79. விதைகளும் காற்றும்
யயாதி எளிய வெண்ணிற ஆடையை அணிந்து மீண்டும் தன் அறைக்கு வந்தபோது அவனுக்காக சர்மிஷ்டை காத்து நின்றிருந்தாள். அவன் காலடியோசையையே கேட்டிருந்தாள். எழுந்து வாயில்நோக்கி வரும் அசைவிலிருந்தவள் அவனைக் கண்டதும் நின்று முகம் மலர்ந்து பின் சூழலை உணர்ந்து சேடியரின் முறைப்படி தலைவணங்கினாள். அவனுடன் எவருமில்லை என அறிந்தபின் அருகணைந்து “களைத்திருக்கிறீர்கள்” என்றாள். “ஆம், வங்க நாட்டுக்குச் சென்றிருந்தேன்” என்றபடி அவன் பீடத்தில் அமர்ந்தான்.
அவனருகே வந்து காலடியில் தரையில் அமர்ந்தவளாக “இங்கு பேரரசியுடன்தான் தாங்கள் வருவீர்கள் என்று எண்ணியிருந்தேன்” என்றாள் சர்மிஷ்டை. “அறிவின்மை… நான் எப்படி இங்கே அரசன் என என்னை காட்டிக்கொள்ள முடியும்?” என்றான் யயாதி. “ஆம், உண்மை. நான் அதை எண்ணவில்லை” என்றாள் சர்மிஷ்டை. அவன் தணிந்து “அரசுமுறையாக பேரரசி செல்லும் இடங்களுக்கெல்லாம் நான் செல்வதில்லை. ஆகவே அதில் பிழையாக ஏதுமில்லை” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள்.
“உன்னிடம் பார்க்கவனின் ஓலை வந்து சேர்ந்ததல்லவா?” என்று அவன் கேட்டான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “மைந்தர் மூவரையும் அருகிருக்கும் அஸ்வபாதக் காட்டில் சுப்ரபாலரின் பயிற்சிக்களத்திற்கு அனுப்பிவிடும்படியும் நான் மட்டும் இங்கு சேடியாக தங்கும்படியும் சொல்லியிருந்தார்” என்றாள். பின்னர் மேலும் குரல் தாழ்த்தி “அரசி வந்தால் அழைக்கப்படாதவரை முகம்காட்டவேண்டாம் என்றும் அரசி மைந்தர் எங்கே என்று கேட்டால் மட்டும் அவர்களை புரவியோட்டப் பயிற்சி கொள்வதற்காக அனுப்பியிருப்பதாக சொல்லும்படியும் சொல்லியிருந்தார்” என்றாள்.
“அது நன்று. அவள் இங்கு ஏழு நாட்கள் தங்கியிருப்பாள் என்று எண்ணுகிறேன். அது மிகச்சிறிய காலமே” என்றான் யயாதி. “ஆம்” என்றாள் சர்மிஷ்டை. யயாதி “இயல்பென புழங்கினால் எதுவும் வெளிவராமல் அதை கடந்துவிட முடியும். அவள் இச்சிறுமைகள் அனைத்திற்கும் மேலாக பறந்து செல்ல விழைபவள். ஆகவே அவள் விழிகளிலிருந்து எளிதில் தப்பிவிடலாம். நமது அறியாமையால் பொறுமையின்மையால் மிகைநம்பிக்கையால் பிழை ஏதும் இயற்றாமல் இருந்தால் மட்டும் போதும். அதை சொல்லிவிட்டுச் செல்லலாம் என்றே வந்தேன்” என்றான்.
அவள் மெல்லிய எரிச்சல் தெரிய “அதை பார்க்கவரின் ஓலையினூடாகவே நான் புரிந்து கொண்டேன். அதைச் சொல்ல தாங்கள் வந்திருக்க வேண்டியதில்லை” என்றாள். அவன் சினத்துடன் “நான் வந்திருக்கலாகாது என்கிறாயா?” என்று கேட்டான். அவள் கண்கள் சுருங்க “என்ன பேச்சு இது? நீங்கள் எதன்பொருட்டு வந்தாலும் அது எனக்கு உவகையளிப்பதே. உங்கள் வாழ்க்கையில் மிகக்குறுகிய பகுதியே எனக்காக வெட்டி அளிக்கப்படுகிறது. இந்தப் பதினாறு ஆண்டுகளில் நான் உங்களுடன் இருந்த காலங்களை மட்டும் எடுத்து தொகுத்து பார்த்தால் ஓராண்டுகூட இல்லை. அதற்குள் நிறைந்து வாழ விழைபவள் நான். பொழுதனைத்தும் எனக்குக் கொடையே” என்றாள்.
“இந்த ஆண்டுகளில் நான் உன்னிடம் கண்டது நன்கு சொல்லெடுக்க கற்றுக்கொண்டிருக்கிறாய் என்பதுதான்” என்று அவன் சொன்னான். அவள் புன்னகை செய்தாள். அவளுடன் அணுக்கம் கொள்ளும்தோறும் பூசல் மிகுந்துவருவதை அவன் உணர்ந்திருந்தான். எப்போதும் சந்தித்த முதற்சில கணங்களுக்குப்பின் பூசல்தான் எழும், பின்னர் நெகிழ்வும் தழுவலும். மீண்டும் பூசல். அவன் காலடியில் அவள் அமர்ந்திருக்கையில் அப்பூசல் நிகழ்வதனாலேயே அவை ஓர் எல்லைக்குள் நின்றன, ஆகவே இனிமையான ஆடலாக அமைந்தன.
