வாசிப்புக் குற்றமும் விமர்சனத்தண்டனையும்

dostoevsky

மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,

நலம்தானே. ஒரு உலகப்பேரிலக்கியத்தைப் படிக்க வேண்டும் என்று முடிவு பண்ணி “குற்றமும் தண்டனையும்” படிக்க ஆரம்பித்தேன். ஒரு வாரமாக வேறு எதிலும் எந்த ஈடுபாடும் இல்லாமல் படித்தேன், கல்லூரிக்கு சரி வர செல்லாமல் கூட படித்தேன். தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புலகம் மனதை மிகவும் வருடும் வண்ணம் இருந்தது, மனித மனதை மிக ஆழமாக கிழித்து பார்க்கும் அளவுக்கு நுட்பமாகவும், நேர்த்தியாகவும் எழுதி இருந்தார். எந்த அளவுக்கு மனித மனதை பற்றி விரிவாக ஆராய்ந்தும் கண்டறிந்தும் எழுதியுள்ளார் என்று நோக்கினால் வியப்பாகவே உள்ளது.

ஒரு தனிமனிதனின் உள்ளத்தில் இருக்கும் எண்ணங்கள், மனதில் வீசுகின்ற ஒரு புயல் போல அவனை அது மிகவும் திண்டாட செய்கிறது. ஒரு தத்துவார்த்தமான உளவியல் சார்ந்த சிறந்த ஒரு புத்தகம்.

ரஸ்கோல்னிகோவ் என்ற இளைஞனின் மனதில் உள்ள ஒரு போராட்டமே இந்த நாவல் தரும் ஒரு தரிசனம். ஒரு குற்றத்தை செய்த ஒருவனின் உள்ளத்தில் எழும் பல கேள்விகளுக்கு அவனாக தேடி கொண்ட பதில்கள், அவன் இறுதி வரை அதை ஒரு குற்றமாக எண்ணவும் இல்லை. அவன் கொண்ட கொள்கைகளின்படி பார்த்தால் ஒரு மாபெரும் நன்மைக்கு செய்யும் செயல் ஒரு குற்றம் ஆகாது என்று தனக்கு ஒரு விளக்கம் அளிக்கிறான். ஆனால் இறுதியில் தன் குற்ற உணர்வை சோனியா மூலம் அறிகிறான். அவனது மன நிலையை ஆசிரியர் நுட்பமாக சித்தரிக்கிறார்.

பின் சோனியா எப்படிப்பட்ட ஒரு பெண் அவள், ஒரு தேவதை போலவே அவள் எனக்கு தோன்றினாள். என்னைக் கவர்ந்த பாத்திரமும் அவள் தான். அவள் இல்லையேல் ரோட்யாவும் ஸ்விட்ரிகைலோவ் போலத்தான் இறுதியாகத் தன் முடிவைத் தேடி இருப்பான். சோனியாவின் பாத்திரம் எனக்கு மேரி மெக்த்தலின் போலவே அமைந்தது என்று பட்டது, பாவப்பட்ட அந்த ஜீவனின் நிலை என் மனதில் மிகுந்த ஒரு தாக்குதலை நடத்தி விட்டது.

பின் லூசினின் வஞ்சகம், தற்பெருமை இது எல்லாம் அவனை ஒரு குறுகிய உள்ளம் படைத்தவனாக காட்டியது. லூசின் என்ற பெயர் கிறிஸ்தவத்தில் சாத்தானின் ஒரு பெயர் ஆகிய லூசிபையர்(Lucifer), என்று தோன்றியது. அது போலவே மிகவும் கீழ்த்தரமான வஞ்சகத்தையும் சோனியாவுக்கு எதிராக செய்தான். இறுதியில் தோற்றும் போனான்.

நீங்கள் ஒரு பேட்டியில் பேரிலக்கியங்களை வாசிக்கும் போது நாம் கட்டி இருக்கும் மனக் கோட்டைகள் எல்லாம் இடிந்து விடும் மீண்டும் அதை அந்த இடிந்தவற்றைக் கொண்டு தான் கட்டி எழுப்ப வேண்டும் என்று சொன்னீர்கள் அதை நான் இந்த நாவல் படித்து முடித்து உணர்ந்தேன். வேறு ஒரு பார்வை கிடைத்தது போல உணர்கிறேன். இன்னும் பல இடங்கள் மிகவும் ஆழமான அர்த்தம் கொண்டதாக இருந்தது.

