அசோகமித்திரனும் மு.கருணாநிதியும் – அவதூறா?

mu.ka

 

அன்புள்ள ஜெமோ,

கீழ்க்கண்ட வரிகள் மனுஷ்யபுத்திரன் தன் முகநூல்பக்கத்தில் எழுதியவை

*
கலைஞர் அசோகமித்திரனை எதிர்த்தாரா?
’’ நான் சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது டெல்லியின் அதிகார மையங்களோடு நெருக்கமான தொடர்புடைய பிரபல எழுத்தாளர் ஒருவரை சந்தித்தேன். அவர் சொன்ன ஒரு செய்தி எனக்கு அதிர்ச்சி ஊட்டியது. சுந்தரராமசாமிக்கு ஞான பீடம் பெற்றுத்தரும்படி அவரது அந்திமக் காலத்தில் காலச்சுவடு கண்ணன் அந்த எழுத்தாளரின் காலைப் பிடித்து அழுததாக சொன்னார். பின்னர் அந்த செய்தியை டெல்லியைச் சேர்ந்த ஒரு மூத்த பத்திரிகையாளர் ஒருவரும் உறுதிப்படுத்தினார்‘’

இப்படி ஒரு குறிப்பை நான் எழுதினால் நீங்கள் என்னிடம் என்ன கேட்பீர்கள்? அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்க மாட்டீர்களா? ஆனால் காலச்சுவடு கண்ணன் அசோகமித்திரனின் மறைவை ஒட்டி எழுதிய குறிப்பில் ’ அசோகமித்திரனுக்கு 1996 ல் சாகித்ய அகாதமி விருது கிடைத்தபோது அப்போதைய திமுக அமைச்சரவையில் இருந்த தமிழ்க் குடிமகன் கன்னட எழுத்தாளர் யூ.ஆர் அனந்தமூர்த்திக்கு அதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் ஒரு கடிதம் எழுதியதாகவும் சாகித்ய அகாதமி வரலாற்றிலேயே இப்படி ஒரு கடிதம் எழுதபட்டதில்லை என்று அனந்த மூர்த்தி அதிர்ச்சி அடைந்ததாகவும் இதை யூ.ஆர் அனந்த மூர்த்தியே தன்னிடம் கூறியதாகவும்’ எழுதுகிறார்.

இறந்தவர்கள்தான் என்ன வேண்டுமானாலும் பேச முடியுமே. அதுதான் இறந்துவிட்ட யூ ஆர். அனந்த மூர்த்தி சொன்னதாக இப்படி ஒரு பச்சைப்பொய்யை அவிழ்த்துவிடுகிறார். அதோடு மட்டுமா, கலைஞர் ஒரு முறை அனந்த மூர்த்தியை விமானத்தில் நேரில் சந்தித்தபோதும் அசோகமித்திரனுக்கு விருது கொடுத்ததை ஆட்சேபித்தாராம். ஏனெனில் கலைஞர் சாகித்ய அகாதமி விருதை பெற ஆசைப்பட்டாராம். இந்த புளுகுகளுக்கெல்லாம் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?

கலைஞர் தன் ஆட்சிகாலத்தில் தமிழுக்கும் இலக்கியத்திற்கும் ஆற்றிய பங்களிப்புகளை கண்ணன் போன்ற மூன்றாம்தர திராவிட வெறுப்பாளர்களால் ஒரு போதும் புரிந்துகொள்ள முடியாது. சுஜாதா, கலாப்ரியா, வண்ணதாசன் உள்ளிட்ட பல நவீன எழுத்தாளர்களிடம் மிகுந்த பேரன்புகொண்டவர் கலைஞர். பிரபஞ்சனுக்கு பத்திரிகையாளர் குடியிருப்பில் வீடு கொடுப்பதற்கு கலைஞரே நேரடியாக தலையிட்டு அளிக்க செய்ததை பிரபஞ்சன் பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். காலச்சுவடு குழுமத்தை சேர்ந்த ஒரு பெண் கவிஞருக்கு தேர்தலில் போட்டியிட கட்சியில் நீண்ட காலம் உழைத்த பலரையும் தாண்டி வாய்ப்பளித்தவர் கலைஞர்.

