மதிப்பிற்குரிய ஜெ,
உங்கள் அறம் சிறுகதைகள் பலமுறை வாசித்து விட்டேன், ஒவ்வொரு கதையிலும் முக்கியமான பல வரிகள் தினம் தினம் மனதில் வந்து கொண்டே இருக்கிறது, ஒரு மந்திரம் போல.
ஓலைச்சிலுவை: சாலையில் நடக்கும் போது திடீரென “நான் வேதக்காரன் ஆயிடுதேன் சாயிபே, எனக்கு ரொட்டி கொடுங்க சாயிபே, ரொட்டி போதுமா? இன்னும் நிறைய ரொட்டி வேனும், என் வீட்டுக்கு கொடுக்கனும் என் தங்கச்சிக்கு கொடுக்கனும்” என்று வாய் புலம்புகிறது. யாரோ ஒரு தந்தை தன் குழந்தைக்கு உணவு ஊட்டுவதை பார்த்தால் ” ஜீவிச்ச நாள் முழுக்க கிடைத்தது எல்லாம் பிள்ளைக்கு பிள்ளைக்கு என்று கொண்டாந்து கொடுத்த மனுஷன், மனசறிஞ்சு ஒரு வாய் கஞ்சி குடிச்சது இல்லை, நல்ல இடம் பார்த்து பொதைங்க வாழைக்கோ தென்னைக்கோ உரமாகட்டும்” என்று மனம் குழைகிறது.
மானுடப் படைப்பில் வெள்ளைக்காரன்தான் உயர் படைப்பு என்று இருந்த காலத்தில் ஒரு வெள்ளைக்கார தொரை “அய்யா மாரே அம்மா மாரே வெள்ளக்கார தொர கையெடுத்துக் கும்பிடுரேன் கிலாத்தி சாப்பிடாதிங்கோ” என்று வீடு வீடாக சென்று சொல்ல அவரை தூண்டியது எது? அவர் அறிந்த ஏசு கிருஸ்துவா?. ஏசுவே என் மீப்பரே. ஒரு பேப்பர் பேனா கிடைத்தால் “குண்டி காஞ்சவனுக்கு எல்லாம் சாமியும் கல்லாக்கும்” என்று எழுதுகிறேன்.
யானை டாக்டர்: என் வீடு காடு அருகில் இருக்கிறது நான் சிறு வயது முதல் ஆடு மேய்த்து கொண்டு அந்த காடு அருகில் இருக்கும் மலை முழுக்க சுற்றி உள்ளேன், ஆனால் எங்கும் பாலிதீன் பைகளோ மது புட்டிகளோ பார்த்ததும் கிடையாது. இப்போது காட்டுக்குள் சென்றால் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பைகள், மது பாட்டில்கள் கிடக்கின்றன. எத்தனை யானை டாக்டர் வந்தாலும் மனிதனின் மது மோகத்திற்கு முன் நிற்கமுடியாது என்று தோன்றுகிறது.
என் நண்பரின் அண்ணனை யானை அடித்து கொன்று விட்டது எனக்கு யார் மீது தவறு என்று தெரியவில்லை, யானை டாக்டர் படித்த பிறகு யானை மீது தவறு இல்லை என்று தோன்றுகிறது. மனிதர்களின் பெருக்கம் அதனால் புதிய கிராமங்கள், புதிய குடியிருப்புகள் தோன்றிவிட்டன. ஒரு வேளை நாங்கள் வசிக்கும் இடம் ஒரு காலத்தில் யானையின் இடமாக இருந்து இருக்கக்கூடும். ஏனோ யானை எங்கள் பகுதிக்கு வந்தது அதுவே கடைசியும் முதலும்.
ஒவ்வொரு முறையும் யானை இறந்த செய்தி கேட்டால் “ஒரு நாள் தமிழகத்தில் யானைகளே இல்லை என்று வரும் அப்போது மொத்த சங்க இலக்கியத்தையும் போட்டு கொளுத்த வேண்டியது தான்” என்று மனம் உங்கள் வரியை சொல்கிறது.
“இந்த தலைமுறை போல சபிக்கப்பட்ட தலைமுறை கிடையாது டாக்டர் எங்கள் முன் நிற்பது எல்லாம் வெறும் கட்டவுட் மனிதர்கள். போலியான பிம்பங்கள்” ஆமாம் உண்மைதான். “அதிகாரத்தை ரெண்டு வழியிலே மனுஷன் ருசிக்கலாம். கீழே உள்ளவங்க கிட்ட அதை செலுத்திப் பாக்கலாம். மேலே பாத்து கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிண்டே இருக்கலாம். ரெண்டுமே பெரிய. திரில் உள்ள ஆட்டங்கள்”.