அவன் பூசலிடும் ஒரே பெண் அவள்தான் என எண்ணியதும் புன்னகைகொண்டு அருகே சென்று அவள் தோளைப்பற்றி “நான் வந்தது இவையனைத்தும் நானே உன்னிடம் உரைக்க வேண்டும் என்பதற்காக. பார்க்கவன் உனக்கு ஆணையிடலாகாது. நீ மறந்தாலும் நீ விருஷபர்வனின் மகளென்பதை நான் மறக்க இயலாது” என்றான். சர்மிஷ்டை “நான் மறக்கவில்லை. எப்போதும் அது எனக்கு நினைவிலிருக்கிறது. ஆனால் எங்கோ நெடுந்தொலைவில் திகழ்கிறது. அங்கிருந்த என்னை இங்கிருந்து பார்க்கையில் எவரோ என்றே நினைவுகொள்ள முடிகிறது” என்றாள்.
“உன்னை இங்கு மறைத்து வைத்திருப்பது குறித்து பெரும் குற்றஉணர்வு எனக்கு இருக்கிறது. விதையை புதைத்து வைப்பது போலத்தான் உன்னை மறைத்து வைத்திருக்கிறேன் என்று ஒருமுறை தோன்றியபோது அதிர்ந்துவிட்டேன். எதையும் முழுமையாக மறைக்கமுடியாதென்பது மனித வாழ்க்கையின் மாறா நெறிகளில் ஒன்று” என்றான் யயாதி. அவளைத் தழுவி தன் உடலுடன் இணைத்துக்கொண்டு முகத்தைப்பற்றி விழிகளை நோக்கி “உன்னை நான் மறைப்பதில்கூட பொருளுள்ளது. ஏனெனில் இவ்வுறவு நாமிருவரும் எண்ணி உருவாக்கிக்கொண்டது. இது ஒருபோதும் பிறரறிய நிகழமுடியாதென்று நாம் அறிந்திருந்தோம். ஆனால் நம் மைந்தருக்கு அத்தகைய பொறுப்போ கடனோ ஏதுமில்லை. கல்லுக்கடியில் முளைத்த செடிகளைப்போல அவர்கள் இங்கு மறைந்து வெளிறி வாழவேண்டியதில்லை. சூதர் மைந்தர்களாக இழிவுகொள்ள வேண்டியதுமில்லை” என்றான்.
சர்மிஷ்டை “அவர்கள் தாங்கள் அரச மைந்தர்கள் என்று இதுவரை அறிந்திருக்கவில்லை. நான் விருஷபர்வனின் மகள் என்று அவர்களிடம் சொன்னதுமில்லை. சூதர்கள் என்றே அவர்கள் தங்களை எண்ணுகிறார்கள். ஆகவே சூதரில் முதன்மை என்னும் தன்மதிப்பு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எத்துயரையும் இதுவரை அடைந்ததில்லை” என்றாள்.
“நாம் மறைக்க முடியாத ஒன்று உண்டு, அவர்களின் முகம்” என்று யயாதி சொன்னான். “அது தெய்வங்கள் அளிப்பது. வளரும்தோறும் தெளிந்து எவர் குருதி எவ்வுடம்பில் ஓடுகிறதென்பதை அது வெளிப்படுத்தும். அப்போது அவர்கள் பெரும் துயரை அடையத் தொடங்குவார்கள். அத்துயரை அவர்களுக்கு அளிக்கும் உரிமை நமக்கில்லை. நான் விண்ணேகினால் அதன்பொருட்டு என் மூதாதையர் முன் சென்று தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கும்.”
சர்மிஷ்டை இயல்பான உதட்டுச் சுழிப்புடன் “அதற்கு என்ன செய்ய இயலும்?” என்றாள். அது அவளியல்பு, அவள் உள்ளம் சென்றடையாத ஒன்றை எளிதாக உதறிக் கடந்துவிடுவாள். “அதைப் பேசவே நான் வந்தேன். தேவயானி இங்கு வந்து செல்லட்டும். அதன் பிறகு அவர்களை தனிப்படை திரட்டி உடன்சேர்த்து தென்னாட்டுக்கு அனுப்புகிறேன். அங்கு அவர்கள் மூவரும் மூன்று நிலங்களை வென்று அந்நிலங்களின் அரசர்களாக அமையட்டும்.”
“தேவயானி உளம்கனியும் முதுமையில் அவர்கள் யார் என்று அவளிடம் சொல்வோம். அவள் மைந்தன் யது குருநகரியின் மணிமுடியை சூடியபின் அவனை அழைத்து அவர்கள் அவனுக்கு இளையோர் என்றும் நிகர்உரிமை கொண்டவர் என்றும் சொல்கிறேன். அவர்கள் அவன் நிலத்திற்கும் குருதிக்கும் உரிமைகோராதவர்கள் என்றால் அவனுக்கு பகையிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் வென்ற நிலங்கள் அவனுக்கு உடன்குருதியர் நாடுகளாகும் என்றால் அது அவனுக்கு வலிமையே சேர்க்கும்” என யயாதி சொன்னான்.
