வாசிப்பின் வழி

ve anparasu

அன்புள்ள ஜெயமோகன் அவா்களுக்கு,

வணக்கம். என் பெயா் வே.அன்பரசு. நான் திருச்சி மணப்பாறையில் வசித்து வருகிறேன். உள்ளாட்சித் தணிக்கைத்துறையில் உதவி ஆய்வாளாராகப் பணிபுாிந்து வருகிறேன்.

எனக்கு இலக்கிய வாசிப்பு அதிகம் இல்லை. எதை வாசிப்பது, எப்படி வாசிப்பது என்பதும் தொியவில்லை. ஆனால் ஜெயகாந்தனின் சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள் வாசித்தது உண்டு. அவை எளிமையாகவும், புாிந்துகொள்ளும்படியும் இருக்கும். அவா் பெயாின் ‘ஜெய‘ பகுதியை உங்கள் பெயரும் கொண்டிருந்ததனால் உங்கள் படைப்புகளையும் வாசித்தேன். சிறுகதைகள் வாசிக்க சுலபமாக இருந்தன. அவற்றில் வரும் கதாபாத்திரங்கள் என்னை ஆழமாகப் பாதித்தன. குறிப்பாக, கோட்டியில் வரும் ‘புமேடை‘ கதாபாத்திரம் கொடுத்த பாதிப்பு அளவிடமுடியாதது. படித்ததிலிருந்து மூன்றுநாள்கள் அதே சிந்தனைதான்.

ஆனால் நாவல்கள் ஏனோ வாசிப்பதற்கு அவ்வளவு எளிதாக இல்லை. எல்லோரும் கொண்டாடும் ‘விஷ்ணுபுரம்‘ எனக்கு கொஞ்சமும் விளங்கவில்லை. காரணமும் புாியவில்லை. தற்போது தங்களுடைய ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்‘ வாசித்து வருகிறேன்.இலக்கிய வாசிப்பில் எந்தக் கட்டத்தில் நான் இருக்கிறேன் என்பதையே இப்போதுதான் புாிந்துகொள்ள முடிந்தது. வெறும் பாடப்புத்தகம் வாசிப்பதற்கும், இலக்கியம் வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இலக்கியத்தைப் பாடப்புத்தகம்போல் படித்துவிட்டு புாியவில்லை என்பது எவ்வளவு முட்டாள்தனம்.

தினமும் உங்கள் இணையத்தில் வெளியாகும் “வெண்முரசு” வாசித்து வருகிறேன். இந்த மின்னஞ்சல் யோசித்து தட்டச்சு செய்வதற்கே எனக்கு வாா்த்தைகள் வரவில்லை. ஆனால் நீங்கள் தொடா்ச்சியாகத் தினமும் ஒரு மாமலா் எழுதுவது என்பது என்னை பிரமிக்க வைக்கிறது.

சா்மிஷ்டையின் அமைதியும், பேரரசி தேவயானியின் அதிகாரமும்

கதையை விறுவிறுப்புடன் கொண்டுசெல்கின்றன. அனுதினமும் வெண்முரசு வாசிக்காமல் ஓடுவதில்லை.

உங்களுடைய இந்த 55-வது தினத்தில் வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

அன்புடன்,

வே.அன்பரசு.

***

அன்புள்ள அன்பரசு,

இலக்கியவாசிப்பு என்பது பயிற்சியால் வருவது. மேலதிகமாகத் தேவைப்படுவது வாழ்க்கையுடன் இணைத்து அதைப்பார்க்கும் நோக்கு. வாழ்க்கையில் உள்ள நுட்பங்களை இயல்பாக கண்டடையும் நுண்ணுணர்வுள்ளவர்களுக்கு மிக எளிதாகக் கைவருவது அது

நாம் பல அறிவுத்துறைகளை பல ஆண்டுகள் கல்விநிலையங்களில் அமர்ந்து கற்கிறோம். இலக்கியம் மட்டும் அப்படியே தானாக எப்படி வரும்? இங்கே ஒருவகையான சுயகல்வி தேவையாகிறது. அந்தக்கல்வியை அடைந்தால் இலக்கியவாசிப்பெல்லாம் ஒரு பெரிய விஷயமே அல்ல. நம் வாழ்க்கையை நாம் வாசிப்பதற்கு என்ன தடை?

