கொடிக்கால் அப்துல்லா அவர்கள் நேற்று என் இல்லத்திற்கு வந்திருந்தார்கள். அஜிதனும் வீட்டில் இருந்தான், ஆகவே பெரியவரின் ஆசிகளைப் பெறும் நல்வாய்ப்பு அவனுக்கு அமைந்தது. இன்றைய அரசியல் குறித்தும் நேற்றைய நிகழ்வுகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். அவரைப்போன்ற இலட்சியவாதிக்கு சமகால நிகழ்வுகள் அளிக்கும் துயரமும் பதைப்பும் புரிந்துகொள்ளக்கூடியவையே. நான் அக்கசப்புகளை மேலும் தீவிரமாகக் கொண்டவன்.
ஆனால் அவரிடம் ஒன்றைச் சொன்னேன். இந்தியாவெங்கும் சென்ற இருபதாண்டுகளில் நிகழ்ந்துள்ள முக்கியமான மாற்றம் அது. உணவு, உடை உறைவிடம் ஆகியவற்றில் இந்தியா ஒருவகையான தன்னிறைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இன்று தமிழகத்தில் தஞ்சை, கடலூர் போன்ற சில பகுதிகளைத் தவிர பொதுவாகவே குடிசைகள் கண்ணுக்குப்படுவது அரிதாகிவிட்டது. குடிசைகள் மண்டிய ஒரு பகுதியை சினிமா எடுப்பதாக இருந்தால்கூட செட் போடவேண்டிய நிலைமை. குடியிருப்பதன் நெருக்கடி அதிகமாக நகரங்களில்தான்
கிராமங்களில் சென்ற பத்தாண்டுகளில் விரைவாக சிறிய கான்கிரீட் வீடுகள் எழுந்துகொண்டிருக்கின்றன. ஏறத்தாழ 80 சதவீதத்தை இலவசமாக அளிக்கும் மத்திய அரசின் நிதிக்கொடை முதன்மையான காரணம். கழிப்பறைகள் சாதாரணமாக ஆகி தொடர்ந்த உச்சகட்ட பிரச்சாரமும் நிகழ்வதனால் கிராமங்களில் பொதுஇடங்களில் மலக்குவியல்கள் இருப்பது வெகுவாகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் முறையே பிகார், வங்காளம், உத்தரபிரதேசம் ஆகியவைதான் வறுமையான மாநிலங்கள். அங்கேயும்கூட இன்று உணவில்லை என்னும் நிலை இல்லை. ஒருநாள் கூலிப்பணியாற்றி ஊதியம் பெற்றால் ஒருவாரம் உண்ணலாம் என்பதே இந்தியா முழுக்க இருக்கும் நிலை. முன்பெல்லாம் சாலையில் நல்ல உடை அணிந்தவர் நூற்றில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். இன்று நேர்மாறு.
என்னதான் அரசியல் சிக்கல், சூழியல் அழிவு என்றெல்லாம் சொன்னாலும் இந்த மாற்றம் அபாரமானது. பட்டினியையே பார்த்து வளர்ந்த, பிறர் பசி கண்டு கொதித்து அரசியலுக்கு வந்த கொடிக்கால் அப்துல்லா போன்றவர்களுக்கு அதன் அருமை புரியும். நான் இளமையில் பட்டினி கிடக்கும் மக்கள் நடுவே வளர்ந்தவன். சின்னக்குழந்தைகள் உணவுக்கு ஏங்கி நின்றிருக்கும் காட்சி எப்போதுமே என்னை கொந்தளிக்கச் செய்திருக்கிறது. அது அக்குழந்தைக்கு ஒட்டுமொத்த உலகும் செய்யும் வஞ்சகம் என தோன்றும் இன்று அக்காட்சி மறையத் தொடங்கியிருக்கிறது. அது சமகாலத்தின் பெருங்கொடை
பெரியவரின் முகம் மலர்ந்தது. ஆனால் நான் ஒரு தவறு செய்தேன். மேலும் சொல்லிப்போய் இந்தியாவுடன் இணைந்து சுதந்திரம் பெற்ற பிறநாடுகள் இருக்கும் நிலையை விளக்கினேன். ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் பல்லாயிரம்பேர் பட்டினியால் சாகும் பெரும்பஞ்சங்கள் எழுந்திருக்கின்றன என்றேன். பலநாடுகளில் உள்நாட்டுப்போரின் விளைவான பஞ்சங்கள், அழிவுகள். பெரியவரின் முகம் மீண்டும் கூம்பிவிட்டது. அவர் ஆப்ரிக்காவுக்கான மனத்துயருடன் கிளம்பிச் சென்றார்.
கொடிக்கால் அவர்களின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்திருக்கிறார்கள். அமீர் அப்பாஸ் இயக்க எம். முகம்மது ஷெரீஃப் தயாரித்திருக்கிறார். எம்.எஸ்.அலிகான் தயாரிப்பு நிர்வாகம். முக்கியமான ஒரு பதிவு. அனைத்து வகையிலும் பாராட்டப்படவேண்டியது. கொடிக்கால் அவர்களின் பேச்சும் அவரைப்பற்றிய சமகாலத்தவரின் பதிவுகளும் இதில் உள்ளன.
என்ன குறைகிறது என்றால் அவருடைய காலகட்டம் பற்றிய பதிவுகள்தான். அவருடைய அரசியல் களங்களில் ஆதரவாகவும் எதிராகவும் உடன்நின்றவர்களின் ஒரு புகைப்படத் தொகுதியை உருவாக்கி இணைத்திருக்கலாம். கொலாஜ் முறையில் ஒரு முகப்பெருக்கு அமைந்திருக்கலாம். ஆவணப்படங்களுக்கு முடிவில்லை, இன்னமும்கூட செய்யலாம்
***
கொடிக்கால் – தியாகங்களுக்குமேல் திரை