மலம்- கடிதம்

அன்புள்ள ஜெ..

மலம் கட்டுரையில் நீங்கள் கொடுத்த இணைப்பை படித்தேன்..[.‘மலம்’ ] எனக்கு அது சாதியக் கட்டுரையாகத் தோன்றவில்லை.. சுஜாதா போல , மாற்றுப்பார்வையை அவரது நடையில் சொல்லிப்பார்க்கும் அசட்டு எழுத்தாகவே தோன்றியது

 

சுஜாதாவை ரசிக்கும் பலர் , அவரது பாணி என அவர்களாகவே நினைத்துக்கொண்டு , அவரைப்போல எழுத முயல்கிறார்கள்..

செய்யலாமா என கேட்டால் , லாமே என பதில் அளிப்பது , போன் டயலினேன் , அவனுக்கு மெயிலினேன் , வாட்ஸ்ப்பினான் ,


ங்
கி’
னா
ன்

என்றெல்லாம் எழுதுவதுதான் சுஜாதா என நினைத்துக்கொண்டு இப்படி எழுதுகிறார்கள்.. இதே நினைப்புள்ள அவர்களது நண்பர்கள் , சுஜாதா மாதிரியே எழுதுறீயே என உசுப்பேத்தி விட , இதை பாராட்டாக எடுத்துக் கொண்டு அதை தொடர்கிறார்கள்

சுஜாதாவைப் பொறுத்தவரை தன் மத சாதி நம்பிக்கைகளை வெளிப்படையாக முன் வைக்காதவர் ..இன்னும் சொல்லப்போனால கடவுள் நம்பிக்கை இல்லாதவர் போல காட்டிக்கொண்டவர்

இருபதில் கம்யூனிசம் பேசாதவனும் , அறுபதில் ஆன்மிகம் பேசாதவனும் உலகில் இல்லை என்கிறார்களே என்ற கேள்விக்கு இருக்கிறேனே என பதில் அளித்தவர் அவர்

ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் அப்படி ஒன்றும் மனிதர் அல்லர் என்பதை அவருடன் நேரில் பழகிய உங்களைப் போன்றோர் அறிவீர்கள்

பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற கருத்து அவருக்கு உண்டு.

ஆனால் அவர் எழுத்து , அவர் நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் ஆயுதமாக இல்லாமல் , அவர் அறிவு சார்ந்த தேடலை வெளிப்படுத்தும் ஆயுதமாகவே இருந்தது

சுஜாதாவின் வெற்றிக்கு என்ன காரணம் என புரியாமல் அவரை அரைகுறையாக போலி செய்யும் சில ஃபேக் எழுத்தாளர்கள் எழுதும்போது மேற்கண்ட கட்டுரை போன்ற விபத்துகள் நிகழ்கின்றன..

இதை எழுதியவர் , சுஜாதா இப்படித்தான் எழுதி இருப்பார் என நினைத்தே இப்படி எழுதி இருப்பாரே தவிர , வேறு உள் நோக்கம் இருந்திருக்காது

சுஜாதாவின் நிழல்கள் இவர்கள்.. ஒரு நிழலுக்கு நீங்கள் கொடுத்த முக்கியத்துவம் சற்று அதிகம்தான்…

அன்புடன்

பிச்சைக்காரன்

 

அன்புள்ள பிச்சைக்காரன்,

அக்கட்டுரைக்கு நான் எழுதிய கண்டனத்துக்கு கண்டனம் தெரிவித்து அக்கட்டுரைக்கு  ஆதரவாக எழுதுபவர்களின் குரல்களை மட்டும் கவனியுங்கள், அக்கட்டுரையைப்பற்றி நான் சொன்ன அனைத்தும் முழுமையான உண்மைகள் என்பதற்கு அதுவே சான்று

ஓர் அத்வைதியாக நான் சடங்குகளில் நம்பிக்கை அற்றவன். என் தந்தைக்கான சடங்குகளையே செய்தவன் அல்ல. ஆலயவழிபாடுகளிலும் பூசைகளிலும் கூட ஈடுபடுவதில்லை. ஆனால் அவற்றைப்பற்றிய என் தரப்பை நான் வலியுறுத்துவதில்லை. நான் சொல்வது பொதுத்தரப்பை மட்டுமே.

ஆசாரங்களை மீட்டெடுப்பதென்பது சமீபகாலமாக வலுவடைந்துவரும் குரல். இது ஒரு தனிக்குரல் அல்ல. ஒரு வைணவ உபன்யாசகர் தீண்டாமை உட்பட அனைத்தையும் வலியுறுத்தும் வலுவான சாதியத் தரப்பாக இன்று புகழ்பெற்றுவிட்டிருக்கிறார். பல்லாயிரம் மாணவர்கள் அவருக்கு இன்று இருக்கிறார்கள். உண்மையில் அவருடைய ஓர் உள்வட்டபேச்சின் இணைப்பாகவே இக்கட்டுரை எனக்கு ஒரு வைணவ நண்பரால் அனுப்பப்பட்டது.