வாழ்நாளெல்லாம் திராவிட இயக்கத்தையும் கலைஞரையும் வசைபாடிய ஜெயகாந்தன் உடல்நலம் குன்றியபோது அவரை அப்போல்லோவில் சேர்த்து மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்தவர் கலைஞர். திமுக ஆட்சிகாலத்தில்தான் பொது நூலகங்களுக்கு அனைத்து நவீன எழுத்தாளர்களின் நூல்களும் பெருமளவு பாரபட்சமின்றி வாங்கப்பட்டன. அசோகமித்திரன் நூல்கள் உட்பட. திமுக 15 அண்டுகாலம் மத்தியில் ஆட்சியில் பங்கேற்றிருந்திருக்கிறது. கலைஞர் விரும்பியிருந்தால் இந்தியாவின் எந்த உயரிய விருதையும் பெற்றுக்கொள்ள எந்த தடையும் இருந்ததில்லை. கேவலம், ஒரு சாகித்ய அகாதமி விருது தனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக இந்த மாநிலத்தை ஐந்து முறை ஆண்ட, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற ஒரு தலைவர் தன் அமைச்சரைவிட்டு கடிதம் எழுதினாராம். பிறருக்கு எதிராக அதிகார அமைப்புகளுக்கு கடிதம் எழுதுவது கண்ணன் போன்ற அல்பங்களின் வேலை. தான் குமுதத்திற்கு கடிதம் எழுதி கவிஞர் சங்கரராமசுப்பிரமணியனின் வேலையை காலி செய்தது போல, இந்தியா டுடே ஆசிரியர் பிரபுசாவ்லாவுக்கு கடிதம் எழுதி அதன் தமிழ் பதிப்பில் வேலை செய்த பீர் முகஹமதிற்கு நெருக்கடி கொடுத்ததுபோல கலைஞரும் இதுபோன்ற வேலைகளை செய்வார் என்று நம்ப விரும்புகிகிறார். வெட்கமாக இல்லை?

அசோகமித்திரனுக்கு விருது கிடைத்த அன்று சன் டிவியில் சிகரம் செந்தில் நாதனும் சு. சமுத்திரமும் அசோகமித்திரனுக்கு விருது கிடைத்ததற்காக கண்டித்து பேசினார்களாம். 96 ல் இப்போது இருப்பது போல விவாத நிகழ்ச்சிகளே இல்லை. அப்படியே இருந்திருந்தால்கூட ஊரில் யார் யாரோ பேசுகிற பேச்சுகளுக்கெல்லாம் கலைஞர் பொறுப்பா?

நாள் முழுக்க இலக்கிய குழு அரசியலின் குப்பையில் நெளிந்துகொண்டிருக்கும் புழுக்களால் வேறு என்ன சிந்திக்க முடியும்?

காலச்சுவடு கண்ணன் இந்த அவதூறை திரும்பப்பெற்று மன்னிப்புக்கோராவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுபற்றி ஆலோசிக்கப்படும். என்ன, உடனே திமுக ‘வழக்குப் போட்டுவிட்டது..’ என்று சொல்லி அகில இந்திய அளவில் அழுது அரற்றி மடிப்பிச்சை எடுக்கபோவதை நினைத்தால்தான் யோசிக்க வேண்டியதாகிவிடுகிறது

*

இந்தப்பதிவு வந்து இரண்டுநாட்களாகின்றன. எவராவது இதைப்பற்றி மேலதிகமாகப் பேசுகிறார்களா என்று பார்த்தேன். நம் சூழலில் இருக்கும் மௌனத்தைக் கண்டபின்புதான் இதை எழுதுகிறேன்

நீங்கள் கலைஞரை பிடிக்காதவர் என்று தெரியும். ஆனாலும் உங்கள் அறவுணர்வின்மீது [கொஞ்சம்] நம்பிக்கை இருப்பதனால் இதை எழுதுகிறேன்

நீங்கள் அசோகமித்திரனைப்பற்றி எழுதிய ஓர் உணர்ச்சிகரமான அஞ்சலி உரையில் சில தகவல்களுக்கு ஆதாரமில்லை என்று சொல்லப்பட்டது. உடனே இங்கே அசோகமித்திரன்மீதான அவதூறு, வன்மம் என்றெல்லாம் எத்தனையோ பேர் எம்பிக்குதித்தார்கள். அழுதுபுலம்பினார்கள் தோலுரித்துத் தொங்கவிடுவதாகச் சொல்லிக்கொண்டார்கள்

நீங்கள் அசோகமித்திரனை உணர்ச்சிகரமாகப் பாராட்டிச் சொன்னவை அவை. அசோகமித்திரனை எவ்வகையிலும் சிறுமைப்படுத்தும் செய்திகளும் அல்ல. அசோகமித்திரனே அதை சொல்லியிருக்கிறார் என பின்னர் தகவல்கள் வெளிவந்ததும் அமைதியானார்கள்.

