கல்மேல் நடந்த காலம் -கடலூர் சீனு

theo

இனிய ஜெயம்,

இவ்வாண்டின் முக்கிய நூல் வரவுகளில் மற்றொன்று, கல்மேல் நடந்த காலம் எனும் தலைப்பில் வரலாறு சார்ந்த கட்டுரைகள் எனும் பொது வகைமைக்குள் தொகுக்கப்பட்ட தியடோர் பாஸ்கரன் தனது எழுத்தின் துவக்க காலம் தொட்டு தற்போது வரை வெவ்வேறு ஆண்டுகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

சிந்து நாகரீகம்;

சமீபத்தில் பத்ம விருது அறிவிக்கப்பட்ட ஆளுமைகளில் மிஷேல் தானினோ அவர்களும் ஒருவர். [ கிழக்கு வெளியீடாக வந்த அவரது சரஸ்வதி ஒரு நதியின் மறைவு ஆய்வு நூலுக்கு உங்கள் தளத்தில் உங்கள் வாசகர் ஒருவர் மிக நீண்ட முக்கியமான கட்டுரை ஒன்றினை எழுதி இருக்கிறார்] அந்த அறிவிப்புக்குப் பின் நிகழ்ந்த சூழலின் சுமட்டுத்தனத்தை இன்று திரும்பிப் பார்க்க பெருத்த ஆயாசமே எஞ்சுகிறது. தொண்ணூற்று எட்டு விழுக்காடு மௌனம், மீதம் இரண்டு சதவீதம் அசட்டுத்தனமான எதிர்வினைக் கருத்துக்கள்.

இந்த இரண்டு சதமானத்துக்கு சொந்தக்காரர்கள் எழுத்தாளர்கள். இந்த இரண்டு சதமானத்திலும் கருத்தியல் ரீதியாக இரண்டு தளம் உண்டு. முதல் தளத்தை சேர்ந்த எழுத்தாளர்களுக்கு சிலுக்கு சுமிதாவை தெரியும், நளினி ஜமீலாவை தெரியும், எங்கேயோ அவிந்து போன கண்டத்தில் உறையும் காராபூந்தி எனும் தேசத்தில், பக்கோடா எனும் மொழியில் எழுதும் ஓமக்குச்சி எனும் எழுத்தாளரின் காராசேவு எனும் பெருங்காவியம் குறித்து தெரியும், இங்கிருக்கும் மிஷேல் தானிதோ யாரென்று தெரியாது அவரது வாழ்வும் பணியும் என்ன என்று தெரியாது. யாரென்றே தெரியாதவருக்கெல்லாம் பத்ம விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது என மிஷேல் பெயரை குறிப்பிட்டு கருத்து கொந்தளிப்பு நிகழ்த்துவார்கள்.

இரண்டாவது தளத்தினர் ”அதுல ஒரு அரசியல் இருக்குதுங்க” வகைப்பாட்டை சேர்ந்தவர். மிஷேல் இங்கிருக்கும் இந்துத்துவ கருத்தியலால் கரப்ட் ஆகியவர் இந்துத்துவ சார்பான ஆய்வு நூலுக்கு பிஜேபி அளித்த விருது அது. என்பதே இவர்களின் உண்மை விளம்பல். இந்த இரண்டு தரப்புமே [அவர்களைப்போலவே] வாசிப்போ நுண்ணறிவோ அற்றவர்கள் வாசகர்கள் எனும் தெளிவில் நின்றே இத்தகு அசட்டு கருத்துக்களை சூழலில் உலவ விடுகிறார்கள். [யாருக்கு தெரியும் வெரியார் எல்வினுக்கு பத்ம விருது வழங்கும் போதும் இதே போல ஒரு அசட்டு கூட்டம் அசட்டு கருத்துக்களை கக்கி இருக்கும்].