இக்குரலை முதன்மையாக, வன்மையாகக் கண்டிக்கவேண்டியவன் நான். ஏனென்றால் இந்து ஞானமரபின் மையத்தரிசனங்களை முன்னிறுத்தி வலுவாகப்பேசிவருகிறேன். அவற்றை ஆசாரங்கள், நம்பிக்கைகள், அமைப்புகளுடன் இணைத்துநோக்கவேண்டியதில்லை என்று வாதிட்டுவருகிறேன்.

இந்தக்குரலை இங்குள்ள இந்துவெறுப்பாளர்கள் வரவேற்பார்கள். ஏனென்றால் இந்துமரபு குறித்து அவர்கள் சொல்லும் அனைத்துக்கும் இது ஆதாரமாக அமைகிறது. இதை நிராகரிக்காமல் நான் முன்வைக்கும் மெய்மையின் தரப்புகளை என்னால் பேசமுடியாது.

நான் பேசுவது இந்துமெய்மை மரபின் கொள்கைகளை இந்த சாதியப்பதர்களிடமிருந்து காக்கவே. திருக்குலத்தோரை அணைத்துக்கொண்ட ராமானுஜரை இந்தச்சாதிவெறியர்களின் ஆசாரவாதங்களில் இருந்து விலக்காமல் பேசுவது கடினம். திரும்பத்திரும்ப இந்துமெய்ஞானத்தை சாதியாசாரமாக மட்டுமே கண்டு முன்வைக்கும் ஒரு கும்பலைத்தான் விவேகானந்தர் காந்தி நாராயணகுரு முதல் அனைவரும் எதிர்கொள்ளநேர்ந்தது

ஜெ

8

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் இந்தக் கட்டுரையின்( http://www.jeyamohan.in/97425#.WPZq44grLIU ) தலைப்பையும் படங்களையும் பார்த்து ஒரு நிமிஷம் திகிலடைந்தேன்; உங்கள் அருவருப்பின் குறியைப் படித்து ஆச்சரியம் அடைந்தேன் – நீங்கள் எந்த மனப்பான்மையை கடுமையாக எதிர்க்கின்றீர்களோ , அதே மனப்பான்மையை தீவிரமாக ஒரு வார்த்தையில் வெளிப்படுத்தியுள்ளீர்கள் . பரிசுத்தவாதம் , ஆங்கிலத்தில் – ப்யூரிடேனிசம் எனப்படுவது , தன் சொந்த தூய்மையிலும் அதற்கு மாறானதை அருவருப்புடன் பார்ப்பதிலும் உள்ளது. தனிவாழ்வுதூய்மையையும், அதே சமயம் பொது , கூட்டு வாழ்வின் துப்புரவில் அக்கறையின்மையும் நம் இந்திய மரபு கற்றுக்கொடுப்பவை . இது கலாசாரத்தில் பல இடங்களில் வருவது. உங்களுக்கு “கொள்ளுத்தாத்தாக்களின் காலகட்டத்தைய மனநிலை” அருவருப்பாக இருக்கின்றது, ‘தனிதமிழ்’ ஆர்வலர்களுக்கு ‘மொழிக்கலப்பு’ அருவருப்பாக உள்ளது ; பலருக்கு பிறஜா தி அல்லது மத ஆசாரங்களோ, கருத்துக்களோ  அருவருப்பை கொடுக்கின்றன . படிப்பும் , நகரவாழ்க்கையும் அவ்வளவு சீக்கிரம் இந்த அருவருப்புகளை நீக்கப்போவதில்லை. அருவருப்பின் காரணிகள்தான் மாறுகின்றன

அன்புடன்

வன்பாக்கம் விஜயராகவன்

அன்புள்ள விஜயராகவன்,

உங்கள் ஒவ்வாமை புரிகிறது. நான் எழுதியதற்கும் நீங்கள் எடுத்துக்கொண்டதற்கும் தொடர்பில்லை. நான் சொல்லவந்ததை முடிந்தவரை திரிக்க முயல்கிறீர்கள். பிறிதொருவகையில் உங்களால் செயல்படமுடியாதென நான் அறிவேன். என் கணிப்பில் இவ்விஷயத்தில் எப்படி நடந்துகொள்வார்கள் என நான் எண்ணிய எவருமே மாறாக நடந்துகொள்ளவில்லை.

முன்னரும் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உங்கள் அயல்நாட்டுவாசம், உங்கள் கல்வி எதுவுமே உங்களுக்குள் இருக்கும் சாதியவாதியை ஒன்றும் செய்யவில்லை. உங்கள் விரிந்தவாசிப்பு, உழைப்பு அனைத்தும் உங்கள் சாதியக்குரலை நிறுவும்பொருட்டு பொதுவெளியில் களமாடவே பயன்படுத்தப்படுகிறது. இந்த மாபெரும் வீணடிப்பு சிலசமயங்களில் அளிக்கும் துணுக்குறல் சாதாரணமானதல்ல

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–82
அடுத்த கட்டுரைதேவதேவனும் நானும்