ஆனால் காலச்சுவடு கண்னன் வெளியிட்டிருக்கும் இந்தச்செய்தி அப்படிப்பட்டது அல்ல. இது கலைஞரின் integrity யையே கேள்விக்குள்ளாக்குகிறது. அவருடைய வரலாற்றில் என்றென்றும் இழிவான விஷயமாக இது இருந்துகொண்டிருக்கும் இல்லையா? இதைக் காலச்சுவடு கண்ணன் தனக்குத் தெரிந்த உண்மைச்செய்தியாக பலமுறை பதிவுசெய்திருக்கிறார். ஆனால் எந்த ஆதாரமும் இல்லை.

இதைப்பற்றி நம் அறிவுஜீவிகள் ஒரு வரிகூட மறுப்பு சொல்லவில்லை. கட்சிக்காரர் என்பதனால் மனுஷ்யபுத்திரன் மறுப்பு தெரிவிக்கிறார். மற்றவர்கள் கண்டும் காணாமலும் இருக்கிறார்கள். எவரும் ஆதாரம் எங்கே என்று கேட்கவில்லை.

மிகுந்த வருத்தத்துடன் இதை எழுதுகிறேன்

எஸ்.மகாலிங்கம்

aso

அன்புள்ள மகாலிங்கம்,

புதுமைப்பித்தன் சாபவிமோசனம் கதையை எழுதியபோது ராஜாஜி ‘இவருக்கு இப்படியெல்லாம் எழுத எவர் அதிகாரம் கொடுத்தது என்று கேட்டதாக ஒரு கதை உண்டு. மீ.ப.சோமு சொல்லி அது பரவியது. அது இன்றுவரை புதுமைப்பித்தனைப்பற்றி பேசப்படுகையில் எல்லாம் நினைவுகூரப்படுகிறது. ஆதாரமுண்டா என எவரும் கேட்பதில்லை. ராஜாஜியின் இலக்கியநோக்கு, அரசியல்நோக்கு  ஆளுமை மூன்றையும் வகுப்பதாக அது உள்ளது. மீ.ப.சோமு பொய்சொல்லமாட்டார் என்பதே அடிப்படை. அவர் இருவருக்கும் நண்பர். அல்லது அவரை அப்போது எவரும் மறுக்கவில்லை

அதைப்போல திரு. மு.கருணாநிதி அசோகமித்திரனுக்கு விருதுகொடுத்ததை எதிர்த்தார், தன் அமைச்சர் தமிழ்க்குடிமகன் வழியாக கடிதம் எழுதி எதிர்ப்பைத்தெரிவித்தார், தான் அப்பரிசைப் பெற விழைந்தார் என்பதெல்லாம் மிக எளிதாக வரலாறாக ஆகிவிடும். ஏனென்றால் மு.கருணாநிதி சமகாலத்தின் முதன்மை ஆளுமை. அசோகமித்திரன் வரலாற்றில் வளர்பவர். ஆகவே  கண்ணன் சொல்லும் கூற்றை  வெறும் அரட்டை என எளிதாக ஒதுக்கிவிடமுடியாது.வருங்காலத்தில் அவருடைய இயல்பை வகுக்கும் செய்தியாகவே இது நிலைகொள்ளும்.

நான் அசோகமித்திரனைப்பற்றி இருபத்தைந்தாண்டுகளாக எழுதிவருபவன். அவருடன் தொடர்பிலிருந்தவன். அவருடன் நீண்ட உரையாடல்களை நிகழ்த்தியவன். அவரே சொன்னவை, நான் கண்டவற்றிலிருந்து ஒரு சில தகவல்களைச் சொன்னேன். அவை அவரைச்சார்ந்தவர்களுக்கு உகக்கவில்லை என்று தெரிந்ததும் மன்னிப்பு கோரி அவ்விவாதத்தை முடித்துக்கொண்டேன். தனிப்பட்ட விஷயங்களுக்கு பலசமயம் ஆதாரம் இருப்பதில்லை.  காரணம் அவரைப்பற்றி அந்த விவாதம் எழுந்து மையம்கொள்வதை நான் விரும்பவில்லை. அவரே சொன்ன பேட்டிகள் வழியாக சில விஷயங்கள்  பின்னர் வெளிவந்தன, மேலும் வெளிவரக்கூடும்.

