நித்யாவின் இறுதிநாட்கள்

nithyachaithanyayathi.jpg.image.784.410

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

திரு. நித்ய சைதன்ய யதி அவர்களின் இறுதிக் காலம் எப்படி இருந்தது என்பது பற்றி ஏதாவது கட்டுரை வெளியாகி உள்ளதா?

நன்றி.

ஆர். ராதா கிருஷ்ணன்,

சென்னை.

nitya sea

அன்புள்ள ராதாகிருஷ்ணன்,

நித்ய சைதன்ய யதியுடன் இருந்த எவரும் எழுதியதாகத் தெரியவில்லை. இதழாளர்கள் எழுதிய குறிப்புகள் இருக்கலாம்.நித்ய சைதன்ய யதியின் வாழ்க்கை வரலாறு Love and Blessings என்ற பேரில் நூல்வடிவாக உள்ளது. அவரே எழுதியிருக்கிறார். அவருடைய வாழ்க்கையின் இறுதிநாட்களில் எழுதப்பட்டதென்பதனால் அதற்குப்பின் அவருடைய வாழ்க்கை சிறிய காலஅளவுதான்.

நித்யசைதன்ய யதி 19 April 1999 அன்று சமாதியானார். அவருக்கு முன்னரே முதுகுத்தண்டுவட அறுவை சிகிழ்ச்சை நடந்திருந்தது. அவரது உடல்நிலையில் பெரிய சரிவுகள் ஏதுமிருக்கவில்லை என்றாலும் அவர் மேலும் மேலும் அமைதியடைந்தபடியே வந்தார். எழுதிக்கொண்டிருந்த ஒரு நூலை முடித்தபின் இன்னொரு நூலை முடிக்கப்போவதில்லை என்று அறிவித்து அமைந்தார்.  அன்றாட வகுப்புகளில் பெரும்பாலும் தியானம் மட்டுமே வழக்கமாகியது.

அக்காலங்களில் நான் மாதமிருமுறை சென்று அவரைச் சந்தித்துக்கொண்டிருந்தேன். தருமபுரியிலிருந்து நாகர்கோயிலுக்கு மாற்றலாகி வந்தபின் அவ்வாறு செல்வது குறைந்தது. செல்லும்போதெல்லாம் நித்யா ஆழ்ந்த அமைதியில் இருப்பதைக் கண்டேன். ஓரிரு சொற்கள் மட்டுமே சொல்வார். வகுப்புகளில் மடிமேல் கைவைத்து விழிமூடி அமர்ந்திருப்பார். நெடுநேரம் கழித்து ஓம் என்னும் ஒலியுடன் விழித்தெழுந்து ஒரு சொல்லும் உரைக்காமல் தன் அறைக்குச் செல்வார்.

அவருக்குப் பக்கவாதம் வந்திருக்கும் செய்தி எனக்கு குருகுலத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது. ஊட்டியில் அப்போது நல்ல குளிர். ஆகவே மசினகுடிக்குச் சென்றிருந்தார். அங்கே பக்கவாதம் வந்து கையும் காலும் செயல்படாமலாகியது. கோவையில் டாக்டர் ரிதுபர்ணனின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவரைக்காண நான் ஊட்டி குருகுலத்திற்குச் சென்றேன். அங்கே அவர் இல்லை என்று தெரிந்து சேலம் குப்புசாமியுடன் [ஆர்.கே] கோவை வந்தேன். அவரை எவரும் சந்திக்கமுடியாது என்று டாக்டரின் வீட்டில் சொன்னார்கள். ஆனால் நித்யா தொலைபேசியை வாங்கி  “வா, வந்து பார்த்துவிட்டுப்போ” என்றார். நான் உள்ளே சென்று அவரைப் பார்த்து ஒரு சொல்லும் இல்லாமல் வணங்கி மீண்டேன்.

shaukat

உடல்நிலை சற்று தேறியதும் நித்யா மீண்டும் குருகுலத்திற்கே மீண்டார். நான் அவரைப்பார்க்கச் சென்றேன். அங்கே உஸ்தாத் ஷௌகத்அலி, ராமகிருஷ்ணன், டாக்டர் தம்பான் [சுவாமி தன்மயா] ஆகியோரின் பராமரிப்பில் இருந்தார். அந்தரங்க மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள். கடைசிக்காலத்தில் வீணை கற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தார். அதை மீண்டும் தொடங்கி ஒரு கீர்த்தனையாவது வாசிக்கவேண்டும் என முயன்றுகொண்டிருப்பதாக புன்னகையுடன் என்னிடம் சொன்னார்.

