குரலிலில்லாதவர்கள்

பாலுமகேந்திராவின் அறையில் பேசிக்கொண்டிருக்கும்போது நாவலாசிரியர் செ.கணேசலிங்கன் வந்தார். செ.கணேசலிங்கனின் மகன் ஆஸ்திரேலியாவிலிருந்து கொடுத்தனுப்பிய மாத்திரைகளை பாலு மகேந்திராவுக்குக் கொடுத்தார். கிட்டத்தட்ட உயிர்காக்கும் மாத்திரைகளை பெற்ற மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் பாலு மகேந்திரா அப்பொட்டலத்தைப் பெற்றுக்கொண்டார். ”அம்பது மாத்திரை இருக்கு பாலு…பாத்து வச்சிருந்து சாப்பிடுங்க” என்றார் செ.கணேசலிங்கன்.

”என்ன மாத்திரை அது?” என்று ஆவலுடன் கேட்டேன். ஸெலின் என்ற சாதாரணமான வைட்டமின் ஸி மாத்திரைகள். பாலு மகேந்திரா ஈழத்தமிழர்களுக்காக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடத்தப்பட்ட மனிதச்சங்கிலி போராட்டத்தில் கொட்டும் மழையில் நின்றபடிக் கலந்துகோண்டிருக்கிறார். கடுமையான சளி பிடித்துக்கொண்டுவிட்டது. பொதுவாக சற்று வயது முதிர்ந்தவர்களுக்கு வரும் ஜலதோஷம்-மார்ச்சளி எளிதில் விட்டுச்செல்வதில்லை. பாலு மகேந்திராவுக்குப் பதினைந்து நாட்களுக்கு மேலாகவே சளி நீடித்தது.

வழக்கமாக டாக்டர்கள் வைட்டமின் ஸி மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள். சளியை எதிர்கொள்ள தேவையான நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கிக்கொள்ள அவர்களுக்கு வைட்டமின் ஸி மாத்திரைகள் இன்றியமையாதவை. வேறுவழிகளில் வைட்டமின் ஸி கொடுக்கலாம்தான், ஆனால் அவர்களின் உடம்பு அவற்றில் மிகச்சிறிதளவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் என்று சொல்கிறார்கள். மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டால்மட்டுமே சீரான நிவாரணம் இருக்குமாம்.

”செலின் நம்ம ஊர் மாத்திரைதானே…தெருத்தெருவா விக்குமே. ரொம்ப சீப் வேற” என்றேன். ”எந்த ஊரிலே இருக்கிறீங்க? அதெல்லாம் அந்தக்காலம்”என்றார் செ.கணேசலிங்கன். வைட்டமின் ஸி மாத்திரைகளை உலகிலேயே அதிக அளவில் தயாரிக்கும் நாடு இந்தியாதான். அதற்கான மூலப்பொருட்கள் இங்கே அதிகம். ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக சீனாவிலும் கீழை ஆசிய நாடுகளிலும் தொடர்ச்சியாக ·ப்ளூ காய்ச்சல் போன்றவற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் பெருமளவில் இம்மாத்திரைகளை வாங்கிக்கொள்கிறார்கள். ஆகவே ஒட்டுமொத்த மாத்திரைகளும் ஏற்றுமதியாகின்றன. உள்ளூர் விற்பனைக்கு இம்மாத்திரைகள் கிடைப்பதேயில்லை.

”எனக்கு ரெண்டு மாசத்தில ஒரு தடவை சளிபிடிச்சு பத்துபதினைஞ்சுநாள் இருக்கும்…வைடமின் ஸி இல்லாம முடியாது…வெளிநாட்டிலே சொல்லியனுப்பி இங்க வார யாரிட்டயாவது குடுத்தனுப்பச் சொல்லுவேன். என் மகன் நூறு மாத்திரை அனுப்பினான்..அதிலதான் கொஞ்சம் கொண்டுவந்தேன்” என்னால் நம்பவே முடியவில்லை. ஐம்பது பைசாவுக்கு விற்ற மாத்திரை அது. அதை இப்போது கிட்டத்தட்ட கள்ளக்கடத்தல் மாதிரி கொண்டுவரவேண்டியிருக்கிறது.