நீங்கள் சொன்னதுபோல அவை அசோகமித்திரனின் ஆளுமையை குறைத்துக்காட்டுவன அல்ல. அவரது பெருமையை மறைப்பவையும் அல்ல. தவறு என்றால்கூட அவை தகவல்பிழைகள் மட்டுமே. ஆனால் காலச்சுவடு கண்ணன் மு.கருணாநிதி குறித்துச் சொல்லியிருப்பது மிகக்கடுமையான நேரடியான குற்றச்சாட்டு. அவருடைய ஆளுமையையே கீழ்மையாகக் காட்டுவது. அது உண்மை என்றால் இந்தியாவின் முதல்வர்களில் எவரும் செய்யாத ஒன்றை அவர் செய்திருக்கிறார். அந்தப்பழி என்றும் அசோகமித்திரன் பெயருடன் இலக்கிய உலகில் பேசப்படும். அதற்கு ஆதாரமில்லாமல் அதைச் செய்திருக்கிறார் என்றால் அது கண்டிப்பாக தெரிந்தே செய்த குற்றம்.

கண்ணன் சொன்னதுபோல தமிழ்க்குடிமகன் கடிதமெழுதியிருந்தால் அது ஆவணம். அமைச்சரின் அலுவலகக் கடிதத்திலிருந்து சாகித்ய அக்காதமி பொறுப்பாளருக்குச் சென்றிருக்கிறது. அதை வெளியிடலாமே. ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை என்றால் வெளிப்படையாக மன்னிப்பு கோருவதே இத்தருணத்தில் அவர் செய்யவேண்டியது

anandamurthi
அனந்தமூர்த்தி

 

நீங்கள் சொல்வதுபோல என் விஷயத்தில் அறச்சீற்றம் கொண்டவர்கள் இப்போது காட்டும் மௌனம் விந்தையானது- ஆனால் அபூர்வமானது அல்ல. இங்கே இலக்கியம், அரசியல் சார்ந்த விவாதங்கள் அனைத்திலும் வெளிக்காட்டப்படும் உணர்வுகளும் நிலைப்பாடுகளும் பொய்யானவை. உண்மையான உள்ளடக்கம் வேறு. அது பெரும்பாலும் சாதி, இன, மத அடிப்படைகொண்ட காழ்ப்பு மட்டுமே.

நான் கண்ணன் சொன்னதை வலுவாக ஐயப்படுகிறேன். ஏனென்றால் அனந்தமூர்த்தியையே எனக்கு நன்றாகத் தெரியும். பலமுறை பேசியிருக்கிறேன். எல்லா உரையாடல்களிலும் அசோகமித்திரன் பேசுபொருளாகியிருக்கிறார். அப்போதெல்லாம் அவர் இந்நிகழ்வைச் சொன்னதில்லை.

இப்போது இதைச் சொல்லும் கண்ணன் கனிமொழியை காலச்சுவடின் ஆசிரியர்குழு உறுப்பினராக ஆக்கியபோது, அவரை மையப்படுத்தி இலக்கியவிழாக்களை நடத்தியபோது, அவரை தமிழிலக்கியத்தின் தலைமகளாக முன்னிறுத்தியபோது இதை மறந்துவிட்டிருந்தாரா? கனிமொழியிடம் சொல்லி மு.கருணாநிதியிடம் தன் கண்டனத்தை தெரிவித்திருக்கலாமே? காலச்சுவடில் ஒரு வரி எழுதியிருக்கலாமே. அசோகமித்திரன் இறப்பது வரை காத்திருந்திருக்கவேண்டாமே

ஆதாரங்களை கண்ணன் வெளியிடுவார் என எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் இது முதியவயதில் மு.கருணாநிதிமேல் முன்வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு. உண்மை, எனக்கு மு.கருணாநிதிமேல் எந்த விதமான ஈடுபாடும் இல்லை. அவர்மேல் இருப்பதெல்லாமே கடும் விமர்சனங்கள் மட்டும்தான். ஆனால் அதற்காக இதை ஏற்றுக்கொள்ளமுடியாது

ஜெ

 

கனிமொழிவணக்கம்

கனிமொழி

காலச்சுவடுக்கு தடை

காலச்சுவடு நூறாவது இதழ்

முந்தைய கட்டுரைஏழாம் உலகம் – கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–79