கல் மேல் நடந்த காலம் நூலில் அஸ்க்கோ பர்ப்பொலா அவர்களின் பேட்டியை வாசிக்கும் போது மனம் இயல்பாக மிஷேல் அவர்களை நினைத்துக் கொண்டது. உண்மையில் இவர்கள் பாரதத்தில் எதன் பொருட்டு தங்கள் ஆயுளை கரைக்கிறார்கள்? அஸ்க்கோ ஃபின்லாந்து நாட்டின் தலைநகரில் அதன் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். மொழியியலாளர். ஃபின்னிஷ் மொழியை தாய்மொழியாகக் லாண்டவர். கிரேக்கம், லத்தீன் அறிந்தவர், சமஸ்க்ருதம் கற்றவர் ஜைமினி சாமவேதம் முறையாகப் பயின்றவர், தமிழில் சரளமாக உரையாடக் கூடியவர். மொழி இயல் நோக்கில் சிந்து நாகரீகத்தின் முத்திரை தரவுகளை ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபது முதல் ஆய்வு செய்து வருபவர். அவரை தியடோர் அவர்கள் கண்ட பேட்டி இந்த நூலின் தலையாய அம்சம்.

பார்ப்பொலா அவர்களுக்கு கிரேக்க தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த சிந்து நாகரிக தடயம். அப்போது கிரேக்க தொல்லியலில் புதிர் அவிழ்க்கப்பட்ட பண்டைய மொழி இவை கூடி அவருக்கு சிந்து நாகரிக தொல்லியலில் மொழி குறித்த ஆர்வத்தை உருவாக்குகிறது. சிந்து நாகரீகத்தின் முத்திரை மொழிகளை அறிய உதவும் அனைத்தயும் கற்கிறார். டோலாவீரா ஆய்வுகளில் கிடைத்த முத்திரைகள் உட்பட பன்னிரண்டு வெவ்வேறு இடங்களில் கிடைத்த சிந்து நாகரீகத்தின் தொடர்பு முத்திரைகள் யாவும் ஒரு வரிசையில் வலமிருந்து இடமாக அமைவதை அவதானிக்கிறார்.

அது மொழி அல்ல எனும் ஆதாரங்களைக் கொண்ட அமெரிக்க மொழி இயல் ஆய்வாளருடன் விவாதித்து தனது அறிதலில் இன்னும் ஸ்திரம் கொள்கிறார். ஆண்டுகள் பிடிக்கும் ஆய்வுகள் வழியே அவர் இங்கு வந்து சேர்ந்திருக்கிறார். வேறு ஆய்வுகளும் இனைய ஒரு நாள் இந்த மொழி நிச்சயம் வாசித்து அறியப்படும் எனும் பரவசம் பார்ப்பொலா வின் பெட்டியை வாசிக்கையில் கிடைக்கிறது. எத்தனை ஆளுமைகளை தங்களை கரைத்து நமக்கு விட்டு செல்லும் ஞானம் இது?

பௌத்தம்;

சார்லஸ் ஆலன் எழுதிய அசோகா எனும் நூல் குறித்த பாஸ்கரன் அவர்களின் கட்டுரை ஒன்று, [சமீபத்தில் இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு பேரரசர் அசோகர் எனும் தலைப்பில் எதிர் வெளியீடாக வந்திருக்கிறது].

