக்கவேண்டியவர் அரசர் மட்டுமே. பிற எவரும் அல்ல.”
“அவ்வண்ணமென்றால் மூத்தவர் நாடாளவேண்டுமென்னும் நெறி எதற்கு? நூல்கள் ஏன் அமைத்தன இதை?” என்றார் குலமூத்தாரான பிரகிருதர். “மூத்தாரே, தந்தையே தன் மைந்தன் எவன் என முடிவெடுக்க முடியும்…” என்றார் சுகிர்தர். “நூல்கள் முடிவெடுக்கும் உரிமையை அரசனுக்கு அளித்தது இதனால்தான். தன் மைந்தரை அரசர் துறந்துவிட்டார். அதன்பின் அவர்கள் எப்படி மைந்தர் என சொல்லி முடிகோர முடியும்?” குலத்தலைவர்கள் சினந்து “இது பெரும்பழி… பாரதவர்ஷத்தின் பேரரசியை அவர் துறந்திருக்கிறார்… நாங்கள் ஏற்கமுடியாது. அசுரக்குருதியை ஒருபோதும் எங்கள் குடிகள் தலைமையெனக் கொள்ளாது” என்றனர்.
அவர்கள் திரண்டுசென்று அரண்மனைக்கு வெளியே சோலையில் ஒரு ஸாமி மரத்தடியில் தங்கியிருந்த யதுவை கண்டனர். “அரசே, பேரரசியின் குருதியே எங்கள் நாட்டை ஆளவேண்டும். அசுரக்குருதியிலிருந்து நீங்களே எங்களுக்குக் காப்பு” என்றனர். “உங்களை எங்கள் இளவரசர் எனச்சொல்லி பதினாறுமுறை மூதாத்துள்ளோம். இனி அவர்களிடம் சொல்மாற்ற எங்களால் இயலாது” என்றார் குலமூத்தாரான சம்பவர்.
யது கைகூப்பி “என் சொல்லை பொறுத்தருள்க, குலத்தலைவர்களே. தந்தையை நாங்கள் கைவிட்டோம், அவர் எங்களை கைவிட்டார். இரண்டும் அத்தருணத்தில் அவ்வாறு நிகழவேண்டுமென்றிருந்தது. ஒருநாள் கழித்து ஒருமுறை அமைச்சர்களுடன் சொல்லாடிவிட்டு அவர் முன் நின்றிருந்தால் நான் அவர் முதுமையை ஏற்றுக்கொண்டிருப்பேன். அவருடைய முதுமைநலிவை நேரில்கண்டு என் உள்ளம் அஞ்சித்திகைத்திருந்த தருணத்தில் அதை நான் கொள்வதைப்பற்றி எண்ணிப்பார்க்கவே இயலவில்லை. அத்தருணத்தை அமைத்த தெய்வங்களின் வழிப்பட்டு நான் கிளம்பவிருக்கிறேன். அவர் அளித்த சொற்கொடை இருக்கிறது. அதுவே நிகழ்க!” என்றான்.
உரத்த குரலில் அழுகையும் விம்மலுமாக “நாங்களும் வருகிறோம்… எங்கள் குடிகளனைத்தும் உங்களைத் தொடரும்… இங்கே வெற்றுநிலமும் கட்டடங்களும் எஞ்சட்டும். அதை கோல்கொண்டு ஆளட்டும் அசுரகுடியினன்” என்றார் பிரகிருதர். “என்னுடன் வருபவர்கள் வரலாம். ஆனால் எந்தையின் சொல்லென்ன என்று அவர்கள் அறிந்திருக்கவேண்டும். காட்டெரியென பரவும் வாழ்க்கை. நீர்நிழலென நிலைகொள்ளா இருப்பு. ஆபுரக்கும் எளியதொழில்” என்றான் யது. “ஆம், ஆனால் உங்கள் குடி பெருகிக் கிளைகொண்டு பாரதத்தை மூடுமென்றும் சொல் உள்ளது. அதுபோதும். வருகிறோம். இது எங்கள் சொல்” என்றார் குர்மிதர்.