“இவற்றையெல்லாம் ஏன் இப்போது பேசவேண்டும்?” என்றாள் சர்மிஷ்டை. “திருஹ்யூவிற்கு பதினாறாண்டு அகவை நிறைகிறது. அவன் சிறுவனல்ல” என்றான் யயாதி. “எது உங்களுக்கு உகந்ததோ அதை செய்யுங்கள்” என்றாள் சர்மிஷ்டை. அவள் முற்றிலும் உளம் விலகிவிட்டாள் என்று கண்டதும் அவ்வுரையாடல் முடிந்துவிட்டதை யயாதி உணர்ந்தான்.
யயாதி “மைந்தரை இங்கு வரச்சொல், நான் அவர்களை பார்க்கவேண்டும்” என்றான். “ஒவ்வொருமுறை வரும்போதும் நீங்கள் அவர்களை பார்த்துச் செல்கிறீர்கள். நீங்கள் யார் என்னும் வினா அவர்கள் உள்ளத்தில் எழக்கூடும். அவர்கள் இச்சிற்றூரிலிருந்து இன்றுவரை வெளியே சென்றதில்லை. ஆகவே அனைத்தும் எளிதாகவே இதுவரை சென்றுகொண்டிருக்கிறது. அதை எல்லைவரை இழுக்கவேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்” என்றாள் சர்மிஷ்டை.
“நான் உன்னைப் பார்க்கவென்று இங்கு வந்தது முதல் ஓராண்டு மட்டுமே” என்றான் யயாதி. “பின்னர் எப்போதும் மைந்தரை நோக்குவதே என் முதல் விருப்பமாக இருந்துள்ளது.” சர்மிஷ்டை “அந்த விருப்பு உங்கள் விழிகளிலும் கைகளிலும் வெளிப்படுகிறது. ஒருமுறைகூட நீங்கள் மைந்தரை தொட்டுத் தடவாமலிருந்ததில்லை. உங்கள் சொற்களனைத்தும் கனிந்திருக்கும் அப்போது. சென்றமுறை இங்கிருந்து சென்றதுமே மூத்தவன் கேட்டான், நீங்கள் யார் என்று” என்றாள். யயாதி “நீ என்ன சொன்னாய்?” என்று கேட்டான்.
“முன்னரே பார்க்கவர் சொன்னபடி நீங்கள் அரசகுடிப்பிறந்தவர், அரசியின் அலுவலர் என்று அவனிடம் சொல்லியிருந்தேன். நீங்கள் ஒற்றர் என்றும் எனவே வந்து இங்கு தங்கிச்செல்வது எவருமறியாத மந்தணமாக இருக்கவேண்டுமென்றும் ஆணையிட்டிருந்தேன். அவன் ‘நான் அதை கேட்கவில்லை. அவருக்கும் நமக்கும் என்ன உறவு?’ என்று கேட்டான். என் உளம் நடுங்கிவிட்டது. அத்தருணம் வந்தணையுமென்று எதிர்நோக்கியிருந்தேன். அதை கடப்பதெப்படி என்று எண்ணுகையில் உள்ளம் மலைக்க சரி அது நிகழும்போது பார்ப்போம் என ஒத்திப்போடுவேன்.”
“என்ன செய்தாய்?” என்றான் யயாதி. “அப்போது என் பெண்ணியல்பே கைகொடுத்தது. விழிநீர் துளிக்க ‘இவ்வினாவுக்கு சேடிப்பெண் விடைசொல்லமுடியாது, மைந்தா’ என்றேன் அவன் திகைத்துவிட்டான். அவன் சொல்லெடுப்பதற்கு முன்பு இளையவனாகிய புரு ‘மூத்தவரே, இனி இதைப்பற்றி நாம் ஒருசொல்லும் எடுக்கவேண்டியதில்லை’ என்றான். நம் மைந்தரில் அவனைப்போல் நுண்ணுள்ளம் கொண்டவரில்லை. மூத்தவர்களும் அவன் சொல்லை கடப்பதில்லை. அவர்கள் சொல்மாற்றி பிறிதுபேசி விலகிச்சென்றனர். அதன்பின் இன்றுவரை பேச்சு எழுந்ததில்லை.”
“ஆக நானே அவர்களின் தந்தை என சொல்லிவிட்டாய்” என்றான். “இல்லை, சேடிக்கு அப்படி எவரையும் சொல்லமுடியாதென்பதே அதன்பொருள். நீங்கள் அவர்களின் தந்தையாக இருக்க வாய்ப்புண்டு, அல்லது தந்தையென அமைந்த பலரில் ஒருவர்.” யயாதி “கீழ்மை… தன் மைந்தரிடம் ஒருவன் இவ்வாறு தோற்றமளிப்பது” என்றான். “இதை எண்ணியிருந்தால் அன்று எளிய உணர்வெழுச்சிகளுக்கு ஆட்பட்டிருக்கவே மாட்டேன்.” அவள் சினந்து “எளிய உணர்வெழுச்சிகளா? இப்போது அவ்வாறு சொல்லலாயிற்றா?” என்றாள்.
“இப்புவியிலுள்ள உறவுகளும் உணர்வுகளும் பொருளின்மையின் எளிமை கொண்டவையே. அதை உணரும் தருணங்கள் எனக்கும் அமைந்துகொண்டிருக்கின்றன” என்றான் யயாதி. சர்மிஷ்டை சிலகணங்கள் நோக்கிவிட்டு பெருமூச்சுடன் எழுந்து “நான் மைந்தரை வரச்சொல்கிறேன்” என வெளியே சென்றாள். யயாதி அவள் நடையிலேயே ஒரு எரிச்சல் தெரிந்ததை நோக்கி நின்றான்.
