மலமறுத்தல்

mask

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

வணக்கம்.

‘மலம்’ படித்தேன்.சற்று அளவுக்கு அதிகமாகவே ‘பொங்கிவிட்டீர்கள்’ என நினைக்கிறேன்!.உண்மையான சுத்தம் சார்ந்த ஆச்சாரத்தை பேணுவதில் தவறில்லையென்றே கருதுகிறேன்.(அதை முடிந்தவரை கடைபிடிப்பவர்களையும் அறிவேன்),அதே நேரத்தில் உங்களின் பெரும்பாலான வைணவ ஆலயங்களின் மடப்பள்ளிகளை பற்றிய அவதானிப்பு நூற்றுக்கு நூறு சரி.

அன்புடன்,

அ.சேஷகிரி.


அன்புள்ள சேஷகிரி,
தவறான கருத்து வேறு ஆபத்தான கருத்து வேறு. ஆபத்தான கருத்து என்பது அடிப்படையில் மானுடவளர்ச்சிக்கே எதிரானது. ஒட்டுமொத்த மானுடச்சிந்தனையை எதிர்ப்பது. இன்று ஒருவர் தீண்டாமையை ஆதரித்து எழுதினார் ‘அது அவரது கருத்து நான் மறுக்கிறேன்’ என்பது அதற்கான பதிலாக இருக்கமுடியாது

சுத்தத்தை எவரும் வேண்டாம் என்று சொல்வதில்லை. சொல்லப்போனால் சுத்தம் குறித்த எண்ணம் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே செல்லும் ஒன்று. அதாவது. ஒருவர் எந்த அளவுக்கு நவீனமானவராக ஆகிறாரோ அந்த அளவுக்கு சுத்தம்குறித்த விழிப்புணர்ச்சி கொண்டவராவார்

சுத்தம் என்னும் இன்றைய கருதுகோள் நவீன அறிவியலால் உருவாக்கப்பட்டது என்பதையாவது நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். சுத்தம் குறித்த தன்னுணர்வு என்றும் உள்ளது. ஆனால் பாக்டீரியாக்கள் வைரஸ்கள் குறித்த சித்திரம் நவீன அறிவியலில் இருந்து நம்மை வந்தடைந்தது. மேலும் நவீன காலகட்டத்தில் நாம் பலவகையான சூழல்களில் வாழும் வாய்ப்பு வந்தபோது சுத்தம் பற்றிய எண்ணத்தை மேலும் மேலும் வகுத்துக்கொண்டிருக்கிறோம்

இக்கோணத்தில் அக்கட்டுரையாளர் செய்யும் திரிபுகளைப் பாருங்கள். ஒன்று சுத்தம் என்பதை பழைமையுடன், மரபுடன் பிணைக்கிறார். நவீன காலம் தூய்மைக்கு எதிரானது, தூய்மை அழிந்துகொண்டிருக்கிறது என்னும் சித்திரத்தை உருவாக்குகிறார். இரண்டாவதாக, சுத்தமும் ஆசாரமும் ஒன்று என்கிறார்..

ஆசாரம் என்பது சுத்தத்துடன் தொடர்புடையது அல்ல- அது அடையாளத்துடன் தொடர்புடையது. எந்தவகையான அடையாளமும் தம்மை தனித்துப் பிரித்துக்கொள்வதிலேயே சென்று முடியும். மிகையான ஆசாரம் மிகையான தனிமைப்படுத்தலாக ஆகும்.

சென்றகாலங்களில் வெவ்வேறு சாதிசார்ந்தும் தொழில்சார்ந்தும் வட்டாரங்கள் சார்ந்தும் ஆசாரங்கள் வரையறுக்கப்பட்டன. அவற்றை கடைப்பிடிக்கவேண்டும் என்னும் சமூகக் கட்டுப்பாடு இருந்தது. அதனடிப்படையில் உயர்வுதாழ்வுகள் உருவாக்கப்பட்டன. இழிவுகள் கற்பிக்கப்பட்டன.