ஆனால் மறுநாள் ஐந்து குலங்கள் மட்டுமே அவர்களுடன் கிளம்பின. அக்குடிகளிலும் ஒரு பகுதியினர் பின்எஞ்சினர். சினக்கொதிப்புடன் நாடுநீங்குவதாக வஞ்சினமுரைத்து ஆடவர் இல்லம் திரும்பி மகளிரிடம் சொன்னபோது அவர்கள் விழிகள் மாற முதலில் அதற்கு உடன்பட்டனர். பின்னர் நிலத்தையும் குடியையும் விட்டுச்செல்வதன் இடர்களைப்பற்றி உரைக்கலாயினர். நிலம்நீங்குபவன் குடியை இழக்கிறான். அந்நிலத்தில் நடுகற்களென நின்றிருக்கும் மூதாதையரையும் துறக்கிறான். சென்றடையும் நிலத்தில் அவன் ஈட்டுவதே குலமென்றாகும். “குலமும் நிலமும் நம் மூதாதையர் நம் மைந்தருக்களிப்பவை. அவற்றை மறுக்க நமக்கு உரிமையுண்டா?” என்றாள் மூதன்னை ஒருத்தி.
மறுநாள் முதற்புலரியில் யது நகர்நீங்கினான். முந்தையநாள் இரவு சிற்றமைச்சரான லோமரூஹர் வந்து சுகிர்தர் முன் பணிந்து மறுநாள் தான் யதுவுடன் செல்லவிருப்பதாகச் சொல்லி ஆணைகோரினார். “நானும் என் குலத்து இளைய அந்தணர் நூற்றெண்மரும் இளவரசருடன் செல்ல முடிவெடுத்துள்ளோம், உத்தமரே. உங்கள் நற்சொல்லை நாடுகிறோம்” என்றார் லோமரூஹர். “ஆம், எந்நிலையிலும் அரசனை அந்தணன் கைவிடலாகாது என்பது நூல்நெறி. அந்தணர் உடனிருந்து வேதச்சொல்கொண்டு மூவெரி ஓம்பும்வரைதான் இளவரசர் அரசர் எனப்படுவார். நம் கடன் இது. நன்று சூழ்க!” என்றார் சுகிர்தர். லோமரூஹர் அவரை வணங்க “செல்லுமிடம் ஏதென்று அறியோம். அங்கு சூழ்வதென்ன என்பதும் ஊழின் கைகளில். ஆனால் அந்தணரால் அரசர் கைவிடப்பட்டார் என்னும் சொல் எழலாகாது” என்றார் சுகிர்தர்.
யது அரண்மனையிலிருந்து கிளம்பும்போது சுகிர்தரை தாள்பணிந்து வணங்கினான். “இளவரசே, அந்தணர் சொல் துணைகொள்க! படைவீரர்களை உடன்பிறந்தார் என எண்ணுக! துணியவேண்டிய இடத்தில் துணிக! பொறைகொள்ள வேண்டிய இடங்களில் பொறுப்பதே அத்துணிவை எய்துவதற்கான வழி. எந்த வெற்றியும் எத்தோல்வியும் அத்தருணத்தால் அச்சூழலால் முடிவாவதல்ல என்று உணர்க! நீண்டகால வெற்றியே வெற்றி. மீண்டெழ முடியாது போவதொன்றே தோல்வி” என்று சுகிர்தர் வாழ்த்தினார். “நலம் சூழ்க! தெய்வங்களும் மூதாதையரும் உடன்எழுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என வாழ்த்தி வேதச்சொல் உரைத்து நீர் தெளித்தார்.
யது திரும்பிப்பார்க்காமல் நடந்துசென்றான். எத்தனைபேர் தொடர்கிறார்கள், அவர்கள் கொண்டுவருவன என்ன என்று அவன் நோக்கவில்லை. நூறு வண்டிகளிலும் இருநூறு அத்திரிகளிலும் பொருட்களையும் குழந்தைகளையும் பெண்டிரையும் ஏற்றிக்கொண்டு படைக்கலங்களை ஏந்தியபடி ஐந்துகுலத்தவர் உடன் சென்றனர். குருநகரியின் ஆயிரம் படைவீரர்கள் படைத்தலைவன் சத்ரசேனனால் வழிநடத்தப்பட்டு உடன் சென்றனர்.
