செவ்வியலும் இந்திய இலக்கியமும்

bloom
ப்ளூம்

ஜெ,

என் விவாதத்தின் நீட்சியாக இக்கடிதம்

ஒரு வகையில் விமர்சனத்தின் அத்தியாவசியத்தை ரசனை மனம் உணர்கிறது. ரசனை மனம் என்று ஒன்று இருந்தால் விமர்சனம் என்னும் ஒன்றை தவிர்க்க இயலாது என்று புரிகிறது. அதே நேரத்தில், (புறவயமான அளவுகோல்கள் இல்லாத (இருக்கமுடியாத?)) விமர்சன நோக்குகளால் இயல்பாக உருவாகும் போட்டிமனப்பான்மை எனக்கு தனிப்பட்ட முறையில் ஏனோ உவப்பாக இல்லை. விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் ஏதோ வகையில் யாரையோ நிராகரிக்க வேண்டும். அப்படி நிராகரிப்பது முற்றும் நடுநிலையானச் செயலா? புறவயமான அளவுகோல்கள், புறவயமான ரசனை அளவீடுகள் இல்லாமல் போட்டி வைக்கலாமா, அது நியாயமான போட்டியா என்ற கேள்வி அது.

இந்த ‘போட்டிமனப்பான்மை’ கேள்வியை பரிசீலிக்கும் போது எதேச்சையாக ஹரோல்ட் ப்ளூமுன் இந்த நேர்காணலை இன்று வாசித்தேன். அதில் அவர் உரைக்கும் இவ்வரிகள் எனக்கே அளித்த பதிலாக பட்டது.

“Criticism starts—it has to start—with a real passion for reading. It can come in adolescence, even in your twenties, but you must fall in love with poems. You must fall in love with what we used to call “imaginative literature.” And when you are in love that way, with or without provocation from good teachers, you will pass on to encounter what used to be called the sublime. And as soon as you do this, you pass into the agonistic mode, even if your own nature is anything but agonistic. In the end, the spirit that makes one a fan of a particular athlete or a particular team is different only in degree, not in kind, from the spirit that teaches one to prefer one poet to another, or one novelist to another. That is to say there is some element of competition at every point in one’s experience as a reader. How could there not be? Perhaps you learn this more fully as you get older, but in the end you choose between books, or you choose between poems, the way you choose between people. You can’t become friends with every acquaintance you make, and I would not think that it is any different with what you read.”
இவ்வரிகளின் ஆதார உண்மையை என் வாசக மனம், ரசனை மனம் அறிந்தாலும், என் தர்க மனம் அதை ஏற்க மறுக்கிறது. என் ரசனையை நான் முற்றும்முதலாக நம்புகிறேன், ஆனால் அதன் அடிப்படையில் போட்டியிட, என் ரசனையை பிரதான ரசனையாக முன்வைக்க, மனம் இணங்கவில்லை. ஆனால் போட்டி என்று வந்தால், என் ரசனையை யாரேனும் கேள்விகேட்டால், அதை ஆதரித்து வாதாடுவேன் என்றும் நினைக்கிறேன். இந்த முரண் எனக்குப் பிடிபடவில்லை.

இந்த வரிகளை படிக்கையில் இன்னொரு கேள்வி எழுகிறது. நல்ல வாசகருக்கு தெரியும், தங்கள் ரசனை என்னவென்று. அப்படியென்றால், ஒரு அடிப்படை வாசிப்புக்கல்விக்கு பிறகு, அப்படிப்பட்ட வாசகர் தனக்கான ஆக்கங்களை மட்டுமே படித்தால் போதுமா?

 (இன்று மறுபடியும் என் பட்டியலை பரிசீலித்தேன். ஆண்டாள் உள்வட்டத்திற்குள் வந்தாள். அவளுடைய கவிதைகள் பேசும் பொருளின் அடிப்படையில் அல்ல. அக்கவிதைகளின் அழகியல் திறக்கும் உலகங்கள் என் தேடல்கள் அத்தனையும் மலர் சுடரை அணைப்பது போல் அணைக்கிறது என்று இன்று உணர்ந்படி இருந்தேன். பக்தி கூட ஒரு hyperaesthetic experience தானா? இலக்கியம் ஆக இது போதுமா?)