அந்தகாலமே வேறு. அன்று மனிதர்கள் தங்கள் மிகச்சிறிய வட்டத்திற்குள் வாழ்ந்தனர். இருநூறாண்டுகளுக்குமுன் ஒரு பிராமணர் பிராமணரல்லாத ஒருவரை சந்திப்பதே வாழ்நாளில் அரிது என்னும் நிலை இங்கே இருந்தது. அன்றைய வாழ்க்கைமுறை சார்ந்தது ஆசாரம் என்பது

நவீன காலகட்டம் என்பது வாழ்க்கையின் எல்லைகளை திறந்துகொண்டே இருக்கிறது. நேர்வாழ்க்கையிலும் சிந்தனைகளிலும். அந்த புதிய யுகத்தை எதிர்கொள்ள பெருந்தடையாக இருந்தவை நூற்றாண்டுக்கால பழைமைகொண்ட ஆசாரங்கள்.

சென்ற நூற்றாண்டின் இந்திய மறுமலர்ச்சி என்பது ஆசாரங்களுக்கு எதிரான கிளர்ச்சியாகவே தொடங்கியது. குடுமியை வெட்டிக்கொள்வதில் தொடங்கி பெண்கள் கல்விகற்பது வரை அனைத்தும் ஆசாரத்தின் பெயரால் எதிர்க்கப்பட்டன. காஞ்சி சங்கராச்சாரியாரின் எழுத்துக்களைப்பார்த்தால் அவர் அத்தனை மாற்றங்களையும் ஆசாரத்தின் பெயரால் எதிர்ப்பதைக் காணலாம். மற்ற மடாதிபதிகள் அதிகம் எழுதியதில்லை, எழுதியிருந்தால் அவர்களும் அதைத்தான் சொல்லியிருப்பார்கள்.

இந்தியச்சூழலில் நவீனகாலகட்டம் நமக்கு பள்ளி, சாலை, ரயில், உணவகம் போன்ற பொது இடங்கள் உருவாகிவருவதனூடாகவே பிறந்தது. இந்த ஒவ்வொரு இடங்களிலும் அனைத்துமக்களும் கூடுவதற்கான மாபெரும் சமூகப்போராட்டங்கள் இங்கே நிகழ்ந்துள்ளன. அவை அனைத்தும் ஆசாரம் கெட்டுப்போகிறது என்றே எதிர்க்கப்பட்டன.

தீண்டாமை உட்பட ஆசாரங்களை வலியுறுத்திய அத்தனைபேரும் அதை தூய்மை என்னும் காரணம் சொல்லியே நியாயப்படுத்தியிருக்கிறார்கள். சென்றகாலகட்டங்களில் பள்ளிக்குச் சென்ற குழந்தைகளை குளிக்காமல் வீட்டுக்குச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் – கண்ட கண்ட ஆட்களை தொட்டுவிட்டு வந்துவிடுவார்கள் என்று. அதற்கும் முந்தைய காலகட்டத்தில் உயர்சாதியினருக்கான பள்ளிகள். அதற்கும் முன் சாதிக்கொரு பள்ளி.

ஆகவே ஆசாரத்திற்குத் திரும்புதல் என்னும் குரல் எளிமையாக ‘தூய்மையாக இருத்தல்’ என்னும் பொருள் கொண்டது அல்ல.ஆசாரம் நேரடியாக தூய்மையும் அல்ல. ஆசாரமானவர்கள் தூய்மையானவர்களும் அல்ல. ஆசாரம் என்னும்பெயரில் சாதிமேட்டிமை உள்ளிட்ட பழைய வழக்கங்களை நியாயப்படுத்தும் குரலே தூய்மை எனப்பேசுகிறது.

சென்றகாலங்களில் நாராயணகுரு தன் ‘தூய்மையற்ற’ கைகளால் எப்படி சிவனை நிறுவலாம் என வாதிட்டவர்களின் குரல் இது. தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களுக்குள் நுழைந்தால் தூய்மை கெட்டுவிடும் என வாதிட்டவர்களின் தரப்பு இது.

ஆசாரம், நெறி, நோன்பு,சடங்குகள் ஆகியவற்றை குழப்பிக்கொண்டுதான் சாதியாசாரத்தை நியாயப்படுத்தும் குரல் எழுப்பப் படுகிறது.ஒருவர் தனக்க்கென கொண்டிருக்கும் சில ஒழுகுமுறைகளை நெறி என்று சொல்லலாம். புலால்மறுப்போ, வெளியிடங்களில் உண்ணாமலிருப்பதோ, பருத்தியாடை அணிவதோ அவருடைய நெறி எனச் சொல்லலாம். ஏதேனும் ஒருவகையில் அத்தகைய நெறிகள் அத்தனைபேருக்கும் உண்டு. என் மனைவியால் மாட்டிறைச்சி உண்பதை எண்ணிப்பார்க்கவே முடியாது..