குருநகரியின் கோட்டையைக் கடந்ததும் அவனுடன் சென்ற குடிமக்கள் உளம் ஆற்றாது திரும்பிநோக்கி விம்மினர். சிலர் மண்ணில் அமர்ந்து தாங்கள் செல்லப்போவதில்லை என கைகளால் அறைந்தபடி அழுதனர். குலமூத்தார் சினந்து ஆணையிட அவர்களை பிறர் தேற்றி தூக்கிச்சென்றனர். சிலர் தங்கள் மைந்தருடனும் பெண்டிருடனும் மீண்டும் நகர்நோக்கி ஓடிவந்தனர். கோட்டைக்குள் பெருமுற்றத்தில் கூடிநின்று செல்பவர்களை நோக்கி விழிநீர் வடித்தவர்கள் ஓடிமீண்டவர்களை நோக்கி கைவிரித்துப் பாய்ந்து சென்று அணைத்துக்கொண்டனர். சூழ்ந்துநின்று கதறியழுதனர்.
செல்பவர்கள் விழிமறைந்தனர். புழுதியடங்கியது. ஒன்றும் நிகழாததுபோல் ஆயிற்று ஒளியெழுந்துகொண்டிருந்த தொடுவானம். “தொடுவானை எதுவும் கலைக்கமுடியாது, இளையோரே. அது காலமெனும் கூர்வாள். எத்தனை கொன்றாலும் குருதிபடியா ஒளிகொண்டது” என்றார் சூதர் ஒருவர். அவர்கள் துயருடன் இல்லம் மீண்டும் சென்றவர்களுடன் சென்ற கற்பனையில் அலைந்தபடியும் ஆங்காங்கே அமர்ந்தனர்.
ஆனால் அவர்கள் சென்றது நீர்ச்சிறைவிளிம்பு கிழிந்தது என அடுத்த அணி துர்வசுவுடன் கிளம்பிச்செல்ல வழியமைத்தது. யது கிளம்பிய மறுநாள் கரும்புலரியில் துர்வசு சுகிர்தரை கால்தொட்டு வணங்கி சொல்பெற்று தன்னந்தனியே கிளம்பினான். அவன் கோட்டையைக் கடந்து நின்று மூன்று திசைகளையும் நோக்கியபின் மேற்கு நோக்கி திரும்பியபோது அவன் சாலைத்தோழனாகிய ரணசிம்மன் தன்னைத் தொடர்ந்த சிறு படைப்பிரிவுடன் பின்னால் சென்று அடிபணிந்தான். அவன் செல்வதைக் கண்டதும் மூன்றுகுலங்கள் கிளம்பி துர்வசுவுடன் சேர்ந்துகொண்டன.
அவர்கள் கிளம்பிச் சென்றபோது முந்தையநாளின் எழுச்சியும் துயரும் இருக்கவில்லை. வெறுமைகொண்ட விழிகளுடன் மக்கள் நோக்கிநின்றனர். ஒருவேளை செல்லுமிடத்தில் மேலும் சிறந்த வாழ்க்கை அமையக்கூடுமோ என்னும் ஐயம் அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. ஒருநாள் கழித்து அதை எவரோ சொன்னார்கள். சொல்லானதுமே அது பெருகலாயிற்று. நகர்நீங்கியவர்கள் செல்வம் செழித்த புதுநிலங்களில் சென்று குடியேறும் கதைகள் தோன்றலாயின. பின்னர் ஒவ்வொருவரும் அந்நகரைவிட்டு வெளியேறும் ஆழ்கனவு ஒன்றை தங்களுக்குள் பேணிவளர்க்கத் தொடங்கினர்.
திருஹ்யூவும் அனுதிருஹ்யூவும் திரும்பி ஹிரண்யபுரிக்கே செல்லக்கூடுமென அமைச்சர்கள் எதிர்பார்த்தனர். விருஷபர்வனின் அழைப்புடன் பறவைத்தூதும் வந்தது. ஆனால் அவர்கள் கிளம்பி தெற்கும் கிழக்குமாகச் சென்றனர். அவர்களுடன் அசுரப்படைகளிலிருந்த வீரர்களின் சிறுகுழுக்களும் ஓரிருகுடியினரும் உடன்சென்றனர். நகரை ஆளும்பொறுப்பு பேரமைச்சர் சுகிர்தரின் கைக்கு வந்தது. அவர் அமைச்சர்களின் சிறுகுழு ஒன்றை அமைத்தார். அரியணைமேல் யயாதியின் கோலும் முடியும் வைக்கப்பட்டு அவர் பெயரில் முத்திரையிடப்பட்ட ஓலைகளால் ஆட்சி நடந்தது.