சுசித்ரா

***

manik
மாணிக் பந்த்யோபாத்யாய

அன்புள்ள ஜெ.,

என்னுடைய கேள்விக்கு பதிலுரைத்தமைக்கு நன்றி. நான் மேரி கெரெல்லியை வாசித்ததில்லை. கூடிய விரைவில் வாசிக்கிறேன்.

ஆம், இதுவரை நான் வாசித்ததை வைத்துப் போட்ட பட்டியலில் தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் ஷேக்ஸ்பியரும் கண்டிப்பாக எனக்கு முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். கூடவே வியாசனும் கம்பனும் இளங்கோவும், எமர்சனும் தாகூரும், ஆண்டாளும் பஷீரும் மேரி ஷெல்லியும் எமிலி டிக்கின்சனும் இன்னும் பலரும். பொதுப்பட்டியல்களோடு பெரும்பாலும் ஒத்துப்போகிறது என்பது உண்மை தான்.

அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில், ஒரு எழுத்தாளரோ ஆக்கமோ ஏன் எனது பட்டியலில் இருக்கிறார்/ இருக்கிறது என்று சுயகேள்வி எழுப்பிக்கொள்வது முக்கியமானதாக தோன்றுகிறது. உதாரணத்திற்கு, சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கையில், அவருக்கு லா.ச.ரா.வின் ‘ஜனனி’ கதை மிகவும் பிடித்த கதை என்று சொல்லியிருந்தார். நான் அதற்கு, எனக்கு அதை விட கி.ரா.வின் ‘பேதை’ கதை பிடிக்கும் என்று சொன்னேன். இன்று அதை சிந்தித்து பார்க்கையில், அவ்வாறு ஏன் சொன்னேன் என்ற கேள்வி முக்கியமாகப் படுகிறது. சுருக்கமாக சொன்னால், ‘பேதை’யின் கிராமிய அழகியலும், இயல்பான நடையும், உலகளாவிய பார்வையும், அது முன்வைக்கும் உக்கிரத் தாய்மையின் சித்திரமும் ஏதோ வகையில் எனக்கு ‘ஜனனி’ முன்வைக்கும் சாக்த சௌந்தர்ய-அழகியலை விட, ஜீவன்-பரமன் முடிச்சுகளை விட முக்கியமாகப்படுகிறது. இந்த வேறுபாட்டை ஆராய்வதில் என் ரசனையை புரிந்து கொள்ள முடியும் என்றும் தோன்றுகிறது.

தற்போது ஹரோல்ட் ப்ளூமின் ‘தி வெஸ்டர்ன் கேனன்’ என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். முழுக்க முழுக்க அழகியல் சார்ந்த விமர்சனத்தை பிரதானப்படுத்துகிறார். மேற்கின் அதிமுக்கிய இலக்கிய மேதையாக அவர் ஷேக்ஸ்பியரை முன்வைக்கிறார். (தமிழில் ஷேக்ஸ்பியர் அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளாரா?)

அந்நூலை பரிசீலிக்கையில், வெஸ்டர்ன் கேனனைப்போல இந்திய இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் ஒட்டுமொத்த வரலாற்றில் இன்றியமையாத செவ்வியல் நூல்கள்/படைப்பாளிகள் எவை/யார் என்ற ‘கேனன்’ வகை பட்டியல் போட முடியுமா என்ற கேள்வி எழுந்தது. பல மொழிகளை சேர்க்க வேண்டும் என்றாலும் இந்திய நிலப்பரப்பின் சிந்தனை, அழகியலின் ஒற்றுமையின் அடிப்படையில் செய்யலாம் என்று நினைக்கிறேன். அவ்வாறு இதுவரை போடப்பட்டுள்ளதா?

