கொல்வேல் அரசி

kali

வெண்முரசு நூல்கள் வாங்க

(இக்கட்டுரை சென்ற 2017ல் வெண்முரசு தொடங்கி ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுக்கு பின் எழுதப்பட்டது. இன்று படிக்கும்போது அன்றிருந்த வேகம், அதிலிருந்து உருவான எழுத்து வியப்பூட்டுகிறது. ஓர் இலக்கியப்படைப்பு அதன் ஆசிரியனை ஏந்திக் கொண்டுசெல்லும் விதம் இக்கட்டுரையில் பதிவாகியிருக்கிறது)

நேற்றுமுன்தினம் [14-4-2017] என் மடிக்கணினிகளில் ஒன்றில் ஒரு சிக்கல் தொடங்கியது, அதில் எதை தட்டச்சு செய்தாலும் இரண்டுமூன்றுமுறை விழுந்தது. இன்னொரு மடிக்கணினி மென்பொருட்கள் இறுகி அசைவிழந்தது. அதை அழுத்தி மின்துண்டிப்பு செய்தேன். மீண்டும் தொடங்கியபோது ஒரு மங்கலான புன்னகையுடன் அப்படியே நின்றது எதுவுமே எழவில்லை.

மறுநாளைக்கான வெண்முரசு கையிருப்பு இல்லை. ஒர் இலக்கம் தட்டச்சு செய்தே ஆகவேண்டும். ஒரு கணிப்பொறியைக் கொண்டுசென்று பழுதுநீக்குமிடத்தில் அளித்தேன். அங்கே புத்தாண்டும் துயர்வெள்ளியும் சேர்ந்தே வருவதனால் ஆளில்லை. ஒரு பையன் பார்த்துவிட்டு மறுஅமைப்பு செய்தாகவேண்டும், அதிலுள்ள அனைத்து தகவல்களும் போய்விடும் என்றான். அதில் என்னென்ன இருக்கிறதென்றே எனக்குத்தெரியாது. சரி, செய் என்றேன். எப்போது கிடைக்கும் என்றபோது ‘நாங்கள் எல்லாம் கிளம்பிக்கொண்டிருக்கிறோம். சனிக்கிழமை காலை கிடைக்கும்’ என்றான்.

வேறுவழியில்லை. ஒர் இணையநிலையம் சென்றேன். அங்கே தமிழ்ச்செயலி இல்லை. தரவிறக்கம் செய்ய ஒப்புதலும் இல்லை. சுரதா தளத்திற்குச் சென்று பத்தி பத்தியாக தட்டச்சு செய்தேன். ஒரு பத்தி எழுதவே அரைமணிநேரம். நாம் தட்டச்சு செய்வது ஆங்கில எழுத்தாகத்தான் தெரியும். ஆகவே பிழைகள். அதைத் திருத்துவது மிகப்பெரிய பணி. வெட்டிவெட்டி ஒட்டவேண்டும்.நான்கு மணிநேரத்தில் ஒருவழியாகத் தொட்டுத்தொட்டு ஒரு பகுதியைத் தட்டச்சுசெய்து இணையத்தில் ஏற்றிவிட்டு வந்தேன்.

காலையில் இரண்டாவது மடிக்கணினியுடன் மீண்டும் பழுதுபார்க்குமிடம் சென்றேன். அங்கே காலை பத்துமணிவரை எவரும் வரவில்லை. இணையநிலையங்கள் எவையும் திறக்கவில்லை. பத்தரைமணிக்கு வந்த ஒருவரிடம் கணிப்பொறியை கொடுத்தேன். ஆட்கள் வரவில்லை, வந்து பார்த்துத்தர மதியம் ஆகும் என்றார்.

நகரில் இணையநிலையங்கள் எல்லாமே மூடிக்கிடந்தன. வெயில் கொளுத்தியது. இரவு மழை இருந்தமையால் கடுமையான வெக்கை. வியர்வை ஆறு. கடைசியில் ஓர் இணையநிலையத்தைக் கண்டடைந்து உள்ளே சென்றதுமே மின்சாரம் போய்விட்டது. “இனிமேல் சாயங்காலம்தான் சார் வரும். அதுவரை ஒன்றும்செய்யமுடியாது” என்றார்.இணையநிலையங்கள் எல்லாமே பழங்காலத்தின் இடிபாடுகள் இன்று. ஓட்டை விசைப்பலகைகள். நான் முந்தையநாள் தட்டச்சு செய்த விசைப்பலகையில் பல எழுத்துக்களை ஓங்கி குத்தி அழுத்திப்பிடிக்கவேண்டியிருந்தது.

என்ன செய்வதென்று தெரியவில்லை. சக்ரவர்த்தி திரையரங்கு சென்று காற்றுவெளியிடை பார்த்தேன். இடைவேளையில் கூப்பிட்டுக் கேட்டபோது கணிப்பொறியை பழுதுபார்த்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். படம் முடிந்து மீண்டும் கூப்பிட்டால் ”என்ன சார் பிரச்சினை? கம்ப்யூட்டரா? எங்க குடுத்தீங்க?” என்றார்கள்.