ஆயிரத்து எண்ணூறுகள் துவங்கி இந்தியாவில் பல இடங்களில் அசோகரின் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. முதலில் கிடைத்தும், முதலில் வாசிக்கப்பட்டதும் குஜராத் கிர்னார் மலை அடிவாரத்தில் கிடைத்த கல்வெட்டே. வெவ்வேறு இடங்களில் கிடைத்த பியதாசி என்பவரின் கல்வெட்டுக்களை தொகுத்து ஒரு வரைபடமாக்கி அந்த பியதாசி எதோ ஒரு சிங்கள மன்னனாக இருக்க வேண்டும் எனும் யூகத்துக்கு வருகிறார்கள். இக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பல வருடங்கள் கழித்தே இந்த பியதாசி தான் மன்னர் அசோகர், இவை அசோகரின் கல்வெட்டுக்கள் என கண்டு பிடிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் பணியில் இருக்கும் ஜான் டர்னர் தனது பணி ஒன்றின் ஆய்வின் போது [இவர்தான் பாலி மொழியில் இருந்து மகாவம்சம் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இலங்கையின் வரலாற்றை மொழிந்தவர்களில் முக்கியமானவர் என தியடோர் குறிப்பிடுகிறார்] பண்டைய பாலி மொழிப் பனுவலின் புத்தர் உள்ளொளி அடைந்த இருநூற்றி பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிந்துசாரரின் மகனும், சந்த்ரகுப்தரின் பேரனுமான பியதாசி பட்டத்துக்கு வந்தார் எனும் செய்தியைக் கொண்டு, இங்கே நிகழ்ந்த அனைத்து மர்மங்களையும் ஜான் துலக்கினார். தேவருக்கு பிரியமான பியதாசி அது அசோகர்தான். அசோகன் என்ற மன்னன் கல்வெட்டுகள் வழியே அறிமுகமாக இரண்டாயிரம் ஆண்டுகள். அவன் அசோகன்தான் என அறியப்பட மேலும் பல ஆண்டுகள். எத்தனை ஆண்டுகள். . எத்தனை ஆளுமைகள் கூடி செய்த பணி இது?

இங்கே சூழலை கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம். கீழடி அகழ்வாய்வு. அதன் முதல் வரலாற்று மொழிபை முன்னெடுத்தவர் காவல்கோட்டம் எழுதிய தொல்லியல் அறிஞர். அதன் பண்பாட்டு ஆழத்தை உரத்து பேசிய பண்பாட்டு ஆய்வாளர் பருத்தி வீரனின் இயக்குனர். சிந்து முத்திரை மொழி துவங்கி, அசோகர் கல்வெட்டு வரை ஒரு வரலாற்றை ஊகித்தும் ஒப்பு நோக்கியும் ஆய்ந்தும் அறிய எத்தனை முறைமைகளும் ஆளுமைகளும், உழைப்பும், ஆண்டுகளும் தேவை? இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத ஆட்கள்தான் இன்றைய ”பண்பாட்டு விளம்பரதாரர்கள்”.

சமணம்;

குறள் குறித்த ஆய்வு நூல் ஒன்றுக்கு தியடோர் எழுத்திய கட்டுரையில் குறள் ஒரு சமண நூல் எனும் அடையாளத்தை தமிழில் போவோர் வருவோர் எல்லாம் குறளுக்கு உரை எழுதும் கலாச்சாரம் வழியே அதை அழிக்கும் சித்திரத்தை சுட்டுகிறார். குறள் உருவாகி வந்த வரலாற்று பண்பாட்டுப் பின்னணியில் அதனை பொருத்தி சீர் தூக்கி பார்க்கும் வகைமை சொல்கிறார். ஐந்தவித்தான் என குரளில் பயின்றுவரும் சொல் மேரு புராணம், சீவகசிந்தாமணி என பூரண சமண நூல்களில் மட்டும் புழங்கி, வேறு நூல்களில் புழங்காத நிலையை சுட்டுகிறார்.

வேறொரு கட்டுரையில் மா கலி கோசலரால் நிறுவப்பட்ட ஆசீவகம் சமணம் அளவுக்கே இங்கே திகழ்ந்ததை, கண்ணகிக்குப் பிறகு அவர்களின் பெற்றோர் ஆசீவகர்கள் ஆனதை, கணியன் பூங்குன்றனார் ஒரு ஆசீவகர் என்பதை க நெடுஞ்செழியர் ரா விஜயலட்சுமி போன்ற ஆய்வாளர்கள் நிறுவுவதை விவரிக்கிறார்.