மிகுந்த உற்சாகத்தில் வாசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய பதில் ஊக்கமளிக்கும்படி இருந்தது. மிக்க நன்றி.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சுசித்ரா

புதுமைப்பித்தன்

அன்புள்ள சுசித்ரா,

ஹரால்ட் ப்ளூமின் அந்நூல் குறித்து நான் முன்னரே எழுதியிருக்கிறேன்.- ஹரால்ட் ப்ளூமிற்கு இலக்கிய சிந்தனையில் உள்ள இடம், அவருடைய மேலைச்செவ்வியல் சார்ந்த கருத்துக்களின் இடம் ஆகியவற்றைப்பற்றி இன்றைய தலைமுறையினருக்கு மேலதிகமாக எடுத்துச் சொல்லவேண்டியிருக்கிறது.

எழுபதுகள் முதல் உருவாகி வந்த மொழியியல்சார்ந்த பின்நவீனத்துவ இலக்கியவிமர்சன அணுகுமுறைகள் [அமைப்புவாதம், பின்அமைப்புவாதம்] அழகியல்நோக்கு என்பதை கடுமையாக நிராகரித்து அது ஒருவகையான தனிநபர்வாத அணுகுமுறை மட்டுமே என வாதிட்டன. அழகியல்விமர்சனம் என்னும் சொல்லே அபத்தமானதாக குறிப்பிடப்பட்டது. உண்மையில் கூரிய விமர்சனம் வழியாக அன்றி பகடி கேலி வழியாகவே இக்கருத்து நிறுவப்பட்டது என்பது இன்று திரும்பி நோக்கும்போது ஆச்சரியமூட்டுவது

அந்த அலைக்கு எதிராக எழுந்து நின்ற பெருங்குரல்களில் தலையாயது ஹரால்ட் ப்ளூமுடையது. அழகியல்விமர்சனத்தை ஆணித்தரமாக நிறுவி மொழியியல்சார்ந்த அணுகுமுறைகளின் அடிப்படையான பயனின்மையை நிறுவ அவரால் இயன்றது. தனிப்பட்டமுறையில் என் அணுகுமுறைசரியானதே என்னும் நம்பிக்கையை அவரே எனக்கு அளித்தார்,

அவரைப்பற்றி தமிழில் ஒருசொல் கூட நான் வாசித்ததில்லை, நித்ய சைதன்ய யதி அவரை எனக்கு அறிமுகம் செய்தார். நித்யாவிடமிருந்து விலாசம் பெற்று ப்ளூமுக்கு ஒருகடிதமும் எழுதி ஒருவரி பதிலும் பெற்றிருக்கிறேன்

bibhutibhushan_bandopadhyay_300
விபூதிபூஷன் பந்தியோபாத்யாய

[இதேபோல பின்நவீனத்துவம் கருத்துக்களின் வரலாறு குறித்தும், வரலாற்றுவாதம் குறித்தும் உருவாக்கிய அவநம்பிக்கையை எதிர்கொண்டு வென்ற செவ்வியல் மார்க்ஸிய சிந்தனையாளரான எரிக் ஹாப்ஸ்வம் மிக முக்கியமான சிந்தனையாளர். அவரைப்பற்றியும் எழுதியிருக்கிறேன்]

மேலைச்செவ்விலக்கியத்தொகை குறித்த ப்ளூமின் நூல் பின்நவீனத்துவ இலக்கியவிமர்சன அணுகுமுறைகள் காலாவதியானபின்னர் வந்து திட்டவட்டமாக இலக்கியத்தில் அழகியல் நோக்கின் இடத்தை நிறுவியது. இலக்கிய அழகியல் நோக்கு என்பது தனிநபர் சார்ந்தது அல்ல. அதற்கு ஒரு வரலாறு உள்ளது. அது நெடுங்கால விவாதத்தின் விளைவாக செவ்விலக்கியம் என ஒன்றைத் திரட்டி முன்வைக்கிறது. அச்செவ்வியல் தொடர்ந்துவரும் படைப்புக்களை வழிகாட்டி வடிவமைக்கிறது, மதிப்பிடுகிறது. இலக்கியத்தின் இன்றியமையாத தொடர்ச்சியை நிலைநிறுத்துகிறது