குறிப்பிட்ட தொழிலுக்கோ வழிபாடுகளுக்கோ அதற்கான நெறிகள் இருக்கலாம். ஆலயப்பூசகர் அசைவம் உண்ணலாகாதென்பது அவருடைய தொழில் சார்ந்த நெறி. சமணர்கள் ஊனுண்ணமாட்டார்கள் என்பது அவர்களின் மதம்சார்ந்த நெறி.

நோன்பு என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் கொள்ளப்படும் தன்கட்டுப்பாடு. சபரிமலைக்கு மாலைபோடுபவர்கள் சில நோன்புகளைக் கொண்டிருப்பார்கள்.

சிலவகையான தோற்ற அடையாளங்களும் அப்படிப்பட்டவையே. என் நண்பர் ஷாகுல் ஹமீது உம்ரா சென்று மீண்டபின் இஸ்லாமிய தோற்றத்தை நிரந்தரமாக்கிக் கொண்டார். அது அவருக்கு ஒரு தன்கட்டுப்பாட்டை அளிக்கிறது என்றார். நெற்றியில் நாமம் இடுவதோ நீறிடுவதோ எல்லாம் அத்தகையவை.

நெறி நோன்பு  இரண்டும் ஒருவர் தனக்கென விதித்துக்கொள்ளும் கட்டுப்பாடுகள். தன்னை வெல்ல, கடந்துசெல்ல கடைப்பிடிப்பவை. பிறரை விட மேலானவனாக எண்ணிக்கொள்ளவோ பிறரிடமிருந்து விலக்கிக்கொள்ளவோ கைகொள்பவை அல்ல.

சடங்குகள் என்பவை தொன்றுதொட்டுவரும் செயல்முறைகள். அவற்றை முழுக்க நிராகரித்தால் மரபுடனான ஆழ்மனத் தொடர்பு அறுந்துவிடும். அது மிகப்பெரிய இழப்பு. அதேசமயம் ஒருசடங்கு தொன்மையானது என்பதனாலேயே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை. அச்சடங்கு மானுடவிரோதத் தன்மை கொண்டது என்றால் இன்றைய நிலையில் அநாகரீகமானது என்றால் வெறும் மூடநம்பிக்கை என்றால் அதைத் தவிர்ப்பதற்கான திராணியும் நம்மிடம் இருக்கவேண்டும்.

ஆனால் ஆசாரம் என்பது முற்றிலும் வேறு. அது பழைமையானது , வழிவழியானது என்பதனாலேயே ஒன்றை ஏற்றுக்கொள்வது. அந்தப் பழமையான மனநிலைகளை உடன் சேர்த்துக்கொள்வது. அதன் மேல் விமர்சனங்கள் அற்று இருப்பது.

நவீன காலகட்டத்தின் அடிப்படையே மரபின் மீதான தனிமனித நோக்குதான். நம் தந்தையருக்கும் மூதாதையருக்கும் அது இருக்கவில்லை. ஏனென்றால் உலகமெங்கும் அன்று அது இல்லை. அது மரபை ஒட்டி ஒழுகிய காலம். திரளாக மானுடர் வாழ்ந்த காலம்.

நம் நவீனக் காலகட்டம் முந்நூறாண்டுகளாக உலகமெங்கணுமிருந்த பெருசிந்தனையாளர்களால் மெல்லமெல்ல கருத்தியல்ரீதியாக உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படை அலகு தனிமனிதன். அதன் பெருந்தரிசனம் மானுடம். தனிமனித அறச்சார்புடன், தர்க்கநோக்குடன் மரபையும் சூழலையும் நோக்குவதை அது நமக்குக் கட்டாயமாக்குகிறது. நம் சிந்தனைகள் எவையும் மானுடம்தழுவியதாக இருக்கவேண்டும், மானுடப்பிரிவினை சார்ந்ததாக அமையலாகாது என நமக்கு அது கட்டளையிடுகிறது. அதற்கு நேர் எதிரானது ஆசார நோக்கு.