அதிகாரம் செலுத்தும் வெத்து காட்டுஅதிகாரிகளை ஆடு மேய்க்கும் போது பல முறை பார்த்து இருக்கிறேன், பயங்கரமான மிரட்டல் தோற்றம். இன்றும் கூட இப்படியே தான் வருகிறார்கள், ஆடு மேய்ப்பதற்கு அபராதம் என்று காசு வாங்குகிறார்கள், அவர்களுக்கு காசு தான் தேவை. உண்மையில் காடு மீது அவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது, சொல்லப் போனால் காட்டை காசுக்கு விற்பனை செய்கிறார்கள்.
வண்டு பெரிய ஆள், புழு குழந்தை, குழந்தையை யாராவது வெறுப்பாங்களா– இப்போது புழுக் குழந்தையை பார்த்தால் நசுக்குவது இல்லை. நாய் பற்றி பைரன் கவிதை அற்புதம். (என்ன இருந்தாலும் யானையால் என் நண்பர் குடும்பம் பாதிக்கப்பட்டதால் இந்த கதையை அவனுக்கு பரிந்துரை செய்ய மனத்துணிவு இன்னும் வரவில்லை).
நூறு நாற்காலிகள்: “அம்மா மரணப்படுக்கையில் இருக்கும் தகவலை குஞ்சன்நாயர்தான் வந்து சொன்னான்” கதையின் முதல் இந்த வரி ஏனோ மனதில் தங்கி விட்டது. நூறு நாற்காலிகள் என்ன? ஆயிரம் நாற்காலிகள் இருந்தாலும் அத்தனையும் சுரண்டல் பேர்வழி அரசியல் வாதிகள் கையில் தான் இருக்கிறது, அவர்கள் ஆட்டுவிக்கும் விதம் தானே ஆடமுடியும். சாதாரண நாயாடி பெண்ணுக்கும் ஒரே தாவலில் மாவட்ட ஆட்சியர் ஆகிய அவள் பையனுக்கு இடையே நடக்கும் உறவு போராட்டத்தை நுணுக்கமாக சித்தரிக்கிறது.
பெருவலி: என்ன தான் முற்போக்கு பேசினாலும், கடைசியில் மானிட மனம் இந்த அற்ப மனித பிண்டங்களை நம்பாமல் கடவுளைத் தேடத் தொடங்கி விடுகிறது என்று மீண்டும் இந்த கதை சொல்கிறது. கோமலின் வலி நம் முதுகு தண்டையும் கூச செய்கிறது.
சோற்றுக் கணக்கு: உண்மையான மனித அறம் பற்றிப் பேசுகிறது, எத்தனை வருடம் காசு இல்லாமல் சாப்பிட்டு வந்தாலும் ஒரு நிலையில் அத்தனையும் திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்ற அறம் இருக்கிற வரை கெத்தேல் சாகிப் போல பலர் அறம் ஆற்றி வாழலாம். இந்த கதை சொல்லியும் ஒரு வகையில் கெத்தேல் சாகிப் தான்.
அறம்: எங்கோ நாம் ஏமாற்ற படும்போது ‘ என்னை எமாத்தி நீயும் உன் புள்ள குட்டியும் பொழச்சிடுவிங்கேளா? அப்படி பொழச்ச சரஸ்வதி தேவிடியானு அர்த்தம்’ என்று மனம் சொல்கிறது. ஆமாம் அறம் தான் அது அவகிட்ட இல்ல இருந்தது.
வணங்கான் : தலைப்பே கதை சொல்கிறது, அடக்குமுறையை சாட்டை கொண்டு ஒடுக்குகிறது.
கோட்டி: நீதியும், நேர்மையும் அடுத்த தலைமுறை இடமே அல்லல் பட்டு அடிபட்டு சாகிறது. அறமும் ஓழுக்கமும் இல்லாத அடுத்த தலைமுறை அவரைப் படுத்தி எடுக்கிறது.
தாயார் பாதம் :ஏனோ தாயார் பாதத்தின் அடிநாதம் எதுவென்று பிடிபடவில்லை.
மயில் கழுத்து, மத்துறு தயிர் இரண்டு மனித மனதின் நுண் உணர்வுகளை ஆழமாக அழகிய நடையில் சொல்கிறது. மத்துறு தயிர் என்ற கம்பராமாயணம் பாடல் விளக்கம் அருமை. தந்தை மகனுக்கும் உள்ள உணர்வு.
ஏன் வாசிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்பவர்களுக்கு அறம், ஓலைச்சிலுவை இரண்டு கதையை வைத்து சுருக்கமாக விளக்கி இருக்கிறேன். இதில் வரும் அறமும், உண்மை, நேர்மை எல்லாம் வாசிப்பு தான் கற்றுத் தரும் என்று சொல்வேன் பல இடங்களை மேற்கோள் காட்டுவேன்.
நான் முதலில் வாசித்த உங்கள் படைப்பு அறம் தான். அதனால் தான் என்னவோ மனதில் ஆழமாக தங்கிவிட்டது.
நன்றி…
ஏழுமலை
***