பின்நவீனத்துவத்தால் மறுக்கப்பட்ட செவ்வியல் என்னும் கருத்துநிலையின் மறு எழுச்சியின் திட்டவட்டமான உதாரணம் ஒன்றைச் சுட்டுகிறேன். பின்நவீனத்துவக் கருத்துநிலையின் குரலாக நின்று செவ்விலக்கிய மரபை முற்றாக மறுத்தவர்களில் தமிழில் சாருநிவேதிதா முக்கியமானவர். இன்று தமிழின் செவ்விலக்கிய மரபை வகுத்து ஆழமாக நிறுவும் முக்கியமான நூல்களில் ஒன்றான பழுப்புநிறப் பக்கங்கள் அவரால் எழுதப்பட்டுள்ளது.

செவ்விலக்கியம் திரண்டு உருவாவதை பலவகையான முரணியக்கங்களின் விளைவாக நிகழ்கிறது என்று சொல்லலாம். அவ்வியக்கத்தை புறவயமாக வகுத்துக்கொள்வது கடினமானது. அத்தனை சிக்கலானது அது. உதாரணமாக சில முரணியக்கங்களைச் சொல்லலாம். தனிநபர் வாசிப்புக்கும் சூழலின் பொதுவாசிப்புக்குமான முரணியக்கம். அறிவுத்தளவாசிப்புக்கும் பொதுமக்கள் வாசிப்புக்குமான முரணியக்கம். செவ்வியல் தொகைக்கும் நவீனப்படைப்புகளுக்குமான முரணியக்கம். அழகியலுக்கும் தத்துவத்துக்குமான முரணியக்கம்.

ஆனால் ஒட்டுமொத்தமாக செவ்வியல்மையம் ஒன்று திரண்டு வருகிறது என்பது கண்கூடு. அதைத்தான் செவ்வியலாக்கம் என நான் சொல்கிறேன். ஒர் இலக்கிய அறிவுச்சூழலில் நிகழும் ஒட்டுமொத்த விவாதத்தையும் செவ்வியலை திரட்டி நிலைநிறுத்துவதற்கானது என்று சொல்லத் துணிவேன். உங்கள் தனிப்பட்ட பட்டியல் அந்தச் செவ்வியலாக்கத்தின் ஒருபகுதி. அதிலிருந்து தொடங்கி தனிப்பட்ட ரசனையும் தேடலும் சார்ந்து விலகி விரிந்து அதைநோக்கிச் செல்வது.

*

Basheer
வைக்கம் முகமது பஷீர்

இந்தியத் தொல்லிலக்கிய மரபில் சம்ஸ்கிருதத்தில் ஒரு செவ்விலக்கியத் தொகை பல நூறாண்டுக்கால வரலாற்றினூடாக உருவாக்கப்பட்டு நிலை நின்றது. மேலைச் செவ்விலக்கிய மரபில் ஷேக்ஸ்பியரின் இடம் காளிதாசனுக்கு. அனேகமாக அது மறுக்கப்பட்டதே இல்லை. தொல்செவ்வியல் மரபு இதிகாசங்களை மையமாக்கியது.

இந்தியாவின் பிறமொழிகள் அனைத்திலுமே இவ்வாறு செவ்விலக்கியத்தொகை திரட்டி நிலைநிறுத்தப்பட்டது. தமிழில் கம்பன், இளங்கோ, வள்ளுவரின் இடம் மறுப்புக்கு அப்பாற்பட்டது.

இந்திய மறுமலர்ச்சிக் காலத்தில் இந்தத் தொன்மையான செவ்விலக்கிய மரபு புதிய உத்வேகத்துடன் மறுபடியும் கண்டடையப்பட்டது. சம்ஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலம் வழியாக இந்திய இலக்கியச்சூழலில் காளிதாசனின் மறுபிறப்பு நிகழ்ந்தது.