உடலின் அசைவாலேயே எரிச்சலை, வெறுப்பை, சினத்தை, புறக்கணிப்பை வெளிக்காட்ட பெண்களால் இயல்கிறது. ஒருவரிடம் அவ்வாறு தன் ஒவ்வொரு அணுவாலும் உணர்வை வெளிக்காட்டுமிடத்திற்கு பெண் செல்லும்போதுதான் அந்த ஆணை தன்னுள் அவள் முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்டாள் என்று பொருள். அவன் குழந்தையை பெற்றபின்னரே அது பெண்களுக்கு அமைகிறது.
மைந்தர்களுக்காக காத்திருந்த நேரத்தில் அவர்களின் கடந்தகாலத் தோற்றங்களை அவன் உள்விழிகள் அளைந்துகொண்டே இருந்தன. அத்தனை உடல்தோற்றங்களும் ஒன்றுடன் ஒன்றென இணைந்து அலையடித்தன. சித்தத்தை இறுக்கி ஒரு பொருளென்றாக்கி அதைக்கொண்டு எண்ணங்களை நீவிப் பிரித்து தனித்தனியாக நோக்கவேண்டியிருந்தது. மூத்தவன் திருஹ்யூ பிறந்தபோது அவன் அன்னையைப்போல கரிய சிற்றுடலும் கூரிய சிறுமூக்கும் பெரிய விழிகளும் கொண்டிருந்தான். குழந்தை பிறந்த செய்தி கேட்டபோது அவன் குருநகரியில் இருந்தான். வந்துசேரும்போது பதின்மூன்றாம்நாள். குழவியை முதலில் நோக்கியபோது உடனே எழுந்தது பெரிய ஏமாற்றம். அதை ஒருகணம் முகம் காட்டிவிட்டது.
பார்க்கவன் “நன்று, ஐயமெழாது” என்றான். அவன் திரும்பிநோக்க “பேரரரசி எவர் என்று கேட்காமலிருக்கமாட்டார்” என்றான். அவ்வெண்ணம் அளித்த ஆறுதலால் முகம் மலர குழந்தையை கையில் வாங்கி முகம் சேர்த்தான். அதன் மென்கால்களில் முத்தமிட்டபோது இளங்குருதிமணம் கொண்டு சித்தம் மயங்க அவனுள் வாழ்ந்த தொல்விலங்கு தன்னை தந்தையென்றுணர்ந்தது. களிப்புடன் “இனியவன்” என்றான். பார்க்கவன் “அனைத்துக் குழவிகளையும்போல” என்றான். “இவன் அரசனாக வேண்டும். எங்கோ… நான் உறுதியாக எண்ணுகிறேன், இவனுடன் தெய்வங்கள் இருக்கும்” என்றான் யயாதி. “வயற்றாட்டி காதில் விழவேண்டியதில்லை” என்றான் பார்க்கவன்.
பேற்றுவிலக்கு கொண்டு ஈற்றறையில் படுத்திருந்தாள் சர்மிஷ்டை. கணவனும் மைந்தருமன்றி பிறர் பேற்றுவிலக்குகொண்ட பெண்ணை சென்று நோக்கலாகாதென்பது நெறி. “இங்கு எவரறியப்போகிறார்கள்?” என்றான் யயாதி. “வேண்டியதில்லை, அரசே. அதையே ஓர் அறிவிப்பென கொள்ளக்கூடும் சிலர்” என்றான் பார்க்கவன். ஈற்றறைச் செவிலியிடம் மைந்தனை திரும்ப அளித்துவிட்டு “சின்னஞ்சிறு உடல்… அதில் தளிர்மொட்டென முகம். ஆனால் அதிலேயே குலம் தெரிகிறது. குடிமுறை தெரிகிறது. தன்னியல்பும் வெளிப்படுகிறது… விந்தை!” என்றான். “அன்னையைப்போல” என்றான் பார்க்கவன்.
“ஆம், ஆனால் அவளை நோக்காதவர்கள்கூட இச்சிறுமுகத்தைக்கொண்டு இவனை ஐயுறுபவன், அஞ்சுபவன், எங்கும் எப்போதும் வெல்லாதவன் என்று சொல்லிவிடமுடியும்” என்றான். “அதுவே தடையென எண்ணி மீறிஎழுபவர் இல்லையா?” என்றான் பார்க்கவன். “உண்டு, அவ்வாறு கீறிமுளைத்தெழுவதன் முளைமொட்டும் அம்முகத்தில் தெரியும்” என்றான் யயாதி. “நம்மைவிட நிமித்திகர் அதை கூர்மையாக சொல்லக்கூடும்.”
அவர்கள் திரும்பும்போது பார்க்கவன் “பேரரசி இளவரசர் யதுவை ஈன்றபோது உங்களுக்குத் தோன்றியதென்ன?” என்றான். யயாதி முகம் மலர்ந்து “அவள் மைந்தனை ஈன்றிருக்கிறாள் என்னும் செய்தியை கொண்டுவந்த முதுசேடி நிலையழிந்து சிரித்துக்கொண்டிருந்தாள். முறைமைச்சொற்களை சொல்லக்கூட அவளால் இயலவில்லை. அவளுடன் மங்கல இசைக்கருவிகளுடன் மூன்று விறலியரும் ஐம்மங்கலங்களுடன் ஏழு அணிச்சேடியரும் வந்தனர். முதலில் கொடிதாங்கியும் சங்கூதியும் நடந்தனர். என் அரண்மனை வாயிலை அவர்கள் அடைந்ததுமே தெரிந்துவிட்டது. நான் எழுந்து நின்றதும் அணுக்கன் ஓடிவந்து நான் அரசாடை புனையவேண்டும் என்றான். ‘அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்’ என்றேன். ‘அதற்குள் அரசே… பிறந்திருப்பவன் குருநகரியின் பட்டத்து இளவரசன். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியின் முதல் மைந்தன்…’ என்றான். ‘ஆம்’ என்றபோது என் குரலில் சலிப்பே வெளிவந்தது.”