நாம் சென்ற பார்த்த வேலூர் ஆர்மா மலை சமணக் குகையை தியடோர் எழுபதுகளில் பலமுறை சென்று பார்த்திருக்கிறார். சமையல் புகை கரி படிந்து ஏழுக்கு நாலு எனும் அளவில் ஓவிய விரிவை பார்த்திருக்கிறார். மையத்தில் நாம் பார்த்த சதுர அரை போன்ற அமைப்பின் அடித்தளம் ஒரு கோவில் என்கிறார். அவர் வருகையில் அக் கோவில் வாசலின் இரு துவாரபாலகர்களும் அக் குகைக்குள் கிடந்திருக்கிறது. எழுபத்தி ஆரில்தான் அக் குகை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வருகிறது. நாம் பார்த்த ”வரலாறு அழிந்த” ஆர்மா மலை குகை தொல்லியல் துறைக்கு கீழே வந்த பிறகுதான் அந்த லட்சணத்துக்கு வந்திருக்கிறது.

பல்லவர்கள்.

உங்களது குறள் உரைக்குப் பிறகு இனைய வெளியில் சிறிய அடி தடி நடந்தது. அடியாட்களில் ஒருவர் களப்பிரர்கள் எவ்வாறு கொடுங்கோல் தன்மை பூண்டிருந்தார்கள் என்பதை எதோ ஒரு அரசி திருநீற்றை நெற்றியில் பூச பயந்து, மறைவாக ஆடைக்குள் உடலில் பூசிக்கொண்டு திரியும் நிலையை எதோ ஒரு பதிகத்தை சுட்டி நிறுவி இருந்தார். காஞ்சி கைலாச நாரதர் கோவிலில் நிற்கயில் அந்த மட ஆய்வாளரைத்தான் நினைத்துக் கொண்டேன். அப்படி களப்பிரர் கழுத்தறுக்கும் ஆட்சியை நடத்தி இருந்தால், சைவத்தின் அத்தனை விஷயங்களையும் தொகுத்த காஞ்சி கோவில் எழுந்து வந்த சூழலில் அது எங்கேனும் எவ் வடிவிலேனும் பதியப்படாமல் போய் இருக்காது. மேலும் இத்தனை நெடிய கலைப் பாரம்பரியம் கொண்ட தமிழ் நிலத்தில் மூளையே அற்ற மன்னனும் தான் இருந்தேன் என்பதற்கு அடையாளமாக ஒரு கலை மேன்மையை விட்டு செல்ல எண்ணும் வாய்ப்பே அதிகம், அந்த அளவு அறுபடாமல் கொண்டும் கொடுத்ததும் வளர்ந்த கலைப் பாரம்பரியம் நம்முடையது.

அடுத்து வரும் பல்லவர்கள் இத்தனை கொடுங்கோல் பாரம்பரியம் கொண்ட களப்பிரரை வென்று தன்னை நிறுவிக் கொண்டவர் என்றால், அந்த வெற்றி ஒரு மீட்சியாக எங்கேனும் பாடலிலோ, தொன்மக் கதைகளிலோ, குறைந்த பக்ஷம் பெரிய கோவிலின் எதோ ஒரு புடைப்பு சிற்பமாகவோ வெளிப்பட்டிருக்கும். அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

தியடோர் மாமல்லபுரத்தில் இலங்கும் மகேந்திர வர்ம பல்லவன், நரசிம்ம பல்லவன் படிமைகள் குறித்து விளக்குகிறார். அப் படிமைகள் மேல், இது இன்ன இன்ன மன்னர் என பொறிக்கப்பட்ட கல்வெட்டு, அக் குடைவரைக் கோவில் கட்டி பல ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டது எனும் நிலையை விளக்குகிறார். பல கடவுளர்களின் உருவை அக் கோவில் கட்டிய மன்னர்களின் உருவை ஏற்றி வடிக்கப்பட்ட படிமைகள் என்பது குறித்த ஆய்வுகளை சுட்டுகிறார். கங்கை கொண்ட சோழபுர கோவிலின் சண்டேச அனுகிரக மூர்த்தி சிலையில் சண்டேசர் ராஜேந்திர சோழன்தான் என்பதற்கான தரவுகள் உருவாகி வந்த விதம் சொல்கிறார்.