ஆசாரம் என்பது தூய்மை என வாதிடும் அக்கட்டுரை மரபான ஆசாரநெறிகள் எல்லாமே தூய்மையை இலக்காகக் கொண்டவை என்றும், அவற்றை கடைப்பிடித்தவர் தூய்மையானவர்கள் என்றும். கடைப்பிடிக்காதவர் தூய்மையற்றவர் என்றும், தூய்மையைப்பேணி தன்னை ஆசாரவாதியாக விலக்கிக்கொள்ளவேண்டும் என்றும் சொல்கிறது. அது உருவாக்கும் பிரிவினை அப்பட்டமான சாதிக்காழ்ப்பு. ஒருபோதும் பொதுவெளியில் முன்வைக்கப்படக்கூடாதது

உண்மையிலேயே ஒருவருக்கு அக்கட்டுரையின் அந்த உட்பொருள் புரியவில்லை என்றால் அவர் பத்தொன்பதாம்நூற்றாண்டை கடக்கவே இல்லை. புரிந்துகொண்டும் தன் சாதிமேட்டிமை நோக்கின்பொருட்டு வாதிடுபவர்கள் இருப்பார்கள். அந்தப்பட்டியலில் நாம் சேரக்கூடாது.

ஒர் இந்து இந்துமதத்தை மூடத்தனமாக முழுமையாக நம்பவேண்டியதில்லை. அதன்மேல் விமர்சனரீதியான பற்றைக்கொள்ளவும் அதன்படி ஒழுகவும் இந்துமதம் அனுமதிக்கிறது. அவனே முதன்மைநூல்களை கற்கமுடியும். அவனே உகந்த ஆசிரியர்களைத் தெரிவுசெய்து தன் ஞானப்பயணத்தை மேற்கொள்ளமுடியும். அவனுக்கு ஆணையிடும் அமைப்போ மரபோ ஏதுமில்லை. அவன் மீறக்கூடாத முன்முறைமை என ஏதுமில்லை

சென்றகாலங்களில் இந்துமதத்தில் வந்து படிந்த மூடநம்பிக்கைகளை, பிளவுபடுத்தும் ஆசாரங்களை, இழிவுபடுத்தும் நோக்குகளை இன்று கடுமையாக விமர்சித்து விலக்கும் பொறுப்பு ஓர் இந்துவுக்கு உண்டு. அதன் வழியாகவே இந்துமரபின் மையப்போக்கான மெய்மைத்தரிசனங்களை அவன் மீட்டு இக்காலத்திற்கென முன்வைக்கமுடியும். எக்காரணம் கொண்டும் அந்த சென்றகால இருட்டுகளை அவன் நியாயப்படுத்தலாகாது. நியாயப்படுத்துபவன் அந்த மையத்தரிசனங்களை அழுக்குபடியச் செய்கிறான்.அத்வைத நோக்கில் ஆணவம் கன்மம் மாயை மட்டும் மலங்கள் அல்ல, பேதபுத்தியைப்போல பெரிய மலம் பிறிதொன்றில்லை

அன்புள்ள சேஷகிரி, நவீனகாலகட்டத்தில் விரிந்து பரவிய இவ்வுலகம் இன்று நம் ஒவ்வொருவரின் அணைப்புக்கென அணுகிவந்துகொண்டிருக்கிறது. மானுடரில் எவரும் இழிவென்று நம் மைந்தருக்குக் கற்பிக்காமலிருப்போம். எவரும் எதன்பொருட்டும் ஒருபடித் தாழ்ந்தவர் என எண்ணுவது நம் மண்டையில் ஊறும் மலம் என அவர்களிடம் சொல்வோம். உணவு., ஒழுக்கம், தோற்றம் காரணமாக பிறர் மேல் விலக்கம் கொள்வதனூடாக நம்மை நாம் தோற்கடிக்கிறோம் என அவர்களிடம் சொல்வோம். அத்தகைய ஆசாரங்களை மாறுவேடமிட்டு மேடையேற்றும் கீழ்மையை இனியேனும் தவிர்ப்போம்.

அப்போதுதான் வசுதைவ குடும்பகம் என்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் நம் முன்னோர் அடைந்த மெய்மையை மாற்றுக்குறையாமல் ஏற்றுக்கொண்டவர்களாவோம்
ஜெ

 

எச்சிலில் புரளுதல் என்னும் சடங்கு

சடங்குகள் தேவையா?

சாதி சமூகம் -கடிதம்

சடங்குகளை எப்படி தேர்ந்தெடுப்பது?

சடங்குகள் ஒரு கடிதம்

சாதியும் ஜனநாயகமும்

 

முந்தைய கட்டுரைதேவதேவனும் நானும்
அடுத்த கட்டுரைபிறந்தநாள்