பிறந்தநாள் -கடிதங்கள்

bday dog gift2

 

இனிய ஜெயம்,

 

பிறந்தநாள் வாழ்த்துக்கள். விஷ்ணுபுரம் நாவலுக்கு இவ்வருடத்துடன் இருபது ஆண்டுகள் நிறைகிறது.  ஈரோடு கிருஷ்ணனை முதன் முதலாக சந்திக்கும்போது , ”ஒரு பயணம் கிளம்பிக்கிட்டு இருந்தோம்.அப்போ ஜெயமோகனுக்கு போன் பண்ணி இருந்தீங்க. அன்னைக்கு நீங்க பேசுனது. சார் இந்த வருடம் விஷ்ணுபுரம் வெளியாகி பத்தாவது ஆண்டு’ அப்போ பிடிச்சி இந்த கிராக் பாட்ட பாக்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன், நீங்கதானா அது ” என்றார்.

 

ஆம் ஒரு மாதிரி க்ராக்பாட் வாசகன்தான் நான் விஷ்ணுபுரத்துக்கு.  திருச்சி மலைக்கோட்டை சின்னக்கடை வீதியில் தைலா சில்க் அருகே இன்றளவும் இயங்கிக்கொண்டிருக்கும் தேவகி நூல்நிலையத்தில், பழுதுபட்ட நூல்கள் பகுதியில் [கைமாறி கைமாறி கந்தலான அந்த நூல் நிலையமே நடத்தும் லெண்டிங் லைப்ரரி நூல்] விஷ்ணுபுரம் நாவலை முதன் முதலாக கண்டெடுத்தேன். கயிரு அடையாளம் கிடந்த பக்கத்தை பிரித்து வாசித்தேன். அஜிதன் ஞான சபையை வென்று ,முதல்வனான பின் முதன் முதலாக விஷ்ணுபுர பிரஜைகளுக்கு அவன் காட்சி தரும் தருணம். அவனது அகம் அடைபட்டுப்போன பறவையாகித் தவிக்கும் தருணம். கடுமையான பேரத்துக்குப் பின் இருநூறு ரூபாய் விலையில் அந்த நூலை வாங்கினேன்.   இன்றும் அது பேசும் சில  விளங்கவே இயலா பல  ஆழ்மன சிக்கல்களை  ஆத்மீக இடர்களை, என்னால் வாசித்துக்  கடக்கப் படாமல் அந்த நாவல் தனது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.

 

அந்த நூலுடன் எனது நீண்ட நெடிய தொடர்பில்  அந்த நாவலின் அனைத்து அலகுகளையும் உள்வாங்கிக்கொள்ள நான்கு முறை வாசித்து ,எனக்கு நானே அந்த நூலுக்கு நூறு பக்க அளவில் சாவி நூல் ஒன்றினை எழுதி வைத்துக் கொண்டேன். அந்த சாவி நூலில், அத்யாயம் அத்தியாயமாக  அந்த நாவலின் சினாப்ஸிஸ்,  மடித்து அடுக்கப்பட்ட அந்த நாவலின் நேர்க்கோட்டு வடிவம், கோவிலின் ஞான அதிகாரிகள், காவல் அதிகாரிகள் வரிசை, குரு சீட வரிசை, விவாதம் கொள்ளும் தத்துவங்களின் வரிசை, அதன் பிரபஞ்ச நோக்கு, தர்க்க முறை, விஷ்ணு என்ற படிமை மீது ஊடாடிச் செல்லும் கதை வரிசை, நகர வரைபடம் அனைத்தும் அடங்கும்.

 

குழந்தை உள்ளத்தை விகசிக்க வைக்கும் அளவு கற்பனையை விரியவைக்கும், உயிர் கொண்டு இயங்கும் காட்சி சித்தரிப்புகள் அந்த நாவல் என்னை உள்ளிழுத்துக் கொண்ட முதல் அம்சம்.

 

அடுத்து அது பேசும் உறவு சிக்கல்கள் குறிப்பாக பிள்ளைத் துயர். சங்கர்ஷணன் அவன் மகன் இறந்த பிறகு அவனுக்கும் அவன் மனைவிக்கும் இடையே நிகழ்வது என நாவலின் ஒவ்வொரு உணர்வு தளமும் அதுவரை நான் வாசித்தவற்றைக் கடந்த தனித்துவமும் கொந்தளிப்பும் கொண்ட ஒன்றாக இருந்தது.