அச்செய்திக்காக இருபத்தெட்டு நாட்களாக காத்திருந்தேன். குறித்த நாள் கடந்து பதினெட்டு நாட்களாகிவிட்டிருந்தன. சுவடியை மூடிவிட்டு உடையணிந்தேன். முடிசூடி காத்து நின்றிருந்தேன். மங்கல இசை ஒலித்தது. வாழ்த்தொலிகளுக்கு நடுவே சங்கும் வரவறிவிப்பும் ஒலித்தன. நான் எண்ணியிருந்ததற்கு மாறாக முதுசேடி கதவைத் திறந்து உள்ளே ஓடிவந்து என் காதுகளை பற்றிக்கொண்டு ‘மைந்தனை ஈன்றுவிட்டீர்கள், அரசே. பாரதவர்ஷத்திற்கு சக்ரவர்த்தி பிறந்திருக்கிறார்’ என்றாள். சிரித்துக்கொண்டு என்னைப் பற்றி உலுக்கி ‘மானுடன் தெய்வங்களுக்கு நிகர்நின்றிருக்கும் தருணம். தெய்வங்கள் மானுடனை அனைத்துக்கு அப்பாலும் பொறுத்தருளும் வேளை’ என்றாள்.
அவள் என்னை தூக்கி வளர்த்தவள். அத்தருணத்தை அவள் அப்படி கலைக்காமலிருந்திருந்தால் நான் உறைந்தே இருந்திருப்பேன். சிரித்தபடி ‘முதுமகளே, இச்சொற்றொடரை பயின்றுகொண்டு வந்தாயா?’ என்றேன். சிரித்தபடி கண்ணீர் விட்டாள். எனக்கு ஐம்மங்கலத் தாலத்தில் இருந்து இனிப்பை எடுத்து ஊட்டினாள். அவளுக்கு நான் அருமணி பதித்த கழுத்தணியை பரிசளித்தேன். அன்று முழுக்க பரிசளிப்புகள் நிகழ்ந்தன. பாரதவர்ஷத்தில் பிறிதெந்த மைந்தன் பிறப்புக்கும் அவ்வண்ணம் பெரும்பரிசுகள் அளிக்கப்பட்டதில்லை. ஏனென்றால் அதற்கு முன்னர் அவ்வாறு அளிக்கப்பட்ட பரிசுகளை கணக்கிட்டு அவற்றுக்கு இருமடங்காக பரிசுகள் அமையும்படி முன்னரே கிருதர் வகுத்திருந்தார்.
மறுநாள் காலை முதற்புலரியில் தேவயானியையும் மைந்தனையும் நான் காண நற்பொழுது வகுக்கப்பட்டிருந்தது. அரசணிக்கோலத்தில் அகம்படியினருடன் சென்றேன். வரவறிவிக்கும் நிமித்திகனுக்குப் பின்னால் என் செங்கோல் சென்றது. பதினெட்டு இசைச்சூதர் பதினெட்டு அணிச்சேடியர் தொடர்ந்தனர். வெண்குடையுடன் ஏவலர் என் பின்னால் வந்தனர். அது ஓர் அரசப்பெருநிகழ்வு. என்னருகே அமைச்சர்கள் வந்தனர். ஈற்றறைக்கு வெளியே ஒரு பொற்தொட்டிலில் வெண்சேக்கையில் மைந்தன் படுக்கவைக்கப்பட்டிருந்தான். பேறெடுத்த மருத்துவச்சி அவனை எடுத்து என்னிடம் காட்டினாள். அன்னையைப்போன்ற தோற்றம். நேர்மூக்கால் பகுக்கப்பட்ட வட்டமுகம். ஒவ்வொரு உறுப்பும் பழுதற்றிருந்தது.
நான் எண்ணியதையே என்னுடன் வந்த நிமித்திகர் சொன்னார் ‘பழுதற்ற உடல், அரசே. தெய்வச்சிலைகளுக்குரிய அளவுகள். மண்ணில் பேரரசனாகவே பிறந்திருக்கிறார். பாரதவர்ஷம் பணியும் கால்கள் இவை. நம் கொடிவழியினர் பல்லாயிரமாண்டு ஆலயத்தில் நிறுத்தி வழிபடும் முகம்.’ அச்சொற்கள் ஏனோ எனக்கு பெரிய உள எழுச்சி எதையும் உருவாக்கவில்லை. நான் அவனைப் பெற்ற அச்செய்தி வந்தபோது படித்துக்கொண்டிருந்த நூலில் இருந்த ஒரு வரி எந்தப் பொருத்தமும் இல்லாமல் நெஞ்சில் ஓடிக்கொண்டிருந்தது. ‘காமதேனு அகிடுகளின் நான்கு காம்புகளிலிருந்து நான்கு குலங்கள் பிறந்தன.’