அப்போது விஷ்ணுபுரம் வெளிவந்துவிட்டிருந்தது. அதைக்கொண்டு காட்டுவதற்காகவே சென்றேன். முன்பு பலமுறை சென்றும் அதைக்கொண்டு செல்லமுடியவில்லை. அந்நாவல் அவருக்கு அது சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தது. “So huge” என சிரித்து அதை புரட்டிப்பார்த்தார். அவருக்குத் தமிழ் தெரியாது. அவர் காலடியில் அன்று அமர்ந்து பொதுவாகப்பேசிக் கொண்டிருந்தேன். அன்று முழுக்க சிரிப்புதான். எதைப்பேசினாலும் நகைச்சுவையாக ஆக்கிக்கொண்டிருந்தார் குரு.

நான் ஊர்திரும்பிய பின் பதினைந்துநாளில் குருகுலத்தில் இருந்து எனக்கு ஒரு கார்டு வந்தது- குரு என்னைச் சந்திக்க விரும்புவதாக. அருண்மொழி அதற்குமுன் குருவைச் சந்தித்ததில்லை. அஜிதன் கருவிலிருந்த போதுதான் முதலில் அவரைச் சந்திக்க வந்தேன். அவன் குழந்தையாக இருந்தமையால் அருண்மொழி அவனைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அடுத்து உடனே சைதன்யா. அவள் அவரை சந்திப்பது ஒத்திப்போடப்பட்டுக் கொண்டே இருந்தது. அப்போது சைதன்யாவுக்கு ஒருவயதாகியிருந்தது. அஜிதனை மட்டும் ஒருமுறை அழைத்து வந்திருந்தேன்.

அருண்மொழி குருவைச் சந்திக்க விரும்பினாள். நான் நித்யாவை அழைத்தேன். அவளை அழைத்துவரும்படிச் சொன்னார். “வா, இனிமேல் பார்க்கமுடியுமென தோன்றவில்லை” என்றார். நான் அஜிதன், சைதன்யாவுடன் அருண்மொழியை கூட்டிக்கொண்டு பஸ்ஸில் நாகர்கோயிலில் இருந்து ஊட்டி சென்றேன். நான் எதிர்பார்த்துச் சென்றது வேறு. அங்கே குருகுலம் திருவிழாக்கோலம் கொண்டிருந்தது. குரு அவருடைய பழைய நண்பர்கள் மாணவர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதி வேடிக்கையான வரிகளில் அவர் செல்லவிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

nitya flute

குருகுலத்தில் குருவின் எதிர்காலச் சமாதிக்கட்டிடம் பற்றிய விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்தது. கட்டிடவரைவாளர்கள், பொறியாளர்கள் வந்திருந்தனர். குரு மிக உற்சாகமாக இருந்தார். அஜிதனிடம் விளையாடினார். ஷௌகத் அலியின் தோளைப் பற்றியபடி நடைசென்றார். அஜியுடன் நான் உடன் சென்றேன். அன்று முழுக்க இலக்கியம், தத்துவம் பற்றிய பகடிகள். வெடிச்சிரிப்புகள்.

அன்றைய வகுப்பில் வேடிக்கையாக குரு அவரது சமாதி அமையவேண்டிய விதம் பற்றிச் சொன்னார். “நூலக அறைக்கு அப்பால் சமாதி அமையவேண்டும், நூலக அறைக்கும் சமாதிக்கும் ஒரு ரகசியவழி இருக்கவேண்டும். அதனூடாக வந்து நூல்களைப் பார்த்துச்செல்லமுடியும்” என்றார். ”சமாதிக்குள் செம்புக்கம்பிகளால் ஆன ஒரு சுருள்யந்திரம் அமைக்கவேண்டும். அதற்குமேல் என்னை வைக்கவேண்டும். என் ஆன்மீகமான ஆற்றல் அதில் இறங்கி அதன்வழியாக பூமியில் பரவும்” என்றார்.

சிரிப்பாக இருந்தாலும் கொஞ்சம் வருத்தமும் இருந்தது. ஏதோ விளையாடுகிறார் என்றே தோன்றியது. குருகுலம் எப்போதுமே அறிவார்ந்த மையம். அங்கே ஆசாரங்கள், மதநம்பிக்கைகள், சடங்குகளுக்கு முற்றிலும் இடமில்லை. ஆனாலும் அதை நம்பிவரும் மக்கள் எப்போதுமே அற்புதங்களை எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு ஆன்மிகம் என்றால் இயற்கைவிதிகள் மீறப்படவேண்டும். வானத்திலிருந்து பொன் பொழியவேண்டும். தேவதூதர்கள் வந்திறங்கவேண்டும். மாயமந்திரங்களினூடாகவே கட்டமைக்கப்பட்ட பழங்குடி மனங்கள். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து நிறைவதன் ஞானமே அத்வைதம் என்பதை ஆயிரத்தில் ஒருவருக்குக் கூடச் சொல்லிப்புரியவைக்க முடிவதில்லை. ஆகவேதான் அத்வைதம் கோடிப்பிறவியில் ஒருவருக்கு எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த அறியாமையை பெரும்பாலும் பரிவுள்ள நகைச்சுவையுடன்தான் குரு எதிர்கொள்வார். அவரது மாணவர்கள் என ஏற்கப்பட்டவர்கள் மட்டுமே கடிந்து திருத்தப்படுவார்கள். அன்றும் அப்படித்தான் மென்மையாக நகைத்துக் கொண்டிருந்தார். அதையும் ஒருசாரார் கைகூப்பி பக்தியுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அன்றிரவு நான் மட்டும் அவருடன் அரைமணிநேரம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தேன்.