மாமல்லபுரத்தில் அதிகமாக யாரும் சென்று பார்க்காத சப்த கன்னியர் சிலை குறித்த கட்டுரை இதில் முக்கியமானது. தமிழகத்தின் மிக தொன்மையான சிலை வரிசை இது [ஏழாம் நூற்றாண்டு] இது. ராபட் கிளைவ் காலத்தில் தனித்தனியாக எடுத்து செல்லப்பட்ட சப்த கன்னியர்கள் சிலைகளை சென்னை ஜெர்மனி அமேரிக்கா என வெவ்வேறு அருங்காட்சியகங்களில் தியடோர் பார்க்கிறார். கட்டுரை துவக்கத்தில் சப்தமாதர் குறித்த தொன்மத்தையும் பேசுகிறார். [சப்தமாதர் குறித்து அரவிந்தன் நீலகண்டன் ஆழி பெரிது நூலில் விரிவாக பேசி இருக்கிறார்]

சோழர்கள்

அதிகம் பேசப்படாத மூவர் கோவில் என்று அழைக்கப்படும் இருக்கு வெளிர் கலை செல்வமான கொடும்பாளூர் கோவில்கள் பற்றி ஒரு கட்டுரையில் அடிப்படை சித்திரம் ஒன்றினை அளிக்கிறார். கட்டுரையின் ஒரு பகுதியில் அன்று [பத்தாம் நூற்றாண்டு] அங்கு செழித்திருந்த காளாமுக மார்க்கம் குறித்த தரவுகளை அளிக்கிறார்.

இந்த நூலின் வேறொரு கட்டுரை ஜோப் தாமஸ் எழுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கும் தமிழக ஓவிய வரலாறு நூல் மீதானது. அந்த நூலை வாசிக்கையில் ஜோப் தாமஸ் மதுரா விஜயம் நூலில் மதுரைக்கு வெளியே எல்லை கட்டி அதற்குள் நிலவும் காளாமுக வாழ்வு குறித்த செய்திகளை சுட்டுகிறார்.

கேதார்நாத் காளாமுக மார்க்கிகள் உயிர் விடும் இடமாக இருந்திருக்கிறது. விக்ட்டோரியா ராணி கட்டுப்பாட்டின் கீழ் பாரதம் வந்த பிறகு, பிரிட்டிஷார் அதை சட்டம் போட்டு தடுத்ததாக இணையத்தில் படித்திருக்கிறேன்.

ஆயிரத்து தொண்ணூற்று அறுபத்தி ஆறில் வரலாற்று ஆய்வாளர் திரு சுரேஷ் பிள்ளை, தஞ்சை கல்வெட்டுக்கள் வழியே உருவாகி வரும் அன்றைய வரலாற்று சூழலை, பண்பாட்டு சூழலை வரையறுத்து மலேஷிய உலகத்தமிழ் மாநாட்டில் அவர் சமர்ப்பித்த ஆய்வை தமிழில் மொழிபெயர்த்து இந்த நூலின் இறுதியில் அளித்திருக்கிறார் தியடோர்.

சுரேஷ் கல்வெட்டுக்கள் வழியே, அன்று உருவாக்கப்பட்ட நில பகுப்பு முறை, உபரி கோவிலுக்குள் கொண்டு வரப்பட்ட நிர்வாக முறை, கோவிலுக்குள் தனித்தனி உரிமைகளைப் பெற உயர்ந்து வந்த வலங்கை இடங்கை பிரிவினை முறை, ராஜராஜன் அனைத்தையும் சமன் செய்த்து அதைக் கொண்டு சென்று இணைத்த ஆகம முறை, என அன்றைய சூழலின் வழியே உருவாகி வந்த நேர் நிலை மற்றும் எதிர்மறை அம்சங்களை கல்வெட்டுகளின் செய்திகள் வழியே இணைத்து ஒரு சித்திரத்தை அளிக்கிறார். மேலும் ஏன் இக் கோவில் பணி நிறைவடையாமல் போனது, இக் கோவிலை நிறைவு செய்யும் பணியை விடுத்து ஏன் ராஜேந்திரன் புதிதாக வேறு கோவில் கட்டினான் என்பதையும் ஆராய்ந்து பார்க்கிறார்.