இந்தப்பயிற்சி என்பதுகூட சில தவறான மனநிலைகளைக் கடப்பதுதான். அதாவது நமக்கு இலக்கியம் என்பது கருத்துக்களை தெரிந்துகொள்வதற்குரியது என்றும், பொழுதுபோக்குக்கு உரியது என்றும் கற்பிக்கப்பட்டுள்ளது. அதைக் கடக்கவேண்டும். இலக்கியம் என்பது ஒரு வாழ்க்கையை கற்பனைமூலம் வாழ்வது. கருத்துக்கள் அந்த வாழ்க்கையிலிருந்துதான் உருவாகி வரவேண்டும். இலக்கியம் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு அறிவுத்துறை. ஒரு கலைத்துறை. ஆகவே அதைப் பயில்வேண்டும். பயில்வதற்கு பொறுமையும் தொடர்ந்து முயற்சி எடுத்து கற்றுக்கொள்ளும் மனநிலையும் தேவை

இலக்கியவாசிப்புக்கு அடுத்தபடியாகத் தேவையாவது ஊகமும் முன்மரபை அறிந்திருத்தலும். எந்த அறிவும் பிரத்யட்சம் அனுமானம் சுருதி என மூன்று தளம் கொண்டது. பிரத்யட்சம் என்பது நாம் நேர் அனுபவமாக அறிவது. அனுமானம் என்பது ஊகிப்பது. சுருதி என்பது வழிவழியாக வரும் அறிவு. இலக்கியவாசிப்பிலும் இம்மூன்றும் உண்டு.

நாம் நேரடியாக வாசித்து இயல்பாகத் தெரிந்துகொள்வது பிரத்யட்ச வாசிப்பு. நாம் பொதுவாகச் செய்வது இதையே. ஒரு துண்டுப்பிரசுரத்தை வாசிக்க அதுவே போதும் இலக்கியவாசிப்பு மேலதிகமக தேவையானது ஊகம். அந்தப்படைப்பில் சொல்லப்படவற்றைக்கொண்டு சொல்லப்படாதனவற்றை ஊகிப்பது. இப்படி ஒரு ஊகம் தேவை, அதுவே வாசிப்பை நிறைவடையச்செய்வது என்று தெரிந்திருந்தாலே அந்த வகையான வாசிப்பு உருவாகி வந்துவிடும். நம் வாழ்க்கையைக்கொண்டும் அதுவரை நாம் வாசித்தவற்றைக்கொண்டும் சொல்லப்பட்ட சிலவற்றிலிருந்து விடுபட்டவற்றை கற்பனைசெய்து நிறைத்துக்கொள்ளவேண்டும். அப்படிக் கற்பனைசெய்ய உதவுவது முன்மரபு. தல்ஸ்தோய் முதல், புதுமைப்பித்தன் முதல் நவீன இலக்கியவாசிப்பை நிகழ்த்தும் ஒருவருக்கு இன்றைய கதை எளிதில் புலப்படும்.

ஆகவே தொடர்ந்துவாசியுங்கள். வாசிக்கவாசிக்க வாசிப்பு தெளியும். கடைசியாக, சம்வாதம். அதுவும் அறிதலின் ஒரு வழிமுறை. அறிந்தவற்றை இணையானவர்களிடம் விவாதிப்பது. படைப்புகளை ஒப்பிட்டும் வாசிப்புகளை ஒன்றோடொன்று வாதிடச்செய்தும் விவாதியுங்கள். அதிகபட்சம் ஒருவருடம், நீங்கள் தமிழில் செல்லமுடியாத இடமென ஏதுமிருக்காது. வாழ்த்துக்கள்.

ஜெ

****

முந்தைய கட்டுரைசொல்! சொல்!
அடுத்த கட்டுரைமுதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும்