மலையாள இயக்குநர் பரதனுக்கும் அவருடைய திரைக்கதையாசிரியர் ஜான் பால் அவர்களுக்கும் இடையேயான உறவு முழு வாழ்நாளும் நீண்ட ஒன்று. பூசல்களும் பேரன்புமாக. மிக அபூர்வமாகவே அத்தகைய உறவுகள் அமைகின்றன. பரதன் ஜான் பால் மாஸ்டரைவிட நான்கு வயது மூத்தவர். ஜான் பால் அவர்களை நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்தித்தேன். நாங்கள் இணைந்து ஒரு படம் எழுதுவதாக இருந்தது.
நான் சினிமாவில் மட்டுமல்ல இதுவரையிலான தனிவாழ்க்கையில்கூட நேரில் சந்திக்கநேர்ந்த மனிதர்களில் ஜான் பால் மாஸ்டர் மிக மிக அபூர்வமானவர். சில மனிதர்கள் இயல்பிலேயே அன்பில் கனிந்தவர்கள். நேர்நிலையான அதிர்வுகளை மட்டுமே கொண்டவர்கள். சந்தித்த ஒவ்வொருவரின் நெஞ்சிலும் நீங்காத நினைவாகப் பதிபவர்கள். ஜான் பால் மாஸ்டருடனான என் நாட்கள் அனைத்துமே இன்றும் நினைத்தாலே மனம் மலரும் நாட்களாக நீடிக்கின்றன.
ஜான் பால் மாஸ்டரின் மனைவி அரிய நோய் ஒன்றுக்கு ஆட்பட்டு சில ஆண்டுகள் வேலூர் மருத்துவமனையில் இருந்திருக்கிறார்கள். அன்றெல்லாம் வேலூரிலும் சென்னையிலுமாக அலைந்து ஜான் பால் மாஸ்டர் படங்களுக்கு எழுதியிருக்கிறார். ஆண்டுக்கு மூன்றுபடங்கள்கூட வெளிவந்திருக்கின்றன. அந்த மனஅழுத்தத்தால் தைராய்ட் பாதிக்கப்பட்டு அவர் உடல் எடை கூடத் தொடங்கியது. இருநூற்றைம்பது கிலோ எடை வரைக்கூட சென்றிருக்கிறார். அறுவைச்சிகிழ்ச்சை செய்தபின் வேறுபல உடல்நிலைச்சிக்கல்கள். இன்றும் எடை மிக அதிகம்.நடப்பதும் அமர்வதுமே கடினம்.
ஆனாலும் அவர் முகம் எப்போதுமே மலர்ந்திருக்கும். பேச்சில் நகைச்சுவை எழுந்துகொண்டே இருக்கும். நினைவுகள் இலக்கியம் சினிமா என விரிந்துசெல்லும். ஜான் பால் மாஸ்டரைப்பற்றி நெகிழ்ந்து பேசாதவர்களை நான் பார்த்ததில்லை. அவரிடமிருந்து உதவி பெறாதவர்கள் குறைவு. விடைபெறும்போதெல்லாம் நான் ஜான் பால் மாஸ்டர் கால்களைத் தொட்டு வணங்காமலிருந்ததில்லை.
ஜான் பால் மாஸ்டரின் தந்தை பௌலோஸச்சன் புதுச்சேரி புகழ்பெற்ற கத்தோலிக்க இறையியலாளர். இன்றும் கேரள குருமார்களுக்கான பயிற்சிநிலையங்களில் அவர் எழுதிய நூல்களே பாடமாக உள்ளன. ஜான் பால் இளமையில் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். திரைப்படச் சங்க இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். சிறுகதைகளும் சிறிய படங்களுக்கான திரைக்கதைகளும் எழுதினார்.
கனரா வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது பரதனின் நட்பு கிடைத்தது. 1980ல் அவர் எழுதி பரதன் இயக்கிய சாமரம் வெளிவந்தது. பரதன் 1975ல் பிரயாணம் வழியாக .அறிமுகமாகியிருந்தார். முப்பதாண்டுகளுக்குப் பின்னரும்கூட பேசப்படும் படமாக உள்ளது அது. தொடர்ந்து ஜான் பால் மாஸ்டர் பரதனுக்காக திரைக்கதைகள் எழுத ஆரம்பித்தார். அவர்களின் கூட்டு மலையாளத் திரையுலகம் என்றும் மறக்காத பல படங்களை உருவாக்கியது. 1997ல் வெளிவந்த மஞ்சீரத்வனி வரை பரதனுக்காக 15 படங்களை எழுதியிருக்கிறார்.
மொத்தம் நூறு படங்களுக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் ஜான் பால். ஆனால் இன்னொரு திரைக்கதையாசிரியரான எம்.டி,வாசுதேவன்நாயரின் ரசிகன் அவர். எம்.டி.வாசுதேவன் நாயர் இயக்கிய ஒரு செறு புஞ்சிரி படத்தை ஜான் பால் மாஸ்டர்தான் தயாரித்தார்.
நான் ஜான் பால் மாஸ்டர் பற்றியும் அவருக்கும் பரதனுக்குமான உறவைப்பற்றியும் பிறிதொரு தருணத்தில்தான் விரிவாக எழுதவேண்டும். மாஸ்டர் என்னிடம் பரதன் பற்றி விரிவாக உணர்ச்சிகரமாகப் பேசியிருக்கிறார். அவர் நினைவுகளைத் தொகுத்து ஒரு நூலாகவும் வெளியிட்டிருக்கிறார். [தமிழில் வெளிவரவேண்டிய நூல்] அதில் ஒரு நிகழ்ச்சி.
பரதனின் தாய்மாமன்தான் புகழ்பெற்ற இயக்குநரான பி.என்.மேனன். அவர் இயக்கிய ஓளமும் தீரமும், செம்பருத்தி போன்ற படங்கள் பெரிய அலைகளை உருவாக்கியவை, இன்றும் விரும்பிப்பார்க்கத்தக்கவை. பின்னாளில் குடிப்பழக்கம் அவரை ஆட்கொண்டது. ஆனால் இறுதிவரை கலை இயக்குநராகவும் சுவரொட்டி வடிவமைப்புக் கலைஞராகவும் சினிமாவுக்குள் இருந்தார். கடம்பா, மலைமுகளிலே தெய்வம் போன்ற கலைப்படங்களை இயக்கினார்
இளமையிலேயே ஓவியக்கலையில் ஈடுபாடு கொண்டிருந்த பரதன் சென்னைக்கு வந்து பி.என். மேனனுடன் தங்கினார். அங்கே அவருக்கு கலை உதவியாளராகப் பணியாற்றினார். மாமனுக்கும் மருமகனுக்கும் நாள்தோறும் அடிதடி. குடிதான். ஆகவே கிளம்பி வேலைதேடி அலைந்தார். அப்போது ஒளிப்பதிவாளர் வின்செண்ட் மலையாளத்தின் முதன்மையான இயக்குநர். கே.எஸ்.சேதுமாதவன் வின்செண்ட் இருவரும்தான் மலையாளத் திரையின் எக்காலத்திற்கும் முதன்மைகொண்ட கிளாஸிக் படங்கள் சிலவற்றை இயக்கியவர்கள்.
வின்செண்ட் உதயா ஸ்டுடியோவுக்காக படம் ஒன்றை இயக்கப்போவதாக பரதன் அறிந்தார். வின்செண்ட் வரும்நேரம் சென்னையில் எ.வி.எம்.ஸ்டுடியோவுக்கு சென்று காத்து நின்றார். டென்னிஸ் ஆடியபின் வெள்ளை அரைக்கால் சட்டையுடன் வின்செண்ட் காரில் வந்து இறங்கினார். மெலிந்த உடலும் பெரியதலையுமாக நின்றிருந்த 26 வயதான இளைஞனாகிய பரதன் சென்று வணங்கினார். என்ன வேண்டும் என்று கேட்ட வின்செண்ட் மாஸ்டரிடம் தன் ஓவியங்களை நீட்டி சினிமாவில் கலை இயக்குநராக ஒரு வாய்ப்பு கொடுக்கும்படி பரதன் கோரினார்.
வின்செண்ட் மாஸ்டர் ஓவியங்களை அலட்சியமாக புரட்டிப்பார்த்தார். பதினெட்டு படங்கள். மொத்தம் மூன்றுநிமிடம்கூட அவற்றை பார்க்கவில்லை. திருப்பிக்கொடுத்துவிட்டு “நீ சென்று உதயா அப்பச்சனைச் சென்றுபார். நான் சொல்கிறேன்” என்றபின் செட்டுக்குள் சென்றுவிட்டார். பரதனுக்கு ஏமாற்றம். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தும் வயது அல்ல.
உதயா ஸ்டுடியோவில் ஏதேனும் வேலைக்குச் சொல்லியிருப்பார் போலும் என எண்ணி பரதன் மறுநாள் சாவகாசமாகச் சென்று உதயா ஸ்டுடியோ அதிபர் குஞ்சாக்கோவின் தம்பி அப்பச்சனைச் சந்தித்தார். “எங்கே போனாய்? உன்னை எங்கள் படத்தின் கலை இயக்குநராக ஆக்கவேண்டும் என்று வின்செண்ட் மாஸ்டர் சொல்கிறார். அட்வான்ஸ் வாங்கிக்கொள். உடனடியாகக் கிளம்பு. அங்கே எர்ணாகுளத்தில் கலை அமைப்பு வேலை நடக்கிறது. பதினைந்துநாளில் படப்பிடிப்பு தொடங்கவேண்டும்” என்றார் அப்பச்சன்.
பரதன் எர்ணாகுளத்தில் உதயா ஸ்டியோவுக்குச் சென்றார். அங்கே அவர்கள் எடுக்கவிருந்த கந்தர்வக்ஷேத்ரம் படத்திற்கான செட் அமைப்புகள் நடந்துகொண்டிருந்தன. அனைத்தையும் மரத்திலும், களிமண் வார்ப்பிலும் நாடகசெட் போல அலங்காரமாக செய்வது உதயா ஸ்டுடியோவின் வழக்கம். பரதன் அனைத்தையும் மாற்றினார். நம்பகமான மிக எளிய செட்டுகளை அமைத்தார். செயற்கை நிலவு. உண்மையான மரங்கள். எளிதில் இடம்மாற்றத்தக்க பொருட்கள்.
‘இது எப்படி சினிமாவுக்குப் போதும்? மாஸ்டர் ஏதோ தெரியாமல் சின்னப்பையனை அனுப்பிவிட்டார்’ என்றனர் தயாரிப்புநிர்வாகிகள். ”மாஸ்டர் வந்ததும் பையனை கிழித்து போடப்போகிறார்’ என எதிர்பார்த்தார்கள். ஆனால் வின்செண்ட் மாஸ்டர் வந்து செட் அமைப்புகளை பார்த்ததுமே முகம் மலர்ந்தார். “சினிமாவுக்கு இதுதான் தேவை. சினிமாவுக்குத் தேவையானவை பொருட்கள் மட்டும் அல்ல, அவற்றுக்கிடையேயான இடைவெளியும்கூடத்தான். இதுதான் சினிமா தெரிந்தவன் போட்ட செட்” என்றவர் பரதனை அழைத்து “நீ ஒருநாள் இயக்குநர் ஆவாய்” என்றார்
1972 ல்முதல் 1975 ல் தன் முதல்படத்தை இயக்குவதுவரை பரதன் கலை இயக்குநராகத்தான் இருந்தார். அவருக்கு உதயா ஸ்டுடியோ வளாகத்தில் நிரந்தரமாக ஒரு வசிப்பிடமும் ஸ்டுடியோவும் அளிக்கப்பட்டிருந்தது. அவர்களின் படங்களுக்கு அவர் கலையமைத்திருக்கிறார். தன் படங்களுக்கு கலையமைப்பும் சுவரொட்டி வடிவமைப்பும் எப்போதும் அவர்தான்
கந்தர்வக்ஷேத்ரம் படத்தை இப்போதுதான் பார்த்தேன். முக்கியமான படம். தகழி சிவசங்கரப்பிள்ளையின் கதை. தோப்பில் பாஸி திரைக்கதை. இளவயதிலேயே உளச்சிக்கலுக்குள்ளான பெண் தன் கனவுலகில் கந்தர்வனை சந்திக்கிறாள். பெண்ணின் காமத்தின் நுட்பமான ஒரு குறியீட்டுச் சித்திரமாகவும் காணவேண்டிய படம்.
வின்செண்ட் மாஸ்டரின் அற்புதமான ஒளிப்பதிவு. இரவு,நிலவு காட்சிகளுக்கு கறுப்புவெள்ளை அபாரமான அழகை அளிக்கிறது. சினிமாவில் வண்ணம் வந்ததுமே இல்லாமலானது இரவின் அழகுதான். அதை என்னென்ன வகையிலோ முயன்றும்கூட கொண்டுவரவே முடியவில்லை. அன்றைய ஒளிவாங்குதன்மை குறைந்த படச்சுருளில் அன்றிருந்த விளக்குகளைக் கொண்டு வின்செண்ட் மாஸ்டர் உருவாக்கியிருக்கும் காட்சிகளின் அழகை ஒருவகை இழப்புணர்வுடன்தான் நோக்கிக் கொண்டிருந்தேன்.
பின்னாளில் புகழ்பெற்ற பரதன் டச் அதன் தலைப்புகளிலேயே தொடங்குகிறது. அக்காலத்திலேயே நவீன ஓவியங்கள் முகப்புப் படங்களாக அமைந்துள்ளன. மலையாள அலங்கார எழுத்துக்கள் பரதனுக்குப்பின்னர்தான் இந்த வடிவம் கொண்டன. கலையமைப்பு அவருக்கே உரிய எளிமையும் நம்பகத்தன்மையும் கொண்டது.
படத்தில் ஒரு பாடல். மலையாளத்தின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று இது. இதில் கைதொடுகை, கையின் அழைப்பு என்னும் மையக்கரு துருத்தித் தெரியாமல் ஓடுவதை அன்றுகூட அதிகம்பேர் கவனித்திருக்க மாட்டார்கள். அதை எப்படி அன்றைய நிலையில் எடுத்தார்கள் என்று இன்று ஒளிப்பதிவாளர்கள் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். நல்ல இயக்குநர் படங்களை ஒருவகையில் தனக்காகத்தான் எடுக்கிறார். என்றோ எவரோ பார்ப்பார்கள் என நம்பி.
ஜான் பால் மாஸ்டர் சொன்ன நிகழ்வுகளை அப்பாடலுடன் இணைத்து எண்ணிக்கொண்டேன். அதில் ஒரு புனைவுக்குரிய அழகுடன் இருப்பது ஒரு கலைஞனை பிறிதொரு கலைஞன் அடையாளம் கண்டுகொள்ளும் இடம்தான்.
.
===========================================================================================
முழுப்படம் கந்ந்தர்வக்ஷேத்ரம்
https://www.youtube.com/watch?v=FkgWmAOaW54
==========================================
பழைய கட்டுரைகள்
காமத்தின் கலை, பரதனின் நினைவில்…
பத்மராஜனுடன் ஓர் உரையாடல்
கரைகாணாக்கடல்