முடிசூடிய பின்னர் அமைச்சர்களை அழைத்து அவர்கள் சென்ற இடத்தைப்பற்றி அறிந்துவர ஒற்றர்களை அனுப்பும்படி புரு சொன்னான். உறுதியான குரலில் “அது கூடாது, அரசே. இனி அவர்களை நாம் தொடரக்கூடாது” என்றார் அவர். “அவர்கள் எவ்வண்ணம் எங்கிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ளலாம் அல்லவா?” என்றான் புரு. “அறிந்து என்ன செய்யப்போகிறீர்கள்? அவர்கள் பெருமரங்கள் என கிளைவிரித்து விழுதுபரப்புவார்கள் என்பது உங்கள் தந்தையின் சொல். இது வேர் தாழ்த்தும் பருவம். இப்போது அவர்களை தோண்டி எடுப்பது வீண்வேலை” என்றார் சுகிர்தர்.
“இன்று அவர்கள் செல்லுமிடமெங்கும் கடும் எதிர்ப்புகளுக்கு ஆளாவார்கள். தங்கள் ஆற்றலையெல்லாம் திரட்டி போரிடவேண்டும். அவர்களின் உள்ளமும் எண்ணிக்கையும் ஒற்றுமையும் வலுப்பெறவேண்டும். எதிர்கொள்ளும் மாற்றுவிசைகளே அவர்களை வளர்க்கவேண்டும். அப்போதுமட்டுமே அவர்கள் வென்று வாழமுடியும்” என்றார். புரு தலைகுனிந்து அமர்ந்திருக்க மூத்த ஒற்றனான சந்திரபாலன் “தாங்கள் நிலைகொள்ளும் வழிகளை அவர்கள் கண்டடையவேண்டும், அரசே” என்றான்.
“இப்போது அவர்கள் இருக்குமிடத்தை நாம் அறிந்துகொண்டோம் என்றால் என்ன செய்வோம்? ஒவ்வொரு நாளுமென அவர்களை பின் தொடர்வோம். அவர்களுக்கு எதிரிகள் எழுகையில் நாமும் அவர்களை எதிரிகளெனக் கொள்வோம். போர் நிகழுமென்றால் உதவிக்கு படை கொண்டுசெல்ல விழைவோம். அரசே, அவர்கள் நால்வரும் நான்கு திசைகளுக்கு சென்றிருக்கிறார்கள். நான்கு திசைகளுக்கும் படையனுப்பிக் காக்கும் ஆற்றல் நமக்கு இல்லை. நம்மால் இயலாதவற்றை எண்ணி ஏங்கிச் சலிப்பதே அதன் விளைவென்று ஆகும்” என்றார் அமைச்சர்.
“மேலும் அவ்வாறு அவர்களுக்கு உதவுதல் உங்கள் தந்தையின் ஆணையை மீறுவதே. அவர்கள் நம் குருதியினர் அல்ல. நம் சமந்தரோ நமக்கு கப்பம் அளிப்பவரோ அல்ல. குருநகரியின் மக்களின் செல்வத்தையும் வீரர்களின் உயிரையும் எந்நெறியின்பொருட்டு அவர்களுக்காக செலவிடுவீர்கள்?” என்றார் சுகிர்தர். “அத்துடன் மறுநாள் படைவீரர்கள் எவரையும் உடன் அழைக்காமல் கருவூலத்தில் ஒரு பொன்னைக்கூட கேட்காமல் நாடுநீங்கிய உங்கள் உடன்பிறந்தார் நம் உதவியை ஏற்றுக்கொள்வார்கள் என எண்ணுகிறீர்களா?”
அவர்களில் யது தனக்குரிய நிலம்தேடி தன் படைகளுடன் தென்றிசை நோக்கி சென்றான். கங்கையையும் யமுனையையும் கடந்து, மாளவத்தையும், கிகடர்களின் தேவபுரியையும் தாண்டி தென்மேற்காக தன்குடிகளை அழைத்துச்சென்றான். நிஷாதர்களின் நாட்டில் தோலூறிய கழிவுநீர் ஓடிய சர்மாவதி நதியைக் கடந்து யதுவும் அவன் படையினரும் மேலும் சென்று மனிதர்கள் வாழாது வெயில் பரவி வீண்நிலமாகக் கிடந்த பர்ணஸா என்னும் ஆற்றின் படுகையை அடைந்து அங்கே தங்கள் குடியை நிறுத்தினர். யதுவின் அமைச்சரான லோமரூஹர் அங்கே சிற்றூர் ஒன்றை அமைத்தார். அவர்களின் முதல் ஊர் அங்கே அமைந்தது.