நான் மறுநாள் விடைபெற்றுக்கொண்டேன். அஜிதன், சைதன்யா தலையில் கைவைத்து வாழ்த்தினார். “சாப்பிட்டுவிட்டுப்போ” என்றார். நான் விடைபெற்றுச் செல்கையில் எனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது, அவரை மீண்டும் பார்க்கமாட்டேன் என்று. ஊர்சென்று சேர்ந்த மறுநாள் அவர் சமாதியான செய்தி வந்தது.

wpid-wp-1492257966674

குருவின் சமாதிநிகழ்வுகளுக்கு நான் செல்லவில்லை. மறுநாளே அது ஊட்டியில் நிகழ்ந்தது. நான் உடனே கிளம்பிச்செல்லமுடியாத நிலையில் இருந்தேன். மேலும் அது மிகப்பெரிய நிகழ்வாக இருந்தது. கேரளத்தின் கலாச்சாரப் பிரமுகர்கள் பலர் வந்திருந்தார்கள். அது அவ்வளவு முக்கியமல்ல என்று எனக்குத் தோன்றியது.

நித்யாவின் குருபூஜைநாளில் நான் பேசினேன். பின் அவருடைய நினைவுநாட்களிலும் பேசியிருக்கிறேன். அவர் இப்போது இல்லை என்று எனக்கு ஒருகணம்கூடத் தோன்றியதில்லை என்பது உண்மையிலேயே எனக்கு விந்தையாக இருக்கிறது. ஒருநாள்கூட அவரை நினைக்காமலிருந்ததில்லை. அவர் முன்னிலையில் 1994 முதல் ஊட்டி குருகுலத்தில் இலக்கியச் சந்திப்புகளை ஒழுங்குசெய்யத் தொடங்கினேன். இவ்வாண்டுவரை அது நீடிக்கிறது.

இங்கு இயற்கையாகவும், அவ்வியற்கை ஒருசிறு துளியாகச் சென்றமையும் பெருவெளியாகவும் நிறைந்திருப்பதை ஒன்றென்று அறிவது, அது தான் என்று உணர்வது, அதுவாகி பிறிதிலாது நிற்பதுதான் அத்வைதம். அது ஒரு முழுநிலை. வேறு அத்தனை மானுடநிலைகளிலும் ஒழியாது எஞ்சும் ஒர் இடைவெளி அப்போது முற்றிலும் இல்லாமலாகிறது.

நமக்கு மரணம் என்பது ஒரு பெரிய நிகழ்வு. அதில் ஏதோ அற்புதத்தை எதிர்பார்க்கிறோம். ஏதோ நிகழ்ந்தாகவேண்டும், எதுவோ நிறுவப்பட்டாகவேண்டும். அத்வைதிக்கு அது ஓர் எளிய அன்றாட நிகழ்வு. கணம் கோடி என இந்த புவியில் மரணம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு கோப்பையில் இருந்து இன்னொரு கோப்பைக்கு தன்னை சிந்தாமல், ஓசையில்லாமல் ஊற்றிக்கொள்வது. அறுதியில் முற்றாக ஆவியாகி மறைவது. அத்வைதி வாழ்க்கையின் எல்லா கணத்திலும் அப்பயணத்தில்தான் இருக்கிறார்.

அப்பெருநிலை நோக்கி அறிந்து, உணர்ந்து, ஆகி, கனிந்து சென்றமைந்த ஒருவரின் பயணத்தில் மிகச்சிறியதூரம் உடனிருந்திருக்கிறேன். அவ்வண்ணம் ஒன்று உண்டு, அது மானுடருக்குச் சாத்தியம் என்பதற்கான சான்று எனக்குக் கிடைத்தது. அந்த நல்லூழுக்காக குருவடிவாக வந்து உறைந்து மீண்ட அதற்கு என்றும் என் வணக்கம்.

ஜெ

மறுபிரசுரம். முதற்பிரசுரம்  Apr 16, 2017 

 

 

முந்தைய கட்டுரைஅப்பம் வடை தயிர்சாதம்
அடுத்த கட்டுரைசியமந்தகம்-கடிதங்கள்