அமுதமாகும் சொல்

surya

ஒரு சொல்லோ சொற்றொடரோ அதிலுள்ள அர்த்தத்தைக் கடந்து வளரும் என்றால் அதுவே மந்திரம் அல்லது ஆப்தவாக்கியம். நான் எழுதும் மகாபாரத நாவலான வெண்முரசில் நுண்சொல் என அதை தமிழாக்கம் செய்து பயன்படுத்தியிருக்கிறேன். அவை இல்லாத பண்பாடோ அவை செயல்படாத காலகட்டமோ இல்லை.

நுண்சொற்கள் மதத்துடன் தொடர்புள்ளவை, தொன்மையானவை என நாம் பொதுவாக எண்ணுகிறோம். உண்மையில் அவை ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிக்கொண்டேதான் இருக்கின்றன. கவிஞர்களின் சொல்லில் அவை பிறப்பதுண்டு. ஞானநூல்களில் , ஞானிகளின் சொற்களில் அவை எழுவதுண்டு. அரசியல்வழிகாட்டிகளின் கூற்றுகளாக பிறப்பதும் உண்டு.

வந்தேமாதரம் என்பது ஒரு நுண்சொல்தான். தாயைவணங்குகிறோம் என்பதுதான் அதன் பொருள். ஆனால் எத்தனைகோடிபேரை அது உள்ளம்கிளரச் செய்திருக்கிறது. அதைக்கூவியபடி தடியடிபட்டிருக்கிறார்கள், சிறைபுகுந்திருக்கிறார்கள், தூக்குமேடை ஏறியிருக்கிறார்கள். அதேபோன்று இன்னொரு நுண்சொல் இங்குலாப் சிந்தாபாத்.

ஒரு பண்பாட்டில் உள்ளுறையும் ஓர் உணர்ச்சியோ ஒரு மெய்யறிவோ மிகச்சரியாக ஒரு சொல்லாட்சியாக ஆகும்போது அது நுண்சொல் ஆகிறது. அல்லது ஒரு சொல்லாட்சியில் தன் உணர்ச்சிகளையும் மெய்யறிவையும் அச்சமூகம் கண்டடைகிறது. அத்தகைய சொல்லாட்சிகளை அரவிந்தர் supreme poetic utterance என்று சொல்கிறார். அது ஒரு வகையான மொழிவெளிப்பாடு. சாமியாடியின் சன்னதக்குரல் போல. அந்த உணர்ச்சியும் ஞானமும் தெய்வமாகி வந்து அவன் நாவில் வெளிப்படுகின்றன. அவனை மீறிய ஒரு நிகழ்வு அது.

இந்து மெய்ஞானமரபு நான்காயிரம் ஆண்டுகளாக இரண்டு வகையான மொழிவெளிப்பாடுகளைக் கொண்டிருக்கிறது. ஒன்று கட்டற்ற கவிதைப்பெருக்காக நிகழ்வது. வேதங்களிலும் உபநிடதங்களிலும் அத்தகைய பல வரிகள் உள்ளன. இன்னொன்று மெய்யறிதலை தத்துவார்த்தமாக ஆராய்ந்து வகுத்து உரைக்கும் சொல்லாட்சிகள். உபநிடதங்களிளில், நியாய சூத்திரம் பதஞ்சலி யோகசூத்திரம் போன்ற ஞானநூல்களில் அத்தகைய ஏராளமான வரிகள் உள்ளன. இரண்டுமே நுண்சொற்களாக ஆகும் தகைமை கொண்டவை

இரண்டுவகைகளில் அவை நுண்சொற்களாக ஆகின்றன. கவிதையாக வெளிப்படும் வரிகள் தியானத்திற்குரியவை. அவற்றில் ஆராய்ந்து அறிவதற்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. நேரடியான வெளிப்பாடுகள் அவை. அவற்றுக்கு ஒரு தாளம் உள்ளது. சொல்லழகு உள்ளது. சொல்லிணைவில் தன்னியல்பாக நிகழும் இசைவு உள்ளது. சொல்லிச்சொல்லி நாம் அவற்றை நம் ஆழ்மனதுக்கு கொண்டுசெல்லவேண்டும். நம் கனவுக்குள் அவை சென்றுவிடவேண்டும்.

இரண்டாம் வகை நுண்சொல் ஒரு மெய்யறிதலை நினைவில் நிறுத்தும்பொருட்டும் சொல்லிச்சொல்லி சிந்தனையாக விரித்து எடுக்கும்பொருட்டும் உருவாக்கப்படுவது. ஞானநூல்களில் உள்ள ரத்தினச்சுருக்கமான வரையறை அது.

