தனிப்பயணியின் தடம்

bhaira
எஸ்.எல்.பைரப்பா

அனீஷ் கிருஷ்ணன் நாயர் எழுதிய எஸ்.எல்.பைரப்பா பற்றிய இக்குறிப்பு மிக முக்கியமானது. பைரப்பாவின் வாழ்க்கை வரலாற்றைப்பற்றிய மதிப்புரையே ஒரு வாழ்க்கைச்சுருக்கக் கட்டுரை போல் உள்ளது

இச்சுருக்கம் காட்டும் சித்திரம் நமக்கு அறிமுகமானதே. ஃபைரப்பாவின் அம்மா, அப்பா உட்பட அனைவருமே அவருடைய கிருகபங்கா [ஒரு குடும்பம் சிதைகிறது – தமிழில்] ஏறத்தாழ இப்படியே சித்தரிக்கப்பட்டுள்ளனர்

ஃபைரப்பாவை தேடித்தேடி வாசித்திருக்கிறேன், தமிழிலும் மலையாளத்திலும். அவரைப்பற்றி தமிழில் முதலில் எழுதியதும், தொடர்ந்து எழுதுவதும் நான்தான். இந்திய இலக்கியமேதைகளில் ஒருவர் என ஐயத்திற்கிடமில்லாமல் சொல்வேன். ஆனால் அவர் அவருக்குத் தகுதியான அங்கீகாரத்தைப் பெறவில்லை. சொல்லப்போனால் ஞானபீடப்பரிசு அவருக்கு அளிக்கப்படவில்லை. ஆகவே நவீன இந்திய இலக்கியம் என இயல்பாகத் திரண்டுவரும் செவ்வியல்தொகையில் பைரப்பா இடம்பெறுவது அரிதாகவே உள்ளது

கர்நாடக இலக்கியச்சூழல் முற்போக்கு – நவ்யா  [நவீனத்துவ, முற்போக்கு]  குழுவினரின் பிடியில்தான் சென்ற ஐம்பதாண்டுகளாக உள்ளது. அவர்கள் அவர்களுக்கு வெளியே உள்ளவர்களை அனைத்துவகையிலும் புறக்கணிக்க, ஒழித்துக்கட்ட முயல்பவர்களாகவே செயல்பட்டுள்ளனர். யூ.ஆர். அனந்தமூர்த்தி அவருடைய அனைத்து கூர்மைகளுடனும் பெருந்தன்மைகளுடனும் அந்த மனநிலை கொண்டவராக இருந்தார் என்பதே உண்மை. அவரிடமே அதைப்பற்றி நான் இருமுறை பேசியிருக்கிறேன். ஒருமுறை சுந்தர ராமசாமியும், எம்.கோவிந்தனும் அருகிருந்தனர். முதிரா இளைஞனின் கூற்றாக அது காற்றில்போனது என்பது வேறுவிஷயம்.

கோகாக், பி.சி ராமச்சந்திர ஷர்மா, பி லங்கேஷ்,  அனந்தமூர்த்தி, பி.வி.காரந்த், கிரீஷ் கர்நாட் ஆகியோரால் ஏற்று முன்னெடுக்கப்பட்ட இந்த நவ்யா இலக்கிய அலை காலப்போக்கில் ஒரு சிண்டிக்கேட் ஆக மாறியது. காங்கிரஸ் அரசின் நல்லெண்ணத்தை வென்று இந்திய இலக்கியச்சூழலில் உள்ள பெரும்பாலான அமைப்புகளில் இடம்பெற்றது அதன் முதன்மை எழுத்தாளரான கோகாக் கல்வித்துறை உயர்பதவிகளை பெற்றார். . அனந்தமூர்த்தி சாகித்ய அக்காதமியின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். ஆங்கிலத்தில் கன்னட இலக்கியம் பற்றி எழுதிக்குவித்தவர்கள் ஏறத்தாழ அனைவருமே நவ்யா பண்டாயா இயக்கத்தினரே.  கன்னட இலக்கியவாதிகளில் நவ்யா இலக்கியமரபின் சார்பு இல்லாமல் ஞானபீடப் பரிசு பெற்றவர்கள் குவெம்பு,  தத்தாத்ரேய பேந்த்ரே இருவர் மட்டுமே.மற்றபடி கோகாக் முதல் சந்திரசேகரக் கம்பார் வரையிலானவர்கள் நவ்யா இயக்கச்சார்பு கொண்டவர்கள்தான்..