 

மூன்றாவது நெல்லையோ, கடலூரோ ,அருணை மலையோ  என் தலைமேல் உயர்ந்து நின்ற அதன் கோபுரத்துடன் என்னை இணைத்தது. நமது பாரத்தப் பண்பாட்டை உருவாக்கி எடுத்த அத்தனை ஊடு பாவுகளையும் நாடகீயமாக என் முன் விரித்து, என் வேர்களுடனான எனது தொடர்பை [முன்ஜென்ம நினைவை] இந்த நாவல்   மீட்டளித்தது.

 

நான்காவது அடிப்படையானதும் மிக முக்கியமானதும். எனது ஆத்மீகமான தவிப்பு. அது எனக்களித்த [இன்னமும் அளித்துக் கொண்டிருக்கும்] அலைக்கழிப்பு . இவற்றுக்கெல்லாம் என்ன பொருள் என்ற அலைக்கழிப்பு.  இவற்றுக்கெல்லாம் எப்பொருளும் இல்லை, பொருளற்ற வாழ்வு என்று முடங்கி என்றோ அழிந்திருப்பேன்.  விஷ்ணுபுரம் நாவலே  என் கொந்தளிப்புகளுக்கு முகம் தந்தது. ஸ்ருஷ்டி கீதம் இயற்றிய ரிஷி முதல் , முகமறியா நான் வரை கட்டி வைத்த அந்த தேடலின் சாரத்தை நான் விளங்கி கொண்டது விஷ்ணுபுரம் வழியேதான்.

 

ஆம் அன்று தொட்டு என்னுடன் விஷ்ணுபுரமும், அதனுடன் நானும் வளர்ந்து வருகிறோம். அதனூடான பயணத்தில் எத்தனை எத்தனை சாரமற்ற விமர்சனங்களைக் கண்டிருக்கிறேன். எம் ஜி  சுரேஷ்  இந்த நாவலை  கட்டுடைத்த விதம் நான் இன்றும் நினைத்து நினைத்து சிரிக்கும் ஒன்று. அவர் அந்த நாவலை கட்டுடைக்காவிட்டால் இன்றுவரை நீங்கள் ஒரு பீ ஜெ பீ ஆதரவாளர், இந்துத்துவ ஆதிக்க கருத்தியலாளர் என்பதை என்னால் கண்டு இடித்திருக்கவே முடியாது.

 

அவரையும் மிஞ்சிய நகைச்சுவை சாரு நிவேதிதா பிரபல வார இதழில் விஷ்ணுபுரம் நாவல் குறித்து நிகழ்த்திய விவாதம். [விஷ்ணுபுரம் குறித்த சாருவின் எந்த பதிவிலும் அந்த நாவலின் ஒரு நாடகீய தருணமோ, ஏன் ஒரு கதாபாத்திரத்தின் ஆழமோ கூட விவாதிக்கப்பட்டதில்லை] . மையத்தை உடைப்பதே பின்நவீனத்துவம் இந்த நாவல் விஷ்ணுபுரம் எனும் இரும்புத்தனமான மையத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இந்த நாவல் எப்படி பின்நவீனத்துவ நாவலாகும் என சிக்கி சின்னாபின்னம் ஆகும் கேள்வியை அந்த விவாதத்தில் எழுப்பி இருந்தார்.  அந்த விவாதத்தை வாசித்து முடித்ததும் நான் மனத்துக்குள் ”நாவலில் கட்டா கடைசீல விஷ்ணு புறத்தை ஜெமோ உடைச்சி கடாசிப் புட்டாரே அப்பால என்ன?” என கேட்டுக் கொண்டேன். அது போக அந்தந்த கோட்ப்பாட்டு விமர்சகர்களுக்கே பிடி கிடைக்காத அவர்களின் கோட்பாடுகளைக் கொண்டு, அவர்களுக்கே புரியாத மொழியில் விஷ்ணுபுரத்தை குடல் மாலை சூடிய பல கட்டுரைகள். எந்தப் பொருளுமின்றி காலப்புழுதியில் கரைந்து விட்ட விமர்சனத் தூசிகளை தட்டி விட்டபடி,நவீனத்துவத்தை வழியனுப்பி வைத்து , மரபுகளை மறுபரிசீலனைக்கும் ,விவாதத்துக்கும் உட்படுத்தி, காலாதீதம் கொண்டு    கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது விஷ்ணுபுரம்.