ஒரு சொல் திறந்தால் ஒரு பிரபஞ்சம் ஆக விரியமுடியும். ஒரு நுண்சொல் போதும், தியானம் வழியாக அதில் ஞானமனைத்தையும் திரட்டிக்கொள்ளமுடியும் என்பது நம் மரபு. அவற்றை நாம் ஆராய்வதைக் கைவிட்டு, அவற்றின்மேல் படியும் எண்ணங்கள் அனைத்தையும் உதறி அவற்றை நம் ஆழத்திற்குக் கொண்டுசென்றால் நம் சிந்தனைக்கே அறியாமல் அவை நம் உளநிலையை, நம் எண்ணப்போக்கை மாற்றுகின்றன

பதஞ்சலி யோக சூத்திரத்தில் உள்ள ‘யோக சித்தவிருத்தி நிரோத:’ என்னும் முதல் வரி ஒரு நுண்சொல். அது இரண்டாம் வகையானது. எண்ணி எண்ணி விரித்தெடுக்கவேண்டியது. சித்தத்தை நிறுத்துதல் யோகம் என்பது நேர்ப்பொருள். ஆனால் சித்தம் என்பது ஒர் அமைப்பு அல்ல ஒரு நிலைக்காத செயல்பாடு என்கிறது இந்த வரையறை. அதை நிறுத்துதல்தான் யோகம். விருத்தி என்பது தன்னிச்சையான நிகழ்வு என சிலர் விளக்குவதுண்டு. இந்த ஒருவரி குறித்து மிகமிக விரிவான விவாதங்கள் நிகழ்ந்துள்ளன.

பதஞ்சலி யோக சூத்திரத்தின் நாநூறு வரையறைகளும் இந்த முதல் வரையறையை விளக்கும்பொருட்டுதான். குருகுலங்களில் இந்த முதல்வரியை மனப்பாடம் செய்து விளக்கம் அளித்தபின் இதை தியானம் செய்ய சொல்வார்கள். தியானம் மூலம் நாமே அறியும் நம் அர்த்தமே நாம் பதஞ்சலி யோகசூத்திரத்திற்குள் செல்லும் வழி.

பிருகதாரண்யக உபநிடதத்தில் உள்ள சாந்திமந்திரம் முதல்வகையான கவித்துவ நுண்சொல்லுக்கு சிறந்த உதாரணம்

அசதோமா ஸத் கமய
தமஸோமா ஜ்யோதிர்கமய
மிருத்யோர்மா அமிர்தம் கமய :

என்னும் நுண்சொல் “தீதிலிருந்து நன்மைக்கு, இருளிலிருந்து ஒளிக்கு, இறப்பிலிருந்து பெருநிலைக்கு’ என்று மட்டுமே பொருள். எல்லா சொற்களையும்போல சில மேலதிக அர்த்தங்களும் வரலாம். ஸத் என்பதற்கு இருப்பு என்னும் அர்த்தமும் உண்டு. இன்மையிலிருந்து இருப்புக்கு என்று புரிந்துகொள்ளலாம். தீமை, இருட்டு, இறப்பு மூன்றும் சொல்லப்பட்டிருக்கும் வரிசைக்கும் நுண்மையான அர்த்தம் உண்டு.

ஆனால் இச்சொல்லாட்சியின் ஆற்றல் அதன் அர்த்ததில் இல்லை. அதன் இசையொழுங்கில் உள்ளது. அது பல்லாயிரமாண்டுகாலமாக ஞானிகளால் சொல்லப்பட்டுவருவது என்பதில் உள்ளது. இன்றும் கூட ஒர் அற்புதமான விடியலை இந்த நுண்சொல் உள்ளத்திலெழாமல் என்னால் எதிர்கொள்ள முடிவதில்லை. ஒவ்வொருமுறையும் புத்தம்புதியதாக இந்த நுண்சொல் என்னில் மலர்வதாகவே தோன்றுகிறது

இனிய ஒரு பாடல். எண்ணியிரா பொருளுடன் விரிந்துகொண்டு காலையின் பொன்வெளியை பொருள்மிக்கதாக்குகிறது. என்னென்னவோ உணர்வெழுச்சிகளை உள்ளே எழுப்புகிறது. இருள் எங்கும் என்றும் உள்ளது. தவிர்க்கமுடியாதது அது. தீமையும் இறப்பும் அவ்வாறே. ஆனால் ஒவ்வொருநாளும் ஒளி எழுகிறது. ஒவ்வொரு காலையும் ஒரு மகத்தான வாய்ப்பு. உயிர்த்தெழுவதற்கு. கதிரொளியில் பொன் எனச் சுடர்வதற்கு. அமுதமாக நிறைவதற்கு.

 

நன்றி அந்திமழை மே 2017

முந்தைய கட்டுரைசூல் –ஒரு பார்வை
அடுத்த கட்டுரைஜே.சி.குமரப்பா