வெறிகொண்டு ஆட்டோ பிடித்து பழுதுபார்க்கும் நிலையம் சென்றேன்.அங்கே ஒரு புதுப்பையன். அவனிடம் கேட்டால் “எனக்கு ஒன்றுமே தெரியாது சார், நான் கிளம்பிட்டிருக்கேன்” என்றான். உரிமையாளரிடம் சென்று முறையிட்டேன். அவர் அவனைக்கூப்பிட்டு நல்லவார்த்தை சொல்லி மன்றாடியபோது முறைத்தபடி எடுத்துச்சென்று ஒருமணிநேரத்தில் மறுஅமைப்பு செய்து தந்தான்.

வீட்டுக்கு வந்தபோது நாலரை மணி. பசி, புழுக்கம். அருண்மொழி மூடிவைத்துவிட்டுச் சென்றிருந்த சாம்பார், மோர், சோறு மூன்றையும் கலந்து நாலைந்து வாய் சாப்பிட்டேன். எலுமிச்சை பிழிந்து உப்பு போட்டு குடித்துவிட்டு அப்படியே படுத்துவிட்டேன். எழுந்தபோது மணி ஆறு. அருண்மொழி வந்துவிட்டாள். வெண்முரசு எழுதவேண்டும்.

ஆனால் உடற்களைப்பு படைப்பூக்கத்திற்கு மிக எதிரானது. களைத்திருக்கையில் எதையும் எழுதலாம், கதை மட்டும் எழுதமுடியாது. பொதுவாகவே மாலையில் எழுதுவது கடினம். அந்த முழுநாளின் வண்டலும் உள்ளே படிந்திருக்கும். காலையில் தன்னிச்சையாக வந்து அமையும் கதையை மாலையில் சொல் சொல்லாக உந்திக்கொண்டு செல்லவேண்டியிருக்கும். ஆனால் எழுதியாகவேண்டும். எழுத அமர்ந்தால் தொடங்குவதற்கே எட்டுமணி ஆகிவிட்டது.

எழுதி, நிறுத்தி, கொட்டாவி விட்டு, மீண்டும் எழுதி, மீண்டும் சொல் சிக்கி, மீண்டும் எழுதி எழுதியதை முழுமையாகவே அழித்தேன். கைகளில் தலையைத் தாங்கியபடி காத்திருந்தேன். எழுதியே ஆகவேண்டும், வேறு எவருக்காகவும் அல்ல- எனக்காக. இது எங்காவது நின்றுவிட்டால் பின்னர் தொடங்காமலேயே போய்விடக்கூடும் என்னும் அச்சமே என்னை சவுக்காலடித்துத் துரத்துகிறது. இது எவ்வகையிலும் என் கையில் இல்லை. இதோ நின்றுவிட்டது என ஒவ்வொரு இடைவெளியிலும் உளம் பதறுகிறது, எங்கிருந்தோ பறவை மீண்டும் வந்தமர்கிறது.

நடந்ததை அறிவித்து ஒருநாள் வாய்ப்பு கோரலாம்.ஆனால் வெண்முரசு தொடங்கியபின் இதுவரை எழுதாமல் நின்றதில்லை. ஒரே ஒருமுறை வலையேற்றம் இரண்டுமணிநேரம் பிந்தியிருக்கிறது. ஒருமுறை சாக்கு சொல்லிவிட்டால் உள்ளம் அதையே நாடும். நானே எனக்கிட்டுக்கொண்ட இந்த ஆணை. இல்லையேல் இத்தனை எழுதியிருக்கமாட்டேன். அத்தனை எழுத்தாளர்களும் அறிந்த ஒன்று உண்டு, இலக்கியம் தன்னிச்சையான வெளிப்பாடு. ஆனால் அதற்கு புற உந்துதல் தேவை. கடைசிக்கெடு கண்ணில்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

மீண்டும் எழுதிச்சென்றபோது ஓரு வரியில் அனைத்தும் தொடங்கியது – அந்த வரி எது என வெண்முரசின் வாசகர்கள் சொல்லிவிடமுடியும். சரசரவென எழுதி முடித்து வலையேற்றியபோது இரவு 1150. மெய்ப்பு நோக்கும் ஸ்ரீனிவாசனும் சுதாவும் தூங்கிவிட்டிருப்பார்கள், பாவம்.

எல்லா இலக்கியப்படைப்புகளும் கொல்லிப்பாவைகளே. மயக்கி உயிர்குடிப்பவை உண்டு. நிழல்போல தொடர்ந்து திசைமாற்றுபவை உண்டு. கெடுகனவுகளில் ஆழ்த்தி பித்தனாக்குபவை சில. இது ஆயிரம் கைகளுடன் என் மேல் எழுந்து நெஞ்சில் காலூன்றி நின்றிருக்கும் கொற்றவை.

***Apr 17, 2017

 

முந்தைய கட்டுரைஇன்னிலையும் கைந்நிலையும்
அடுத்த கட்டுரைவெண்முரசுக்குப் பின்… சோழராஜா