துர்வசு தன் தோழன் ரணசிம்மனுடன் நகர்நீங்கிச் செல்கையில் காட்டு எல்லையில் சந்திரகுலத்தின் அனைத்து அடையாளங்களையும் துறந்தான். குருநகரியின் கடைசிப் புழுதியையும் தன் காலடியிலிருந்து அகற்றும்பொருட்டு ஓடையில் கால்கழுவிவிட்டு மேற்காக சென்றான். சப்தசிந்துவையும் கூர்ஜரத்தையும் கடந்து சென்றபோது நாடுகளே இல்லாத பெரும்பாலைநிலம் அவர்களை எதிர்கொண்டது. அணையாத அனல்காற்றுகள் வீசும் கந்தவதி என்னும் நிலம் அவர்களுக்கென அமைந்தது.
தன் உடன்பிறந்தவனாகிய திருஹ்யூ யமுனைக்கு அப்பால் சென்று மச்சர்களுடன் இணைந்துகொண்டதையும் அனுதிருஹ்யூ மேலும் கடந்து சென்று தண்டகாரண்யத்தின் தொல்குடிகளுடன் இணைந்து தனிக்குடி கண்டதையும் சூதர்களும் தென்னகப் பாணர்களும் வந்துபாடிய பாடல்களினூடகவே புரு அறிந்துகொண்டான். அந்தச் செய்திகள் குருநகரியில் பரவுவதற்கு அவன் ஆணையிட்டான். சூதர்சொல் பெருகுவதென்பதை அவன் அறிந்திருந்தான். யயாதியின் மைந்தர் நான்கு நகர்களை அமைத்து அரசமுடி சூடிவிட்டனர் என்னும் செய்தி குருநகரியின் குடிகளை உளம் அமையச் செய்தது. அதன்பின்னரே அவர்கள் புருவை தங்கள் அரசன் என ஏற்றுக்கொண்டனர்.
புரு சுகிர்தரை தூதனுப்பி குருநகரியின் செல்வத்தில் பெரும்பகுதியை கன்னிச்செல்வமெனக் கொடுத்து குருநகரிக்கு கப்பம்கட்டும் சிற்றரசெனத் திகழ்ந்த கோசல நாட்டின் அரசன் புஷ்டியின் மகள் பௌஷ்டையை மணந்து பட்டத்தரசியாக்கினான். அந்த மணவிழா பன்னிருநாட்கள் குருநகரியில் கொண்டாடப்பட்டது. பாரதவர்ஷத்தின் அரசர்கள் திரண்டுவந்து அந்த மணவிழாவை அணிசெய்தனர். ஷத்ரியப் பேரரசி அமைந்ததுமே குருநகரியின் மக்களின் உள்ளம் மாறத்தொடங்கியது. முதல் இளவரசன் பிரவீரனின் இடையணிவிழா நடந்தபோது குடிகள் நடந்தவை அனைத்தையும் மறந்து பெருமிதமும் களிவெறியும் கொண்டு கொண்டாடினர்.
சுகிர்தரின் சொல்படி நகரின் கோட்டையை மேலும் ஒரு சுற்று விரிவாக்கி அதற்கு சந்திரபுரி என்று பெயரிட்டான். சந்திரகுலத்துக் குருதிவழியால் ஆளப்படுவது அந்நகர் என அப்பெயர் ஒவ்வொரு முறை உச்சரிக்கப்படுகையிலும் உறுதியாயிற்று. விருஷபர்வனின் கொடிவழி வந்தவன் அவன் என்பதை விரைவிலேயே அனைவரும் மறந்தனர். ஆனால் நகரின் முத்திரையாக ஹிரண்யபுரியின் அமுதகலசம் அமைந்தது. அதைக் குறித்து அந்தணரும் ஷத்ரியர் சிலரும் உளக்குறை கொண்டிருந்தாலும் அவ்வடையாளத்தை பெண்டிர் விரும்பியமையால் விரைவிலேயே அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முடிசூடி எழுந்து தன்னை புரு ஆடியில் பார்த்துக்கொண்டான். முதிய அணிச்சேவகர் “தங்கள் தந்தை பேரரசர் யயாதியை நான் பார்த்திருக்கிறேன், அரசே. அவரைப்போலவே தோன்றுகிறீர்கள்” என்றார். புரு புன்னகையுடன் “ஆம், ஒரே முகங்கள்தான்” என்றான்.