தஞ்சாவூர் பெரிய கோவில் புத்த சிற்பம் எனும் கட்டுரை மிகுந்த சுவாரஸ்யம் கூடியது. தஞ்சை கோவிலில் மூன்று புடைப்பு சிற்பங்கள். முதல் புடைப்பு சிற்பத்தில் புத்தர் நின்றிருக்கிறார் எங்கோ கிளம்பும் கோலம். அடுத்த புடைப்பு சிற்பத்தில் சிலர் புத்தர் வசம் மன்னிப்பு கேட்டிறார்கள். மூன்றாவது சிற்பத்தில் தஞ்சை கோவில் விமானம் பக்தர்கள் கோலாகலத்துடன் விண்ணிலிருந்து [புத்தர் இருந்த இடம்] அந்த இடத்துக்கு வந்து இறங்குகிறது.

சுரேஷ் கல்வெட்டுக்கள் வழியே ஆகம மயமாக்கம், சமஸ்க்ருத மயமாக்கம் எனும் சித்திரத்தை அளிக்கிறார், தியடோர் இந்த மூன்று சிற்பங்கள் வழியே அங்கு முன்பு இருந்த பௌத்தம் வழியனுப்பப்பட்டு சைவம் நிறுப்பட்ட யூகத்தை முன்வைக்கிறார்.

உலகப் போர்

மிக சமீபம் வரை எம்டன் மகன் என ஒரு திரைப்படத்துக்கு பெயர் வைக்கும் வகையில் எம்டனின் பதிவு தமிழ் நிலத்தில் நிலைத்திருக்கிறது. தியடோர் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் இங்கே சென்னையில் குண்டு போட்ட எம்டனின் பீரங்கி ஒன்றினை காண்கிறார். அங்கிருந்து துவங்கி எம்டன் கட்டப்பட்ட நாள், ஜெர்மனுக்கு ஆதரவாக அது நேச நாட்டு கப்பல்களை துவம்சம் செய்த விதம், அதன் கேப்டன் மட்டும் போர் கைதியாக சிக்க, அதன் படை வீரர்கள் தப்பி தேசம் தேசமாக பல்லாண்டுகள் ஓடி இறுதியாக ஜெர்மனியை அடைந்த விதம், விடுதலை அடைந்த பிறகு அதன் கேப்டன் ஜெர்மனியில் ஒரு மாவீரராக கொண்டாடப்பட்ட விதம், போரில் அழிக்கப்பட்ட எம்டன் பிரித்து கரைக்கப்பட்டு கண்காட்சிப் பொருளாக ஆன விதம் என எம்டனின் கதை ஒரு கட்டுரையில் சுவாரஸ்யமாக விரிகிறது.

உலகப்போரில் கைதியாகி இலங்கையில் இருக்கிறார் ஒரு ஜெர்மானியர். விடுதலை ஆன பிறகும் இலங்கையியிலேயே தங்கி விடுகிறார். சென்னையில் குண்டு போட்ட எம்டன் பின் இலங்கை வருகிறது, அங்கே உணவு நிரப்பிக்கொண்டு அடுத்த இலக்கு செல்கிறது. விசாரணையில் ஆங்கிலேய அரசு அந்த முன்னாள் ஜெர்மானிய போர் கைதியை சந்தேகித்து கைது செய்து தண்டிக்கிறது. பல ஆண்டுகள் கழித்தே அவர் குற்றமற்றவர் எனத் தெரிகிறது.

சென்னை உயர்நீதிமன்றம் அருகே எம்டனின் குண்டு விழுந்தது குறித்த கல்வெட்டு நிறுவப்பட்டு இருக்கிறது. பார்த்து இருக்கிறேன். பாஸ்கரன் எழுதுகிறார் இரண்டு எண்ணைக் குடோன்கள் பற்றி எரிந்து அடங்கி இருக்கிறது. அதை யாரோ ஆவணப்படம் எடுத்திருக்கிறார்கள். அக் கால சிந்து பாடல் எம்டன் தாக்குதல் குறித்து பாடுகிறது. ஒரு பாடலில் வீட்டு வாசலில் அரிசி புடைக்கும் கிழவி காயமடையும் கண்ணீர்க் கதை வருகிறது.