உள்ளறைக்குச் சென்று பேரரசியை பார்த்தேன். அவளருகே சாயை நின்றிருந்தாள். என்னருகே வந்து ‘களைத்திருக்கிறார்கள். ஓரிரு சொற்களுடன் முடித்துக்கொள்ளுங்கள்’ என்றாள். நான் ‘ஆம், நான் உடனே சென்றுவிடுவேன்’ என்றபின் அவள் அருகே சென்று நின்றேன். விழிகளைத் திறந்து என்னை நோக்கினாள். நான் முற்றிலும் அறியாத பெண். நான் உள்ளூர அஞ்சும் அரசி. ‘என் குலம் வாழ மைந்தனை அளித்திருக்கிறாய்’ என்றேன். அவள் மறுமொழி சொல்வதற்குள் சாயை ‘பாரதவர்ஷம் ஆள வந்த சக்ரவர்த்தி. சுக்ரரின் கொடிவழியின் அருமணி’ என்றாள். நான் ‘ஆம்’ என்றேன்.
“அவள் ‘மைந்தன் பிறந்தமை நாட்டில் பதினெட்டுநாள் கொண்டாட்டமாக அமையட்டும். இருபத்தெட்டாம்நாள் அரையணி சூடும் விழவுக்கு பதினெட்டு ஷத்ரியநாடுகளின் அரசர்களும் வந்தாகவேண்டும்’ என்றாள். ‘ஆம், உரிய ஆணைகளை பிறப்பிக்கிறேன்’ என்றேன். ‘ஆணைகளை பிறப்பித்துவிட்டேன். சாயை என்பொருட்டு அனைத்தையும் நோக்குவாள்’ என்றாள். ‘நன்று’ என்றேன். திரும்பும் வழியெங்கும் நகரில் கொண்டாட்டங்கள் உச்சம் கொண்டிருப்பதை கண்டேன். என் அரண்மனை உப்பரிகையில் நின்று நோக்கியபோது எங்கும் களிவெறியே கண்ணுக்குப்பட்டது. நான் எந்தப் பொருளுமில்லாமல் காமதேனுவைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்.”
பார்க்கவன் புன்னகையுடன் “மைந்தரைப்பற்றி தந்தை கொள்ளும் எண்ணங்களுக்கெல்லாம் எப்பொருளும் இல்லை. அவை அச்சத்தாலோ மிகைவிழைவாலோ ஆனவையாகவே இருக்கும்” என்றான். “மைந்தனுக்கு பெயரிடவேண்டும்… ஒரு நிமித்திகரை அழைத்துவருக!” என்றான் யயாதி. பார்க்கவன் ஒருகணம் எண்ணியபின் “நானறிந்த ஒருவர் இருக்கிறார்” என்றான். உச்சிப்பொழுதில்தான் அவரை அழைத்துவந்தான். கைகளும் தலையும் நடுங்கும் வயோதிகர். யயாதி எழுந்து அவரை வணங்கியதும் அவர் கைதூக்கி வாழ்த்தளித்து “எவருக்கோ மைந்தர் பிறந்திருப்பதாக சொன்னார்கள்” என்றார். “எனக்குத்தான்” என்று அவன் சொன்னான். “நன்று” என அவர் அமர்ந்து “நாளும் பொழுதும் குறிக்கப்பட்டுள்ளதா?” என்றார். “இதோ” என்று யயாதி ஓலையை அவரிடம் நீட்ட “எனக்கு விழிமங்கல். படியுங்கள்” என்றார் கிழவர். “உரக்க படியுங்கள்… செவிகளும் சற்று பழுது.”
யயாதி நிமிர்ந்து நோக்க பார்க்கவன் “இவர் தங்களை நினைவுகொள்ளப்போவதில்லை, எவரென உசாவவும் வாய்ப்பில்லை” என மெல்லிய குரலில் சொன்னான். யயாதி சலிப்புடன் தலையசைத்தான். அவர் அவன் படித்ததை மும்முறை கேட்டுவிட்டு பெருமூச்சுடன் தாடியைத் தடவியபடி சற்றுநேரம் அமர்ந்திருதார். பின்னர் “உயர்குடிப்பிறப்பு. ஆனால் எப்பயனுமில்லாத முன்னூழ். முன்னோர்முறையென வருநிலம் தவறும். அடைவதோ கெடுநிலமே ஆகும். கொடிவழியின் ஏழாவது மைந்தனே அரசன் என முடிசூடி அரியணையமரும் ஊழ்கொண்டவன். சுமையெனத் தோளிலேறும் துயரத்துடன் அலைவதே வாழ்க்கை” என்றார்.
பார்க்கவன் போதும் என கைகாட்ட அதை காணாமல் அவர் சொல்லிக்கொண்டே சென்றார். “எங்கும் தனியன். எப்போதும் தயங்குபவன். தன் சிறுமையை உணர்ந்து அஞ்சுபவன். அவ்வச்சத்தால் எதிரிகளைப் பற்றி கற்பனை செய்துகொள்வான். எதிரிகளை கற்பனை செய்துகொள்பவன் நாளடைவில் அவர்களை எதிரிகளென அடைவான். அவர்களிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டிருப்பான். நிழலை அஞ்சும் சிற்றுயிர், நிலைகொள்வது என்பது அதற்கில்லை.”