சென்றவாரம் அஜிதனுக்குச் சளிபிடித்துக் கொண்டது. அடுத்த நாள் முதல் தேர்வுகள். நான் கடைக்குப்போய் ஸெலின் கிடைக்குமா என்று கேட்கலாம் என்று கேட்டேன். ”ஸெலினா, அது இப்ப வர்ரதேயில்லை சார்” என்றார் கடைக்காரர். ”எங்க கெடைக்கும்?”என்றேன். ”எங்கியுமே கெடைக்காது சார். அவெய்லபிளே இல்ல” நான் ”வேற வைட்டமின் ஸி மாத்திரை ஏதாவது கெடைக்குமா?” என்றேன் ”கம்பெனி மாத்திரை ஒண்ணுமே கெடைக்காது. டூப்ளிகேட் கெடைக்கும். ஒரிஜினல்லாம் சீனாவுக்கு போறது. ரெண்டு வருஷம் முன்னாலே பறவைக்காய்ச்சல் வந்ததுல்லா, அதுக்குப்பின்னாலே அந்த மாத்திரையைக் கண்ணாலே பாக்கவே முடியறதில்லை… ”

மருந்து வாங்க நின்ற முதியவர் ”வீட்டிலே பெரியவங்க இருக்காங்களா?”என்றார் ”ஆமா”என்றேன் ”நிம்மதியாச் சாகச்சொல்லுங்க சார்.”என்றார் கடுப்புடன். ”இப்ப பாருங்க எனக்கு சளிபுடிச்சு நாப்பதுநாள் தாண்டியாச்சு. மாத்திரைகள் எல்லாம் பாத்தாச்சு. முன்னாடி ஒரு டோஸ் ஸெலின் எடுத்துக்கிட்டா மெள்ள விட்டிரும். இப்ப எங்க போயி தேடுறது? சளிக்குண்ணு பல மாத்திரைகள் இருக்கு. சாப்பிட்டா தூக்கம் சுத்தியடிக்கும்…அம்பிடுதான்.எல்லாம் அல்ஹஹால்…என்ன செய்யச் சொல்றீங்க?”

நான் ”பழையகாலத்தில என்ன பண்ணினாங்க?சுவனப்பிராஸம், நெல்லிக்கா லேகியம்னு பலதும் இருந்ததே”என்றேன். ”அதெல்லாம் அதுக்குண்டான உடம்புகளுக்குக் கேக்கும்சார். நம்ம உடம்பெல்லாம் ஒரே மாத்திரை. பத்துவருஷமா பிரஷருக்கும் சுகருக்கும் மாத்திர போடுறேன். காலம்பற மோஷன் போறதுக்கு ஜெல்லி ஒண்ணு சாப்பிடுறேன்…அதுக்குமேலே சுவனபிராசம்லாம் போட்டுக்கிட்டா எங்க கேக்கும்?” அது உண்மைதான் என்றுதான் எனக்கும் தோன்றியது. நாம் மாத்திரைகளின் அடிமைகள் இப்போது.

ஒரு மருத்துவ நண்பரிடம் கேட்டேன். ”வைட்டமின் ஸி ஒண்ணும் உயிர்காக்கிற மருந்து கெடையாது.ஆனா பலருக்கு அது கட்டாயமாதேவைப்படுது.அது இப்ப கெடைக்கிறதில்ல. இந்தியா முழுக்கவே இதுதான் நிலைமை. இந்தியாவில மருத்துவத்துறையிலே இருக்கிற டாக்டர்களுக்கு அமைப்பு உண்டு. மருந்துக்கம்பெனிகளுக்கும் விற்பனையாளர்களுக்கும் அமைப்பு உண்டு. அவங்களுக்கு ஒண்ணுன்னா அதை அரசாங்கம் வரை கொண்டு போக முடியும். எல்லாத்துக்கும் அடிப்படையா இருக்கிற நோயாளிகளுக்குன்னு எந்த அமைப்பும் கெடையாது. அவங்க பிரச்சினையை எடுத்துச் சொல்ல ஆளோ குரலோ இல்லை. இது ஒரு சின்ன பிரச்சினை. ஆனா இதனாலே பல லட்சம் வயசானவங்க அவதிப்பட்டுகிட்டிட்டிருப்பாங்க. அவங்களுக்காகப் பேசுறதுக்கு நம்ம நாட்டிலே எந்த வழிமுறையும் கெடையாது…” என்றார்

உண்மை என்றால் எத்தனை வருத்தமான விஷயம் அது!

 

மேயோகிளினிக் :உடல்நலக்கையேடு

கொட்டம்சுக்காதி

மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை

இயற்கை உணவு : என் அனுபவம்

நவீன மருத்துவம் மேலும் இரு கடிதங்கள்

நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்

நவீனமருத்துவம்-ஸ்டெல்லாபுரூஸ்-ஒருகடிதம்

ஸ்டெல்லாபுரூஸ் என்ற காளிதாஸ்

முந்தைய கட்டுரைதீ: மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைபார்வதிபுரம் மணி