சுதந்திர தினம்.

ஒரு கட்டுரையில் அமராவதி நதிக் கரையில், தாராபுரத்தில் உருவாகி வந்த தனது பால்யம் அங்கே அவர் கண்டு கடந்து சென்ற வரலாறு [இந்தியாவின் இறுதிப் பிரபு அவ் வழியே போகையில் தியடோர் மக்களுடன் சேர்ந்து டாட்டா காட்டுகிறார்] மௌனப் பட டாக்கீஸ், காமராஜர் உரை, சுதந்திர கொடி ஏற்றி கை தட்டிவிட்டு லட்டு சாப்பிட்டது வரை என பலவற்றை சுவையாக சொல்கிறார்.

குறிப்பாக அவரது பள்ளி நாட்களின் கணக்கு வாத்தியார் குறித்து அவர் அளிக்கும் சித்திரம். அடிப்பார். அவர் மழுங்க சிரைத்துக் கொண்டு வரும் நாளில் வலிக்கும் வகையில் அடிப்பார்.

நாய்கள்

தியடோர் அவர்களின் பிரியத்துக்கு உரிய நாய்களுக்கும் நூலில் இடம் உண்டு, கர்நாடகத்தில் போரில் ஈடுபட்டு இறந்த நாயின் நடுகல் கல்வெட்டு, வேலூர் அருகே கொள்ளைக் கும்பலுக்கு எதிராக போராடி இறந்த நாயின் நடுகல் கல்வெட்டு தொடர்ந்து, திருச்சி மலைக்கோட்டை குடைவரை கோவில் கங்காதரர் கையில் ஏந்திய நாய் வரை பல சுவாரஸ்யங்களை நூலில் தொடுக்கிறார்.

நூல் குறித்த கட்டுரைகள், ஆவணப்படம் குறித்த கட்டுரை, [ரோஜா முத்தையா செட்டியார் போன்ற] ஆளுமைகளை சந்தித்து அது சார்ந்த கட்டுரைகள், ஆளுமைகளின் பேட்டிகள், மொழிபெயர்ப்பு, அனுபவம் என பல வகைமைகளில் இருபது கட்டுரைகள். அனைத்தையும் இணைக்கும் பொது சரடு வரலாறு என்பதால் வரலாறு சார்ந்த கட்டுரைகள் என தலைப்பின் கீழ் குறிப்பிட்டிருக்கிறார்கள். முதலில் ஆசீவகம், அடுத்து குரள் ஆய்வு நூலுக்கான கட்டுரை, அடுத்து ஆர்மா மலை குகை, அடுத்து பார்ப்பொலா நேர்காணல், அடுத்து பல்லவ அரச உருவ சிற்பங்கள், அடுத்து ஆனந்த் குமார சாமி ஆவணப் படம் மீதான கட்டுரை என நான் லீனியர் முறையில் கலந்தது கட்டி வரும் இருபது கட்டுரைகள்.

இந்த நூலை எனக்குள் செரித்துக்கொள்ள இதை முதலில் கால வரிசை என்றும், அடுத்து ஆளுமைகள் என்றும் பகுத்து வாசித்தேன். சரியான இடங்களில் படங்கள், தேவையான இடங்களில் மேலதிக வாசிப்பு நோக்கி செல்ல உதவும் நூல்களுக்கான சுட்டிகள், துணை நின்ற நூல்களின் பட்டியல், கட்டுரை பேசும் அடிப்படை சொற்களின் பொருள் விளக்க அகராதி, என முழுமையான, செறிவும், தீவிரமும் கூடிய சரளமான நூல். இவ் வருடம் வெளியான முக்கியமான நூல்

தியடோர் பாஸ்கரன்:கடிதங்கள்
மீசை
பறக்கும் புல்லாங்குழல்

.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–80
அடுத்த கட்டுரைகாலடி ஓசையிலே