Sharat
சரத் சந்திர சட்டர்ஜி

தமிழில் பாரதியின் பட்டியல் அந்த எழுச்சியைக் காட்டுகிறது. கம்பனை நவீன ஐரோப்பிய விமர்சன அணுகுமுறைகளின்படி மறுவரையறை செய்ய முயன்ற வ.வே.சு.அய்யரின் ஆங்கிலக்கட்டுரைகள் நவீனகாலகட்டத்தின் தமிழ்ச்செவ்வியல் உருவாக்கத்தின் மிகமுக்கியமான தொடக்கம். எஸ்.ராமகிருஷ்ணன் [கம்பனும் மில்டனும் ஓர் ஒப்பாய்வு] குறிப்பிடத்தக்க இன்னொரு பாய்ச்சல்.

இந்தியநவீன இலக்கியம் 1880களில் இந்தியமொழிகளில் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் தோன்றி 1920களில் காந்திய இயக்கத்தின் எழுச்சியை தான் பெற்றுக்கொண்டு வளர்ந்தது. அப்போதே இந்திய இலக்கியத்தின் நவீனச்செவ்வியல் ஒன்றை உருவாக்குவதற்குரிய தேசிய அளவிலான பெருவிவாதம் தொடங்கியது.

இந்த விவாதத்தில் இருவகையில்தான் இந்தியமொழிகளின் இலக்கியம் இடம்பெற முடியும். ஒன்று ஆங்கிலம் மற்றும் இந்தியில் வரும் மொழியாக்கங்கள். இன்னொன்று தங்கள்மொழியின் இலக்கியம் குறித்து இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசும் இலக்கிய அறிவுஜீவிகளின் இருப்பு. தமிழுக்கு இருவகையிலுமே பெரிய பின்னடைவுதான் உள்ளது

இங்கிருந்து இலக்கியவிருதுகள் வழியாக இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டு அறியப்படுபவர்கள் எவ்வகையிலும் தமிழிலக்கியத்தின் வெற்றிகளை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் அல்ல. மிகமிக மொண்ணையான வணிக எழுத்தாளர்கள் அவர்கள். உதாரணமாக, அகிலன். அவருடைய ஆக்கங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டமை வழியாக தமிழ் மேல் உருவான இளக்காரம் இந்தியப்பொதுச்சூழலில் இன்றும் வலுவாக நீடிக்கிறது. இன்று வைரமுத்து அவ்விழிவை பலமடங்கு கூட்டிவருகிறார்.

இவர்களுக்கு விருதுவழங்கப்படுகையில் வலுவான எதிர்ப்பு உருவாகவேண்டும் என தமிழின் இலக்கியமுன்னோடிகளில் இருந்து என்னைப்போன்றவர்கள் வரை தொடர்ந்து வலியுறுத்துவதற்குக் காரணம் இதுவே. இவர்கள் இந்தியச் செவ்வியலுருவாக்கத்தில் தமிழின் பங்களிப்பாக சென்று அமைவார்கள். அதனூடாக நம் மரபை நாமே தோற்கடித்தவர்களாவோம்.

Tamil_Literati_Rajanarayanan_KiRa

.

[ஒவ்வொரு முறை இந்த இலக்கியவிமர்சனக்குரல் விருது வழங்கும் போதும் எழும்போது மொண்ணைகளின் சமரசக்குரல்கள் எழுந்து எரிச்சலைக் கிளப்பும். ஒருத்தர் விருது வாங்கினால் இன்னொருவர் குறை சொல்லக்கூடாது, பாராட்டும் பெருந்தன்மைவேண்டும். தமிழனுக்கு ஒற்றுமை இல்லை. அவரவருக்குப் பிடித்ததை அவரவர் வாசிக்கட்டுமே- இவ்வாறெல்லாம். இந்த மொண்ணைக்குரலைக் கடந்து ஒன்றும் பேசமுடியாத நிலை இங்குள்ளது]