 

இந்த நாவல் கொண்டு ஒன்றிணைந்த மனங்கள் கூடி உருவாகி வந்த விஷ்ணுபுரம் இலக்கிய விருது . இந்த நாவல் போலவே ஒரு பண்பாட்டு வரலாறு.

 

அனைத்துக்கும் மேல் விஷ்ணுபுரம் நாவல் ,இன்றைய விருட்சமான வெண் முரசு நாவலின் விதை. அந்த விதையின் வீர்யமே இன்று இந்த விருட்சத்தின் ஒவ்வொரு கணுவிலும் துலங்குவது .

 

இனிய ஜெயம்,

 

உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரைப்பதன் வழியே, நீங்கள்   கண்ட விஷ்ணுபுரம் என்ற  மொழியில் வாழும் மகத்தான  அழியாக் கனவுக்கு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.

 

கடலூர் சீனு

 

அன்புள்ள சீனு,

 

குங்குமம் வார இதழ் விஷ்ணுபுரம் வெளியானதன் 20 ஆவது ஆண்டைக் கொண்டாடும் முகமாக ஒரு பேட்டியை எடுத்தது. இன்று வெளியாகியிருக்கிறது என நினைக்கிறேன்

 

ஜெ

அன்புள்ள ஜெ,
” இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.”
எனக்கு நாட்களெல்லாம் நினைவில் பொதுவாக நிற்பதில்லை.என் பிறந்த நாளே மறந்து போவது தான்.ஆனால் ஏப்ரல் மாதமென்றால் ஜெயகாந்தன்   பிறந்தநாள் மட்டும் எப்படியாவது நினைவில்  எழுந்து வந்து விடும்.அதன் பிறகு உங்கள் பிறந்த தினம் அப்படிச் சரியாக நினைவில் நின்றிருக்கிறது.இதெல்லாம் ஏதோ ஒரு உள்ளுணர்வு தான்.என் நினைவில் கலந்துவிட்ட எழுத்தாளுமைகளுக்கு என்னுள் உள்ள மரியாதை என்றே இதை நினைக்கிறேன்.வெற்று சம்பிரதாயமாக நான் இதைக் கருதவில்லை.

 

ஜேகே நல்ல நினைவுடன் இருந்த வரையில் என் தந்தையுடன் இணைந்து அவருக்கு தொலைபேசியில் ஒவ்வொரு ஆண்டும் வாழ்த்து  தெரிவித்திருக்கிறேன். அவர் உடல்நலம் குறைவதற்கு சில மாதங்கள் முன்பு ஒரு நாள் என் தந்தை தொலைபேசியில் “ஆலமரம் ஆலமரம்  … பாலூற்றும் ஆலமரம்,காலத்தின் கோலமெல்லாம் கண்டுணர்ந்து நிற்கும் மரம்” என்று பாடுவதைக் கேட்டு “என்னப்பா போன்ல பாட்டுப்பாடறீங்க என்றேன்.என் அப்பா,”ஜேகே திடீரென போன் பண்ணி ஆலமரம் பாடுடா என்கிறார்” என்றார்.ஜேகே பொதுவாக தொலைபேசியில் யாரையும் அழைக்க மாட்டார்.என் தந்தை மிக நன்றாகப் பாடுவார்.அன்று நானும் அவரிடம் பேசினேன்.எப்படியிருக்கீங்க ஜேகே என்றவுடன் அவருக்கே உண்டான உள்ளத்தைத் தொடும் அவர் சிரிப்பைக் கேட்டேன்”அது தான் அவருடன் நான் இறுதியாக பேசியது.
அவர் நினைவுடனே நீங்கள் என்றென்றும் ஆலமரம் போல் தழைக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.
அன்புடன்
மோனிகா மாறன்.
அன்புள்ள மோனிகா

ஜெகே உட்பட நான் வழிபட்ட எழுத்தாளர்கள் அனைவரும் முதுமையில் வெறும் உடல்களாக ஆகி சிலநாள் இருந்தே மறைந்தார்கள். பிறந்தநாளில் அச்சுறுத்தும் எண்ணம் இதுவே

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–81
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்- இருபதாண்டுகள்