பைரப்பா ஒரு தனிப்போக்காகவே விளங்கினார். மிக அடித்தட்டிலிருந்து எழுந்து வந்தவராக இருந்தாலும் இடதுசாரிகளின் கோஷங்கள் அவரை ஈர்க்கவில்லை. அவருடைய அணுகுமுறை தத்துவம் மெய்யியல் சார்ந்ததாகவும் அதேசகயம் கறாரான யதார்த்தவாத நோக்கு கொண்டதாகவுமே இருந்தது. ஆகவே அவர் தொடர்ந்து நவ்யா, பண்டாயா, தலித் இலக்கிய இயக்கத்தவரால் வலதுசாரி என பழிக்கப்பட்டார். எங்கும் புறக்கணிக்கப்பட்டார்

ஆனால் ஆச்சரியமென்னவென்றால் பைரப்பா கர்நாடகத்தின் பிராமண சமூகத்தின் உறைநிலையை, அவர்களின் மூடநம்பிக்கைகளை, அங்குள்ள மடங்களின் பிற்போக்குத்தனத்தை கதைகளிலும் கட்டுரைகளிலும் மிகமிகக் கடுமையாக விமர்சித்தார். உண்மையில் அனந்தமூர்த்தியோ அல்லது நவ்யா இயக்கத்தவரில் எவருமோ பைரப்பா அளவுக்கு கடுமையாக சாதிமரபையும் மத அமைப்பையும் விமர்சிக்கவில்லை.

நான் பைரப்பா பற்றிக் கேள்விப்படுவதே அவருடைய வம்சவிருக்‌ஷா நாவலை ஒட்டி உருவான உக்கிரமான வெறுப்புப் பிரச்சாரம் வழியாகவே. அது பிராமணர்களின் ஆசாரவாதம் என்பது எத்தகைய உள்ளீடற்ற மூடநம்பிக்கை என்றும், அது மெய்யான ஆன்மீகத்திற்கு எப்படி முற்றிலும் எதிரானது என்றும் காட்டும் நாவல் [அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா பைரப்பாவின் வம்சவிருக்‌ஷா  ஆகியவற்றை ஒப்பிட்டு நான் எழுதியிருக்கிறேன்]  அவருடைய அத்தனை கதைகளும் எண்பதுகளில் ஆசாரவாதிகளின் வெறுப்பையும் வசையையும் பெற்றன. மறுபக்கம் நவீனத்துவராலும் அவர் வசைபாடப்பட்டார்.

பைரப்பா கடைசிக்காலத்தில் இந்துத்துவ சக்திகளின் அங்கீகாரத்தைப் பெறத் தொடங்கினார். அவர் திப்புசுல்தானின் மதவெறியை அம்பலப்படுத்தி எழுதிய ஆய்வுக்கட்டுரைகள், கர்நாடகத்தில் நிகழும் இஸ்லாமிய அடிப்படைவாத எழுச்சியை பின்னணியாகக் கொண்டு அவர் எழுதிய  ஆவரணா என்னும் நாவல் போன்றவை அவர்களால் ஏற்கப்பட்டன. அந்நூல்கள் வழியாக அவர் இன்று அறியப்படுவது அவருக்குப் பெருமைசேர்ப்பது அல்ல. ஆவரணா கலைரீதியாக மிகமிக குறைவுபட்ட ஆக்கம். இன்றும் வம்சவிருட்சா போன்றவை தீண்டப்படாத நாவல்கள்தான். இன்றும் அவர்மீது உச்சகட்ட கசப்பு பொழியப்படுகிறது.

பைரப்பா சரியாக வாசிக்கப்பட இன்னும் காலமாகும். எழுத்தாளனின் மறைவுக்குப்பின்னரே அவன்மீதான கோபதாபங்கள் குறைகின்றன. பின்னர் அவன் மீண்டும் உயிர்த்தெழுகிறான்.

எஸ் எல் ஃபைரப்பா

பைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது

விருதுகள் அமைப்புக்கள்

யு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’

அனந்தமூர்த்தியின் அரசியல்

வம்ச விருட்சம்

ஞானபீட விருதுகள்
ஞானபீடம்

மொழியாக்கம்

மொழியாக்கம் பற்றி

*

தலைகொடுத்தல்

உரையாடல்கள்

முந்தைய கட்டுரைதியடோர் பாஸ்கரன் – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–85