தமிழிலக்கியம் குறித்து இந்தியப் பொது அறிவுச்சூழலில் பேச நமக்கு அறிஞர்கள் இல்லை. க.நா.சு, வெங்கட் சாமிநாதன் என இருவர் அளித்த பங்களிப்பால் மட்டுமே சற்றேனும் நமக்கு மரியாதை எஞ்சியிருக்கிறது. ஆனால் அவர்கள் இங்குள்ள கல்வித்துறை அமைப்புக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள். எந்தப் பின்புலமும் அற்றவர்கள். ஆகவே வலுவான குரலாக அவர்கள் தேசிய அளவில் எழ முடியவில்லை. மலையாளத்திற்கு சர்தார் கே.எம்.பணிக்கர், கெ.எம்.ஜார்ஜ், சச்சிதானந்தன் போன்றவர்களோ கன்னடத்திற்கு ராமச்சந்திர ஷர்மா, டி.ஆர்.நாகராஜ் போன்றவர்களோ வங்கத்திற்கு காயத்ரி ஸ்பிவாக், மீனாட்சி முகர்ஜி போன்றவர்களோ அளித்த பங்களிப்பை தமிழுக்கு ஆற்றும் ஒருவர் நமக்கு அமையவில்லை.

அதேசமயம் கீழ்மை நிறைந்த கல்வித்துறை மொண்ணைகளால் இங்குள்ள அசட்டு எழுத்துக்கள் முன்வைக்கப்பட்டு மிகப்பெரிய சேதம் விளைவிக்கவும்பட்டது. இன்றும் அதே நிலைதான். இந்திய இலக்கியத்திற்கான தேசிய அரங்குகளில் பங்கெடுக்கும் எந்தத் தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும் வங்கம் உட்பட எந்த மொழியின் நவீன இலக்கியத்தை விடவும் தமிழிலக்கியம் ஒருபடி மேலானது என்று. ஆனால் இந்திய நவீனச்செவ்வியல் என திரட்டபட்ட தொகையில் தமிழுக்கு எவ்வகையிலும் இடமில்லை என்பதே இன்றைய நிலை.

TARAS
தாராசங்கர் பானர்ஜி

அப்படி திரண்டுவந்த ஒரு செவ்வியல் இன்று பொதுவாக எல்லா மொழிகளிலும் சென்று சேர்ந்துள்ளது. அதில் தாராசங்கர் பானர்ஜி, விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய, மாணிக் பந்தியோபாத்யாய, சரத்சந்திர சர்ட்டர்ஜி ஆஷாபூர்ணா தேவி, மகாஸ்வேதாதேவி, அதீன் பந்த்யோபாத்யாய போன்ற வங்கப்படைப்பாளிகள் இருப்பார்கள். பிரேம்சந்த், யஷ்பால், அக்ஞேய், கிரிராஜ் கிஷோர், ஸ்ரீலால் சுக்லா போன்ற இந்திப் படைப்பாளிகள் இருப்பார்கள்.

ராஜேந்திரசிங் பேதி, அம்ரிதாபிரீதம், இஸ்மத் சுக்தாய் போன்ற உருதுப் படைப்பாளிகளும் வி.ஸ.காண்டேகர், புபேன் கக்கர், நாமதேவ் தசால் போன்ற மராத்தியப் படைப்பாளிகளும், சிவராம காரந்த், எஸ்.எல்.பைரப்பா, அனந்தமூர்த்தி போன்ற கன்னடப் படைப்பாளிகளும் தகழி சிவசங்கரப்பிள்ளை, பஷீர், எஸ்.கே.பொற்றெக்காட், ஓ.வி.விஜயன். எம்.டி.வாசுதேவன் நாயர் .போன்ற மலையாளப் படைப்பாளிகளும் இருப்பார்கள் புதுமைப்பித்தனும் மௌனியும் சுந்தர ராமசாமியும் அசோகமித்திரனும் கி.ராஜநாராயணனும் இருக்கமாட்டார்கள். நாம் அவர்களைக் கொண்டு சேர்க்கவில்லை. நாம் கொண்டு சேர்த்தவர்கள் இந்திய அளவில் கேலிக்குரியவர்கள்.