யயாதியே போதுமென கைகாட்டினான். “ஆனால் பொறாமை அழியா நெஞ்சம் கொண்டிருப்பான். உடன்குருதியனை எண்ணி எண்ணி ஒருநாளேனும் நல்லுறக்கம் கொள்ளும் பேறு இலாதவனாக இருப்பான்” என நிமித்திகர் தொடர்ந்தார். “ஆனால் நன்மைந்தர் பேறு உண்டு. விதைபெருகும் பாலைமரம். எவ்வனலும் எரிக்காத வேர் கொண்டவன். இவன் கொடிவழி குலமென்றாகி எக்காலமும் மண்ணில் வாழும்.”
யயாதி முகம் மலர்ந்து “அவ்வாறே ஆகுக!” என்றபின் “இவனுக்கான பெயரென்ன என்று உரைக்கலாகுமா?” என்றான். அவர் வெண்புள்ளி அலைந்த விழிகளை மேல்நோக்கி உயர்த்தி சிலகணங்கள் நிலைத்தபின் “மண்ணுக்குரியவன், மண்ணை விழைபவன் என்னும் பொருளில் ஒரு பெயரிடுக! திருஹ்யூ என்பது என் உள்ளத்தில் தோன்றுகிறது” என்றார். யயாதி “அதுவே ஆகட்டும். அவனுக்கு மண் கனியட்டும்” என்றான்.
நிமித்திகர் பெருமூச்சுடன் தன் மெலிந்த கைகளை நீட்டி கால்களை எளிதாக்கினார். யயாதி உரக்க “நிமித்திகரே, பிறிதொரு பிறவிப்பொழுதை சொல்கிறேன். கணித்தளிக்கவேண்டும்” என்றான். தாழ்ந்தகுரலில் “அரசே, வேண்டாமே” என்றான் பார்க்கவன். “இல்லை, அவர் உரைக்கட்டும். விழியின்மையால் அவர் பிறவிழிகளை காணாமலாகிவிட்டிருக்கிறார். அது அவரை மானுடத்திலிருந்து முற்றிலும் விலக்கியிருக்கிறது. காலத்தை மட்டுமே காண்பவராக அமர்ந்திருக்கிறார்” என்றான் யயாதி. “இரண்டாம் முறை நிமித்தம் நோக்குவதும் பெயர் நோக்குவதும் பிழை” என்றான் பார்க்கவன். “என்னால் இதை தவிர்க்கமுடியாது” என்றான் யயாதி.
மெல்ல முனகி உடல் அலுப்பை அகற்றியபின் “சொல்லும்” என்றார் நிமித்திகர். யயாதி யதுவின் பிறவிப்பொழுதை சொன்னான். “அரசகுருதி. அவைமுதன்மைகொண்ட இளமை. ஆனால் கொடிவழிவந்த நிலம் அகன்றுபோகும். புதுநிலம் தேடி அலையும் வாழ்க்கை. காட்டெரி என அழித்துப் பரவுவது. அணையா பெருவிருப்பும் காழ்ப்பும் கொண்டு கணம்தோறும் உயிர்மிகும் உள்ளம். மைந்தர்ச்செல்வம் மிகும். கொடிவழிகள் பெருகும்.” யயாதி படபடப்பை அடக்கியபடி “நான் ஒன்றை மட்டும் கேட்க விழைகிறேன், கணியரே. இப்பிறப்பாளனின் வருகைநோக்கம் என்ன?” என்றான். “பெருங்குலம் ஒன்றின் முதல் விதைமுத்து இவன். என்றுமழியா பெருக்கு இவன் குருதியில் துளிக்கும்” என்றார் அவர்.
அவன் கேட்பதற்குள் “அவன் ஊழை சுட்டும் ஒரு பெயர் நன்று. அவ்வாறே ஆகுக என்னும் பொருளில் யது” என்றார். யயாதி வியப்புடன் “அதுவே அவன் பெயர் நிமித்திகரே. ஆனால் காற்று என அதற்கு எங்கள் முதுநிமித்திகர் பொருள் சொன்னார்” என்றான். நிமித்திகர் புன்னகைத்து “அதுவும் நான் சொன்ன பொருளில்தானே?” என்றார். யயாதி “நன்று!” என எழுந்து அவரை வணங்கினான். பார்க்கவன் அளித்த பொற்காசுகளை எடுத்து வணங்கி அவருக்கு அளித்தான். அவர் மெல்ல எழுந்து தன்னை அழைத்துச்செல்லும்படி கோரி கைநீட்டினார்.
அதன்பின் மற்ற மைந்தருக்கு அவன் நிமித்தம் நோக்கவில்லை. துர்வசு என தேவயானியின் இரண்டாம் மைந்தனுக்கு அவள் அமைத்த நிமித்திகர்களே பெயரிட்டனர். அனுதிருஹ்யூ என இரண்டாமவனுக்கு சர்மிஷ்டையே பெயரிட்டதாக செய்தி வந்தது. சர்மிஷ்டையின் மூன்றாவது மைந்தன் பிறந்தபோது யயாதி மிக அருகில்தான் இருந்தான். அந்தக் குடிவிழவிலிருந்து நேராகவே அசோகவனிக்கு வந்தான். மைந்தனை கையில் வாங்கிய முதற்கணம் எழுந்த எண்ணம் அந்த முகம் நன்கறிந்த ஒன்று என்பது. தன்முகம் அல்ல. சர்மிஷ்டையின் முகமும் அல்ல. எவர் முகம்? சற்று முன்மடிந்த காது. புடைத்த நெற்றிமுழைகள். வெறும் உளத்தோற்றமா? அருகே நின்றிருந்த பார்க்கவன் அவன் உள்ளத்தை உணர்ந்தவனாக “முகங்கள் நேர் அச்சென நம்மிலிருந்து செல்வதில்லை. நம் குருதியில் குமிழிகளாக நம் மூதாதையர் அனைவரின் முகங்களும் இருக்கின்றன என்பார்கள்” என்றான்.