எனக்கு சில சந்தேகங்கள் நான் இதை படித்து விட்டு இந்த நாவல் குறித்த விமர்சனங்கள் சில வற்றை பார்த்தேன். அதில் பலர் மிகவும் நுட்பமான பல இடங்களைப் பற்றி சொல்லி இருந்தனர். நான் மேலே சொன்னது போன்ற மேரி பற்றியும் பின் நாவல் முழுக்க இடம் பெறும் மஞ்சள் நிறம் பற்றி எல்லாம் எழுதி இருந்தனர் பின் ரஸ்கோல்னிகோவ் மற்றும் ஸ்விட்ரிகைலோவின் ஒற்றுமை பற்றி இதைப் பார்க்கும்போது நான் பல இடங்களை விட்டு விட்டோமோ என்று தோன்றுகிறது பல நுட்பங்களை நான் தவற விட்டு விட்டேன் என்றும் தோன்றுகிறது. இது குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். ஒரு நாவல் அல்லது கதையின் நுட்பங்கள் மற்றும் நுண்உணர்வுகளை விமர்சனம் மூலமாக அடைவதை குறித்து உங்கள் கருத்து? ஒரு கதையில் வரும் எல்லா நுண்உணர்வை, நுட்பங்களையும் அடைவது எப்படி. நீங்கள் வாசித்துக் கண்டடையும் முறை பற்றியும் சொல்லுங்கள்

நன்றி
இப்படிக்கு,
உங்கள் மாணவன்,
பா. சுகதேவ்.
மேட்டூர்.

***

அன்புள்ள சுகதேவ்,

பொதுவாக தஸ்தயேவ்ஸ்கி போன்ற மேலைநாட்டுப்புகழ்பெற்ற படைப்பாளிகளைப்பற்றி மிகவிரிவான ஆய்வுகள் நமக்குக் கிடைக்கும். மேலைநாடுகளில் ஒருநூறாண்டாக அவை எழுதப்படுகின்றன. இங்கே அவற்றைப்பார்த்தும் பலர் எழுதியிருப்பார்கள். அந்நாவலின் அமைப்பு, அதன் அக்காலப் பண்பாட்டுப் பின்னணி, அதன் உளவியல் சூழல், அதன் மதம்சார்ந்த குறியீட்டுக்குறிப்புகள் ஆகியவற்றைப் பற்றி நாம் ஓரளவு அறிந்துகொள்ளவேண்டும். அதற்கு விமர்சனங்களை நாடவேண்டும். ஆனால் அந்த நுண் ஆய்வுகளை மிதமிஞ்சி வாசிப்பது நம்மை வெறும் கணக்கெடுப்பாளராக ஆக்கிவிடும். நம் சொந்த வாசிப்பை அழிக்கும்.

நாம் ஒரு குறிப்பிட்டப் பண்பாட்டுச்சூழலில் நின்றுகொண்டிருக்கிறோம். நமக்கென்றொரு வாழ்க்கை இருக்கிறது. ஆகவே நம் வாசிப்பு ஐரோப்ப்பிய வாசிப்பின் தொடர்ச்சியாக இருக்கவேண்டியதில்லை. நாம் நம்முடைய சொந்த கண்களால் தஸ்தயேவ்ஸ்கியைக் கண்டடையலாம். அதற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுக்கு நாம் வாசித்தால்போதும். அதற்கு முதல்தேவை நாம் அறிந்த நம் வாழ்க்கையைக்கொண்டு தஸ்தயேவ்ஸ்கியை மதிப்பிடுவது. ரஸ்கால்நிகாஃப் அவன் அக்காவுக்கு எழுதும் அந்தக்கடிதத்தைப் புரிந்துகொள்ள நமக்கு ஏதாவது மேலதிக விமர்சனத்துணை வேண்டுமா என்ன?

நம் வாசிப்பு ‘போதாதோ’ என்றெல்லாம் கவலைப்படவேண்டியதில்லை. படைப்பின் முன் திறந்த மனத்துடன் நல்லுணர்வுகளுடன் நின்றால்போதும். கூர்ந்துவாசித்தால், வாசித்தவற்றைப்பற்றி தொடர்ந்து சிந்தித்தால் போதும். காலப்போக்கில் அது திறந்துகொள்ளும். நுணுகி அர்த்தம்பார்க்கும் பலர் வெறும் அறிஞர்கள். அவர்கள் சென்று தொடாத இடங்களெல்லாம் நமக்குத் திறந்துகொள்ளும்.

ஆகவே வாசகனாக தாழ்வுணர்வோ தளர்ச்சியோ கொள்ளவேண்டியதில்லை. ஆசிரியனுக்கும் வாசகனுக்கும் இடையே இருக்கவேண்டிய தொடர்பு அறிவுபூர்வமானது அல்ல, உணர்வுபூர்வமானது. இலக்கியக்கொள்கைகள் சார்ந்தது அல்ல, வாழ்க்கை சார்ந்தது.

ஜெ

***

முந்தைய கட்டுரைஏழாம் உலகம் -கடிதம்
அடுத்த கட்டுரைகால்கொண்டெழுவது… கடிதம்