K-M-George-
கே.எம்.ஜார்ஜ்

ஞானபீடப் பட்டியல் இந்தியநவீன செவ்விலக்கியம் என்றால் என்ன என்னும் வினாவுக்கான மிகச் சரியான விடை. மிகப்பெரும்பாலும் முக்கியமான படைப்பாளிகளுக்கே இது வழங்கப்பட்டுள்ளது. தமிழில் நம் பெரும் படைப்பாளிகளைக் கொண்டு சென்று சேர்க்க மிகப்பெரிய தடை இங்குள்ள திராவிடக் கருத்தியலால், சாதியரசியலால் சூழப்பட்டுள்ள நம் கல்வித்துறை. அசோகமித்திரன், கி.ரா போன்ற பெரும்படைப்பாளிகள் இங்குள்ளனர். அவர்களுக்காக ஒரு தேசியக் கருத்தரங்கோ ஒரு தொகை மலரோ எந்தப் பல்கலையாவது வெளியிட்டிருக்கிறதா என்று நோக்கினால் தெரியும் நாம் ஏன் இந்திய அளவில் கவனிக்கப்படவில்லை என.

என் தளத்தை ஓரிரு ஆண்டுகள் வாசிப்பவர்களே ஒர் இந்தியச் செவ்விலக்கியத் தொகையை இது முன்வைப்பதைப் புரிந்துகொள்வார்கள். இது இந்திய அளவில் சென்ற ஐம்பதாண்டு காலத்தில் திரண்டு வந்த செவ்விலக்கியத் தொகையில் இருந்து சிறிய ரசனை மாறுபாடுகளுடன் உருவாக்கப்பட்டது. நான் ‘கண்ணீரைப் பின் தொடர்தல்’ என ஒரு நூல் எழுதியிருக்கிறேன். அதுவே ஓர் இந்தியச் செவ்வியலை உருவாக்கும் முயற்சிதான்.

sachi
கெ.சச்சிதானந்தன்

தேசிய அளவில் கே.எம்.ஜார்ஜ் இந்திய நவீனச் செவ்விலக்கியத் தொகை என நான்கு பெருந்தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார். பேரா.இந்திரநாத் சௌதுரி, கே.சச்சிதானந்தன் போன்றவர்களின் கட்டுரைகள் மற்றும் தொகைநூல்கள் வழியாக தொடர்ந்து இந்தத் தொகைப் பணி நிகழ்ந்துவருகிறது. சாகித்ய அக்காதமி முன்னெடுக்கும் தேசியக் கருத்தரங்குகள் உண்மையில் இப்பணியையே ஆற்றுகின்றன.

ஆனால் இந்திய அளவில் இன்று இயல்பாகவும் தன்னிச்சையாகவும் இது நிகழவில்லை. தரமான இலக்கியங்களின் மொழியாக்கங்கள் அரசு சார்ந்த அமைப்புகளுக்கு வெளியே மிகக் குறைவாகவே நிகழ்கின்றன. அதையொட்டிய விவாதங்களுக்கான இடம் இன்றைய ஆங்கில நாளிதழ்கள் மற்றும் இதழ்களால் அளிக்கப்படுவது குறைந்தபடியே வருகிறது. ஆகவே நூல் விற்பனையகங்களால் உருவாக்கப்படும் விளம்பரப்பெருக்கு தான் இன்று இந்திய இலக்கியத்தின் தொகை என இளைய தலைமுறைக்கு அளிக்கப்படுகிறது.

இதைக் கடந்து ஒரு இந்திய இலக்கிய விவாதக்களம் உருவாகியாக வேண்டும். ஆங்கிலம் வழியாக இணையவெளியில் அது உருவானால் நன்று.

ஜெ

***

கால்கள் பாதைகள்

பட்டியல்கள்…

முந்தைய கட்டுரைகிளம்புதலும் திரும்புதலும் -கடலூர் சீனு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–80