அவன் தத்தளிப்புடன் குழந்தையை முத்தமிட்டபடி திருப்பித்திருப்பி நோக்கிக்கொண்டிருந்தான். மெல்லுதடுகள் கூம்பியிருக்க விழிமூடி துயில்கொண்டிருந்தது. “சைத்ர பஞ்சமி. விடிகாலை முதல்நாழிகை மூன்றாவது பாதம் முப்பத்தெட்டாவது கணம்” என்றாள் செவிலி. அவன் அந்த மணல்நாழிகையிலிருந்து உதிர்ந்த மணல்கணங்கள் மெல்ல நிறைந்து மூன்றாவது பாதமென வரையப்பட்ட கோட்டை கடந்து மேலெழுந்து ஒவ்வொன்றாக உதிர்வதை உள்ளுணர முடிந்தது. முப்பத்தெட்டாவது மணல்கணம் உதிர்ந்தபோது அவன் உள்ளம் மின்னியது. “அது எந்தை புரூரவஸின் பிறவிப்பொழுதல்லவா?” என்றான். “அவர் முகம். நம் அரண்மனையின் சுவரில் வரையப்பட்டுள்ள அவர்முகம்தான் இது” என்று கூவினான்.
பார்க்கவன் வியப்புடன் “ஆம், அவருடையது நாற்பத்தேழாவது கணம்” என்றான். யயாதி பேருவகையுடன் மைந்தனை நெஞ்சோடணைத்து “இவனுக்கு நான் புரூரவஸ் என பெயரிடுகிறேன். இவன் எந்தை எழுந்துவந்த வடிவம்” என்றான். பார்க்கவன் “அரசே, அது அரசகுலப் பெயர். இவருக்கு அதை இடுவது ஐயத்திற்கிடமாக்கும்” என்றான். “இல்லை, வேறுபெயர் இட நான் ஒப்ப மாட்டேன்” என்றான் யயாதி. “அப்பெயர் வேண்டாம்… புரு என்றே வைக்கலாம்… அது பொதுப்பெயர்தான்” என்றான் பார்க்கவன். யயாதி மெல்ல தளர்ந்து “ஆம், வேறுவழியில்லை. ஆனால் நானறிவேன் அது என் மூதாதையின் பெயர். ஒருநாள் அவையில் அதை கூவிச்சொல்வேன்” என்றான்.
சர்மிஷ்டை உள்ளே வந்து வெளியே நோக்கி தலையசைக்க மைந்தர் மூவரும் உள்ளே வந்தனர். திருஹ்யூவின் மெலிந்த உள்வளைந்த தோள்களும் நீளமுகமும் எப்போதும் முதல்நோக்கில் ஒரு விலக்கத்தையும் சில கணங்களுக்குப்பின் நெகிழ்வையும் அன்பையும் அவனிடம் எழுப்புபவை. மென்மீசை உதட்டுக்குமேல் பாசிப்படர்வுபோல தெரிந்தமை யயாதியை உவகைகொள்ளச் செய்தது. அனுத்ருஹ்யூ மூத்தவனைப்போலவே தோற்றம்கொண்டவன், அவனை மூத்தவன் என்று எண்ணி மயங்குவது யயாதியின் வழக்கம். பின்னால் வந்து நின்ற புருவின் புன்னகை மாறாத விழிகளையும் சிவந்த உதடுகளையும் நோக்கியபின் யயாதி விழிதிருப்பிக் கொண்டான்.
புருவை யயாதி நேரடியாக நோக்குவதோ விழிநோக்கிச் சொல்லாடுவதோ இல்லை. ஒருகணம் நோக்கியபின் திரும்பி மூத்தவர்களிடமே பேசிக்கொண்டிருப்பான். ஆனால் உள்ளத்துள் அவன் முகமே திகழும். பேசியது அவனுடன்தான் என பின்னர் நினைவு மயங்கும். அது ஏன் என அவன் எண்ணி எண்ணி நோக்கியதுண்டு. அவன் தோற்றம்போல் இனியது பிறிதில்லை. பொன்னிறம். புவியாண்ட மூதாதையரின் முகம். ஆனால் அவ்விழிகள் கூரியவை, அவற்றின் முன் ஒளிந்துகொள்ளவே யயாதியின் உள்ளம் விழைந்தது. அவர்கள் விடைபெறுகையில் அனைவரையும் பேச்சுப்போக்கில் இயல்பாகத் தொட்டு நற்சொல் உரைப்பான். இறுதியாக புருவை மீண்டுமொருமுறை தொடுவான்.
“வருக…” என்று அழைத்தபடி யயாதி முன்னால் சென்றான். அவர்கள் உள்ளே வந்து தலைவணங்கி முகமன் உரைத்தனர். யயாதி “முறையான பயிற்சிகள் பெறவேண்டிய பொழுது. அன்னை சொல்லியிருப்பார்கள் அல்லவா?” என்றான். திருஹ்யூ “ஆம்” என்றான்.